Tamiloviam
மார்ச் 22 07
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : 'கிளீன்போல்டு'
- பாபுடி [rajputh61@rediffmail.com]
| | Printable version | URL |

IndianTeam after losing to Srilanka in world cup முழுசாய் உருவிப் போட்டாற்போல் இந்திய கிரிக்கெட் அணியின் மானம் அம்மணமாகி நிற்கிறது.  ராஜபார்ட்டுகளாய் வேஷம் கட்டியவர்கள்,  இவ்வளவு சீக்கிரம் பப்பூன்களாக ஆகி விடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸில் கடந்த 13ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும்  உலகக் கோப்பை போட்டியில் முதல் லீக் ஆட்டத்திலேயே கத்துக்குட்டி அணியான வங்கதேசம் நமது இந்திய அணிக்கு வாய்க்கரிசி போட்டு விட்டது.  ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் சுருண்டு விட்டார்கள் நமது வீரர்கள் ( மன்னிக்கவும். 'ஆட்டக்காரர்கள்'. இனி இந்த சொற்பதமே சரியானது)

அடுத்து இரண்டாவது லீகில்,  பெர்முடா.  சிசு அணி. கரியில் ஸ்டம்புகள் வரைந்து ரப்பர் பந்தில் ஆடும் டீமை ஞாபகப்படுத்திய அந்த அணியை திணறடித்து விளாசித் தள்ளி 413 ரன்கள் எடுத்து புதிய உ.கோ. சாதனைப் படைத்தார்கள் நம்மவர்கள்!

ஆனால் அடுத்து சந்தித்த இலங்கைக்கு, பெர்முடாவுக்கிருந்த பெருந்தன்மை இல்லாமல் போனதால் 250 ரன்கள் கூட எடுக்க வக்கின்றி சூப்பர் எட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாமல் போனது நமக்கு. சரி, பாயிண்டு கணக்கில் புறக்கடை  வழியாகவாவது போய் விடலாமெனப் பார்த்தால் பெர்முடா லீக் இறுதிப் போட்டியில் வங்கதேசத்திடமும் தோற்று போய் அதற்கும் வழியில்லாமல் செய்து விட்டது.  இனி நம்மாட்கள் உலகக் கோப்பையிலிருந்து ஏரக்கட்ட வேண்டியது தான் பாக்கி.  ( இந்த கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் இந்நேரம் அவர்கள் அநேகமாக ஊர் திரும்பியிருக்கக் கூடும்)

மிகவும் எதிர்பார்த்து கேவலமாய் ஏமாந்த  ஆவேசம்  நாடு பூராவும்  பற்றியுள்ளது. நமது அணி ஆட்டக்காரர்களின் வீடுகளை முற்றுகையிடுவது, அவர்களின் உருவப்படங்களுக்கு தீ வைப்பது, செருப்பாலடிப்பது, மாலை போட்டு இறுதி அஞ்சலி செலுத்துவது என்று ரசிகர்கள் தங்கள் ஆத்திரத்தை காண்பித்து வருகின்றனர். மீடியாக்காரர்களோ இதுக்கு மேலும் அசிங்கப்படுத்த முடியாதபடிக்கு கிழி கிழியென கிழித்து வருகின்றனர்.

'இந்திய அணியில் களையெடுக்க வேண்டும்;  பழைய சாதனைகளை வைத்துக் கொண்டு இன்னமும் காலட்சேபம் செய்துக் கொண்டிருக்கும் சீனியர் ஆட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்;  அவர்கள்  விளம்பரங்களில்  நடிப்பதை தடை செய்ய  வேண்டுமென்று  ஏகப்பட்ட ' வேண்டும் 'களை  அடுக்குகிறார்கள். தாம்தூமென  குதிக்கிறார்கள் ;   ஆனால்,  அதிக செல்லம்  கொடுத்து  இந்திய கிரிக்கெட்டைக் குட்டிச் சுவராக்கியதே தாங்கள் தானென்பதை சுலபமாக மறந்து விட்டு.
 
கிரிக்கெட்  போட்டிகளின்  போது (அப்போது மட்டும்!)  பாசாங்கு  தேசபக்தியை பெருகியோட செய்வது ;  உயிரை பணயம் வைத்து எதிரி நாட்டுடன் போரிட்டு நமது நாட்டின் எல்லையையும்  இறையாண்மையையும்  காப்பாற்றுகிற  வீரர்கள் ரேஞ்சுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்டு  நிறுத்தி  தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது;  குழு இணக்க உணர்வும், அதிக உடல் உழைப்பும்  கொண்ட  ஹாக்கி  (இது நம்ம தேசிய விளையாட்டாம்!),  கால்பந்து,  வாலிபால், போன்ற விளையாட்டுகளை அனாதைகளாக்கி விட்டு தகுதிக்கு மீறி கிரிக்கெட்டுக்கு ஊக்கமும் பப்ளிசிட்டியும் தருவது...

- இப்படி அடுக்கிக் கொண்டே பார்க்கலாம்.

இதில் நாம் கண்ட ஒரே பலன், கிரிக்கெட் நட்சத்திரங்களை முழு நேர விளம்பர பட நடிகர்களாக்கி அதன் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாத்தியம் செய்ய அவர்களுக்கு வழி செய்து கொடுத்தது தான்.

ooOoo


இந்த  உ. கோ. சூட்டுக்கு பிறகு மட்டும் என்ன உருப்படியாய் நடந்து விடுமென்று நினைக்கிறீர்கள்  !

சில வாரங்களுக்கு இந்த படுதோல்வி பற்றிய போஸ்ட்மார்ட்டம் நடக்கும்.  டிவி சேனல்களில் நான்கைந்து வடக்கத்திய கனவான்கள் கோட்டும் சூட்டுமாய் உட்கார்ந்து அலசிக் காயப் போடுவார்கள். அதிகபட்சமாய், அணித் தலைமை இன்னொரு காலிப் பெருங்காய டப்பாவுக்கு கைமாறலாம். நாம் ஆட்ட களத்தில் சந்திக்க நடுங்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானின் இடத்தில் வங்க தேசம் உட்காரும். எதாவதொரு துக்கடா மேட்சில் ஜெயிப்போம்.  துதிப் பாடல்களின் மறு ஒலிபரப்பு ஆரம்பமாகும். நமது கிரிக்கெட் நட்சத்திரங்களின் தலைக்கு பின்னால் ஒளி வட்டம் மறுபடியும் சுழலத் தொடங்கும்.

இதற்கு  மேலும்  பேராசைப்பட்டு,  எதாவது  ஆக்கப்பூர்வமான  மாற்றங்களை எதிர்பார்ப்பவர்களாக  நீங்கள்  இருந்தால்,  மன்னிக்கவும்...  இந்தியாவில்  இருக்கும் தகுதியை இழப்பவர்களாகக் கடவீர் !

| | |
oooOooo
                         
 
பாபுடி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |