ஜூலை 15 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
வேர்கள்
சிறுகதை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
டாக்டர் பட்டம்
பெண்ணோவியம்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பருந்துப் பார்வை : இடையை முறிக்குமோ காம்பு?
  - மதுரபாரதி
  | Printable version |

  ஒரு பெரிய பணக்காரப் பெண் இருக்கிறாள். பணத்திலே பிறந்து சொகுசிலேயே வளர்ந்தவள். வீட்டிலே ரத்தினக் கம்பளம். அதைத் தாண்டினால் வாசலில் பல்லக்கு. அதிலும் காலுக்குக் கீழே முயல்தோல் போலப் புசுபுசுவென மென்மையான விரிப்பு. இதர நேரங்களிலே அவள் பாதத்தைத் தாங்க மிக மிருதுவான காலணிகள். அவள் காலுக்கு மண்தரை எப்படி இருக்கும் என்பதே தெரியாதாம்.

  புகார் நகரத்தின் பெரிய வியாபாரியான மாநாய்கன் மகள் கண்ணகி இப்படிப்பட்டவள்தானே? அவளது பாதங்கள் எத்தனை மென்மையானவையாக இருக்கும்!

  கோவலன் தன் செல்வத்தையெல்லாம் மாதவியிடம் இழந்தபின், "வா மதுரைக்குப் போய் வாணிபம் செய்து பிழைக்கலாம்" என்று சொல்லி அழைத்துப் போகிறான். புகாரிலிருந்து சீரங்கம், உறையூர் வழியே மதுரைக்குப் போகவேண்டும். வழியில் வருகிறார் கவுந்தியடிகள் என்ற பெண்துறவி. அவரைச் சந்திக்கும் போது கோவலனும் கண்ணகியும் காவிரியின் கழிமுகத்திலிருந்து ஒரு காத தூரம்தான் நடந்திருக்கிறார்கள்.

  அதற்குள்ளேயே "மதுரைக்கு இன்னும் எவ்வளவு தூரம்?" என்று கேட்கத் தொடங்கிவிட்டாள் கண்ணகி. அவளுடைய இடை துவண்டுவிட்டது. பாதம் நோகத் தொடங்கிவிட்டது.

  கவுந்தியடிகள் இதைக் கவனிக்கிறார். அவர் கோவலனிடம் "இவள் மிக மென்மையானவளாய் இருக்கிறாள். உறையூர் தாண்டிப் போனால் கூழாங்கற்கள் நிறைந்த காட்டுப் பகுதி இருக்கிறது. இவளுடைய சிலம்பணிந்த நொய்மையான பாதம் அதைத் தாங்காது. அதைச் சொன்னால் யார் கேட்கிறார்கள்! 'இங்கேயே இரு, போகவேண்டாம்' என்று சொன்னாலும் நீ கேட்பதில்லை" என்று கோவலனிடம் சொல்லி அலுத்துக் கொள்கிறார்.

  பாடகச் சீறடி பரற்பகை உழவா
  காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
  அரிது இவள் செவ்வி, அறிகுநர் யாரோ?
  "உரியதன்று, ஈங்கு ஒழிக" என ஒழியீர்!

  (சிலப்பதிகாரம்: நாடுகாண் காதை: 52-55)

  ஏன் அவளால் நடக்கமுடியாதாம்? கவுந்தியடிகளே பின்னால் மதுரையின் புறஞ்சேரி சேர்ந்தபின் மாதரியிடம் சொல்கிறார்: "இங்கே என்னுடன் வந்திருக்கும் இந்த இளம்பெண்ணின் அழகிய சிறிய பாதங்களை மண்மகள் இதுவரை பார்த்ததில்லை" என்று. நாம் ஆரம்பத்தில் சொன்னோமே, அதுபோல. கால் வெறுந்தரையில் பாவாமலே நடந்த பணக்கார வீட்டுச் செல்லப்பெண், அதனால்தான்.

  ..... ..... ..... ஈங்கு
  என்னொடு போந்த இளங்கொடி நங்கை தன்
  வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்

  (சிலப்பதிகாரம்: அடைக்கலக் காதை: 135-137)

  சீதைக்கும் இப்படி ஒரு நிலைமை ஏற்படுகிறது. அவளும் மிதிலை அரசன் ஜனகனின் மகளாயிற்றே. எல்லாச் சுகபோகங்களிலும் வசதியாக வாழ்ந்தவள்தானே. ஆனால் அவளுக்கு இராமனோடு காட்டுக்குப் போகும் நிலைமை ஏற்படுகிறது. இருவரும் போகும் வழியில் ஒரு பாலைவனம் குறுக்கிடுகிறது.

  "இவளால் இந்தைப் பாலைவனத்தில் வெம்மையைத் தாங்கமுடியாது" என்று இராமன் தன் மனத்திலே நினைக்கிறான். அப்படி நினைத்தவுடனேயே சூரியன் தன்னை நிலவுபோலக் குளிர்ச்சியாக்கிக் கொள்கிறான். பாலைவனத்துப் பாதையில் இருக்கும் உலர்ந்த மரங்கள் பசேலென்று தழைத்துவிடுகின்றன. இரண்டு பக்கத்திலும் அனல் கக்கும் மணற்பகுதி அப்படியே மாறித் தாமரைத் தடாகங்களாகிவிடுகின்றது.

  நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைத்தான்
  ஓங்கு வெய்யவன் உடுபதி எனக்கதிர் உகுத்தான்
  தாங்கு வெங்கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த
  பாங்கு வெங்கனல் பங்கய வனங்களாய்ப் பரந்த

  (அயோத்தியா காண்டம்: வனம்புகு படலம்: 39)

  இறைவனின் அவதாரமான இராமன் இயற்கைக்குச் சொல்லவேண்டிய அவசியம் கூட இருக்கவில்லை. தன் மனதில் நினைத்தவுடனே இயற்கை அவனுக்கு வசதிசெய்து கொடுத்தது. எல்லோருக்குமே அப்படி நடந்துவிடுமா?

  ஒரு ஆண்மகன் தொழில் நிமித்தமாகவோ, போருக்காவோ, கல்விகற்கவோ தன் ஊரை விட்டு நீங்கும் அவசியம் ஏற்படும். மனைவியைப் போர்க்களத்துக்கு இட்டுச் செல்லக்கூடாது என்று தொல்காப்பியம் தடுக்கிறது. கல்வி கற்கும் நாளில் மணமாகியிருக்காது, ஆகியிருந்தாலும் உடன் அழைத்துச் செல்லமாட்டான். அப்படித் தொழில் நிமித்தமாகச் செல்லுகையில் அவன் தன் மனைவியை அழைத்துச் சென்றால், வழியில் காடு, மலை, பாலைவனம் முதலிய, பெண்மையின் மென்மைக்குத் தகுதியல்லாத, கடினமான நிலப்பகுதிகளைச் சந்திக்கவேண்டி வரும்.

  இப்படித்தான் ஒருவன் கிளம்புகிறான். அவன் வழியில் இருக்கும் துன்பங்களை நினைத்து "என்னுடன் வராதே, உனக்குத் தாங்காது" என்று மனைவியிடம் சொல்கிறான். அவளோ "முடியாது, வருவேன்" என்று அடம்பிடிக்கிறாள்.

  இவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பூக்களிலேயே மிக மென்மையானது அனிச்சப் பூ. முகர்ந்தாலே மூச்சின் வேகத்திலும் வெப்பத்திலும் வாடிவிடக் கூடியது. மிகச் செல்வர்களின் மஞ்சத்தில் அடைக்கப்படுவது அன்னத்தின் தூவி. அது இலவம் பஞ்சைவிட மெத்தென்றிருப்பது. அவன் நினைக்கிறான் "என் மனைவியின் நொய்மையான பாதங்களுக்கோ அனிச்சப்பூவும், அன்னச் சிற்றிறகும் கூட நெருஞ்சிப்பழம் போலக் குத்துபவை. அவள் எப்படிக் காட்டிலும், மேட்டிலும், பாலைவனத்திலும் என்னுடன் நடந்து வருவாள்?"

  அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
  அடிக்கு நெருஞ்சிப் பழம்

  (திருக்குறள்: நலம்புனைந்துரைத்தல்: 1120)

  அப்படிச் சொல்லும்போதுகூட 'நெருஞ்சிமுள்' என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னாலே அவளுக்குத் துயர்வரும் என்று அஞ்சுகிறது அவன் மனம். எனவே 'நெருஞ்சிப்பழம்' என்கிறான் அவன்!

  ஏன் தெரியுமா? பாதம் மென்மையாக இருந்தாலும் பரவாயில்லை, மனம் வலுவானதாயிருந்தால் சமாளித்துக்கொள்வாள். அவளது தன்மையே மிக மென்மையானதுதானாம். எவ்வளவு மென்மை? அவன் அனிச்சப்பூவிடமே சொல்கிறான்: "அனிச்சப்பூவே! நீ வேண்டுமானால் நல்ல மென்மைத்தன்மை உடையவளாய் இருக்கலாம். நன்றாக இரு. ஆனால் ஒன்று தெரிந்துகொள். என் மனதுக்கிசைந்தவள் உன்னைவிடவும் மென்மையானவள்".

  நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
  மென்னீரள் யாம்வீழ் பவள்

  (திருக்குறள்: நலம்புனைந்துரைத்தல்: 1111)

  இப்போதெல்லாம் ஒரு நாற்பது வயதானால், அதைத் தூக்காதே; சடாரென்று குனியாதே. படுக்கையிலிருந்து திடீரென்று எழுந்திருக்காதே என்றெல்லாம் சொல்கிறார்கள். காரணம், இடுப்புப் பிடித்துக் கொண்டுவிடும். கொஞ்சம் முற்றிய நிலையில் இடுப்பெலும்பு நழுவிடும். 'Slipped Disc' என்று சொல்லுவார்கள்.

  ஆனால் நாம் இப்போது பேசிக்கொண்டு இருக்கும் ஆசாமியின் மனைவி இளம்பெண்தான். என்ன, கொஞ்சம் கொடியிடை. இடுப்புக்குமேல் பாரம் அதிகமானால் ஒடிந்துவிடுமோ என்கிற நிலைமை. அவன் என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை, "கூட வருவேன்" என்று சொல்லிப் புறப்படுகிறாள். அலங்கரித்துக் கொள்ளாமல் புறப்படமுடியுமா?

  தன்னுடைய இயல்புக்கேற்ப மெல்லிய, கனமற்ற ஆடைகளையும், நகைகளையும் பூட்டிக்கொள்கிறாள். நறுமணப் பொடிகளைப் பூசிக்கொள்கிறாள். கொண்டை போட்டுக் கொள்கிறாள். இறுதியாகத் தலைக்குப் பூச்சூடிக்கொள்கிறாள். மிச்சப்பூவெல்லாம் கனமாக இருக்குமே என்று எண்ணி ஒரே ஒரு அனிச்சப்பூவை மட்டும் கொண்டையில் ஒயிலாகச் செருகிக் கொள்கிறாள்.

  இவன் பதறிப்போய்விடுகிறான். ஏன் தெரியுமா? காம்பை அகற்றாமல் பூவை வைத்துக் கொண்டுவிட்டாளாம். பூதானே மெல்லியது. காம்பு கனமானது ஆயிற்றே. அந்தப் பாரத்தைத் தாங்காமல் அவளுடைய இடை முறிந்துவிடுமாம். நல்லதற்கும் பறைகொட்டலாம், சாவுக்கும் பறை கொட்டலாம். "ஆனால், இவள் இப்படிக் கவனமில்லாமல் காம்போடு பூவை வைத்துக்கொண்டால், நல்ல பறை எங்கிருந்து கொட்டும்? இவளுடைய இடைக்குச் சாவுப்பறைதான் ஒலிக்கப் போகிறது" என்று பயப்படுகிறான்.

  அனிச்சப்பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
  நல்ல படாஅப் பறை 

  (திருக்குறள்: நலம்புனைந்துரைதல்: 1115)

  [நுசுப்பு - இடுப்பு; நல்ல படாஅப் பறை - மங்கலப் பறை ஒலிக்காது]

  நமக்கெல்லாம் விருந்தனரோடு அனிச்சத்தை ஒப்பிட்ட ஒரு குறள்தான் பெரும்பாலும் தெரியும். ஆனால் திருவள்ளுவனின் அற்புதக் கற்பனை அந்த அனிச்சமலரை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறது என்று நினைக்கையில் வியப்பாக இல்லை?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |