Tamiloviam
ஜனவரி 24 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- ஆல்பர்ட் [albertgi@gmail.com]
| | Printable version | URL |

 

எனது குடியரசுதின நல்வாழ்த்துக்கள்!

அதிகாரப் பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை கோலாகலமாக தேசியக் கொடி ஏற்றி இறக்கப்படுகின்றது.

உலக நாடுகள் எல்லாம் ஒருமுறை, அதாவது அந்தந்த நாடு சுதந்திரம் பெற்ற பொன் நாளை மட்டும் கொண்டாடி மகிழ்கின்ற நிலைதனையும், ஆனால் இந்தியத் திருநாட்டில் மட்டும் ........ சுதந்திர தினம் என்றும் குடியரசு தினம் என்றும் இரு நாட்களாகக் கொண்டாடுகிற நிலைதனையும் பெற்றிருக்கிறோம் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால், ஏன்? இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட வேண்டும்? எதற்காக? எப்போதிருந்து என்பதற்கான விடை காண இன்றைய இளைய சமுதாயம் முயன்றதுண்டா? அவர்களுக்கு அதற்கு நேரமோ, அவகாசமோ இதற்கெல்லாம் இல்லைதான்!

அரசியல் கட்சிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள், சேவைச் சங்கங்கள்...... என்று குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடியில் வண்ணப் பூக்களைக் கொட்டி கெட்டியாக கயிற்றால் கட்டி முடிச்சுப் போட்டு
கொடிக் கம்பத்தோடு சேர்த்துவைத்து இறுகக் கட்டி வைத்திருப்பார்கள். அதை அவிழ்த்து அந்தக் கொடிக்கம்பத்தின் உச்சி முகர வைத்து ஒரே ஒரு உதறலில் முடிச்சு அவிழ்க்கப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் பூக்களுக்கு விடுதலை அளித்து கொடி....கயிறை விட்டுப் போய்விடாமல் காற்றில் படபடவென பறக்க வைக்க ஒரு வி.ஐ.பி.! முப்படை அணிவகுப்பு! மாநிலங்கள் கண்ட சாதனை விளக்க ஊர்தி அலங்கார அணிவகுப்பு!

மாநிலங்களில், மாவட்டங்கள் சாதனை விளக்க ஊர்தி அலங்கார அணிவகுப்பு, சிறந்த சேவை புரிந்தோர்க்கு பதக்கங்கள், விருதுகள் கெளரவிப்புகள் என்று இந்தியத் துணைக் கண்டமே விழாக்கோலமாயிருக்கும்!

பட்டொளி வீசிப் பறக்கும் மணிக்கொடி! வண்ணமயமாய் மூவர்ணக்கொடி காற்றில் படபடக்கிறது. பள்ளிச் சிறுவர்களுக்கு குதூகலம். வாயில் இனிக்கும் மிட்டாய். அதைவிட இனிப்பு.... இன்று பள்ளி விடுமுறையல்லவா?

கூடல்நகரில்.....!

நள்ளிரவு! அந்த நடுச்சாம வேளையில் பெயர் தெரியாத சில இளைஞர்கள் கூடிப்பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஊரே உறங்கிக் கொண்டிருக்கையில்.....இவர்களின் கண்களும் காதுகளும் விழித்துகொண்டிருக்க, அந்த மையிருட்டில் அவர்கள் உருவமே அவர்களுக்குத் தெரியாத நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்டது வேறு எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை! பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம் ஒருவித துறுதுறுப்பு; ஒருவித பரபரப்பு தென்பட்டதை அந்தக் காரிருள் மறைத்துக் கொண்டது.

அவர்கள் பேச்சு ஒருவித முடிவுக்கு வந்ததற்கு அடையாளமாக எல்லோரின் தலையும் சம்மதம் என்பது போல ஆடி அசைய அந்த இளைஞர் குழுவின் தலைவன் எதையோ எடுத்து ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கின்றான். எல்லோரும் பெற்றுக்கொண்ட அடுத்த வினாடி.... அரைகால் டிரவுசர் அணிந்த இளைளஞர்கள் எதையோ கைகளில் மறைத்துப் பிடித்துக்கொண்டு கால்கள் பின்னந்தலையில் இடிக்க ஓட்டமாய் ஓடிவருகின்றனர்! அவர்கள் ஓடி வந்து நின்ற இடம் மதுரை மீனாட்சியம்மன் கோவில். கோவில் நடை திறக்கப்படவில்லை. திரைப்படக் காட்சி போல அடுத்தடுத்த காட்சிகள் அங்கு அரங்கேறுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் மதில்சுவரை ஒட்டி ஒரு சிறுவன் குனிந்துகொள்ள அவன்
முதுகில் மற்றவன், அவன் முதுகில் ன்னொருவன் என்று மளமளவென்று ஒருவரை ஒருவர் ஏணியாக்கி மேலேறுகின்றனர்.

அங்கிருந்து கோபுரத்துக்குத் தாவுகின்றனர். கிடுகிடுவென கோபுரத்தில் செதுக்கியிருந்த சிலைகளைப் பற்றி தங்கள் கால்களில் மிதித்து ஏறி முன்னேறுகின்றனர். கோபுர உச்சியை அடைந்ததும் தாங்கள் கையோடு கொண்டுவந்ததை அங்கிருந்த கலசங்களில் கட்டுகின்றனர். கட்டி முடித்துவிட்டு கீழே பார்க்கின்றனர்; தலை சுற்றிப்போகிறார்கள்; ஆஹா! இவ்வளவு உயரத்திலா இருக்கிறோம், என்று எண்ணுகிறார்கள். விடிந்தும் விடியாத காலைப் பொழுது; தூரத்தில் வருகிறவர் முகம்
தெரியாத இருட்டு! 

கூடல் மாநகராம் மதுரை மாநகர வீதிகளில் பெண்கள் தங்கள் முற்றத்தை பெருக்கி சாணம் தெளித்து மாக்கோலம் இட்டு, பசுஞ்சாணத்தை உருண்டை பிடித்து அதன் தலையில் இதழ் விரிக்காத பூசணிப் பூவை வைத்து அழகுபார்த்துக்கொண்டிருக்கிற காலை வேளை!

பால், தயிர், மோர் விற்கும் பெண்கள்! வீட்டுக்கு தண்ணீர் சுமக்கும் பெண்கள்! காலைக்கடன்களை முடிக்க வீட்டிலிருந்து வெளியேறும் ஆண்கள்! அத்தனை பேர்களின் கண்களும் மீனாட்சி அம்மன் கோவில் உச்சியைத் தரிசிக்கிறது! ஆஹா! அடைந்துவிட்டோமா!?

நாம் அந்தச் சுதந்திரத்தை என்று வியப்பு மேலோங்கப் பார்த்து பரவசப்படுகின்றனர். அன்றைக்கு அதிகாலையில் அவர்களின் கண்களுக்கு காட்சியளித்தது மீனாட்சி அம்மன் கோவில் கலசங்களில் பட்டொளிவீசிப்பறந்துகொண்டிருந்த இந்திய தேசியக் கொடிதான் அது! அதைத்தான் அந்தச் சிறுவர்கள் அங்கே... அந்த உச்சிக்கு எடுத்துச் சென்று கூடல் நகருக்கே தெரியவேண்டுமென்று கட்டிப் பறக்கவிட்டிருந்தார்கள்!

அவர்கள் அப்படிச் செய்யக் காரணம் காந்திஜி அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த கட்டளை அது!
 
குடியரசு தினம் மலர்ந்த காரணம்...

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ''பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான லட்சியம்'' என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது, எவ்வாறு அகிம்சாபூர்வமான வரிகொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்.

அச் சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பது குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930,ஜனவரி 26ம் தேதி.... முதல் குடியரசு தினம்......!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்தநாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான். ''நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.'' ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பதாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று.

அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான் சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்துஅறிவித்து செயல்படுத்தியது 1948ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு. ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்த கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்வதற்கு எத்தனை, எத்தனை தியாகிகளின் மனைவிமார்கள் தங்கள் தாலிக்கொடியை இழந்து இந்த வீர சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று இந்த நாளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்! சுதந்திரமாகப் பறக்கத் துடிதுடிக்கும் மூவர்ணக்கொடி உதிர்க்கும் மலர்கள் தியாகிகளின் மனைவியரின் கூந்தலிலிருந்து
நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட மலர்கள் என்று நம் பிள்ளைகளுக்கு அதன் வலியை உணரச் சொல்லிக்கொடுக்கவேண்டும் !

எல்லோருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள் !

|
oooOooo
                         
 
ஆல்பர்ட் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |