தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வேண்டியது வேறில்லை
- ஜெயந்தி சங்கர்

[ பாகம் : 1 ]

முதன்முதலில் சரவணனைப் பார்க்கநேர்ந்த அந்தச் சம்பவமே பெரும்பாலும் செல்வியின் நினைவில் துணி உலர்த்தும் போதெல்லாம் வரும். அன்று அடித்த வெயிலும், அதன் வெப்பமும், தான் உடுத்தியிருந்த ஆடையும் அசைபோட்டநாட்களில் அவளது நினைவேடுகளில் படிந்துவிட்டிருந்தன. வந்தபுதிதில் மூங்கில் கழிகளில் வரிசையாகத் துணிகளை விரித்து 'க்ளிப்' போட்டு, கழியை ஜன்னலுக்கு வெளியில் லாவகமாகக் கொடுத்து வாங்கி, வெளிப்புறமிருக்கும் துவாரங்களில் பொருத்தும் 'கலை'  செல்விக்குக் கைவரப் பெற்றிருக்கவில்லை. அன்று போர்வையை உலர்த்தவேண்டியிருந்தது. ஈரப்போர்வைக்கு மூன்று மடங்கு கனம் கூடிவிட்டிருந்தது. தூக்க முடியாமல் தூக்கியதில் பிடி நழுவி அப்படியே கீழே விழுந்தது. அங்கு பங்க்ளாதேசத்து துப்புரவாளர் தலையில் விழுந்துவிட்டது. பேசாமல் ப்ரியா சொன்னதைப்போல அடுக்ககத்தின் பொதுத் தாழ்வாரத்திலேயே போர்வையை உலர்த்தியிருக்கலாம்.

செல்வி எட்டி பார்த்துவிட்டு, கிடுகிடுவென்று போர்வையை எடுக்கக் கீழே ஓடினாள். அவளைப் பார்த்ததும் தன் மொழியிலும் உடைந்த ஆங்கிலத்திலுமாக கையை ஆட்டி ஆட்டி செல்வியைத் திட்டினான். போர்வையைக் கொடுக்கமாட்டேன் என்று எடுத்து வைத்துக்கொண்டான். போலிஸ¤க்குப் போவேன் என்று சொல்லிக் கொண்டே, வீங்கியிருந்த தன் உச்சந்தலையைக் காட்டினான். செல்விக்குப் பாவமாகத் தான் இருந்தது. பயத்தில் திருதிருவென்று விழித்துக்கொண்டே செய்வதறியாது நின்றாள்.

அப்போது அந்த வழியில் போய்க் கொண்டிருந்தான் சரவணன். மதிய உணவு இடைவேளை நேரம். அவனுடன் பேசிச் சமாதானம் செய்து துணிகளைக் கழியோடு அவனிடமிருந்து வாங்கி செல்வியிடம் கொடுத்தான். 'தேங்க்ஸ்' என்று மட்டும் சொல்லிவிட்டு நிற்காமல் மாடிக்கு வந்துவிட்டாள். அப்போது சரவணனை யாரென்றே அவளுக்குத் தெரியாது.

அதன் பிறகு, பார்க்கும்போதெல்லாம் சரவணன் சிரித்துப் பேசி வந்தான். சாதாரணமாக," எந்த ஊரு?" என்று ஆரம்பித்த பேச்சு அவரவர் குடும்பம், ஊர் பற்றியதாகவேயிருந்தது. அவ்வழியே போகும்போது பேசியவளுக்கு, பேசவென்றே அவ்வழியில் போகத்தோன்ற ஆரம்பித்தது. நட்பு ஏற்பட்டது. வந்த சில வாரங்களுக்கு, வாரத்திற்கொரு நாள் கிடைக்கும் ஓய்வு நாளன்று தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தவள், சரவணனுடன் கோவில், சிரெங்கூன் சாலை என்று கால்வலிக்கச் சுற்றினாள். வாய் வலிக்கப் பேசவும் செய்தாள். சாதாரண நட்பு இருவரும் அறியாமலே கனிந்து கல்யாணத்தைப் பற்றிப் பேசும் அளவிற்கு ஒருவருடத்தில் வளர்ந்து விட்டிருந்தது.

வாரயிறுதியில் அதிகபடியாகச் சம்பாதிக்க நினைத்த வேறு மூன்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக வீடுகளுக்கு 'பெயிண்டிங்க்' வேலைகள் செய்வதாக சரவணன் செல்வியிடம் சொன்னான். ப்ரியா வீட்டிற்கு பெயிண்டிங்க் செய்யவேண்டும் என்று சொன்ன நினைவு வரவே வீட்டு நம்பரைக் கொடுத்தாள். வீட்டிற்கு சரவணன் போன் செய்ததும் செல்வியின் பேரைக் கேட்டுவிட்டான். ப்ரியாவுக்கு ஒரே அதிர்ச்சி!

"செல்வி, யாரு இது? இதெல்லாம் நல்லதில்ல. இன்னும் என்னென்னல்லாம் எனக்குத்தெரியாம செய்யற?,.எங்க பொறுப்புல இருக்க நீ, தெரியுமில்ல. நீ என்ன பண்ணிகிட்டிருக்கன்னு பாக்கவே ஒரு ஆள் வேணும்னா முடியமா?", என்று கோபத்தில் சுள்ளெனக் கொட்டினார். "இல்ல மேடம், 'பெயிண்டிங்க்' பண்ணுவேன்னாரு. தீபாவளிக்குமுன்ன நம்ம வீட்டுக்கு பெயிண்டிங்க் பண்ணனும்னீங்கல்ல,..அதான் போன் நம்பரக் குடுத்தேன்,.", என்று பயந்துகொண்டே விளக்க முயன்றாள்.

அன்று ப்ரியா செல்வியைத் தனியாக உட்கார வைத்து நீண்ட அறிவுரை கொடுத்தார். சரவணன் தன் நண்பர்களோடு வந்து வேலை செய்தான். மிகவும் கச்சிதாகச் செய்து முடித்த சரவணனின் வேலைநேர்த்தியும் நேர்மையும் ப்ரியாவைக் கவர்ந்துவிட்டது. நல்ல உழைப்பாளிகள் என்று சான்றிதழ் கொடுத்தார்.

கருப்பாயிருந்தாலும் வெள்ளை வெளேரென்ற சிரிப்போடு களையான முகத்துடனும், திடகாத்திரமான உடற்கட்டுடனும் உயரமாயிருந்த சரவணனுக்குத் தான் பொருத்தமானவள் தானா என்பதில் செல்விக்கு அவ்வப்போது சந்தேகம் வருவதுண்டு. கவனமாய் உடுத்தினால் நன்றாகத் தான் இருக்கிறேனோ என்றும் கூடவே தோன்றும். தன் எண்ணவோட்டத்தை வியந்து சிரிப்புதான் வரும்.

மிகச் சாதாரண உருவமும், சராசரியான உயரமும் நிறமும் கொண்ட தான் 'பத்தோடு பதினொன்று' ரகம் என்பதே அவளது அசைக்கமுடியாத எண்ணம். சராசரி கிராமத்து முகம். மொத்தமாய்ப் பார்த்தால் அவலக்ஷணமில்லை என்பார்கள். மீண்டும் ஒரு முறை தனித்தனியாகப் பார்த்தால் முதலில் சொன்னது தவறோ என்றே நினைப்பார்கள். ஆனால், சரவணனோ," உனக்கென்ன கொறச்சல்? சும்மா அப்படியெல்லாம் சொல்லாத செல்வி. உன்னாலதான் நான் பீர் குடிக்கறதையும் சிகரெட்டையும் நிறுத்தியிருக்கேன். எத்தன காசு மிச்சம் தெரியுமா? நம்ம கல்யாணத்துக்கும் பணம் சேருதுலா", என்பான் பளீர்ச்சென்ற சிரிப்புடன். செல்விக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

சென்ற வருட இறுதியில் ஒரு முறை சரவணனின் சில நண்பர்கள் சிலர் ஆறு மாதத்திற்கு மேல் சம்பளமே கொடுக்கப்படாமல் அப்படியே கைவிடப்பட்டு செய்வதறியாதிருந்தனர். பத்திரிக்கைகளும் நாளிதழ்களும் அவர்களைப்பற்றி வெளியிட்டன. மாதக்கணக்காகச் செய்தவேலைக்கு சம்பளமில்லாமல் சீன முதலாளியோடு பேசி நியாயம் கேட்கமுடியாமல் இந்திய ஊழியகள் பட்ட கஷ்டம் அப்பப்பா.

அந்த சமயத்தில் சரவணனுக்குத் தன் வேலைபோய்விடுமோ என்று பெரும்கவலை ஏற்பட்டிருந்தது. அவன் ஏஜெண்டுக்குக் கொடுத்த பணத்தை மட்டுமே மூன்று வருடங்களில் ஈட்டியிருந்ததால், குடும்பத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டான். ஊரில் அவனது அம்மாவிற்கு உடல் நலமில்லை என்ற செய்தியும் சேர்ந்து மனச்சோர்வில் இருந்தவன் உறக்கம் வராமல் அவதிப்பட்டு இரண்டு நாட்கள் காய்ச்சலில் வேறு படுத்து விட்டான்.

அன்று திடீரென்று நட்டநடு இரவில் வந்து வீட்டுக் கதவைத் தட்டினான். செல்விதான் தூக்கக்கலக்கத்துடன் போய் திறந்தாள். சோர்வோடும் கண்களில் கலக்கத்தோடும் சரவணனைக் கண்டதுமே, அதிர்ச்சியில் அவளது தூக்கம் விசையை அழுத்தினாற்போல முற்றிலும் கலைந்து விட்டது. வெளிறிய முகத்தோடு"என்ன இந்த நேரத்துல?", என்றதுமே,"செல்வி, எனக்கு,..எனக்கு,..எங்க அம்மா நெனப்பாவே இருக்கு, அதான் உன்னப்பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொல்லிக்கொண்டே நின்றவனைப் பார்த்துக் கோபப்படவும் முடியாமல் அதிகம் பேசவும் முடியாமல், "என்னப் பாக்கவா?", நம்ப முடியாமல் கேட்டாள். தன் கண்களையே நம்பமுடியாமல், ப்ரியாவைக் கூப்பிடத் திரும்பினாள். அதற்குள்,"ஆமா,.....உன்னத் தான், ம்,...பாத்துட்டேன், சரி, வரேன்", என்று அகன்றான். செல்வி அன்று 'கேட்'டைத் திறக்காமலேயே பேசியனுப்பியிருந்தாள்.

சரவணன் தன் அம்மாவை நினைத்துக்கொண்டு தன்னைப் பார்க்கவந்ததை அடுத்தநாள் முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தாள். பிழைக்க வந்த இடத்தில் தனக்கிருந்த நிரந்தர வசிப்பிடமோ, அன்பான ஒரு குடும்பமோ இல்லாமல் இருந்த சரவணனது நிலை அவளுக்கு அவன்பால் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் இயல்பாகவே அவனிடம் இருந்த கண்ணியம் அவன் மேல் தனக்கிருந்த நம்பிக்கையை பலமடங்கு கூட்டியதாய் உணர்ந்திருந்தாள்.

செல்வியே தன் காதல் விஷயத்தைத் தயங்கித் தயங்கிச் சொன்னாள் ப்ரியாவிடம் ஒரு நாள். "நீங்க ரெண்டு பேரும் ஸின்ஸியரா காதலிக்கறதாயிருந்தா இதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன். ஆனா, இனிமே போன் பண்ணக்கூடாதுன்னு சொல்லிடு. அதுமட்டுமில்ல, இன்னோண்ணு. நீ அங்கயிங்க சுத்தினா உன்னப் பத்தின கவல எனக்கு அதிகமாயிடும். எல்லாம், ஒரு ஜாக்கிரதைக்கிதான்,..ம்,.நீ இனிமே வாரத்துல ஒரு நாள் எடுக்கற 'ஓ·ப் டே'ல எங்கக்கா வீட்டுக்குப் போயி ஹெல்ப் பண்ணு. அவங்க தாராளமாவே காசு தருவாங்க. ", என்றவளிடம்,"சரி மேடம், நீங்க சொல்றமாதிரியே நடந்துக்கறேன் ", என்று வாக்குறுதியளித்தாள்.

அப்போதைக்கு ப்ரியா வேறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பார் என்று ஒத்துக்கொண்டாளே தவிர சரவணனைப் பார்க்காமல் இருக்க ஆரம்பத்தில் அவளால் முடியத்தான் இல்லை. அடுத்த நாளே அவன் போன் செய்ததும், போனை எடுத்த ப்ரியா அவனிடமே கண்டிப்போடு சொல்லிவிட்டாள். வாரத்தில் ஒருநாள் எங்கள் வீட்டிற்கே வந்து ப்ரியாவும் ரகுவும் இருக்கும்போது கொஞ்சநேரம் பேசலாம் என்று சொல்லிவிட்டிருந்தார்.

சரவணன் ப்ரியாவை ஒரேயடியாய் புகழ்ந்துதள்ளினான். செல்வியை மிகவும் பொறுப்பாகப் பார்த்துக்கொள்கிறார்கள், அவர்கள் வீட்டில் வேலை கிடைக்க செல்வி கொடுத்து வைத்திருக்கிறாள் என்று ஒரே புகழாரம் ப்ரியாவுக்கு. அன்றிலிருந்து ப்ரியாவின் அக்கா வீட்டில் தான் செல்விக்கு வாரவாரம் 'ஓவர் டைம்'. அவர்கள் காசு தராமல் என்றுமே வேலை வாங்கியதில்லை. சரவணன் சொன்னது நூற்றில் ஒரு வார்த்தை. ப்ரியாவைப் போன்ற குணத்தைப் பார்ப்பது அரிதுதான்.

செல்வி வேலைக்குச் சேர்ந்த புதிதில் புது ஊரும் வீடும் பழக மிகவும் சிரமப்பட்டு விட்டாள். பேராவூரணியில் அவர்கள் வீட்டின் சுற்றுச்சூழலுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்த சிங்கப்பூர் சூழல் அவளுக்கு முதலில் மிகுந்த மிரட்சியைக்கொடுத்தது. அவள் தேறாமல் விட்டிருந்த தமிழ் மீடியம் பத்தாம் வகுப்புப்படிப்பு, ஆங்கிலம் பேசக்கூடிய அளவிற்கு அவளுக்குக் கைகொடுக்கவில்லை. ஓரளவு புரிந்துகொள்ளக்கூடியவள் தான். ஆனால், சிங்கப்பூரர்கள் பேசும் விதத்தைக் கேட்டு வெகுநாட்களுக்கு அது ஆங்கிலம் என்றே அறியாதிருந்தாள். பற்கள் தெரிய நிரந்தரமான புன்னகைகையுடன் சமாளித்த அந்த நாட்களை எப்போது நினைத்தாலும் அவளுக்கே சிரிப்பு வரும். நான்கே மாதங்களில் உடைந்த ஆங்கிலத்தை உள்ளூர்காரர்கள் பேசுவதைப்போலவே 'லா' சேர்த்துப் பேசத் தெரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டிருந்தாள்.

ஸ்படிகமாக இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தால் குழாயில் கொட்டும் தண்ணீர்,  தீப்பெட்டியை அடுக்கினாற்போல ஒரே மாதிரியான அடுக்கு மாடிக்கட்டிடங்கள், பளீரென்று அடித்த வெயிலின் சுவடேயில்லாமல் இருட்டிக்கொண்டு கொட்டித்தீர்க்கும் மழை, பெய்து ஓய்ந்ததும் எந்த இடத்திலும் நீர்தேங்காத துப்புரவான வீதிகள் என்று ஒவ்வொன்றும் செல்வியை வியக்கவைத்தது. சிங்கப்பூரில் மிகவும் பிரபலம் மழைக்குமுன்பும், மழையின் போது இடிக்கும் இடி! அசாதாரணமான ஓசையும் வீர்யமும் கொண்ட அந்த இடிக்குக்கூட மின்வெட்டே இருக்காது. தொலைபேசியும் முரண்டுபிடிக்காமல் தன் வேலைச் சமர்த்தாகத் தொடரும்.

செல்விக்கு அலார கடிகாரத்தின் அவசியமே இருந்ததில்லை. ஐந்து மணிக்கு டாணென்று எழுந்துவிடும் பழக்கமுண்டு. முன்னிரவு எப்போது தூங்கச் செல்கிறாள் என்பதெல்லாம் பொருட்டே கிடையாது. காலையில் எழுந்ததுமே உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டு இறைவனை நினைக்க வேண்டும் என்று சிறுவயது முதலே அம்மா சொல்லிச் சொல்லிப் பழக்கப் படுத்தியிருந்தாள்.

அவளுக்கு உள்ளங்கையில் விழிப்பதில் ஒன்றும் பிரச்சனையிருக்கவில்லை. அனிச்சயாகச் செய்துவந்தாள். ஆனால், இறைவனை நினைக்காமல், சில வருடங்களாக சரவணனை நினைத்துக் கொள்வதைத்தான் தவிர்க்க முடியவேயில்லை. ஆரம்பத்தில் உள்ளூர ஒரு சின்ன குற்றவுணர்வு இருந்து வந்தது. பிறகு, அதை நினைத்துத் தனக்குள் சிரித்ததுமுண்டு. நாளடைவில் அதுவே பழக்கமாகிவிட்டிருந்தது.

oooOOooo
[ பாகம் : 2 ]

கலைந்திருந்த தலைமுடியை இருகைகளாலும் ஒதுக்கிவிட்டுக்கொண்டாள். படுக்கையை உதறிப்போட்டு விட்டு, பல்தேய்த்து முகம் கழுவிக்கொண்டு கா·பி டிகாக்ஷனுக்கு அடுப்பில் வென்னீர் வைத்தாள். ரகுவிற்கு இன்ஸ்டண்ட் காபியெல்லாம் பிடிக்காது. காபி குடித்துவிட்டு குளியல். பிறகு வெண்ணையில்லாமல் வாட்டிய இரண்டே இரண்டு துண்டு ரொட்டி மற்றும் ஆரங்சுச்சாறு என்று மிகவும் கட்டுப்பாடாக இருப்பார். வாரி வளைத்துத் தின்பதோ, பட்டினி கிடப்பதோ ரகுவிற்கு என்றுமே உடன்பாடில்லாத சமாசாரங்கள் என்பதை செல்வி சீக்கிரமே புரிந்துகொண்டாள். ப்ரியாவையும் விட செல்விக்கே குடும்பத்தின் ஒவ்வொருவருடைய தேவையும் விருப்பு வெறுப்பும் அத்துப்படியாகியிருந்தன.

சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்தின் நான்காம் தலைமுறை இந்தியர்களான இருவருமே நல்லவர்கள். இருந்தாலும், அவரவர் பிடிவாதத்தை அவரவர் விடத் தயாராகயில்லை. ப்ரியா தன் வேலையை விடமாட்டேன் என்று ஒரே பிடிவாதம். ரகுவோ தேவைப்படும் போதெல்லாம் ப்ரியாவை வருத்த அதையே தன் ஆயுதமாகப் பயன்படுத்தினார். இல்லையென்றால் கடந்த ஒருவருடமாக முளைத்திருந்த புதுப் பிரச்சனையான 'தீபக்' கும் இருந்ததே.

அதோ, குளித்து,உண்டு, உடுத்தி ரகு கிளம்பிவிட்டார். மணியைப் பார்க்கத் தேவையேயில்லை. ஐந்தேமுக்காலாகியிருக்கும்.  இருவருக்கும் முதல் நாள் மாலையில் நடந்த சண்டை செல்விக்கு நினைவு வந்ததுமே லேசான வருத்த இருள் மனதில் படர்ந்தது. மாலையில் ரஞ்சனது கணக்குப் பாட ஆசிரியரின் தொலைபேசி அழைப்பு வந்தது. " ரஞ்சன் வீட்டுப் பாடத்தையெல்லாம் ஒழுங்காகவே செய்யறதில்ல, கொஞ்சம் கவனிங்க. சீக்கிரமே இயர் எண்ட் எக்ஸாம்ஸ் வருது", என்று ஐந்து நிமிடம் ரகுவிடம் பேசிவிட்டு வைத்தார்.

ரகு உடனே ரஞ்சனிடம் கணிதப் புத்தகத்தைக் கொண்டு வரச்சொன்னார். சில கணக்குகளைச் சொல்லிக்கொடுத்தார்.

ப்ரியா ஆபீஸிலிருந்து வந்தவுடன் வாக்குவாதம் தொடங்கியது. ரகு வேலையை விடு என்று சொன்னதுமே, "வேணும்னா ட்யூஷன் ஏற்பாடு செஞ்சிடுவோம். ஆனா, என்னால வேலைய எல்லாம் விடமுடியாது. இப்போ சரின்னு வேலைய நா விட்டாலும், கொஞ்ச நாள் கழிச்சு 'மெயிட்' வேணாம்னு செல்வியையும் நிப்பாட்டுன்னுவீங்க. நல்லவேல கிடைக்கறதே கஷ்டமாயிருக்கற நேரத்துல யாராவது வேலைய விடுவாங்களா? எனக்கு வீட்டுவேலை செய்யப்பிடிக்காதுனு உங்களுக்குத் தெரியுமில்ல. அதுவுமில்லாம, வீட்டுல எனக்குப் பொழுதுவேற போகாது", என்று எப்போதும் பாடும் பல்லவிதான். வழக்கத்தைவிட உரத்த குரலில் அபஸ்வரமாக முடித்தார் ப்ரியா.

அத்தோடாவது விட்டிருக்கலாம். தொடர்ந்து, " ஆமா, தெரியாமத் தான் கேக்கறேன். ஒரே ஒரு நாள் டீச்சர்கிட்ட பேசினதுக்கே இவ்வளவு ரியாக்ட் பண்றீங்களே. நானே தானே அவங்க பேரண்ட் டீச்சர் மீட்டிங்கெல்லாம் போய் வரேன், ஒரு தடவையாவது நீங்க வந்திருக்கீங்களா? ", என்று தொடர்ந்து வளர்த்ததில், ரகு கடும் கோபம் கொண்டு, விடுவிடுவென்று கீழே இறங்கிப் போய் விட்டார்.

சண்டை வரக்கூடிய சாத்தியமிருப்பதை உணர்ந்தால் ரகு சதாரணமாக அவ்வாறு தான் செய்வார். அதையும் மீறி சண்டை ஏற்பட்ட நாட்களுமுண்டு. அப்போதெல்லாம் இவர்கள் என்றைக்கும் எக்காரணத்தாலும் பிரிந்துவிடக்கூடாதே ஆண்டவனே என்று செல்வியின் மனம் குழந்தையாகக் கடவுளிடம் கெஞ்சும். உரக்கக் கத்தி சண்டைபோடும் போது ராதிகாவும் ரஞ்சனும் நடுங்கிக் கொண்டே செல்வியிடம் ஒட்டிக்கொள்வார்கள்.

தன் இருப்பு ரகுவின் கோபத்திற்குக் கடிவாளமாக அமைந்ததோ இல்லை, கோபத்தை வெளிப்படுத்தமுடியாது இடைஞ்சலாகத்தான் அமைந்ததோ என்று செல்வி பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு. யோசித்துப்பார்க்கும் போதெல்லாம், இதெல்லாம் காரணமில்லை, ரகுவின் இயல்பே அதுதான் என்று தோன்றிவிடும். அவர்களிடையே நடக்கும் உரையாடல்களுக்கு எதிர்வினையாற்றும் பழக்கம் மட்டும் கூடாது என்றும் வெளியாட்களிடம் குடும்ப விஷயங்களைப் பேசக்கூடாது என்றும், ப்ரியா வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே சொல்லியிருந்தார். அன்றிலிருந்து மிகவும் கட்டுப்பாடாய் நடந்து பழகியிருந்தாள் செல்வி. கண்களையும் காதுகளையும் கட்டுப்படுத்தத்தான் முடிந்ததில்லை.

தன் வேலையை விட்டுவிட்டு ப்ரியா ரஞ்சனையும் ராதிகாவையும் தன் பொறுப்பில் கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதே ரகுவின் அக்கறையான ஆசை.  குஷியான ஒரு சமயம்,"ப்ரியா, ஆபீஸ்ல உன்னப்பத்தி யோசிக்கும்போது நீ பல்தேய்க்கற மாதிரியே வாயில பிரஷோட தான் என் ஞாபகத்துக்கு வர", என்று கிண்டலடித்தார் ரகு. அதில் தொனித்த ஆதங்கத்தை செல்வி சமையலறையில் இருந்தபடியே உணர்ந்தாள். ஆனால், உணரவேண்டிய ப்ரியாவோ புரிந்துகொளாமல் அதற்குக் கலகலவென்று சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டார்.

இருவருக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. ரகுவுக்கு ஆ·ப் ஷோர் வேலை. ஜூரோங்கிலிருந்து படகில் ஏறிச் சென்று அருகிலிருக்கும் தீவுக்குப் போகவேண்டும். அங்கிருக்கும் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனத்தில் பொறியாளர் உத்தியோகம். கொடுக்கும் சம்பளத்துக்கு வேலையை உறிஞ்சாமல் விடமாட்டார்கள்.  ப்ரியாவிற்கு ஒரு தனியார் கம்பெனியில் கணக்கர் வேலை.

பெரும்பாலும் ரகு, காலையில் கிளம்பும் போது, ப்ரியா எழுந்திருந்து பல் தேய்த்துக் கொண்டிருப்பார் அவசர அவசரமாக. 'பை' என்று சொல்லிக் கிளம்பும் போது வாயில் பிரஷ¤டன் கையசைத்து விடைகொடுப்பது தான் அனேகமாக நடக்கும். மாலையில் ப்ரியா தாமதமாய் தான் வருவார். உடம்பைக் குறைக்கிறேன் என்று பச்சைக் காய்கறியோ, பழங்களோ வெட்டிக் கொடுக்கக் கேட்டுத் தின்று விட்டு, பிள்ளைகளின் வீட்டுப்பாடத்தில் உதவுவார். உண்மையில் அவர் தனக்குக் குற்றவுணர்வு மேலிட்டுவிடாமல் தடுக்க செய்யும் முனைப்பாகவே இருக்கும் அது. அசதியில் பொறுமையே இல்லாமல் தான் நடக்கும் 'டீச்சர்' வேலை. எல்லாம் கொஞ்ச நேரம்தான். படுக்கப் போகுமுன் ஒரு முறை பல் தேய்ப்பார். அந்த நேரம் தான் ரகு தன் மெதுவோட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைவார். ரகு குளித்துவிட்டு செல்வி தயாரித்திருக்கும் உணவைச் சாப்பிடும்போது ப்ரியா உறங்கிச் சில நிமிடங்களாகியிருக்கும்.

அன்றும் வழக்கம்போல ஆறரைக்குப் ப்ரியா செருப்பைப்போட்டுக்கொண்டு கிளம்புமுன் பிள்ளைகளை எழுப்பி விட்டார். இருவரும் அம்மாவிற்கு 'பை' சொல்லிவிட்டு பல்தேய்த்தார்கள். பிள்ளைகள் எழக்காத்திருந்த செல்வி தன்னுடன் பகலைக்கழிக்கும் 'ஒலி'யையும் எழுப்பினாள். 'இந்த நாள் இனியநாள்' ஓடிக்கொண்டிருந்தது.அன்று வழிநடத்தப்போவது கீதாவா இல்லை ர·பியா என்று தெரியவில்லை. செல்வியின் கைகள் வேலையிலும் காதுகள் ஒலியிலும்.

பாலைக்குடிக்க அடம் பிடித்தாள் ராதிகா. "ஆண்டி, போதுமே ப்ளீஸ்", என்று மூஞ்சியைக் கோணிக்கோணி செல்வியிடம் கெஞ்சினாள். ராதிகாவுக்கு அவள் அம்மாவைப் போன்ற அழகிய பெரிய கண்கள். சுருள் சுருளாய் ரகுவைப்போன்ற தலை முடி. ரஞ்சனுக்கு அப்பாவைப்போன்ற சிறிய கண்களும் சீப்புக்கு அடங்காமல் குச்சிக் குச்சியாய் நின்ற கேசமும். இருவருமே அம்மாவின் கோதுமை நிறத்தையும், முகத்தின் துறுதுறுப்பையும் மரபணுவழி பெற்றிருந்தனர். "இப்போ பால முழுக்க குடிச்சீன்னா, உனக்குப் பிடிச்ச இடியாப்பம் செஞ்சி தருவேனாம் சாயந்தரம், கொஞ்சம் தானே இருக்கு, குடிம்மா, சமத்தில்ல நீ", என்று அவளைக் குடிக்கவைத்துக் குளிப்பாட்டினாள். ரஞ்சன் தானே குளித்துவந்தான்.

தொடக்கநிலை ஒன்றில் படிக்கும் ராதிகாவையும், நான்கில் படிக்கும் ரஞ்சனையும் பள்ளிக்குத் தயார் செய்து கிளப்பிக் கொண்டு கீழே இறங்கினாள் செல்வி. மின்தூக்கியில் இறங்கும் போது ரஞ்சன்," ஆண்டி, என்னோட 'பென்ஸில் கேஸ்' இருக்கான்னு பாருங்க", என்றதுமே, செல்வி தன் வலதுதோளில் இருந்த அவனது பள்ளிப்பையை இறக்கி பையைத் திறந்து பார்த்தாள். ரஞ்சனும் தன் பங்கிற்குத் தலையைக் கவிழ்த்துப் பையினுள் தேடினான். ஹ¥ஹ¤ம், மேசைமீதிருந்து எடுத்து வைத்துக்கொள்ள மறந்திருந்தான். செல்விக்குள் எரிச்சல் இதோ வந்துவிடுவேனென்று கிளம்பியது.

ரஞ்சனுக்கு தமிழ் பாடம் சிரமமாக இருந்தது. செல்வி அவனுக்கு உதவ ஆரம்பித்த பிறகு தேர்வுகளில் ரஞ்சனின் தமிழ் மதிப்பெண் உயர்ந்தபடியிருந்தது. இரண்டாம் வகுப்பில் பட்ட சிரமம் இப்போது அவனுக்கு இல்லை. அவனது ஆங்கிலப் பாடங்களைப் பார்த்துப் பார்த்து செல்வியும் நிறைய கற்றுக்கொண்டாள். பத்தாவது முடித்து நான்கு வருடங்களாகியிருந்ததால் ரஞ்சனுடன் முதல் வகுப்புப் பாடங்களை  கவனிக்க ஆரம்பித்தபோது அவளுக்கு ஏற்கனவே தெரிந்தவையும் தனக்கு மறந்துபோயிருந்தது செல்விக்குப் புலப்பட்டது.  ரஞ்சனைப்போலவே செல்வியும் அவனோடு நான்காம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தாள்.

கண்களை அகல விரித்துக்கொண்டு தோள்களையும் உயர்த்திக்கொண்டு முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு ரஞ்சன் மெதுவாக," சாரி ஆண்டி", என்றதுமே செல்வி புன்னகைத்துக் கொண்டே ரஞ்சனின் தலையைத் தடவி,"சரி, ரெண்டு பேரும் இங்கயே இருங்க, நா மட்டும் மேல போயி எடுத்துட்டு வந்துடறேன். ஹோம் வொர்க் செஞ்சி முடிச்சதுமே மறக்காம எடுத்து 'பேக்'ல வச்சிக்கணும் நீ இனிமே", என்று சொல்லிக்கொண்டே லி·ப்டினுள் பாய்ந்து நுழைந்து ஆறாம் எண்ணை அழுத்தினாள்.

ஆறாம் மாடியில் வெளியேறி, அடுத்திருந்த படியில் இரண்டிரண்டு படிகளாக ஏறி ஓடிச் சென்று, ஏழாம் மாடியிலிருந்த வீட்டைத் திறந்து ரஞ்சனின் டேபிளில் இருந்த அவனது பென்ஸில் பாக்ஸை எடுத்துக்கொண்டு, மீண்டும் வீட்டைப் பூட்டி, வெளிகேட்டையும் பூட்டிக் கொண்டு ஆறாம் மாடிக்கு இறங்கினாள். லி·ப்ட் வரவில்லை. பள்ளிக்கூடம் ஆபீஸ் போகிறவர்கள் அதிகமிருக்கும் காலைவேளைகளில், வரக் கொஞ்சம் தாமதமாகும், இல்லையானால் ஒருவர் நிற்கும் இடம் கூட இல்லாமல் கூட்டமாக வரும்.

செல்வி நிற்காமல் மளமளவென்று மாடிப்படிகளில் இரண்டிரண்டு படிகளாகத் தாவியிறங்கிச் சென்றாள். கீழ்த்தளத்தில் லி·ப்டையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் ராதிகாவும் ரஞ்சனும். பின்னாலிருந்து வந்து ரஞ்சனின் பென்ஸில் கேஸை அவனது பையினுள் வைத்து மூடிக்கொண்டே," ம்,.. லேட்டாச்சு, வாங்க சீக்கிரம். இல்லேன்னா பின்னாடி 'கேட்'டை மூடிடுவாங்க," என்ற செல்வியிடம் தங்கள் பைகளைக் கொடுத்து விட்டு உடன் நடந்தனர். விடுவிடுவென்று வேகமாக நடந்த செல்விக்கு ஈடுகொடுக்க முடியாது ஓடி ஓடி உடன் நடந்தனர் இருவரும்.

வீட்டிலிருந்து ஐந்தே நிமிடங்களில் பேயிங்க் தொடக்கப்பள்ளிக்குப் போய் விடலாம். பள்ளியில் பின்புற 'கேட்' வீட்டிலிருந்து பக்கம். ஏழு இருபதுக்குப் பள்ளியில் இருந்தால் போதும். ஆனால் ஏழேகாலுக்குப் பள்ளியின் பின்புறகேட்டை மூடிவிடுவார்கள். பிறகு, மறுபடியும் ஐந்து நிமிடம் பள்ளியின் திடல் மற்றும் காம்பௌண்டை ஒட்டி நடந்து, சுற்றிக்கொண்டு முன்புறகேட்டின் வழி உள்ளே போகவேண்டியிருக்கும். காலை அஸெம்ப்ளிக்கும் தாமதமாகிவிடலாம்.

நல்லவேளை, பின்புறகேட் மூடியிருக்கவில்லை. இருவரையும் கையசைத்துப் பள்ளிக்குள் விட்டுவிட்டு திரும்ப மெதுவாக நடந்தாள் செல்வி. தீபாவளிக்கு வேண்டிய சாமான்களைப் பட்டியலிட்டு வைக்கச் சொல்லியிருந்தார் ப்ரியா. ஜன்னல் திரைச்சீலைகளை மாற்றவேண்டிய வேலையும் இருந்தது. தீபாவளி முடிந்து இரண்டு நாட்களில் வீட்டில் விருந்துக்கு வேறு ஏற்பாடு செய்திருந்தார்கள். யோசித்தபடியே நடந்தாள்.

முன்பு அழகிய திறந்த வெளி மைதானமாக இருந்தது. ஐந்துகோண வடிவம் கொண்டு கிட்டத்தட்ட இரண்டு காற்பந்தாட்டத்திடலின் அளவிருக்கும். சுற்றியிருந்த அடுக்ககங்களுக்கு வெளிச்சமும் காற்றும் தாராளமாகக் கிடைத்து வந்தது. அந்த இடத்தில் உயர் நிலைப் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பித்ததுமே சுற்றியிருந்த அடுக்கு மாடிக்கட்டடங்களின் கீழ்த் தளங்களுக்கு சூரிய ஒளியும் காற்றும் குறைய ஆரம்பித்து விட்டது. அதற்கு பதிலாக கட்டடத் தளத்திலிருந்து தூசு வந்து வீட்டினுள் படிந்தது. ஹால் பக்க ஜன்னல்களைக் காற்றுக்காக பகலில் திறந்து வைத்தால் தூசு படிவது தெரியும். வாரயிறுதியில் கொஞ்சம் தைரியமாகத் திறந்து வைக்கலாம், வேலை நடக்கவில்லை என்று உறுதிசெய்து கொண்டு. ஏழாம் மாடிக்கெல்லாம் அதிக பாதிப்பு இல்லை. கட்டிமுடிந்ததும்கூட இருக்காது என்றே ப்ரியா சொல்லி வந்தார். வீடமைப்புப் பேட்டையின் மத்தியில் இருப்பதால் பள்ளிக்கூடத்தை நான்கு மாடிக்குமேல் கட்டமாட்டார்களாம்.

கட்டடத் தொழிலாளிகள் வர ஆரம்பித்து விட்டனர். கட்டடத்தளத்திலேயே இருக்கும் சிலர் அங்கிருக்கும் கிட்டத்தட்ட பத்துக்கு இருபது அளவில் இருக்கும் 'கண்டெய்னர்'களில் வேலை முடியும் வரை வசிப்பர். மற்ற சப் காண்டிராக்டர்கள் தங்கள் வேலைக்குக் கூட்டி வரும் தொழிலாளிகள் திறந்த 'பிக்கப்' லாரியில் தான் திறந்தபடியிருக்கும் பின்புறம் உட்காந்து வருவார்கள். நிரந்தரமான வசிப்பிடங்கள் இவர்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பதில்லை. வாய்த்தாலும் ஆங்காங்கே செல்லவேண்டிய வேலைக்கு வசதியில்லை. ஆக, தீவுக்குள்ளேயே ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்கள்.

அவ்வழியே தினமும் நடப்பவர்களும் ஓடுபவர்களும், உறக்கத்தைப்பெறவும், உண்ட உணவு செரிக்கவும், சேர்ந்த கொழுப்பு கரையவும் உடற்பயிற்சி வழி ப்ரயத்தனங்கள் எடுத்தனர்.

மதிய உணவு இடைவேளையில் கையோடு கொண்டு வந்ததை ஐந்தே நிமிடத்தில் மளமளவென்று தின்றுவிட்டு உழைப்பு கொடுத்த அலுப்பில் கீழ்த் தளத்தில் ஒதுக்குப்புறமாக நீட்டி நிமிர்ந்து படுத்து உறங்கிவிடுவார்கள். ஆங்காங்கே காலணிகளைக் கழற்றிவைத்துவிட்டு வெயில் முகத்தில் படாதிருக்க ஹெல்மெட்டை முகத்தில் கவிழ்த்துக்கொண்டு உறங்குபவர்களைப் பார்ப்பதுண்டு செல்வி அவ்வழியைக் கடந்துசெல்லும் போதெல்லாம். களைத்த அந்த உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் பின் ஒரு கதையிருப்பதும் அவளுக்குப் புரியும். 

oooOOooo
[ பாகம் : 3 ]

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருந்தது. இருப்பினும், கூட்டத்தைப்பார்த்தால், நாளைக்கே தீபாவளியோ என்றெண்ணும் அளவிற்குத்தான் எங்கு பார்த்தாலும் தலைகள். வாரயிறுதியாக இருந்தால், வெளிநாட்டு ஊழியர்கள் கூட்டமும் வேறு சேர்ந்துகொள்ளும். சாலையோரம் நடக்கவே சிரமமாயிருக்கும். அதனால்தான், லீவெடுத்துக்கொண்டு  செல்வியைத் தன் உடனழைத்துக்கொண்டு ஷாப்பிங்க் கிளம்பிவிட்டிருந்தார் ப்ரியா.

கேம்பெல் லேனில் இருக்கும் 'நல்லி'யில் தனக்குப் பிடித்தமாதிரி காஞ்சீபுரம் பட்டுச்சேலையை எடுக்கவே ப்ரியாவிற்கு பாதிநாள் போய்விட்டது. பிறகு, ரகுவிடம் இல்லாத நிறமாக இருக்கவேண்டுமென்று யோசித்து யோசித்து, கற்பனையிலேயே தன் கணவனுக்கு உடுத்திப் பார்த்து, ஒருவழியாக வெளிர் நீலத்தில் ஒரு ஸில்க் குர்த்தாவை தேர்ந்தெடுத்தார். "அதான் எனக்கு சுடிதார் எடுத்தாச்சில்ல. அதுவே போதும் மேடம்", என்று சொன்ன செல்வியை விடாமல் வற்புறுத்தி ஒரு பூனம் சேலையைத் தேர்ந்தெடுத்து அவளுக்காக வாங்கினார். அதற்குப்பிறகு, பிள்ளைகளிருவருக்கும் உடைகளெடுக்க முஸ்த·பா போனார்கள்.

வாகனங்கள் ஓடும் திசையிலேயே, சாலையின் வலப்புறம் நேராக நடந்தால், கிளையாகப் பிரியும் சில தெருக்களைக் கடந்ததும், சுமார் இரண்டு பேருந்து நிறுத்தங்களில் வந்துவிடும் சிரெங்கூன் சாலையிலிருந்து வலதுபுறம் பிரிந்து செல்லும் சைத் அல்வீ ரோட். அங்குதான் சிங்கப்பூர் சுற்றுலாப்பயணிகளின்  மெக்காகத் திகழும் முஸ்த·பா செண்டர் இருக்கிறது. பாதிதூரத்திலேயே சாலையின் எதிர்புறத்தில் வீரமாகாளியம்மன் கோவில் வரும். அதற்குமுன்பாகவே முதலில் வருவது டன்லப் ஸ்த்ரீட். உள்ளே சிலகடைகள் தள்ளியிருந்த ஒரு ரெடிமேட் கடையைத் தேடின செல்வியின் கண்கள்.

அங்கேதான் சரவணன் தன் வீட்டாரிடமிருந்து வரும் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறான். அந்தக் கடைக்காரரும் சரவணனின் பெயருக்குக் கடிதம் வந்தால் போன் செய்து அவனிடம் தெரிவித்து விடுவார். இரண்டு சரவணன்கள் இருந்தனராம். முதலில் தடுமாறிய கடை முதலாளி, பிறகு திருவாரூர் என்றால் இவனையும் கீழக்கரை என்றால் இன்னொரு சரவணனையும் கூப்பிடப் பழகிக்கொண்டுவிட்டார். நிரந்தரமாய் ஒரு முகவரி வேண்டியிருந்ததே குடும்பத்தினர் அனுப்பும் கடிதங்கள் சென்றடைய. கட்டடத்தளங்களில் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை வாழ்ந்து பின் மீண்டும் வேறு இடத்தில் வாழ்க்கையைத் தொடரும் சரவணனைப் போன்றோருக்கு அந்தக் கடை முதலாளி உதவி வந்தார். அவரைப் போலவே இன்னும் நிறைய கடைகளில் இவ்வித உதவி வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிடைத்து வந்தது.

சிரெங்கூன் சாலையில் ஓவ்வொரு ·பர்லாங்க் தூரத்துக்கும் ஒரு உயரமான அலங்கார வளைவு வைக்கப்பட்டிருந்தது. இந்த முறை  அலங்காரங்கள் வழக்கத்தைவிடக் கொஞ்சம் கலையுணர்வோடு இருந்ததாக செல்விக்குத் தோன்றியது. நினைத்துக்கொண்டே நடந்தவளிடம் ப்ரியாவும்," இந்தவாட்டி டெகரேஷன்ஸ் கொஞ்சம் புதுமாதிரியா அழகா இருக்கில்ல?", என்று கேட்டதும், சிரித்துக்கொண்டே, "அதையேதான் நானும் நெனச்சேன் மேடம், நீங்களும் சொல்லிட்டீங்க", என்றாள். இரண்டு கைகளிலும் இரண்டிரண்டு பைகளைச் சுமந்துகொண்டு ப்ரியாவின் பின்னால் நடந்தாள். சிரெங்கூன் சாலையில் கடைகளையட்டி இருந்த குறுகிய நடைபாதையில் ஒன்றோடொன்று ஒட்டியிருந்த ஏராளமான கடைகளைப்பார்த்துக்கொண்டே, எதிரில் வருபவர்களின் மேல் இடித்துவிடாமல் நெளிந்து வளைந்து சாமர்த்தியமாக நடந்து சென்றனர்.

இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் முஸ்த·பாவில் தீபாவளி நேரத்தில் வழக்கத்தைவிட மிக அதிகக் கூட்டம். வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு டாக்ஸி பிடித்து ஒருவழியாக அலுத்து சலித்து வீடுவந்து சேர்ந்தனர். ரவிக்கைகளைத் தைக்கக் கொடுக்க வாடிக்கையாய் வீட்டிற்கே வந்து வாங்கிப்போகும் தையற்காரருக்கு ப்ரியா உடனேயே போன் செய்ய அவரும் அடுத்தநாளே வருதாகச் சொல்லிவிட்டார்.

அன்று மாலையில் ப்ரியா ரகுவிடம் தான் தேர்ந்தெடுத்திருந்த துணிகளை மிகுந்த ஆர்வத்துடன் காட்டினார். களைத்து வந்திருந்ததாலோ என்னவோ ரகு அசிரத்தையாகக் கையில் வாங்காமல் கண்களால் பார்த்துவிட்டு டீவியில் கவனத்தைச் செலுத்தினார். "ஏங்க, கையில வாங்கிகூடப் பாக்கமாட்டீங்களா?", என்று கேட்டபடி தன் கையிலிருந்தவற்றை ரகுவின் மடியில் சலிப்போடு போட்டாள் ப்ரியா. அத்துடன் டீவியையும் அணைத்தார். மனைவியை முறைத்தபடியே மடியிலிருந்தவற்றை  பிரிக்காமலே பார்த்துவிட்டு," ம், நல்லா இருக்கு", என்று சொல்லிக்கொண்டே மீண்டும் டீவியைப் போட்டார். ரகுவிற்கு களைப்பையும் தாண்டி ஏதோ ஒரு எரிச்சல் இருந்ததோ என்று தோன்றியது. ப்ரியாவிற்கு ஒரே கோபம். அடக்கிக்கொண்டு பேசாமல் போய் அறையில் தன் புத்தகத்தில் தஞ்சம் அடைந்தார்.

ஐந்தே நிமிடத்தில், "ஆமா, தீபக்கோட எங்க போயிருந்த நீ போன வாரம்?", என்றபடியே அறைக்குள் சென்றார் ரகு. "ஏன், உங்ககிட்ட போன்ல சொல்லிட்டுத் தானே போனேன். மறந்துட்டீங்களா? அவனோட கேர்ள் ·ப்ரெண்டுக்கு 'சாரி' எடுக்கணும்னு சொன்னான். செலக்ட் பண்ணிக் கொடுக்கத்தான் போனேன்", என்றாள் ப்ரியா. "ப்ரியா, நீ என் கிட்ட சொல்லிட்டுதான் போகணும்னெல்லாம் நான் எதிர்பார்க்கல்ல. பார்க்கறவங்க தப்பா நெனைக்கற மாதிரி நடந்துக்காதன்னு தான் சொல்ல வரேன்", என்றதுமே ப்ரியா," நீங்க இன்னிக்கு வரும்போதே சண்டை போடணும்னு தீர்மானத்தோடதான் வந்திருக்கீங்களா? ", என்று சத்தமாக இரையும்போது ரகு," பாக்கறவங்களுக்குத் தப்பாத் தெரியறமாதிரி நடக்காதன்னு தானே சொல்றேன், புரியல்ல? ", குரலை உயர்த்திக் கத்திக்கொண்டே அறைக்கதவைச் சாத்தினார். நினைத்தது சரிதான், கோபத்தில் தான் இருந்திருக்கிறார் ரகு. அதன் பிறகு, அவர்களது வாக்குவாதம் போன திசையோ, நீடித்த கால அளவோ செல்விக்குத் தெரியவில்லை.

அடுத்த சில வாரங்களிலேயே தீபாவளியும் வந்தது. ரகுவிற்கு இது பிடிக்கும், அதுபிடிக்கும் என்று பார்த்துப்பார்த்து பலவிதமான பலகாரங்களைச் செய்யச் சொல்லியிருந்தார் ப்ரியா. சரவணனும் மறக்காமல் போன் செய்து தீபாவளி வாழ்த்துச் சொன்னான். "சொன்னீங்களா நம்ம விஷயத்த உங்கம்மா கிட்ட?", என்று கேட்டாள் செல்வி. இனிமேல்தான் சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை போனில்," செல்வி நான் இந்தவாரம் எப்படியும் பேசிடுவேன். உங்க வீட்டுக்கும் ஒரு நடை போய்ட்டு வந்துட்டேன்னு வைய்யேன், ஒருவேள இந்தக் கார்த்திகைலயே கூட நீ ஒரு நடை வர முடிஞ்சா கல்யாணத்த சிம்பிளா முடிச்சிடலாமேன்னு பாக்கறேன், இப்ப ஐப்பசியா, கார்த்திகைல,.. நம்ம கல்யாணம் எப்டி?" என்று நேரில் சொன்னதையே மறுபடியும் சொன்னான். அவசரப்படமுடியாது, பேசி முடிவு செய்து அடுத்தவருடம் வைத்துக்கொள்வோமென்று சொல்லி போனை வைத்தாள். நினைத்தவுடனே கிளம்பிவிட இதென்ன திருவாரூலயிருந்து நாகப்பட்டினமா?

இரண்டு மாதங்களுக்கு முன்பு தீபாவளிக்கே ஊருக்கு வரச்சொல்லி அம்மா தன்னைக் கட்டாயப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான் சரவணன். அதனால்தான் நவம்பர் மூன்றாம் தேதிக்கு டிக்கெட் வாங்கிக் கிளம்பி விட்டிருந்தான். ஊருக்குக் கொண்டுபோக நினைத்த பொருட்களையெல்லாம் அதற்கு முன் வந்த வாரயிறுதியில் முஸ்த·பாவுக்குச் சென்று அள்ளிக்கொண்டுவந்திருந்தான். சரவணன் ஊருக்குப் போனதிலிருந்து அவனது நினைப்பு அடிக்கடி வந்தது. உள்ளூரிலேயே இருந்தாலும் வாரக்கணக்கில் பார்த்துக்கொள்ளாமல் தான் இருப்பார்கள். இருந்தாலும் ஊருக்குப் போயிருக்கிறான் என்ற எண்ணமே அவனின் நினைவை அடிக்கடி கொணர்ந்தது.

தீபாவளி கோலாகலமாகத் தான் கழிந்தது மதியம் வரை. அதற்குப் பிறகுதான் மீண்டும் 'தீபக்' என்ற காற்றழுத்தத்தின் விளைவால் சண்டைப்புயல் வீட்டினுள் மையம் கொண்டது. ப்ரியா தேர்ந்தெடுத்திருந்த சேலையை பூங்கொத்தோடு அவருக்கே தீபக் அனுப்பியிருந்தான். அதைப் பார்த்ததுமே ரகு சில வாரங்களுக்கு முன்னர் தான் விட்ட இடத்திலே மீண்டும் சச்சரவை தொடங்கினார். இம்முறை ப்ரியாவால் அதிகம் குரலை உயர்த்திப் பேசமுடியவில்லை. ஆனால், "இல்லங்க. இத எனக்காக வாங்கறதா அவன் சொல்லவே இல்லங்க. சொல்லியிருந்தா செலெக்ட் பண்ணியேயிருக்க மாட்டேன். அப்பிடியே வாங்கியிருந்தாலும் உங்ககிட்ட சொல்லியிருப்பேனே. போன தீபாவளிசமயத்துல அக்காவீட்டுல பாத்தோமே ஒயரமா ஒல்லியா கீதானு, அவளுக்கு வாங்கறதாத்தான் என்கிட்ட சொன்னான்," என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் பரிதாபமாக.

பிறகு, ஒரு முடிவுடன், சிறிது நேரத்திலேயே தீபக்கிற்கு போன் செய்தார் ப்ரியா. சில நிமிடங்கள் கோபமாக பேசி விட்டு போனையும் படீரென்று வைத்தார். ரகுவின் அருகில் சென்று, "கீதாவுக்கு அந்த சேலை பிடிக்காததால எனக்குக் கொடுத்தானாம்", என்று கணவனைச் சமாதானப் படுத்த முயன்றார்.

தீபக் சொன்னதை ப்ரியா அப்படியே நம்பினார். அதை செல்விக்கும் நம்பத்தான் ஆசை. ஆனால், ரகுவைப்போலவே அவளுக்கும் தெரிந்திருந்தது தீபக்கின் தகிடுதத்தங்கள். ப்ரியாதான் பாயத்தயாராய் இருந்த தீபக்கென்ற புலி போர்த்தியிருந்த பசுந்தோலை மட்டுமே கவனித்தார். தன்னைப்போலவே பிறரையும் நினைத்ததால் தான் அப்படியோ என்று செல்வி பலவாறு சிந்தித்தாள்.  தீபாவளியன்று இரவு அவரவர் கோபத்துடனேயே தூங்கப் போனார்கள்.

ரகுவும் ப்ரியாவும் பாராமுகமாய் வாழும் நாட்கள் கடந்த நான்காண்டுகளில் செல்விக்குப் பழக்கம் தான். முதலில் வருத்தமாகவும் அசௌகரியமாகவும் உணர்ந்தவள் சீக்கிரமே புயலுக்கும் அமைதிக்கும் ஈடுகொடுக்கப் பழகியிருந்தாள். இருவரும் நாட்கணக்கில் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும் செல்வியிடம் ஒருவர் மற்றவரைப் பற்றிக் கேட்டுத்தெரிந்துகொள்வார்கள். ரகு சாப்பிட்டாரா என்று ப்ரியாவும் ப்ரியா சாப்பிட்டாளா என்று ரகுவும் அவளிடம் ரகசியமாகக் கேட்கும்போது செல்விக்கு வேடிக்கையாக இருக்கும். இருவரிடையே பாசமில்லாமல் இல்லை. பிள்ளைகளிடமும் உயிராய்த்தானிருந்தனர் . ஆனாலும், அவ்வப்போது வீட்டில் புயல் என்னவோ வீசத்தான் செய்தது.

அமைதி நிலவும் வாரயிறுதி நேரத்திலெல்லாம் ப்ரியாவின் அக்கா வீட்டுக்காரரிடம் காரை இரவல் வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு எங்கேயாவது பிக்னிக் கிளம்புவார்கள். செல்வியை பலவிதமான சிற்றுண்டிகளைச் செய்யச் சொல்லி கூடவே குஷியுடன் தானும் உதவுவார் ப்ரியா. அவள் செய்யும் பால்கொழுக்கட்டையும் பணியாரமும் எல்லோருக்கும் மிகவும் விருப்பம். பாத்திரங்களைத் திறக்கும்போதே கம்மென்று மணந்து பக்கத்திலிருப்போருக்கும் அறிமுகமாகும். ஆங்காகே உட்கார்ந்திருக்கும் கூட்டங்கள் நிச்சயம் திரும்பிப்பார்க்கும். இந்திய முகங்கள் வாசனையை வைத்து உணவு வகையையும் அதன் ருசியையும் கற்பனையிலேயே கொண்டவரமுயற்சிக்கும். பொறாமைப் பார்வைகள் இவர்கள் பக்கம் தெறிப்பதுமுண்டு சில நேரங்களில்.

குதூகலமான அந்தமாதிரித் தருணங்களில் செல்வி இப்படியே இவர்களிருவரும் எப்போதும் இதேபோன்ற மகிழ்ச்சியோடு ஏன் இருக்கக்கூடாது என்று நினைத்துக்கொள்வாள். ஆரம்பத்தில் சண்டையிட்டால் இருந்த அவளது கவலை இப்போதெல்லாம் இருப்பதில்லை. செல்விக்கு அவர்களின் ஊடலுக்குப்பின் கூடலும், கூடலுக்குப்பின் ஊடலும் நன்றாகவே பழகிவிட்டிருந்தன.

தீபாவளிப் பிணக்கு ஒருவாரம் நீடித்து அதுவரையில் இல்லாதிருந்த சாதனை படைத்தது. ஐப்பசி முடிந்து கார்த்திகையும் பிறந்தது. இன்னும் சரவணனிடமிருந்து தான் ஒரு செய்தியும் வரவில்லை.

ப்ரியா, ரகு பத்தாவது திருமணநாள். விருந்துக்கு ஏற்பாடுசெய்யச்சொல்லி யோசனை கொடுத்ததே ப்ரியாவின் அக்காதான். " அடிக்கடி ரகுவோட சண்ட வருதுன்ற. ரெண்டுபேரும் மனசுவிட்டு பேசறதில்ல. வெளியூருக்குப் போய் வாங்கன்னாலும் லீவு எடுக்கமுடியாதுன்றீங்க. அட் லீஸ்ட் ஒரு பார்ட்டியாவது கொடுப்போமே. தீபாவளி கம் வெட்டிங்க் ஆனிவெர்ஸரி பார்ட்டி. எப்படி?", என்றார். ப்ரியாவிற்கு உறவென்று இருப்பதே மணமாகிப் பல வருடங்களாகப் பிள்ளையே பிறக்காத ஒரே அக்கா. ஒன்பது வயது மூத்தவரான அவரது யோசனையைத் தட்டாமல் திட்டத்தில் இறங்கினார் ப்ரியா.

oooOOooo
[ பாகம் : 4 ]

இரண்டு வாரங்களாக ஏற்பாடுகள் செய்து, நெருங்கிய உறவினர்கள் மற்றும் சிநேகிதர்களை மட்டுமே அழைப்பதாகத் திட்டமிட்டும் கூட கிட்டத்தட்ட நூறுபேர் வந்துவிட்டிருந்தனர். 'ஆனந்த பவ'னிலிருந்து ஏராளமான உணவு வகைகள் தருவிக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து ருசிபார்த்தாலே வயிறு நிரம்பிவிடும். அத்தனை வகை. மூன்று மணி நேரமாய் சிரிப்பு, கும்மாளம், கைகுலுக்கலுமாகக் கழிந்தது மாலை.

தீபக்கும் விருந்துக்கு வந்திருந்தான். ப்ரியாவைப் பார்த்து, "ஹாய்", என்றுமட்டும் சொல்லிவிட்டு மற்றவர்களிடம் பேசப் போய்விட்டான். இதே 'ஹாய்' ரகு இல்லாமல், ப்ரியா தனித்திருக்கும் போது அவள் மேல் விழாத குறையாக செயற்கையான ஏற்ற இறக்கத்தோடு குழைவாய் வரும். அதற்குப் பிறகு, தீபக்கின் கண்கள் திருட்டுப்பார்வையோடு ப்ரியா இருந்த திக்கிற்கே சென்று சென்று மீண்டன. கிட்டப்போய் மட்டும் பேசவில்லை. அவன் ரகு இருந்த திக்கைக் கவனமாகத் தவிர்த்ததும் தெரிந்தது.

ரகு இருக்கும் போது ப்ரியாவிடம் அவன் பேசுவதற்கும், ரகு இல்லாதபோது அவன் அவளிடம் பேசுவதற்கும் எத்தனை பெரிய வித்தியாசம். அதைப் புரிந்துகொள்ள ஏன் ப்ரியாவினால் முடியவில்லை என்று தான் செல்விக்குப் புரியவில்லை. வெள்ளை மனம் கொண்ட ப்ரியாவால் உணர முடியவில்லையா, இல்லை தன் எண்ணங்களில் தான் குறையோ என்று பலவாறாக எண்ணிக் குழம்பினாள். இவனைப்பற்றி ஏன் ரகு ப்ரியாவின் அக்காவோடு பேசாமலே இருக்கிறார் என்றுதான் புரியவேயில்லை. ஒரு வேளை பிரச்சனையைத் தன் கட்டுக்குள்ளேயே வைத்துத் தீர்வு காண எண்ணமோ என்னவோ.

விருந்துக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாய்ச் சுழன்றதில் செல்வியின் கால்கள் இளைப்பாறச் சொல்லிக்கெஞ்சின. சாமான்கள் இரைந்துகிடந்த வீட்டைச் சுத்தம் செய்யவேண்டும் என்று எண்ணும்போதே அதுவரை தோன்றாத அசதி அவளுள் கவிந்தது. உபயோகித்து எறியப்பட்ட ப்ளாஸ்டிக் தட்டுகளும் தம்ளர்களுமாக கருப்பு ப்ளாஸ்டிக் கார்பேஜ் பைகள் நிறைந்துவிட்டிருந்தன. அவற்றைத் தூக்கிக் கொண்டுபோய் அடுக்குமாடியின் கீழ்த்தளத்தில் வைத்துவிட்டால் காலையில் பங்க்ளாதேஷி துப்புரவாளர் பார்த்துக் கொள்வார். ஆனால், அறையெங்கும் குழந்தைகள் சிந்தியிருந்த 'கோக்'கும் இரைத்திருந்த உணவுத் துகள்களும் செல்விக்காகக் காத்திருந்தன. குறைந்தது ஒரு மணிநேர வேலை இருந்தது.

"செல்வி, சாப்பாடு எல்லாம் தீர்ந்துடுச்சா?", என்று செல்வியிடம் கேட்டபடியே சமையலறைக்குள் வந்தார் பட்டுப் புடைவையைக் களைந்து, வீட்டு உடுப்பிற்கு மாறியிருந்த ப்ரியா. "இல்ல மேடம். அந்த தந்தூரி சிக்கன், 'பட்டர் நான்' மட்டும் நெறைய மிஞ்சிப்போச்சு. மிச்சதெல்லாம் கிட்டத்தட்ட தீந்துபோச்சு", என்ற செல்வியிடம்," இதையெல்லாம் என்னலா செய்யறது?", என்று பத்து வயதுக் குழந்தையாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார். "·ப்ரிஜ்லயும் அதிக இடமில்ல. வச்சாலும் கூட இவ்வளவையும் நாம எப்பிடி மேடம் தீர்க்கப்போறோம். தெரிஞ்சவங்க எல்லாரும் விருந்துக்கு வந்துபோயாச்சு. வேணா எதிர்த்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல இருக்கறவங்களுக்குக் கொடுத்துடுவோமா?", என்று யோசனை சொன்னாள் செல்வி.

"சரி, நல்ல ஐடியா. எல்லாத்தையும் அப்படியே அலுமினியம் ·பாயில் போட்டு மூடிடு. ரெண்டு ப்ளாஸ்டிக் 'பேக்'ல கவனமா எடுத்து வை. நா ரகுவக் கூடவரசொல்றேன். போயி குடுத்துடு செல்வி. நாளைக்கோ ஞாயிற்றுக்கிழமை. நீ வேணும்னா உனக்கு வேண்டியத எடுத்து ப்ரிட்ஜ்ல வச்சிக்கோ", என்றபடி அறையிலிருந்த ரகுவைக் கேட்கப்போய் விட்டார்.

செல்வி சின்னப் பாத்திரங்களில் கொஞ்சகொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டாள். மீதியை அழகாக மூடி ப்ளாஸ்டிக் பைகளில் வைத்து வாயிலைக் கடந்து செருப்பை மாட்டிக்கொண்டு நின்றாள். ரகு வேண்டாவெறுப்புடன் வந்தார். அவர் முன்னே நடக்க செல்வி பின்னால் பைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தாள்.

மணி இன்னும் பத்தாகியிருக்கவில்லை. லி·ப்டிலிருந்து அவர்கள் வெளியேறியதுமே, கடைசி மாடிப்படியின் கீழ் அரவம் கேட்டது. ஒரு பெண்ணும் ஆணும் விரைந்து சுருட்டிக் கொண்டோடுவது தெரிந்தது. ஒரே நொடியில் தன் கவனத்தைத் திருப்பிவிட முடிந்த ரகுவைப்போல செல்விக்கு முடியவில்லை.

வந்த புதிதில் பொது இடங்களில் சில ஜோடிகள் சர்வசகஜமாய் ஒட்டி உராய்ந்து, கட்டிப்பிடித்துக் கொஞ்சிக்கொண்டும்,  முத்தமிட்டுக்கொண்டும் நிற்பதைப்பார்த்த போதெல்லாம் செல்விக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. திரையே இல்லாமல் சினிமா பார்க்கும் உணர்வு உள்ளுக்குள். ப்ரியா சொல்லிச் சொல்லிதான் வெறித்துப் பார்ப்பதையும் சிரிப்பதையும் கவனமாய் தவிர்க்கக் கற்றுக் கொண்டாள்.

 ஒருமுறை மதியம் அடுக்குமாடிக்கட்டிடத்தின் கீழ்த்தள இருக்கையில் பள்ளிச்சீருடையில் இருந்த பதிநான்கு வயதே நிரம்பியிருக்கக்கூடிய ஒரு பெண், அதே வயதுடைய பையனின் மடியில் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் செல்விக்குப் பெரும் அதிர்ச்சி ! ஊரில் இருந்த தன் தம்பி கதிர் வயதேயிருந்தான் அந்தப்பையன். அந்தச் சிறுமியோ தன் தங்கை மீனாவை விட சில வருடங்களே இளையவள். அன்று முழுவதும் ஏனோ செல்விக்கு மனது நெருடலாகவேயிருந்தது.

வீட்டு நினைவும் வந்தது. அவளுக்குப் படிப்பைப் பிடித்த அளவிற்குப் படிப்புக்கு அவளைப் பிடிக்கவில்லையென்று மனதைத் தேற்றிக்கொள்ளத் தலைப்பட்டவள், எப்படியாவது தன் தம்பி தங்கை இருவரையுமாவது படிக்க வைக்கவேண்டும் என்று செல்வி தீவிரமாயிருந்தாள்."எப்பிடிக்கா அங்க ஒரு மாடு கூட இல்லன்ற, பால் மட்டும் கெடைக்குது?", என்று தம்பி கேட்ட கேள்வி நினைவில் மோத செல்வியின் முகத்தில் சிரிப்பு விரிந்தது.

கட்டடத்தளத்தில் இருந்த தமிழர்களும் பங்க்ளாதேஷியும் கொடுத்த உணவை தயங்கிக் கொண்டே வாங்கிக்கொண்டனர்.
ரகுவும் செல்வியும் வீட்டை அடைந்ததுமே ப்ரியா," செல்வி சரவணன் போன் செஞ்சிருந்தாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல மறுபடியும் அடிக்கறேன்னிருக்காரு", என்றதுமே ஏற்பட்ட மகிழ்ச்சியில் உடலசதி பறந்துவிட, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போலுணர்ந்தாள் செல்வி. சமையலறையில் வேலையில் கவனம் செலுத்த முடியாமலேயே இயந்திரத்தனமாய் செய்தபடியே தன் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு போனின் வரவுக்குக் காத்திருந்தாள். அவன் செல்போன் வத்துக் கொள்ளாததன் அசௌகரியம் அவளுக்கு இப்போதுதான் புரிந்தது.

இரண்டு வருடங்களாகவே சரவணனை சீக்கிரம் மணமுடிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டேயிருந்தார்கள் அவர்கள் வீட்டில். செல்விக்கோ அவள் அம்மா தன் அண்ணன் மகனை முடிக்க நினைத்திருந்தாள். சௌதியில் டிரைவர் வேலையில் இருக்கும் சிவாவிற்கு அதில் உடன்பாடா என்றே தெரியாது அவளுக்கு. ஆனால், அதை நினைத்தாலே அவளுக்கு வயிற்றைக் கலக்கும். எப்படியாவது செல்வியின் அம்மாவையும் பார்த்துப் பேசிவிடத்தான் திட்டமிட்டிருந்தான் சரவணன். திருவாரூரிலிருந்து பேராவூரணிக்கு ஏற்கனவே போயிருக்கவேண்டும். எப்படியும் அம்மாவிடம் சொல்லி கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கிவிடுவதாகச் சொல்லி விட்டுத்தான் போயிருந்தான் சரவணம். அது விஷயமாகத் தான் அழைத்திருப்பானோ. 

போன் அடித்தது. கையில் இருந்த துடைப்பத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடிப்போய் போனை எடுத்தாள் செல்வி.
போன் தீபக்கிடமிருந்து. ப்ரியாவைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள். வழக்கத்திற்கு அதிகமாக ப்ரியா பேசிக்கொண்டே இருந்தது எரிச்சலாக இருந்தது. சரவணன் போன் செய்ய முயற்சிப்பானே, என்று குடைந்தெடுத்தது.

"வேற யாரெல்லாம் வராங்க? அப்டியா, சரி,.ம்,. ஓகே, நாம ஆர்சார்ட் எம் ஏர் டீயில மண்டே ஈவ்னிங் ஆறு மணிக்கு மீட் பண்ணுவோம். ", என்று ஒரு வழியாக போனை வைத்தார். தீபக் பெரிய ஷாருக்கான் என்ற நினைப்பில் மிதப்பான். உண்மையில் ஷாருக்கானை விடவும் பார்க்க நேர்த்தியாகவேயிருப்பான். ஆனால், குணம் தான் சரியில்லை. சிலமாதங்களுக்கு முன்பு ஒருநாள், ப்ரியா விடுப்பெடுத்திருந்தார். அதுமட்டும் எப்படித்தான் தெரியுமோ அவனுக்கு. வேலையே கிடையாதோ, அலங்காரமாக உடுத்தவே ஏகப்பட்ட செலவாகுமே என்றெல்லாம் செல்வி அடிக்கடி நினைத்துக்கொள்வாள். போன் அடித்துவிட்டு வந்துவிட்டிருந்தான். ப்ரியா அவனுடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார். வெளியே கிளம்பவிருந்தார்கள்.

காபிக்கு சக்கரை தீர்ந்துவிட்டிருந்ததால், செல்வி கடைக்குச் சென்றாள். அவள் திரும்பி வரும்போது பார்த்த காட்சி கோபத்தையும் அதிர்ச்சியையும் அவளுள் கொணர்ந்தது. ப்ரியா அறைக்குள் உடை மாற்றிக் கொண்டிருக்க, அந்தப் பொறுக்கி தீபக் ப்ரியாவின் அறைக்கதவு துவாரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த செல்விக்கு உடனே அசாத்தியக் கோபம் தான் வந்தது. கத்திக் கதவைத் தட்டி ப்ரியாவிடம் சொல்லி விடலாமென்றுதான் ஆவேசம் கிளம்பியது. ஆனால், செல்வியின் வார்த்தைகளை ப்ரியா நம்புவாரா இல்லை, பெரிய யோக்கியனைப் போல சோபாவில் உட்கார்ந்துவிட்ட தீபக்கை  நம்புவாரா என்ற சந்தேகம் வந்ததுமே நிதானமாக சொல்லலாமா வேண்டாமாவென்று இரண்டு நாட்களுக்கு மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டாள். பிறகு, வேண்டாமென்று விட்டுவிட்டாள்.

மீண்டும் போன் அடித்தது. செல்வி பாய்ந்து சென்று எடுத்தாள். "ஹலோ, ஓ, மாமாவா, நல்லா இருக்கீங்களா மாமா? அம்மா எப்பிடியிருக்கு?,..", என்று உற்சாகமாக செல்வி ஆரம்பித்ததுமே," நாங்க எப்பிடி நல்லா இருக்க? இல்ல கேக்கறன்,..ம்? எம்புள்ளக்கி என்னடி கொறச்சல்? ஏதோ ஒரு வேல வாங்கிக்குடுத்தா யோக்கியமா தங்கச்சிகுடும்பம் பொழைக்கிம்னு நெனச்சா, நீ வேலைக்கிப் போன எடத்துல ஆள் தேடறியோ? அடி செருப்பால,..", என்று தொடங்கி வாயில் வந்தபடி கத்தினார்.

பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பதைத்தவிர செல்வியால் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. பேசினால் கேட்கும் நிலையில் மாமா இருந்தால் தானே. நேரில் கிடைத்தால் வெட்டிக்கொன்றுவிடும் கோபத்துடன் நிதானமேயில்லாமல் திட்டித்தீர்த்தார்.

மாமா ஒன்றும் கெட்டவரில்லை. ஓரளவிற்கு நியாயஸ்தர் தான். செல்விக்கு அதில் என்றுமே சந்தேகமிருந்ததில்லை. சிவாவிற்குப் பெரிய பெரிய இடங்களிலிருந்தெல்லாம் மாப்பிள்ளைகேட்டு வந்ததை அவளே அறிவாள். அவனின் திறமைக்கும் நிறத்துக்கும் கம்பீரத்துக்கும் செல்வியின் அருகில் அவன் நின்றால் துடைப்பத்துக்குப் பட்டுக்குஞ்சலம் கட்டியதைப்போல எள்ளளவும் பொருத்தமேயில்லாமல் தான் இருக்கும். அது மாமாவுக்கும் தெரியும். இருந்தாலும், தங்கை மேலிருந்த பாசம் காரணமாயும் உறவு விட்டுப் போகாமலிருக்கவும் மாமா செல்வியையே அவனுக்கு முடிக்க உறுதிபூண்டிருந்தார். அதுமட்டுமில்லை. குடும்பத்தின் அனைவரிடமும் ஏற்கனவே சொல்லவும் செய்திருந்தார். தன் அபிப்ராயத்தைச் சொல்ல சிவாவிற்கு வாய்ப்பே கொடுக்கபடவில்லை. கேட்டறிந்துகொள்ள நினைத்த செல்விக்கு ஊரிலிருந்து கிளம்பும் வரை சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

அப்பா இறந்தபோது செல்விக்கு பத்து வயதுகூட நிரம்பியிருக்கவில்லை. மாமா தன் குடும்பத்துடன் தங்கை குடும்பத்தையும் தோளில் சுமந்து வந்துள்ளார். எட்டுவருடங்களுக்கு அந்தச் சுமைகளுக்காக ஒவ்வொரு மாதமும் சிங்கப்பூருக்குக் 'குருவி'யாகப் பறந்து, கொண்டுவந்த பொருட்களை மீண்டும் தோளில் சுமந்து, சிங்கப்பூரில் வீடுவீடாகச் சென்று விற்றார்.

சமீபமாய்த் தான், அதுவும் சிவாவிற்கும் செல்விக்கும் வேலை கிடைத்த பிறகுதான், உடலுக்குச் சற்று ஓய்வு கொடுத்திருந்தார். உள்ளூரிலேயே மற்ற குருவிகள் சிங்கப்பூரிலிருந்து கொணர்ந்த பொருட்களை விற்க ஆரம்பித்திருந்தார்.

ப்ரியா செல்வியின் சம்பளத்தில் பாதியை அவளது வங்கிக் கணக்கிலேயே போட்டுவிட்டு மீதியை அவளது அம்மாவிற்கு அனுப்புவார். சிவாவோ தான் சம்பாதித்ததில் தன் செலவிற்குக் கொஞ்சம் மட்டும் வைத்துக்கொண்டு முழுவதையும் அனுப்பி வந்தான்.

அன்று சரவணனின் போனை எதிர்பார்த்து எதிர்பார்த்து நள்ளிரவு வரை உறக்கமேயில்லாமல் புரண்டாள் செல்வி. ஒரே கனவு. சிங்கப்பூர் வீதிகளில் சாணமிடும் மாடுகளும், திருவாரூர் வீதிகளில் குதித்தோடும் இடுங்கிய கண்களைக் கொண்ட சீனச்சிறார்களும். கனவுகள் ஒரே முரண்களின் மூட்டைகளாக இருந்தன என்று கனவிலேயே செல்விக்குச் சிரிப்பு வந்தது.

ஆழ்ந்த உறக்கமில்லாததால் காலையில் எழுந்ததுமே சுறுசுறுப்பில்லாமல் உணர்ந்தாள் செல்வி. ஞாயிறன்று எல்லோருமே தாமதமாகத்தான் எழுவார்கள். வெளியில் சாப்பிடப்போனாலும் போவார்கள். சிலவேளைகளில் செல்வியும் உடன் போவாள். ஆனால், பெரும்பாலும் வேலையிருந்து விடுவதால் வீட்டிலேயேதான் இருப்பாள்.

"செல்வி, இன்னிக்கி சமைக்காத. வெளிய போயிடலாம் சாப்ட", என்ற ப்ரியாவிடம்," இல்ல, நா ·ப்ரிட்ஜுக்குள்ள இருக்கறத சாப்டுக்கறேன் மேடம். இன்னிக்கு பெட்ஷீடெல்லாம் வேற துவைக்கணும்", என்றதுமே,"அப்ப சரி. ஆமா, சரவணன் போன் செஞ்சாரா?", என்று கேட்டார். இல்லையென்று தலையாட்டவே,"உங்க மாமா என்ன சொன்னாரு?", என்று அக்கறையோடு கேட்டார்.

"கோபத்துல கத்தினாரு. சரவணன் போய் பேசிட்டாரு போலயிருக்கு வீட்டுல. நேர்ல இருந்தா மாமா என்னக் கொலையே செஞ்சிடுவாரு போலயிருக்கு. என்ன ஆகும்னே தெரியல்ல மேடம்",என்று கூறியதுமே, செல்வியின் தோளில் தட்டி, "கவலப்படாத. சரவணன் சமாளிப்பாரு.நல்லவருன்னு உறுதியாத் தெரிஞ்சுதான் நானே உனக்கு சப்போர்ட் பண்ணீனேன், ரிலாக்ஸ், செல்வி, ரிலாக்ஸ்", என்றபடியே குளியலறைக்குள் சென்று விட்டார்.

செல்வி அவர்களோடு வெளியில் போகாததற்கு முக்கிய காரணமே அவள் சரவணனின் போனை எதிர்பார்த்ததுதான். இன்றாவது போன் செய்வானா என்று மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தாள்.

எல்லோருமே கிளம்பி வெளியே சென்றார்கள். போன் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சோதித்தறிந்தாள். அவளின் செயல் அவளுக்கே விநோதமாகயிருந்தது. கைகள் தன்னிச்சையாக வேலையில் லயிக்க மனம் இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் தாவித்தாவிக் கொண்டிருந்தது.

துணிகளை எடுத்து உலர்த்தினாள்.

போர்வையை உதறி கழியில் விரித்தாள். அடுத்த வீட்டு இந்தோனீசியப்பணிபெண் சொல்லியிருக்கிறாள். அவள் வேலைக்கு வந்ததிலிருந்து அவளின் முதலாளியம்மா வாஷிங்க் மெஷினை மூடி வைத்து விட்டாளாம். துணிகள் எல்லாவற்றையுமே கையால்தான் துவைக்கவேண்டுமாம். இது தவிர தன் உறவினர் வீட்டு வேலையையும் வாங்கி கொண்டு கொடுக்கவேண்டிய சம்பளத்தைக்கூடக் குடுக்காமல் இழுத்தடிப்பார்களாம். பல நாட்கள் அந்தப்பெண்ணுக்கு வயிறு நிறைய உணவுகூட இருக்காதாம்.

எப்போதாவது செல்விக்கு சாப்பாடு இல்லாமல் போனால், மீண்டும் ஏதேனும் செய்துகொள்ளச் சொல்வார் ப்ரியா. செல்விக்கு அதிக வேலை இருந்த நாளென்றால், ரகுவை விட்டாவது உணவகத்திலிருந்து வாங்கி வந்து கொடுத்ததுமுண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு வாஷிங்க் மெஷின் வேலை செய்யாமல் நின்று விட்டது. இரண்டு நாள் துணையை அப்படியே வைத்திருந்து புது வாஷிங்க் மெஷின் வாங்கி வந்ததும் தான் செல்வியைத் துவைக்கவே சொன்னார்.

oooOOooo
[ பாகம் : 5 ]

போன் அடித்ததும், கையிலிருந்த போர்வையைக் கூடையில் அப்படியே போட்டுவிட்டு ஓடிச் சென்று போனை எடுத்தாள். சரவணனின் குரலைக் கேட்டதும் உற்சாகமாக," எப்டியிருக்கீங்க? உங்க போனைத் தான் எதிர்பார்த்துகிட்டிருந்தேன். பேசினீங்களா, உங்கம்மா சம்மதிச்சாங்களா ?", என்ற கேட்டாள். சரவணனின் குரலில் சுரத்தேயில்லை. அவன் சொன்னவை எல்லாம் அவளின் நம்பிக்கையைக் குலைப்பதாகவேயிருந்தன. சரவணன் போகும் போதே தயாராய் அவன் வீட்டில் பெண்பார்த்து வைத்து விட்டார்கள். அதையும் மீறி இரண்டு நாட்களுக்கு முன்தான் பேராவூரணிக்குப் போயிருக்கிறான். அங்கு மாமா கோபத்தில் கன்னாப்பின்னாவென்று கத்தியிருக்கிறார். செல்வியின் அம்மாவோ 'நடக்காது', என்று மட்டும் தீர்மானமாகச் சொல்லிவிட்டாளாம்.

"நீ தைரியமா இரு செல்வி. என்னைய மீறி என்னோட கல்யாணம் நடந்துடுமா சொல்லு? எனக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உன்னோடதான்", என்று தைரியம் சொல்லிவிட்டுத்தான் போனை வைத்தான். ஆனாலும், செல்வியின் வயிறு ஏனோ பிசைய ஆரம்பித்தது. அப்படியே உட்கார்ந்து யோசித்தாள். ஒன்றுமே புரியவில்லை. நினைத்த மாத்திரத்தில் பறந்து செல்லக்கூடிய பறவையாகப் பிறக்கவில்லையே என்றெல்லாம் நேரம் காலம் தெரியாமல் எண்ணங்கள் பளீர் பளீரென்று தோன்றி மறைந்தன.

மீண்டும் போன் அடிக்கவே, எடுத்தால் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. அம்மா. ஆசையாகப் பேச ஆரம்பித்தால் உற்சாகமேயில்லாமல் கடுகடுவென்று ஒரேயடியாக அட்வைஸ். "ஒழுங்கு மரியாதையா இருக்கறதானா அங்க இரு. இல்லன்னா பேசாமக் கெளம்பி வந்துசேரு. போதும் நீ சம்பாதிச்சு நாங்க சாப்டது. மானம் போறாப்புல ஏதாச்சும் செஞ்ச, ஒரே வெட்டா வெட்டிப்போட்டுட்டு நானும் செத்துப்போயிடுவேன்,ஆமா", என்று மிரட்டலாய் முடித்தாள். எப்போதும் கேட்கும் பரிவான கேள்விகள் காணாமல் போய்விட்டிருந்தன. யாரோ ஒரு அந்நியப் பெண்ணிடம் பேசியதைப் போலுணர்ந்தாள் செல்வி.

மனம் எதிலுமே லயிக்க மறுத்தது. செய்து பழகிய கைகள் தன் வேலையைச் செய்தன. ஆனால், மனம் குழம்பிக் குழம்பித் தவித்தது. சரவணனில்லாத ஒரு வாழ்க்கையை அவளால் நினைத்தும் பார்க்கமுடியவில்லை. நம்பிக்கை விதைத்ததே அவன் தான். அவனில்லாமல் ஒரு எதிர்காலமா? ஹ¥ஹ¤ம், வாய்ப்பேயில்லை என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அந்த அளவிற்கு அவளின் கனவுகள் வளர்ந்து கிளைப்பரப்பிய விருட்சங்களாகியிருந்தன. அப்போதைக்கு அவனின் சாமர்த்தியத்தில் மட்டுமே அவளால் நம்பிக்கைகொள்ள முடிந்தது. அவனைப் பார்க்காமலேயே இருந்திருக்கலாமோ, நிம்மதியாக இருந்திருப்போமோ என்றெல்லாம் விரக்தியில் நினைத்துக்கொண்டாள். இறந்தகாலத்தை மட்டும் அழிக்க முடிந்தால் !

வீட்டுக் கதவு தட்டப்பட்டதும், போய் திறந்தாள். அங்கு நின்றவனை ஏற்கனவே எங்கோ பார்த்தமாதிரி இருந்தது. சட்டென்று நினைவுக்கு வரவில்லை. "சரவணனோட ·ப்ரெண்டு தாங்க நான். எம்பேரு வேலு", என்றவனிடம்,"ம்,என்ன விஷயம்?", கேட்டதும், சற்றும் எதிர்பார்க்காத விஷயத்தைச் சொன்னான்.

முதல் நாளிரவு கொண்டுபோய்க் கொடுத்த உணவைச் சாப்பிட்டவர்களில் மூன்று பேருக்கு, வாந்தியும் ஒருத்தனுக்கு மயக்கமும் வந்துவிட்டது. பங்க்ளாதேஷி 'பட்டர் நான்', 'தந்தூரிசிக்கன்' சாப்பிட்டதையும், எந்த வீடு என்ற விவரத்தையும் சொல்லிவிட்டான். '·புட் பாய்சனிங்க்' என்று சந்தேகிக்கிறார்கள். சீக்கிரமே அதிகாரிகள் வீட்டைத் தட்டினாலும் தட்டலாம் என்று சொல்லிவிட்டு நிற்காமல் விடுவிடுவென்று போய் விட்டான்.

நூறு பேருக்குமேல் சாப்பிட்டிருந்தும், ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லையே, எப்படி அவர்களுக்கு மட்டும் என்று செல்வி குழம்பினாள். ·பிரிட்ஜில் வைத்து இதோ மறுநாள் சுடவைத்தும் சாப்பிட்டிருக்கிறாள். சாப்பிட்டு இரண்டு மணிநேரமாகியும் ஒன்றும் ஆகவில்லை. எதற்கும் இருக்கட்டுமென்று ப்ரியாவின் கையடக்கத் தொலைபேசியை அழைத்து விவரத்தைச் சொன்னாள்.

பத்தே நிமிடங்களில் ப்ரியா வீட்டைத் திறந்துகொண்டு தடதடவென்று உள்ளே நுழைய ரகு புறுபுறுவென்று பின்னாடியே வந்தார். "செல்வி, மறுபடியும் யாரும் வந்தாங்களா? ப்ச்,..எல்லாரும் 'யீஷ¤ன் டென்' ல 'காதல்' போறதாயிருந்தோம். உன்னோட போன் வந்ததும் கிளம்பச் சொல்லிட்டாரு, நானும் கிளம்பிட்டேன். ராதிகாவும் ரஞ்சனும் அக்கா வீட்டுலதான் இருக்காங்க ",என்றபடியே உடை மாற்ற அறைக்குள் போனார். "உனக்குன்னு தோணுது பாரு. பேசாம கொண்டுபோய் கொட்டேன். எதுக்கு இந்த மாதிரி அனாவசிய தலை வலி. இப்ப பிரச்சனை எந்த அளவுல இருக்குன்னே தெரியல்லையே ", என்று ரகு கத்த, ப்ரியா," இங்க பாருங்க, மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லாதீங்க, இத்தன பேரு சாப்பிட்டிருக்கோம். ஒண்ணுமே ஆகல்லயே. நாம கொடுத்த சாப்பாடுனால இருக்காது. பேசாம படத்துக்கே போயிருக்கலாம். ஆனாலும் ரொம்பத்தான் பயப்படறீங்க", என்று ப்ரியா சமாதானப்படுத்த முயன்றார்.

செல்விக்குத் தான் கொடுத்த யோசனையால் வந்த பிரச்சனை என்ற குற்றவுணர்வு ஏற்பட்டது. தான் யோசனை சொல்லாமலிருந்திருந்தால் ப்ரியா நிச்சயம் சாப்பாட்டைக் கொட்டியிருப்பார். ஆனால், கிட்டத்தட்ட ஏழெட்டு பேர் வயிறு நிறைய சாப்பிடும் அளவு உணவை அப்படியே கொண்டு குப்பைத்தொட்டியில் கொட்ட அவளுக்கு மனமே வரவில்லை.

ரகுவும் ப்ரியாவும் ஞாயிறை வீணாக்கிவிடாமல் உறங்கி எழுந்தனர். தகவல் இருந்தால் தன்னை எழுப்பச் சொல்லியிருந்தார் ப்ரியா. மாலை வரை செய்தி இல்லை. சிலுசிலுவென்ற காற்றும் மழையும் அவளுக்கும் ஒரு குட்டித் தூக்கம் போடலாமா என்று நப்பாசையைக் கொடுத்தது. வேலையும் கவலையும் தூங்க விடாது என்றே தோன்றியது. தவிர, பகலில் தூங்கிப் பழகியிருக்கவில்லை. பிள்ளைகளின் புத்தகப்பையைக் குடைந்தாள். தேர்வுகள் முடிந்தாயிற்று. புத்தங்ககளையெல்லாம் ஒரு பையிலும் எழுதாத பக்கங்களை நோட்டுகளிலிருந்து அகற்றித் தனியாகவும் வைக்க ஆரம்பித்தாள்.

செல்விக்கு ஒரே நேரத்தில் இரண்டு கவலைகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. ஆனாலும்,சொந்தக் கவலையைவிட இப்போது பொதுக்கவலைதான் பெரிதாகத் தோன்றியது. யாருக்கும் ஒன்றுமில்லாமலிருக்க வேண்டுமே, தெய்வமே என்று தனக்குத் தெரிந்த தெய்வங்களிடமெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தாள்.

மாலையில் ரகு போய் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வந்தார். இருவரும்," ப்ளே க்ரௌண்டுக்குப் போலாம் ஆண்டி", என்று வந்ததிலிருந்து விடாமல் பலமுறை நச்சரிக்கவே, செல்வி ப்ரியாவிடம் சொல்லிவிட்டு இருவரையும் கூட்டிக்கொண்டு பக்கத்தில் இருந்த விளையாட்டு மைதானத்துக்குப் போனாள்.

அங்கேயிருந்த பெஞ்சில் உட்கார்ந்து குருட்டு யோசனையில் ஆழ்ந்தாள்.  அந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதுவும் ஆகக்கூடாதே என்று மனம் இரைந்தபடியிருந்தது. அதே சமயம், சரவணன் மறுபடியும் எப்போது தொலைபேசுவான் என்று அவளுக்குள் இருந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் அதிகரித்தபடியிருந்தது. இரட்டை மாட்டு வண்டியாகத் தான் அவளின் எண்ணப்பாய்ச்சல் பாய்ந்தோடியது.

இருவரும் ஆடி ஓய்ந்து திரும்பிவந்தனர். இருள் கவியத்தொடங்கியிருந்தது. இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டைப்பார்க்க நடந்தாள். சமையலறையில் இரவு உணவிற்கான ஆயத்தங்களைத் தொடங்கி விறுவிறுவென்று முடித்து, சாப்பாட்டு வேலைகள் முடிந்ததும் சமயலறையைச் சுத்தமும் செய்துவிட்டிருந்தாள். எல்லோரும் டீவி பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் வாயிற்கதவு தட்டப்பட்டது. ப்ரியாதான் கதவைத்திறந்தார். பின்னாடியே செல்வியும் போய்ப்பார்த்தால் வேலு ! "எல்லாருக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்காங்க. வாந்திக்குக் காரணம் அவங்கள்ளாம் இன்னிக்கிக் காலையில கடையில சாப்புட்ட 'மீகோரெங்க்' தான்னு சொல்லிட்டாங்க. 'ஹாக்கர் செண்டரு'க்கு ஆள் போய் 'சாம்பிள்' எடுத்து ஒப்பிட்டுப் பாத்தாச்சு. அங்க சாப்ட வேற ரெண்டு மூணு பேருக்குக்கூட உடம்பு முடியாம போயிருக்காம். கவலையா இருப்பீங்களே, ஒண்ணும் பிரச்சனையில்லன்னு சொல்லிட்டுப்போகதான் வந்தேன். வரேன் செல்வி,வரேன் மேடம்," என்று வாசலிலேயே நின்று சொல்லிவிட்டுச் சென்றதும்தான் எல்லோருக்கும் பெரிய நிம்மதியானது.

அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கு சரவணன் போன் செய்வானென்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமார்ந்து போனாள் செல்வி. அவனது தொலைபேசி எண் அவளிடம் இருந்தது. ஆனால், அது அவனுடைய வீட்டிலிருந்து வெகு தூரம். தன்னிடம் இருந்த 'ஹலோ' கார்ட் எல்லாமே முடிந்திருந்ததால், ப்ரியாவைக் கேட்டு ஞாயிற்றுக்கிழமை நேரடியாக பேராவூரணிக்கே தொலைபேசினாள். இரண்டு தெரு தள்ளியிருந்த மாமி வீட்டிற்குத்தான் செல்வி வழக்கமாக அழைப்பாள். கூப்பிடச் சொல்லிவிட்டு அரை மணிநேரத்தில் அழைத்தபோது அம்மாவின் குரலைக் கேட்கப்போகும் ஆசையில் இருந்தவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றமே.

மீனா தான் வந்திருந்தாள். "யக்கா,..நல்ல ஆளப்பார்த்தக்கா. வந்து பேசினாரில்ல,.ம்,.என்ன செஞ்சிருக்கணும்? மாமாவோட கோபம் வடிஞ்சதும், மறுபடியும் வந்து பேசியிருக்கணுமா இல்லையா? வருவாரு வருவாருன்னு தான் நானும் இருந்தேன். ஆனா, வரல்லயே. இதுக்குள்ளாற அவங்கம்மாக்கு வேற சீரியஸா இருக்காம். நெஞ்சுவலி. தஞ்சாவூர் ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம், அவரோட ·ப்ரெண்ட் தான் இந்தப்பக்கம் வந்தவரு சொன்னாரு", என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தானாகவே இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் முயன்றபோது கிடைக்கவில்லை. தங்கைக்காவது தன் மனம் புரிந்ததே என்று செல்விக்கு அல்பமாய் சின்னஞ்சிறு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவளுக்குப் புரிந்து ஆகப்போவது தானென்ன?

செல்வியின் அத்தை மகளுக்குத் தான்  சரவணனை நிச்சயம் செய்திருந்தார்களாம்.மார்கழி பிறப்பதற்குள் திருமண நாளும் குறித்திருந்த செய்தியை அடுத்தவாரமே மீனா சொன்னாள். விதியின் விளையாட்டை நினைத்து வியந்தாள் செல்வி. பேசிச் சம்மதம் வாங்க முயலும்போது ஏற்பட்ட சண்டையில் தான் சரவணனது அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போனதாம். தன் அம்மாவின் உடல் நிலை காரணமாய் அவரது பிடிவாதத்துக்கு இணங்கவேண்டியாகிவிட்டது என்று அக்காவிடம் சொல்லச்சொன்னானாம். யாரும் சிவகாமி கல்யாணத்துக்குப் போகக்கூடாதென்று மாமாவின் உத்தரவாம். காரணம் அவளில்லை, சரவணன். உணர்ச்சிப் பெருக்கில் மீனாவுக்கு போனில் விவரங்களைக் கோர்வையாகவோ இயல்பாகவோ சொல்ல முடியவில்லை.

சற்றும் எதிர்பாராத அந்தச் செய்தி செல்விக்கு பெரிய இடியாக இருந்தது. வருத்தமும் அழுகையும் மெதுவாகத் தேய்ந்தபோது, நம்பிக்கையாகப் பேசி மோசம் செய்துவிட்டானே என்று கோபமும் அழுகையுடன் பொங்கிக்கொண்டு வந்தது. சிவகாமியின் சிவப்புத்தோலுக்கு மயங்கிவிட்டானோ என்ற எண்ணங்களும் கூடவே எழுந்தன. 'பாவி, கார்த்திகைல கல்யாணம், கார்த்திகைல கல்யாணம்னு வாக்கு சொல்றாப்புல சொன்னானே, அதே மாதிரி தானே நடக்குது', என்று மனதிற்குள்ளேயே சரவணனை வைதாள். அன்றைய வேலைகள் அனைத்துமே அப்படியே கிடந்தன.

ப்ரியா வேலை முடிந்து வந்ததும் செல்வியின் வீங்கிய முகத்தைப்பார்த்து," ஏன்? என்னாச்சு செல்வி?", என்றதுமே அதற்காகவே காத்திருந்தாற்போல கொடகொடவென்று மீண்டும் கொட்டியது நின்றிருந்த கண்ணீர். அழுதுகொண்டே எல்லாவற்றையும் சொல்லிமுடித்தாள். "எனக்கே ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கு செல்வி. அப்ப, உனக்கு எப்பிடியிருக்கும். ஓகே, நீ ஊருக்கு போறியா? டிக்கெட் எடுத்துத் தரேன். நீ போனா கல்யாணம் நடக்கும்னா,..நீ ஒன்னோட உடனே கிளம்பு,..ம்?", என்றாள் ப்ரியா.

அழுதுகொண்டே வேண்டாமென்று தலையையாட்டி மறுத்தாள். "நான் போனாலும் ஒண்ணும் ப்ரயோஜனமில்ல மேடம். சரவணனையும் மீறி ஒண்ணும் இந்த 'நிச்சயம்' நடந்துடல்ல, அவன் அங்க இருக்கும்போது தானே நடந்திருக்கு", என்றாள் கேவியபடியே. "சரி, வேணா நீ போன் செஞ்சி பேசேன் அவனோட", என்று சொன்னார் ப்ரியா.

சரவணனின் துரோகத்தை நினைத்து நினைத்து மருகினாள் செல்வி. ப்ரியா பல முறை வற்புறுத்தியும் இரவு சாப்பிடாமலே படுத்துக்கொண்டாள். அழுது அழுது தலைவலி வந்திருந்தது. அடுத்தநாள் எழுந்துகொள்ள முடியாமல் காய்ச்சல் அனாலாய்க் கொதித்தது. செல்வி எழாததைப் பார்த்து ப்ரியாவை அனுப்பினார் ரகு. வந்து பார்த்துவிட்டு,"ரகு நான் லீவு போட்டுடறேன். இவளுக்கும் இப்படியிருக்கு. பிள்ளைகளையும் பார்த்துக்கணும். ஸ்கூல் இருந்தாலும் ஸ்கூல்ல விட்டுட்டுப் போயிடலாம், லீவா வேற இருக்கு. நீங்க கெளம்புங்க", என்று சொல்லிவிட்டார் ப்ரியா.

ப்ரியா கொடுத்த மாத்திரையில் காய்ச்சல் இறங்கியது. அவளுக்கு உடனே தோன்றிய யோசனை தற்கொலை ! எப்படி? பல வழிகளை யோசித்தவள் பன்னிரெண்டாவது மாடிக்குப் போய் குதித்துவிடலாம் முடிவெடுத்தாள். இரவு மற்றவர்கள் தூங்கப்போனதும் திட்டத்தைச் செயல் படுத்த நினைத்துக்கொண்டிருந்தாள். ப்ரியாவின் அறையை எட்டிப்பார்த்தாள். குழந்தைகள் ஆளுக்கு ஒரு புறம் படுத்திருக்க, நிம்மதியான மதிய உறக்கத்தில் மூவரும்.

தன் சாவிற்கு பிறகு இந்தக்குடும்பத்திற்கு சட்டம் எந்தவித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று தோன்றியதும், நல்லவேளை குழம்பியிருந்த நேரத்திலும் சரியான யோசனை வந்ததே என்று, ஒரு பேப்பரை எடுத்து தேதிபோட்டு முழுப் பக்கத்துக்கு யோசித்து யோசித்து எழுதினாள். குழம்பியிருந்த மூளைக்கு அந்த அளவாவது யோசிக்க முடிந்ததே என்று நிம்மதியடைந்தது மனம்.

oooOOooo
[ பாகம் : 6 ]

மாலையில் ஆபீஸிலிருந்து வரும்போதே வழக்கத்திற்கு விரோதமாக,'ப்ரியா, ப்ரியா' என்று கோபத்தோடு கத்திக்கொண்டே நுழைந்தார் ரகு. ஓடோடி வந்த ப்ரியா, "என்னங்க?என்னாச்சு?", என்றதுமே, பளேரென்று ஓர் அறை ப்ரியாவின் கன்னத்தில் ! கோபத்தில் ரகு நிதானமிழந்திருந்தார். ப்ரியா கதிகலங்கி நிற்க, செல்வியோ தன் மனவேதனையையும் உடல்சோர்வையும் மறந்து திருதிருவென்று விழித்தாள். சில நொடிகளில், சட்டென்று அடுப்படி வேலையைத் தொடரப் போவதைப்போல இடத்தைவிட்டகன்றாள்.

" என்னோட பொறுமைக்கும் ஒரு லிமிட் இருக்கு. ரெண்டு நாள் முன்னாடி 'பாஸிர் ரிஸ் சாலே'ல ஆபீஸ் அன்யுவல் டின்னர்னு போனியே? அங்க தீபக்கும் வந்திருந்தானா?", ஆமென்று தலையசைத்தார் ப்ரியா. "அவனுக்கு அங்க என்ன வேலை? இல்ல, அவனுக்கு அங்க என்ன வேலைன்னு கேட்டேன்? ம்,.உங்கக்காவுக்கு போன் போடு,ம்,, சீக்கிரம், நா அவங்ககிட்ட பேசணும்" என்றவனிடம் எண்களை ஒற்றி நீட்டினாள் ப்ரியா. "நா, ரகு பேசறேன். உங்க கொழுந்தன் அங்க இருக்கானா? குடும்பத்தைக் கெடுக்கணும்னு நெனக்கறானா பாவி. இதோ இப்பவே நா அங்க வரேன் ", என்று  போனை படீரென்று வைத்தார். "என்ன கை நீட்டியடிச்சதுமில்லாம, என்னென்னவோ பேசறீங்க?", சத்தமாகக் கேட்டபடி கன்னத்தில் கையுடன் ரகுவின் பின்னாலேயே வாசல் வரை சென்றார் சற்று நிதானத்துக்கு வந்திருந்த ப்ரியா.

செல்விக்கு நிலைமையின் தீவிரம் புரிந்துவிட்டது. இந்தத் தடவை சண்டை 'அறை'வரை போய் விட்டதால், மிகவும் பயமாகக்கூட இருந்தது. ப்ரியா அழுதுகொண்டே படுத்திருந்தார். என்னசெய்வதென்றே தெரியவில்லை. உள்ளே போய் சமாதானம் செய்யலாமா, இல்லை, தவறாக எடுத்துக் கொள்வாரா?

ஒரு மணிநேரத்திலேயே ரகு திரும்பி வந்தார். ஆபீஸில் பரவியிருந்த புரளியே ரகுவின் கோபத்துக் காரணம். ப்ரியாவின் ஆபீஸில் வேலைசெய்யும் ஒரு மலாய்க்காரரின் சகலை ரகுவின் கீழ் வேலை செய்தான். அவன் மூலம் தான் ப்ரியாவைப்பற்றிய அவதூறு கிளம்பியிருந்தது. ரகு சொல்லச்சொல்ல ப்ரியாவுக்குக் கோபம் வந்தது. "அன்னிக்கு வேறவேல இல்லாததால 'ஜாயின்' பண்ணிக்கட்டுமான்னு தீபக் கடைசி நேரத்துல கேட்டுட்டு வந்தான். கொஞ்சநேரம் இருந்துட்டுப் போயிடுவான்னு நெனச்சேன். ஆனா, கடைசி வரைக்கும் இருந்துட்டுத்தான் போனான். அக்காவுக்குக் கூட தெரியும்னு எங்கிட்ட சொன்னானே",என்றாள்.

"ப்ரியா உனக்கு புரியல்லயா? இல்ல புரியாத மாதிரி நடந்துக்கறியா? இப்பதான் உங்கக்காவோட, அங்க மாமியார் வீட்டுக்குப் போய் தீபக் கிட்டயும் பேசிட்டு வரேன். உன்னோட பேசறது, போன் பண்றது, இல்லன்னா இங்க வரது எதுவுமே கூடாதுன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன், என்னமா பொய் சொல்றான், வேஷம் போடறான். தீபக் கீதா பிரிஞ்சு ஒரு வருஷமாகப்போகுதுன்றாங்க உங்கக்கா. முழிக்கறான், குட்டு வெளியாயிடிச்சேன்னு ", என்றதுமே,"ம்,.சந்தேகமாக்கும்? இவ்வளவு தூரம் என்னைய அவமானப்படுத்தின பிறகும் நா ஒங்ககூட இருக்க மாட்டேன். இது மாதிரி நீங்களே என்னப்பத்தி பேசிகிட்டிருந்தா மத்தவங்க ஏன் பேசமாட்டங்க. நா எங்க அக்கா வீட்டுக்குப் போறேன்", என்று கூறியபடியே கிளம்பிச் சென்று விட்டார். ரகு அப்படியே சோபாவில் தொப்பென்று உட்கார்ந்து விட்டார்.

ப்ரியாவைப் பற்றியை பலரும் பலவிதமாய்ப் பேசுவதுதான் ரகுவிற்குப் பிடிக்கவில்லை. அப்படிப் பேசும் விதமாய் ப்ரியா நடப்பதைத்தான் அவர் கண்டித்தார். மனையின் மேல் சந்தேகமே படவில்லை. ஆனால், ப்ரியாவுக்கு அதையெல்லாம் புரிந்துகொள்ளமுடியவில்லை. புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட, ரகு தன்னை எப்படி அடிக்கப் போயிற்று என்றும் அவர் தன்னை சந்தேகப்படுகிறாரே என்றும் கவலைப்பட்டார்.

செல்வி தீவிரமாய்ப் போட்ட தன் திட்டத்தைத் தற்காலிகமாய் மறக்கச்செய்தது வீட்டில் நடந்த சண்டை. ராதிகா திரும்பத்திரும்ப அம்மாவைக் கேட்டுத் தொந்தரவு செய்தாள். ரஞ்சன் ஒரு முறை கேட்டுவிட்டு கம்ப்யூட்டர் விளையாடப் போய் விட்டான். ரகு சாப்பிடாமலேயே போய் படுத்துவிட்டார். அறைக்கதவைத் தட்டிக் கூப்பிடலாமா வேண்டாமா என்றே புரியவில்லை. பிள்ளைகளைச் சாப்பிட வைத்துத் தூங்கவும் வைத்தாள். பிறகு தானும் தூங்கப் போனாள்.

அடுத்தநாள் ப்ரியா வரவில்லை. அதற்கடுத்தநாள் தான் வந்தார். அதுவும் சில துணிகளை எடுத்துக்கொள்வதற்கு. துணிகளை பெட்டியில் திணித்துக்கொண்டே, "செல்வி, பசங்களையும் இப்போ கூட்டிட்டுப் போயிடறேன். அக்கா அவங்களப் பாத்துப்பாங்க. ஆனா, நீ கவலயேபடாத. உன்ன நா ரொம்ப நல்ல எடமா வேலைக்கு ஏற்பாடு பண்ணிவிட்டுடறேன். ",என்றதும் செல்விக்கு ஒன்றும் புரியவில்லை. "மேடம், நான் இங்கயே இருக்கேன்,..", என்பதற்குள்," எனக்கும் ரகுவுக்கும் ஒத்துவரும்னு தோணல்ல, அதனால பேசாம டைவோர்ஸ¤க்கு அப்ளை பண்ணலாம்னு இருக்கேன். இன்னும் அக்காகிட்ட சொல்லல்ல. குதிகுதின்னு குதிப்பாங்க. ரகு மேல தப்பேயிருக்காதுன்னும் சாதிப்பாங்க. எனக்குத் தெரியும். இனிமேதான் அக்காகிட்ட மெதுவா பேச்ச ஆரம்பிக்கணும். என்னோட ·ப்ரெண்ட் அனு நாளைக்கி லண்டன்லயிருந்து வந்துடுவா. அவ வந்தாச்சுன்னா எனக்கு பெரிய பலம். ரகுவுக்கு சந்தேகம் வந்துடுச்சுன்னு தான் நெனக்கறன். வேலையவிடு, வேலையவிடுன்னாரு. அதுக்கே எத்தன பிரச்சன. நானும் பொறுத்துப் பொறுத்துப் போயிட்டிருந்தேன், ஆனா இன்னிக்கி, அடிக்கறவரைக்கும் போயிட்டாரு, சொல்லு எப்படி இவரோட இருக்கறது? என் பக்க ந்யாயத்தக் கேட்ருக்கணுமா இல்லையா?", என்றார் கண்கலங்கியபடியே யாரிடம் பேசுகிறோம் என்ற நினைவில்லாமலே பேசுவதுபோலப் பேசினார் ப்ரியா.

செல்வி தயங்கித் தயங்கி,"மேடம் அந்தாளு சரியில்ல மேடம்", என்றதுமே," ம் ? ஏன்?", என்று சிடுசிடுப்புடன் கேட்டார் ப்ரியா. வேறு வழியில்லாமல் சொல்லத் தொடங்கினாள் செல்வி.

"அந்தாளு உங்களப்பாக்கற பார்வையே சரியில்ல மேடம்", என்று ஆரம்பித்து, முன்பொரு நாள், அறைக்கதவின்  சாவித்துவாரம் வழியாக தீபக் எட்டிப்பார்த்ததைப் பற்றிச் சொல்லி முடித்தாள். "மேடம், நீங்க இவ்வளவு பேசினதாலதான், அதுவும் நெலமை சீரியஸ்னு தெரிஞ்சி கிட்டுத்தான் நா இதச் சொன்னேன். அன்னிக்கே சொல்லலாம்னு தான் இருந்தேன். ஆனா, ஒரு வேள நீங்க நம்பலன்னா எதுக்கு அனாவசியமான்னு விட்டுட்டேன். ஆனா, இன்னிக்கும் சொல்லாம இருக்க என்னால முடியல்ல." கேட்டதும் ப்ரியா வாய்பேசாமல், செல்வியின் முகத்தையே புதிதாகப் பார்ப்பதைப்போலச் சில நொடிகள் பார்த்தார். திடீரென்று பெரிதாய் அழ ஆரம்பித்தார். நிச்சயம் நடந்த சம்பவத்தை நினைத்தல்ல. தான் நம்பிய நட்பு முற்றிலும் வேறாகிப் போன ஏமாற்றத்தினால்தான் என்று செல்விக்குப் புரிந்தது.

ப்ரியாவின் அழுகையைப் பார்த்ததும் செல்விக்கு ஏன் சொன்னோம் என்றாகிவிட்டது. சொன்னதால் ஏதும் பலனிருக்குமா என்றும் அப்போது புரியவில்லை. சோபாவில் உட்கார்ந்திருந்த ப்ரியாவின் முகத்தையே பார்த்தபடி தரையின் உட்கார்ந்தாள். அழுதுமுடித்து ப்ரியா யோசிப்பது தெரிந்தது. குற்றவுணர்வா, இல்லை ரகுவின் கோபத்தில் இருந்த நியாயம் பற்றியா என்று செல்வியால் அனுமானிக்கவே முடியவில்லை.

ரகு ஆபீஸிலிருந்து வரும் வரை ப்ரியா இருந்த இடத்தை விட்டு அகலாமல் உட்கார்ந்திருந்ததை எப்படி எடுத்துக் கொள்வதென்று செல்விக்குத் தெரியவில்லை. ரகு வந்ததுமே அதற்காகவே காத்திருந்ததைப்போலப் பாய்ந்து ஓடிச் சென்று," ஐ'ம் சாரிங்க. நீங்க சொல்றதுதான் சரி. தீபக்கோட சகவாசமே இனி வேணாம். போன் செஞ்சா உங்ககிட்டச் சொல்லிடறேன். எப்படியும் அவனுக்கு மலேசியாவுல ஏதோ வேலைகிடைக்கப் போகுதாம், போயிடுவான். அவனால நாம ஏங்க சண்ட போட்டுக்கணும்?", என்று ப்ரியா கண்கலங்கப் பேசியதும் நம்பமுடியாததைப் போல ரகு அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்துக்கொண்டு நின்றார். பிறகு, தலையாட்டிக்கொண்டே புன்னகையுடன் ,"சரி,சரி, நீயே புரிஞ்சுகிட்டேன்னா வேற என்னம்மா வேணும் எனக்கு...ம்,..ஆங்,... எனக்கு சூடா ஒரு கப் காபிதான் வேணும்", என்றதும் செல்வி கலந்துகொடுத்த காபியை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் போனார் ப்ரியா ரகுவிடம் கொடுக்க.

இருவரும் சமரசம் ஆகக்கூடும் என்று செல்வி சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்கே போய் முடியுமோ என்று மிகவும் பயந்திருந்தாள். ப்ரியாவுக்கு தீபக்கின் கெட்ட எண்ணம் புரிவதற்கு தான் காரணமானதில் அவளுக்கு மகிழ்ச்சிதான்.

மீண்டும் சரவணனைப் பற்றியும் தற்கொலை எண்ணமும் வந்தது. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பிருந்த தீவிரம் தான் இருக்கவில்லை. இருந்தாலும் அன்றிரவு எப்படியும் குதித்துவிடுவது என்ற முடிவுடன் இருந்தாள் செல்வி. வீட்டு நினைப்பும் குடும்பத்தினரின் நினைப்பும் எழுந்தது. வங்கியில் இருந்த கணிசமான பணத்தை மேலும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள் அவர்களிடம். அவர்களுக்கும் ஒரு நீண்ட கடிதம் மட்டும் எழுதிவிட்டால்,..

யோசித்தபடி சமையலறையில் காய் நறுக்கிக் கொண்டிருந்தாள். வெள்ளியன்று சீக்கிரமே வீடுதிரும்பிய ப்ரியா பின்னால் வந்து," செல்வி என்ன இது, நல்லவேள நான் பார்த்தேன். என்ன முட்டாள்தனம் இது?ம்?", என்றபடியே செல்வி எழுதிய கடிதத்தை முகத்துக்கு நேராய் ஆட்டிக்கொண்டு கோபமாக நின்றார்.

செல்விக்கு குபுக்கென்று கண்களில் கண்ணீர் திரண்டது. கையில் இருந்த கத்தியை அப்படியே மேடைமீது போட்டுவிட்டு திரும்பி நின்றாள். "சரவணனில்லாத ஒரு வாழ்க்கைய என்னால நெனச்சுப்பாக்கவே முடியல்ல மேடம்,..", சன்னமான குரலில் சொன்னவளின் முதுகைத் தட்டி," ரப்பிஷ்,.. இதுக்கெல்லாம் தற்கொலை பண்ணிகிட்டா உலகத்துல பாதிபேர் தற்கொலைதான் பண்ணிக்கணும். உன்னை நான் ஒரு மாறுதலுக்கு அக்காவீட்டுல குழந்தைகளோட விட்டுடறேன் ஒரு வாரத்துக்கு. ஸ்கூல் திறக்க ஒரு வாரமிருக்கும்போது வந்தாகூட போதும். சரியா?", என்றதும் எதற்கு என்று முதலில் வாயில் வந்த வார்த்தையை கேட்காமல் அப்படியே முழுங்கினாள் செல்வி. அழுதுபடி தலையை மட்டும் ஆட்டினாள்.

அன்று இரவு வரை செல்வி செல்லுமிடமெல்லாம் தன் கண்ணில் படுமாறு டைனிங் டேமிளில் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்துகொண்டார் ப்ரியா. இரவு எல்லோரும் படுக்கப்போனதும், வீட்டு கேட்டைப்பூட்டி சாவியைத் தன்னுடன் அறைக்குள் வைத்துக்கொண்டார்.

சனியன்று ப்ரியாவின் அக்கா வந்தார். இருவரும் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டேயிருந்தார்கள். பெரும்பாலும் ப்ரியாவிற்கான அறிவுரையாகவே இருந்தது. "அக்கா எனக்கு சைனீஸ் ந்யூ இயருக்குத் தான் லீவெடுக்க முடியும். க்ரிஸ்மஸ¤க்கு முன்ன லீவெல்லாம் எடுக்க முடியாது", என்ற ப்ரியாவின் வாயை அக்கா அடைத்தார்," அதெல்லாம் இல்ல. 'லாஸ் ஆ·ப்பே'யாவே இருக்கட்டும். இல்லன்ன பேசாம வேலைய விட்டுடுலா. ரகுவுக்கு க்ரிஸ்மஸ ஒட்டி தான் லீவு எடுக்க சௌகரியப்படுமாம். நேத்தே நான் சரின்னுட்டேன் அவர் கிட்ட. பசங்களுக்கு ஸ்கூல் திறக்கறதுக்கு முன்னாடி வந்துடலாம். நீ பேசாம கெளம்பு. ஏர் லங்கால போடறேன். ஜாலியா ரெண்டு வாரம் போயிட்டுவா ப்ரியா ரகுவோட." இந்தியாவில் ஒரு வாரம் இலங்கையில் ஒரு வாரம் சுற்றிவிட்டு டிசம்பர் முப்பது திரும்புவதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

டிசம்பர் பதினெட்டு இருவரும் இந்தியாவுக்குப் பறந்தனர். செல்வி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அக்காவீட்டிற்குப் போனாள்.ஒரு வாரம் முன்புதான் சரவணனுக்கும் சிவகாமிக்கும் கல்யாணம் முடிந்த செய்தியை வேலு வந்து சொல்லியிருந்தான். 'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற மன நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

ப்ரியாவும் ரகுவும் கிரிஸ்துமஸ¤க்கு முதல் நாள் திருச்சியிலிருந்து கொழும்புக்குக் கிளம்பத் திட்டமிட்டிருந்ததால், கிருதுமஸ¤க்கு அடுத்த நாள் காலையில் சன் செய்தியைப் பார்த்தபோது ப்ரியாவின் அக்கா மிகுந்த பதட்டமடைந்து விட்டார். நிலநடுக்கம் பற்றியும் தொடர்ந்து சுனாமி பற்றியும் அறிந்ததுமே, திருச்சியில் ப்ரியாவும் ரகுவும் தங்கியிருந்த உறவினர் வீட்டுக்கு போன் செய்து பார்த்தார். இலங்கையில் தான் சேதம் அதிகம் என்று வேறு செய்தியில் சொன்னார்கள். போன் இணைப்பே கிடைக்கவில்லை. பலமுறை முயன்றபிறகு மாலையில் ஒருவழியாகக் கிடைத்தது. ரகுவும் ப்ரியாவும் போனில் பேசியதும் தான் எல்லோருக்கும் இருந்த பதட்டம் கட்டுப்பட்டது. முதல் நாள் திருச்சியிலிருந்து கிளம்புவதாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், உறவினர் வீட்டுக்கு குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா ஞாயிறன்று இருக்கவே, திங்களுக்கு பயணத்தை ஒத்திப்போட்டிருக்கிறார்கள். பத்திரமாய் இருந்தார்கள் என்றதும் மனதில் நிம்மதி படர்ந்தது.

ப்ரியாவும் ரகுவும் கிளம்பவிருந்த கொழும்பு விமானம் அன்று ரத்தானது. அடுத்த இரண்டு நாட்களில், இலங்கைப் பயண திட்டத்தைக் கைவிட்டுவிட்டு சிங்கப்பூர் வந்துசேர்ந்தார்கள். இருவரிடமும் பத்தே நாட்களில் பெரிய மாற்றம் பளிச்சென்று புலப்பட்டது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்தார்கள். அதுவே செல்வியின் சமீபகாலமாய் இருந்து வந்த மன உளைச்சளுக்கு நல்ல மருந்தாக அமைந்தது.

எடுத்திருந்த லீவெல்லாவற்றையும் உள்ளூரில் நிவாரண நிதி திரட்டும் பணியில் செலவிட்டனர் ப்ரியாவும் ரகுவும். முதலில் வீட்டில் இருந்த உபயோகித்த துணிமணிகளோடு, வேறு புதிதாகவும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு இலங்கைத் தூதரகத்துக்கும் இந்தியத் தூதரகத்துக்கும் போனார்கள். அங்கு அவர்களின் தேவைகளை அறிந்து கொண்டார்கள். வழக்கம்போல ப்ரியாவின் அக்கா வீட்டுக்காரரின் காரை எடுத்துக்கொண்டு அலைந்து, பொருள்களாகவும் காசோலைகளாகவும் பணமாகவும் மருந்தாகவும் திரட்டிக் கொண்டுபோய்க் கொடுத்தனர்.

வியாழனன்று வேலு மாலை திடீரென்று வீட்டிற்கு வந்திருந்தான். செல்வி சற்றும் எதிர்பார்க்கவில்லை. ப்ரியா தான் கதவைத் திறந்தார். செல்வியைக் கூப்பிட்டார். வேலுவின் முகத்தில் ஈயாடவில்லை.

"மனசைத் தேத்திக்கோ செல்வி", என்று ஆரம்பித்ததுமே, "அம்மாவுக்கு உடம்புக்கு முடியல்லயா? இல்ல மாமாவுக்கு? யாருக்கு என்ன ஆச்சு?", என்ன சொல்லப்போகிறானோ என்று மிகவும் பதறினாள் செல்வி. ஒரு சோதனை வந்தா கூட ஒன்பதைக் கூட்டிக்கொண்டுதான் வருமோ ? !

"என்னன்னு சொல்ல,"கண்களைத் துடைத்துக் கொண்டான். "பூம்புகாருக்குப் பக்கத்துல ஏதோ கடல ஒட்டின ஒரு குட்டிக் கிராமமாம். பேருகூட ஏதோ குப்பம்னு சொன்னாங்க. அங்கயிருக்கற மாரியம்மன் தான் பொண்ணு வீட்டுக்காரர்களின் குலதெய்வமாம். அங்க போயி சாமி கும்பிட்டுட்டு, கல்யாண மாலையக் கடல்ல போடறது அவங்க குடும்ப வழக்கமாம். என்னன்னு சொல்ல செல்வி, அம்மா செத்துடுமேன்னு அவங்களுக்காகவே கல்யாணம் கட்டினான் சரவணன். இப்ப கெழவி போகாததால பொழச்சுகிச்சு. திருவாரூர்லதான் இருக்கு. சரவணனனத்தவிர சரவணனோட சைட்ல ஒரு சின்னப்பையனும் செத்துட்டான். பொண்ணோட அம்மாவும் அப்பாவும் கோவில்லயிருந்து லேட்டாக் கெளம்பியிருக்காங்க,. அதுக்குள்ள கடல் ஊருக்குள்ளார வர செய்தி வந்திருக்கு. கல்யாணப்பொண்ணும் அவங்க தங்கச்சியும் இறந்துட்டாங்க. செவ்வாக்கெழமை கெடச்சபோது அவங்க ஒடம்புல இருந்த அவ்ளோ நகைல, அரசாங்க ஆஸ்பத்திரியிலயிருந்து பாடி கெடைக்கும்போது ஒரு குந்துமணிகூட இல்லையாம் செல்வி. கிட்டத்தட்ட முப்பது பவுனாம்,... பொண்ணோட அப்பாவும் அம்மாவும் தான் அடையாளம் சொல்லி பொணத்தையெல்லாம் வாங்கியிருக்காங்க", கண்கலங்கியபடியே வேலு சொன்ன எதையுமே செல்வியால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

முகம் வெளிறிப்போய் அதிர்ச்சியில் உறைந்திருந்தவள்,"நா வரேன்," என்று வேலு போகுமுன்பே உடைந்து அழ ஆரம்பித்தாள். "அய்யோ, நான் சபிக்கல்லயே,.. வாக்குத் தவறிட்டானேன்னு வருத்தப்பட்டேன் தான். ஆனா,.. ஆனா,.. தப்பா ஒண்ணும் நெனக்கல்லியே சாமி,.சிவகாமியும் நல்ல பொண்ணுதான், நல்லா இருக்கட்டும்னு தானே நெனச்சேன்", என்று ஏதேதோ பிதற்றினாள்.

அறையிலிருந்து ரகு தூக்கத்திலிருந்து எழுந்து பதறியடித்துக் கொண்டோடி ஓடிவந்தவர், நடப்பது புரியாமல் திகைத்து நின்றார். ப்ரியா செல்வியை சமாதானம் செய்யமுடியாமல் தவித்தார். "செல்வி, இங்க பாரு,.  நீயா ஏன் கண்டபடி நெனச்சுக்கற? உனக்கு அம்மா, தம்பி தங்கை இருக்காங்க. மனச மட்டும் விட்றாத. மொதல்ல நீ ஒக்காரு சொல்றேன்", என்றபடியே தோளைக் குலுக்கினார். உட்காரவைத்தார். பிறகு, ஒரு தம்ப்ளர் தண்ணீரைக் கொடுவந்து குடிக்கவைத்தார்.

"சரவணன்,..எனக்கு, ஐயோ..எப்பிடி", என்று பைத்தியக்காரிபோல முகத்தை மூடிக்கொண்டு உளறியவளை முறைத்து, "அவனோடயே போயிடணுமா. முட்டாள், அங்க பாரு டீவீல. ஒண்ணா ரெண்டா? கொத்துக்கொத்தா, கூட்டங்கூட்டமா பிணங்கள். பிஞ்சுக் கொழந்தைங்க எல்லாம் அநாதையா நிக்குதுங்க செல்வி. இதையெல்லாம் பாத்துமா உன்னோட உயிரோட மதிப்பு உனக்குத் தெரியல்ல? அபத்தமால்லாம் பேசாத. நடந்திருக்கவேணாம். ஆனா, நடந்துடுச்சே. அதுவும் புதுசாக் கல்யாணமாகி ரெண்டே வாரத்துலன்னா ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கு. எத்தன உயிர்கள் போயிருக்கு. ஒலகத்துலயே உன்னோட சரவணன் மட்டுமே முக்கியம்ன்ற மாதிரி பேசறத விடு மொதல்ல. அப்பிடி நெனைக்கக்கூட கூடாது ", என்று கோபத்தோடு படபடவென்று கோபத்தோடு கூறினார். ஆனால், அதில் இருந்த அக்கறை ப்ரியாவுக்குப் புரியவே செய்தது.

ஒரே மகனைப் பறிகொடுத்த சரவணனின் தாயை நினைத்துத் தான் செல்விக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. இந்த சோகத்தை எப்படித்தான் எதிர்கொள்ளப் போகிறாரோ என்று கவலைப்பட்டாள். அருகிலிருந்தாலும் ஆறுதலாய்ப் பேசலாம். முடிந்தவரை கவனித்துக் கொள்ளலாம். சில ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்துகொண்டு என்னதான் செய்வது என்று ப்ரியாவிடம் சொல்லி வருந்தப்பட்டுக்கொண்டாள்.

தன் அம்மாவுக்காவது போன் செய்யலாமா என்று தான் நினைத்தாள். யாராவது தன் சார்பில் சரவணனது வீட்டிற்குப் போய் வருவார்களா என்று கேட்க. மேலும் குழப்பங்கள் எதற்கு என்று யோசித்து வேண்டாமென்று முடிவெடுத்தாள்.

"ம்,. பாவம்தான்,. ஆனா என்ன செய்ய? சொல்லு,ம்?.. பிரார்த்தனை ! அதுமட்டும்தான் பாதிக்கப்பட்ட எல்லாருக்குமே நீ செய்யக்கூடியது. சரவணன் அம்மாவுக்காகவும் நீ பிரார்த்தனை செய். போனவர்கள் பாடு எவ்வளவோ பரவாயில்ல. இழப்புகளோடு வாழவேண்டியவர்களின் பாடுதான் மிகவும் பரிதாபம்", என்று ப்ரியாவும் ரகுவும் பரிவோடு சொன்னார்கள்.

"ப்ரியா.. இங்க வாயேன். ரெண்டு நாளைக்கி செல்விய ஒண்ணும் செய்யவேணாம்னு சொல்லு. பாவம், ரொம்ப கொழம்பிப் போயிருக்கா. அவ மேல ஒரு கண் இருக்கட்டும். நா வெளியில சாப்டுட்டு உங்களுகெல்லாம் வாங்கிட்டு வரேன். வேற ஏதும் வேணுமா?", என்று மனைவியிடம் கூறியது செல்வியின் காதுகளில் விழுந்தது. அடுத்து வந்த சில நாட்களில் உண்ண மறுத்தவளை வற்புறுத்திச் சாப்பிட வைத்து மிகுந்த பரிவுடன் கவனித்துக்கொண்டார்கள். அடுத்த வாரத்திலிருந்து பகலில் அவரது அக்காதான் வந்து உடன் இருந்தார்.

அடுத்த வாரம் வீட்டிற்குப் போன் செய்தபோது மீண்டும் மீனாதான் பேசினாள். "அக்கா ஒனக்கு விசயம் தெரியுமா?", என்று ஆரம்பித்தவளிடம் பேச்சை மாற்றி," எல்லாந்தெரியும். வம்பெல்லாம் விட்டுட்டு நீ ஒழுங்கா படி. இந்த வருஷம் ஒனக்கு டென்த். ஞாபகமிருக்கட்டும். தம்பியையும் படிக்கிறானான்னு அடிக்கடி கவனி. அப்பப்ப லெட்டர் போடு. நானும் எழுதுவேன். இனிமே அவசியம்னாதான் போன் அடிப்பேன்,லெட்டர் தான்", என்று சொல்லிமுடித்து இணைப்பைத் துண்டித்தாள். மாமா கோபத்தை மறந்து சரவணனது வீட்டிற்குப் போய் வந்திருந்தார். திருவாரூரில் இருந்த தன் நண்பரை விட்டு அவ்வப்போது பார்த்துக்கொள்ளச் சொல்லியும் ஏற்பாடு செய்திருந்தார். மாமாவின் மேல் அவளுக்கிருந்த மதிப்பு கூடியது.

நாலைந்து நாட்களில் மீண்டும் வேலு வந்திருந்தான். சரவணனின் பெட்டியில், "செல்விக்கு", என்று எழுதி பிரிக்காத புத்தம்புது இளஞ்சிவப்புப் பட்டுப்புடைவை ஒன்றும் மேலும் சில சில்லரைச் சாமான்களும் இருந்தன. அவற்றை அவளிடம் கொடுத்தான் ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு. செல்வி பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் கையில் வாங்கிப்பார்த்தாள். பிறகு, அவற்றையும் மற்ற பொருட்களோடு அவனது அம்மாவிடமே அனுப்பிவிடுமாறு சொல்லிவிட்டாள். "சொல்றேன்னு தயவு செஞ்சு தப்பா நெனக்காதீங்க. இனிமே இங்க வராதீங்க. இவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. இனி நா இவங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் கொடுக்கக்கூடாதுன்னு இருக்கேன்", என்று சொல்லி வேலுவை அனுப்பி வைத்தாள்.

உப்பும் நீரும் உள்ளேயிறங்க இறங்க, துயரமும் வேதனையும் துளித்துளியாய்க் கரைந்து வெளியேறின. புதிதாய்ப் பிறந்ததாக நினைத்துக் கொள்ளப் பழகினாள் செல்வி. இதற்கிடையில் பள்ளிகளும் திறக்கப்பட்டிருந்தன. வழக்கமான வாழ்க்கையும் திரும்பியது அதிக முதிர்ச்சியுடன் கூடிய புத்தம்புது நம்பிக்கையோடு.
 

(முற்றும்)

தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் இணைந்து நடத்திய 'தங்க முனை விருதுப் போட்டி' 2005 - (முதல் ஐந்தில் ஒன்று) - கௌரவக் குறிப்பு ( Honourary Mention )

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors