Tamiloviam
நவம்பர் 08 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : அம்மா
- ஹஸ்தம் [hasthamm@gmail.com]
| | Printable version | URL |

பெண்ணின் பல பொறுப்புகளில் தாய்மை ஸ்தானம் சிறப்பு வாய்ந்தது. பத்து மாதம் கருவிலே சுமந்து, பிள்ளைப் பேற்றில் மறூஜென்மம் எடுப்பவள் தாய். பிள்ளை முகம் கண்டவுடன் அனைத்தையும் மறந்து
அணைத்துக் கொள்ளும் அன்பின் வடிவம். கருவறைச் சூட்டிலிருந்து வெளி வந்த குழந்தை அன்னையின் கதகதப்பில் தாயுடன் ஒண்டிக் கொள்கிறது. தாயிடம் பால் குடிக்க ,இன்னும் பிணைப்பு இறுக்கமாகிறது.தாயிடந்தான் மனித வாழ்க்கை தொடங்குகிறது.

"அம்மா, உன் விரல்களின் அசைப்பிலே,உன் குரலோசையிலே,உன் பேச்சுக்களிலே அது தெரிந்து கொள்வது எத்தனை எத்தனை.நீ சுட்டிக்காடுவதில்தான் உறவுகள் புரிகின்றன.உன் அன்பு அரவணைப்பில் தன்னம்பிக்கை பெறுகின்றது. வெளியுலகம் எட்டிப் பார்த்ததிலிருந்து உலகைப் புரிந்து கொள்ளும் முதற்பள்ளி நீதான். ஆறு வயதுக்குள் அது வாழும் பிள்ளைப் பருவம்தான் அதன் வாழ்க்கைக்கு அஸ்திவாரம். உன் கடமை தொடர்கின்றது. உன் குழந்தை நன்றாகக் கல்வி கற்று உறுதியான ஓர் இடத்தைப் பெற நீ பாடுபடுகின்றாய். அவனுக்கு நல்லதொரு துணை அமைவதில் அக்கறை காட்டுகின்றாய்.அவன் ஒருத்தியின் கை பிடிக்கும் பொழுது உன் கண்களில் நீர் ததும்புகிறதே, ஏன் அம்மா, உன்படைப்பிற்கு ஒருபாதுகாப்பைத் தேடிக் கொடுத்ததில் மகிழ்ச்சி நிறைந்த மன நிறைவின் வெளிப்பாடா? ஈன்ற பொழுதினும் மகனைச் சான்றோன் ஆக்குவதில் நீ பட்டபாடுகள் எத்தனை, எத்தனையம்மா. அதனால்தான் "தாயினும் சிறந்த கோயிலில்லை"என்ற புகழ்ப் பாட்டுக்குச் சொந்தக்காரியாகி விட்டாய்.'

இதுவரை தாயின் பெருமைகளைக் கூறினேன். எல்லோரும் அறிந்ததுதான். இனிமேல் கூறப் போவதைக் கேட்டு ஆத்திரம் கொள்ளாது சிந்திக்க வேண்டுகிறேன். தாய்மையின் பெருமைக்குச் சிறுகுறைகூட வரக்கூடாது என்ற ஆதங்கத்தில் மனம் விட்டுப் பேசுகிறேன்.

"இதென்ன நீண்டப் பிரசங்கம்"என்ற முணுமுணுப்பு கேட்கின்றது. நானும் ஓர் தாய்தான். நான் கண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குழந்தைப் பருவத்தில் அதிகமாகக் கேள்விகள் கேட்பார்கள். பெரியவர்களாகிவிட்டால் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை அறிந்து கொள்ளப் பல வழிகள் இருக்கின்றன. புதிய அனுபவங்களைத் தாயுடன் பகிர்ந்து கொள்ள விருப்புவார்கள். இந்த வயதில் என்ன தெரிய வேண்டுமென நினைப்பது சரியல்ல. மனித வாழ்க்கைப் பயணத்தில் முதல் ஆறு வருடங்கள் மிக மிக முக்கியமானவை. தாய் தன் குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டிய காலம் இது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப்
பதில் கூறவேண்டும். தெரியவில்லையென்றால், படித்தோ அல்லது கேட்டோ , அவர்களின் சந்தேகங்களைப் போக்க வேண்டும். பள்ளிக்குச் சென்று வந்த பிள்ளைகளிடம் அன்று நடந்த நிகழ்ச்சிகளைக்கேளுங்கள். தாய்தான் முதல் வழிகாட்டி. வீட்டில் குழந்தைகள் இருக்கும் பொழுது அர்த்தமுள்ள விளையாட்டுகள் சொல்லித் தரவேண்டும். முழு நேரம் உடன் இருக்க முடியாவிட்டாலும் அவ்வப்பொழுது வந்து பார்த்துக் கொள்ள வேண்டும். சாதாரண விளையாட்டகத் தெரியலாம். ஒவ்வொன்றிலும் அவர்கள் கற்றுக் கொள்பவைகள் இருக்கின்றன.

காலம் மாறிவிட்டது. பாதுகாப்பகச் சூழலில் சமுதாயம் இயங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது  பலமாயச் சூழல்கள். நாமும் அமிழ்ந்து விடாமல், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. சின்ன விஷயம் என்று ஒதுக்காமல் ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டு நடக்க வேண்டிய தருணம் இது. வீடுகளில் நடப்பதென்ன? ஆசையாய் விளையாட்டுக் கருவிகள்வாங்கிக் கொடுக்கிறோம்.  அவைகளை மொத்தமாகப் போட்டு "விளையாடட்டும்" என்று குழந்தயைத் தனியாக விட்டு விடுகின்றீர்கள் சின்னஞ்சிறு பருவத்திலியே உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்கின்றன. முதலில் அது ஒழுங்கு கற்றுக் கொள்ளும். மனிதன் இக்காலத்தில் கட்டுப் பாட்டிலிருந்து பறக்க விரும்புகிறான். மனித நேயம் குறைய ஆரம்பித்துள்ளது. பிஞ்சுப் பருவத்தில் இவைகளை விளையாட்டுகள் மூலமாகப் பதிய வைக்க வேண்டியது ஓர் தாயின் கடமை. உடன் இருந்து வழிகாட்ட வேண்டிய அம்மாக்களில் சிலர் நடந்து கொள்வது வேதனையைத் தருகின்றது. நான்கு வயதுக் குழந்தைகளை ட்யூஷனுக்கு அனுப்புகின்றார்கள். அந்த நேரம் டிவியில் சீரியல் பார்க்க வேண்டும். டீயூஷனில் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை. தாயின் அருகில் இருக்க வேண்டிய நேரம். அமெரிக்காவில் என் மகனுடன் செல்வன் என்ற ஓர் இளைஞன் வேலை பார்க்கின்றான். இரண்டு வருடங்கள் கழித்து அம்மாவைக் காணும் ஆசையில் தாயகம் வந்தான். பிரயாணக் களைப்பு தீர்ந்து கண்விழிக்க காலை பதினொன்று மணியாகி விட்டது. அவனுடைய அம்மாவைத் தேடினான்.

டிவி முன்னல் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். மகன் வருவதைப் பார்த்தவுடன்,"செல்வம், காபி பிளாஸ்கில் வச்சிருக்கேன். உனக்குப் பிடிச்ச பொங்கல் செய்து ஹாட் கேசில் வச்சிருக்கேன். இப்பொ டிவியிலே முக்கியமான காட்சி கண்ணா பாத்துட்டு வரேன்" என்றாள். செல்வம் அதிர்ந்து போய்விட்டான். இரண்டு வருடங்கள் கழித்து வந்திருக்கும் மகனைவிட கற்பனைப் பாதிரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய அம்மாவைக் கண்டு திகைத்துப் போய் விட்டான். "ஏதோ ஒரு பொழுதுபோக்கில் கவலைகளை மறக்கிறோம். இதுகூட தப்பா?" என்று முணுமுணுப்பின் சத்தம் கேட்கிறது. பாசத்தை அமுக்கும் அளவுக்கு இந்த உணர்வைச் செல்லவிடலாமா?டிவி பார்க்க வேண்டாம் என்று கூறவில்லை. முதலில் பிள்ளைகள், குடும்பம் ஆகியவற்றைக் கவனித்துவிட்டுப் பார்க்கலாம்.

எதிலும் அதிகம் மோகம் வைப்பது சரியல்ல. பிள்ளைகள் பெரிதானபின் வரும் பிரச்சனைகளைப் பார்ப்போம். சரஸ்வதி அரசாங்கத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தாள். அவள் சீமந்தப் புத்திரன் கண்ணன்.
தாய் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான். இன்ஜினீயரிங் படித்துவிட்டு நல்ல உத்தியோகத்தில் இருந்தான். அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்தாள் சாந்தா. பெயரைப்போலவே சாந்தமானவள்.
வந்த சில நாட்களில் மாமியாரின் கொடுமை ஆரம்பமானது. சரியாகச் சீர்கள் கொண்டு வரவில்லை என்று குத்திக் காட்டிப் பேச ஆரம்பித்தாள் சரஸ்வதி. சாப்பாட்டு விஷயத்தில் கூட கட்டுப்பாடு. போகப்
போகக் கொடுமைகள் வளர்ந்தன. திடீரென்று ஒரு நாள் "உங்கள் பெண்ணுக்கு உடம்பு சரியில்லை. வியாதிக்காரப் பொண்ணை என் பையன் தலையில் கட்டிவிட்டீர்கள். சரியாக்கி அனுப்புங்கள்" என்று சாந்தாவின் அம்மாவிடம் பேசிவிட்டு , அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டாள். சாந்தாவின் அம்மா பிரச்சனை என்னவென்று புரிந்து கொண்டுவிட்டாள். மகளை டாக்டரிடமும் கூட்டிப்போய்க் காண்பித்தாள். உடலில் நோய் எதுவும் இல்லை. மாமியாரின் சுடுசொற்கள் அவள் மனத்தை ஓரளவு பாதித்திருந்தது. மகளுக்குத் தைரியம் கூறினாள். போகப் போகச் சரியாகிவிடும் என்றாள். சில நாட்கள் வைத்திருந்து சீர்வகைகளுடன் கொண்டுபோய் விட்டாள். சரஸ்வதியின் பேராசைக்கு அது போதவில்லை. இன்னும் அதிகமாகக் கொடுமைப் படுத்தினாள். கண்ணன் எல்லாவற்றிலும் ஒதுங்கி இருந்தான். சாந்தா உள்ளுக்குள்லேயே புழுங்கியதில் அவள் மனம் உண்மையில் அதிகமாகப் பாதித்துவிட்டது. எதற்கும் ஒரு குழப்பம். பேச்சிலும் முரண்பாடு. சரஸ்வதிக்குக் காரணம் கிடைத்துவிட்டது "உங்கள் பெண்ணுக்குப் பைத்தியம் : என்று பழி கூறி சாந்தாவைப் பிறந்தகம் அனுப்பிவிட்டாள். கண்ணனால் தாயை எதிர்த்துப் பேச முடியாது. அவனும் அடங்கிப் போனான். கல்யாணமாகியும் பிரம்மச்சாரியாக வாழ ஆரம்பித்தான். சாந்தாவோ மனம் பேதலித்து வாழாவெட்டியாய் பிறந்த வீட்டில் வாழ்ந்தாள். சரஸ்வதியும் ஓர் அம்மாதான். ஆனால் அவள் கல் மனம் அவளைத் தாயாக நினைக்க முடியவில்லை.

காயத்ரியை எனக்குப் பிடிக்கும். வயதில் சின்னப் பெண். சிந்தனையில் முதிர்ச்சி. அவள் தாயார் செல்லம். சோதிடப் பித்து அதிகம். ஏதாவது ஒன்று நடந்தால் சாமியார் யாரையாவது பார்க்கச் சென்று விடுவாள். மகளுக்கு மாப்பிள்ளை தேடி அலைந்தாள். ஜாதகப் பொருத்தம் அமையவில்லை. எப்படியோ ஒரு பையனைப் பார்த்துவிட்டாள். வரவேற்பு தினத்தன்று மாப்பிள்ளை வீட்டார் யாரும் வந்து சேரவில்லை. நேரமாக ஆக கல்யாண வீட்டில் குழப்பம். ஆளை அனுப்பி பார்த்ததில் மாப்பிள்ளை வீடு பூட்டிக் கிடந்தது. நல்ல வேளையாக மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தனர். தாமதத்திற்கு ஏதோ காரணமும் கூறினார்கள். திருமணம் முடிந்து முதல் இரவும் வந்தது.

காயத்ரீ வந்தவுடன் அவளை உட்கார வைத்தான் அவள் கணவன் சாமிநாதன்.அவன் முகத்தைப் பார்த்த பொழுது அவள் உள்ளுணர்வு எதோ சொல்லிற்று. அவள் அமைதியைப் பார்த்த சாமிநாதன் "என் மேல் கோபமா? நீ இனிமேல் எங்கள் வீட்டுப் பெண். உனக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நேற்று நாங்கள் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தோம்.என் அண்ணன் வேலை பார்த்த இடத்தில் பணம் கையாடிவிட்டான்.பணம் புரட்டிக் கொடுத்துச்சமாதனம் செய்ய வேண்டி வந்து விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் வாங்கிய கடனைக் கொடுக்க வேண்டும். உன் நகைகளை நம்பி வாங்கி விட்டேன். உன் வீட்டுக்குத் தெரியாமல் நீ நகைகளைக் கொடு. சீக்கிரம் திருப்பி விடுவோம். பணம் வாங்கிக் கொடுத்து அண்னனை மீட்டால்தான் திருமணத்திற்கு வருவோம் என்று அம்மாவும் அக்காவும் கூறினார்கள்."என்று சொல்லிவிட்டுத் தலை குனிந்தான். காயத்ரி பேசாமடந்தையாகி விட்டாள். இனிப்பாக இருக்க வேண்டிய முதல் இரவு அவளுக்குக் கசப்பாகிவிட்டது. அவளுக்குத் தன் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பது புரிந்து விட்டது. கணவன் வீட்டிற்குச் சென்றவுடன் அது ஒரு நரகம் என்பதும் புரிந்தது. சாமிநாதனின் தாயாரும் அவன்சகோதரியும் தடம் புரண்ட வாழ்க்கை நடத்துவதும் தெரிந்தது. காயத்ரீ தன் கணவனுடன் தனிமையாகப் பேசக்கூட முடியாது. குடித்துவிட்டு வந்து அடிப்பான். நகைகள் எல்லாம் பறிபோயின. அவள் அமைதியைத் தப்பாகப் புரிந்து கொண்டான். மக்கு என்று நினைத்து ஒருநாள் பிறந்த வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச் சொல்லி அனுப்பினான்.பிறந்தகம் வந்த காயத்ரி மீண்டும் திரும்பி கணவன் வீட்டிற்குச் செல்லவில்லை. விவாகரத்து முடிவிற்கு வந்து விட்டாள் மாப்பிள்ளை பார்க்கும் பொழுது நன்றாக விசாரித்துப் பெண் கொடுக்க வேண்டும். ஓர் தாய்க்கு
அறியாமை இருக்ககூடாது.

உள்ளூரில் பெண் கொடுத்து , அந்தப் பெண் வாழாவெட்டியாய் வருவதற்குக் காரணமான தாயும் உண்டு. புகுந்த வீட்டுகுப் போகும் புதுப் பெண்ணிற்கு முதலில் கொஞ்ச நாட்கள் கஷ்டமாக இருக்கும். இரண்டு குடும்பங்களின் பழக்கங்களும் வித்தியாசமானதாக இருக்கலாம். கொஞ்சம் அனுசரித்துப் போனால் எல்லாம் பழகிப்போகும். தாயார் தான் இதனைத் தன் பெண்ணுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். பதிலாக, தன் பெண் கொடுமைப் படுத்தப் படுகிறாள் என்று நினைத்து மகளை மேலும் குழப்பிப் பயப்பட வைத்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை தோல்வியில் தான் முடியும். தாய் காட்டும் அதிக அக்கறை, வழிகாட்டலுக்குப் பதிலாக மகளைப் புறங்காட்டி பிறந்தகம் வரச் செய்துவிடும். இது  ஓர் தாயின் அசட்டுத்தனம்.

அம்மா எனப்படுபவள் தியாகத்தின் திருவுருவம்..அவளிடம் சுயநலம் தோன்ற ஆரம்பித்துவிட்டது என்பது, குடும்ப அமைதிக்கு ஓர் அபாய எச்சரிக்கையாகத் தெரிகின்றது. .நம் நாட்டில் நடுத்தரக் குடும்பங்கள், அதற்கும் பொருளாதார நிலையில் கீழ்நிலையில் இருப்பவர்கள் அதிகம்.வீட்டில் மூத்த பெண் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டால், அவள் திருமணத்தில் அக்கறை காட்டப் பயப்படுகிறாள் தாய். பின்னல் வருபவர்கள் படிப்பிலும், ஏன் அவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் மூத்தவள் வீட்டில் தங்கிவிடும் அவல நிலை பல குடும்பங்களில் பார்க்கிறோம். இதைவிடக் கொடுமை, பிள்ளைகள் அதிகமாகச் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் பெற்றோரில் பலர் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி விடுகின்றனர்.

எனக்குத் தெரிந்த பையன் தினேஷ். அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அவனுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும். அவன் பணம் அனுப்ப அனுப்ப, முதலில் அவன் அப்பா "உடம்புக்கு முடியவில்லை" என்று வேலையை விட்டார். மற்ற பிள்ளைகளும் படிப்பு முடிந்து வேலை பார்க்க ஆரம்பித்தனர். வீடு வாங்கினார்கள். கார் வாங்கினார்கள். அடிக்கடி ஹோட்டலுக்குச் சென்றார்கள். தினேஷ¤க்குப் பெண்பார்ப்பதாகக் கூறிக்
கொண்டு ஊர் சுற்றினார்கள். அவன் அப்பா மட்டுமல்ல, தாயும் அப்படி அமைந்ததுதான் கொடுமையானது. பத்திரிககளிலும் படிக்கிறோம். மகள், சினிமா, டிவி, அவைகளில் நடிகையாகவோ அல்லது மாடலிங்
தொழிலிலோ சென்றால் பெண் நிறையச் சம்பபாதிக்கலாம் என்று தாயே நினைக்கிறாள். சம்பாதிக்க ஆரம்பிக்கவும் படாடோப வாழ்க்கையில் தாயே மாறிவிடுவதையும் காண்கிறோம். பெண் யாரையாவது
காதலித்து விட்டால் , அதற்குப் பெரிய எதிர்ப்பு தாயிடமிருந்துதான் கிளம்புகிறது. பெண்ணோ தனக்கு வாழ்க்கை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வதையும் பத்திரிகைகளில் பார்க்கிறோம். இந்த மாற்றங்கள் நம் உள்ளங்களை நடுங்க வைக்கின்றது.

நான் கூறிய நிகழ்ச்சிகள் கற்பனையல்ல. பலரும் எனக்கு நேரிலே அறிமுகமானவர்கள். பல பிரச்சனைகளில் நான் தலையிட்டு சீர் செய்திருக்கிறேன். சில நான் இல்லாத நேரங்களில் நடந்தவைகள். இதுபோன்ற தாய்மார்கள் ஒரு சிலர்தான். ஆனால் இது வேகமாகப் பரவி வருவதைப் பார்க்கவும்தான் இதனை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.படித்துவிட்டுப் பதட்டப் படுவதைவிட எல்லோரும் சரியாகச் சிந்திப்பது நல்லதல்லவா?

"அம்மா, பாசமும், பரிவும், கனிவும் கொண்டவள் நீ. உன்னிடம் இந்தக் குறையில்லையென்றால் இறைவனுக்கு நன்றி செலுத்து. இந்த சுயநல நோய் வராமல் இருக்கப் பிரார்த்தனை செய்.  இந்த நோயாளியைக் கண்டால் திருத்த முயற்சி செய். இதுவும் உன் கடமை. நானும் ஓர் அம்மாதான். அம்மா, உன்னிடம் ஒரு வேண்டுகோள். வீட்டைவிட்டுப் புறப்படும் முன்னர், குழந்தைகள் முதல் எல்லோரும் ஸ்வாமி படத்தின் முன் நின்று வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற பழக்கத்தை மீண்டும் நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இறைவழிபாடுதான் மனித நேயத்திற்கும், கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் உதவி செய்யும். மாற்றங்கள் எதில் நிகழ்ந்தாலும் தாய்மையின் முழுமை பாது காக்கப் படவேண்டும். நல்ல நோக்கத்தில் கூறியவைகளை நீ புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எப்படியெனில், நீ அம்மா"

oooOooo
                         
 
ஹஸ்தம் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |