Tamiloviam
மார்ச் 01 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : தாமிரபரணி
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Vishal & Prabhuதன் மாமா பிரபுவின் மீது அளவுகடந்த பாசமும் மரியாதையும் வைத்திருப்பவர் விஷால். மாமாவை எதிர்த்து யாராவது பேசினால் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிற ரகம். அதே ஊரின் பெரிய மனிதரான விஜயகுமாரின் செல்லப்பெண் நதியா. நதியாவின் அண்ணன் நாசர். இவர்கள் குடும்பத்திற்கும் பிரபுவின் குடும்பத்திற்கும் ஆகாத நிலையில்  நதியாவையும் நாசரையும் மாமா பிரபுவிற்காக பலமுறை எதிர்க்கிறார் விஷால். இந்நிலையில் நதியாவின் பெண்ணான பானு விஷாலைச் சுற்றி வர ஆரம்பிக்கிறார். பானுவின் உண்மையான அன்பைப் புரிந்துகொள்ளத் தவறும் விஷால் எங்கே பானு தன்னை வம்பில் சிக்கவைத்துவிடுவாரோ என்று நினைத்து அவரை விட்டு ஒதுங்க நினைக்கிறார்.

ஒரு கட்டத்தில் பானு விஷாலுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துவிட அதைக் கண்டு துடிக்கிறார்கள் இரு குடும்பத்தினரும். அப்போதுதான் பானு தன் மாமா பிரபுவின் மகள் என்பதும் தான் விரோதியாக நினைக்கும் நதியா பிரபுவின் மனைவி என்பதும் விஷாலிற்குத் தெரியவருகிறது. பிரபு தன் மனைவி நதியாவைப் பிரிந்ததே தனக்காகவும் தன் தாய் ரோகினிக்காகவும்தான் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளும் விஷால் தன்னால் களாங்கப்பட்ட பானுவை எப்படியாவது கல்யாணம் செய்தே தீருவேன் என்று சபதம் செய்கிறார். பிரிந்த இரு குடும்பங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடும் விஷால் இதற்காக தன் காதலையும் தியாகம் செய்ய முன்வருகிறார். பிரிந்த குடும்பங்கள் இணைந்ததா? பானு விஷால் காதல் கைகூடியதா? இதுதான் கிளைமாக்ஸ்.

ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் விஷால் மற்ற படங்களிலிரிந்து வேறு பட்டு இதில் நன்றாக நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார். முற்பாதியில் தடாலடி சண்டைக்காரராக வருபவர் பிற்பாதியில் தன் பண்பட்ட நடிப்பால் நெகிழ வைக்கிறார். குறிப்பாக பானு தன் மாமாவின் சொந்த மகள் என்பதைத் தெரிந்து கொள்ளும் இடத்திலும், பிரபுவுடன் இணைந்து வாழுமாறு நதியாவிடம் கெஞ்சும் காட்சியிலும் விஷாலின் உருக்கமான நடிப்பு அருமை.

அறிமுக கதாநாயகி பானு அமைதியான நடிப்பால் மனதில் இடம்பிடிக்கிறார். பிரபுவைப் பார்த்துவிட்டு வரும் பானுவை நதியாவும் நாசரும் கண்டிக்க அவர்களுக்கு எதிராக தன் அப்பா தரப்பு நியாயங்களைப் பேசி வாதாடும் காட்சியில் பானுவின் நடிப்பு அருமை. குத்துப் பாடல்காட்சியில் மட்டும் கொஞ்சம் படுத்துகிறார்.

விஷாலின் மாமாவாக வரும் பிரபு குணச்சித்திர வேடத்தில் பிரகாசிக்கிறார். தங்கைக்காக மனைவி மற்றும் மகளைப் பிரிந்து வாழும் சோகத்தை மறைத்துக்கொண்டு சகஜமாக வளையவருபவர் விஷாலில் உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் சீறுவது சூப்பர். அடங்கா மனைவியாக வரும் நதியாவின் நடிப்பும் அருமை. பிரபுவிடம் விவாகரத்துக் கேட்டாலும் கூட தான் இன்னொருவரை மணக்க அண்ணன் கட்டாயப்படுத்தும்போது ஆவேசமாவது நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் அவர் பிரபுவை விட்டுப் பிரிய இன்னும் சற்று வலுவான காரணத்தை இயக்குனர் யோசித்திருக்கலாம்.  

நாசர் மற்றும் விஜயகுமார் இருவரும் காட்டுக்கத்தல் கத்துவதும், ரோகினிக்கு எதிரான இவர்கள் இருவரது வார்த்தைப் பிரயோகங்களும் முகம் சுளிக்க வைக்கின்றன. மனோரமா, ரோகினி, நிழல்கள் ரவி, கஞ்சாகருப்பு,  ஆர்த்தி உள்ளிட்ட பலரும் உள்ளனர் படத்தில்.

ப்ரியனின் ஒளிப்பதிவும் விஜயனின் எடிட்டிங்கும் அருமை. யுவன்ஷங்கர் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம். கல்யாணம் தான் பாடல் பல சர்ச்சைகளைக் கிளப்பியதைப் போலவே இந்தப் படத்திலும் தாலியே தேவையில்ல பாடல் எத்தனை சர்ச்சைக்கு அடி போடப்போகிறதோ???

படத்தில் வரும் அளவுக்கதிகமான வன்முறைக்காட்சிகளும் சில வசனங்களும் முகம் சுளிக்க வைத்தாலும் வறட்டுப் பிடிவாதத்தால் பிரிந்த இரு குடும்பம் என்ன ஆயிற்று என்று அழகாக காட்டிய விதத்திற்காக இயக்குனர் ஹரிக்கு சபாஷ்.

 


 

| | | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |