பிப்ரவரி 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : முஹம்மது நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள்?
- சலாஹுத்தீன் [salahuddinb@gmail.com]
| Printable version | URL |

ஆங்கிலத்தில்: இப்ராஹீம் ஹூப்பர்
தமிழாக்கம்: சலாஹுத்தீன்

(கட்டுரை ஆசிரியர் வாஷிங்டனில் செயல்படும் அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு மன்றம் ( Council on American-Islamic Relations - CAIR) எனும் அமைப்பின் தேசிய தகவல் தொடர்பு இயக்குனர். CAIR அமெரிக்காவில் செயல்படும் சமுதாய மறுமலர்ச்சி, மனித உரிமை, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றிற்காக பாடுபடும் மாபெரும் இஸ்லாமிய இயக்கமாகும்.)

"உங்களுக்குத் தீங்கு இழைத்தவர்களுக்கு நீங்களும் தீங்கிழைக்காதீர்கள். மாறாக அவர்களை மன்னித்து அவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்" - நபி(ஸல்) பொன்மொழி - ஆதாரம் ஸஹீஹ் புகாரி

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட பொன்மொழி, தன்னைப்பற்றிய தூற்றுதல்களையும் தாக்குதல்களையும் அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டிருந்திருப்பார்கள் என்பதற்கு ஓர் எளிய உதாரணம்.

தன்னைத் தாக்கியவர்களைத் திருப்பித் தாக்க சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் நபி (ஸல்)  அவர்கள் அவற்றைத் தவிர்த்திருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் வரலாற்று குறிப்புகளில் நிறைய உதாரணங்கள் காணக் கிடைக்கின்றன.

டென்மார்க் நாளிதழ் ஒன்று நபி(ஸல்) அவர்களைக் குறித்த கேலிச்சித்திரங்களை வெளியிட்டது,  நபி(ஸல்) அவர்கள்  மீதும் இஸ்லாம் மீதுமான உலகளாவிய துவேஷத் தாக்குதல் என்பதால் அதைத் தொடர்ந்து உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், மேற்கூறப்பட்ட நபி(ஸல்) அவர்களின் உதாரணங்களும் போதனைகளும் குறிப்பாக மிகவும் கவனிக்கப்படத் தக்கவையாகின்றன.

காஸாவிலிருந்து இந்தோனேஷியா வரை அமைதியாகவும் அமைதியற்ற முறையிலுமாக ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. முஸ்லிம்களால் டென்மார்க் மற்றும் துவேஷ கேலிச்சித்திரங்களை வெளியிட்ட இதர நாடுகளின் தயாரிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன.

முஸ்லிம்களாகிய நாமும், முஸ்லிமல்லாத பிற சமூகத்தினரும் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட மனப்பிம்பங்களின் அடிப்படையில் பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் விரோத மனப்பான்மையையும் வளர்த்துக் கொண்டு, வெகுவேகமாக கீழிழுத்துச் செல்லும் ஒரு மாயச்சுழலில் சிக்கிக் கொண்டு விட்டதைப் போல் தோன்றுகிறது.

இந்தச் சூழ்நிலையில், முஸ்லிம்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: "முஹம்மது நபி(ஸல்) அவர்கள்  என்ன செய்திருப்பார்கள்?"
 
நபி(ஸல்) அவர்களின்  வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை ஹதீஸ்களின் வாயிலாக முஸ்லிம்கள் அறிந்திருக்கிறார்கள்.  மார்க்கப் பிரச்சாரத்திற்காக நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு அருகில் உள்ள தாயிஃப் எனும் ஊருக்கு சென்றபொழுது அவ்வூர் மக்கள் நபி (ஸல்) அவர்களை இரத்தக்காயம் படுமளவிற்கு கல்லெறிந்து தாக்கினர்.  இறைவனிடம் முறையிட்டு அவ்வூராருக்குத் தண்டனை பெற்றுத்தர வாய்ப்பிருந்த போதிலும், நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.  மாறாக அவர்கள் பொறுமையை கைக்கொண்டார்கள்.
 
மற்றொரு சம்பவத்தில், அபூலஹப் என்பவரின் மனைவி ஜமீலா என்பவள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடக்கும் பாதையில் தினந்தோறும் முட்களை பரப்பி துன்பம் கொடுத்துவந்த போதிலும் நபி(ஸல்) அவர்கள் பொறுமை காத்துவந்தார்களே தவிர எவ்வித எதிர்வினையும் செய்யவில்லை.
 
நபித்தோழர் ஒருவர் நபி(ஸல்) அவர்களின் மன்னிக்கும் மனப்பாங்கையும் பெருந்தன்மையையும் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார், "நான் நபி(ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன்.  அவர்கள் ஒருமுறை கூட (பொறுமையின்மையை வெளிப்படுத்தும் விதமாக) 'உஃப்' என்றுகூட சொன்னதில்லை.  எனது பணியில் குறை கூறும்விதமாக 'ஏன் இப்படி செய்தீர்?' என்றோ 'ஏன் இப்படி செய்யவில்லை?' என்றோ ஒருநாளும் கேட்டதில்லை." (ஆதாரம் ஸஹீஹ் புகாரி)
 
நபி(ஸல்) அவர்கள் வசம் எல்லா அதிகாரங்களும் இருந்த சூழ்நிலையிலும்கூட அவர்கள் கனிவையும் நல்லிணக்கத்தையுமே  தேர்ந்தெடுத்தார்கள்.
 
மக்காவிலிருந்த எதிரிகளால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துப் பின் மக்காவை விட்டு விலகி பல ஆண்டுகள் மதினாவில் வசித்து பின் வெற்றி பெற்றவர்களாக மக்கா திரும்பிய பின்பு கூட, தனக்கு இன்னல் இழைத்த மக்காவாசிகளை நபி(ஸல்) அவர்கள் பழிவாங்கவில்லை.  மாறாக, அவர்கள் அனைவருக்குமே பொது மன்னிப்பு அளித்தார்கள்.
 
திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்: "...இவர்கள் வீணானதை செவியுற்றால், அதைப் புறக்கணித்து "எங்களுக்கு எங்கள் அமல்கள் (செயல்கள்), உங்களுக்கு உங்கள் அமல்கள்.  ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு சாந்தி உண்டாகுக!).  அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை" என்று கூறுவார்கள்.   (நபியே!)  நீர்  நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக  நேர்வழியில்  செலுத்திவிட  உம்மால்  முடியாது.   ஆனால்,  அல்லாஹ்  தான்  நாடியவர்களை  நேர்வழியில்  செலுத்துகிறான். - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்" (குர்ஆன் 28:55-56)
 
திருமறை மேலும் கூறுகிறது: "(நபியே) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் தர்க்கிப்பீராக!  மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்." (குர்ஆன் 16:125)
 
இன்னொரு வசனம் நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது: "எனினும் (நபியே!) மன்னிப்பைக் கைக்  கொள்வீராக!   நன்மையைக்  கடைப்பிடிக்குமாறு  (மக்களை) ஏவுவீராக.  மேலும் அறிவீனர்களை புறக்கணித்து விடும்." (குர்ஆன் 7:199) 
 
கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மனதளவில் காயப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் தங்கள் நியாயமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முன்னுதாரணங்கள் இவை.
 
துரதிருஷ்டமான இந்த சம்பவம், இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் மனப்பூர்வமாக அறிய விரும்பும் சக மதச் சகோதரர்கள்  போதிய  விளக்கம் பெற ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையலாம்.  நபி(ஸல்) அவர்களின் சொல், செயல்பாடுகளை தம் வாழ்வின் முன்மாதிரியாக கொள்ள விரும்பும் முஸ்லிம்கள், தாங்கள்  தேவையில்லாமல்  சினமூட்டப்பட்டிருக்கும்  இந்த  சூழ்நிலையில்,  பொறுமையைக் கைக்கொண்டு  நற்பண்புகளை  மேற்கொள்வதன் மூலம் உண்மை இஸ்லாத்தின் போதனைகளை மற்றவர்க்கும் தெரியப்படுத்தலாம்.   

குர்ஆன் சொல்வது போல, "உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை(யும் நட்பையும்) உண்டாக்கி விடக்கூடும்.." (குர்ஆன் 60:7). 

| | |
oooOooo
சலாஹுத்தீன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |