டிசம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : பதக்கத்துக்குப் பின்னால்...(சாந்தி)
- பாபுடி [rajputh61@rediffmail.com]
| | Printable version | URL |

ஆக, சாதித்து வந்தவர் நிலைமை சந்தியில் நிறுத்தப்பட்டு பிரித்து மேயப்பட்டு வருகிறது.

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இம்மாதம் நடந்து முடிந்த, 15வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் பதக்கப் பட்டியலுக்கு பிள்ளையார் சுழி போட்டவரே நமது தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சாந்தி தான். இவர் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2வதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்று கணக்கைத் துவக்கினார்.

Shanthi Asiad gamesஅவரும் பெருமிதப்பட்டார். நம்மூர்  பொண்ணு  சாதித்ததில்  நமக்கும் பெருமையாக  இருந்தது. ஆனால் அந்த வெள்ளிப் பதக்கத்துடன்  ஏமாற்றமும் அதிர்ச்சியும்  ஒட்டிக் கொண்டிருந்தது  அப்போது  யாருக்குமே  தெரிந்திருக்கவில்லை ;  தோகாவில் சாந்தியிடமும் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையின் ரிசல்ட்டை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நீட்டும் வரை.

ஆசியாட் போன்ற பன்னாடுகள் பங்கேற்கும் பெரிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான தடகளப் போட்டிகளில்,  உடற்கூற்றில் பெண்தன்மை உள்ளவர்கள் தான் பங்கேற்றுள்ளாரா என்று  'செக்' செய்யும் வகையில் அவ்வப்போது வீராங்கனைகளிடம் பாலின பரிசோதனைகளை மருத்துவக்குழு  நடத்துவது வழக்கம். தடகள விளையாட்டு விதிமுறைகளில் இதுவும் ஒரு அங்கம். ஊக்க மருந்து பரிசோதனை செய்வதில்லையா அது போல.

அந்த வாடிக்கையின்படி தோகா ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது இந்திய ஓட்ட வீராங்கனை சாந்தியிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையில் அவர் தேறவில்லை என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் மருத்துவக் குழு  கண்டறிந்துள்ளது. அதன் அடிப்படையில் , மகளிர் பிரிவில் சாந்தி பங்கேற்று பெற்ற வெற்றி செல்லாதென ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ரத்து செய்து ,  அவர் பெற்ற வெள்ளிப் பதக்கத்தில்  'கை வைத்து விட்டது '.

போட்டிகள் நடந்துக் கொண்டிருந்த போதே இந்த ரிசல்ட் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கைக்கு வந்து விட்டதாம். ஆனால் ஆசியப் போட்டி முடிந்து  இந்திய அணி  முழுமையும் தாயகம் திரும்பிய பிறகே அந்த ரிசல்ட்டை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தாக தெரிய வருகிறது.  சாந்தி  வென்ற வெள்ளிப் பதக்கத்தை திரும்பி அனுப்ப வைக்கவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கறாராக சொல்லியும் விட்டுள்ளது.

இதே சாந்தி தான், கடந்தாண்டு கொரியாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி வென்றார். அதே போல் கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் நமது நாட்டுக்கு பெற்றுத் தந்தார் . அப்போதெல்லாம் எழாத பெண்தன்மை சர்ச்சை இந்த தோகா போட்டியில் கிளம்பி, அவர் தனது சக்தியெல்லாம் திரட்டி ஓடி பெற்ற பதக்கத்துக்கு உலை வைத்துள்ளது. தீராத மன ஊளைச்சலுக்கும் வழி வகுத்துள்ளது. (மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு சார்பில் ரூ.15 லட்சமும் பெரிய பிளாஸ்மா டிவி செட்டும் வழங்கி முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் கவுரவித்தது தான் சாந்திக்கு ஒரே ஆறுதல் எனலாம்)

போகட்டும். அந்த பாலின பரிசோதனை முடிவும், பதக்கம் திரும்பப் பெறப்படுவதும் விதிமுறைகளுக்கு உட்பட்ட விஷயம். அந்த சர்ச்சைகள் அதன் பாதையில் போய் ஒரு கட்டத்தில் முட்டி நிற்கும்.

ஆனால், நமது விசனமெல்லாம் விரயமாகிப் போன அந்த ஏழைப் பாட்டாளி மகளின் உழைப்பும் மீதும்; ரணமாகி கிடக்கும் அந்த 25 வயது இளம் பெண்ணின் மனசு மீது தான்.

oooOooo 

ஓடி முடித்து வந்ததும் பாலும் பழமும் நீட்டும் மேட்டுக்குடியல்ல சாந்தியின் குடும்பம். செங்கல் சூளையில் நாளும் வேகும் ஏழைத் தொழிலாளியின் குடும்பம். அரை வயிறு கஞ்சிக்கே  மாடாய் உழைக்க வேண்டிய குடும்பத்தை சேர்ந்த இப்பெண்,  ஓடி ஓடி சர்வதேசப்  போட்டிகளில் தாய்நாட்டுக்கு பதக்கங்களை பெற்று தந்தவர், அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.  அவரது ஜீவாதார அம்சமே விவாதப் பொருளாக்கப்பட்டு நோகப்பட்டுள்ளார்.

உடற்கூறு அமைப்பில் பெண்தன்மை தென்படவில்லை என்று சொன்ன ஒரு ரிசல்ட்டை வைத்து, அப்பெண்ணின் பிறப்புத் தன்மை குமரி முதல் காஷ்மீர் வரை அவலாக மெல்லப்படுகிறது. கேலி கிண்டல்கள். "அந்த பொண்ணு பொண்ணில்லையாமே.. ஆம்பளையா இல்லை ரெண்டுமா ?" என்பது மாதிரியான டீக்கடை அலசல்கள். நம்மூர் ஊடகங்களோ,  'சாந்தி பெண்ணா? ஆணா?' ; 'சாந்திக்கு பெண் தன்மையில்லையா ?'; அவர் பருவம் எய்தவில்லையாம் ' என்பன போன்ற வகைகளில் அலசி வெந்த புண்ணில் மேலும் ஆசிட் ஊற்றுகின்றன. ஆக, சாதித்து வந்தவர் நிலைமை சந்தியில் நிறுத்தப்பட்டு பிரித்து மேயப்பட்டு வருகிறது.
 
தனது பிறப்புப் பாலினமே ஒரு விவாதப் பொருளாகி விமர்சனமாகிப் போனால் ஒரு மனுஷ பிறவியின் மனசு எவ்வளவு வேதனைப்படும். அவமானத்தால் எப்படியெல்லாம் கூனிக் குமையும்.  அவரது குடும்பத்தார் நிலைமை எப்படியிருக்கும் ? அதுவும் பத்து மாதம் சுமந்த பெத்தவள் வயிறு  வேதனையில் பத்தியெரியாதா ?

போதும். அவரை விட்டு விடுங்கள். இப்போது, சாந்தியின் மனசுக்கு வேண்டியது சாந்தி தான்.

| | |
oooOooo
                         
 
பாபுடி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |