டிசம்பர் 29 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : கடந்த வருடத்தை நிறுத்துப் பார்த்தால் ....
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |

பறந்தோடி பல படிக்கட்டு ஏறி கடைசிப்படியில் நிற்கிறது 2005. எத்தனையோ மாற்றங்கள், எத்தனையோ ஏமாற்றங்கள், விளக்கமற்ற அழிவுகள், விரயமான யுத்தங்கள், வேதனையான உயிரிழப்புக்கள் என இத்தனை சோகங்களையும் சுமந்து வந்ததால் தானோ தள்லாடி நிற்கிறது கடந்த வருடம்?

கொடுத்த வேதனைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 2005ன் ஆரம்பமே அல்லகல்லோலம். ஆழி எழுந்து, ஆழப்புகுந்து தேடித் தேடி ஆசியாக்கண்டத்தில் மிகுந்த அழிவை அளித்த 2004இன் இறுதி நாட்களின், சோக நிகழ்வுகளின் நிஜத்தைத் தாங்கிக் கொண்டே பிறந்தது 2005.

உற்றாரை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து உண்ண வழியின்றி, உடுக்க உடையின்றி எனது இரத்தத்தின் சொந்தங்கள் அலறிக் கொண்டிருந்த காட்சிகளின் மூலம் எமது இதயங்களைப் பிழிந்து கொண்டே பிறந்தது 2005.

பயங்கர கும்மிருட்டில் ஒரு குப்பி விளக்குப் போல, சமுத்திரத்தின் நடுவே தத்தளிப்போரின் முன்னே காட்சியளிக்கும் ஒரு சிறு கட்டுமரம் போல அந்த அழிவுகளின் மத்தியில் ஒரு உண்மையை எமக்கு விளக்கியது கூட 2005ம் ஆண்டு எனலாம்.

ஸ்ரீலங்கா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா என ஆசிய நிலப்பரப்பின் பரந்த பூமிகளின் அழிவு உலகை உலுப்பிய போது, உணர்வுகளால் உந்தப்பட்டு உதவ முன்வந்தது முழு உலகமே. ஆம் அப்போது கண்டோம் உண்மையான சகோதரத்துவத்தை, சமாதானத்தை இனம்,மதம்,மொழி,நிறம் என்ற வேறுபாடுகளைக் கடந்து உண்மையான மனிதநேயம் விழித்துக் கொண்ட ஒரு விடியலைக் கண்டோம்.

அழுத நெஞ்சங்களை அணைத்தது உலகம், அலறிய மக்களை அரவணைத்தது அகிலம்.

சுனாமி என்றொரு பினாமி வந்து எம்முறவுகளின் உயிர்களைக் கொய்து, எம் தாய்நாடுகளைச் சின்னாபின்னப் படுத்தியபோது அனைத்து நாட்டு மக்களுமே முழு உணர்வினுடன் உதவிய அந்த ஒரு நிகழ்வு அவசர உலகில் மனிதரின் மகத்துவம் மறைந்து விடவில்லை என்று பறைசாற்றியது.

ஈராக்கின் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனது. மேற்குலக நாடுகள் சதாம் ஹ¤சேன் மறைத்து வைத்தார் என்று தேடிய அந்தப் பயங்கர ஆயுதங்கள் யார் கண்ணுக்கும் புலப்படவேயில்லை.

ஆனால் இருதரப்பிலும் உயிரிழப்புக்கள் உயர்ந்து கொண்டே போனது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அளிக்கின்றோம் இழப்புக்கள் என்றுகூறி ஈராக்கிய மக்கள் பலரின் உயிரைக் குடித்தார்கள் தீவிரவாதிகள்.

ஒரேயொரு மாற்றம், ஈராக்கியர்கள், ஈராக்கியர்களினால் ஆளப்படுகின்றார்கள் எனும் ஒரு நிலை பெயரளவிலாவது ஏற்பட்டது. மானிடத்தின் மீது இழைத்த பயங்கர குற்றங்களுக்க்காக சதாம் ஹீசேன் கூண்டிலேற்றப்பட்டார்.

ஈராக் இன்னும் தொடர்கிறது, ஒவ்வொரு ஈராக்கியரின் கண்னும் வானம் வெளுக்குமா என ஆவலோடு 2006 எனும் அந்த இலக்கை நோக்குவது தெளிவாகத் தெரிகிறது.

எதுவிதமான எதிர்ப்பலைகளுமின்றி இலகுவாக முன்னேறிக் கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயரின் பாதையில் வந்த ஈராக் எனும் தடைக்கல் அவரை மூன்ராவது தேர்தலில் தலைகீழாக கவிழ்த்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த அரசியல் அவதானிகளுக்கு 2005 கொடுத்தது பேரதிர்ச்சியே.

ஆமாம் டொனி பிளேயரின் தொழிற் கட்சி அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக மூன்றாவது தடவையாக தேர்தலில் வெற்றியீட்டி சரித்திரப் புத்தகத்தில் இடம் பிடித்துக் கொண்டது.

விவாகரத்துதுச் செய்த மனைவியை விதிக்குப் பலிகொடுத்த பிரித்தானியப் பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலா பார்க்கர் போல்ஸ் எனும் பெண்ணை மறுமணம் செய்தது கூட 2005 ஆம் ஆண்டே.

புலி வருகுது, புலி வருகுது என்று புலி வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்த வேட்டைக்காரன் அசதியில் கண்ணயர்ந்து தூங்கும் போது புலி வந்து அடித்ததைப் போல, பயங்கரவாதத் தாக்குதலுக்கு இங்கிலாந்து உள்ளாகப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த இங்கிலாந்துப் பொலிசாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு 52 அப்பாவி உயிர்களைக் காவு கொண்டது பயங்கரவாதம்.

அது இங்கிலாந்தில் கட்டவிழ்த்து விடப்பட்டதும் 2005ம் ஆண்டே !

மனிதனை விழுங்க மண்ணுக்கு ஆசை வந்ததினால் நிலத்தை உலுக்கி உயிர்களைக் களைந்தது பாகிஸ்தானிலும், காஷ்மீரிலும்.

அப்பப்பா , விடு இல்லாமல் வினாக்குறிகளாக இன்றும் கூட நிவாரணம் இன்றித்தவிக்கும் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது 2005 எனலாம்.

சரியான தலைமையின்றித் தவித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சி, என்றுமில்லாதவாறு மூன்று முறை லேபர் கட்சியிடம் தோல்வியடைந்தது. தமது தோல்வியின் காரணத்தை சரியாகப் புரிய முடியாமல் எத்தனியோ தலைவர்களை மாற்றி, 2005ம் ஆண்டில் டேவிட் கமரன் எனும் 37 வயது நொரம்பிய இளம் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

அதனுடைய எதிர்காலம் 2006 இல் வெளிக்குமா? இருந்துதான் பார்க்க வேண்டும்.

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி சந்திரிகாவின் பதவிக்காலம் முடிவடைந்து, மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைமையை ஏற்றுக் கொண்டதும் 2005ம் ஆண்டே !

பல அனர்த்தங்களையும், சில நற்செய்திகளையும் எடுத்து வந்து எம்மீது இறைத்து விட்ட 2005ம் ஆண்டின் இறுதியில் நின்று கொண்டு, எதிர்காலம் எனும் யன்னல் வழியாக 2006ம் ஆண்ட நோக்கிக் கொண்டு

- ஈழத்து மக்கள் போர் கொடுத்த புண்களுக்கு மருந்தளிக்குமா என ஏங்கிக் கொண்டிருக்க
 
- ஈராக் அமைதியை எதிர்பார்த்து வேண்டிக் கொண்டிருக்க

- சுனாமி கொடுத்த சோதனையால் அடிபட்டுப்போய் நிவாரணம் தேடும் இரத்தங்கள் தவித்துக் கொண்டிருக்க

- உலகமக்கள் அமைதியான அழிவுகளற்ற ஆக்கங்கள் நிறைந்த வாழ்வினைத் தேடிக் கொண்டிருக்க

- மெதுவாக உள்ளே நுழையும் 2006ம் ஆண்டில் அனைவரினதும் கண்கள் நிலைத்திருக்கின்றது.

ஆவலோடு எழும் கேள்விகளுக்கு காலத்தின் விடைகளைக் கனிவோடு எதிர்பார்த்திருக்கும் நமக்கு கொஞ்சம், கொஞ்சமாக அவிழப்போகும் 2006 என்ன புதிர்களை புலர வைக்கப் போகின்றதோ ?

oooOooo
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |