Tamiloviam
ஜனவரி 18 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

ஆண்டு தோறும் தை மாதம் 3ம் தேதி நடைபெறும் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் பலத்த சர்ச்சைகளுக்கு இடையே நடந்தது. தூங்கா நகரமான மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலங்காநல்லூர் ஊராட்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் தன்னைப் பிடிக்க வந்தவர்களை பந்தாட, சிலர் மாடுகளைப் பிடித்து கொண்டாட என அலங்காநல்லூரே கலை கட்டியது.

தமிழ் சமூகம் என்றால் பலவித அடையாளங்கள், வாழ்க்கை முறைகள் முன் வைக்கப்படுகிறது. அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பது தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்படுகின்ற ஜல்லிக்கட்டு. அதிலும் அலங்காநல்லுரில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு தனி மரியாதை. சுமார் 400 ஆண்டுகளாக கொண்டாடப்படுகின்ற விழாவாக இருந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக அவ்வூர்வாசிகள் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் ஊரில் உள்ள மக்கள் நோய் வாய்ப்பட்டு வாடிய பொழுது அவ்வூரில் இருக்கும்  முத்தாலம்மன், முனியாண்டி என்ற காவல் தெய்வம் தனக்கு வழிபாடு நடத்தி, காளைகளை அவிழ்த்துவிட்டு அதனை இளைஞர்களை விட்டு பிடிக்க விட வேண்டும் என அருள் வாக்கு சொன்னதாகவும், அதன் படி செய்ததால் ஊரில் மக்களுக்கு எந்த வித நோய் நொடி இல்லாமல் மக்கள் வாழ்ந்துள்ளனர். முதலில் அலங்காநல்லூரைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் பிடித்து வந்த ஜல்லிக்கட்டை பின் பிற ஊர் மக்களும், இளைஞர்களும் பிடிக்கத் தொடங்கிய பொழுது இவ்வூர் பிரபலமடையத் தொடங்கியது. அதன் பின் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் சார்பில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கொண்டாடத் தொடங்கியதில் இருந்து இந்திய அளவிலும், உலக அளவிலும் இவ்வூர் ஜல்லிக்கட்டிற்கு பெயர் கிடைத்திருக்கிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகள் கலந்து கொண்டன. அதனைப் பிடிக்க 150 பேர் கலந்து கொண்டனர். பொதுவாக ஜல்லிக்கட்டிற்கு மாடுகளை பிடிக்க யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது தான் ஆரம்ப காலத்தில் இருந்து வரும் முறை. இந்த முறை மாடு பிடிப்பவர்கள் முதலிலேயே தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும், மாடுகளின் உரிமையாளர்களும் தங்களின் மாடுகளை பதிவு செய்து, மாடுகளுக்கு மருத்துவ சான்றிதல்கள் வாங்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டதால் மாடு பிடிப்பவர்களும், மாட்டின் உரிமையாளர்களும் சிரமப்பட்டனர்.

Alanganallur Jalli kattuமுத்தாலம்மன் கோவில் திடல் தான் மாடுகளை பிடிக்கும் இடமாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு விழா தொடங்குகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னவுடன் மாடுகளை பிடிப்பதற்காக வாடி வாசல் என்று சொல்லக் கூடிய ஒரு மாடு மட்டுமே வரக் கூடிய பகுதி வழியாக மாடுகளை வரிசையாக விடுகின்றனர். முதன் முதலில் முனியாண்டி கோவில் மாட்டினை விடுகின்றனர். அதனை யாரும் பிடிக்கத் கூடாது என்பதால் அந்த மாட்டினை யாரும் பிடிப்பதில்லை. அதன் பின் விடப்படுகின்ற காளைகளை பிடித்தால் தங்க காசு, பணம், வேட்டி துண்டு என பரிசுகள் அறிவிக்கப்படுவதால் மாடுகளை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு பிடிக்கிறார்கள். வாடிவாசல் அருகே இருந்து சுமார் 50 அடி தூரம் வரை மாட்டின் திமிலை ஒருவர் மட்டுமே கெட்டியாக பிடித்துக் கொண்டே சென்றால் அவர் மாட்டை பிடித்ததாகச் சொல்லி பரிசுகளை கொடுக்கின்றனர். அப்படி பிடிக்க வருபவர்களைத் தான் மாடுகள் கோபத்தில் முட்டி தூக்கி எறிகின்றன. பெரும்பாலான மாடுகள் பிடிபடாமலே ஓடிவிடுகிறது. ஒரு சில மாடுகள் மட்டுமே தன்னை பிடிக்க வருபவர்களை அருகில் நெருங்க விடாமலும், அப்படி வருபவர்களை விரட்டி விரட்டி தனது கொம்பினால் தூக்கி எறிகிறது. இதனைத் தான் மாடு விளையாடுகிறது என்று சொல்கிறார்கள். இப்படி மாடு பிடி வீரர்களிடம் விளையாடும் மாட்டிற்கு தனி மரியாதை உண்டு. இப்படி அடக்கப்படாமல் போகின்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு உள்ளிட்ட பல பரிசுகள் கொடுக்கப்படுகிறது. ஒரு மாட்டினை பிடிப்பது என்பதை மாடு பிடிப்பவர்கள் ஒரு நுணுக்கமாக செய்கிறார்கள். அதாவது மாட்டின் கண் அசைவைக் கொண்டு மாட்டின் மீது தாவி திமிலை பிடிக்கின்றனர். இந்த நூணுக்கம் தெரியாமல் முதன் முதலாக மாடு பிடிப்பவர்கள் தான் மாட்டிடம் முட்டு வாங்கி காயமடைகின்றனர். சிலர் உயிரையும் விடுகின்றனர்.

ஜல்லிக்கட்டிற்கு வரும் மாடுகள் பார்ப்பதற்கு முரட்டுத் தனமானவையாக இருக்கின்றன. இதற்கென தனிக் கவனத்தோடு மாடுகளை வளர்க்கப்படுவதாக மாட்டின் உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.இந்த மாடுகளை எந்த விவசாயப் வேலைகளுக்கும் பயன்படுத்தாமல், மனிதர்களின் பார்வையே படாமல் ஒரு நபர் மேற்பார்வையிலேயே வளர்க்கப்படுகிறது. சிறு வயது கன்றுக் குட்டி பார்ப்பதற்கு முரட்டுத் தனமாக இருந்தால் அந்த கன்றுக் குட்டியை தனியாக பிரித்து தனி இடத்தில் அடைத்து வைத்து ஜல்லிக்கட்டு மாடுகளாக வளர்க்கிறார்கள். இந்த வகை மாடுகளுக்கு பச்சை அரிசி, பருத்திக் கொட்டை, சோளம், கம்பு, கேள்வரகு போன்ற சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே கொடுத்து வளர்க்கிப்படுகிறது. இவை தவிர மாட்டின் கொம்புளை நன்கு சீவி விட்டு கூர்மையாக்கி ஜல்லிக்கட்டிற்கு விடப்படுகிறது. இப்படி மனித கூட்டத்தையே பார்க்காமல், முதன் முதலில் மனிதக் கூட்டத்தை பார்த்து ஜல்லிக்கட்டு மாடுகள் ஒருவித கலக்கம், கோபம் கொண்டு மனிதர்களை முட்டித் தள்ளுகின்றன. இப்படிப்பட்ட மாடுகளை வளர்க்க ஒரு மாட்டிற்கு சில லட்சங்கள் வரை செலவாவதாக சொல்கிறார்கள்.

இப்படி நடத்தப்படும் ஜல்லிக்கட்டால் யாருக்கு என்ன பயன்?  இதனால் பயன் அடைவது யார் என்ற கேள்விகளை ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களிடமும், மாடு பிடிப்பவர்களிடமும், பார்வையாளர்களிடமும் கேட்ட பொழுது இது ஒரு மறைமுக சு10தாட்டமான விளையாட்டாக பரிணாமம் அடைந்து வருவது தெளிவாக தெரிகிறது.

ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்தது உண்மை தான். ஆனால் அந்த வீர விளையாட்டு இன்று சூதாட்டமாக மாறிவிட்டது. ஒரு நல்ல ஜல்லிகட்டு மாட்டை உருவாக்கி அதனை களத்தில் விட்டு அந்த மாடு பிடிபடாமல், தன்னை பிடிக்க வந்தவர்களை தனது கூர்மையான கொம்பினால் தூக்கி எறிந்தால் அந்த மாட்டின் விலை பல லட்சங்களை தாண்டுமாம். அதே போல் ஒரு மாடு ஜல்லிக்கட்டு களத்தில் சில நிமிடங்கள் வரை நின்று தன்னை பிடிக்க வருபவர்களோடு ஒரு விளையாட்டு விளையாடினால் அந்த மாட்டிற்கு தனி மரியாதை, தனி விலை இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி ஒரு மாட்டின் விலையை அதிகரிக்க மாட்டின் உரிமையாளர்களே சில மாடு பிடி வீரர்களை அழைத்து அவர்களிடம் பேரம் பேசி தனது மாட்டை பிடிப்பது போல் பிடித்து அந்த மாட்டிடம் முட்டு வாங்கினால் பணம் அதிகமாக தருவதாக பேரம் பேசி அதன் படி செய்வதும் நடந்து வருவதாக சொல்கிறார்கள். அதே போல் சில மாடுகளுக்கு போதை தரும் மது, சாராயம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து ஜல்லிக்கட்டில் விடப்படுவதாகவும் குற்றம் சொல்லப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டை வைத்து பல லட்சங்கள் வரை வியாபாரமும் நடக்கிறது என 5 ஆண்டுகளாக தொடர்ந்து ஜல்லி மாட்டை பிடித்து பல பரிசுகளை பெற்று வரும் அழகர்சாமி சொல்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகளை மாடு வளர்ப்பவர்கள் மறுக்கிறார்கள். எங்கள் வம்சமே ஜல்லிகட்டுக்கு மாடு வளர்க்கும் வம்சம் என்று சொல்லும் நடராஜ் மாடு வளர்ப்பதும், அந்த மாட்டை ஜல்லிக்கட்டில் அடக்காமல் விடப்படும் பொழுது அந்த மாட்டிற்கும், அதன் உரிமையாளருக்கும் தனி மரியாதை ஊரில் கிடைக்கும் என்கிறார்.

வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று சொல்லியே நமது அரசியல்வாதிகள் தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்த ஜல்லிக்கட்டை வைத்தும் அது தான் நடக்கிறது. அப்பாவி தமிழ் இளைஞர்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை இந்த ஜல்லிக்கட்டு திசை திருப்புகிறது. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் வாழ்க்கை பின்னனியைப் பார்த்தால் ஏழைகளாக, சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களாகத் தான் இருப்பார்கள். எந்தப் பணக்கார தமிழ் இளைஞனோ, இளைஞர்களையோ இதில் நாம் காண முடியாது. அவர்கள் வாழ்க்கையை, உலக முன்னேற்றத்தை புரிந்து கொண்டவர்கள். அறிவால் உலகை வெல்ல வேண்டும் என போகக் கூடியவர்கள். ஆனால் உடல் உழைப்பால் மட்டுமே வாழ்க்கையை நடத்தி வரும் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே, ஜல்லி மாட்டை பிடிக்க ஆர்வத்தோடு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்கும் பொழுதும் சிலர் மரணம் அடைகின்றனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைகின்றனர். இப்படி காயம் அடைபவர்கள் எழுந்து நடக்க, இயல்பாக வாழ சில வருடங்கள் ஆகிவிடுகிறது. ஒரு சிலரது குடும்பமே நடுத்தெருவில் வந்து நிற்கும். இது எல்லாம் நமது பத்திரிக்கைகளுக்கோ, தொலைக்காட்சி சானல்களுக்கோ தெரிந்தும் அதனை வெளிப்படுத்தாமல் ஜல்லிக்கட்டை தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழா, மண்ணிண் விழா என்று சொல்லி பெருமை அடைகிறார்கள். ஜல்லிக்கட்டை தடை செய்தால் தமிழின், தமிழ்நாட்டின் பெருமை அழியும் என அரசு வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடுகிறார். ஆனால் தமிழன் எத்தனையோ ஆரோக்கியமான பெருமைகளை இழந்து வருகிறான். ஆரம்ப காலத்தில் தமிழ் சமூகத்தில் டீ, காபி என்பதே கிடையாது. நீச்சத் தண்ணீர் தான் இருந்தது. இன்று அது காணாமல் போய் விட்டது. அதே போல வேட்டி, சட்டை, சேலை தான் தமிழர்களின் பாரம்பரிய உடை. இன்றைக்கு எத்தனை இளைஞர்கள் வெள்ளை வேட்டி அணிகிறார்கள். அணியத் தெரிகிறது? இப்படி பல கேள்விகள் இருக்கிறது. ஜல்லிக்கட்டை தடை செய்ய பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதனை முறியடித்து ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள். அது என்று தடை செய்யப்படுகிறதோ அன்று தான் உண்மையான பொங்கல் விழாவாக இருக்கும் என்கிறார் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராகவன்.

| |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |