Tamiloviam
ஆகஸ்ட் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஊர் கூடி இழுத்த தேர் (ஈரோடு புத்தக கண்காட்சி)
- பாபுடி [rajputh61@rediffmail.com]
| | Printable version | URL |

புத்தக வாசிப்பு என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டு போய் விடக்கூடாதென பேரவை மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு பலன் இருக்கவே செய்தது.

தனது அரை டவுசர் வயதில் ' இரும்புக் கை மாயாவி'யையும், ' சங்கர்லால்'-ஐயும் தேடித் தேடி வாசித்த தகப்பனுக்கு பிறந்த பிள்ளைக்கோ கம்ப்யூட்டர் கேம்ஸ் தான் சகலமும்.

அதுபோல், 'பொன்னியின் செல்வன்'களிலும் 'யவன ராணி'களிலும் மூழ்கிக் கிடந்த பாட்டிமார்களும் அம்மாமார்களும் கூட இப்போது மெகா சீரியல்களுக்கு முன் மூக்கை சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, புத்தக வாசிப்பு என்பதே பழங்கதையாய்- வழக்கொழிந்து வரும் அம்சமாய் ஆகி வரும் இக்காலத்தில், முழுக்க முழுக்க புத்தகங்களைச் சார்ந்தே ஒரு கண்காட்சியை - அதுவும் ஒரு நடுத்தர நகரில் நடத்திட கண்டிப்பாய் தனி துணிச்சல் வேண்டும். ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைக்கு குறிப்பாக அதன் தலைவர் ஸ்டாலின் குணசேகரனுக்கு ரொம்பவே துணிவு.

கடந்த 2005ம் ஆண்டு வெறும் 75 ஸ்டால்களுடன் முதன்முறையாக புத்தகத் திருவிழாவை நடத்தியது மக்கள் சிந்தனைப் பேரவை. அதன் வெற்றி, பிரசுரதாரர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் கொடுத்த உற்சாகம் அடுத்தாண்டு ஸ்டால்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கியது.

  இப்போது 3வது ஆண்டாக அதே 152 ஸ்டால்களுடன் அதே வ.உ.சி., மைதானத்தில் வெற்றிகரமாக புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக நடத்தி காண்பித்துள்ளது மக்கள் சிந்தனை பேரவை. கடந்த மாதம் 27ம் தேதி தமிழக நிதியமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்த இத்திருவிழாவை, இம்மாதம் 6ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராஜன் நிறைவு செய்து வைத்தார். அதாவது 'அ'-வில் அமர்க்களமாக ஆரம்பித்து 'ஒள'-வில் அருமையாக நிலை சேர்ந்தது இந்த பண்பாட்டு தேர்.

  இந்த புத்தகத் திருவிழாவில், எண்கணித ஜோதிடம் முதல்  கிரேக்க ஹோமரின் ' இலியட்' வரை எதுவும் பாக்கியில்லை. எந்த சப்ஜெக்ட்டுகளுக்கும் பஞ்சமில்லை. சட்டைப் பையையும் புத்தகத்தையும் மாறி மாறி தடவி பார்த்து யோசித்துக் கொண்டே வாங்கியவர்களுக்கும் சரி, வீட்டிலேயே பட்டியல் போட்டு கொண்டு வந்து வாங்கி அடுக்கி கொண்டு சலவை நோட்டுகளை அனாயசமாக நீட்டியவர்களுக்கும் சரி..சகலருக்கும் ஈடு கொடுத்தது இந்த கண்காட்சி. ரூ.1ல் இருந்து  ஆயிரம் வரைக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்ப புத்தகங்கள் கிடைத்தன.

 புத்தகங்கள் வாங்க கண்காட்சி வளாகத்திலேயே வங்கி கடனுதவிக்கு ஏற்பாடு செய்து அரசு ஊழியர்கள் பலரை புத்தக வாசகர்களாக்கிய புண்ணியத்தையும் கட்டிக் கொண்டது சிந்தனைப் பேரவை.
 
 Erode Book Fair தந்தை பெரியார் சிந்தனைக் கூடம் என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் பல அரிய புகைப்படங்களில் விதவிதமாக காட்சியளித்த பெரியார், பக்கத்தில் வெங்கடேசன் என்பவரால் மணலில் வடிவமைக்கப்பட்டிருந்த சிற்பத்திலும் கம்பீரமாக சிரித்திருந்தார்.

  புத்தகங்களோடு நிற்காமல் கண்காட்சியை முன்னிட்டு தினசரி குறும்படங்களை திரையிட்டும், வெகுஜனங்களை புதிய தளத்திற்கு இட்டு சென்றது பேரவை.

  புத்தக வாசிப்பு என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டு போய் விடக்கூடாதென பேரவை மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு பலன் இருக்கவே செய்தது. ஈரோடு மட்டுமின்றி அருகில் உள்ள சேலம், கரூர், நாமக்கல், கோவை மாவட்டங்களில் இருந்தும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் ஆயிரக்கணக்கில் வந்திருந்தது, இக்கண்காட்சிக்கு புது பொலிவை கூட்டியது.

  இந்த திருவிழாவில் புத்தகங்களே மூலவர்கள் என்றால், 10 நாட்களும் மாலை கண்காட்சி வளாகத்தில் சொற்பொழிவாற்றி கருத்து விருந்தளித்த அறிஞர்களை உற்சவர்கள் என்று சொல்வதே சரி.  கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், திலகவதி, 'பெரியார்' பட இயக்குனர் ஞானராஜசேகரன், நடிகர் சிவகுமார், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் ஜீவபாரதி என்று உற்சவர்களின் பெரியப் பட்டியலே உண்டு.  இக்கண்காட்சிக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்த ஈரோடு மாவட்ட கலெக்டரும் இலக்கியவாதியுமான உதயசந்திரனும் இந்த பட்டியலில் அடங்குவார்.

 " பொதுமக்களிடம் குறிப்பாக இளையோர் மத்தியில் நல்ல புத்தகங்களை வாசிக்கும் வழக்கத்தை அதிகப்படுத்துமேயானால் அதுவே புத்தகக் கண்காட்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்," என்கிறார் இப்புத்தக திருவிழாவின் பிதாமகரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன். மேலும் அவருடன் ஒரு மினி பேட்டி:

* அதென்ன 152 ஸ்டால்கள் கணக்கு? அந்த எண்ணிக்கையை இம்முறையாவது அதிகரித்திருக்க கூடாதா?

ஸ்டாலின் : கண்காட்சி மைதானத்தில் இதற்கு மேல் அரங்கை பெரியதாக்க முடியாது. டிமாண்ட் அதிகமிருந்தும் ஸ்டால்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாத நிலை.

* மாணவர்கள் மத்தியில் கண்காட்சிக்கு வரவேற்பு..?

ஸ்டாலின் : பிரமாதம். நாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகம். ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் மாணவ மாணவியர் வருகை தந்த ஆச்சரியமும் நிகழ்ந்துள்ளது.

* கண்காட்சிக்கு பொதுமக்களின் வருகை...?

ஸ்டாலின்: கண்காட்சி நடந்த 11 நாளில் மொத்தம் 5 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர்.

* புத்தக விற்பனை...?

ஸ்டாலின் : முதலாண்டு கண்காட்சியில் சுமார் ரூ. ஒன்றே முக்கால் கோடி மதிப்புக்கு புத்தகங்கள் விற்பனையானது. அடுத்தாண்டு இது ரூ.3 கோடியை எட்டியது. இம்முறை சுமார் ரூ. 3.50 கோடியை தாண்டியதாக தெரிய வந்துள்ளது.

 

சினிமா, டிவி,  இன்டர்நெட், கண்மூடித்தனமான கிரிக்கெட் மோகம் மற்றும் வீ£டியோ கேம்ஸ் ஆகிய பஞ்சபூதங்கள் கவர்ந்து சென்று விட்டுள்ள புத்தக வாசிப்பு எனும் அற்புத மாணிக்கத்தை மீட்டு வந்து இளைய சமுதாயத்திடம் மீண்டும் ஒப்படைக்க மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் போன்றோர் மேற்கொள்ளும் சளைக்காத முயற்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதும் கூட ஒரு வகையில் சமூகக் கடமையே ஆகும்.

oooOooo
                         
 
பாபுடி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |