Tamiloviam
ஜனவரி 11 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : விளக்கு பூஜை
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

விளக்கு பூஜை என்பது தமிழக கோவில்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. பெண்களால் கொண்டாடப்படும் இந்த விளக்கு பூஜைக்கு அப்படி ஒரு மரியாதை. இந்த விளக்கு பூஜைகள் எதற்காக நடத்தப்படுகிறது, இதனால் என்ன பயன் என்பதை அறிய முயற்சித்த பொழுது சுவராய்ச்சியமான தகவல்கள் கிடைத்தன.

Vilakku Poojaபொதுவாக திருக்கோவில்களில் விளக்கு பூஜைகள் 101, 1001, 10,001 போன்ற எண்ணிக்கைகளில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால் இது பெண்களால் நடத்தப்படுவது தான். தமிழக கோவில்களில் பெண் தெய்வங்களை முக்கிய வழிபாட்டு தெய்வமாக பழங்காலத்தில் இருந்து இன்று வரை வழிபடப்பட்டு வருகிறது. பெண்களை, பெண்மையை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பபடுகிறது. இப்படிப்பட்ட தெய்வங்களுக்கும், ஆண் தெய்வங்களுக்கும் பெண்கள் விளக்கு பூஜைகள் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த விளக்கு பூஜைகள் சுமங்கலிப் பெண்களால் நடத்தப்படுவதால் இதற்கு சுமங்கலிப் பூஜைகள் என்ற பெயரும் உண்டு. இந்தப் பூஜைகள் செய்வதால் குடும்பங்களுக்கு எந்த வித தீங்கு இல்லாமல், தாலிப்பாக்கியம், உடல் நல ஆரோக்கியம் கிடைப்பதாக பெண்கள் சொல்கிறார்கள்.

விளக்கு பூஜைகள் பெரும்பாலும் கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. மழை சரியாக பெய்ய வேண்டும் என்றும், ஊர் மக்களின் நோய் நொடி இல்லாத வாழ்விற்கும், மத நல்லிணக்கத்திற்கும், பெண்களின் தாலிப் பாக்கியத்திற்கும் இந்த விளக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்தப் பூஜைகள் ஆரம்பமாகும் பொழுது, பெண்கள் தங்களது முன்னால் இருக்கும் குத்துவிளக்கில் விளக்கினை ஏற்றி, கோவிலின் தலைமை அர்ச்சகர் இறைவனை பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் அர்ச்சகர் சொல்லும் ஸ்லோகங்களை சொல்வார்கள். அப்படி சுலோகங்களை சொல்லிக் கொண்டு தங்களிடம் இருக்கும் குங்குமப் பொட்டை சிறிது, சிறிதாக எடுத்து விளக்கின் மீது தூவுவார்கள். சில சமயத்தில் பூக்களையும் அப்படி தூவுவார்கள்.

விளக்கு பிரகாசமாக எரிவதற்கு அவ்வப் பொழுது சுத்தமான நல்லெண்ணெய் விட்டுக் கொள்வார்கள். இப்படி ஆரம்பமாகும் இந்தப் பூஜை சுமார் 3 முதல் 5 மணி வரை நடை பெறுகிறது.  இந்தப் பூஜைகள் செய்யும் பொழுது தெய்வங்களை போற்றிப் பாடுகின்ற பாடல், சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பது தான் தனிச்சிறப்பு. இப் பூஜைகள் முடிந்த பின் பெண்களுக்கு புது தாலிக்கயிறு, மஞ்சள் கிழங்கு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. இறுதியில் விளக்கு பூஜைகள் நடத்தப்படும் தெய்வத்திற்கு அலங்கால பூஜைகள் நடத்தப்பட்டு விழா முடிக்கப்படும்.

இப்படி நடைபெறும் விளக்கு பூஜையில் பெண்கள் வயது வரம்பின்றி கலந்து கொள்ளலாம். இதற்கென்று தனி விதிமுறைகள் என்று எதுவும் கிடையாது. சுத்தமாக, கோவிலுக்கு வருதல் என்பது தான் பொதுவிதி. பொதுவாக கோவில்களில் நடக்கின்ற விளக்கு பூஜையில் கலந்து கொள்ள பெண்களிடையே அதிகமான போட்டிகள் இருப்பதால் முன்பே டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. அதே போல் விளக்கு பூஜைக்கு தேவையான நல்லெண்ணெய், குத்துவிளக்கு, குங்குமம், தாலிக்கயிறு, மஞ்சள் கிழங்கு போன்றவற்றை பூஜைக்கு ஏற்பாடு செய்கின்ற கோவில் நிர்வாகத்தினரே கொடுத்து விடுகின்றனர் என்கிறார் மாயூரநாத சுவாமி திருக்கோவிலின் செயல் அலுவலர் செல்வராஜ் பெரும்பாலான கோவில்களில் விளக்கு பூஜைகள் நடக்கின்றன. இது நல்ல விஷயமாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது.

இந்த விளக்கு பூஜையில் ஆண்கள் கலந்து கொள்ளாமல் பெண்கள் மட்டும் ஏன் கலந்து கொள்கிறார்கள் என்றால் அதற்கும் ஓர் காரணம் இருக்கிறது. பொதுவாக வீட்டில் பெண்கள் சதா ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு பரபரப்பாகவே இருக்கிறார்கள். அதிலும் கிராமப்புற, இரண்டாம் நகரப் பகுதிகளில் இருக்கின்ற பெண்கள் அதிகமான வேலைகளைச் செய்து மன உலைச்சல் அடைகின்றனர். அவர்களின் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை, மன அமைதியை ஏற்படுத்த இந்த விளக்கு பூஜை பெரிதும் உதவுகிறது. அதே சமயத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட குத்துவிளக்குகளைத் தான் விளக்கு பூஜைக்கு பயன்படுத்துவர். அந்த விளக்கினைப் பயன்படுத்தி தரமான திரியைப் போட்டு, நல்ல எண்ணெயை விட்டு விளக்குகளை எரிய விடுகிறார்கள். இப்படி குத்து விளக்கு எரியும் பொழுது அதில் இருந்து கிளம்புகின்ற ஒரு வித வாசனை பெண்களின் உடலுக்கு நல்லது என்றும், அந்த விளக்கு வெளிச்சத்தில் பரவும் ஒரு வித மென்மையான வெப்பம் பெண்களின் உடலில்  3முதல் 5 மணி நேரம் தொடர்ந்து படர்ந்து கொண்டே இருப்பதால் பெண்களின் உடல் ஆரோக்கியமடைகிறது என்ற ஓர் அறிவியல் ஆய்வே சொல்கிறது. சில மணி நேரம் பெண்கள் தங்கள் குடும்பம், துன்பம், இன்பங்களை மறந்து ஒரே சிந்தனையாக இறைவனை துதித்து விளக்கு பூஜைகள் செய்வதால் அவர்களது மனதிற்கு ஒர நிம்மதி கிடைக்கிறது. இந்த பூஜையில் பெண்கள் கலந்து கொள்ளும் பொழுது பெண்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு இவ்வொருவருக்கும் இரண்டு அடி இடைவெளி விடப்பட்டிருக்கும். இது ரொம்ப நல்ல முறை. ஏனென்றால் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு, தள்ளிக் கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்கிறார் இப்பூஜையில் பல முறை தொடர்ந்து பங்கு பெற்று வரும் பெண் மருத்துவரான லட்சுமி உலக நன்மைக்கு, சமூக நன்மைக்கு, மழை வேண்டி, நாட்டு நன்மைக்கு என்று சொல்லி கோவில்களில் நடைபெறுகின்ற விளக்கு பூஜைக்கு பின்னால் பெரிய மோசடியே இருக்கிறது.

அதாவது விளக்கு பூஜையில் கலந்து கொள்ள பெண்கள் நினைத்தால் அவர்கள் குறிப்பிட்ட பணத்தை செலுத்தி, சம்மந்தப்பட்ட கோவிலில் டோக்கன் வாங்கினால் தான் விளக்கு பூஜைக்கு செல்ல முடியும். இந்த டோக்கன்கள் குறைந்தது நூறு ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. வி.ஜ.பி. டோக்கன். சாதாரண டோக்கன், சிறப்பு டோக்கன் என்று இந்த விளக்கு பூஜையில் கோவிலைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சம்பாதிக்கச் செய்கின்றனர். இந்த மாதிரியான பூஜைக்கு தலித் பிரிவு பெண்களை அதிகமாக அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒரு கோவிலில் ஒரு நிகழ்ச்சியை வைக்க பணம் தேவை என்றால் உடனே விளக்கு பூஜை ஏற்பாடு செய்து அதன் மூலம் தங்களுக்கு வேண்டிய பணத்தை சம்பாதித்து கொள்கின்றனர். அதே போல் இந்த விளக்கு பூஜையால் வியாபாரிகள் தான் நல்ல பலனை அடைகிறார்கள். எண்ணெய், திரி, மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு என்று பல வியாபாரம் இதில் அடங்கி இருக்கிறது. இது அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆரம்பித்து, தனியார் கோவில்கள் வரை இன்று நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஏதாவது செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால் நுழைவு கட்டணம் இல்லாத விளக்கு பூஜைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்கிறார் பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த மணியன்.

|
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |