ஜூன் 10 2004
தராசு
பெண்ணோவியம்
உங்க...சில புதிர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
சுய சாசனம்
களம்
கோடிட்ட இடங்கள்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பருந்துப் பார்வை : செரிக்க ஒரு நெருப்பு
  - மதுரபாரதி
  | Printable version |

  நீங்கள் பாரதியாரின் 'சின்னச் சங்கரன் கதை' படித்ததுண்டா? மிகச் சுவாரசியமாக இருக்கும். அவருடைய சிறுவயது வாழ்க்கையே அந்தக் கதை என்று சொல்லுவார்கள். அதில் "மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்டனூரதிபர் ராமசாமிக் கவுண்டரின் காலை உணவு பற்றிப் பாரதி சொல்லுவதைக் கேளுங்கள்: "காலை எட்டு அல்லது எட்டரை மணி வேளைக்கு எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு ஒன்பது மணியானவுடன் பழையது சாப்பிட உட்காருவார். பழையதிற்குத் தொட்டுக்கொள்ளத் தமது அரண்மனையிலுள்ள கறிவகை போதாதென்று வெளியே பல வீடுகளிலிருந்து பழங்கறிகள் கொண்டு வரச்சொல்லி வெகு ரஸமாக உண்பார்." கவுண்டர் பெரிய சரீரத்தை உடையவராக இருந்ததோடு, ஒரு வேளைக்கு 32 கவளம் சாப்பிடவேண்டும் என்பதில் கறாராக இருந்தார். அவருடைய நண்பன் ரங்கன் கொத்தவரைக்காய் ரகம். அவனுக்குக் கவுண்டர் சொன்ன அறிவுரை:

  "இதோபாரு ரங்கா, நீயேன் மெலிஞ்சு மெலிஞ்சு போறே தெரியுமா? சரியாய்ச் சாப்பிடவில்லை. சாப்பாடு சரியானபடி செல்ல ஒரு வழி சொல்றேன் கேளு. ஒரு கை நிறையச் சோறெடுத்தால் அதுதான் ஒரு கவளம். அப்படி நீ எத்தனை கவளம் தின்பே? எட்டுக் கவளம். ரொம்ப அதிகமாப் போனால் ஒன்பது கவளம் வச்சுக்கோ. அவ்வளவுதான். சாஸ்திரப்படி முப்பத்திரண்டு கவளம் சாப்பிடவேணும்."

  பசியையும் தீ என்று சொல்வது தமிழில் வழக்கம். காயசண்டிகைக்கு யானைப்பசி நோய் ஏற்பட்டதையும் அதை மணிமேகலை தீர்த்து வைத்ததையும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பேசுகிறது. கவுண்டருடைய தீ கொஞ்சம் பெருந்தீ மாதிரித் தெரிகிறது. ஆனாலும் நிறையச் சாப்பிடுகிறவர்கள் நன்றாகச் சீரணிக்கிறார்கள் என்று பொருள் இல்லை. உதாரணமாக, ஒரு காரை விரைவாகச் செலுத்தவேண்டுமென்றால் உந்துவானை (accelerator) அழுத்துகிறோம். அது எப்படி வேகத்தை அதிகப்படுத்துகிறது? அதிகப் பெட்ரோலை எஞ்சினுக்கு அனுப்புவதன்மூலம். ஆனால் அப்படி நிறையப் பெட்ரோல் போகும்போது எல்லாமே எரிந்து சக்தியாக மாறுவதில்லை. ஓரளவு எரியாமலே புகையோடு வாயுவாக வெளியேறுகிறது. அதனால்தான் கார் ஒரே நிதானமாகப் போகும்போது எரிபொருள் சேமிக்கப் படுகிறது என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, முழுமையாய் எரியாத எரிபொருள் வேண்டாத வாயுக்களாக மாறிச் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இந்த உதாரணம் நாம் உண்ணும் உணவுக்கும் பொருந்தும்.

  ஒரு சிறிய தீக்கொழுந்தின் மேல் ஒரு சொம்பு நெய்யைக் கொட்டினால் இருக்கும் நெருப்பும் அணையும். நெய் ஊற்றினால் நெருப்பு அதிகமல்லவா எரியவேண்டும்! இது ஏன்? இருக்கின்ற நெருப்புச் சமாளிக்க முடியாத அளவுக்கு அதில் நெய்யை ஊற்றினால், அது நெருப்பையே அணைத்துவிடவில்லையா - அது போலத்தான் பசியும். நம்முடைய ஜீரண சக்தி எவ்வளவு என்று தெரிந்து அதற்கேற்பச் சாப்பிட்டால் சரியாக செரிக்கும். இல்லையென்றால் செரிமானம் குன்றும், வயிறு இரையும், அமிலத்தன்மை அதிகமாகி வயிறு எரிச்சல் எடுக்கும், ஏராளமான துர்நாற்றத்தோடு வாயு பரியும், வாயில் துர்நாற்றம் வரும், சாப்பாட்டைப் பார்த்தாலே உமட்டிக் கொண்டு வரும்.

  இன்னொன்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவர்களின் உடல் கொஞ்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதை அப்படியே வெளியே தள்ளிவிடுகிறதாம். எப்போது வேண்டுமானாலும் ஊட்டம் கிடைக்கும் என்றால் அதைச் செமித்து, சேமித்து வைத்துக்கொள்வானேன். ஊளைச் சதை மட்டும் போட்டுக்கொள்ளும். பாருங்களேன், கோக்-ப்ரெஞ்ச் பிரைஸ் தலைமுறை முன்னெப்போதையும் விட ஊத்தமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவிலும் பிட்சா-பாப்கார்ன்-சாக்லேட்-கோக் குழந்தைகள் அதிகமாகிவிட்டதைப் பார்க்கிறோம். கொழுகொழு குழந்தைகள் (பெரியவர்களும்தான்) வலுவான, ஆரோக்கியமான குழைந்தைகள் என்று பொருள் இல்லை.

  இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன: 1. ஜீரணித்தபின் சாப்பிட வேண்டும். 2. நமது ஜீரண சக்தி எவ்வளவோ அதற்கேற்ற அளவில், தகுந்த பண்டங்களை உண்ண வேண்டும். "மாட்டேன், அப்படித்தான் என் இஷ்டப்படிக் கன்னா பின்னான்னு சாப்பிடுவேன்" என்று சொன்னால், எவ்வளவுக்கெவ்வளவு அளவு மீறுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக நோய்கள் வரும். என்ன, மிரட்டறேன்னு பார்க்கறீங்களா? நான் ஏங்க உங்களை மிரட்டறேன், வள்ளுவர் சொன்னதைத்தான் நான் அப்படியே சொன்னேன்:

  தீ அளவின்றித் தெரியான் பெரிது உண்ணின்
  நோய் அளவின்றிப் படும்.

  [தன்னுடைய ஜீரணத் தீயின் அளவுக்கே அல்லாமல், அறியாமையால் பெருத்த அளவு உணவு உட்கொண்டால், நோய் அளவுக்கு அதிகமாக வரும்]

  அதனால்தான், 'இந்த உலகில் பசியினால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட, அதிகம் சாப்பிட்டதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்' என்று சொல்கிறது மருத்துவப் புத்தகங்கள். இரத்த உயர் அழுத்தம், இரத்த நாளத்தில் கொழுப்பு அடைத்துக்கொள்வது, அதிகொழுமை (obesity), சர்க்கரை நோய் எல்லாமே சரியான உணவுப் பழக்கத்தால் கட்டுப்படுத்தக் கூடியவை.

  பாரதிகூடத் தனது 'புதிய ஆத்திசூடி'யில் 'ஊண் மிக விரும்பு' என்று சொன்னானே அன்றி 'மிக ஊண் விரும்பு' என்று சொல்லவில்லை. அதாவது நீங்கள் உண்பதை நன்றாக இரசித்து (விரும்பி) உண்ணவேண்டுமே தவிர அதிகமாக உண்ணத் தேவையில்லை. பசித்தால்தான் உணவில் விருப்பம் வரும், விருப்பத்தோடு அணுகினால் வாயில் உமிழ்நீரும், வயிற்றில் ஜீரணநீர்களும் சுரக்கும். உணவு ருசிக்கும், செரிக்கும்.

  அரவை யந்திரக் கூடங்களுக்குக் கூட வாரத்தில் ஒருநாள் விடுமுறை உண்டு. நாமோ நம் வயிறு என்கிற அரவை யந்திரத்துக்கு ஒரு வேளை கூட ஓய்வு தருவதில்லை. அதனால்தான் சமயரீதியான கடமையாகப் பெரியவர்கள் அதை விதித்தார்கள். நாம் சமயத்தின் சடங்குகளை உள்ளேற்று, சாரத்தை உமிழ்ந்த காலத்தில் இவற்றை ஒதுக்கிவிட்டோ ம். உணவைத் தவிர்ப்பதற்கு 'உபவாசம்' என்று பெயர். 'உப' என்றால் அருகில், 'வாசம்' என்றால் வசித்தல் என்று பொருள். இறைவனின் அருகே இருக்க வேண்டுமென்றால் விலங்குகள் இரையுண்ணுவதுபோலத் தின்னுவதை விடவேண்டும். 'ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி' என்கின்றனர் பெரியோர். ஊன் உருக வேண்டுமானால் உணவு அருக வேண்டும். அதையே வள்ளலாரும் 'பதவி' வேண்டுமென்றால் 'பசித்திரு, தவித்திரு, விழித்திரு' என்றார். "மிக அதிகம் உண்ணுபவனுக்கும், மிகக் குறைவாக உண்ணுபவனுக்கும் யோகத்தில் நிலைக்க முடியாது" என்று கீதை சொல்லுகிறது.

  நன்கு சாப்பிட்டால் தூக்கம் வரும். சோம்பேறித்தனம் வரும். அது மட்டுமல்ல காமமும் மிகுதியாகிவிடும். அளவுகடந்த உணவு எவ்வாறு தீமை தருவதோ, அளவு கடந்த காம உணர்வும், நுகர்வும் மனிதனை விலங்காக்கிவிடும். அதை விவரிக்க இங்கே இடமில்லை. எனவேதான் உலகிலே கிடந்து உதைவாங்க விரும்பாதவர்கள், கொஞ்சம் பைத்தியக்காரர்கள் போல உணவில் கவனம் செலுத்தாமல் சாப்பிடுவார்கள் என்கிறார் குமரகுருபர சுவாமிகள்:

  துயில்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
  அயில்சுவையின் ஆகுவ என்றெண்ணி - அயில்சுவையும்
  பித்து உணாக்கொள்பபோல் கொள்ப பிறர்சிலர்போல்
  மொத்து உணா மொய்ம்பி னவர்.

  (நீதி நெறி விளக்கம்: பாடல் 85)

  [தூக்கத்தின் ருசியும், அழகிய பெண்களின் தோள்சேரும் சுவையும் எல்லாமே உணவின் சுவையினால் உண்டாவது என்பதைச் சிந்தித்து, மற்றவர்களைப் போல உலகில் அடிபட விரும்பாத வீரமுடையவர்கள் (யோகிகள்) பைத்தியக் காரர்களைப் போலச் சாப்பிடுவார்கள்.]

  நீங்கள் எப்படி? மனம்போனபடி சாப்பிட்டுவிட்டு உலகிலே உதை வாங்குகிறீர்களா? இல்லை கவனமாக, செரித்தபின்னே, உடல்நலத்துக்கு உகந்த உணவைச் சரியான அளவில் சாப்பிடுவீர்களா? சரியாகச் சாப்பிட்டால் உணவே மருந்து, இல்லையென்றால் மருந்தே உணவாகிவிடும். ஜாக்கிரதை.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |