Tamiloviam
நவம்பர் 06 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : பணச்சடங்குகள்
- ரஞ்சனி [sri.vije@gmail.com]
  Printable version | URL |

நான் அறிந்தவரையில் இலங்கையில் சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களிலேயே பணச்சடங்குகளாக சாமத்தியச்சடங்குகள் அன்று நடைபெற்றன. அவர்களில் பெரும்பாலானோர் மிகுந்த ஏழைகளாக இருந்தனர். நாள் பூராவும் கணவனும் மனைவியும் உழைத்தும் நாளாந்த செலவுக்கே அல்லற்பட்டவர்களுக்கு மகளின் பூப்பெய்தல் சடங்கு அவளது திருமணத்துக்கு முதல் தேடும் ஒரு அத்திவாரமாக அமைந்தது.

இன்றோ எங்கும் சாமத்தியச்சடங்குகள் ஆனால் நோக்கம் தான் வேறு. பல ஆயிரம் செலவழித்து மற்றவர்களுடன் போட்டி போடும் ஆடம்பரமாக, பல நூற்றுக்கணக்கானோரை வரவழைத்து செலவழித்த முதலைத் தேடும் வியாபாரமாக இது இன்று மாறியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் கனடாவில் பணச்சடங்குகள் சாமத்தியச் சடங்குகளாக மட்டுமன்றி திருமணம், முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம், பரத நாட்டிய, மிருதங்க அரங்கேற்றங்கள் என வளர்ந்து இப்போது புத்தக வெளியீடுகளாகவும் வியாபித்துள்ளன.

அரங்கேறி மகிழ கோவில்களும், ரசிக்கத் தெரிந்த சில உற்ற நண்பர்களும், நெருங்கிய உறவினர்களும் போதும். பலர் போக வேண்டுமே என்பற்காகப் போய் ஏனோ தானோ என்று இருந்து எந்த விளக்கமுமின்றித் தர்மசங்கடப்படும் நிலை தேவையில்லை. அதே போல் புத்தக வெளியீட்டுக்கு வாசிப்பு ரசனையுள்ள சிலர் போதும். இங்கோ மண்டபம் நிறைய மக்கள் இருப்பர். ஆனால் சில வேளைகளில் புத்தக விமர்சனம் செய்ய வந்தவரே உண்மையிலேயே புத்தகம் வாசித்திருப்பாரா என்னவோ என்ற சந்தேகம் கூட வரும். அந்த அளவிற்கு ஏதோ சம்பந்தமில்லாத விடயங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார், அல்லது விமர்சனத்துக்கும் விதப்புரைக்கும் வித்தியாசம் தெரியாது சும்மா அளந்து கொண்டிருப்பார். விமர்சனம் என்றால் நல்லதொரு விடயத்தை ஏன் நல்லது எனச் சொல்லி ஏற்கப்பட முடியாத விடயத்தை அல்லது முன்னேற வேண்டியதை எப்படிச் செய்யலாம் எனச்சொல்வது. இங்கோ யாவுமே முகமனுக்காக நடப்பவை.  பின்னர் அதுவரை பலதையும் பத்தையும் கதைத்துக் கொண்டிருந்த அனைவரும் வரிசையாக நின்று அன்பளிப்புக் கொடுத்து புத்தகத்தினை வாங்கிச்செல்வர், பின் புத்தகத்துக்கு என்ன நடக்குமோ என்பது வேறு விடயம். ஆனால் புத்தகத்துக்கு செலவழித்த பணம் அனேகமாகத் திரும்பி வந்துவிடும். இவையெல்லாம் அவை பணச்சடங்குகள் தான் எனச் சொல்லாமல் சொல்கின்றன. போகிற போக்கில் பார்த்தால் ஆண் குழந்தைகள் மட்டும் உள்ளோர் wet dream வந்ததைக் கொண்டாடலாம் என ஒரு புதுக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்தாலும் வியப்பதற்கு எதுவுமில்லை.

பெண்சமத்துவம் பற்றிப் பேசுவோர் கூட பெண் ஒரு இச்சைப் பொருள், அழகு படுத்தி கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்க வேண்டியவள், பிள்ளை பெறுவது தான் அவள் பிறப்பின் நோக்கம் எனும் பொருள்பட நடப்பதையோ; திருமணம் என்பது இரு மனங்களின் சேர்க்கை அதை அமைதியாக, உண்மையாக உள்ளம் நிறைய வாழ்த்துவோருடன் பகிர்வதில் பொருள் அதிகமுண்டு என நினையாதோரையோ; குழந்தையை வாட்டி நடுச்சாமம் வரை ‘பாட்டி’ என்ற பெயரில் குதிப்பது தான் பிறந்த நாள் கொண்டாட்டம் என்போரையோ சமுதாயமாக நாம் ஒன்று சேர்ந்து மாற்றுவது கடினம். ஆனால் இலக்கியம் வளர, தமிழ் வாழ நாம் சமுதாயமாக நின்று ஆவன செய்யலாம். இலக்கிய அமைப்புகள், எழுத்தாளர் இணையங்கள் என நின்று உயிப்புடன் செயலாற்றுவதன் மூலம் புத்தகங்களை வெளியிட்டு எழுத்தாளர்களுக்கு கெளரவம் கொடுக்கலாம், தரமான  புத்தகங்களை தெரிவுசெய்து உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்களுக்கு விற்பனை செய்யலாம். வானொலிகள் பத்திரிகைகள் நல்ல கட்டுரையை கதையைத் தெரிவுசெய்து ஒலிபரப்பி  பிரசுரித்து அதற்கு ஒரு ஊதியம் வழங்கலாம். இலக்கியத்துக்காக இலக்கியம் வளர்ப்பதும் தமிழ் வாழ வழங்கும் ஒரு சேவை தானே!

oooOooo
                         
 
ரஞ்சனி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |