Tamiloviam
பிப்ரவரி 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : சிங்கவாய் கல் ! - காவேரி பிரச்சனை
- பாபுடி [rajputh61@rediffmail.com]
| | Printable version | URL |

Protestமெஜாரிட்டி சிங்கமாகவும் மீதி கொஞ்சம் டிராகனின் சாயலிலும், பார்க்க விசித்திரமாய் வாய் பிளந்து கொண்டு பயங்கரமான தோற்றத்தில் பழங்கால சிற்பத்தை சில கோயில்களில் அநேகமாய் பார்த்திருப்பீர்கள். அதன் வாய்க்குள் வழுவழுவென ஒரு கல்பந்து உருண்டுக் கொண்டிருக்கும். வாய்க்குள் கையை விட்டு அந்த கல்பந்தை ஆட்டலாம், உருட்டலாம். ஆனால் வெளியே மட்டும் எடுக்க முடியாது.

இந்த  கல் உருண்டைக்கும் காவிரி நதி நீர் பிரச்னைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக  எனக்கு  தோன்றவில்லை.  இரண்டுமே  உள்ளேயும்  போகாமல் வெளியேயும் எடுக்க வராமல் தீர்வே இல்லாதபடிக்கு காலம் காலமாக அல்லாடிக் கொண்டேயிருக்கிறது.

இந்த காவிரி நதி நீர் பிரச்னையின் மூலத்தை தேடினால் சோழ மன்னன் ராஜராஜன் காலத்துக்கு போய் தான் நிற்க வேண்டும். அப்போது கன்னட தேசத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் தமிழகத்துக்கு (சோழநாடு) காவிரி வருவதை தடுக்க நதியின் குறுக்கே அணை கட்ட முயல, உடனே ராஜராஜன் படையெடுத்து சென்றானாம். அதற்கடுத்து இதே தடுப்பு வேலயை சிக்க தேவராயன் என்ற கன்னட ராஜாவும் மேற்கொள்ள அதை தடுக்க நம்மூர் ராணி மங்கம்மாள் படையெடுத்து செல்ல வேண்டியிருந்ததாம்.

இங்கிலீஷ்காரன் காலத்திலும் காவிரிப் பிரச்னை தலைதூக்க,  1890ல் அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு யார் யாருக்கு எவ்வளவு நீர் பங்கீடு என்று ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

பிறகு, 1924ல் மீண்டும் விவகாரம். மீண்டுமொரு ஒப்பந்தம். அதில் காவிரியின் குறுக்கே தமிழகத்தில் மேட்டூர் அணையும், கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையும் கட்டிக் கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், கர்நாடகா அத்துடன் நிற்காமல், தோதான சமயம் பார்த்து காவிரியின் உபநதிகளாக அம்மாநிலத்தில் ஓடும் கபினி மற்றும் ஹேமாவதி ஆகிய ஆறுகளின் குறுக்கேயும் அணைகளை கட்டிக் காவிரியின் ஓட்டத்தை தங்கள் வசதிக்கு ஏற்ப கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டது. அப்போது ' கோட்டை விட்டு விட்டு ' பிறகு குதிக்க ஆரம்பித்தது தமிழகம்.

பருவ மழை பொய்க்கும் போதெல்லாம் காவிரி பிரச்னை விஸ்வரூபமெடுப்பது வாடிக்கையாகியது.  தங்களுக்கு உரிய பங்கு நீரை திறந்து விட தமிழன் கேட்பதும் அதற்கு  கன்னடக்காரன்  மறுப்பதும்;  ஒப்பந்தங்கள்  கிடப்பில்  போடப்படுவதும் தொடர்கதையானது.

காவிரியில் தங்களுக்கு உரிய பங்காக ஆண்டுக்கு 562 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டுமென தமிழகமும், தங்களுக்கு 465 டிஎம்சி வேண்டுமென கர்நாடகாவும் வலியுறுத்தின. இவை தவிர கேரளாவும், புதுச்சேரியும் தங்களுக்குரிய தண்ணீர் பங்கை கேட்டன. ' காவிரியில் இருக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே வேண்டியளவுக்கெல்லாம் தர முடியாது' என கர்நாடகாவோ அடிக்கடி முரண்டு பிடித்து வந்தது. இது சம்பந்தமாக விசாரித்து முடிவெடுக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென தமிழகம் தரப்பில் தீவிரமாக வலியுறுத்தப்பட்டது.

1970 - 90ம் ஆண்டு வரை காவிரிப் பிரச்னை சம்பந்தமாக  தமிழகம் - கர்நாடகா மாநில அரசுகளுக்கு இடையே மொத்தம் 20 முறைக்கு மேல் பேச்சுவார்த்தைகள் நடந்தும் உருப்படியாய் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
 
இந்நிலையில், 1990ல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீர் நடுவர் மன்றம் (டிரிபியூனல்) அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தினர் காவிரி பாயும்  மாநிலங்களின் நீராதாரம்,பாசனப் பரப்பு, தேவைப்படும் நீரின் அளவு உள்ளிட்ட விஷயங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
Protestஇந்த நடுவர் மன்றம், 25-6-1991ல் தனது இடைக்காலத் தீர்ப்பாக, ஆண்டுக்கு 205 டிஎம்சி ( ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட வேண்டுமென உத்தரவிட்டது. உடனே நடுவர் மன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்தும் கர்நாடகா அரசு, நீதிமன்றத்தை நாடி தோல்வியை சந்தித்தது.

இதற்கிடையில், இந்த  பிரச்னை ( நடுவர் மன்ற இடைக்கால உத்தரவு ) கர்நாடக மாநிலத்தில்  ஊதி  பெருசுபடுத்தப்பட்டு  அங்கு  வாழும்  தமிழர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். உயிர் சேதமும் ஏற்பட்டது.  அங்கிருந்து  ஆயிரக்கணக்கில் தமிழர்கள்  விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களின்  உடமைகள் கொளுத்தப்பட்டன.  இதற்கு பதிலடியாக தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிராக அந்தளவுக்கு வன்முறை வெறியாட்டம் இல்லையென்றாலும் சில  இடங்களில் கர்நாடக  மாநில  பஸ்கள், வாகனங்கள் தாக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என்று சம்பிரதாயமாக ஒருபுறம் அவ்வப்போது நடக்க,  கன்னித் தீவைத் தேடும் சிந்துபாத் கதையாக பிரச்னைக்கு தான் தீர்வு கிடைக்காமல் நீண்டுக் கொண்டே போனது.

நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க 1998ல் பிரதமர்  தலைமையில் கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு அமைத்தது. அதிலும் சொல்லிகொள்கிறார் போல் எதுவும் பயன் ஏற்பட்டு விடவில்லை. தண்ணீருக்காக கர்நாடகாவை கெஞ்சி நிற்கும் நிலை தமிழகத்துக்கு மாறவில்லை.  

அபரிமிதமாக மழை கொட்டி கர்நாடக அணைகள் நிரம்பி வழியும் காலகட்டங்களில் தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் முடிந்தளவுக்கு தண்ணீர் திறந்து விடுவது தவிர, தமிழகத்துக்கு  205  டிஎம்சி  தண்ணீரை  முழுமையாக  திறந்து  விடுவதைத் தவிர்ப்பதிலேயே  கர்நாடகா  குறியாக  இருந்தது  என்பது தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் ஆணித்தரமான குற்றச்சாட்டு.

மறுபுறம், நடுவர் மன்றம் தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. காவிரிசம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்தது. பாசனப் பகுதிகளுக்கு நேரில் சென்றும் ஆய்வு மேற்கொண்டது. ஒருவழியாக, இவ்விசாரணை கடந்தாண்டு ஏப்ரலில் நிறைவடைந்தது. (கடந்த 16 ஆண்டுகளில் நடுவர் மன்றம்  ஏறக்குறைய 600 முறை கூடி  இப்பிரச்னை  சம்பந்தமாக  விசாரணைகள் நடத்தியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. )

cauveryஇதையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு இம்மாதம் 5ம்  தேதி  ( 5-2-2007 )  வெளியிடப்பட்டது.  அதன்படி, காவிரியில் கிடைக்கும் மொத்தம் 740 டிஎம்சி தண்ணீரில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 419 டிஎம்சி; கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி; ; கேரளாவுக்கு 30 டிஎம்சி; புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என பங்கு பிரித்து இறுதி தீர்ப்பை நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

தான் கேட்டது கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த வரை லாபம் என்று தமிழக அரசு திருப்திப்பட்டு கொண்டு விட்டுள்ளது. " நாம் நீண்டகாலமாக கோரி வந்த நியாயம் கிடைத்திருக்கிறது. ஆறுதல் அளிப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இந்த  உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ஆளும் திமுகவின் தோழமைக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியே இந்த தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவிரி டெல்டா விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேறு சில இயக்கங்களும் எதிர்க்கின்றன.

''காவிரியில் வரும் தண்ணீர் அளவென்பது காவிரியின் நீர் மற்றும் உபநதிகளில் வரும் நீர் ஆகியவற்றை சேர்த்து கணக்கிடுவதாகும். அதன்படி கர்நாடகாவில் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரியில் இருந்து தமிழகத்தில் முடிவுறும் கீழணை வரை காவிரி நதியில் மொத்தம் 740 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, பில்லிகுண்டுலு எல்லையில் இருந்து ஒவ்வொரு தண்ணீர் ஆண்டும் ( தண்ணீர் ஆண்டு என்பது ஜுன் 1 தொடங்கி மே 31 வரை)  கர்நாடகா தமிழகத்துக்கு திறந்து விட வேண்டியது 192 டிஎம்சி தான். அதில் புதுச்சேரிக்கு 7 டிஎம்சியை வேறு நாம் பிரித்துக் கொடுத்து விட வேண்டும். ஆக உண்மையில் நமக்கு கர்நாடகாவில் இருந்து கிடைப்பது 185 டிஎம்சி தான். மீதி மழை பெய்யும் போது கிடைக்கும் நீர் என்று கணக்கிடப்படுகிறது. ஆகவே, இந்த தீர்ப்பை ஆராய்ந்து பார்த்தால் தமிழகத்துக்கு முன்பை விட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.  இறுதித் தீர்ப்பு நமது தமிழகத்துக்கு பாதகமாக தான் உள்ளது " என்பது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு.

"தீர்ப்பை எதிர்த்து, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று நடுவர் மன்றம் பச்சைக் கொடியும் காட்டியுள்ள நிலையில், இந்த 192 டிஎம்சியாவது கர்நாடகாவில் இருந்து ஒழுங்காக வருமா? பிரச்னைக்கு நிரந்திரத் தீர்வு ஏற்படுமா? " எனவும் எதிர்ப்பாளர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

கர்நாடகாவிலோ ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறார்கள். தீர்ப்பை ஏற்க தயாராக இல்லை. தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.  இந்த உத்தரவுக்கு எதிராக நடுவர் மன்றத்திலேயே மேல்முறையீடு  செய்யப் போவதாக அம்மாநில அரசு உடனடியாக அறிவித்து விட்டது.
 
cauveryதீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, காவிரி பாசனப் பகுதியான மாண்டியா, மைசூர், தலைநகர் பெங்களூர் உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் விவசாயிகள்  மற்றும்  கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  ஆர்பாட்டங்கள்;  மறியல்களில் குதித்து விட்டனர். வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. நல்லவேளையாக, அங்கு தமிழர்களுக்கு எதிராக பெருமளவில் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. மாநில அரசின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 1991ம் ஆண்டு கலவரம்
மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட்டது.

காவிரி, தண்ணீர் ஓடும் வெறும் நதி அல்ல.  தமிழகம், கர்நாடகா ஆகிய இருமாநில மக்களின் கலாச்சாரத்தில் இரண்டற கலந்து விட்ட ஓர் வாழ்வியல் அம்சம். தெய்வீக உருவகம். இரு மாநிலத்தாரையும் அரவணைத்து சோறூட்டும் அன்னை. தமிழகத்தின் மொத்த பாசனப் பகுதிகளில் சுமார் 60 சதவீதத்துக்கும் மேல் காவிரியை நம்பிஇருக்கிறது. அதே போல் தான் கர்நாடகாவிலும்.

ooOoo

ராஜாராணி காலத்தில்  இருந்து இன்றைக்கு  லேப்-டாப் காலம் வரைக்கும் கூடத் தீராமல் நீடிக்கும் இப்பிரச்னை, அடுத்தத் தலைமுறைக்கும் ஒரு அழுக்காக - கேவலமான கறையாகத் தொடரத்தான் வேண்டுமா ?

'எதை எதைப்  பற்ற வைத்து எப்படியெல்லாம் குளிர்காயலாம்' என்று காத்திருக்கும் சுயநல அரசியல்வாதிகளின் மயக்கு வலையிலிருந்து மக்கள் குறிப்பாக விவசாயிகள்
மீண்டெழுந்து, பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்க முன் வரவேண்டும். மனசு இருந்தால் தான் மார்க்கம் வரும். காவிரிப் பிரச்னைக்குத் தீர்வும் விடியும்.

| | |
oooOooo
                         
 
பாபுடி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |