ஜூலை 15 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
வேர்கள்
சிறுகதை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
டாக்டர் பட்டம்
பெண்ணோவியம்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : சோழன் ஆட்சி
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 25

  சோழன் ஆட்சியில், உறந்தை நகரில் நிகழும் ஒரு அழகான காட்சி, இந்தப் பாடலில் விவரிக்கப்படுகிறது.

  வளம் மிகுந்த உறந்தை நகரத்தில் ஒரு காலை வேளை.

  அந்த நகரின் கடை வீதியெங்கும், பூ மாலைகளும், இதர ஜோடனைகளும் செய்து விற்கிறவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள், சாலையில் செல்லும் மக்களைப் பார்த்து, தங்களின் மாலைகளை வாங்கிச் செல்லும்படி சத்தமாய்க் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

  இப்படி விற்பனையிலும், விளம்பரத்திலும் ஈடுபட்டிருக்கும்போதுகூட, அவர்களின் கைகள், அடுத்த மாலையைக் கட்டிக்கொண்டிருக்கின்றன !

  தரமான மாலைகளைமட்டுமே செய்து, விற்கிற அந்தக் கலைஞர்கள், எப்போதும் மிகச் சிறந்த பூக்களைதான் தேர்ந்தெடுத்துக் கட்டுகிறார்கள் - சுமாரான, வண்ணம் குறைந்த, வாடிய, அல்லது லேசாய்ச் சிதைந்த பூக்களையெல்லாம், உடனடியாக நிராகரித்து, வீசி எறிந்துவிடுகிறார்கள்.

  இவ்வாறாக, அவர்கள் வீசி எறிந்த பூக்கள், சாலையெங்கும் நிறைந்து குவிந்திருக்கின்றன ! ('வேண்டாம்' என்று விலக்கிய பூக்களே இப்படிக் குவிந்திருக்கிறது என்றால், அந்த நாட்டின் வளத்தை நாமே ஊகித்துக்கொள்ளலாம் !)

  உறந்தை நகர் வீதியில் பல வண்ணப் பூக்கள் இப்படி மொத்தமாய்ச் சிதறியிருப்பதைப் பார்க்கும்போது, வானத்தில் தோன்றுகிற அந்த வானவில்லே, தரையில் உதித்துவிட்டதுபோல் தெரிகிறது !


  மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச்
  சால மிகுவதோர் தன்மைத்தாய்க் காலையே
  வில்பயில் வானகம் போலுமே வேல்வளவன்
  பொற்பார் உறந்தை அகம்.

  (பகர்வார் - சொல்பவர்கள்,
  சால - நிறைய
  மிகுவது - அதிகரிப்பது
  வில்பயில் வானகம் - வானவில் தோன்றும் வானம்
  பொற்பார் - அழகு நிறைந்த)  பாடல் 26

  உறந்தை நகரில் வாழும் சோழனின் அரண்மனையில் பயங்கரமான கூட்டம்.

  ஒருவரோடு ஒருவர் நெருக்கியடித்துக்கொண்டு அங்கே நிற்கிறவர்கள் எல்லோரும், சாதாரணமானவர்கள் இல்லை - சோழனின் ஆட்சிக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் அவர்கள் !

  இப்படி முண்டியடித்துக்கொண்டு எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள் ?

  இன்றுதான், சோழனிடம் அவர்கள் கப்பத் தொகையை(வரி)ச் செலுத்தக் கடைசி நாள் - குறிப்பிட்ட தொகையை இன்றைக்குள் செலுத்தாவிட்டால், அநாவசியமாய் சோழனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் - நாளை காலை அவர்கள்மேல் போர் தொடுத்துவிடுவான் சோழன், அதன்பின் அவர்களின் கதி, அதோகதிதான் !

  அந்த பயத்தில்தான், இந்த மன்னர்களெல்லாம், கூட்டம் கூட்டமாய் சோழனின் அரசவையில் கூடியிருக்கிறார்கள். சோழனை நேரில் பார்த்து, வரியைச் செலுத்திவிட்டு, நிம்மதியுடன் செல்கிறார்கள் !

  இப்படி வருகிறவர்களை, சோழனின் அரண்மனைக் காவலர்கள் ஒழுங்குபடுத்தி, வரிசையில் அனுப்புகிறார்கள், 'மன்னர்களே, என்ன அவசரம் ? ஏன் இப்படி ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு முண்டியடிக்கிறீர்கள் ?', என்று கேலியாய்க் கேட்கிறார்கள் அவர்கள், 'அவசரப்படாதீர்கள், ஒருவர்பின் ஒருவராக, வரிசையில் வந்து கப்பம் செலுத்துங்கள் !'

  'இப்படிதான், நேற்றும் பல மன்னர்கள் சோழனைப் பார்க்கவும், கப்பம் செலுத்தவும் வந்திருந்தார்கள். அவர்கள் மொத்தமாய் சோழனின் பாதங்களில் பணிந்து, கப்பத்தைச் செலுத்தியபோது, அவர்கள் அணிந்திருந்த மணிமுடிகள், சோழனின் காதில் குத்திவிட்டது - இன்னும் பல மன்னர்கள் இப்படியே செய்ய, சோழனின் கால், கிரீடங்கள் குத்திய காயத்தால் புண்ணாகிவிட்டது ! அந்த காயம் இன்னும் ஆறவில்லை !

  அதனால்தான் சொல்கிறேன், கொஞ்சம் பொறுமையுடன் வரிசையில் வாருங்கள். குளிர்ச்சியான அருளுடைய சோழனை தரிசித்து, சற்றே எட்ட நின்று, அவனுடைய கால் காயத்தைத் தொந்தரவு செய்யாமல் பணிந்து, வணங்கி, உங்கள் கப்பத்தைச் செலுத்திவிட்டுச் செல்லுங்கள் !'

  (எண்ணற்ற குறுநில மன்னர்களைப் போரில் வென்று, தன் ஆட்சிக்குட்பட்டவர்களாக வைத்திருந்தான் பேரரசன் சோழன். அந்தச் செய்தி, இந்தப் பாடலில் பெருமையுடன் சுட்டிக்காட்டப்படுகிறது !)


  நின்றுஈமின் மன்னீர்நெருநல் திறைகொணர்ந்து
  முன்தந்த மன்னர் முடிதாக்க இன்றும்
  திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
  பெருந்தண் உறந்தையார் கோ.

  (ஈமின் - கொடுங்கள்
  மன்னீர் - மன்னர்களே
  நெருநல் - நேற்று
  திறை - வரி
  கொணர்ந்து - கொண்டுவந்து
  திருந்தடி - அழகிய பாதங்கள்
  செவ்வி இலன் - அழகு / நலம் கெட்டவன்
  தண் - குளிர்ச்சி
  கோ - தலைவன்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |