Tamiloviam
நவம்பர் 22 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : நன்றி நவில ஓர் நாள்
- ஆல்பர்ட் [albertgi@gmail.com]
| | Printable version | URL |

 

"எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"

 
இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய்   மலர்ந்தருளிய வேதமிது. 

"பரிதியே பொருள்யாவிற்கும் முதலே" என்கிற முறுக்கு மீசைக்காரக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப்படலில் குறிப்பிட‌ப்ப‌டுவ‌து போல‌ அறுவ‌டைத் திருநாளை , க‌திர‌வ‌னை முத‌ன்மைப்ப‌டுத்தி வ‌ண‌ங்குத‌லை த‌மிழ‌க‌த்தில் எப்ப‌டித் த‌மிழ‌ர்க‌ள் க‌டைப்பிடிக்கிறார்க‌ளோ அதுபோல‌ , அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி சொல்ல ஒதுக்கியிருக்கிறார்கள். அதுக்காக மத்த நாள்ல அமெரிக்கர்கள் நன்றி சொல்ல மாட்டாங்களா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.   
 
அறிமுகமில்லாத ஒரு அமெரிக்கர் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டால் ஹலோ... ஹாய் என்பார்கள். எப்படி இருக்கிறீர்கள் ? என்றெல்லாம் கூட விசாரிப்பதும், உதவி என்ற வகையில் அல்லாமல் ஒரு சாதாரண தகவலைச் சொன்னால் கூட நன்றி என்று நாலு முறை நாவலிக்காமல் சொல்லுகிறவர்கள் அமெரிக்கர்கள்.
 
ஆனால், த‌மிழ‌ர்க‌ள், அந்த‌வ‌ருட‌ விளைச்ச‌லுக்குத் துணைபுரிந்த‌மைக்கு ந‌ன்றிகூறியும், எதிர்வ‌ரும் ஆண்டில் ந‌ல்ல‌ விளைச்ச‌லைத் த‌ர‌வேண்டியும் பொங்க‌ல‌ன்று முத‌ல்வ‌ணக்க‌த்தை சூரிய‌னுக்குச் செலுத்துவார்க‌ள். துவக்கத்தில் அமெரிக்க‌ர்கள் ந‌ன்றிந‌வில‌ல் நாள் என்று கொண்டாடிய‌தும் இதே க‌ருத்தில்தான்.   கால‌ப்போக்கில் இன்று சிற்சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் உற்சாக‌ம் குறையாம‌ல் கொண்டாடுகிறார்க‌ள். எப்ப‌டி என்று பார்ப்போமா?
 
வருசம் முழுக்க எங்களுக்காக உழைச்சீங்க, உங்களுக்கு எங்கள் நன்றிகள்! முதலாளிகள் , தொழிலாளிகளுக்கும்; நிர்வாகம் தங்கள் ஊழியர்களுக்கும் ; ஒருவருக்கொருவர் நன்றி பரிமாறிக்கொள்ளும் நன் நாளாக , ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமை அனுசரிக்கப்படுகிறது.
 
இன்றைக்கு அமெரிக்கா முழுமைக்கும் இந்த நன்றி நவிலப்படுகிறதற்கு காரணம் யார் ?
 
இங்கிலாந்து...! ஏன்?


இங்கிலாந்து
 
1600களில் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் அந்த நாட்டை ஆண்டுவந்த அரசனின் இரும்புப் பிடிகளுக்குள் சிக்கித்தவித்தது. இப்படித்தான் வழிபடவேண்டும்; மதச் சடங்குகள் இன்னின்னபடிதான் நடைபெறவேண்டும்; பிறப்பாயிருந்தாலும், இறப்பாயிருந்தாலும் அரசகட்டளைப்படிதான் நடக்கவேண்டும், என்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது. ஒரு சாரார் அரச கட்டளைக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டு வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகினர். தங்களுக்கு விருப்பமான முறையில் கடவுளை வணங்கமுடியவில்லையே என்று எண்ணியவர்கள் ரகசியமாக திட்டம் தீட்டி இங்கிலாந்தைவிட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தனர். இவர்கள் "புரிடான்ஸ்" ( puritans) என அழைக்கப்பட்டனர். மத சுதந்திரம் வேண்டி, தங்கள் தாயகத்தை விட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக, "ஸ்பீட் வெல்" மற்றும் "மே · ப்ளவர்" என்ற இரண்டு கப்பல்களில் இலக்கு இல்லாத தங்கள் பயணத்தை (செப்டெம்பர் ,1620 ம் ஆண்டு) துவங்கினர். உணவு , துணி, ஆயுதம் , விவசாயக் கருவிகள், விதைகள் என்கிற சேகரிப்புகளோடு நிரந்தரமாகப் புலம் பெயர்ந்துவிடுகிற முயற்சியாகப் பயணித்தனர்.
 
கனவு பூமி
 
ஏதோ ஒரு துணிச்சலில் குழந்தை குட்டிகளோடு 1620 ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் ஆறாம் தேதி 102 பயணிகளுடன் 32 குழந்தைகள் உடபட கிளம்பிய அவர்களுக்கு இன்ன இடத்துக்குத்தான் போகிறோம் என்கிற உறுதியில்லாமல் கப்பல் போன போக்கில் பயணித்தனர்! கடற்பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. நிலம் காணா நீர்ப்பரப்பு நீண்டு கொண்டே போக , கடல் நோய் கண்டு பலர் தங்கள் கனவு நிறைவேறாமலேயே மாண்டுபோயினர். கடற்பயணத்திலேயே இரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
Plymoth rockபல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர்கள் வந்து சேர்ந்த இடம் அமெரிக்காவின் மஸாச்சுசெட்ஸ் மாநிலத்தின் வடக்கு கேப் காட் நகரின் ப்ளைமவுத் பகுதியாகும். கனவுப் பூமியில் கால் பதித்த நேரம் (டிசம்பர் 11ம் தேதி) உடலை ஊடுருவி உள்ளெலும்பைக் குளிர வைக்கிற டிசம்பர் குளிர்; பயணக்களைப்பு, பழக்கமில்லாத சீதோஷ்ண நிலை என அவர்களில் பலர் பலியாக நேரிட்டது. ப்ளைமவுத்தில் கால் பதித்ததும் அங்கிருந்த ஒரு கல்லில் அவர்கள் கால் பதித்த வருடத்தை பதிவு செய்து வைத்தனர். இன்றும் அது காணக் கிடைக்கிறது. 
 
எஞ்சியிருந்தோர், கனவுகள் கலைந்து , எதிர்காலம் இருண்ட கவலை சூழ, நம்பிக்கைகள் பொய்த்துப் போன நிலையில் அவர்களுக்கு விடிவெள்ளியாக , 'ஸ்குவாண்டோ ' என்ற அமெரிக்கர் தனது சகாக்களோடு உதவ முன் வந்தார். புதிய சுற்றுச் சூழலில் தங்களைக் காத்துக் கொள்ள , வாழ்வை எதிர்கொள்ள வழி முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். அநேக விஷயங்களை பூர்வீக அமெரிக்கர்களிடம் கற்றுக்கொண்டனர். அமெரிக்கச் சூழலுக்கு ஏற்றவாறு எப்படி விவசாயம் செய்வது ? விஷத்தன்மை வாய்ந்த பயிர்கள் எது? முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்திக்கு என்ன முறைகளை கடைப்பிடிப்பது ? வேட்டையாடுவதற்கான சிறந்த வழிமுறைகள் எது? போன்றவற்றைக் கற்றுக் கொண்டனர்.

ஸ்குவாண்டோ
 
 " ஸ்குவாண்டோ " தனது நண்பர்கள் , உறவினர்கள் அனைவரையும் இவர்களுக்கு உதவச் செய்தார். இவர்களுக்கு மீனைச் சாப்பிட மட்டும் கொடுக்காமல் மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். இது அவர்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. மண்ணின் மகிமைக்கு ஏற்றவாறு பயிர் செய்தனர் ; மக்காச் சோளம் பொன் போல் விளைந்தது; மிகப் பெரிய பூசணி மற்றும் காய்கறி , பழவகைகளை பயிரிட்டனர். ' டர்க்கி ' எனப்படும் காட்டு வான்கோழிகளை வளர்த்து உணவுக்குப் பயன் படுத்தினர். இங்கிலாந்திலிருந்து கையோடு கொண்டுவந்த விதைகள் பல இந்த மண்ணில் முளைக்கும் சாத்தியமற்றுப் போனாலும் அமெரிக்கர்களின் அன்பான உதவியாலும் வழி காட்டுதலாலும் கடின உழைப்பால் கற்பாறை நிலங்களை பொன்கொழிக்கும் பூமியாக மாற்றினர்.

 
அறுவடைத்திருவிழா
 
அறுவடைக்காலம் வந்தது; அதாவது 1621ம் ஆண்டு அவர்களுக்கு கிடைத்த செழிப்பான பூமி விளைச்சலால் அகமும் முகமும் ஒருசேர மகிழ்ந்து அதைச் சிறப்பாக கொண்டாட எண்ணினர். புதிய பூமியில் அவர்களுக்கு வழிகாட்டிய அமெரிக்கர்களை கெளரவிக்க விரும்பினர். அபரிமிதமான விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்ததற்கும் , தங்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஒளியை எண்ணெய்யும் திரியுமாக இருந்து உதவிய அமெரிக்கப் பேருள்ளங்களை மகிழ்விக்க மூன்று நாட்கள் விருந்தை ஏற்பாடு செய்தனர். எப்படி இங்கிலாந்து தேசத்தில் அறுவடைத் திருநாளை பரம்பரை பரம்பரையாகக் கொண்டாடுவரோ அதைப்போலக் கொண்டாடினர்.
 
உற்சாக ஷாம்ப்பெய்ன்

First Thanksgivingஇங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்குத் தலைவராக இருந்த "கேப்டன் மைல்ஸ் ஸ்டாண்டிஷ் ," வெனிசன் என்ற மான்கறி, ருசிமிக்க காட்டு வான்கோழி , காட்டுப் பறவைக்கறி வகைகள், விதவிதமான மீன்வகைகள், பழங்கள், பூசணி, வெள்ளரிக்காய் , கார்ன் (மக்காச் சோளம்) இனிப்பு உருளைக்கிழங்கு, க்ரான்பெர்ரீஸ் பழங்கள் என்று தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்தார். 
 
வாழ வழிகோலியவர்களுக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் வகையில், அவர்களுக்கான விருந்தை விமரிசையாகப் படைத்தனர். இவ்விருந்திற்கு ஸ்குவாண்டோ, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மூன்று நாட்கள் நடை பெற்ற இந்த நன்றித் திருவிழாவில் விளையாட்டு , கேளிக்கைகள், நடனங்கள் என அமெரிக்கர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர். மூன்றாம் நாள் விசேஷ மதுபானவகைகளுடன் "பம்ப்கின் பை"எனப்படும் பூசணி கேக் வெட்டி , ஷாம்ப்பெய்ன் பாட்டில்கள் உற்சாகமாய் பொங்கித் திறக்க, உல்லாசப் பொழுதாகிப்போனது. 
 
அன்றிலிருந்து "தாங்க்ஸ் கிவ்விங் டே" மெனுக்களில் இன்றுவரை பெரிய மாற்றம் ஏதுமின்றித் தொடர்கிறது!
 
1621ம் ண்டு நடைபெற்ற நன்றித் திருநாள் ,"First Thanks Giving Day". தொடர்ந்து இது அமெரிக்காவின் பட்டி தொட்டி, நகரம் எங்கும் நன்றி நவில்கிற விருந்து....... வருடம் தவறாமல் நடந்தது.
 
1789ல் அமெரிக்காவின் அதிபர் ஜியார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம்நாள் தேசியவிடுமுறை தினம் என்று அறிவித்தார்.  அதன்பிறகு வந்த அதிபர்கள் நம்ம ஊர்
அரசியல் பாணியில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து அறிவித்தார்கள். இறுதியாக அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஆண்டுதோறும் நவம்பர் கடைசி வார வியாழக்கிழமை தேசிய விடுமுறை நாள் என்று அறிவித்தார். இருந்தபோதும் 1939ம் வருடம் அதிபர் ரூஸ்வெல்ட் நவம்பர்மாதத்தின் நான்காம் வியாழக்கிழமை காங்கிரஸ் மகாசபையின் ஒப்புதலுக்கு வைத்து 1941ல் ஒப்புதலை அளித்தது.
 
இன்று
 
உறவினர்களும் நண்பர்களும் அவரவர் பகுதியில் உள்ள சமூகக் கூடங்களில் கூடி மன மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றனர். குடும்பங்கள் , நண்பர்கள், அண்டை அயலார், தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடின்றி பொதுவிருந்தில் கலந்துகொள்கின்றனர். சந்தோசங்களில் சங்கமித்துப் போகின்றனர். வெளியூர் மற்றும் அண்டைமாநிலங்களில் உள்ள உறவினர் , நண்பர்களுக்கு வாழ்த்து அஞ்சல் அட்டைகளை அனுப்பித் தங்கள் எண்ணக் கிடக்கைகளை - நன்றியை வெளிப்படுத்துகின்றனர்.
 
அலுவலகங்களில் வேலை பார்ப்போர் அலுவலக வளாகங்களிலோ அல்லது ஹோட்டல்களில் விருந்து உண்டு பரிசுப் பொருட்கள் அளித்து மகிழ்கின்றனர். இந்த நாளில் எல்லோர் இல்ல விருந்துகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது "டர்க்கி" எனப்படும் வான்கோழி.
 
இல்லங்களில் விருந்து உண்ணும் முன் பிரார்த்தனைக்கு கூடுவது போல கூடத்தில் கூடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நன்றியை சொல்லுவார்கள். அது 5 வயதுச் சிறுமியாகயிருந்தாலும் 60 வயது பாட்டியாக இருந்தாலும் , "இந்த வருடத்தில் இன்ன நன்மை கிடைக்கச் செய்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன் ," என்று நினைவுகூர்வது முக்கிய அம்சமாக இடம் பெறும். அதன் பின் விருந்திலும் பங்கு பெறுவார்கள்.
 
தங்களுக்கு உதவி செய்தவர்கள் இல்லத்துக்குநேரில் சென்று தங்கள் நன்றியை தெரிவிப்பதோடு பரிசுகளும் அளித்து தங்கள் நன்றியை வெளிப்படுத்துவார்கள். தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகளின் முடிவில் சிறப்பு விருந்துண்டு மகிழ்கிறார்கள். பெரும்பாலான அலுவலகங்களில் தமது ஊழியர்களுக்கு "கி · ப்ட் சர்டிபிகேட்"டை பரிசாக வழங்கி கெளரவிக்கின்றனர். பள்ளிகளில், கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி நன்றிதனை விருந்தோடு பரிமாறிக் கொள்ளுகின்றனர்.
 
ஆதரவற்றோருக்காக பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்கள் இந் நாளில் பொது விருந்து ஏற்பாடு செய்கின்றனர். பெரிய , பெரிய உணவு விடுதிகள் கூட பாரம்பரியவிருந்தான வான்கோழிக் கறி சமைத்து ஏழைகளுக்கு அன்று மதியம் இலவசமாக வழங்குகிறார்கள். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவுடன் சிறு பரிசுகள் அல்லது ஐந்து டாலர் பணமும் வழங்குவதைக் காணலாம்.

பேர‌ணி
                                                                                                     
Macys ParadeMacys மேஸீஸ் ப‌ல்பொருள் பேர‌ங்காடி நிறுவன‌ ஊழிய‌ர்க‌ள் நியூயார்க்கில் 34 வ‌து தெருவில் ந‌ன்றிந‌வில‌ல் பேர‌ணியை முத‌ன்முத‌லில் 1924 ல் ந‌ட‌த்தின‌ர். வித‌வித‌மான‌ க‌ண்க‌வ‌ர் உடைக‌ள‌ணிந்து பேர‌ணியில் வ‌ந்த‌ன‌ர். சென்ட்ர‌ல் பார்க் மிருக‌காட்சிசாலையிலிருந்து வில‌ங்குக‌ளையும் ப‌ங்கேற்க‌ச் செய்த‌ இந்த‌ப் பிர‌ம்மாண்ட‌ப் பேர‌ணியைக் க‌ண்டு ர‌சிக்க‌ 25ஆயிர‌ம்பேர்க‌ளுக்கு மேல் சாலையின் இருமருங்கிலும் கூடின‌ர். கிறிஸ்ம‌ஸ் வ‌ருவ‌த‌ன் அறிகுறியை வெளிப்ப‌டுத்தும்வித‌மாக‌ பேர‌ணியின் முடிவில் சாண்டா கிளாஸ் தோன்றுவ‌தோடு பேர‌ணி நிறைவுறும். இந்த‌ப்பிர‌ம்மாண்ட முதல் பேர‌ணியை மேஸீ ' ஸ் உரிமையாளர் லூயிஸ் பேம் பெர்க‌ர் துவ‌க்கிவைத்தார். வெற்றிக‌ர‌மாக‌ ந‌டைபெற்ற‌ இந்த‌ப்பேர‌ணியை ஒவ்வொருவ‌ருட‌மும் ந‌ட‌க்கும் பேர‌ணியாக‌ ந‌ன்றிந‌வில‌ல் நாள‌ன்று ந‌டத்திடுவோம் என்று அறிவித்தார்.   1928ம் ஆண்டு முத‌ல் ஹீலிய‌ம் வாயுவால் நிர‌ப்ப‌ப்பெற்ற‌ பிர‌ம்மாண்ட‌ ப‌லூன்க‌ளை வானில் ப‌ற‌க்க‌விட்ட‌ன‌ர். எதிர்பாராத‌வித‌மாக‌ ம‌ன்ஹ‌ட்ட‌ன் , ஸ்கைவேயில் வெடித்து விப‌த்து ஏற்ப‌ட்ட‌து. 1929ல் பாதுகாப்பு வால்வுக‌ள் பொருத்த‌ப்ப‌ட்ட பலூன்கள் ப‌ல‌நாட்க‌ள் வானில் ப‌ற‌க்க‌விட‌ப்ப‌ட்ட‌து. 1934ல் மேஸீ ' ஸுக்கும் வால்ட் டிஸ்னிக்குமிடையே ஏற்ப‌ட்ட‌ புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்தில் முத‌ன்முறையாக‌ மிக்கிம‌வுஸ் ப‌லூன் பேர‌ணியில் ப‌ங்கேற்ற‌து.
1942-1944 மூன்று வ‌ருட‌ங்கள் யுத்தம் தொடர்பாக‌ பேரணி ந‌டைபெற‌வில்லை. 1945லிருந்து தொட‌ர்ந்து ப‌ல்வேறு பேர‌ணி பாண்டுவாத்தியக்குழுக்கள் , நடனக்குழுக்கள் , கோமாளிகள் குழுக்கள் போன்ற ப‌ங்கேற்பாள‌ர்க‌ளோடு திட்ட‌மிட‌ப்ப‌ட்டு வெற்றிக‌ர‌மாக‌ இந்த‌ப்பேர‌ணி 80வது தடவையாக இந்தாண்டும் ந‌டைபெறுகிற‌து. அன்றிலிருந்து இன்றுவ‌ரை நியூயார்க் ந‌க‌ரில் இந்த‌ப் பிர‌ம்மாண்ட‌ப் பேர‌ணி ஒவ்வொருவ‌ருட‌மும் ந‌ட‌க்கிற‌து.   ஊர்வ‌ல‌த்தில் பிர‌ம்மாண்ட‌ இராட்ச‌ச‌ உருவ‌ ப‌லூன்க‌ள் இட‌ம்பெறுவ‌து வ‌ழ‌க்காமாக‌ இருந்துவ‌ருகிற‌து.  அமெரிக்காவின் ப‌ல்வேறு மாநில‌ங்க‌ளிலிருந்து ஆண்டு தோறும் ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் பொதுமக்கள் கல‌ந்துகொள்வ‌து இத‌ன் கூடுத‌ல் சிற‌ப்ப‌ம்ச‌மாகும்!

இப்போதெல்லாம் ந‌ன்றிந‌வில‌ல் பேர‌ணி நியூயார்க் ம‌ட்டும‌ல்லாம‌ல் ப‌ல்வேறு நக‌ர‌ங்க‌ளில் ந‌டைபெறுகிற‌து.
இந்த ஆண்டு மேஸீ' ஸ் பேரணி குறித்த தகவல் வேண்டுமா ? அழுத்துங்கள் இங்கேஸஸ
 
http://www.macys.com/campaign/parade/parade.jsp
 
நன்றி நவிலல் நாள் வரலாற்றை ஒரு ஒளிப்படமாகப் பார்க்க ஆசையா ? இந்தச் சுட்டியை அழுத்துக:-
 
http://www.history.com/minisites/thanksgiving/
 
 
பசித்தே கிடந்த வயிறு புசித்த பின் மன நிறைவாக இதயப்பூர்வமாக பூக்கிற "நன்றி"யும் இந் நாளில்தான் என்றால் அது மிகையில்லை!
 
 
கொசுறுத் தகவல்கள்
 
* அமெரிக்காவில் நன்றி நவிலல் தினத்திற்காக தம் குடும்பத்தோடு சேர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இடம்விட்டு இடம் பெயர்கிறவர்கள் பல மில்லியன் பேர்களாகயிருப்பார்கள். 
 
* இந்த குளிர்கால இரவு நேர தரைவழி பயணிப்போருக்கு சாலைகளைக் கடக்கும் "மான்கள்" பெரும் சவாலாக இருக்கக் கூடும் என்பதால் ஓட்டுனர்கள் வேகக்கட்டுப்பாட்டில் மிகுந்த எச்சரிக்கையாகச் செல்லவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
* போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் நீங்க‌ள் போகும் வ‌ழிக‌ளில் எப்ப‌டி இருக்கிற‌து. மாற்றுவழி உண்டா ? காரை ஓட்டிக்கொண்டே தெரிந்துகொள்ள‌வேண்டுமா? இதோ இந்த‌ நொடியில் தெரிந்துகொள்ள‌ டோல் ஃப்ரீ எண்ணை அழையுங்க‌ள் !  1-866-698-7232‌
 
* அமெரிக்காவில் நன்றி நவில்கின்ற நாளில் மட்டும் 100,000 விபத்துக்கள் நிகழ்வதாக ஒரு ஆய்வு கூறுகின்றது.

|
oooOooo
                         
 
ஆல்பர்ட் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |