ஜூலை 15 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
வேர்கள்
சிறுகதை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
டாக்டர் பட்டம்
பெண்ணோவியம்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிறுகதை : "ஸார், நாம போயாகணும்"
  - சத்யராஜ்குமார்
  | Printable version |

  மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான். ஜன்னலைப் பார்த்தான் வரது.

  ஜன்னல் கண்ணாடியில் தலைகள் திரண்டன. நாற்பது வயதுக்காரர் ஒருவர் பதட்டத்துடன் சொன்னார். " தண்ணித் தொட்டிக்குள்ள குழந்தை விழுந்துருச்சுங்க. அரை மணி நேரமா உயிருக்குப் போராடுது. ஆஸ்பத்திரில விட்டுருங்கய்யா... "

  வரது ஜன்னல் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டே, " நாங்க அவசரமா போயிட்டிருக்கோம். வேற வண்டி பாருங்க. "

  தயானந்த்தின் பார்வை அந்தப் பெரியவரின் கையில் துவண்டு கிடந்த இரண்டரை வயசுக் குழந்தை மேல் விழுந்தது. ஈரத்தில் ஊறிப் போய் வெளுத்திருந்த பச்சை உடம்பு. வாயில் நுரை. கண்கள் மேலே சொருகி, ஏறக்குறைய சாவுக்கருகில் இருந்தது. குழந்தையின் அம்மா கண்ணீர்க் குவியலாய் நின்றாள்.

  " தயானந்த் ஸார், நமக்கு நேரமாச்சு. நீங்க போய்க்கிட்டே இருங்க. "

  " வரது, பின் கதவைத் திறந்து விடு. "

  " ஸார், நாம... "

  " சொன்னதைச் செய். "

  குழந்தையை ஏந்திய பெரியவரும், அதன் அம்மா, அப்பா, இன்னும் நாலைந்து பேர் பின் சீட்டில் புளி மூட்டை போல அடைந்தனர். சற்று அழுக்கான ஜனங்கள். காரின் ஆடம்பரத்துக்குப் பொருத்தமில்லாத கசங்கிய குப்பைக் காகித மனிதர்கள்.

  தயானந்த் காரை எழுபது, எண்பதில் சீற விட்டான். வரது அடிக்கடி வாட்சைப் பார்த்தபடி என்னவோ முணுமுணுத்தான்.

  " குழந்தை எப்படித் தண்ணித் தொட்டியில் விழுந்தது? - தயானந்த் கேட்டான்.

  பெரியவர் அழுதார். " தண்ணி வேகம் பத்தறதில்லைன்னு தரை மட்டத்தில் பைப்புங்க. அதுக்கும் கீழே தொட்டி. வீட்ல பொம்பளைங்க பக்கத்து வீட்ல உக்காந்து பாழாப் போன கேபிள் டிவி பார்த்துட்டுக் குழந்தையைக் கவனிக்காம விட்டுட்டாங்க. இது விளையாடிக்கிட்டே தொட்டிப் பக்கம் போயிருக்கு. எட்டிப் பார்த்திருக்கும் போல. தவறி உள்ள விழுந்திருச்சுங்க. சினிமா முடிஞ்சப்புறம்தான் குழந்தையைக் காணோமேன்னு தேடிருக்காங்க. பக்கத்து வீட்டம்மாதான் தொட்டில பார்த்து அலறிச்சு. எம் பேரன் ஏ பி சி டி சொல்லும்ய்யா. சித்திரை, வைகாசி சொல்லும்ய்யா. மணி மணியாப் பேசும். எப்படித் துவண்டு கிடக்குது. பொழைக்கணுங்க. இது கண்டிப்பாப் பொழைக்கணுங்க. " - குழந்தையுடன் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

  கார் மரப்பேட்டைப் பாலத்தை விநாடியில் கடந்தது. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி போர்டிகோவில் நின்றதும், அவசரமாகக் கதவைத் திறந்தார்கள்.

  " ரொம்ப நன்றிங்க. " - கும்பல் குழந்தையை ஏந்திக் கொண்டு வேகமாக உள்ளே சென்றது.

  " நாம போகலாம் ஸார். " என்றான் வரது.

  தயானந்த் காரை ஸ்டார்ட் பண்ணவில்லை. " உள்ளே திலீப்புன்னு தெரிஞ்ச டாக்டர் இருக்கார். பார்த்துச் சொன்னா கொஞ்சம் அக்கறை எடுத்துக் கவனிப்பாங்களே. "

  " இனிமே அவங்க பார்த்துப்பாங்க. டயமாச்சு. ஸ்டார்ட் பண்ணுங்க ஸார். "

  வரது பேசினதைப் பொருட்படுத்தாமல் காரை விட்டிறங்கினான் தயானந்த். உள்ளே போனான்.

  கும்பல் குழந்தையை வைத்துப் பதறிக் கொண்டிருக்க, நர்ஸ் ஒருத்தி சாவகாசமாக, " சீட்டு வாங்கிட்டு வா. " என்றாள்.

  தயானந்த்துக்குப் பளீரென்று கோபம் ஏறியது. " குழந்தை உயிருக்குப் போராடிட்டிருக்கு... சீட்டா கேக்கறே? உன் சீட்டைக் கிழிச்சிருவேன். எங்கேம்மா டாக்டர்? " - திடீரெனக் குறுக்கே புகுந்த அவன் கர்ஜனையைச் சற்றும் எதிர்பார்க்காமல் மிரண்டு போனாள்.

  லேசான நடுக்கத்துடன் அவள் கை காட்டின திசையில் ஓ.பி டாக்டர் தெரிந்தார். பெரியவரின் கையிலிருந்த குழந்தையை அள்ளினான் தயானந்த். அதன் சின்ன வாயிலிருந்து வழிந்த நுரை அவன் முழுக்கை ஷர்ட்டை நனைத்தது.

  க்யூவை விலக்கி, டாக்டரின் மேஜையில் குழந்தையைப் படுக்க வைத்தான். விவரம் சொன்னான். குழந்தை மேல் ஸ்டேதாஸ்கோப்பை வைத்த டாக்டரின் முகம் சட்டென மாறியது.

  " ஹார்ட் பீட் குறைவா இருக்கு. உடம்புக்குள்ள தண்ணி நிறையப் போயிருக்கு. வாசு, ஐ.சி வார்டுக்குள் கொண்டு போ... "

  கம்பெளண்டர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேகமாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் போனார்.

  " ஐயா, என் பேரனைப் பொழைக்க வைங்கய்யா. டாக்டர் ஆவேன்... ஊசி போடுவேன்னு வாய்க்கு வாய் சொல்லுவானே... இவனைப் பொழைக்க வைங்கய்யா... "

  பெரியவர் அழுகுரலோடு பின்னால் ஓடினார். கூடவே சென்ற தயானந்த்தின் கையைப் பற்றினான் வரது.

  " ஸார்... "

  " இரு வரது. டாக்டர் திலீப்பைப் பார்க்கணும். "

  நர்ஸிடம் விசாரித்தான். அவர் கார்டியாலஜி பிரிவில் இருப்பதாகச் சொன்னாள். அங்கே இருந்த குறுந்தாடி வைத்த டாக்டர் திலீப் தயானந்த்தை ஆச்சரியத்துடன் எதிர் கொண்டார்.

  " ஹலோ மிஸ்டர் தயானந்த்! என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்? "

  கையை நீட்டினவரிடம் கை குலுக்க அவகாசமில்லாமல், அவசர சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையைப் பற்றிச் சொன்னான்.

  " குழந்தை யாருது? "

  " அப்புறம் விபரம் சொல்றேன். ப்ளீஸ், நீங்க முதல்ல குழந்தையைப் பாருங்களேன். "

  திலீப் எழுந்து வந்தார். மருந்தகத்தைக் கடக்கும்போது ஒருவன் பதட்டத்தோடு தயானந்த்திடம், " ஐயா... " என்றான். அவன் கையில் ஒரு சீட்டு இருந்தது.

  " என்ன ? "

  " டாக்டரய்யா மருந்து எழுதித் தந்தாரு. உடனே வேணுமாம். இங்க ஸ்டாக் இல்லேங்கறாங்க... "

  திலீப் தலை வழுக்கையைத் தடவிக் கொண்டே, " கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி நிலைமை இதுதான் தயானந்த். சமயத்தில் தேவைப்படற மருந்து ஸ்டாக் இருக்காது. பேசாம ப்ரைவேட் நர்சிங்ஹோம் போயிருக்கலாமே. "

  " முதல்ல தோணலை. நீங்க குழந்தையைப் பாருங்க. ஹோப் இருந்தா ட்ரீட்மென்ட் குடுங்க. இல்லேன்னா வேற ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிரலாம். "

  " ஸார், நாம போகணும் ஸார். " என்றான் வரது குரலை உயர்த்தி.

  " வரது, எனக்குத் தெரியும். நீ குறுக்கே பேசாம வா. "

  அவசர சிகிச்சைப் பிரிவின் கதவுக்குள் டாக்டர் திலீப் மட்டும் நுழைந்தார். குழந்தையின் தாய், தகப்பன், தாத்தா எல்லோருமே கதவருகில் கதறினார்கள். மருந்து வாங்கப் போன ஆள் திரும்பி வந்தான். மருந்து உள்ளே சென்றது.

  சற்று நேரத்தில் திலீப்பிடமிருந்து அழைப்பு வந்தது தயாவுக்கு.

  " ஐயாம் வெரி ஸாரி தயானந்த். உடனடியா ஆக்சிஜன் தரணும். இங்க எல்லா சிலிண்டரும் காலி. இண்டெண்ட் போட்டு நாலு நாளாச்சு. "

  " வேற ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போலாமா? "

  " பத்து நிமிஷத்துக்கு மேல குழந்தை தாக்குப் பிடிக்காது. "

  அந்தக் கும்பலின் அழுகை நெஞ்சைத் தாக்கியது. சட்டெனக் கேட்டான். " பக்கத்தில் ப்ரைவேட் க்ளினிக் இருக்கா ? "

  " ஏ. ஓ க்ளினிக் இருக்கு. ஆனா நான்தான் சொல்றேனே... குழந்தையைக் கொண்டு போய் அங்கே அட்மிட் பண்றதுக்குள்ள... "

  " குழந்தை இங்கயே இருக்கட்டும். அங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு வர முயற்சி செய்யட்டுமா? "

  " வெல். செய்ங்க. "

  வரதுவைக் கூப்பிட்டு கார் சாவியை நீட்டினான். " நான் போன்ல பேசிடறேன். சிலிண்டரை டிக்கில போட்டுக் கொண்டு வா வரது. லேட் பண்ணிராதே. "

  வரது வேண்டா வெறுப்பாக கார் சாவியை வாங்கினான். தயானந்த் அந்தத் தனியார் ஆஸ்பத்திரியை போனில் தொடர்பு கொண்டான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விபரம் சொன்னான்.

  " பணம்தானே? செக்கா தந்தாப் போதுமா? ப்ளீஸ், உடனே சிலிண்டரை அனுப்பி வைங்க. "

  சற்று நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வரவழைக்கப்பட்டது. நிமிஷங்கள் நழுவின. வரது பொறுமையிழந்து, " ஸார், உங்களாலானதை செஞ்சிட்டிங்க. இன்னும் எதுக்காகக் காத்திருக்கிங்க. போலாம் ஸார். " என்றான்.

  " இரு வரது. முடிவு தெரிய வேண்டாமா? அப்புறம் மனசு அடிச்சிக்கும். "

  " அவங்களோட குழந்தை ஸார். அவங்க கவலை. "

  " குழந்தை. "

  மீண்டும் இன்ட்டர்காம். டாக்டர் திலீப். இந்த முறை தயானந்த்தின் முகத்தில் நிம்மதி பரவியது. " தாங்க்ஸ் டாக்டர். தாங்க்யு வெரிமச். "

  " சமயத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வந்து சேர்ந்ததே. குழந்தை பிழைச்சதுக்கு உங்க முயற்சிதான் காரணம். அபாயக்கட்டம் தாண்டியாச்சு. "

  குழந்தையைச் சேர்ந்தவர்கள் இன்னும் அழுது கொண்டிருந்தார்கள். தயானந்த்தும், வரதுவும் காருக்கு வந்து விட்டார்கள். தயானந்த் காரை சரேலெனப் பறக்க விட்டான்.

  " வரது, வேற சமயம்ன்னா இவ்வளவு தூரம் நான் உதவி பண்ணியிருப்பேனான்னு தெரியலை. "

  வரது வெறுப்புடன் சொன்னான். " போங்க ஸார். போன்ல தகவல் வந்து அஞ்சு மணி நேரமாச்சு. அங்க உங்க அம்மாவுக்கு எப்படி இருக்கோ. ஒரே மகன். கடைசி கடைசியா ஒரு வாய் கங்கா ஜலம் விடக் கூட பக்கத்தில் இல்லாம... பாவம் அந்த வயசான ஜீவன்... "

  " ஏன் வரது, அம்மாவுக்கு வயசு எழுபத்திரண்டு இருக்குமா? "

  கார் பங்களாவுக்குள் நுழைந்தபோது, முகப்பில் உறவுக்காரர்கள் கும்பல் கும்பலாக நின்றிருந்தார்கள்.  நன்றி விகடன்

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |