தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை
- ஆருரான்

[ பாகம் : 1 ]

தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கென்று ஓரு நாடில்லை

Eelam'ஈழத்தமிழர்களாகிய நாம் இனவெறி படைத்தவர்கள் அல்ல, போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்ல. நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோக்
கருதவில்லை. சிங்களப் பண்பாட்டைக் கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அங்கீகாரத்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம்."

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இரண்டாயிரமாண்டுக்கு முன்பே, உலகத்துக்கு சகோதரத்துவத்தையும், உலக ஒற்றுமையையும் போதித்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக்கூறியவர்கள் தமிழர்கள். அமைதியையும், அறிவையும், செல்வத்தையும் மட்டும் நாடி நின்ற ஈழத் தமிழர்கள், தமது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணியில் திகழ்ந்த ஈழத் தமிழர்கள், தனிநாடு வேண்டி ஆயுதமேந்திப் போராடுமளவுக்கு எவ்வாறு உந்த்ப்பட்டார்கள் என்பதற்கான விடை தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு நன்கு புரியும்.

தமிழர்களின் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும் அவர்களது வாழ்வு நிலைக்கும் இழிவு ஏற்படாத காலகட்டத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலக சகோதரத்துவத்தைப் பேணிய நமது முன்னோர்கள், தமது மொழிக்கு இழிவு ஏற்பட்டு, தமிழ் மண் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதெல்லாம் தமக்கிடையேயுள்ள பிரிவினைகளை மறந்து ஒன்றுபட்ட தமிழர்களாக, 'நாமார்க்கும் குடியல்லோம,; நமனை அஞ்சோம்" எனப் பொங்கியெழத் தவறியதில்லை. தமிழை இழிவு படுத்திய வடநாட்டவர்களான கனக - விசயன்களை வென்று, அவர்கள் சுமந்த கல்லில் தமிழ்த்தாய்க்குச் சிலையெடுக்கவும், தமிழ் மண்ணைக் காக்க அன்னியர் மேல் படையெடுக்கவும் தயங்கியதில்லை. ஆகவே, தாயிலும் இனிய தமிழ் மொழி 1956 இல் தனிச்சிங்களம் மட்டும் சட்டத்தால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட போது, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு- கிழக்கு மாகாணங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் பறிபோன போது, தமது சொந்த மண்ணில், தமது மூதாதையர் ஆயிரமாயிரம் ஆண்டு கட்டிக்காத்த ஈழத்தமிழ் மண்ணில், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுச் சிறுபான்மையினராக்கப்பட்ட போது பொங்கியெழுந்ததில் வியப்பேதுமில்லை! எமது முன்னோர்கள் தமிழையும், தமிழ்
மண்ணையும் காக்கத் தவறியதில்லை அதைத் தான் ஈழத்தமிழர்களும் இன்று செய்கிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்குத் தனிநாடு, அதாவது தமிழீழம் மலர வேண்டும், தமிழீழத்தில் மட்டும் தான் தமிழர்கள் பாதுகாப்புடன், நிம்மதியாக வாழமுடியும் என்ற தமிழீழக் கொள்கை திடீரென பிரபாகரனின் கனவிலிருந்து உதித்ததோ அல்லது ஈழத்தமிழர்கள் குறுகிய இன, மொழி மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் உருவானததுமல்ல.

ஈழத்தமிழர்கள் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழீழம் மலரப் போராடவேண்டும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்த் தலைவர்கள் அனைவரும் தமது வாழ்நாள் முழுவதையும் சனநாயகத்துக்கு அர்ப்பணித்த சனநாயகவாதிகளாவார்.

ஈழத்தமிழர்களால் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காந்தீய முறையில் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி 'ஈழத்துக்காந்தி" எனப் பெயரும் பெற்ற தந்தை செல்வநாயகம், சிங்களத் தலைவர்களால் பலமுறை ஏமாற்றப்பட்டு, எத்தனையோ இனக்கலவரங்களில் தமிழர்களின் உயிர்களும், உடைமைகளும் பறிபோனதைக் கண்டு, இனிமேல் 'கடவுள் வந்தாலும் தமிழர்களைக் காக்க முடியாது" என நொந்து இலங்கைத் தீவில், எமது மண்ணில், தமிழர்கள் பாதுகாப்பாக வாழ ஒரே வழி தமிழீழம் மலர்வது தான் எனத் தீர்மானித்து "உயிரைக் கொடுத்தும் தமிழீழம் அமைப்போம்" என ஈழத்தமிழர்களை அழைத்தார்.

(தொடரும்..)

oooOOooo
[ பாகம் : 2 ]

தமிழர்களின் பாரம்பரிய மண்ணில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் சிறுபான்மையினராக்கப் படுவதைக் கண்டு கொதித்தெழுந்த ஈழத்துக்காந்தி செல்வநாயகம் 'சுவர் இருந்தால் தான் சித்திரம் கீறலாம், முதலில் எமது மண்ணைக் காப்போம், அதற்குப் பின்னால் மற்றவற்றைப் பார்ப்போம்" என 1976 ஆம் ஆண்டு தமிழீழக் கோரிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் நிறைவேற்றி ஈழத்தமிழர்களைத் தமிழீழம் மலரப் போராடுமாறு வேண்டினார்.

ஆனால், 1977.04.27 இல் உடல்நலங்குன்றியிருந்த தந்தை செல்வநாயகம் இயற்கை எய்தினார். செல்வநாயகம் இறந்த பின்னர் அ. அமிர்தலிங்கம் த.வி.கூ தலைவரானார். 1977 யூலை மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோரிப் போட்டியிட்டு, வடக்குக்கிழக்கு மாகாணங்களில் இருந்த 19 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். அந்தப் பொதுத்தேர்தலிலே ஈழத்தமிழர்கள் தமிழீழம் மலர்வதற்கான தமது மனதார்ந்த
ஒப்புதலை அளித்தார்கள். ஆகவே, இன்று பிரபாகரனை விமர்சனம் செய்து, வார்த்தைகளால் தாக்கும், ஈழத்தமிழர்களின் தமிழீழ போராட்ட வரலாற்றையுணராத அரைவேக்காடுகள், பிரபாகரன் சுமப்பது ஈழத்தமிழர்களின் சிலுவையைத் தான் என்பதை உணர்வதில்லை.

இன்று, ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டம் எண்ணற்ற தடைகளையும் துயர்களையும், உயிர், உடைமை இழப்புக்களையும் தாங்கிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அரசியலைக் நன்றாகப் படித்துக் கரைத்துக் குடித்த பல அரசியல் விமர்சகர்களும், அனைத்தும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் ஆலோசகர்களுக்கும், தமக்குப் புரியாத ஈழவிடுதலையைத் திரித்து அசிங்கப்படுத்தும் அலங்கோலத்தை நாம் காணலாம். ஈழத்தமிழர்களை இல்லாதொழிக்கத் துடிக்கும் சிங்கள அரசுக்குத் துணை போகும் இந்தியாவின்
தமிழெதிர்ப்புப் பத்திரிகையாளர்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்தை வக்கிரப்படுத்தி, தமிழர்களை இழிவு படுத்தி, தமிழைப் பேசிக் கொண்டே, தமிழர்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டே, தமிழர்களின் முதுகில் குத்தும் வஞ்சகரையும் தமிழினம் நன்கு அறியும்.

ஈழத்தமிழர்களுக்கு விடிவு காண ஒரே வழி தமிழீழம் மலர்வது தான் என்ற முடிவு, ஈழத்தின் பல கல்விமான்களாலும் சனநாயகவாதிகளாலும், பல்வேறு சனநாயக வழிகளில் போராடித் தோற்றுப் போன பின்னர், தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். இன்று தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ளவர்களும், ஈழத்தமிழர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டும் என விரும்புகிறவர்களும் கூடத் தமீழீழக் கோரிக்கையின் சிக்கலான பரிமாண வளர்ச்சியை உணரத்தவறி விடுவதை நாம் காண்கிறோம்.

இப்படியான குழப்பநிலைகளால் சில வேளைகளில், ஈழத்தமிழர்களின் நலன் விரும்பிகளின் தமிழீழப் போராட்டம் பற்றிய கருத்துக்கள் கூட தவறானதாகத் துன்பப்படும் தமிழர்களின் துயரம் புரியாது, 'பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது" போன்று ஈழத்தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைந்து விடுவதுண்டு. அதனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழர்கள் எப்படி தனிநாடு கேட்குமளவுக்குத் உந்தப்பட்டார்கள் என்பதையும், தமிழர்களின் பாதுகாப்புக்கும் நல் வாழ்வுக்கும் தமிழீழம் மலர்வது தான் ஒரேயொரு வழி
என்பதையும் ஒரளவாவது புரிய வைப்பது மட்டுமே.

இந்தியாவின் முற்போக்கான இனவெறியற்ற சில தலைவர்களின் தொலைநோக்கான நடவடிக்கைகளால், இந்தியாவின் தமிழர்கள் தமது மண்ணையும், மொழியையும்
கலாச்சாரத்தையும் காப்பதற்கு மொழிவாரி மாநிலங்கள் வழிவகுத்தன. அதனால், இந்தியத் தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை இந்திய ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறைமையையும் காப்பதற்காக விட்டுக் கொடுத்தார்கள். ஆனால், இலங்கையின் சிங்கள பௌத்த இனவாதிகளின், 'ஈழத்தீவு முழுவதும் தமக்குரியது" எனச் சரித்திரத்தைத் திரிக்கும் சிங்கள இனவெறியால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும், தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையையும் நீக்கத் தமிழீழம் மலர்வது
அவசியமாகின்றது. எனவே, தனித் தமிழீழம் உருவாகினால்தான் ஈழத்தமிழர்களின் வாழ்வில் நிம்மதியும் விடிவும் ஏற்படுமென்பதை நாற்பது ஆண்டு அறவழியில்,
அமைதியாகப் போராடிய பின்னர் தமிழர் பட்டறிந்ததன் விளைவே தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம்.

சிங்களவர்களின் தமிழருக்கெதிரான மூர்க்கத்தனமான இனவெறியைக் கண்ட சில ஈழத்தமிழ்த் தலைவர்கள் அதிலும் குறிப்பாக சேர். பொன்னம்பலம் அருணாசலம் 1924 களிலேயே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போதும், தம்மைத் தமிழராக அன்றி, இலங்கையராக நினைத்த ஈழத்தமிழர்கள், அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. அவ்வாறு தம்மை இலங்கையராக எண்ணி 'மாவலி சூழ் இலங்கை நாடெங்கள் நாடே" என்று கும்மியடித்த ஈழத்தமிழர்களை, அன்னியப்படுத்தி அழகிய இலங்கைத்தீவை அசிங்கமாக்கியது சிங்கள இனவாதமும், பௌத்த பிக்குகளின் இன, மத வெறியும் தான் என்பதை யாவரும் அறிவர்.

(தொடரும்...)

oooOOooo
[ பாகம் : 3 ]

இலங்கையின் வரலாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் திரிக்கப்பட்டாலும், சிங்களவர்களின் சரித்திரமான மகாவம்சத்திலேயே தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதற்கான ஆதாரமும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் உண்டு. அதனால் சிங்களவர்களுக்கு எந்தளவு உரிமை இலங்கையிலுண்டோ, அந்தளவு உரிமை ஈழத்தமிழர்களுக்குமுண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால், சிங்கள அரசின் இனவாதச் சட்டங்களையும், சிங்களச் சார்பு ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு, தமது சொந்த மண்ணில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ ஈழத்தமிழர்களின் தன்மானம் இடம் கொடுக்காது. யாழ்ப்பாண இராச்சியத்தின் இறைமையைப் போத்துக்கேயரிடம் போராடி இழந்த தமிழர்கள், ஆங்கிலேயர்கள் காலத்தில் சிங்களவர்களுடன் வலுக்கட்டாயமாக
இணைக்கப்பட்டனர். அதன்பின், 1948 பிரித்தானிய அரசால் வழங்கப்பட்ட இலங்கைக்கான அரசியல் அமைப்புக்கமையத் தேர்வுசெய்யப்பட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த அரசியலமைப்பைப் புறக்கணிக்கச் சிங்கள மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர் எனக்கூறிப் புதிய அமைப்பை உருவாக்கி, தமது இறைமையைச் சிங்களவர்கள் தாமே எடுத்துக்கொண்டனர். அப்படிப் பார்க்கும்போது, தமிழ் மக்களால் அங்கீகாரிக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களினூடாகத் தமிழர்கள் தம் இறைமையை எடுத்துக்கொள்வது தவறில்லையே!

ஐரோப்பியர்கள் 1505 ஆம் ஆண்டு ஈழத்தீவிற்கு வந்தனர். அவர்களின் வருகையின்பின், ஈழத்தீவில் தமது இறைமையை முதலில் இழந்த சிங்களவர்கள், ஈழத்தீவில் தாம் கோட்டை அரசை இழந்தபின்னர் தமிழர்களின் யாழ்ப்பாண அரசையும் அதன்பின்னர் கண்டியரசையும் ஐரோப்பியர்கள் கைப்பற்ற உதவிசெய்த சிங்களவர்கள், இன்று ஈழத்தீவு முழுவதற்கும் உரிமை கொண்டாடி, தமிழர்களை அடிமையாக்கி ஆள நினைப்பது வேடிக்கைமேல் வேடிக்கை!

ஐரோப்பியர் ஈழத்திற்கு வந்தபோது தமிழர்கள் காலியிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்புத்துறை, கற்பிட்டி, நீர்கொழும்பு வரை வாழ்ந்து வந்தனர். இவை யாவும் தமிழர்களின் யாழ்ப்பாண அரசின்கீழ் அமைந்திருந்தது. இன்று காலியில் சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள். அம்பாறையில் தமிழர்கள் தொகை மூன்றில் ஒன்றாக
மாறிவிட்டது. நீர்கொழும்பு இருக்கும் புத்தள மாவட்டத்தை சிங்களமயமாக்கி விட்டனர். மன்னார், வவுனியா, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழ் நிலங்களைச் சிங்களவர்கள் அபகரித்து அங்கிருந்த தமிழரைச் சிறுபான்மையினராக்கிவிட்டனர்.

கண்டியரசனால் 1660 இல் சிறைவைக்கப்பட்டு பின்னர் தப்பிச்சென்ற ரோபர்ட் நொக்ஸ் என்பர் 1679 இல் தப்பியோடியபின்னர் தன் அனுபவத்தை ஒரு நூலாக வெளியிட்டிருந்தார். அதில் தான் அநுராதபுரத்தைச் சென்றடைந்ததாகவும், அங்கே சிங்கள மொழி தெரியாதவர்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அநுராதபுரத்தை ஆண்ட மன்னனுக்கு சிங்களம் தெரியவில்லை என்பதால் தான் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளரின் மூலமாக மன்னனிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று அநுராதபுரத்தில் தமிழ்பேசுபவர்களைக் காண்பதே அரிது!

ஐரோப்பியர்கள் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றியபோது, யாழ்ப்பாண அரசின் கரையோரப் பிரதேசங்களையே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. ஈழத்தீவின் நடுப்பகுதியில் இருந்த வன்னிமைகள் (சிற்றரசுகள்) ஐரோப்பியரின் பிடியில் சில நூற்றாண்டுகளாக வீழாமல் ஆட்சிபுரிந்தன. போர்த்துக்கேயர்கள் சிங்களவரின் கோட்டை அரசை 1519 ஆம் ஆண்டு கைப்பற்றியதிலிருந்து, வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனை 1811 ஆம் ஆண்டு தோற்கடிக்கும்வரை தமிழ்மண் முற்று முழுதுமாக தமிழர்களின் கைகளில் தான் இருந்தது.

போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின்னர், அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்கும் போர்த்துக்கேயர்களால் வன்னிமைகள் (வன்னி நிலத்தின் சிற்றரசர்கள்) மேல் தொடுக்கப்பட்ட போரினால், கண்டி அரசிற்கும் ஈழத்தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். அவ்வாறு தமிழர்கள் இடம்பெயர்ந்தபோது, அவர்கள் வாழ்ந்து வந்த செழிப்பான நிலங்கள் அழிவுற்று,
குளங்கள் மண்தூர்ந்து பற்றை, காடுகளாகின. அதனால்தான், வன்னியில் உள்ள மரங்களின் வயது 400 - 500 ஆண்டுக்குமேல் இருக்காது. மேலும், ஆங்கிலேயர்கள் நெற்பயிர் செய்கைக்கு முக்கியத்துவமளிக்காமல் இறப்பர், தேயிலை பயிர்செய்வதில் நாட்டம் காட்டியதால் தமிழரின் விவசாய நிலங்கள் கருகிப்போயின என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தீவின் நான்கில் மூன்று பகுதி அரச காணியாக இருந்தது. அவற்றுள் பெரும்பாலானவை தமிழரது வன்னிச் சிற்றரசு அல்லது வன்னிமைகளின் முடி சார்ந்த காணிகளாக இருந்தன. 1815 ஆம் ஆண்டு கண்டியரசைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், அங்கிருந்த சிங்களவர்களின் காணிகள் பலவற்றைக் கையகப்படுத்தி, அங்கு தேயிலை,  இறப்பர் பயிரிடுவதற்காகத் தென்னிந்தியத் தமிழர்களைக் குடியமர்த்தினர். அவற்றால் தமது நிலங்களை இழந்த சிங்களவர்கள் அநுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, காலி போன்ற தமிழ்ப் பகுதிகளில் குடியேறினார்கள்.
(தொடரும்...)

oooOOooo
[ பாகம் : 4 ]

ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்களால் உரிமைகள் மறுக்கப்பட்டு, பாரம்பரிய மண் பறிக்கப்பட்டு, இனக்கலவரங்களில் உயிர், உடமை, கற்பு பறிக்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, பேச்சு, எழுத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ், இராணுவத்தின் அட்டூழியத்துக்கிடையில் வாழும் சிறுபான்மையினம்,
சுதந்திரமாகப் பாதுகாப்புடன், நிம்மதியாக வாழ உந்தப்பட்டதன் விளைவு தான் தமிழீழப் போராட்டம். அமைதியை விரும்பிய, காந்தியத்தில் நம்பிக்கையுள்ள, சனநாயக வழிமுறைகளைப் பின்பற்றிய ஈழத்தமிழர்களை, ஆயுதமேந்திப் போராடுமளவுக்குத் தள்ளியவை இந்த அட்டூழியங்களே.

ஒரு துளி இரத்தமும் சிந்தாது சுதந்திரம் அடைந்த நாடு இலங்கை. இங்கிலாந்தில் ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமிழ்த்தலைவர்களான சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர் அருணாசலம் போன்ற தலைவர்களின் முயற்சியால் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் தேதி பொதுநலவாய சிலோன் என்ற பெயருடன் தற்போதைய சிறீலங்கா சுதந்திரம் பெற்றது. அப்போது, மொழி, மதச்சார்பற்ற ஒருமைப்பட்ட இலங்கைக் குடியரசை அமைக்கக் கனவு கண்டார்கள் தமிழ்த் தலைவர்கள்.

1833 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் தேதி சிங்களப் பகுதிகளுடன் தமிழ்ப்பகுதிகளையும், தமிழர்களின் இணக்கமின்றி, தமது நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்து ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் ஈழத்தீவைச் சிலோன் என்று அழைத்தனர். அந்த சிலோனுக்கு சுதந்திரமளித்த ஆங்கிலேயர்கள், தாம் தமிழர் பகுதியைச் சிங்களப் பகுதியுடன் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ஒன்றிணைத்ததை மறந்து, ஒட்டுமொத்த சுதந்திரத்தையும், சனநாயகம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் தலைவிதியையும் சிங்களவர்கள் கையில் கொடுத்து விட்டுக் கப்பலேறினர்.

தந்திரமடைந்த இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் 101 உறுப்பினர்கள் இடம்பெற்றனர், இதில் 95 பேர் தேர்தல் மூலமாகவும் எஞ்சிய 6 பேர் நியமனமூலமாகவும் தெரிவு செய்யப்பட்டனர். அதில் 24 பேர் தமிழர்களாக இருந்தனர், அவற்றுள் 8 பேர் மலையகத் தமிழரின் பிரதிநிதிகளாக இருந்தனர். இடதுசாரிக் கட்சிகளிடமும் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அந்த இடதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு, அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் இருந்த மலையகத் தமிழர்களே ( இந்திய வம்சாவழித் தமிழர்கள்) முக்கிய காரணமாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்து ஓராண்டு நிறைவுபெற முன்னரே, இலங்கைப் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்கில் இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1827 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்னர் பிரித்தானியர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்டு, இலங்கையின் பொருளாதரத்தை உயர்த்த அயராது வியர்வை சிந்தி உழைத்த 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களின்(இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குடியுரிமை மறுக்கப்பட்டு, அவர்களை ஆடு மாடுபோல், தாயிடமிருந்து மகனையும், மனைவியிடமிருந்து கணவனையும் பிரித்து இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள் சிங்களவர்கள். அதன்மூலம் தமிழரின் நாடாளுமன்றப்பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்திண் முதுகெலும்பான மலையகத் தமிழர்களை 120 வருடங்களின் பின்னர் சிங்களவர்களால் நாடுகடத்தப்பட்டதற்க்குத் துணை போனவர்கள் இந்திய ஆட்சியாளர்கள், அவர்களின் தமிழெதிர்ப்புத் தன்மை அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை.

1827 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் இலங்கையில் 120 ஆண்டுகள் வாழ்ந்த பின்னரும் அவர்களின் குடியுரிமையை 1948 ஆம் ஆண்டு சிங்கள அரசு பறிமுதல் செய்தது. ஆனால் அதே நேரத்தில், 1833 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 திகதிக்குப் பின்னர் (114 ஆண்டுகள்) ஆங்கிலேயர்களால் வலுக்கட்டாயமாகச் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட்ட தமிழரின் பாரம்பரிய நிலமான தமிழீழத்தை, 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சிங்கள அரசு தமதாக்கித் தொடர்ந்தும் ஆட்சிசெய்து வருகின்றது.

அவ்வாறான சிங்கள அரசைப்போன்றே, இந்தியாவும் வேறு சில நாடுகளும் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்போம் எனப் பேசுவதும் வேடிக்கை மட்டுமல்ல, அப்படி பேசுபவர்களுக்கு இலங்கையின் வரலாற்றில் எந்தவித அறிவும் கிடையாது என்பது தான் கருத்தாகும். இலங்கையின் வரலாற்றிலேயே, ஆங்கிலேயர் வரும் வரை இலங்கை ஒரு நாடாக இருந்ததில்லை.

இலங்கையில் தமிழ்- சிங்களவர்களிடையில் ஒருமைப்பாடும் இருந்ததில்லை.

1948 அமலாக்கிய குடியுரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து, 1948 - 49 ஆம் ஆண்டுப் பகுதியில் தேர்தல் திருத்தத் சட்டத்தையும் சிங்கள அரசு உருவாக்கி நடைமுறைப் படுத்தியது. தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் சிங்களப் பிரதிநிதிகள் அதிகளவில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படும் வகையில் சிங்கள அரசு சதி செய்தது. இவ்வாறான நடவடிக்கைகளைக் கூர்ந்துநோக்கிய தந்தை செல்வநாயகம் அவர்கள், இலங்கையில் பிராந்தியத் தன்னாட்சி உருவாக வேண்டும் என்று தமது கட்சியை 1949. 12. 10 இல் உருவாக்கி அதற்காகப் போராடி
வந்தார்.

தமிழர்களை ஒடுக்கும் நோக்கில் தொடர்ந்து செயற்பட்ட சிங்கள அரசு, தமிழர் பிரதேசங்களில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களைச் செய்து, அங்கே புதிய நாடாளுமன்றத் தொகுதிகளைஏற்படுத்தி அதன்மூலம் தமிழரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை 1947 இல் இருந்து இன்றுவரை குறைத்தே வருகின்றது.

தமிழர்மேல் சிங்களவர்கள் மேலாதிக்கத்தைச் செலுத்தி ஈழத்தமிழர்களை தமது சொந்த நாட்டில் உரிமையற்ற இரண்டாந்தரக் குடிகளாக்ககப் பின்வரும் நான்கு வழிகளைச் சிங்கள இனவாத அரசு இன்றும் கையாள்கின்றது.

(தொடரும்...)

oooOOooo
[ பாகம் : 5 ]

சிங்களவர்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றம் செய்து தமிழ் நிலங்களை ஆக்கிரமித்தல் ஆங்கிலேயர் காலத்தில் இறப்பர், தேயிலை, கோப்பி போன்றவற்றை ஊக்குவிக்கப்பட்டதால் தமிழர் பகுதிகளில் முக்கியமாக விளங்கிய நெற்செய்கை கவனமற்று நீர்ப்பாசனங்கள் அழிவுற்றன. இதனால் வன்னிச் சிற்றரசுக்குகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான பரப்பு நிலங்கள் அரசு உடமைகளாக்கி, சிங்களவர்களைக் குடியேற்றத் தொடங்கினர்.

தமிழ் மண்னான கந்தளாயை (கண்- தளை(ழை) என்ற பெயர் வரக்காரணம் திருகோணமலையில், கோணேஸ்வரத்தில் சிவபெருமானை வழிபட்டு அந்தக்குளத்தில் நீராடி இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்றதால் வந்த பெயர்) சிங்களத்தில் கல்லோயாத் திட்டமாக்கி, சிங்களக் குடியேற்றத் திட்டங்களை விரைவு படுத்தி சிங்களவர்களை மட்டும் குடியேற்றியது சிங்கள அரசு.

அம்பாறை மாவட்டத்தில் தமிழரின் பெரும்பான்மையை இவ்வாறே குறைத்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்களிடமிருந்து பிரிப்பதற்காக, வடக்கு-கிழக்கு காணங்களுக்கிடையிலுள்ள மணலாற்றுப் பிரதேசத்தில் தமிழர்களை விரட்டியடித்து விட்டு, சரித்திரப் புகழ்பெற்ற குருந்தமலை முருகன் கோயிலை அழித்து விட்டுப் புத்த விகாரையைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றியது சிங்கள அரசு.

சிங்களவர்களின் குடியேற்றத்தாக்கத்தை உணர்ந்துகொள்ள கந்தளாய்ப் பகுதியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். திருகோணமலையில் உள்ள தம்பலகாமம் என்ற பகுதியில் உள்ள பெரிய குளமே கந்தளாய். கந்தளாய்க்குளப் பகுதியில் 1901ஆம் ஆண்டு செய்யப்பட்ட குடிசனக் கணிப்பின்படி அங்கு 65% பேர் தமிழராகவும் 35% தமிழ் பேசும் முஸ்லீம்களாகவும் 5% பேர் சிங்களவர்களாகவும் இருந்தனர். அப்போது இருந்த 5% சிங்களவர்கள்கூட கந்தளாயின் பூர்விகக்குடிகளல்லாது, வியாபார நோக்குடன் அங்கிருந்தவர்களாகவே இருந்தனர்.

ஆனால், சிங்களவர்களால் செய்யப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களின்பின்,1981 ஆம் ஆண்டு கந்தளாயின் மொத்த சனத்தொகை கணிக்கப்பட்டபோது, அங்கு 75% சிங்களவர்களாகவும் 15% பேர் முஸ்லீம்களாகவும் 10% தமிழர்களாகவும் இருந்தனர் எனக்கூறப்படுகின்றது. உலகத்திலேயே ஹிட்லருக்கு முன்பாகவே இன அழிப்பை நடத்திக் காட்டியவர்கள் சிங்களவர்கள்.

போஸ்னியாவில் நடைபெற்ற இன அழிப்புக்கு உலகம் முழுவதும் அழுதது, ஆனால் சிங்களவர்களால் இலங்கையின் நடத்தப்படும் தமிழின் அழிப்பைக் கேட்பார் எவருமில்லை, மெளனமாக அழுத ஈழத்தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளத்தான் ஆயுதத்தைக் கையிலேந்தினார்கள்.

அதன்பின்னர் ஒவ்வொரு காலப்பகுதியிலும் விவசாய அபிவிருத்திக் குடியேற்றம் என்ற பெயரில் உலக வங்கியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியுதவிகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபா செலவில் பெரிய மற்றும் சிறிய குடியேற்றத் திட்டங்கள் தமிழர் நிலப்பரப்பில் நடைபெற்றன. அங்கு குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் சிங்களவர்களே இலங்கையில் ஆயிரமாண்டுகளுக்கு அதிகமான காலங்கள் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லீம்களும் வாழ்ந்த நிலங்களை சிங்கள அரசு தனது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களையும் தமிழ்பேசும் முஸ்லீம்களையும் அவர்களின் சொந்தப் பிரதேசத்தில் சிறுபான்மையினராக மாற்றிவிட்டது. இந்த விடயத்தில் இந்தியா உண்மையிலேயே, சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் சனநாயக நாடாகும், ஏனென்றால் இந்தியாவும் நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றி, ஒப்பந்தங்களை மீறிக் காஸ்மீரில் திட்டமிட்ட வேற்று மத, இனக் குடியேற்றங்களை நடத்தி, காஸ்மீர் மக்களை காஸ்மீரில் சிறுபான்மையினராக்கியிருக்கலாம். ஆனால், இந்தியா அப்படிச் செய்யவில்லை.

அநுராதபுரத்தைப் பெளத்த புனிதநகராக மாற்ற சிங்களவாதிகள் சட்டமொன்றை இயற்றினார்கள். அது 1942 இல் நிறைவேற்றப்பட்டு, அநுராதபுரத்தில் புதிய தலைநகர் ஒன்றை உருவாக்கவும்,  பழைய தலைநகரைப் புதுப்பிக்கவும் அரசு முடிவெடுத்தது. அப்போது புனிதநகரம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் 90 வீதத்திற்கும் மேலாக வாழ்ந்தவர்களும், அங்கிருந்த காணிகளுக்குச் சொந்தக்காரர்களும் தமிழரும் தமிழ்பேசும் முஸ்லீம்களும்தான்.

(தொடரும்...)

oooOOooo
[ பாகம் : 6 ]

அப்போது அநுராதபுர உள்ளுராட்சியில் இருந்த பிரதிநிதிகளும் தமிழர்களே! அவ்வாறிருந்தும் தமிழரை அவர்கள் சொந்த நகரிலிருந்து சிங்கள அரசு வெளியேற்றியது. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை இடித்தழித்தது இவ்வாறு, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள அரசின் தலைமையில் நிகழ்ந்த ஒவ்வொரு ஆட்சியிலும் தமிழர் நிலங்கள் தொடர்ந்தும் சூறையாடப்பட்டு வந்தன, அங்கே சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டனர் ஆனால் வடக்கு- கிழக்கு தமிழர்களின் ஆயுதப்புரட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னால் தான் தமிழர் நிலங்களைக் கைப்பற்றுவது நிறுத்தப்பட்டது.

ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இன்றும் தொடர்கின்றன.1972 ஆம் நடைமுறைப்படுத்தப்பட்ட காணி உச்சவரம்புச் சட்டத்தின்படி தமிழருக்குச் சொந்தமான பல நிலங்களையும் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்த தோட்டங்களையும் சிங்கள அரசு தமிழரிடமிருந்து சூறையாடி, அங்கு சிங்களவர்களைக் குடியேற்றியது அது மட்டுமல்ல, இனக்கலவரங்களைத் தூண்டிவிட்டு தமிழர் நிலங்களை அபகரித்து கிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க்கிராம மக்களைக் கொன்றொழித்து அவற்றைச் சிங்களமயமாக்கிய நெஞ்சை உருக்கும் கொடூரத்தைச் சொல்லியழ யாருமில்லாத ஈழத்தமிழர்கள் தம்மைப் பாதுகாக்க தற்பாதுகாப்புக்காக ஆயுதமேந்தினார்கள், இந்தக் கொடுமை தமிழீழம் மலரும் வரை தொடரும்.

நாடாளுமன்றத்தில் தமிழரைச் சிறுபான்மையாக்குதல்

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதன் மூலம், தமிழர்களின் விடுதலைக் குரலை கழுத்தை நசுக்கி நிறுத்தியது இலங்கையின் சிங்கள அரசு. அதற்கு முதல் கட்டமாக 1937 இல் உள்ளுராட்சித் தேர்தல் வாக்குரிமைச் சட்டத்தின்படி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளுராட்சித் தேர்தலில் பங்குபெறாது செய்யப்பட்டது. 1940 ஆம் ஆண்டின் குடியாளர் வாழ்விடத் தெரிவுச் சட்டத்தின்படி இலட்சக்கணக்கான தமிழர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் 1948 இன் குடியுரிமைச்சட்த்தின்படி 10 இலட்சம் தமிழர்களின் குடியுரிமை நிராகரிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

தமிழீழத்துக்கு இடையே உள்ள நிலத்தொடர்பினைத் துண்டாக்கும் நோக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி சிங்கள நாடாளுமன்றத் தொகுதிகளை அமைத்தது சிங்கள அரசு. தமிழர் பகுதிகளின் எல்லைகளை மாற்றுவதன் மூலம், தமிழ்க்கிராமங்களைப் பிரித்து, எல்லைப்புற பெரும்பான்மைச் சிங்களக் கிராமங்களுடன் இணைத்து தேர்தல் தொகுதிகளை அமைப்பதன் மூலம் தமிழ்ப்பகுதிகளிலிருந்து சிங்களவர்கள் நாடாளுமன்றத்துகுத் தெரிவு படச்செய்தார்கள். இதனால் தான் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு சிங்கள
உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்கிறார்கள்.

பின்வரும் குடியேற்றங்களைத் தமிழர்பகுதியில் ஏற்படுத்தி, தமிழ் ஊர்களுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றி அதில் சிங்களவர்களே பெரும்பாலும் குடியேற்றப்பட்டார்கள்.

கனகராயன் ஆறு, இரணைமடு, விசுவமடு, முத்தையன்கட்டு, தண்ணிமுறிப்பு, பதவியா, கட்டுக்கரைக்குளம், பாவற்குளம், பன்குளம், குமரேசன் கடவை (கோமரங்கடவல) கந்தளாய், அல்லை, மின்னேரி, உன்னிச்சைக் குளம், ஊரியான் குளம் போன்றவையும் கவுடுள்ள, கூறுளு வாவி, பராக்கிரம சமுத்திரம், மதுரு ஓயா, கல் ஓயா, வெலி ஓயா, யோதவாவி, திசவாவி, பெரகம, தம்போல, கொட்டுகச்சி, ரிதிபந்திசி, மகாஉசீ வாவி போன்ற சிங்களக் குடியேற்றங்கள் தமிழர்களின் பாரம்பரிய மண்ணில் உருவாகின. இதில் கனகராயன் ஆறு, இரணைமடு, விசுவமடு, முத்தையன் கட்டு, தண்ணிமுறிப்பு, கட்டுக்கரைக்குளம், பாவற்குளம் என்பன இன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மீண்டும் தமிழாகி விட்டன.

(தொடரும்...)

oooOOooo
[ பாகம் : 7 ]

தமிழ் மக்களின் பொருளாதரம் மற்றும் கல்வியைச் சீர்குலைத்தல்

சுதந்திரத்துக்குப் பின்னால் தொடங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் சிங்களப்பகுதிகளில் மட்டும் தொடங்கப்பட்டன, சிங்கள பிரதேசங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்கி சிங்கள முதலாளிகள், வணிகர்கள், தொழிலதிபர்களை உருவாக்கி, தமிழர் மூலவளங்களைப் புறக்கணித்து, சிங்கள மூலவளங்களும் இடங்களும் இன்றித் தமிழர்கள் வாழமுடியாது என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டது. அதை விடக் கொடுமை தமிழ்ப்பகுதிகளிலுள்ள மூலவளங்களை, உதாரணமாக யாழ்ப்பாணத்துச் சுண்ணாம்புக் கற்களையும், வல்லிபுரத்துக்கண்ணாடி மணலையும், ஆனையிறவு உப்பையும், முருங்கனின் களிமண்ணையும், புல் மோட்டையின் இல்மனைட்டையும், மன்னாரின் மீன்வளத்தையும், வன்னியின் நெல்லையும், மட்டக்களப்பின் கரும்பையும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் சிங்களப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து சிங்களவருக்கு மட்டும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தமையாகும்.

1956 இல் அமலாக்கிய சிங்களம் மட்டும் சட்டம். சிங்களவரல்லாத அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களம் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை உருவாக்கி, சிங்கள மொழி இலங்கையின் அரசகரும மொழியாக அறிவிக்கப்பட்டது. இதனால் சிங்களம் தெரியாத தமிழ் ஊழியர்களுக்கு உயர் பதவியும், ஊதிய உயர்வும் மறுக்கப்பட்டது. மேலும் அவர்கள் சிங்களம் பயிலாவிட்டால் பதவியிழக்கவும் நேரிட்டது.

தமிழ்ப் பாடசாலைகள் சிங்களமயமாக்கப்பட்டன, சிங்களப் பாடசாலைகள் புதிதாக நிறுவப்பட்டும், தனியார் தமிழ்ப் பாடசாலைகள் உருவாக்க முடியாதவாறும் சிங்கள அரசு சதி செய்தது.

சிங்களப் பகுதிகளில் வாழும் தமிழர்களைத் தமிழில் கல்வி கற்க முடியாதவாறு செய்து அவர்களைச் சிங்களப்படித்தினார்கள், மேலும் பாடசாலைகளில் இலங்கையின் உண்மையான
வரலாற்றைத் திரிவுபடுத்தி, ஈழத்தீவு முழுவதற்கும் சிங்களவர்களே உரித்தானவர்கள் என்றும் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும் பொய்ப்பிரச்சாரத்தை கல்வித்திட்டத்தால் செய்து சிங்கள இனவாதத்தை சிங்களக் மாணவர்களின் மனத்திலும், இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற உணர்வைத் தமிழ் மாணவர்களின் உள்ளத்திலும் சிங்கள இனவாத அரசு வளர்த்தெடுத்தது.

இந்தியத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதால், அண்மைக்காலம் வரை அவர்களால் கூலி வேலையைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாதவர்களாகினர். இந்திய வம்சாவளிகொண்ட தமிழர்களின் தொழிற்சாலைகள், சொத்துக்கள், வணிகம் போன்றவை தடுத்து முடக்கப்பட்டன.

1972 இல் தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்ள சிங்கள மாணவர்களைவிட அதிகளவு புள்ளிகள் பெறவேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இது பின்னர்

தமிழர்களின் எதிர்ப்பால் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலாக மாற்றப்பட்டது, தமிழர்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண மாவட்டம் முன்னேறிய மாவட்டமாகக்
கருதப்பட்டதால் அங்குள்ள மாணவர்கள் பல்கலைக்கழகம் புக அதிகளவு புள்ளிகள் எடுக்க வேண்டிய நிலையேற்பட்டது.

(தொடரும்..)

oooOOooo
[ பாகம் : 8 ]

தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தல்

தமிழர்களை மதரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் பிரித்து, முக்கியமாக முஸ்லீம் தமிழர், மலையகத் தமிழர், இலங்கைத் தமிழர் என்று பிரிவுபடுத்தி, அவர்களை ஒன்றிணையாத வண்ணம் பார்க்கின்றது. தமிழ் - முஸ்லீம் கலவரங்களை அதற்காகவே சிங்கள அரசு தூண்டிவிடுகின்றது.

1956.06.05 சிங்களம் மட்டும் என்ற சட்டம் அமலாக்கப்பட்டு சிங்கள மொழி அரசகரும மொழியாக உருவாக்கப்பட்டது. அதனைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். அப்போது பேசிய கொல்வின் ஆர்.டி. சில்வா 'இந்தச் சட்டம் நிறைவேற்றி 25 ஆண்டின் பின்னர் தமிழர்கள்
தனிநாடு கோருவார்கள்" என்று கூறினார்.

தமது அதிகாரத்தையும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழந்த ஈழத்தமிழர்கள் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கமுடியாது, என்பதை உணர்ந்து காந்தீய வழியில் சத்யாக்கிரகப் போராட்டத்தை அமைதியாகக் கொழும்பில் மேற்கொண்டனர். ஆனால் என்ன பயன்? அமைதியாக சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை, சிங்கள அரசால் ஏவப்பட்ட ஆயுதம் தரித்த சிங்களக் குண்டர்கள் தாக்கினார்கள், அதைச் சிங்களக் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களைக் கடலில் தூக்கி சிங்களக் குண்டர்கள் தூக்கி வீசினார்கள். அதனைத்தொடர்ந்து நாடளாவிய ரீதியில் தமிழருக்கு எதிரான வன்முறை வெடித்தது. எடுத்ததற்கெல்லாம் தமிழரைச் சிங்கள அரசியல்வாதிகளின் ஏவலின்பேரில் சிங்களவர்கள் தாக்கத்தொடங்கினார்கள்.

1956 ஆகஸ்ட் மாதம் தந்தை செல்வா தலைமையில் தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இலங்கைக்கு கூட்டாட்சி முறையை நிறைவேற்றித் தமிழர் தம்மைத்தாம் ஆளக்கூடியதாகச் சிங்கள அரசு செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஓராண்டுகாலக்கெடு அளிப்பதாகவும், இல்லாவிடின் தொடர்ந்தும் காந்தீய வழிகளில் தமிழர்கள் போராடுவார்கள் எனவும் எச்சரித்தார். அதன்பின்னர், 1957.06.27 பண்டா - செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி பிராந்திய சபைகள் அமைப்பது எனவும், தமிழருக்கு என்று ஒரு பிராந்திய சபையை அமைத்து, அங்கு தமிழில் நிர்வாகம் நடத்தவும், குடியேற்றம், கல்வி, விவசாயம் போன்றவை பிராந்திய சபைகளின்கீழ் வரவும் ஒத்துக்கொள்ளப்பட்டன.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை பெளத்த சிங்கள இனவாதிகளும் ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்கள அரச அதிகாரிகளும் எதிர்த்தனர். பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து 1957.10.04  திரு. ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையில் காலி முகத்திடலில் இருந்து கண்டிநோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 1958.09.09 இல் பண்டாரநாயக்கா அரசின் அமைச்சர் விமலா
விஜயவர்த்தனா தலைமையில் திரண்ட பிக்குகள் முதல்மந்திரி பண்டாரநாயக்காவின் இல்லத்தின்முன் செய்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து பண்டா-செல்வா ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகப் பண்டாராநாயக்கா எழுத்துமூலம் உறுதி அளித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிந்ததும் நாடு முழுவதும் தமிழருக்கு எதிரான கலவரம் மூண்டது. அதில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தமிழர்களது வீடுகளும் கடைகளும் வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. கொழும்பில் மாத்திரம் 10,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு கப்பல்மூலம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

(தொடரும்...)

oooOOooo
[ பாகம் : 9 ]

இந்தக் கலவரத்தை அடுத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுட்பட 150 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். கலவரத்துக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்ப்பு உணர்வைத் தணிக்கும் நோக்கோடும் தடுப்புக்காவலில் இருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவந்தால் மீண்டும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என்றும் அஞ்சிய பண்டாரநாயக்கா தமிழ் மொழி விசேட சட்டத்தை அமல்படுத்தினார். அந்த சட்டம் தமிழ்ப் பிரதேசங்களில் கல்வி, அரச நிர்வாகங்களுக்குத் தமிழை உபயோகிக்கலாம் என்று கூறியது. ஆனால் மீண்டும் பண்டாரநாயக்கா தமிழுக்கு உரிமை கொடுக்கிறார் எனக்கூறி 1959.09.25 இல் சோமராமதேரோ என்ற பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 1960 இல் மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் 'சிங்களம் மட்டும் சட்டத்தைத் தீவிரமாக அமல் செய்வோம்" எனக்கூறி ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றபோதும் பெரும்பான்மை இருக்கவில்லை. அந்த நேரத்தில், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களது
நிஞாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.

அதன்பின், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 1960 யூலையில் தேர்தல் நடந்தேறியது. அதில் சிறீலங்காச் சுதந்திரக் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. சிறீலங்காச் சுதந்திரக் கட்சிக்கு பெரும்பான்மைப் பலமிருந்ததால், அது தமிழரசுக் கட்சிக்கு அளித்த வாக்குறுதியைக் கைவிட்டுச் சிங்களம் மட்டும் சட்டத்தை அமலாக்குவதிலே முக்கிய கவனம் செலுத்தியது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் 1961 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழர்கள் சதத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதனைத் தொடர்ந்து வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை போன்ற பகுதிகளிலும்சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பமானது. தமிழீழத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த அறவழிப் போராட்டத்தில் பங்குகொண்டார்கள். இதுவரையும் நடந்த அறவழிப் போராட்டங்களில் ஈழத்தமிழர்கள் பெருந்திரளாகப் பங்குகொண்ட போராட்டமும் இதுதான் எனக் கூறப்படுகின்றது.

சத்யாக்கிரகப் போராட்டத்தால் தமிழர் பகுதியில் இயங்கிய அனைத்து நிர்வாகங்களும் செயலிழந்தன. இதனால் சிங்கள அரசு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி தமிழீழப் பகுதிக்கு முதல்முறையாக இராணுவத்தை அனுப்பியது. தமிழீழப் பகுதிக்குள் சிங்கள அரசால் அனுப்பப்பட்ட இராணுவத்தினர் சாதாரண தமிழ் மக்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை அனைவரையும் கடுமையாகத் தாக்கினார்கள். அறவழிப் போராட்டம் நடத்திய தமிழரைத் தாக்கிய சிங்கள இராணுவம் தமிழரின் குரல்வளையை நசுக்கியது. அதன்பின்னர் தமிழ்த்
தலைவர்களைப் பேச்சுமேடைக்கு அழைத்து நிலைமையைத் தணிவுசெய்தது. ஆனால், வழமைபோல் தமிழரின் கோரிக்கைகள் மீண்டும் நிராகரிக்கப்பட்டன.

இந் நிலையில் தமிழ் மக்கள் தனி நாட்டினர் என்பதைக் காட்டும் நோக்குடன் தந்தை செல்வா அவர்கள் தமிழரசு அஞ்சல் சேவையை ஆரம்பித்து வைத்தார். தமிழினம் தனக்கெனத் அஞ்சல் தலைகளை வெளியிட்டது. தமிழ் மக்களும் அச்சேவையைப் பயன்படுத்தி தாம் தனியினத்தவர்கள் என்பதை வெளிக்காட்டினார்கள். அந்த நடவடிக்கை தமிழர்களின் விடுதலை உணர்வை வீறுகொள்ள வைத்துவிடும் என எண்ணிய சிங்கள அரசு, தமிழரசுக் கட்சியை அவசரகாலச் சட்டத்தின்கீழ் தடை செய்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைதுசெய்து, மீண்டும் இராணுவத்தினரின் கெடுபிடிகளால் அந்தப் போராட்டமும் நசுக்கப்பட்டது.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, மூத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. சி.சுந்தரலிங்கம், சிங்கள அரசு தமிழர் நிலப்பகுதியில் திட்டமிட்டு சிங்களவர்களைக் குடியேற்றுகின்றது என்றும், தமிழ் இனத்தை ஈழத்தீவில் பலவழிகளில் சிங்கள அரசு ஒடுக்க முனைகின்றது என்றும் குற்றம்சாட்டி, தமிழர் தம்மைக் காத்துக்கொள்ள தமிழீழத்தை சிங்கள ஆட்சியின் கோரப்பிடிகளில் இருந்து மீளப்பெற வேண்டும் எனக்கூறி 1959.12.19 இல் "ஈழம் எங்கள் தெய்வம்" என்ற பிரசுரத்தை வெளியிட்டு தனது நாடாளுமன்றப் பதவியையும் துறந்தார். மேலும், ஈழத் தமிழர்கள் தாம் இழந்த நாட்டைப் பெற அறவழிப் போராட்டங்களையும், பிற வெற்றியழிக்கும் போராட்டங்களையும் கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

1961 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறையிலிருந்து வெளிவந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் அப்பொழுது இராணுவ ரோந்துக்களும் கெடுபிடிகளும் மோசமடையப் பீதியடைந்த தமிழ் மக்கள் முன்னர்போல் தமது வெளிப்படை ஆதரவை அறவழியில் வெளிக்காட்ட அஞ்சினர். அதன்பின்னர் அரச வன்முறை மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் முன்னால் அறவழிப் போராட்டங்கள் செல்லுபடியாகாது என உணர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது போராட்டங்களைக் கைவிட்டனர்.

அதன்பின்னர், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழரசுக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எதிர்க்கட்சியினரும் தாம் பதவிக்கு வந்தால் நல்ல தீர்வைத் தருவதாக வழமைபோல் இனிக்க இனிக்கப் பேசினார்கள்.

(தொடரும்...)

oooOOooo
[ பாகம் : 10 ]

1965 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி 55 இடங்களையும், தமிழரசு மற்றும் தமிழ்க் காங்கிரசுக் கட்சி 17 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியைப் பிடிக்க தமிழரசுக் கட்சியின் உதவியை நாடியது ஐ.தே.க. அதன்பின்னர் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதுவும் பண்டா-செல்வா ஒப்பந்தம்போல் தமிழீழப் பிராந்திய சபை அமைக்க ஒத்துழைத்தும், சில துறைகளை அந்தப் பிரதேசத்தின் நிர்வாகத்தில் பேணவும் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த 10 பேர் கொண்ட ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. அதில் தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம், திரு. செள. தொண்டமான் போன்றோரும், ஜெ.ஆர். ஜெயவரத்தனவும் அங்கம் வகித்தனர்.

தமிழ் மக்களும் தங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது, சிங்களவர்கள் தமிழரைச் சகோதரத்துவத்துடன் நடத்துவார்கள் என்று கனவு கண்டனர். இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாகத் தமிழ் மொழி விசேட சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை சிறீலங்கா அரசுக் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்த புத்த பிக்குகளும் இனவாதிகளும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அதே தமிழ் விசேட சட்டத்தை 1958 இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் விசேட சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் கலவரமும் வெடித்தது. ஆளும் கட்சி உறுப்பினர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, டட்லி-செல்வா ஒப்பந்தத்தை 1968 யூலை மாதத்தில் கைவிடுவதாக டட்லி சேனாயக்கா அறிவித்தார். 1833 ஆங்கிலேயர் காலத்தில் சிங்களவருடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் இலங்கை என்ற நாட்டின்கீழ் சம உரிமையுடன் வாழ எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வி கண்டன. டட்லி-செல்வா ஒப்பந்தத்தால் சிங்களவர்கள் மனமாறக்கூடும் என்று தமிழரின் கனவு நிர்மூலமாக்கப்பட்டது. டட்லி-செல்வா ஒப்பந்தத்தால் தமிழ் மொழி விசேட சட்டம் நிறைவேற்றப்படுத்தப்பட்டாலும், அது அமல்படுத்தப்படவில்லை.

1967 இல் அடையாள அட்டை மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி. நவரத்தினம் அவர்கள் அதனை எதிர்த்து அரசிலும் தமிழரசுக் கட்சியிலும் இருந்து வெளியேறினர்.

அதன்பின்னர் வழங்கப்பட்ட அடையாள அட்டைமூலம் யார் தமிழர் என்று இனங்கண்டு தாக்கப்பட்டனர்.

1970.05.27 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது சிறீமாவோ பண்டாரநாயக்கா தலைமியிலான சிங்கள அரசுக்கூட்டணி சிறீலங்காக் குடியரசை அமைப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து சிங்கள இடங்களில் மட்டும் போட்டியிட்டு, 157 ஆசனங்கள் உள்ள நாடாளுமன்றத்தில் 116 ஆசனத்தைக் கைப்பற்றியது. அதே நேரத்தில், தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரசும் தமிழருக்கும் சிங்களவருக்கும் தனித்தனி மாநில ஆட்சியும், அவற்றை இணைத்த மத்திய அரசும் என்ற கோரிக்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் போட்டியிட்டு மொத்த 20
ஆசனங்களில் 16 ஆசனங்களைக் கைப்பற்றினர்.

1971.03.15 இல் சிறீலங்காக் குடியரசு ஒற்றையாட்சி ஒன்றாதல் வேண்டும் என்று சிங்களவர்களால் தீர்மாணிக்கப்பட்டது. மேலும், பல இன, பல மத மக்கள் வாழும் இலங்கையில் பெளத்த மதத்தை அரச மதமாக அறிவித்து, பெளத்த மதத்தை அரசு பேணிவளர்க்க வேண்டும் என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது.

1948 இல் பிரித்தானிய அரசால் வழங்கப்பட்ட இலங்கைக்கான அரசியல் அமைப்பின் படி தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்பைப் புறக்கணித்துப் புதிய அமைப்பை உருவாக்கும் அதிகாரமற்றவர்கள். ஆனால், சிங்கள மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர் எனக்கூறித் தமது இறைமையைத் தாமே எடுத்துக்கொண்ட சிங்களவர்கள், பிரித்தானிய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக அமைக்கப் பட்ட சரத்துக்களையும் நீக்கினார்கள். அப்படிப் பார்க்கும்போது, மக்களால் தேர்ந்தெடுக்ப்பட்ட
தமிழ் உறுப்பினர்கள் தமது இறைமையைத் தாமே எடுத்துக்கொள்வது தவறில்லையே!

1975.02.06 இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் தந்தை செல்வா பெரும்பான்மையால் வெற்றியீட்டி தமிழர் சிங்கள அரசின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை என்பதை நிரூபித்தார். திரு. சி. சுந்தரலிங்கம் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் அவரது கட்சியுடன் சேர்ந்து தனித் தமிழரசை ஈழத்தீவில் அமைக்கவேண்டும் என்ற கொள்கையுடன் தேர்தலில் நின்றார். அவரைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு திரு. வ. நவரத்தினமும் தனித் தமிழரசு அமையவேண்டும் என்று தேர்தலில் நின்றார்.

ஆனால் கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கொண்டிருந்த தமிழினம் தனியரசுக்கு
ஆதரவு வழங்கவில்லை.

1956, 1960, 1961, 1965, 1970 நிகழ்ந்த பொதுத் தேர்தல்களில், தன்னாட்சியுடன் சேர்ந்த மத்திய கூட்டாட்சி வேண்டி நின்ற தமிழர்கள், ஒவ்வொரு முறையும் சிங்களவர்களால் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர்.

1977.05.14 இல் தமிழர் கூட்டணி தலைமையில் தமிழ்த் தலைவர்களும் தமிழ்ப் பொதுமக்களும் தமிழீழக் குடியரசை அமைக்க வட்டுக்கோட்டையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்தக் மாநாட்டில் தந்தை செல்வா, திரு. ஜி.ஜி. பொன்னம்பலம்,

திரு. செள. தொண்டமான் ஆகியோர் பங்குபெற்றினர். அப்போதுதான் தமிழீழக் குடியரசுக்கான வட்டுக்கோட்டைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி,

1. தமிழீழக் குடியரசு:

"ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள தன்னாதிக்க உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமையுள்ள மதசார்பற்ற சமத்துவமான தமிழீழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பாக அமையும்."

2. தமிழீழ நிலப்பரப்பு

"தமிழீழத்தின் நிலப்பரப்பாக வடக்குக் கிழக்கு மாகாணமும், புத்தள மாவட்டமும் இருக்கும்."

3. தமிழீழக் குடிமக்கள்

- தமிழீழப் பிராந்தியத்திற்குள் வசிக்கும் அனைவரும்.

- இலங்கையின் எப்பகுதியிலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் தமிழீழத்தில் குடி உரிமை கோரலாம்.

- இலங்கை மூதாதையர்களைக் கொண்ட உலகின் எப்பகுதியிலும் வசிக்கும் தமிழ் பேசுவோரும் தமிழீழத்தின் குடி உரிமையைக் கோரலாம்.

oooOOooo
[ பாகம் : 11 ]

1977.06.21 இல் சிறீலங்கா அரசால் தேசியப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோரினர். ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தமிழத் தலைவர்களான தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்னம்பலம், திரு. மு. திருச்செல்வம் ஆகியோர் இறந்துவிட்டனர். அதனால் அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றார். இருப்பினும், வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தித் தமிழீழக் குடியரசை அமைக்க தமிழ் மக்கள் தமது முழு ஆதரவையும் த.வி கூட்டணியினருக்கு அளித்தனர்.

ஆனால் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழீழத் தனியரசை அமைப்பதற்குப் பதிலாக சிறீலங்கா தேசியப் பேரவைக்குச் சென்று எதிர்க்கட்சிப் பதவியில் உட்கார்ந்துகொண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தன அளித்த பிரதேச அமைப்பையும் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அளித்த ஆணையைப் புலிகள் ஏற்று தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய வண்ணம் உள்ளனர்.

புதிய தமிழ்ப் புலிகள் என்று 1972 இல் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1976.05.05 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர்மாற்றப்பட்டு வே. பிரபாகரன் தலைமையில் சிங்கள அரசினது ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ் மண்ணில் புலிகள் போரிட்டு வருகின்றனர்.

1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையில் 3,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, இலட்சக்கணக்கானோர் அகதிளாக்கப்பட்டு, பல கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து, தமிழ் ஆண்களும் பெண்களும் பலாத்காரப்படுத்தப்பட்டு, கொழும்பில் 'இங்கு தமிழ் இறைச்சி விற்கப்படும்" என்று தமிழரைக் கொன்று மாமிசமாக விற்குமளவிற்கு சிங்களவர்களின் மிருகத்தனம் இருந்தது. அந்த இனக்கலவர்த்தில் களுத்துறைச் சிறைச்சாலையில் இருந்த 53 தமிழ் அரசியல் கைதிகளும் படுகொலை செய்யப்பட்டனர்.

புலிகளைப் போன்று பல தமிழீழ விடுதலை இயக்கங்கள் புலிகளின் காலத்தில் தோன்றினாலும், இன்று புலிகள்தான் தமிழீழப் பாதுகாவலராக தமிழ் மக்களால் இனங்கானப்படுகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைமையில் 30 ஆண்டாக தமிழீழ மீட்புப் போர் நிகழ்ந்துகொண்டு வந்துள்ளது.

பிரபாகரன் தலைமையில் புலிகளுடன் சிங்களத் தலைவர்கள் பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர். அவ்வாறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு தமிழர் முதுகில்தான் குத்தியுள்ளார்கள். பிரேமதாசா, சந்திரிக்கா, ரணில், மகிந்த ராஜபக்ச என்று சிங்களத் தலைமைகள் 1977 ஆம் ஆண்டின்பின்னர் தமிழர்களை ஏமாற்றியுள்ளனர்.

திம்பு ஒப்பந்தம், இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதன்பின்னர் சிங்களத் தலைவர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் என்ற ஒன்றும் தமிழரின் விடிவுக்குப் பதிலளிக்கவில்லை. திம்பு ஒப்பந்தத்தில் புலிகள் மட்டுமல்லாது, தமிழீழ விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னனி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஆமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தனித் தமிழீழத்துக்காகக் குரல் கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இடைக்காலத் தன்னாட்சியைத் தமிழர்கள் கோரினார்கள். ஆனால் அதைத் தரவும் சிங்களவர்களுக்கு மனமில்லை. நான்கு ஆண்டுக்கு மேலாக உலகவலம் வந்ததுதான் மிச்சம். சமாதனப் பேச்சுக்களில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை அரசு அமல்படுத்துவதாகத் தெரியவில்லை.

2004 ஆம் ஆண்டு டிசம்பரில் கடற்கோள் வடகிழக்கைத் தாக்கியபோது, ஈழத்தமிழர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கடற்கோள் நிவாரணத்தை ஈழத்தமிழருக்குப் பகிர்ந்தளிக்கக்கூட சிங்களவர்களுக்கு மனமில்லாமல் இருந்தது.

அதன்காரணமாக கடற்கோள் பொதுக்கட்டமைப்பு என்று வெளிநாட்டு நிவாரணப்பணிகளைத் தமிழரும் சிங்களவரும் ஒன்றிணைந்து செயற்பட ஏற்படுத்த முயன்ற திட்டத்தையும் சிங்கள அரசு உதாசீனம் செய்தது.

மேலும், தமிழர்களைப் படுகொலை செய்து, சம்பூர் போன்ற போர்நிறுத்தம் ஏற்படும்போது தமிழரிடம் இருந்த பகுதிகளை ஆக்கிரமித்தது. தற்போது ஏ-9 நெடுஞ்சாலையை மூடி யாழ்ப்பாணத் தமிழர்களைப் பட்டினிபோட்டு, வாகரையில் தமிழரைப் பட்டினிபோட்டு தமிழரை அடிபணிய வைக்க முயல்கின்றது சிங்கள அரசு.

1910 இல் சட்ட நிரூபணச்சபை அமைக்கப்பட்டபோது, இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று ஈழத் தமிழர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த நல்நோக்கத்தால் இன்றுவரை ஈழத்தமிழர்கள் சிங்கள பெ ளத்த இனவாதிகளின் இரும்புப் பிடியில் சிக்குண்டு தவிக்கின்றனர்.

1972.05.22 இல் புதிய அரசியல் யாப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கைத்தீவு பூரணமாக பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதன்போது 1833 இல் ஆங்கிலேயரால் சிங்களவர்களுடன் இணைக்கப்பட்ட தமிழீழமும் விடுவிக்கப்பட்டது.

எனவே, தமக்கென்று அரசுடன் ஆங்கிலேயரின் வலுக்கட்டாய இணைப்புக்கு முன்னர் ஈழத்தீவில் வாழ்ந்து வந்த தமிழர்கள், சிங்கள அரசின் கெடுபிடிகளுக்கும் இனத்துவேசத்துக்கும் உள்ளானார்கள். அதற்கு எதிராக அறவழிகளில் போரிட்டு எந்தவிதப் பயனுமின்றி ஆயுதத்தைக் கையில் ஏந்தினார்கள். அந்த ஆயுதபலத்தில்தான் இன்று பலதமிழ் உயிர்கள் தங்கியுள்ளன.

இன்று தமிழீழம் மலரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதுவே ஈழத்தமிழரின் நெடுங்காலக் கனவும் தாகமும் ஆகும். தமிழீழம் உருவாகாமல்போனால் இன்னும் 30 ஆண்டில் தமிழர் என்ற இனமே ஈழத்தில் இல்லாத அளவுக்கு சிங்கள அரசும் சிங்கள இனவாதிகளும் தமிழர்களை எவ்வாறாவது ஒழித்துக்கட்டிவிடுவார்கள்.

சிறீலங்கா அரசின் கொடியில்கூட சிங்களவர்களுக்கு கூடிய இடத்தையும், சிங்கச் சின்னத்தையும் அரச இலையையும் இட்டு, தமிழருக்கும் சிங்களவருக்கும் இரண்டு வண்ணங்களைச் சேர்த்துள்ளது.

நாட்டுக்கொடியில் சமத்துவம் பேணாத சிறீலங்க அரசு. கடற்கோளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தடுத்த சிங்கள அரசு, இனியும் தமிழர்களை மதித்து நடக்கும் என்றும் நாம் நம்புவது பகல்கனவாகும்.

ஒவ்வொரு பொதுத் தேர்தலின் பின்னரும் சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, தீவைத்து, சூறையாடிக் கொண்ட்டாடினர், இதில் மிகவும் பயங்கரமான இனக்கலவரம் 1983 யூலையில் நடந்த இனக்கலவரமாகும், அந்த இனக்கலவரம் தான் தமிழர்களின் பொறுமையை முற்றாகச் சோதித்து சராசரி ஈழத்தமிழர்களுக்கு ஆயுதமேந்திப் போராடித் தமிழீழத்தை அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற உணர்வைத் தோற்றுவித்தது.

oooOOooo
[ பாகம் : 12 ]

மகாத்மா காந்தி அறவழியில் போராடி வென்றாரே ஈழத்தமிழர்கள் ஏன் அப்படிப் போராடக் கூடாதென சிலர் புலம்புவதில் எந்த நியாயமுமில்லை. மகாத்மா வாழ்ந்த காலகட்டம் வேறு, அதை விட மகாத்மா காந்தி பெரும்பான்மை மக்களின் சார்பில் போராடியவர், அவருடைய போராட்டம் பெரும்பான்மையினர் சிறுபான்மைக் குடியேற்றவாதிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம். ஆனால், ஈழத்தமிழர்களின் போராட்டமானது சிறுபான்மைத் தமிழர்களின் இனவாதம் மிகுந்த சிங்கள, பெளத்த வெறிக்கெதிரான போராட்டம். அதனால் மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டத்தை ஈழவிடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட முடியாது.

1983 ஆம் ஆண்டு நடந்த தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தின் பின்னர் சிங்கள அரசு தமிழர்களைக் கொண்று குவித்து பல இன்னல்களுக்கு உள்ளாக்கியது. 1983 இல் பிந்துநுவோவா சிறையில் இருந்த தமிழ்க் கைதிகள் ஈவிரக்கமின்றி, அங்கிருந்த சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணம் சிங்கள அரசுதான்.

அதன்பிறகு தமிழ்க் கிராமங்களைச் சுற்றிவளைத்து அங்கிருந்த மக்களைப் படுகொலை செய்தும், கடலில் பயணம் செய்யும் தமிழ்ப் பயணிகளை வழிமறித்து வெட்டிக்கொண்றும் பல கோரத் தாண்டவங்களை சிங்கள அரசு நிகழ்த்தியுள்ளது.

1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் உள்ள சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடித் தமிழ்ப் பொதுமக்கள் 185 பேர் இராணுவ முகாமுக்கு இராணுவச் சீரூடையிலும் சாதாரண சீரூடையிலும் இருந்த இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களைக் கூர்க்கத்தியால் குத்தி கதறக் கதறப் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட தமிழர்களில் பச்சிளம் பாலன்களும் பெண்களும் அடங்குவர். அந்தக் கொலைக்களத்தில் இருந்து தப்பிய ஒருத்தர் பின்னாளில் அளித்த வாக்கு மூலத்திலிருந்தே இந்த உண்மைகள் வெளியாயின.

1995 ஆம் ஆண்டு சிங்கள வான்படைகள் நவாலித் தேவலாயம் மீதும் அதனருகே இருந்த கட்டிடங்கள் மீதும் வீசிய குண்டால் 65 பேர் கொல்லப்பட்டும், 165 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமுமடைந்தனர்.

இதுபோன்று பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இந்த சம்பவங்கள் குறைந்ததற்கு தமிழர்கள் ஆயுதப் போராட்டம் வலுவுற்றதுதான் காரணம். அதுதான் ஈழத்தமிழரிடையே உள்ள பழமொழி ஒன்று கூறுகின்றது.. 'புலிகள் இல்லையென்றால் தமிழனை எலியும் தின்டுவிடும்" என.

வள்ளிபுன மானவிகள் வன்னியில் வான்பறனையால் குண்டுபோடப்பட்டு சாக்கொல்லப்பட்டதும், வாகரையில் தங்கியிருந்த தமிழ் அகதி முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தமிழ்ப் பொதுமக்களைச் சிங்கள அரசு கண்மூடித்தனமாகக் கொண்றதும் மன்னிக்கமுடியாத கொடூரமான செயல்கள் ஆகும்.

வங்காலை, அல்லைபிட்டி, அதற்கு முன்னரான செம்மணிப் புதைகுழி என்று பல உண்டு. மேலும் சிங்கள இராணுவத்தால் பல தமிழர்கள் பலாத்காரப்படுத்தப்பட்டும், நாய்போல் சுடப்பட்டும் செத்துள்ளார்கள். அண்மையில்கூட தமிழ் விவசாயக்கல்லூரியில் புகுந்து நான்கு அப்பாவி மாணவர்களைக் கொண்றுவிட்டு பலரைப் படுகாயப்படுத்திவிட்டுச் சென்றது சிங்கள அரசு.

1980 - 2002 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் சிறீலங்காவில் 12,221 பேர் காணமல் போய் உள்ளனர் என்று ஐநாவின் மனிதஉரிமைகள் அமைப்புக் கூறுகின்றது. 12,221 பேரும் கைது செய்யப்பட்டபின்னரே காணாமல் போயுள்ளனர். உலகளாவிய ரீதியில் காணமல்போனவர்கள் தொகையில் இரண்டாம் இடத்தை சிறீலங்கா இடம்பிடிக்கின்றது. சிறீலங்காவிற்கு முன்னர் ஈராக் 16,384 காணாமல்போனோர் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது.

மேற்கூறிய வழிகளால் சிங்கள அரசுகளின் ஆட்சியின்கீழ் இலங்கையில் தமிழர் சொல்லேலாத் துன்பங்களுக்கு உள்ளாகினார்கள், தொடர்ந்தும் பெரும் அவதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பியர் காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த சிங்களவர் காலத்திலும் தமிழர்கள் அனுபவித்த இன்னலுக்கு அளவேயில்லை.

தமிழர் தம் நிலத்தை, உடமையை, உயிரை, உறவுகளை எல்லாவற்றையும் இழந்து தம் சொந்த நாட்டில் அகதிகளாக மாறியுள்ள அவலம் தற்போதுள்ளது.

ஈழத்தமிழர்கள் நாற்பது வருடங்களாக சனநாயக வழியிலும் காந்தீய வழியிலும் தமது உரிமைகளைப் பெற போராடி எந்தவித பலனும் கிடைக்காமையால் தான் ஆயுதமேந்திப் போராடத் துணிந்தார்கள். எத்தனையோ கிழித்துப் போடப்பட்ட ஒப்பந்தங்கள், பஞ்சாயத்துத் திட்டங்கள், அதிகாரமற்ற மாவட்ட சபைகள், பிரதேச சபைகள், ஏமாற்றும் அதிகாரப் பரிமாற்றம் இப்படி எத்தனையோ சுத்து மாத்துக்களையும் பார்த்து ஈழத்தமிழர்கள் இளைத்து விட்டார்கள். இலங்கையில் தமிழீழம் மலர்வது ஒன்று தான் ஐம்பது வருடங்களாகச் சிங்கள இனவாத அரசின் சட்டங்களாலும், இனக்கலவரங்களாலும், இராணுவ அட்டூழியங்களாலும் பாதுகாப்பற்று, நாடிழந்து, நாதியற்று, நிம்மதியில்லாமல் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வு மலரும் ஒரே வழியாகும்.

தமீழம் இந்திய ஒற்றுமையைக் குலைக்குமா? தமிழீழம் மலர்ந்தால் தமிழ்நாடு பிரிவினை ஏற்படுமா? தமிழீழம் மலர்ந்தால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியுமென சில இலங்கைத் தமிழர்களிடம் எந்த வித தொடர்பும் கொண்டிராத இந்திய கட்டுரையாளர்கள் கூறுகிறார்கள், இவர்கள் கூறுவதில் எந்தளவுக்கு உண்மையுண்டு? இப்படியான கருத்தைச் சிங்களவர்கள் அவிழ்த்து விடுவதும் அதற்கு ஆதரவளிப்பதுமுண்டு, அவர்கள் அப்படிச் செய்வதன் நோக்கம், இந்தியாவையும் ஈழத்தமிழர்களையும் ஒன்று சேராமல் செய்வது தான் சிங்களவர்களின் நோக்கம்.

தமிழீழம் மலர்ந்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்கும் எனக் கூறுபவர்கள் தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்குமிடையிலான அரசியல், சமூக நிலவரங்களின் வேறுபாடுகளை அறியாதவர்கள் என்பது தான் உண்மை. வங்காளதேசத்தை இந்தியா உருவாக்கியது, இந்தியாவின் மேற்கு வங்காளம் பிரிவினை கோராதபோது, தமிழீழம் மலர்ந்தால் தமிழ்நாடு மட்டும் பிரிந்து போய்விடும் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்களின் இந்தியநாட்டுப் பற்றை அவமதிப்பதாகும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

தமிழ்நாட்டில் பிரிவினைக்கு ஆதரவளித்து தமிழுக்காக தீக்குளித்ததெல்லாம் அந்தக் காலம். இந்திய அரசியல், பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்றுமில்லாதளவுக்கு அதிகாரம் கொண்டதாகவுள்ளது மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியர்கள் என்ற நாட்டுப்பற்றுடன் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு, தமிழீழத்தின் அரசியல் சமூக, பொருளாதாரப்
பிரச்சனைகளுக்குமிடையில் அடிப்படை வேறுபாடுகளுண்டு.

தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் இன, மொழி, கலாச்சார, மத, குடும்பத் தொடர்புகளையுடைய ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டின் திராவிடக் கொள்கைகளுடன் எள்ளளவு தொடர்புமில்லாதவர்கள். இலங்கைத் தமிழர்கள் திராவிடம் என்ற வார்த்தையைப் பாவிப்பதுகூடக் கிடையாது.

ஈழத்தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கை சிங்கள பெளத்த ஆதிக்கத்தினது இனக் கலவரங்களினதும், முற்றிலும் சிங்களவர்களை மட்டும் கொண்ட சிங்கள இராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்க்கும் அடையாளமாக உருவானது.

ஈழத்தமிழர்களின் வரலாற்றிலேயே எந்தவொரு ஈழத்தமிழர் தலைவரும் இந்தியாவுடனோ அல்லது தமிழ்நாட்டுடனோ இணைவதைப் பற்றிப் பேசியதில்லை. அப்படியே தமிழீழம்
மலர்ந்தால், தமிழீழத்தின் தலைவர்கள் யாரும் முட்டாள் தனமாகத் தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தூண்டமாட்டார்கள். அப்படி ஏதாவது செய்து முட்டாள் தனமாகச் சீண்டிப் பார்த்தால், தேவையில்லாமல் இந்தியாவின் பகையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டி வருமென்பதும் தெரியும். அதை விட புதிதாக மலர்ந்த தமிழீழம் வர்த்தகத்துக்கும், பாதுகாப்புக்கும் இந்தியாவில் தான் தங்கியிருக்கும், அத்துடன் பெரும்பான்மை சைவத்தமிழ் தொடர்பால் தென்னாசியாவில் தமிழீழம் இந்தியாவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கல்வியறிவுள்ள நாற்பது இலட்சம் இலங்கைத் தமிழர்கள், தமிழீழத்தில் தமது அடையாளத்தைப் பேணுவதை விடுத்து, தமிழ்நாட்டின் ஆறு கோடித் தமிழர்களுடன் கலந்து காணாமல் போவதை விரும்புவார்கள் என்பதை சொல்லுகிறவன் சொன்னால் அதைக் கேட்கிறவனுக்கு சொந்தப்புத்தி எங்கே போனது? உண்மையில் மலரும் தமிழீழம் மொழி, கலை, கலாச்சார, வர்த்தக, குடும்ப்ப தொடர்புகளைத் தான் தமிழ்நாட்டுடன் வைத்திருக்குமே தவிர எந்த வித அரசியல் தொடர்பையும் வைத்திருக்காது என்பது நிச்சயம்.

(முற்றும்.)

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors