Tamiloviam
மார்ச் 20 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : வினோத் காம்ப்ளி - நல்லதோர் வீணை செய்தே!!!
- "வினையூக்கி" செல்வா
  Printable version | URL |

Sachin-Kambliவருடம் 1988, சாரதாஷ்ரம் பள்ளிக்கும் செயிண்ட் சேவியர் பள்ளிக்கும் இடையிலான ஆட்டம், ஒருவர் வலது கை ஆட்டக்காரர், மற்றொருவர் இடது கை ஆட்டக்காரர்.சாரதாஷ்ரம் பள்ளியைச்சேர்ந்த இருவரும் இணைந்து இணையாட்டமாக 600 ரன்களைக் கடந்தும் ஆட்டத்தை முடிக்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க, பயிற்சியாளரின் நெருக்குதல் காரணமாக ஒரு வழியாக ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். வலது கை ஆட்டக்காரர் அடுத்த வருடமே இந்திய அணியில் அறிமுகமாகி இன்றுவரை தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக இந்திய கிரிக்கெட் அரங்கில் மட்டுமல்லாமல் , உலக அரங்கிலும் உடைக்க முடியாத சாதனைகளை படைத்துவிட்டு சச்சின் டெண்டுல்கர் என்ற மந்திரப் பெயருடன் பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் சச்சினை விட நல்ல ஆட்டக்காரர் என்று பயிற்சியாளர் அச்ரேகரால் பாராட்டப்பட்ட, பம்பாய் கிரிக்கெட் மைதானங்களில் டெண்டுல்கரை விட அதிகம் பேசப்பட்ட மற்றொரு இடது கை ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி நட்சத்திரமாய் மின்னுவார் என எதிர்பார்க்கப்பட்டு விட்டில் பூச்சியாய் கிரிக்கெட் வானில் இருந்து மறைந்தது கிரிக்கெட் உலகின் வினோத கசப்பான உண்மைகளுள் ஒன்று.

வினோத் காம்ப்ளி தான் ஆடிய முதல் ரஞ்சிப்போட்டியில் ,சந்தித்த முதற்பந்தை சிக்சருக்கு அனுப்பி முதல் தர கிரிக்கெட்டுக்கு அச்சாரம் அளித்தார். கீழ்நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த வினோத்காம்ப்ளிக்கு டெண்டுல்கரைப்போல உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெண்டுல்கர் அறிமுகம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பின்னரே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடிந்தது. டெஸ்ட் அறிமுக ஆட்டத்திற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் ஆன ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது பிறந்த நாளன்று சதமடித்து ஆட்டத்திறனை நிருபித்தார். இவர் சதமடிக்கும்பொழுது மறுமுனையில் நின்றவர் வேறு யாருமல்ல, பம்பாய் கிரிக்கெட் மைதானங்களில் இவருடன் இணைந்து கூரைகளை சிக்சர்களினால் பதம் பார்த்த சச்சின் டெண்டுல்கரே தான். சச்சின் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Sachin-Kambliஅதைத் தொடர்ந்த டெஸ்ட் போட்டித்தொடரில் மூன்றாவது ஆட்டத்தில், தனது சொந்த மண்ணில், இரட்டைச்சதமடித்து மூன்று வருடக் காத்திருப்புக்கு மட்டையால் பதில் சொல்லிவைத்தார். இந்த ஆட்டத்திற்கு முன்பாக, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஒருவர் "ஆரஞ்சுப்பழத்தைக்" கொண்டு கூட வினோத் காம்ப்ளியை ஆட்டமிழக்க செய்ய முடியும் என்று ஏளனமாக சொல்லி இருந்தாராம். 100,150,200 யைக் கடந்தும் வினோத் காம்ப்ளியை ஆட்டமிழக்க வைக்க முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணற, இங்கிலாந்தின் ராபின் ஸ்மித் , இப்பொழுதாவது அந்த ஆரஞ்சுப்பழத்தை வைத்து காம்ப்ளியை ஆட்டமிழக்கச்செய் என்று அதே பந்துவீச்சாளரிடம் கேட்டாராம்(நன்றி:டெலிகிராப்).

அடுத்து ஜிம்பாப்வே அணியுடன் ஆன டெஸ்ட் போட்டியிலும் இரட்டைச்சதம். அடுத்து வந்த இலங்கைச் சுற்றுப் பயணத்தில் தொடர்ந்து இரண்டு சதங்கள்.கடை 80, ஆரம்ப 90களில் இடதுகை ஆட்டக்காரர் காம்ப்ளியைத் தவிர வேறு யாரும் இல்லாத இந்திய அணியில் இவர் ஆடும் விதம்(அவ்வப்போது இடது கை ஆட்டக்காரர் WV.ராமன் வந்து போனாலும்), காதில் ஒற்றைக்கடுக்கண், தொங்கட்டான், அடிக்கடி மொட்டை அடித்து வித்தியாசமான தோற்றத்தில் ஆடுகளத்தில் இறங்குவது , மட்டையின் கைப்பிடிகளில் இருக்கும் grip கள், என பலவிதங்களில் ரசிகர்களை கவரலானார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஷான் வார்னேவின் ஒரு ஓவரில் 22 ரன்கள் அடித்து நொறுக்கியது, ஹீரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் அரைசதம் என ஒரு நாள் போட்டிகளிலும் கலக்கிய இவர் டெஸ்ட் ஆட்டங்களில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனை இன்னமும் தன் வசமே வைத்துள்ளார்.

புகழ் ஏணியின் உச்சத்தில் இருந்த காம்ப்ளிக்கு அடுத்து வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் அவரின் கிரிக்கெட் வாழ்வை அப்படியேத் திருப்பிப்போட்டது. ஆடிய ஆறு இன்னிங்ஸுகளில் மூன்று டக் அவுட், உட்பட 64 ரன்கள் எடுத்தார். முகத்துக்கு எழும்பும் பந்தை அடிக்க இயலாது என முத்திரைக் குத்தப்பட்டார். பின் வந்த நியுசிலாந்து உடன் ஆன டெஸ்ட் தொடரில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு டெஸ்ட் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டாலும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து அணியில் இடம்பெற்று வந்தார்.


வினோத் காம்ப்ளியின் டெஸ்ட் ஆட்ட விபரங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்


96 உலகக்கோப்பைப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் ஆம்புரோஸ் முகத்துக்கு வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி , எல்லாவகையான ஆட்டமும் தனக்குத் தெரியும் என நிருபித்த காம்ப்ளி, ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் சதமும் அடித்தார். அந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் டெண்டுல்கரைத் தவிர சதமடித்த இந்திய வீரர் வினோத் காம்ப்ளி மட்டுமே!! அரை இறுதிப்போட்டியில் பார்வையாளர்கள் குறுக்கீட்டால் , இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்க , வினோத் காம்ப்ளி மனமுடைந்து அழ ஆரம்பித்தார். அந்த அழுகை இன்னமும் கண் முன்னால் நிற்கிறது.

உலகக்கோப்பைக்குப்பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அறிவிக்கப்பட்ட அணியில் இவரும் மனோஜ் பிரபாகரும் நீக்கப்பட்டனர். அங்கு சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் என்ற இரு சகாப்தங்கள் தங்களது முதல் அத்தியாயங்களைப் பதிவு செய்ய வினோத் காம்ப்ளிக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான கதவு முழுவதுமாக அடைக்கப்பட்டு அவ்வப்போது ஒருநாள் போட்டிகளில் அதிக வாய்ப்பளிக்கப்பட்டபோதும் வினோத் காம்ப்ளியால் சோபிக்க இயலவில்லை. மொகிந்தர் அமர்நாத்தைப்போல 9 தடவை அணியில் நீக்கப்பட்டு பின்பு அணியில் இடம்பெற்ற காம்ப்ளி ஒரு சில முப்பதுகளையாவது சதமாக மாற்றி இருந்தால் கூட அணியில் இருக்க வைக்கப்பட்டு இருக்கலாம். 2000 க்குப்பிறகு கங்குலித் தலைமையில் இந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டதனால் வினோத்காம்ப்ளியின் பன்னாட்டு கிரிக்கெட் வாழ்வு அஸ்தமனம் ஆனது.

திறமையான ஆட்டத்திறன் இருந்தும், அதிகப்படியான வாய்ப்பு அளிக்கப்பட்டும் ஏன் வினோத்காம்ப்ளியால் தனது நண்பர் சச்சின் டெண்டுல்கர் சாதித்தவைகளில் கால்வாசிக்கூட ஏன் செய்துகாட்ட முடியவில்லை என இன்றும் கிரிக்கெட் பார்வையாளர்களால் அலசப்படுகிறது. தோல்விகளில் இருந்து மீண்டு வருவதைவிட கிடைத்தப்புகழையும் பெருமையையும் தக்கவைத்துக்கொள்வது மிகக்கடினம். உடனடிப்புகழ், புகழினால் கிடைத்தப்பணம், பணத்திற்காக சேரும் காக்கா பிடிக்கும் கூட்டம், அவசியமில்லா சகவாசங்கள் , பழக்க வழக்கங்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து வினோத் காம்ப்ளியை ஒரு மாயையில் தள்ளி, பாழ்படுத்தியது என்றும் சொல்வார்கள்.

தோல்வி தரும் வலியைவிட வெற்றித்தரும் போதை அபயகரமானது என்பது வினோத்காம்ப்ளிக்குத் தெரியவில்லை. பயிற்சிக்கு நேரம் தவறி வருதல், அணியில் ஒழுக்கமின்மை,தேவையற்ற திரையுலகத் தொடர்புகள், அடிக்கடி அழுத்தத்தினால் மனமுடைந்துபோதல் போன்றவை ஒரு நல்ல சாதனையாளராக வந்திருக்கக்கூடியவரை, வேதனையுடன் கிரிக்கெட் ரசிகர்கள் திரும்பிப்பார்க்கும்படி வைத்துவிட்டது.

திரைப்பட மோகத்தில் "அனார்த்" என்ற இந்திப்படத்தில் சுனில் செட்டி, சஞ்சய் தத்துடன் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் தோன்றிய வினோத்காம்ப்ளி அந்தப்படம் ஊத்தி மூடிக்கொண்டதில் அவருடைய திரைக்கனவும் நீர்த்துப்போனது.

சச்சின் டெண்டுல்கர் 90 களில் தொடர்ந்து ஆட்டமிழப்பதுக் குறித்து விவாதங்கள் நடக்கும் அதே வேளையில் , அவரை விட திறமைசாலி என அறியப்பட்ட காம்ப்ளி பெயர், நியுசிலாந்து ஆட்டக்காரர் ஜெஸ்ஸி ரைடர் சமீபத்தில் ஒரு பிரச்சினையில் சிக்கியபோதும் , இளம் வீரர்களுக்கு அதிக வருவாய் வருவதனால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவாதங்களிலும் அடிபட்ட முரண் நிச்சயம் அலசலுக்குரியது.

மேல்தட்டு மக்களின் மாலை நேரக்கொண்டாட்டங்களில் அதிகம் தலைகாட்டும் வினோத் காம்ப்ளி ஒரு பயிற்சியாளராகவோ, வர்ணனையாளராகவோ கிரிக்கெட் சம்பந்தப்பட்ட குழுக்களில் நிர்வாகியாகவோ மீண்டு வந்து தான் செய்த தவறுகளை வருங்காலத் தலைமுறைகள் செய்யாத அளவுக்கு வழிநடத்த வேண்டும் என்பதுதான் வினோத் காம்ப்ளியின் ஆட்டங்களைப் பார்த்து ரசித்தவர்களின் விருப்பம்.

 

oooOooo
                         
 
"வினையூக்கி" செல்வா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |