Tamiloviam
ஜனவரி 11 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஒரு அதிசயத்திற்கு வயது 90 !
- பாபுடி [rajputh61@rediffmail.com]
| | Printable version | URL |

பசிப் பட்டினியோடு  தனது  தாயின்  புடவைத்  தலைப்பை  பிடித்துக் கொண்டு இலங்கை யிலிருந்து தமிழகத்துக்கு வந்து சேர்ந்த போது அந்த குழந்தைக்கு எப்படி தெரிந்திருக்க முடியும், இதே தமிழகத்தில் பல லட்சம் குழந்தைகள் தன்னால் பசியாறப் போகிறதென்று !

வசதியான குடும்பம். தந்தை, ஸ்கூல் ஹெட்மாஸ்டர் -கம்- கவுரவ மாஜிஸ்டிரேட் உத்யோகம்.  ஆனால் இவன் பிறந்த வேளை, தந்தை மரணமடைந்தார்.  குடும்பமும்  வறுமையின் பிடிக்குப் போனது.  அதனால் ராசியில்லாத  பிள்ளையென்று  உற்றார் ஊராரின்  தூற்றல்.  பாவம்,  அவர்களுக்கு அப்போது  தெரிந்திருக்க  நியாயமில்லை ;  அதே  பிள்ளையின்  முகராசி  பற்றியும், தொட்டதெல்லாம் பொன்னாகும் கைராசி பற்றியும்.

சின்ன வேடமாவது கிடைக்காதா என காய்ந்த வயிற்றோடு சினிமா ஸ்டூடியோ வாசல்களில் கையேந்தி  நின்றவனை அடிக்காத குறையாக விரட்டியவர்கள்  உண்டாம்.  முகவெட்டு 
சரியில்லை என கேலிப் பேசி நிராகரித்தார்களாம். அவர்களுக்கு அப்போதெங்கே தெரிந்திருக்க போகிறது, பின்னாளில் இவன் தமிழ் சினிமா உலகை மட்டுமின்றி தமிழகத்தையே ஆளப் போகிறவன் என்றும்;  இந்த முகம் தான்  உலகத் தமிழர்களின்  பூரணச் சந்திரனாக ஆகப் போகிறதென்றும் !

கெஞ்சிக் கூத்தாடி பெற்ற கதாநாயகன் வாய்ப்பு கை நழுவி போன போதெல்லாம் கதறியழுதிருக்கிறான் ;  தான்  தமிழகத்தின் , தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்திர நாயகனாகப்
போகிறோமென தெரியாமலேயே !

குடும்பச் சுமையை 7 வயதிலேயே ஏற்றிக் கொண்டவன். அதற்காக 3ம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு நாலணா சம்பளத்துக்கு நாடகக் கம்பெனியில் சேர்ந்தான். அடி உதைபட்டான். ஒரு முறை ஒரு அஞ்சு பைசா விவகாரத்துக்காக நாடக கம்பெனியார் இந்த அப்பாவி பையனை அடித்து துவைத்து விட்டார்களாம். அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வில்லை, பின்னாளில் ' கொடுத்து கொடுத்து சிவந்த கரம் ' என்றும் ' மக்கள் திலகம் ' எனவும் மக்களால் போற்றப்படக் கூடியவனை அடித்துக் கொண்டிருக்கிறோமென !

வளர்ந்த பிறகு, சுட்டுக் கொல்லவும் பார்த்தார்கள். ஆனால்  70 வயது  வரை  வாழ்ந்து ராஜ மரியாதையுடன் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடிதான் இறுதி ஊர்வலமாக போக வேண்டுமென்றிருக்கும் போது எந்த துப்பாக்கி தான் என்ன செய்து விட முடியும்!

ooOoo

MGRM.G.R. - இது மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் ஆங்கிலப் பெயர் சுருக்கெழுத்து. ஆனால் இந்த அந்நிய எழுத்தையே தமிழ் பெயர்ச் சொல்லாகிய மூன்றெழுத்து மந்திரச் சொல் அது!

எம்.ஜி.ஆர்., ஒரு சுயம்பு. அரை வயிற்றுக் கஞ்சிக்காக நாடு விட்டு நாடு பஞ்சம் பிழைக்க வந்தவர். இனம், மொழி, ஜாதி என்று எந்த ஒரு பின்புல ஆதரவும் கிடையாது. படிப்பும் இல்லை. ஆனாலும் நிமிர்ந்தார். தானாகவே நடந்து.. விழுந்து.. எழுந்து...

இமய எழுச்சி தானென்றாலும்,  இந்த  எழுச்சியை  எட்ட அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், பட்ட அடிகள் தான் ஏராளம். ஆனாலும் சோராத மனோதிடம், தெளிவான இலக்கு, அதை நோக்கி காய்களை  நகர்த்திய  சாமர்த்தியம், கடின உழைப்பு... இவை மட்டுமின்றி  தனக்கு இயல்பாக அமைந்த பலவீனங்களையும் பலங்களாக மாற்றிக் கொண்ட சாதுரியம் ஆகியவையே அவரை கரையேற வைத்தது.

டீன்-ஏஜ் பருவத்தில் பையன்களுக்கு தொண்டை உடைந்து ( இதை ' மகரக்கட்டு ' என்பார்கள்) பிறகு சரியாகும். ஆனால் எம்.ஜி.ஆருக்கு இது முழுமையாக  சீராகவில்லை.   நாடகமானாலும் சினிமாவானாலும் பாட்டே பிரதானமாக அப்போதிருந்த நிலையில் ,  இது  பெரிய  பலவீனம் தான். பாடுமளவுக்கு தனக்கு குரல் வளமில்லை என்று உணர்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர். இந்த பலவீனத்துக்காக அவர் சோர்ந்து விடவில்லை. மாற்றாக, வாள் வீச்சு, சிலம்பம், குஸ்தி  என்று வீர விளையாட்டுக் கலைகளை கற்றுக் கொண்டார். உடலை அதற்கேற்ப கட்டுமஸ்தாக வைத்துக் கொண்டார். இது  சினிமாவில் அவருக்கு  பெரிதும்  கைகொடுத்தது.  ஆரம்பத்தில் சினிமாவில் ஒதுக்கப்பட்டாலும் பின்னாளில் அவரை கவனிக்க வைத்தது. தமிழ் சினிமாவின் முழுமையான முதல் ' ஆக்ஷன் கிங்' ஆக உருவெடுக்க உதவியது. கடைசி வரை அதாவது அவரது 60வது வயதிலும் சாகச நாயகனாக ரசிகர்களை ஏற்றுக் கொள்ள செய்தது.

அடுத்து , அவரது முக அமைப்பு.  முதல் படமான ' சதிலீலாவதி 'யில் (1936ல் வெளியானது) நடிக்கும் போது MGRஎம்.ஜி.ஆருக்கு வயது 19 தான். முதன்முதலாக கதாநாயகனாக 'ராஜகுமாரி' (1947) படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 30.  இளவயது  தான்.  ஆனாலும், உன்னிப்பாகப் பார்த்தால் நீள் சதுர வடிவிலான அவரது முகத்தில் அந்த வயதை மீறிய முதிர்ச்சி மெலிதாகப் படர்ந்திருப்பதை அவரது மிக ஆரம்ப கால படங்களில் காணலாம். இதற்கு, அனுபவித்த வறுமை காரணமா அல்லது பிறப்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.

ஆனால் அதே முகம், அதற்கு பிறகு  முதிர்ந்ததாக காணப்படவில்லை. ஆரம்பத்தில் வயதிடம் தோற்ற அந்த முகம் பின்னாளில் வயதையே தோற்கடித்தது தான் ஆச்சரியம். அதாவது தனது 45, 50 வயதிலும் எம்.ஜி.ஆரின் முகம்,  30, 35 வயதைத் தான் காட்டியது.  அதற்கேற்ப அவர் பராமரித்து வந்த  தொந்தி  தள்ளாத 'சிக்' உடற்கட்டும்,  துள்ளல் நடிப்பும்,  இளமையை வெளிப்படுத்தும்  'பாடி லேங்குவேஜ்'ம் உறுதுணையாக இருந்தன. (உதாரணத்துக்கு: 'தாழம்பூ, அன்பேவா, சந்திரோதயம், நம்நாடு ...' என்று படங்கள் பட்டியலை அடுக்கிக் கொண்டேப் போகலாம்)

அதே போல், அவரது முகம் நுணுக்கமான, நெகிழ்வான உணர்வுகளை பளீரென பிரதிபலிக்காத தன்மை கொண்ட  'Metallic' என்றும் 'தூண்' என்றும் விமர்சித்து பலர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சான்ஸ் தராமல் நிராகரித்தார்களாம்.  இந்த பலவீனத்தையும் புரிந்துக் கொண்ட எம்.ஜிஆர்., அதற்கேற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிழம்பான கதையம்சங்களை தவிர்த்தார். தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக்கலையை முழுமையாக பிரயோகித்தார்.  படத்தின்
திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில்  போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ' எம்.ஜி.ஆர். ·பார்முலா ' என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.

தமிழ் சினிமாவில் ' மெலோடிராமா ' நிறைந்திருந்த காலகட்டத்தில் - அதுவும் அந்த நடிப்பில் திலகமாக  போட்டி நடிகர்   விளங்கிய நிலையில்  இவ்வாறு  வெற்றி  பெறுவது  சுலபமான விஷயமல்ல.  ' நடிக்கவே தெரியாத நடிகன்', ' கெழட்டு நடிகன் ', ' அட்டைக் கத்தி வீரன்'.... இப்படியான கிண்டல்கள் கேலிகளுக்கு மத்தியில் சாதிக்க முடிந்ததற்கு காரணம், மைனஸ் பாயிண்ட்டுகளை  ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாற்ற  எம்.ஜி.ஆர்  காட்டிய  உழைப்பும், நம்பிக்கையும், மனோ உறுதியும் தான்.

அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார்  எம்ஜிஆர்.  உலகிலேயே,  ஒரு  சினிமா  நடிகர்  தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.

'அரசியல் விதூஷகன்' என்று  கேலி  பேசியவர்களும்,  'அரிதாரம் பூசிவனெல்லாம் அரசாள முடியுமா? ' என்று கிண்டலாக கேட்டவர்களையும் கூட பின்னாளில் அவரை 'புரட்சித்தலைவர்' என்று புகழ வைத்தது அவரது வெற்றி.

அவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லாத குறையும் கூட அவருக்கும் அவர் மீதான 'இமேஜ்'க்கும் ஒரு வகையில் இயற்கையாகவே சாதகமாக அமைந்தது எனலாம்.  முதலமைச்சராக இருந்த போது  அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்தரப்பால் அடுக்கப்பட்ட போது, "அவருக்கென்ன. பிள்ளையா குட்டியா? பிறகெதுக்கு. ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளி  கொடுக்கிறவராச்சே.  சும்மா சொல்றாங்க" என்று மக்கள் மன்றத்தில் புகார்கள் எடுபடாமல் போகச் செய்தது.

1967ல் சக நடிகர் ஒருவரால் எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.  1984ல் உடல் நலம் குன்றி சாவின் விளிம்பை தொட்டு வந்தார்.  இந்த  இரண்டு  நிகழ்வுகளிலுமே உயிருடன் மீண்டு ,  ஒரு மனிதன்  ஒரே பிறவியில்  மூன்று முறை பிறவி கண்ட அதிசயமாக பாமரர்கள் மத்தியில் தானொரு அபூர்வப் பிறவியாக பிரமிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.  சாவையே  தோற்கடித்த சாகச வீரனாகவும், ' தர்மம் தலைகாக்கும் ' என்கிற உபதேசத்தின் உதாரண புருஷனாகவும் அவர் சாமானிய மக்கள் மத்தியில் உலா வர, அந்த 1967, 1984 அசம்பாவிதங்களும் கூட அவருக்கு சாதகமாக அமைந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது !

அதே 1967ல் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை ஆஸ்பத்திரியிலும் இருந்த போதும், 1984ல் சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியிலும் படுத்திருந்த நிலையிலும் பிரச்சாரத்துக்கு தொகுதிக்கே போகாமல் சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்து அரசியல் எதிரிகளை அதிர வைத்த செல்வாக்கு!

அதுமட்டுமா, மேற்குறிப்பிட்ட அவ்விரு சம்பவங்களிலும் எம்.ஜி.ஆரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட போதும்  அவரை அவராகவே அப்படியே ஏற்று அள்ளி அரவணைத்துக் கொண்ட மக்களின் அபிமானம் !!

இப்படி ஆச்சரியம் அல்லது அதிசய நிகழ்வுகளை உள்ளடக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் காலம் மொத்தம் 70 ஆண்டுகள்.  அதில்  சுமார்  40  ஆண்டு  கால  சினிமா வாழ்க்கையில் (1936- 1977) அவர் நடித்தது மொத்தமே 136 படங்கள் தான்.  இதன் ஊடே  1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்ந்தது தொடங்கி அரசியலில் முழுவீச்சில் ஈடுபட்டது (1987ல் தமிழக முதலமைச்சராக மரணமடையும் வரை) 34 ஆண்டுகள் தான்.

MGRஆரம்பத்தில்  அவர்  ஆட்சியை  பிடித்த போது 'சினிமா கவர்ச்சி' என்றார்கள்.  இந்த  மாயை சீக்கிரமே விலகி விடுமென்றார்கள். ஆனால், இன்றளவுக்கும்  கணக்குப் பார்த்தால்  எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு விலகி சரியாக 30 ஆண்டுகள் ஆகிறது. அவ்வளவேன், அவர் மண்ணை விட்டு மறைந்தே சுமார் 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும்  அவர்  முகமும் பெயரும் தான் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி.  அவரது  காலத்தில்  அவருக்கு அரசியல்  எதிரிகளாக   இருந்தவர்களானாலும்  சரி...  நேற்றைக்கு   புதியதாக  கட்சி ஆரம்பித்தவர்களானாலும் சரி.. எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி  தான் ஓட்டுகள் வாங்க முடியுமே தவிர  திட்டி வாங்கிட முடியாது என்பது தான் நிகழ்கால நிதர்சனம்.

ooOoo

 

பிஞ்சு பருவத்தில், வறுமையையும் வேதனையையும் மாத்திரமே சுமந்துக் கொண்டு பிறந்த
நாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க இன்னொரு நாட்டுக்கு தஞ்சம் புகுந்து ;  மூச்சு முட்ட முட்டப் போராடி; அடைக்கலம் கொடுத்த நாடே உயரிய விருதையும் அளித்து கவுரவப்படுத்தும்படி  உயர்ந்து  வாழ்ந்து -  மண்ணை  விட்டும் மறைந்தும் ஏழைகளின் குடிசைகளில்  இன்றளவும்  சாமிப் படமாக  தொங்கியிருக்கும்  அந்த சாமானிய , தனி மனிதன்  தனது  வாழ்க்கைப் பயணத்தில், அடுத்த தலைமுறைக்கென பதிவு செய்து விட்டு சென்றுள்ள செய்தி இது தான்:-

 " தோல்விகளாலும்  பலவீனங்களாலும் சோர்ந்து விடக் கூடாது.  அவற்றை  விடா முயற்சியாலும், மனோதிடத்தாலும் பலங்களாக்கி கொள்ள வேண்டும் "


(அமரர் எம்.ஜி.ஆருக்கு 17-1-2007 அன்று  90வது பிறந்த நாள்)

|
oooOooo
                         
 
பாபுடி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |