டிசம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : அசிங்கங்களும் திரும்பினால்...?
- பாபுடி [rajputh61@rediffmail.com]
| | Printable version | URL |

'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையிலே வை ' என்கிற கணக்காய்,  ஆக வேண்டியது எவ்வளவோ கிடக்க,  தமிழகத்தில் சிலை விவகாரம் இப்போது சந்தி சிரிக்கிறது.

Ragav_temple_moolasthanam.திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோயில் தெற்கு ராஜகோபுரத்துக்கு எதிரே  தந்தை ஈ.வெ.ரா. பெரியார் சிலையை வைப்பது தொடர்பாக திராவிடர் கழகத்துக்கும் உள்ளூரை சேர்ந்த இந்து அமைப்புகளுக்குமிடையே பிரச்னை சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஆனால், எதிர்ப்பையும் மீறி அதே இடத்தில் பெரியார் சிலைக்கு  இந்த டிசம்பர் 9ம் தேதி திறப்புவிழா நடத்துவதென தி.க.,வினர் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு 2 நாளைக்கு முன்பே அதாவது கடந்த 7ம் தேதி பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தப்படுத்த, விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து  தி.க., மற்றும் பெரியார் அபிமான அமைப்புகள் மறுநாள் 8ம் தேதி தமிழகமெங்கும் பல ஊர்களில் போராட்டத்தில் குதித்தன. அதையே சாக்காக கொண்டு , ராமபிரான், பிள்ளையார் போன்ற இந்து மதக் கடவுள்களின் திருவுருவப் படங்களை கொளுத்துதல்,  செருப்பால் அடித்தல் போன்ற அநாகரீகங்களும் அரங்கேற்றின. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானது.

அதே நாளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்து மத வழிப்பாட்டுத் தலங்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. குறிப்பாக,  ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இலக்காக கொண்டு திட்டமிட்டு இந்த வன்முறை அவிழ்த்து விட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் ஸ்ரீகாமகோடி காமாட்சி மடத்திலும் சென்னையில் பிராமணர்களின் கேந்திரமாக குறிப்பிடப்படும் மேற்கு மாம்பலம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட  மண்டபத்திலும் ஈரோட்டில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலிலும் ஒரே நாளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  இதில் மே.மாம்பலம்  மண்டபம் மீதான தாக்குதல் பெட்ரோல் குண்டு வீச்சு; அரிவாள் வெட்டு என்ற அளவுக்கு போயுள்ளது.

ஈரோட்டில் தாக்குதலுக்குள்ளான ஸ்ரீராகவேந்திரர் கோயில் ( இதை 'பிருந்தாவனம்' என்பார்கள் ) அங்கு அக்ரஹார வீதியில் அமைந்துள்ளது. கன்னடம் பேசும் மாத்வ பிராமணர்களின் நிர்வாகத்தில் உள்ள இக் கோயிலுக்குள் கடந்த 8ம் தேதி மாலை ஒரு கும்பல், ' பெரியார் வாழ்க ' என கோஷமிட்டபடி புகுந்தது. அவர்கள் கோயில் மூலஸ்தானத்திற்குள் அடாவடியாக நுழைந்து அங்கு வைக்கப்பட்டுள்ள ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளில் ராமர் சிலையை மட்டும் சுத்தியலால் அடித்து பெயர்த்தெடுத்து சேதப்படுத்தி வெளியே வீசியுள்ளனர்.  பூஜை சாமான்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தடுக்க வந்த அர்ச்சகரையும் தாக்கி அவரது  பூணுலை அறுத்தெறிந்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அங்கிருந்த வேறு சிலரும் தாக்குதலுக்குள்ளானதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பலர் வருத்தத்துடன் சொன்னார்கள். தகவலறிந்ததும் அப்பகுதியை சுற்றியுள்ள பக்தர்கள் விரைந்து வந்து கோயில் முன் திரண்டு, வன்முறை கும்பல் மீது போலீசார்  கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த தாக்குதல் சம்பந்தமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 7 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

'இனம் மற்றும் மத துவேஷங்களை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம்Damaged_Ramar_Statue பாயும் ' என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி., எச்சரிக்குமளவுக்கு நிலைமை முற்றி போய் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்துமத வழிப்பாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தியதாக மாநிலம் முழுவதும் 38க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறுபுறம், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் இந்து மதத் தலைவர் ஒருவர் பெயரும் இழுக்கப்பட்டு, இச்சிலை உடைப்பு சம்பவத்துக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவரது பெயரில் நடத்தப்படும் கல்வி அறக்கட்டளை சார்பில் பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டியதாயிற்று.

தி.க. தலைவர் தி.க. தலைவர் வீரமணியும் 'பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் சம்பந்தமாக யாரும் வன்முறையில் ஈடுபடவேண்டாம்' என அறிக்கை விடுத்துள்ளார்.

ஆக, மொத்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே இரு தரப்பிலும் விட்டுக் கொடுத்தலும் ; சகிப்புத்தன்மையும் இல்லாததே இந்த பிரச்னை இவ்வளவு தூரம் வளரக் காரணம்.

இந்து மத சாமி சிலைகள், படங்களுக்கு  செருப்பு மாலை போடுவதும் ; தீயிட்டு  கொளுத்துவதும் - பூணூலும் குடுமியும்  பலவந்தமாக கத்தரிக்கப்படுவதும் தமிழ்நாடுக்கு புதியதல்ல.  சுமார் 35, 40 ஆண்டுகளுக்கு முன், பெரியார் உயிரோடிருந்த போதே பூர்ண ஆசிகளுடன் நடந்தவை தான் !

ஐயா , முந்தைய  சாதனைகள், வெற்றிகள் திரும்பவும் நிகழ்ந்தால்  'சரித்திரம் திரும்புகிறது' என்று நெஞ்சை நிமிர்த்தி  சொல்லலாம்.  அதற்காக, அசிங்கங்களும் அநாகரீகங்களும் திரும்பினால் அதை என்னவென்று சொல்ல ?

| | | |
oooOooo
                         
 
பாபுடி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |