தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்

[ பாகம் : 1 ]

'காதல்' என்னும் வார்த்தையே இல்லாமல் எழுதப்பட்ட காதல் கதை இது ! சந்தேகமிருந்தால் உள்ளே தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள் !

தூங்கி வழிந்து கொண்டிருந்த சோம்பலான தெருவுக்கு நடுவே அந்த கல்யாண மண்டபம் மட்டும் பொருந்தாத பளபளப்பாய் இருந்தது. வாசலில் பூஜோடனைக்காரர்கள் 'கார்த்திகேயன்' முடித்து விமலாவில் 'வி' மட்டும் எழுதியிருந்தார்கள். கதவினருகில் பட்டுப்புடவைகள் சரசரக்க பெண்கள் ஏதோ பெரிய விவாதத்தில் இருப்பது தெரிந்தது. கால்வாசி நாற்காலிகள் மட்டும் விரிக்கப்பட்டிருக்க அதில் ஒரு பெரியவர் உட்கார்ந்த நிலையில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தார். பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடிவிளையாடி களைத்துக்கொண்டிருக்க, சாயந்திரம் சங்கீதக்கச்சேரிக்கு ஜமுக்காளம் விரித்து மேடை தயாராகிக்கொண்டிருந்தது. பக்கெட்களில் ரஸ்னாவோ வேறெதோ விநியோகித்துக்கொண்டிருந்தவரைக் கண்டுகொள்ள யாருமில்லை. முன்னால் நீள்பெஞ்ச் போட்டு கல்கண்டும், ரோஜாப்பூவும் பொட்டலம் பிரிக்காமல் இருந்தது.

பாலா வாசற்படியிலேயே ரொம்பநேரம் நின்றுகொண்டிருந்தான். காலை ஆறரை ஏழு முகூர்த்தத்துக்கு முந்தினநாள் காலையிலேயே மண்டபத்துக்கு வந்துவிடவேண்டும் என்று பெரியப்பா கட்டாயமாய் சொல்லிவிட்டுப் போயிருந்தார். 'உங்கப்பன் நிதானமா வருவான், நீயாவது அம்மாவைக் கூட்டிகிட்டு சீக்கிரம் வந்து சேரு' என்று தனியாய் இவனிடமும் சொல்லியிருந்தார். அதற்கேற்றாற்போல சிற்றஞ்சிறுகாலே எழுந்து, அந்த டிசம்பர் குளிரில் குளித்து பட்டுப்புடவை கட்டிக்கொண்டு தயாராகி, 'போகலாமா, போகலாமா' என்று இவனை நச்சரிக்கத் துவங்கிவிட்டாள் அம்மா. லஞ்சமாய் சுடச்சுட ·பில்டர் காபியோ, ப்ரூவோ. அப்பா நியூஸ்பேப்பரில் இன்னும் முதல் பக்க கார்ட்டூனைத் தாண்டவில்லை. ராகினி உள்ளே அநியாயத்துக்குக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். இவன் மட்டும் உடனே ஜில்நீரில் குளித்தாக வேண்டும், நரம்புகளுக்குள் புகுந்து ஊசிபோட்டுத் துன்புறுத்துகிற குளிரில், முகத்தில் அறைகிற பனியில் வண்டி ஓட்டியாக வேண்டும். முணுமுணுத்துக்கொண்டே எல்லாம் செய்தான். அம்மாவை மண்டபத்தில் விட்டுவிட்டுத் திரும்பி வந்து தூங்கிவிடலாம் என்ற அல்பஆசை உள்ளே ரகசியமாய் இருந்தது.

வழக்கமான நாட்களென்றால் ஏழு மணிக்கு பாலாவின் உலகம் விடிந்தே இருக்காது. இன்று கல்யாண மண்டப வாசலில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறான். இன்னும் தூக்கம் கலையவில்லை. வீட்டுக்குத் திரும்பிப்போய்விடலாம் என்றால் அப்பாவுக்குக் கோபம் வரும், 'கல்யாண மண்டபத்தில எதுனா வேலை இருக்கும்ன்னுதானே உன்னை சீக்கிரமே அனுப்பி வெச்சது ?' என்று கத்துவார். ஏதேனும் வேலை இருந்தால் செய்யலாம்தான், ஆனால் கான்ட்ராக்ட் கல்யாணத்தில் அரசாங்க அலுவலகம்போல எங்கே பார்த்தாலும் முகம் தெரியாத மனிதர்களாய் இருக்கிறார்கள். 'இந்த வேலை செய்' என்று யாரும் சொல்லாமல் எப்படிச் செய்வது ?

பெரியப்பா யாரையோ வரவேற்பதற்காக விமானநிலையம் போயிருக்கிறார். மற்றவர்கள் மணப்பெண் அலங்காரம் என்று மாடியில் மூலைஅறைக்குள் புகுந்துகொண்டுவிட்டார்கள். சாதாரண நாட்களிலேயே பெண்களுக்கு தங்களை அலங்கரித்துக்கொள்ள ஒரு மணி நேரம் ஆகும், கல்யாணம், அதுவும் ஏழெட்டு பெண்கள் சேர்ந்து அலங்கரிப்பதென்றால் மதியமாகிவிடும் என்று நினைத்து சிரித்துக்கொண்டான். பாவம் விமலா, இன்னும் இரண்டு நாட்களுக்காவது ராமநாராயணன் பட அம்மன்கள்போல முழுமேக்கப்பில், இருக்கிற நகைகளையெல்லாம் மாட்டிக்கொண்டு கனமான பட்டுப்புடவையில் உலாவர வேண்டும்.

சமையலறை வரை சென்று சூபர்வைசர் தோரணையில் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நோட்டம் விட்டான். 'சார், காபி குடிக்கறேளா ?' என்று நீட்டின சமையல்காரரிடம் 'வேண்டாம்' என்று மறுத்துவிட்டான். ஆனால் நுரை பொங்குகிற காபியைப் பார்த்ததும் ஆசையாய் இருந்தது.

'கொஞ்சமா கொடுங்க'.

அங்கிருந்தே படியேறி மாடிக்குப்போனான், முதல் அறையில் ஒருவர்மேல் மற்றவர் கால்போட்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த மாப்பிள்ளையின் நண்பர்களைப் பார்த்ததும் பொறாமையாய் இருந்தது. ஓரமாய் கவிழ்ந்திருந்த பாட்டில்களின்மேல் ஒரு போர்வையைப்போட்டு மறைத்துவைத்தான். அடுத்த அறை காலியாக இருந்தது, ஒரு ஜமுக்காளம் விரித்துப் படுத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டே இருந்தபோது அறைக்கதவில் ஒரு பெண் வந்து நின்றது, 'இது எங்க ரூம்' என்றது கண்கள் படபடக்க.

பாலா திரும்பிப்பார்த்து, 'கவலைப்படாதீங்க, நான் இதை எங்கேயும் கொண்டுபோயிட மாட்டேன்' என்றான் சிரித்து. அவளும் பதிலுக்கு சிரித்தாள், 'தப்பா நினைச்சுக்காதீங்க, ரொம்ப கஷ்டப்பட்டு, சண்டைபோட்டு இந்த ரூம் வாங்கியிருக்கோம், இங்கேயிருந்து பார்த்தா ஊர் முழுக்க தெரியுது' என்று ஜன்னலைக்காட்டிக் கண்கள் விரித்தாள்.

'நீங்க ?'

 'என் பேர் ப்ரியா, விமலாவோட காலேஜ் ·ப்ரெண்ட், திருப்பூர்ல இருந்து வந்திருக்கேன்'. மறுபடி சிரிப்பு. பாலாவுக்கு எல்லாமே புதிதாய் இருந்தது. யார் இந்தப்பெண், இவளை எங்கோ பார்த்திருக்கிறேன். பார்க்காததுபோலவும் இருந்தது. பார்த்ததுபோலவும் மங்கலாய் ஏதோ நினைவு ! எங்கே ?

அவள் அவன் மனதை ஊகித்துவிட்டவள்போல, 'என்ன யோசிக்கறீங்க ?' என்றாள் குறும்பாய்.

சற்று தயங்கிவிட்டு, 'உங்களை எங்கயோ பார்த்திருக்கேன்' என்று சொன்னதும்தான் புதிதாய் சந்திக்கிற அழகிய பெண்களோடு பேசவிரும்புகிற எந்த ஆணும் சர்வசாதாரணமாய் உபயோகிக்கிற தூண்டில் வாக்கியம் அது என்பது உறைத்தது. அவள் தப்பாய் நினைத்துவிடுவாளோ என்று நினைத்து சற்றே தலைகுனிந்து நிமிர்ந்தான், 'நிஜம்மா ...' என்றான் மீண்டும்.

அவள் இதை எதிர்பார்த்திருந்தவள்போல சிரித்தாள், 'ஆமாம், ·போட்டோவிலே பார்த்திருப்பீங்க'

'·போட்டோ, ஏதாவது பத்திரிக்கையில வந்தீங்களா ?'. அவன் ஏதோ பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டதுபோல அவள் மீண்டும் சிரித்தாள். எதற்கெடுத்தாலும் சிரிப்புதானா இந்தப்பெண்ணுக்கு என்று தோன்றியது. ஆனால் சிரிக்கும்போதுதான் இவள் ரொம்ப அழகாய் இருக்கிறாள் என்றது இன்னொரு மனது.

'பத்திரிக்கைதான், உங்க வீட்டுக்கு மட்டும் வந்த பத்திரிக்கை' என்று சொல்லிவிட்டு திரும்பி ஓடிவிட்டாள், 'ஹலோ, எனக்கு தலைமண்டை வெடிச்சுடும், விவரமா சொல்லிட்டுப்போங்க ப்ளீஸ்' என்று நின்ற இடத்திலிருந்து குரல் உயர்த்தாமல் கைநீட்டிக் கத்தினான். அவள் திரும்பிப் பார்க்காமல், 'கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க, புரியும், அப்பவும் சின்னப்பிள்ளைக்கு ஞாபகம் வரலைன்னா உங்க அம்மாவைக் கேளுங்க' என்று சொல்லிவிட்டு படிகளில் இரண்டிரண்டாய்த் தாவி இறங்கினாள். அவன் அவளையே நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வந்தது, பேசியது, ஓடிப்போனது எல்லாமே சின்னக் கனவோ என்று சந்தேகித்தான், கனவில்மட்டும் வருகிற தேவதையைப்போல்தான் இருந்தாள் அவள், ஆனால் அம்மாவுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம் ?

விறுவிறுவென்று மூலைக்கு நடந்து, 'மணப்பெண்' என்று போர்ட் எழுதியிருந்த அறையைத் தட்டினான், 'அம்மா, அம்மா' சில நிமிடங்களுக்கு கதவு திறக்கப்படவில்லை. பொறுமையில்லாமல் மறுபடி தட்டியதும் கொஞ்சமாய்த் திறந்து குழல்விளக்கின் ஒளிக்கீற்று மட்டும் எட்டிப்பார்த்தது, பிறகு விமலாவின் தலைமட்டும் கொஞ்சம் தெரிந்தது, பாலாவைப்பார்த்ததும் தைரியமாய் முழுக்கதவையும் திறந்து வெளியே வந்து, 'நீயா ? இன்னா நைனா, இன்னா வோணும் உனக்கு ?' என்றாள் சரியாய் வராத சேரிபாஷையில். இப்போதுதான் தலையலங்காரம் பாதி நடந்திருக்கிறது என்பது தெரிந்தது, தலைநிறைய மல்லிகைப்பூவோடு அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தது பொருத்தமில்லாத வேடிக்கையாய் இருந்தது. ஆனாலும் அழகுதான், இன்னும் சின்னப்பெண்.

பின்னாலேயே அவளைத் துரத்திக்கொண்டு அத்தை ஓடிவந்தாள், 'விமலா, நாங்க கதவைத் திறக்கறதுக்குள்ள உனக்கு என்னடி அவசரம் ?' அவள் விடாமல், 'ஏன் நான் திறக்கக்கூடாதா ?' என்றாள். 'சொன்னாக் கேளுடி, சின்னப்பிள்ளை மாதிரி எதுக்கெடுத்தாலும் மறுபேச்சு, இப்படி கொழாயைப் போட்டுகிட்டு வெளியே வராதே, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பார்த்தா தப்பா நினைக்கப்போறாங்க' என்றதற்கு அவள் மறுபேச்சு பேசுவதற்குள் அவள் கையைப்பிடித்து இழுத்துப்போனாள் அத்தை. போகிறபோக்கில் விமலா, 'சித்தி, பாலா அண்ணன் வந்திருக்கு' என்று உள்ளே பார்த்துக் கத்தினாள்.

உள்ளேயிருந்து அம்மாவின் குரல் மட்டும் கேட்டது, 'என்ன விஷயம் பாலா ?'

'சொல்றேன், இங்க வாயேன்' உள்ளே போகவேண்டாம் என்று தயங்கி நின்றான்.

அம்மா சலித்துக்கொள்வது கேட்டது, முழுசாய் ஒரு நிமிடம் கழிந்தபிறகு கர்ச்சீபில் கைதுடைத்தபடி வந்துநின்று, 'சீக்கிரம் சொல்லு, எனக்கு தலைக்குமேலே வேலை இருக்கு' என்றாள்.

'இல்லைம்மா, தலைக்கு மேலே மல்லிகைப்பூதான் இருக்கு' என்று சிரித்தான்.

'கிண்டலா, சீக்கிரம் சொல்லுடா, இன்னும் தலை அலங்காரமே முடியலை, எனக்கு படபடன்னு இருக்கு'

கொஞ்சம் தயக்கமாய் இருந்தது, பிறகு தைரியம் சேர்த்துக்கொண்டு, 'யார்ம்மா அந்தப் பொண்ணு ?' என்று சட்டென்று கேட்டுவிட்டான். 'எந்தப்பொண்ணு ?' என்று அம்மா அவனை விநோதமாய்ப் பார்த்துக் கேட்டபிறகுதான் நாக்கைக் கடித்துக்கொண்டான், அம்மாவுக்கு அவளைச் சந்தித்தது தெரியாதே. 'என்கூட கொஞ்சம் வாயேன், காட்டறேன்'.

'ப்ச், வேலை இருக்குன்னு சொன்னேனே பாலா'

'இது அதைவிட முக்கியம்மா, ப்ளீஸ், வாயேன்' தாடையைப்பிடித்து கெஞ்சினான். 'அஞ்சே நிமிஷம், மீண்டும் உங்க ராஜாங்கத்துக்கே கொண்டுவந்து சேர்த்துடறேன்'

'சரி, சீக்கிரம் வா' கைக்குட்டையை இடுப்பில் செருகிக்கொண்டு அவனுக்கு முன்னால் விறுவிறென்று நடந்தாள்.

படிகளை நெருங்கியபோது அவளே படிகளில் இரண்டிரண்டாய் ஏறி வந்துகொண்டிருந்தாள். அம்மாவின் கையைப்பிடித்து நிறுத்திவைத்தான், 'இவதாம்மா'.

அம்மா அவளைப்பார்த்த அதே விநாடியில் அவளும் நிமிர்ந்துபார்த்தாள். இருவரும் புன்னகைத்துக்கொண்டார்கள், அம்மாவின் பக்கத்தில் பாலாவைப்பார்த்ததும் அவள்முகத்தில் சட்டென்று பரவியது வெட்கமா, பயமா, கோபமா தெரியவில்லை. சட்டென்று திரும்பி படிகளில் வேகமாய் இறங்கிப்போனாள். பாலா ஒன்றும்புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.

'இந்த பொண்ணா யார்ன்னு தெரியணும் ?' அம்மா தோள்களை உலுக்கிக் கேட்டதும்தான் நினைவுவந்து, 'ஆமாம்மா' என்றான் அவசரமாய். 'நம்ம ஜெயச்சந்திரம் பொண்ணுடா, திருப்பூர்ல இருக்கா'

'ப்ச், அதெல்லாம் எனக்கு வேணாம், இவளை நான் எங்கேயோ பார்த்திருக்கேன், அவளைக்கேட்டா ·போட்டோவில பார்த்திருக்கேன்னு சொல்றா' என்றான் கீழே ஒருமுறை பார்த்துக்கொண்டு.

'என்ன வக்கீல்டா நீ ? ஆறு மாசம் முன்னால பார்த்தது கூட மறந்துடுமா ? உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சப்போ முதல்ல இவளைத்தான் பார்த்தோம், எல்லா பொருத்தமும் இருந்தது, நீதான் ·போட்டோவைப் பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டே', அம்மா சொன்ன செய்தியின் அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள் அம்மா மீண்டும் மணப்பெண் அறைக்குள் போய்விட்டாள்.

அவன் காலியாய் இருந்த படிகளையே நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தான். இவளையா நிராகரித்தேன் ?

(தொடரும்...)

oooOOooo
[ பாகம் : 2 ]

அவளை முதலில் சந்தித்த அறைக்குள் மீண்டும் ஒருமுறை போய்வந்தான். அது இன்னும் காலியாகத்தான் இருந்தது. மூலையில் ஒரு கண்ணாடி பீரோ வெறுமையைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.

 அவன் திரும்பிப்போக எண்ணியபோது சினிமாவில் பார்த்த காட்சியை மீண்டும் பார்ப்பதுபோல் அவள் கதவு நிலைப்படியில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். 'நேரா அம்மாகிட்டே போயாச்சாக்கும்' என்றாள் சுற்றி வளைக்காமல். கண்களில் கோபம்.

'நீ - நீங்கதானே அம்மாவைக் கேட்கச் சொன்னீங்க ?'

'ஒரு பேச்சுக்கு சொன்னா, கேட்டுடறதா ?' என்றாள். ஏன் கோபப்படுகிறாள் என்பதுதான் புரியவில்லை. அவன் ஏதும் பதில் சொல்வதற்குள், 'என்னை எங்கே பார்த்திருக்கீங்கன்னு இப்போ தெரிஞ்சுகிட்டாச்சுதானே ? சந்தோஷம் !' என்று சொல்லிவிட்டு திரும்பிப்போய்விட்டாள். கடைசி வாக்கியத்துக்கு அவள் லேசாய் புன்னகைத்தது நிச்சயம் அவனுடைய பிரம்மையாகத்தான் இருக்க வேண்டும். 'ப்ரியா' என்று ஒருமுறை மெல்லமாய் கூப்பிட்டுப்பார்த்தான். அவள் கண்டுகொள்ளாமல் போய்விட்டாள். அவளின் வேகமான நடையால், பின்னல் ஆக்ரோஷமாய் அவள் முதுகில் திரும்பத் திரும்ப அடித்ததைப் பார்க்கிறபோது, இவன் கன்னத்தில் அறைகிறதுபோல் இருந்தது.

அவள் போனதும் பாலாவுக்கு ரொம்ப கஷ்டமாகிவிட்டது. மனதுக்குள் யாரோ ஊசிகொண்டு பொத்தல் செய்வதுபோல வலியும், கனமும். கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்க வேண்டும், மீண்டும் அவளைச் சந்திக்கும்வரை பொறுத்திருந்து அவளிடமே அவள் யார், அவளை எங்கே பார்த்திருக்கிறேன் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். பசிக்காக காத்திருந்த குழந்தைபோல சட்டென்று அம்மாவிடம் போய்க் கேட்டது தப்பு என்பது புரிந்தது.

இறங்கிப்போய் அவளிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்றால் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. மணப்பெண்ணின் சிநேகிதி இல்லாமல் என்ன அலங்காரம் செய்கிறார்கள் இவர்கள் ?

அம்மா சொன்னதை மீண்டும் நினைத்துப்பார்த்தான், இவளையா வேண்டாம் என்று சொன்னேன், அப்படிச் சொல்லியிருந்தால் எனக்கு நிச்சயம் பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும் !

யோசித்துப்பார்த்தபோது ஒவ்வொன்றாய் கோடிட்ட இடங்கள் நிரம்பியது. ஒரு வருடம் முன்னால் முதல் தடவையாய் அவனுடைய கல்யாணப்பேச்சு எடுத்தபோது, 'ராகினி கல்யாணத்துக்கப்புறம்தான் எனக்கு' என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டான். வீட்டிலும் எல்லோருக்கும் அதில் ஒப்புதல்தான். ஆனால் ராகினிக்கு எம். பி. பி. எஸ் சீட் கிடைத்ததும் எல்லாம் மாறிப்போனது, 'அஞ்சு வருஷம் படிப்பு, அதுக்கப்புறம் குறைஞ்சது மூணு வருஷம் ப்ராக்டீஸ், எட்டு வருஷம் கழிச்சுதான் என் கல்யாணத்தைப்பத்தி பேசலாம், எனக்காக அண்ணன் காத்திருக்க வேண்டாம் !' என்று அவள் கண்டிப்பாய் சொல்லிவிட்டாள், அப்பாவுக்கும் அவள் செல்லம், தஞ்சாவூர் பொம்மை மாதிரி சரிசரியென்று தலையாட்டிவிட்டார். மீண்டும் இவன் கல்யாணப்பேச்சு வந்தது.

அப்போதுதான் ஒரு ·போட்டோ காட்டினார்கள், கறுப்பு, வெள்ளையில் கண்றாவி கேமெராவில் எவனோ அமெச்சூர் ·போட்டோகிராபர் எடுத்திருந்த ·போட்டோ, பெண்ணும் டிவி சீரியலில்போல அழுது வடிந்துகொண்டிருந்ததாய்ப் பட்டது, 'ஆளை விடுங்க, எனக்குக் கல்யாணமே வேண்டாம்' என்று சொல்லிவிட்டான். அந்த சம்பந்தம் அதோடு முடிந்தது. அதன்பிறகு ஆறு மாதமாய் வேறு வரன் ஏதும் அமையவில்லை, அவள்தானா இவள் ?

பத்து நிமிடத்தில் பெரியப்பாவோடு வேலையும் வந்தது. 'அந்த ரூம்ல தாம்பூலப்பை போடறான் பாரு, நீ கூடவே இருந்து கவனிச்சுக்கோ, இல்லைன்னா ஏமாத்திப்பிடுவானுங்க' என்று சொல்லிவிட்டு சீரியல் லைட்காரரை அதிகாரம் செய்யப்போய்விட்டார். அவன் மெல்லமாய் நடந்து இன்னொரு நுரைபொங்கும் காபியை அரைவாசி குடித்துவிட்டு அந்த அறைக்குள் போனான். மங்கலான வெளிச்சத்தில் பெரிய பெரிய கூடைகளில் இருந்த தேங்காயை வெற்றிலை பாக்கோடு சேர்த்து பிளாஸ்டிக் பைகளுக்குள் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒன்றை எடுத்துப்பார்த்தான், மணமகனும், மணமகளும் கரம்பற்றி வெட்கித்து நிற்கும் காந்தர்வ காலத்துப் படத்தின் ஓரத்தில் கல்யாண விபரங்கள் பெரிய எழுத்துக்களில். 'இந்தக் காகிதம் மறுசுழற்சி பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டது' என்று பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

வெளிச்சம் போதாத அந்த அறை தாம்பூலம் போடுவதற்காகவே செய்யப்பட்டதுபோல் இருந்தது, அரை இருட்டில் தடவித்தடவி பொட்டலத்துக்கு மூன்று பொருட்கள் போடுவதைத்தவிர அந்த அறையில் வேறேதும் செய்ய முடியாது. வேலை செய்கிறவர்களை கவனிக்க முடிகிற தூரத்தில் ஓரமாய் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் ஒன்றின்மேல் உட்கார்ந்து கால்நீட்டிக்கொண்டான். இரண்டு வெற்றிலைகளை எடுத்து காம்புகிள்ளி எறிந்துவிட்டு, பாக்கை உள்ளே கொட்டி மடித்து வாயில்போட்டபோது அவள் எதிரில் வந்து நின்றாள், வெற்றிலை காரலாய்க் கசந்தது.

இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொள்ளவில்லை, மெளனமாய் தாம்பூலம் போடுகிறவர்களை வேடிக்கை பார்த்தார்கள், பிறகு அவள் தலைதிருப்பாமல், 'ஸாரி, கொஞ்சம் கோபமா பேசிட்டேன்' என்றாள். காரமான வெற்றிலையைக் கடந்ததும் அவனுக்கு பாக்கு இனிப்பதுபோல் இருந்தது. 'நான்தான் ஸாரி கேழ்கணும்' என்றான் வாய் குழறி.

'இல்லை, நான் அப்படி பேசியிருக்கக் கூடாது' அவள் இடவலமாய் தலை அசைத்து மறுத்தபோது காதில் தொங்கிய இதயவடிவ ஜிமிக்கிகள் குலுங்கி ஆடியது ரொம்ப அழகாய் இருந்தது.

'பரவாயில்லை ப்ரியா' என்றான். அவள் மீண்டும் மெளனமாகிவிட்டாள், இன்னும் எங்கோ வெறித்துப்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள், அழுகிறாளா என்ன ? கடவுளே !

அவன் அப்போதுதான் அவளை சரியாக பார்த்தான். அந்த சிற்றறையின் வெளிச்சம் இப்போது போதும் என்று தோன்றியது. போனமுறையெல்லாம் பட்டுப்பாவாடை, சட்டை, இந்த தடவை சந்தனநிற சுரிதாரில் இருந்தாள், அரைக்கையில் ஒரு குரங்குபொம்மை தொற்றிக்கொண்டிருந்தது. பின்னலைப்பிரித்து அலைபாய விட்டிருந்தாள். நெற்றியில் நீளப்பொட்டும் அதன்கீழ் கொஞ்ச்மாய் சந்தனமும். இவளையா வேண்டாம் என்று சொன்னேன் ? அந்தப் படுபாவி ·போட்டோக்காரன்மேலும், அதைவிட அதிகமாய் ப்ரியாவின் அப்பா மேலும் கோபம் கோபமாய் வந்தது. இத்தனை அழகான பெண்ணை ஒழுங்காய் ·போட்டோகூட எடுக்கத் தெரியாமல் என்னதான் கல்யாணம் பேசுகிறார்களோ ? பாவிப்பயல்கள் ! என்னை மாதிரி எத்தனைபேர் ஏமாந்தார்களோ !

அந்த கடைசி நினைப்பு அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவளுடைய அப்பா இன்னும் அதே ·போட்டோவை வைத்து இவளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தாரானால், இதுவரை யாரும் சம்மதித்திருக்க மாட்டார்கள் ! 'நல்லவேளை, இவளை நேரில் பார்த்தேன், அதிர்ஷ்டம்தான் !' என்று நினைத்தபோது முகத்தில் தானாய் ஒரு அசட்டுச்சிரிப்பு மலர்ந்தது.

அவள் இப்போது அவனை நேராய்ப் பார்த்து, 'ஏன் சிரிக்கிறீங்க ?' என்றாள். முகத்தில் இன்னும் பரிதாப பாவனை இருந்தது. அவன் சட்டென்று சமாளித்து, அவள் கையில் தொங்கியிருந்த குரங்கைக் காட்டி, 'இந்த குரங்கு பொம்மை ரொம்ப அழகா இருக்கு' என்று சிரித்தான்.

அவளும் சிரித்துவிட்டாள். பின்னர், செல்லக்கோபத்துடன், 'குரங்குன்னு சொல்லாதீங்க, நான் இவனுக்கு மாருதி-ன்னு பேர் வெச்சிருக்கேன்' என்று அதன் குட்டித்தலையை மெல்ல தடவிக்கொடுத்தாள், விட்டால் முத்தமே கொடுப்பாள் போலிருந்தது. அவனுக்குள் துளிர்த்த அர்த்தமில்லாத பொறாமையை மறைத்து, 'பாவம், ஏன் மாருதியை இப்படி தொங்க விட்டிருக்கீங்க ?' என்றான் குறும்பாய்.

'எப்பவும் என்கூடயே இருக்கணும்ன்னு பிடிவாதம் பிடிக்கறான், அதான் கூடவே கூட்டிகிட்டு வந்துட்டேன், சில சமயம் சமத்தா இங்கே இருப்பான், சில சமயம் என்னடான்னா தலையில ஏறி உட்கார்ந்துப்பான்' என்றபடி குரங்கின் இரண்டு கைகளையும் பிடித்துப்பிரித்தாள், அது தாயைப்பிரிய மறுக்கிற குழந்தையாய் அவளுடைய நடுவிரலைப் பற்றிக்கொண்டது. அவள் கூந்தலை முன்னால் திருப்பிப்போட்டு, அதிலிருந்த பூ வடிவ க்ளிப்பில் குரங்கை மாட்டிவிட்டாள். இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

அவள் ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு சப்தம் குறைந்த ரகசியக்குரலில், 'அம்மா என்னைப்பத்தி என்ன சொன்னாங்க ?' என்றாள்.

'ஒண்ணும் சொல்லலையே' என்றான் அவன் புரியாமல்.

'நிஜமா ?' அவள் நம்பாததை பார்வை சொன்னது.

'நான் எதுக்கு பொய்சொல்லப்போறேன் ? நிஜமாத்தாங்க'

'நான் யார்ன்னு சொல்லும்போது என்னைத் திட்டறமாதிரி எதுனா சொன்னாங்களா ?'

அவன் திகைத்துப்போய், 'ஏன் அப்படிக் கேட்கறீங்க ? உங்களை ஏன் அவங்க திட்டணும் ?' என்றான்.

'நத்திங், சும்மாதான் கேட்டேன், லீவ் இட்' என்று சட்டென்று எல்லாம் மறந்தவள்போல் சிரித்தாள். அவன் புரியாமல் விழித்தான். கையிலிருந்த மீத வெற்றிலைகளைக் கிள்ள முற்பட்டபோது, 'ரொம்ப வெத்திலை போடாதீங்க' என்றாள் அவள்.

'எப்பவாவதுதானே !' என்று அவன் சொன்ன சமாதானத்தை அவள் ஏற்கவில்லை, 'எப்பவாவதுன்னாலும், ரொம்ப வேண்டாம், பல்லுக்குக் கெடுதி' என்றதும் கையிலிருந்ததை கீழே வைத்துவிட்டான். 'தேங்க்ஸ்' என்றாள்.

பின்னாலிருந்து ஏதோ கீழே விழும் சப்தம் கேட்டது. ஓரக்கண்ணால் ஒருமுறை திரும்பிப்பார்த்துவிட்டு, 'அம்மா தேடிட்டு இருப்பாங்க, நான் வரேன்' என்றாள். அவன் ஏதோ கேட்பதற்குள் போயேவிட்டாள், ரொம்ப வேகம்தான் ! அவள் பார்வையிலிருந்து மறையும்வரை குரங்கு பொம்மை அவனைப்பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது.

'குரங்குக்கு ஜிம்மி, விக்கி என்று கண்றாவியாய் மேல்நாட்டுப் பெயர்வைக்காமல், அனுமனின் பொருத்தமான பெயரை வைத்திருக்கிறாள், என்ன வித்தியாசமான ரசனை இந்தப் பெண்ணுக்கு !' என்று நினைத்து சிலிர்த்துக்கொண்டான். மீண்டும் அவளைப் பார்க்க முடியுமா ?

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 3 ]

மதியம் ஒரு மணிக்குள் எல்லா வேலைகளும் ஓரளவு முடிந்துவிட்டது. வாசலில் வாழைஇலை கட்டி, அதை மறைக்கும்படி அழகிய பூவேலைப்பாடுகளும், வண்ண விளக்குகளும். கூடத்தில் பாதியளவு நாற்காலிகள், மீதி பட்டுப்புடவை மாமிகளுக்கான ஜமுக்காளங்கள். கச்சேரி மேடையும், கல்யண மேடையும் தயார். ஒரு பெண் வணக்கம் சொல்வதுபோல பனிக்கட்டியில் அழகான ஒரு சிலை செய்து வாசலில் கொண்டு வந்து வைத்து மேலே நிறைய மரத்தூள் தூவியிருக்கிறார்கள். அது மாலைவரை தாங்குமா என்று தெரியவில்லை. சாப்பாட்டுக்கூடத்தில் நாற்காலிகள், மேசைகள் அமைத்து மேலே பிளாஸ்டிக் விரித்தாயிற்று, அங்கேயும் மையத்தில் பூசணிக்காய், பாகற்காய், திராட்சை, மிளகாய் போன்றவை கொண்டு செய்த பொம்மை டைனசர் ஆக்ரோஷமாய் கால்தூக்கி முறைக்கிறது. ஒவ்வொருவராய் மண்டபத்தில் வேலையிலிருந்த எல்லோரும் சாப்பிட்டும் முடித்தாயிற்று, கல்யாணப்பையன், பெண் அறைகளுக்கு கேரியரில் சாப்பாடு அனுப்பப்பட்டு கழுவாத காலி பாத்திரங்கள் திரும்பிவிட்டது. இனிமேல் மாலை மாப்பிள்ளை அழைப்புக்குக் கூட்டம் வரத்துவங்கும்போது உபச்சாரங்களை ஆரம்பித்தால் போதும்.

பாலா இன்னொரு காபி குடிக்கலாமா என்கிற யோசனையை நிராகரித்தான். தூக்கம் போய்விடும். மேலே காலியாய் இருந்த அறையை ப்ரியாவும், தோழிகளும் ஆக்கிரமித்துவிட்டார்கள் போல, கதவு அழுத்தி சாத்தியிருந்தது. வராண்டாவில் ஜமுக்காளம்விரித்துப் படுக்கலாமா என்று யோசித்தான், ரொம்ப நேரம் அசந்து தூங்கிவிட்டால் பிரச்சனையாகிவிடும். பேசாமல் வீட்டுக்குப்போய் தூங்கிவிட்டுத் திரும்பிவரலாமா ? அப்படியொன்றும் அதிக தூரமில்லை. ஆனால் தூங்குவதற்காக வேறோர் இடம் போய்வருவதற்கு சங்கடமாய் இருந்தது.

மெல்லமாய் ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே வந்தபோது ஸ்டோர் ரூம்தான் தூசிக்கு மத்தியில் காலியாய் இருந்தது. உள்ளேபோய் எச்சரிக்கையாய் கதவைத் திறந்துவைத்தபடி படுத்துக்கொண்டான். இரண்டு நிமிடத்திற்குள் பத்துப்பதினைந்து தும்மல்கள் வந்தது, பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தின்மேல் அழுத்தமாய் போர்த்திவிட்டு கண்களை மூடிக்கொண்டான். தூரத்தில் ஸ்பீக்கரில் ஒலித்த ஐயப்பன் பக்திப்பாட்டைக் கேட்டுக்கொண்டே எப்போது தூங்கினான் என்பது தெரியவில்லை.

தூக்கத்தில் ஏதோ விநோதக்கனவு, கெட்டதா, நல்லதா தெரியவில்லை, அவன் ஒரு பாலைவனத்தில் நரியாக திரிகிறான். அங்கே கைக்கெட்டும் உயரத்தில் ஒரு திராட்சைமரம், திராட்சைக்கு மரம் ஏது ? திராட்சைக்கொடி என்றல்லவா இருக்கவேண்டும் ? ஆனால் கனவில் திராட்சை மரம்தான் வந்தது. வேப்பமரம் கொஞ்சம் குட்டையாய் வளர்ந்தால் எப்படி இருக்கும், அப்படி சின்னஞ்சிறியதாய் இலைகளோடு பச்சைமரம், கிளையெங்கும் திராட்சைகள் கொத்துக்கொத்தாய் சிரிக்கின்றன. நரியாய் இருக்கிற அவன் எட்டிப்பார்க்கிறான், பழங்களெல்லாம் அழுகிப்போனதுபோல் தெரிகிறது. 'சீச்சீ' என்று அலட்சியப்படுத்திவிட்டு கொஞ்சதூரம் நடக்கிறான். வெறும் மணல்தான், வேறெதையும் காண்பதற்கில்லை. மீண்டும் சுற்றிவந்து அதே திராட்சை மரத்தை மறுபுறத்திலிருந்து பார்க்கிறபோது பழங்கள் அப்படியொன்றும் மோசமில்லை என்று படுகிறது, ஆனால் இப்போது திராட்சைமரம் இன்னும் உயரமாய் வளர்ந்துவிட்டது, பழங்கள் கண்ணுக்கு எட்டுகிறது, கைக்கு எட்டவில்லை. எம்பி, எம்பிப் பார்க்கிறான். ஒவ்வொரு எம்பலுக்கும் அந்த மரம் இன்னும் உயரமாகிறது. உயரத்தில் அந்த பழங்களைப் பார்க்கப்பார்க்க அவனுடைய ஆசை இன்னும் அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் தளர்ந்துபோய் தரையில் உட்கார்ந்து மெளனமாய் அந்தப் பழங்களையே பரிதாபத்தோடு கூர்ந்து பார்க்கிறான். சட்டென்று ஒரு திராட்சைக்கொத்து அறுந்து நரியின் தலையில் விழுகிறது, உடனே அவன் மனிதவடிவம் பெறுகிறான். அப்போது யாரோ அவனைத் தட்டி எழுப்பியதும் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான்.

 எழுந்துபார்த்தபோது யாரையும் காணவில்லை, யார் அவனை எழுப்பியது ? ரூமுக்கு வெளியே வந்தபோது ப்ரியா அவள் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தாள். இவனைப்பார்த்ததும், 'எழுந்தாச்சா !' என்று புன்னகைத்துவிட்டு, 'கொஞ்சம் உள்ளே வாங்க' என்று அவன் படுத்திருந்த ரூமுக்குள்ளேயே மீண்டும் அழைத்துப்போனாள். வாசலை ஒருமுறை பார்த்துவிட்டு, 'இன்னொரு செட் ட்ரெஸ் வெச்சிருக்கீங்களா ?' என்றாள் சட்டென்று.

'எதுக்கு ?'

'யாராவது ஸ்டோர் ரூமுக்கு தூங்க வருவாங்களா ? அதுவும் நாலு மணி நேர தூக்கம், நீங்களே பாருங்க, உடம்பெல்லாம் தூசியும் அழுக்கும்' என்று அவள் காட்டியதும்தான் கவனித்தான். தேங்காய்த்துருவல்மாதிரி தூசி அவனை முழுக்கமுழுக்க நனைத்திருந்தது. சட்டையைத் தட்டினால் தும்மல் தூள்கிளப்பியது.

'நான் வீட்டுக்குப்போய் குளிச்சுட்டு ட்ரெஸ் மாத்திட்டு வந்துடறேன்' என்றான் அவசரமாய்.

'தட்ஸ் பெட்டர், உடனே கிளம்புங்க, பட் சீக்கிரம் வந்துடுங்க, தலைக்குமேலே வேலை கிடக்கு, கூட்டம் வர ஆரம்பிச்சாச்சு' என்று பின்புற வாசலைக்காட்டினாள்.

அவன் வண்டியைத்தேடிப்பிடித்துக்கொண்டு வீட்டுக்குப்போய் வரும்போது ராகினியையும் அழைத்துவந்தான். ப்ரியா வாசலிலேயே பன்னீர் மெஷின் அருகில் நின்று சந்தனம் விநியோகித்துக்கொண்டிருந்தாள். மீனாட்சிப் பச்சையில் பட்டுப்புடவை அவள் நிறத்துக்குப் பாந்தமாய் இருந்தது, குரங்கு பொம்மையைத்தான் காணோம். அவனைப்பார்த்ததும் எப்போதும்போல் சிரித்தாள், அவன் கொஞ்சம் கல்கண்டு வாயில் போட்டுக்கொண்டு சாஸ்திரத்துக்கு உள்ளேபோய்விட்டுத் திரும்பவந்தான்.

'யாராவது என்னைத் தேடினாங்களா ?' என்றான் அவளிடம்.

'நான்தான் தேடினேன், பாட்டுக்கச்சேரி டீம் வந்தாச்சு, மேலே எட்டாவது ரூம்ல இருக்காங்க, அவங்களை கொஞ்சம் கவனிச்சு காபி, டிபன் கொடுக்கணுமே' என்றாள். 'ம், நான் பார்த்துக்கறேன்' என்று அவன் திரும்புவதற்குள், 'ஒரு நிமிஷம்' என்றாள்.

'என்ன ?'

'உங்களோட பைக்ல வந்தது உங்க தங்கைதானே ?'

'ஆமாம்' என்று அவன் சொன்னதும் அவள்முகத்தில் சின்னதாய் ஒரு நிம்மதி பரவியதுபோல் தோன்றியது. அதை சட்டென்று பொய்க்கோபமாய் மாற்றி, 'எனக்கு அவங்களை அறிமுகப்படுத்திவைக்கலையே நீங்க !' என்றாள்.

'மை குட்னஸ், இதுக்கெல்லாம் கோவிச்சுப்பாங்களா ? இதோ, நீங்க சொன்ன வேலையை முடிச்சதும் அவளைக் கூட்டிகிட்டு வரேன் !' என்று சொல்லி சிரித்துவிட்டு படிகளில் தாவி ஏறினான்.

சங்கீத கோஷ்டியில் ஆளாளுக்கு வெவ்வேறு விதமாய் காபி கேட்டார்கள், ஒருவர், 'வறுத்த முந்திரிப்பருப்பு சூடா இருக்குமா ?' என்றார், வாய்ப்பாடுகிற பெண்ணுக்கு ·ப்ளாஸ்க் நிறைய ஸ்ட்ராங் காபி, டிகாஷன் தனியாய் இன்னொரு குட்டி ·ப்ளாஸ்க்கில் வேண்டும் என்றார்கள், இன்னும் இரண்டு பாட்டில்கள் நிறைய வெதுவெது வெந்நீர், மேடையில் மைக், மின்சார வசதியெல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதிப்பது அது இதென்று வேலை கூடிக்கொண்டே போனது. ஒருவழியாய் எல்லாம் முடிந்து 'மஹா கணபதிம்' பாட ஆரம்பித்தபோது அவன் சலிப்போடு வெளியே வந்துவிட்டான். ப்ரியா இன்னும் ரிசப்ஷனில்தான் இருந்தாள்.

'கர்நாடிக் ம்யூசிக்ல இன்ட்ரஸ்ட் இல்லையோ !' என்றாள் அவன் முகத்தைப் பார்த்ததும்.

'நோ நோ, எல்லாவிதமான ம்யூசிக்கும் எனக்கு கேட்கப்பிடிக்கும், பட், இன்னிக்கு தலைவலிக்குது, அதான் வெளியே வந்துட்டேன்' 'தலை வலிக்குதா ? எதாவது மாத்திரை சாப்டீங்களா ?' என்றாள் உடனே.

'அந்த அளவுக்கு சீரியஸ் இல்லைங்க, இந்த கோஷ்டிக்காக மாடிக்கும், மேடைக்குமா அலைஞ்சதில லேசா தலை வலிக்கிறமாதிரி இருக்கு, அவ்ளோதான்' என்றான்.

'ப்ச், அப்படியெல்லாம் அலட்சியமா இருக்கக்கூடாதுங்க, பக்கத்தில எதுனா மெடிக்கல் ஷாப் இருக்கான்னு பார்த்துட்டு வரவா ?' என்று கேட்டுவிட்டு சட்டென்று நினைவுவந்தவள்போல, 'உங்க தங்கை மெடிசின்தானே படிக்கறாங்க, அவங்களைக் கேட்கலாமே' என்றாள். அவன் பெரிதாய் சிரித்தான், 'அவளைக் கேட்கிறதாவது, இப்போதான் சேர்ந்திருக்கா, பாவம், அவளுக்கு என்ன தெரியும் ?' என்று கேட்டுவிட்டு, ரகசியமாய்க் குரலை இறக்கி சொன்னான், 'வெளியே சொல்லிடாதீங்க, இன்னும் அவளுக்கு ரத்தத்தைப் பார்த்தா பயம் !'. அவள் சிரிக்கவில்லை. சீரியஸாகிவிட்ட அவள் முகத்தைப்பார்த்ததும், 'ப்ரியா, இதைப் பெரிசு பண்ணாதீங்க, இந்த தலைவலி தானா போயிடும், டோன்ட் ஒர்ரி' என்றான்.

'அட்லீஸ்ட் ஒரு காபியாவது குடிங்க' என்றாள் கெஞ்சல் தோரணையில்.

'சரி' என்று கிச்சன்பக்கம் திரும்பப்பார்த்தவனை நிறுத்தி, 'இப்படி உட்காருங்க, நான் கொண்டுவரேன்' என்று சரசரவென்று போய்விட்டாள். 'என்ன இது, விட்டால் என்னை நோயாளியாக்கி ஓரமாய்ப் படுக்கவைத்துவிடும் போலிருக்கிறதே இந்தப்பெண்' என்று நினைத்துக்கொண்டான். ரிசப்ஷனில் ஒரு ஆண்பிள்ளை உட்கார்ந்திருப்பதை விநோதமாய்ப் பார்த்துவிட்டு ஒரு வழுக்கைத்தலையர் உள்ளேபோனார்.

ஒரு நிமிடத்திற்குள் ஓடியே வந்துவிட்டாள், கையில் நுரைபொங்காத காபி, 'கிச்சன்ல எல்லாரும் டின்னர் வேலைல பிஸியா இருக்காங்க, ஸோ, நானே அரைகுறையா காபி போட்டேன், சகிக்க முடியாம இருந்தா மன்னிச்சுடுங்க' என்று அவள் சிரித்தபோது எல்லா தலைவலியும் போய்விட்டது. மணக்க மணக்க ஸ்ட்ராங் காபி, கசப்புதான் ஜாஸ்தி.

அவன் குடித்து முடிக்கும்வரை காத்திருந்து, 'எப்படி இருக்கு ?' என்றாள் கண்கள் படபடக்க.

'காபியா, தலைவலியா ?' கண்ணடித்துக்கேட்டான். அவள் சட்டென்று தலைகுனிந்து, 'ரெண்டும்தான்' என்றதும், அவனுக்கு பழைய பயம் வந்துவிட்டது, பேசினதெல்லாம் சரி, கண்ணடித்திருக்கக் கூடாதோ.

ஆனால் அவள் சீக்கிரமே சுதாரித்துக்கொண்டுவிட்டாள், 'என்ன பதிலே காணோம் ?'

'காபி பிரமாதம், தலைவலி காணாமயே போச்சு'

'பொய் சொல்றீங்க' என்றாள் ஆள்காட்டிவிரல் நீட்டி. 'இல்லைங்க, நிஜமாதான் சொல்றேன், தலைவலி போயேபோச்சு, காயப்' என்றான். 'சரி, நம்பறேன்', மீண்டும் சிரிப்பு. ஒரு நாளைக்கு எத்தனைமுறை சிரிப்பாள் ?

உள்ளே 'தீராத விளையாட்டுப்பிள்ளை' ஒலித்துக்கொண்டிருந்தது. பெண்ணை சர்வ அலங்காரங்களுடனும் மேல் மாடத்தில் உட்காரவைத்திருந்தார்கள். மாப்பிள்ளையைக் காணவில்லை.

அவன் திடீரென்று நினைத்துக்கொண்டவன்போல, 'ஆமா, என் தங்கை மெடிசின் படிக்கறது உங்களுக்கு எப்படித் தெரியும் ?' என்றான். அவள் கொஞ்சமும் திணறியதாகத் தெரியவில்லை, 'தெரியும்' என்றாள் வெறுமனே.

'அதாங்க, எப்படித் தெரியும் ?'

'விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டேன்'

'எதுக்கு' என்கிற கேள்வி நாக்கின் நுனிவரை வந்துவிட்டது, சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான். அவனைப்பற்றி, அவன் குடும்பத்தைப்பற்றி நிறைய விசாரித்திருக்கிறாள் !

'ஏன் திடீர்ன்னு சைலன்ட் ஆகிட்டீங்க' என்று அவள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே உள்ளேயிருந்து யாரோ அவளை அழைத்தார்கள், 'அந்த ரஸ்னா பாக்கெட்டெல்லாம் எந்த ரூம்ல இருக்கும்மா ப்ரியா ?' 'இதோ வந்துட்டேன் ஆன்ட்டி' என்று சொல்லிவிட்டு, இடுப்பில் செருகியிருந்த சாவிக்கொத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே விரைந்தாள், 'நீங்க தூசி மேக்கப்ல தூங்கிட்டிருந்த ஸ்டோர் ரூம்தான், இப்போ ·புல்லா இருக்கு' என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போனாள். அவன் பழைய ஞாபகத்தில் சிரித்துக்கொண்டான்.

கல்கண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டே யோசித்தபோது, ப்ரியா விஷயத்தில் பெரிய தப்பு செய்துவிட்டதாய்த் தோன்றியது, 'என்னைப்பற்றி இத்தனை விசாரித்து தெரிந்துகொண்டிருக்கிறது இந்தப்பெண், பதிலுக்கு நான் என்ன செய்தேன் ? ·போட்டோவைப்பார்த்ததும் பிடிக்கவில்லை என்று விசிறியடித்துவிட்டேன். அவளைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்வதற்குக் கொஞ்சமாவது அக்கறை காட்டியிருக்க வேண்டாமா ? எத்தனை வளர்ந்தாலும், உள்ளே எங்கேயோ மறைந்திருக்கிற ஆணாதிக்கம் அவ்வப்போது வேலையைக் காட்டி விடுகிறது, இவள் இல்லையென்றால் ஆயிரம் பெண்கள் என்று கர்வம் வளர்க்கிறது, அழகான பெண்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது, முகம் சரியில்லையென்று தோன்றிவிட்டால் போதும், அந்த பெண்ணைப்பற்றி வேறு எதுவும் தெரியாமல் ஒரே வார்த்தையில் நிராகரித்து வீசியெறியச் சொல்கிறது, முட்டாள், முட்டாள் !' தன்னையே திட்டிக்கொண்டான், இதற்கெல்லாம் அவளிடம் மன்னிப்புக் கேட்கலாமா ?

மன்னிப்பாளா ?

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 4 ]

'வக்கீல்ன்னா, தினமும் கோர்ட்டுக்கெல்லாம் போவீங்களா நீங்க ?' வானத்தில் நிலாப்பார்த்துக்கொண்டே கேட்டவளைத் திரும்பி முறைத்தான், 'என்ன கிண்டலா ?'

 'அச்சச்சோ, நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க, நான் என்ன கேட்க வந்தேன்னா, டெய்லி அந்த கறுப்பு கோட்டைப் போட்டுகிட்டு கோர்ட்டுக்குப் போய் சினிமாவில வர்ற மாதிரி மேஜையைக்குத்தி ஆக்ரோஷமா பேசுவீங்களா ?', விரல்களைச் சேர்த்துக் குவித்து மொட்டைமாடியின் சுவரில் வேடிக்கையாக குத்தினாள், முகத்தில் கேலி பொங்கிவழிவது தெரிந்தது.

அவன் சிரித்துக்கொண்டே, ஆனால் கிண்டலில்லாமல் பதில் சொன்னான், 'பல வருஷமா சினிமா டைரக்டர்கள் திட்டம்போட்டு உண்டாக்கியிருக்கிற இமேஜ்ங்க அது, அதில கொஞ்சமும் உண்மையில்ல, நிஜத்தில நாங்க கொஞ்சம் சத்தம்போட்டுப் பேசினாலும், ஜட்ஜ், 'இங்க யாருய்யா செவிடு, மெதுவாவே பேசலாம்'ன்னு சொல்லிடுவார்'

'நிஜமாவா சொல்றீங்க ? கோர்ட், கேஸ்ன்னா அதுவும் பட்டிமன்றம் மாதிரிதான், யார் நல்லா அடிச்சுப் பேசறாங்களோ, அவங்க பக்கம்தான் கேஸ் ஜெயிக்கும்ன்னெல்லாம் நான் நினைச்சிட்டிருந்தேனே'

'எல்லாம் தப்பு, எச்சில் தொட்டு அழிச்சிடுங்க' அவன் இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை. அவளும் சேர்ந்துகொண்டாள்.

பிரமாதமான விருந்துச்சாப்பாடு உண்ட களைப்பு, ஆனால் இன்னும் தூக்கம் வரவில்லை. மதியம் நன்றாக தூங்கியது காரணமாய் இருக்கலாம். இருவரும் மொட்டைமாடியில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்கள். கீழே மெல்லமாய் சப்தங்கள் குறைந்துகொண்டிருந்தது.

அவன் ஒருமாதிரி தைரியம் திரட்டிக்கொண்டு ரொம்பநேரமாய் யோசித்திருந்த கேள்வியை அவளிடம் கேட்டான், 'நீ - நீங்க என்ன பண்றீங்க ?' 'என்ன பண்றீங்கன்னா ?' அவளுக்குப் புரியவில்லை என்பது புருவ உயர்த்தலில் தெரிந்தது.

'ஐ மீன், படிப்பு முடிஞ்சதா ? எதுனா வொர்க் பண்றீங்களா ?' அவன் கேட்டுமுடித்ததும் அவள் அவனையே கூர்மையாய்ப் பார்த்தபடி, 'ஸோ, என்னைப்பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதா ?' என்று கேட்டதில் கொஞ்சம் ஏக்கமோ, எதிர்பார்ப்போ கலந்திருந்ததாய்த் தோன்றியது.

என்ன கேள்வி வரக்கூடாது என்று எதிர்பார்த்திருந்தானோ, அந்தக் கேள்வி வந்துவிட்டது. அவன் பேசத்தோன்றாமல் தலைகுனிந்து நின்றிருந்தான். மொட்டைமாடியின் தரைமுழுக்க குளிர் நீர்வட்டங்களாய்ப் பரவியிருந்தது.

அவன் மெளனத்தைப் புரிந்துகொண்டு அவளே தொடர்ந்து பேசினாள், 'திருப்பூர்ல அப்பாவோட எக்ஸ்போர்ட் கம்பெனியில ஒரு சின்ன வேலையில இருக்கேன்', ஒரு சின்ன இடைவெளிவிட்டு, 'அப்பாவுக்கு நான் வெளியே வேலைக்குப்போறது இஷ்டமே இல்லை, ஒரே பொண்ணாச்சா, ரொம்ப செல்லமா வளர்த்துட்டாங்க, ஸோ, வெளிகம்பெனியில யாராவது என்னை ரொம்ப வேலை வாங்கிட்டா என்ன பண்றதுன்னு பயந்துபோய் தன் கம்பெனியிலேயே வெச்சுப் பூட்டிட்டார், என் டிபார்ட்மென்ட்ல என்னைத்தவிர பாக்கி எல்லாருக்கும் ஏதாவது வேலை இருக்கும், நான் மட்டும் சோம்பேறியா உட்கார்ந்து ஜெயகாந்தன் படிச்சிட்டிருப்பேன், மாசம் பொறந்தா பாக்கெட்மணிக்கு பதிலா இப்போ சம்பளம், கசக்குதா ?' என்று சிரித்தாள். அவன் இன்னும் மெளனம் சாதித்தான்.

சில நிமிடங்கள் ராத்திரியின் இரைச்சலில்மட்டும் கழிந்தன, அமைதியைக் கலைக்க எண்ணி, 'உங்க ஹாபி என்ன ?' என்றாள் அவளே. 'நத்திங்' அவன் ஒருவரியில் பதில்சொல்லிவிட்டு அவளைப்பார்த்தான், 'உங்களுக்கு ?'

'அதான் சொன்னேனே, ரீடிங், வெறிபிடிச்சமாதிரி ரீடிங், எந்த புத்தகமானாலும் படிப்பேன் நான், கார்ல போகும்போது, தியேட்டர்ல க்யூவில நிற்கும்போது, காலேஜ்ல க்ளாஸ் இல்லாத சமயங்கள்ல, இப்படி எப்ப நேரம் கிடைச்சாலும் படிச்சுகிட்டே இருக்கணும் எனக்கு, வீட்ல ஒரு குட்டி லைப்ரரியே வெச்சிருக்கேன், என் ஹேண்ட்பேக்ல எப்பவும் நாலு புத்தகமாவது இருக்கும்'

'நானும் படிப்பேன், குமுதம், ஆனந்த விகடன்ல ஜோக்ஸ், ஒருபக்கக் கதைகள் விடவே மாட்டேன்' என்று சொன்னபிறகு, அதைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்றுபட்டது, சமாளிப்பாய், 'எனக்கு எப்ப டைம் கிடைச்சாலும் புல்லாங்குழல் வாசிப்பேன், சின்னதா ஒண்ணு ரெண்டு கச்சேரிகூட செஞ்சிருக்கேன், ஒரு ஆல்பம் கொண்டுவரதா ஐடியா இருக்கு'

'வ்வாவ், அதைச் சொல்லுங்க முதல்ல, ஹாபி என்னன்னு கேட்டா சும்மா 'நத்திங்'ன்னு பதுங்கினீங்க ? இதைத்தான் நிறைகுடம்-ன்னு சொல்றாங்களா ?' அவள் கைப்பிடிச்சுவரில் ஏறி உட்கார்ந்துகொண்டாள், 'டெல் மீ மோர், ·ப்ளூட் எப்போ கத்துகிட்டீங்க, என்னவெல்லாம் வாசிப்பீங்க ? கீர்த்தனை ? சினிமா பாட்டு ? வெஸ்டர்ன் ? இப்போ ·ப்ளூட் வெச்சிருக்கீங்களா ? எனக்காக எதுனா வாசிச்சுக் காமிங்களேன் ப்ளீஸ்' அடுக்கிக்கொண்டே போனாள்.

'சொல்றேன், பட் முதல்ல கீழே இறங்குங்க, ரொம்ப மெல்லிசா இருக்கு சுவர், இதில உட்கார்றது அவ்வளவா பாதுகாப்பில்லை'

'பாரேன், நான் உட்கார்ந்தா இந்த சுவர் இடிஞ்சு விழுந்துடுமோ ? நான் குண்டா இருக்கிறதைத்தானே கிண்டலடிக்கறீங்க ?' என்று சிணுங்கினாள்.

'ஐயோ, அதெல்லாம் இல்லை, நீங்க குண்டா இருக்கிறதா யார் சொன்னது ?'

அவள் நம்பவில்லை, ஆனால் இறங்கிக்கொண்டாள், 'கால் வலிக்குதே'

'கீழே போயிடலாமா ?'

'நோ நோ, இங்கே தரையில உட்காரலாமே' என்றாள். அவன் உட்கார்ந்தவுடன் அவளும் கால்மடக்கி உட்கார்ந்துகொண்டாள். பட்டுப்புடவையை ஏற்கெனவே மாற்றி சாதாரண சேலையில் இருந்தாள், ஒருநாளைக்கு எத்தனை உடைகள் மாற்றுகிறார்கள் இந்தப் பெண்கள் !

மெல்லமாய் குளிர் உடலெங்கும் புகுந்து பரவிக்கொண்டிருந்தது, ஒரு கணப்பு இருந்தால் இதமாய் இருக்கும் என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கையில், 'சொல்லுங்க' என்றாள் அவள் மெளனம் கலைத்து.

'என்ன ?'

'அதுக்குள்ள மறந்தாச்சா ?' இரண்டு கைகளையும் அகல விரித்து வாய்க்குப்பக்கத்தில்வைத்து ஊதிக்காட்டினாள், '·ப்ளூட்'

'ஹேய், என் ·ப்ளூட் இருக்கட்டும், நீங்க பரதநாட்டியம் ஆடுவீங்களா ?' சட்டென்று கேட்டான்.

'எப்படிக் கண்டுபிடிச்சீங்க ?' என்றாள் அவள், முகம் முழுக்க குப்பென்று சிவந்துவிட்டது.

'ஹ, வக்கீல்ன்னா சும்மா-ன்னு நினைச்சீங்களா ? நாங்கல்லாம் பாதி டிடெக்டிவ்ஸ், கணேஷ் - வஸந்த் தெரியும்ல ?' காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்.

'ப்ச், சொல்லுங்க, ப்ளீஸ், எப்படி கண்டுபிடிச்சீங்க ?'

'கை ரெண்டையும் வெச்சு அழகா புல்லாங்குழல் ஊதிக் காட்டினீங்களே, அந்த அபிநயத்தில ஒரு நளினம் தெரிஞ்சது, ஏதோ முத்திரை பிடிக்கிறமாதிரி, சாதாரணமா எல்லாப் பெண்களுக்கும் இருக்கிற நளினம் இல்லை அது, அதுக்கும் கொஞ்சம் மேலே-ன்னு தோணிச்சு, அதான் கேட்டேன்' என்றான், 'எத்தனை வருஷமா ஆடறீங்க ? அரங்கேற்றம் ஆச்சா ?'

'அஞ்சு வயசில இருந்து கத்துக்கறேன், ரெண்டு வருஷம் முன்னாலதான் அரங்கேற்றம் ஆச்சு, அதுக்கப்புறம் ஏழெட்டு ப்ரோக்ராம் பண்ணிட்டேன் திருப்பூர்லயும், கோயம்பத்தூர்லயும்' என்றுசொல்லிவிட்டு, 'அதைத்தாண்டிப்போக அப்பா விடமாட்டார்' என்றபோது முகத்தில் சிரிப்பில்லை. சோகமும் அவ்வளவாய் இல்லைதான்.

திடீரென்று நினைவுவந்தவள்போல், 'எனக்கு ·ப்ளூட் வாசிச்சுக் காட்டறதா சொன்னீங்களே !' என்றாள்.

'ஹலோ, சும்மா சொல்லாதீங்க, நான் அப்படியெல்லாம் ப்ராமிஸ் பண்ணலை'

'அதனால என்ன, இப்போ பண்ணுங்க' என்று கைநீட்டினாள், 'எங்கே ·ப்ளூட் ?'

'வீட்ல இருக்கு' என்று அவன் சொன்னதும் அவள்முகம் சுருங்கிப்போனது, 'நாளைக்கு எடுத்துட்டு வரீங்களா ?'

'கட்டாயமா !' என்று சொல்லி வேண்டுமென்றே அவள் கைதொட்டு சத்தியம் செய்தான். அவள் நன்றி சொல்லிப் புன்னகைத்துவிட்டு வேகமில்லாத அவசரமாய் கையை விலக்கிக்கொண்டாள், பிறகு மார்புக்குக்குறுக்காய் கைகட்டிக்கொண்டு 'ரொம்ப குளுருது இல்லை ?' என்றாள்.

'அது கிடக்கட்டும், என்கிட்டேதான் ·ப்ளூட் இல்லை, வாசிக்க முடியாது, உங்களுக்குதான் அந்த ப்ராப்ளம் இல்லையே, சின்னதா ஒரு அபிநயம் பிடிச்சுக்காட்டுங்களேன்' என்றதும் அவள் திகைத்துப்போனாள், 'என்ன விளையாடறீங்களா ?'

'இதில என்ன விளையாட்டு இருக்கு ? ஆடுங்க ப்ளீஸ்'

'இங்கயா ?'

'இங்கதான் ! சலங்கை இல்லையேன்னு யோசிக்கறீங்களா ?' என்றதும் அவள் தயக்கமாய் சிரித்தாள், 'அ- அதெல்லாம் ஒண்ணுமில்லை' அவள் இன்னும் தயங்குவதைப்பார்த்து, 'பிடிக்கலைன்னா வேண்டாம், விட்டுடுங்க' என்றான்.

அவள் சேலையை இடுப்பில் செருகிக்கொண்டாள், 'சரியா வருமான்னு தெரியலை, கிண்டலடிக்கக்கூடாது' என்றாள் பாவமாய்.

அன்று இரவு தூங்கியபிறகும் வெகு நேரத்துக்கு அவன் கண்ணுக்குள் களைத்த முகத்தோடு ப்ரியா உற்சாகமாய் பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 6 ]

மறுநாள் அதிகாலை நான்கரைக்கே மணப்பெண் அலங்காரம் துவங்கிவிட்டது. பியூட்டி பார்லரிலிருந்து வந்திருந்த பெண் வெளுப்புக்கும் மாநிறமாத்துக்கும் இடையே, அடிக்கடி தலைமுடியை நளினமாய் கோதி விட்டுக்கொண்டது. வந்ததும் முதல் வேலையாய் விமலாவைத்தவிர மற்ற எல்லாரையும் கண்ணாடியிலிருந்து நான்கடி தள்ளி நிறுத்திவிட்டது, 'யாராவது இந்த லைனைத் தாண்டி வந்தீங்க, என்க்கு கெட்ட கோபம் வரும்', கொச்சையான ஆங்கிலோ இந்திய உச்சரிப்பு.

'இதில உங்க அம்மா யாரும்மா ?' மூன்று வயது குழந்தையிடம் கேட்பதுபோல கொஞ்சல் பாவத்தில் விமலாவிடம் அந்தப்பெண் குனிந்து கேட்டபோது அவள் நிஜமாகவே பயந்துபோனாள், 'ஏன் கேட்கறீங்க ?' என்றாள் ஆங்கிலத்தில்.

அவள் பதில் சொல்வதற்குள் விமலாவின் அம்மா கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்து, 'நான்தான் பொண்ணோட அம்மா, உங்க அலங்காரத்துக்கு ஏதாச்சும் கொண்டுவரச் சொல்லணுமா ?'

அவள் நட்பாய் புன்னகைத்து திணறித்திணறி தமிங்கிலத்தில் பேசினாள், 'எல்லாம் நாங்களே கொண்டுவந்திருக்கோம் அம்மா, நீங்க தயவுசெஞ்சு யாரும் இங்கே மிர்ரர்கிட்ட வந்து டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்கணும், அப்போதான் க்விக்கா மேக்கப் முடிச்சு நீங்க பொண்ணை அழைச்சிட்டுப்போலாம், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஐடியா சொன்னீங்கன்னா என்னால எதையும் சரியா பண்ணமுடியாம போய்டும், லீவ் அவர் ஜாப் டு அஸ், எங்களுக்கு எல்லாம் தெரியும்'

விமலாவின் அம்மா தலையாட்டிவிட்டு பவ்யமாய் பின்னால் நகர்ந்துகொண்டாள். பெண்கள் மத்தியில் மெல்லமாய் முணுமுணுப்புகள் எழ ஆரம்பித்தது. அதைப்பற்றி கவலைப்படாமல் அந்தப்பெண் சூட்கேஸ் மாதிரி தோன்றிய பையிலிருந்து ஒவ்வொரு ரசாயனமாய் எடுத்து ஆளுயர கண்ணாடியின் முன்னால் நிரப்ப ஆரம்பித்தது. விமலா ஏதோ நினைப்பில் தலையை சிலுப்பிக்கொண்டு, 'என் அம்மா மட்டும் இங்கே என் பக்கத்திலேயே இருக்கட்டுமே' என்றாள் கெஞ்சலாய்.

'அம்மா இங்கதான் இருக்காங்க டியர், டோன்ட் ஒர்ரி' என்று உதட்டை நாவால் ஈரப்படுத்திக்கொண்டாள் அவள், விமலாவின் தாடையைப்பிடித்துக் கொஞ்சாதது ஒன்றுதான் பாக்கி. கையில் ஒரு சிறிய ப்ரஷ் எடுத்துக்கொண்டு வெளிச்சத்தில் அதை சரிபார்த்தாள்.

பெண்கள் வரிசையின் கடைசியில் இருந்த ப்ரியா முகம் சுளித்தாள், 'யார் யாரை அதட்டறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு, இவங்களுக்கு எல்லாம் தெரியுமாம், எல்லாம் தெரியும்' என்று தாடையில் இடித்துக்கொண்டாள். சட்டென்று வெளியே வந்துவிட்டாள், 'விமலாவுக்கு அலங்காரம் பண்ணலாம்ன்னு சீக்கிரம் எழுந்து குளிக்காமகூட இங்க வந்தா, இவ இப்படி விரட்டறாளே !' என்று தனக்குள் புலம்பிக்கொண்டே பெண்கள் அறைக்கு குளிக்கப்போனாள்.

அவள் திரும்பிவந்தபோது பொலபொலவென்று விடிந்திருந்தது. ஆரம்பத்தில் போட்ட கட்டுப்பாடுகள் எதுவும் செல்லாமல்போய் விமலாவையும், கண்ணாடியையும் சுற்றி எல்லோரும் நின்று ஆளாளுக்கு யோசனை சொல்லிக்கொண்டிருந்தார்கள். நடுவில் அந்த ஆங்கிலோ இந்தியப்பெண் ஏகத்துக்கு திணறிக்கொண்டிருந்தது, 'ப்ளீஸ், சத்தம் போடாதீங்க, கொஞ்சம் லைட்டும், காத்தும் வரட்டும், தள்ளி நில்லுங்க, ப்ளீஸ்' என்று திருவிழாக்கூட்டத்தை கட்டுப்படுத்துகிற போலீஸ்போல அவள் அலறிக்கொண்டிருந்ததைப்பார்த்ததும் 'நல்லா வேணும்' என்று நினைத்துக்கொண்டாள் ப்ரியா.

இத்தனை களேபரத்துக்கும் நடுவே விமலா சிரிக்க முடியாமல் வியர்த்துக்கொண்டிருந்தாள், முகத்தில் திட்டுத்திட்டாய் ஜிகினா மினுமினுப்பு, பருவப்பெண்ணின் இயற்கையான அழகைப் பூசி மறைத்ததுபோல இருந்தாலும், அதுவும் ஒரு தனி வசீகரமாகவே இருந்தது. அந்த அழகுக்குப் பொருந்தாத எரிச்சலுடன் 'இன்னும் எவ்ளோ நேரம் இந்த மேக்கப் ?' என்றாள். உண்மையிலேயே அலங்காரம் முடிந்ததா, அல்லது கோபத்தால் அந்தப்பெண் சட்டென்று முடித்துவிட்டதா தெரியவில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடம் பையைத்தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டது. அதற்குள் இரண்டு குழந்தைகள் ஏதோ ஒரு க்ரீமை முகத்தில் பாதி பட்டுச்சட்டையில் பாதி என்று பூசிக்கொண்டு துள்ளி ஓடின.

அடுத்து ஒரு பெரிய வெல்வெட் பெட்டி திறக்கப்பட்டு, பழையதும் புதியதுமாய் ஒவ்வொரு நகையாய் வெளியே வந்தது. இரண்டு கைகளையும் நீட்டியபடி ஜவுளிக்கடை பொம்மைபோல விமலாவை உட்காரச்சொல்லிவிட்டு நெற்றிச்சுட்டியில் ஆரம்பித்து நகைபூட்ட ஆரம்பித்தார்கள், ப்ரியா ஒட்டியாணத்தை எடுத்து விமலாவுக்கு அணிவித்தபோது அவள், 'பார்த்து ப்ரியா, இறுக்கிப் பிடிக்குது' என்றாள். 'உன் அளவுகொடுத்து செஞ்சதுதானேடீ ?' என்றாள் விமலாவின் அத்தை. ப்ரியா குறும்பாய், 'அளவெல்லாம் சரிதான் ஆன்ட்டி, ஆனா அதுக்கப்புறம் நம்ம பொண்ணு கல்யாண சந்தோஷத்தில ஒரு சுத்து பெருத்துட்டாளே, அதான் ஒட்டியாணம் சின்னதாப்போச்சு' என்று அவளைப்பார்த்து கண்ணடித்ததும் விமலா முகம் சிவந்துபோனது, 'ச்சீ போடி' என்று ப்ரியாவை இடுப்பில் கிள்ள முயன்றாள்.

அவளிடமிருந்து தப்பி ப்ரியா வெளியே வந்தபோது, புதிதாய் ஒரு பெண் அறைக்குள் நுழைந்து, 'பெரியம்மா எங்கே ?' என்றது அவளிடம். ப்ரியா பதில் சொல்வதற்குள், 'ராகினியா, என்னம்மா விஷயம் ?' என்று பின்னாலிருந்து குரல் மட்டும் வந்தது. 'அம்மா இந்த காசு மாலையை உங்ககிட்ட தரச்சொன்னாங்க' சொல்லிக்கொண்டே அவள் அலங்காரக்கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டாள், ப்ரியா சற்றே ஒதுங்கி நின்று யோசித்தாள். இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறேன், எங்கே ? அந்த அறையில் எல்லாரும் பட்டுப்புடவையில் இருக்கையில் அவளைமட்டும் சுரிதாரில் பார்ப்பதற்கு வித்தியாசமாய் இருந்தது. யார் இவள் ?

'பாலா எங்கேம்மா ?' என்று யாரோ அவளிடம் கேட்டபோது ப்ரியாவுக்கு சட்டென்று நினைவு வந்தது, ராகினி, பாலாவின் தங்கை, எப்படி மறந்தேன் ? தலையில் அடித்துக்கொண்டாள்.

அவள் நகையை ஒப்படைத்துவிட்டு வெளியேறப்பார்த்தபோது ப்ரியா கதவருகே, 'நீங்க பாலாவோட சிஸ்டர்தானே ?' என்றாள்.

'ஆமாம்' அவள் புரியாத பார்வையோடு நின்றாள், 'நீ - நீங்க ?'

இருவரும் இப்போது அந்த அறையிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள், 'நான் பாலாவோட ·ப்ரெண்ட், ப்ரியா'

'ப்ரியா ?' அவள் கொஞ்சம் யோசித்தாள், 'அண்ணன் என்கிட்ட உங்களைப்பத்தி சொன்னதே இல்லையே' என்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள். 'ஸாரி, தப்பா கேட்டுட்டேனோ !'.

'நோ நோ, இப்போதான் ரெண்டுநாளா எங்களுக்குள்ள பழக்கம், ரயில் ஸ்நேகம் மாதிரி, இது கல்யாண ஸ்நேகம்'

'ஸோ ஸ்வீட், நல்ல பேசறீங்க, ஐயாம் ராகினி' என்று கைகுலுக்கினாள். 'நீங்க மாப்பிள்ளை வீடா ?'

'இல்லை, பொண்ணு வீடுதான், விமலாவோட காலேஜ்மேட்' என்றாள். ராகினி புரிந்ததாய் தலையசைத்துவிட்டு உள்ளே ஒருமுறை எட்டிப்பார்த்து, 'எவ்ளோ நகைங்க, பொம்மை மாதிரி இருக்கா விமலா' என்றாள், தொடர்ந்து, 'நேத்திக்குதான் நாங்க ரெண்டுபேரும் யூனி·பார்ம் போட்டுகிட்டு ஒண்ணா ஸ்கூலுக்குப்போனமாதிரி இருக்கு, அதுக்குள்ள கல்யாணம் பண்ணிகிட்டு மாமியாகப்போறா !' என்றாள்.

ப்ரியா அவளிடம் தலைகுனிந்து பார்த்தபடி பேசவேண்டியிருந்தது, ரொம்ப குள்ளம். 'எனக்கும் அதே ·பீலிங்தான், எங்க க்ளாஸ்லயே இவளுக்குதான் முதல்ல கல்யாணம் ஆகுது !' என்றாள் ப்ரியா. ராகினி இன்னும் உள்ளேயே பார்த்துக்கொண்டிருந்தாள், 'விமலா ரொம்ப அழகா இருக்கா, கல்யாணக்களைங்கறது இதுதானா ?' என்றாள் திரும்பி.

ப்ரியா அவள் திரும்புவதற்காகவே காத்திருந்ததுபோல, 'அது சரி, ஏன் பொறாமைப்படறீங்க, நீங்களும் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே !' என்று சிரித்தாள், அளவுக்கு மீறிய உரிமை எடுத்துக்கொண்டு பேசுகிற தயக்கம் இருந்தாலும், வேறு வழியில்லை.

'அந்த வேலைதான் என்கிட்டே நடக்காது', கட்டைவிரல் உயர்த்திச் சிரித்து, 'படிப்பை முடிக்கிறவரைக்கும் நோ கல்யாணப்பேச்சு-ன்னு அப்பாகிட்ட ப்ராமிஸ் வாங்கிட்டேனே !' என்று குதூகலித்தாள். ராகினி யாரிடம் சீக்கிரமே ஒட்டிவிடுவாள் என்று பாலா நேற்று சொல்லியிருந்தது ப்ரியாவுக்கு நினைவுக்கு வந்தது. கடல் அலைகள்போல அவளுடைய புருவங்கள் உயர்ந்து தாழ்வதை ரசித்தபடி அடுத்த அஸ்திரத்தை வீசினாள், 'அவ்ளோ நாள் கல்யாணத்துக்கு ஸ்டே ஆர்டரா ? உங்க அண்ணன் நிலைமைதான் பாவம்'.

'நோ வே, எனக்காக ஏன் அவன் காத்திருக்கணும் ? தங்கைக்கு கல்யாணம் செய்யாம அண்ணன் பண்ணிக்கக்கூடாதுன்னு உங்க ஐ. பி. சி-ல எங்கயாவது இருக்கா-ன்னு கேட்டேன், இல்லைன்னான், சரி, போனாப்போகுது, நீ கல்யாணம் பண்ணிக்கோடா-ன்னு தீர்ப்பு சொல்லிட்டேன்' அவள் வரம் அருள்வதைப்போல ஒரு உள்ளங்கையை மேலேயும், இன்னொன்றைக் கீழேயும் வைத்துக் காண்பித்ததும் ப்ரியாவுக்கு பெரிதாய் சிரிப்பு வந்துவிட்டது, 'ரொம்ப ஹ்யூமரஸ் நீங்க'

'தேங்க்யூ' அவள் ஜப்பானிய பாணியில் குனிந்து நன்றி சொன்னாள். அவள் நிமிர்வதற்குள் இயல்பாக அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டாள் ப்ரியா, 'அப்போ உங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க-ன்னு சொல்லுங்க'

'ஒரு பொண்ணு பார்த்தாங்க, சரியா வரலை, அதுக்கப்புறம் வேற எந்த வரனும் அமையலையாம், ஆறுமாசமா எல்லாரும் பொண்ணுக்காக வெயிட்டிங்', வருத்தத்தை அதிகம் காட்டிக்கொள்ளாமல் அவள் சொல்லிமுடித்தாள்.

அவ்வளவுதான், அதைத் தெரிந்துகொள்ள வழிபுரியாமல்தானே நேற்று காலையிலிருந்து தவித்துக்கொண்டிருந்தது ! ப்ரியாவுக்கு அதன்பிறகு அவள்சொன்னது எதுவும் புத்தியில் ஏறவில்லை. ஏதோ காரணம்சொல்லி ராகினி விடைபெற்றுப்போனதுகூட உறைக்காமல், யந்திரம்போல் கைகுலுக்கிவிட்டு, அந்த செய்தி தந்த சந்தோஷத்திலிருந்து விடுபட விரும்பாமல் எங்கோ பார்த்துக்கொண்டு திகைத்து நின்றிருந்தாள். மனதெங்கும் ஒரு நிம்மதி படர்ந்து பரவியிருந்தது போதும்.

யாரோ அவளைப்பிடித்து உலுக்கினார்கள், 'முகூர்த்தத்துக்கு நேரமாகுது, என்ன இன்னும் இங்கயே நின்னுட்டிருக்கே ?'

'இதோ, அஞ்சு நிமிஷத்தில ரெடி !' என்று புன்னகைத்துவிட்டு இடதுபக்கம் திரும்பி நடந்தாள். கையில் ஜிகினா போர்த்திய மாலையோடு பாலா படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தான். 'குட்மார்னிங் ப்ரியா !'

முதல்முறையாய் அவள் அவனிடம் பேசத்திணறினாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 7 ]

எப்போதோ ·போட்டோவில் பார்த்திருந்த மாப்பிள்ளை சட்டையில்லாத வெற்றுமார்பில் வித்தியாசமாய்த் தெரிந்தார், அடிக்கடி மூக்குக்கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு ஹோமப்புகையில் கண்கலங்கினார். அவருக்கும், விமலாவுக்கும் பின்னால் ஏகப்பட்ட குழந்தைகள், எல்லோரும் வீடியோவில் எப்படியாவது தலைகாட்டிவிட கண்கொட்டாமல் முட்டிமோதிக்கொண்டிருக்க, பெண்கள் அவர்களை அடக்கமுயன்று தோற்றார்கள். மெல்லமாய் கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது, வந்தவர்களை வரவேற்று டிபனுக்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள் மாப்பிள்ளையின் சிநேகிதர்கள். இன்னும் வெய்யில் சேர்ந்திராத குளிர் காலைக்குப் பொருத்தமில்லாமல் ட்ரேயில் குளிர்பானமும், ஐஸ்க்ரீமும் உலவிக்கொண்டிருந்தது. பின்வரிசையில் அக்காரவடிசில் வழிகிற கையை சரியாகத் துடைக்காமல் மாமாக்கள் நாதஸ்வரக்காரரிடம் நலந்தானா வாசிக்கக் கேட்டுக்கொண்டிருந்தர்கள்.

காசி யாத்திரைமுடிந்து எல்லோரும் திரும்பிவர தாமதமானபோது யாரோ, 'மாப்பிள்ளை அப்படியே காசி தியேட்டர்ல காலைக்காட்சி பார்க்கப் போயிட்டாராம்பா' என்று சத்தமாய்ச் சொன்னதும் சிரிப்புச்சத்தம் பெரிய அலையாய் எழுந்தது, விமலா நகைகள் வழிகிற கையால் வாயை மறைத்துக்கொண்டு அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டு, அம்மாவின் முறைப்பை எதிர்பார்த்து அலட்சியப்படுத்தினாள். இன்னும் இந்திய வெய்யிலுக்குப் பழக்கப்படாத மாப்பிள்ளை கால்மணி நேரம்கழித்து மெதுவாய் உடலெங்கும் வியர்வைவழிய வந்துசேர்ந்தார். கையிலேயே விசிறி இருந்தும் விசிறிக்கொள்ளவில்லை, அவர் டென்ஷன் அவருக்கு.

சினிமா பாட்டுகளெல்லாம் வாசித்துமுடித்த மேளதாளங்கள் மெல்லமாய் உச்சத்தை எட்டத்துடித்தது, பந்தியில் கூட்டம் குறைந்துபோய் எல்லோரும் கூடத்தில் நிறைய ஆரம்பித்தார்கள், நாற்காலிகள் அதிசீக்கிரமாய் தீர்ந்துபோய் பாலாவும், இன்னும் மூன்று பேரும் அவசரமாய் மூலையில் அடுக்கியிருந்த இரும்பு சேர்களை தூசிபறக்க பிரித்துப்போட்டார்கள். சாஸ்திரிகளின் வேகத்துக்கு மந்திரத்தை திருப்பிச்சொல்லத் திணறினார் மாப்பிள்ளை. அவருக்கும், பெண்ணுக்கும் ஒரே செம்பில் காபியோ, பாலோ வந்ததை இருவருமே குடிக்கவில்லை. ஹோமப்புகை மெல்லமாய் அடங்கப்பார்த்ததில் யாரோ அரை டம்ளர் நெய்யை அள்ளிஊற்றியதும் அக்னி ஆசையாய் வானமேறியது.

ஏழரைமணிக்கு சுற்றமும் நட்பும் தூவிய அட்சதைத்தூசிக்கிடையே விமலா திருமதியானாள். தாலி கட்டியபோது பாலாவும், ப்ரியாவும் மண்டபத்தின் கடைசி வரிசை நாற்காலிகளில் நின்று விமலாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருவருக்கும் மனதில் வெவ்வேறு உணர்ச்சிகள், மெளனமும், நிறைவும் மட்டுமே பொதுவானதாய் இருந்தது.

நாற்காலியிலிருந்து இறங்கும்போது பாலா, 'ஸோ, இந்த ஒரு நிமிஷத்துக்காகதான் ரெண்டுநாளைக்கு இத்தனை ஆடம்பரமும், சடங்குகளும், சம்பிரதாயமும் !' என்று பெருமூச்சுவிட்டான்.

'ஏன் அப்படி சொல்றீங்க ?' ப்ரியா புரியாமல் கேட்டாள், சுற்றியிருந்த கூட்டம் சினிமா முடிந்ததுபோல மெல்லமாய் கலைய ஆரம்பித்தது, சிலர் மொய் எழுதும் வரிசையைத் தேடிக்கொண்டிருக்க, மற்றவர்கள் அபிமானசீரியல் ஆரம்பிப்பதற்குள் வீட்டுக்குப்போய்விடலாமா என்று கணக்குப்போட ஆரம்பித்தார்கள். பரிசு பார்சல் வைத்திருந்தவர்கள் ஆர்வமாய் மேடையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மெல்லமாய் மண்டபமெங்கும் ஒரு அ-ஒழுங்கு பரவ ஆரம்பித்திருந்தது.

'என்ன தப்பா சொல்லிட்டேன் ?'

'தப்புன்னு சொல்லலை, நீங்க சொன்னது புரியலை' மன்னிப்புக்கேட்கும் தோரணையில் சொன்னாள்,

'கல்யாணம்ங்கறது இந்த தாலி கட்டற ஒரு நிமிஷம்தானே ? முதலமைச்சர் ரோட்ல போகும்போது அவருக்கு முன்னாலேயும், பின்னாலேயும் ஏகப்பட்ட கார்கள் போகுமே, அந்த மாதிரி இந்த ஒரு நிமிஷத்தைக் காரணமா வெச்சு ரெண்டுநாளா எத்தனை அநாவசிய சடங்குகள், எத்தனை செலவு !' என்றான் கண்கள்விரித்து.

'கமான் பாலா, வெறும் காசுக்கணக்கு பார்க்காதீங்க, கல்யாணம்ங்கறது திருவிழா மாதிரி, ஒரு நல்ல விஷயம் நடக்குதுங்கற சந்தோஷத்தை வெளிப்படுத்தறோம், மத்தவங்களோட பகிர்ந்துக்கறோம், இந்த ரெண்டு நாள் சந்தோஷம் அந்த பையனுக்கும், பொண்ணுக்கும், அவங்க அப்பா, அம்மாவுக்கும் வாழ்நாள் முழுக்க மனசில நிறைஞ்சிருக்கும், இல்லையா ?'

அவன் இப்போது புரியாமல் பார்த்தான், 'சந்தோஷம்ங்கறது லட்சக்கணக்கில செலவு பண்றதிலதான் இருக்கா ப்ரியா ?'

'நான் அப்படி சொல்லலை, எல்லாரும் ஒரு இடத்தில கூடணும், புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கப்போற பையனையும், பொண்ணையும் வாழ்த்தணும், அப்படி வர்றவங்களை சும்மா விட்டுடமுடியுமா, அவங்களுக்கு நல்ல சாப்பாடு போடணும், முன்னபின்ன பார்த்தறியாத பையனுக்கும், பொண்ணுக்கும் திடீர்ன்னு கல்யாணம் பண்ணி வெச்சா அவங்க சட்டுன்னு பழகறதுக்கு சிரமப்படுவாங்க இல்லையா ? அதனால நலங்கு, அது, இதுன்னு அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு இயல்பான பழக்கத்தை உண்டாக்கறதுக்கு சில விஷயங்கள், இப்படி ஒவ்வொரு சடங்குக்கும்பின்னால ஒரு அழுத்தமான சமூகக் காரணம் இருக்கு பாலா' என்றாள், அவன் சிரித்து, 'பரவாயில்லை, நல்லா பேசறீங்க' என்று கிண்டலாய்ச் சொன்னதும், அவளும், 'அதை வக்கீல் நீங்க சொல்றீங்களா' என்று மூக்குடைத்தாள்.

'ஓகே, கல்யாணத்தில இத்தனை சம்பிரதாயம் இருக்குங்கறதை வேணும்ன்னா ஒரு மாதிரியா ஒத்துக்கலாம், ஆனா அதுக்காக இத்தனை செலவு எதுக்கு ? ஒரு கோயில்லயோ, அவங்கவங்க வீட்டிலயோ வெச்சு சிம்பிளா இதையெல்லாம் செஞ்சுடமுடியாதா ?' 'பண்ணலாம்தான், ஆனா இப்படிப் பண்றதை எப்படி நீங்க தப்புன்னு சொல்லலாம் ? பணம் இருக்கறவங்க, க்ராண்டா பண்ணனும்ன்னு ஆசை இருக்கறவங்க பண்றாங்க'

'எக்ஸாக்ட்லி, காசு இருக்கறவங்க எது வேணும்ன்னாலும் பண்ணலாம், அதைப்பாத்து எல்லாரும் அப்படியே செய்யணும்ன்னு எதிர்பார்க்கிறது தப்பு, உதாரணமா எங்க பெரியப்பாவையே எடுத்துக்கோங்க, அவரால இத்தனை ஆடம்பரமா கல்யாணம் பண்ணமுடியும், இதுக்கு மேலயும் முடியும், ஆனா எங்க அப்பாவால அவ்வளவு முடியாது, ஸோ, என் தங்கை கல்யாணம் ஸிம்பிளாத்தான் இருக்கும், எங்களால முடிஞ்ச அளவுதான் செய்வோம், நீங்க இந்த கல்யாணத்தைப் பார்த்துட்டு, அங்க வந்து 'கல்யாணம் சுமார்தான்'னு சொன்னா, அதை என்னால ஏத்துக்கமுடியாது' அவன் சொல்லிமுடிப்பதற்குள் அவள், 'நான் அப்படியெல்லாம் நினைக்கிறவ இல்லை' என்றாள்.

அவன் உடனே, 'ஐயாம் ஸாரி, நான் உங்களை சொல்லலை, பொதுவா சொன்னேன்' என்றான், இருவரும் காலியான சாப்பாட்டு மேசைகளிடையே நடந்துகொண்டிருந்தார்கள், இனி மதிய சாப்பாட்டுக்குதான் கூட்டம் வரும். வந்திருந்த கூட்டம் பாதி காலியாகியிருந்தது, மீதி கூடத்தில் குட்டிக்குட்டியாய் வட்டமேசையில்லா மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தது.

'பாலா, முன்னெல்லாம் கல்யாணம் நாலு நாள், அஞ்சுநாள் நடக்குமாம், இப்போ இருக்கிறதைவிட அதிகமா இன்னும் என்னென்னவோ சடங்குகளெல்லாம் இருந்திருக்குன்னு பழைய புத்தகங்களிலே படிச்சிருக்கேன், கொஞ்சம் கொஞ்சமா கால ஓட்டத்தில தேவையில்லாத சடங்குகள் குறைஞ்சுட்டே வந்து இப்போ ரெண்டு நாள், ஒரு நாள் கல்யாணம்-ன்னு வந்து நிக்கறோம்' அவள் எல்லா கோபங்களும் மறந்தவளாய் பேசிக்கொண்டிருந்தாள்.

'நீங்களே ஒத்துக்கிட்டீங்க, அஞ்சு ரெண்டானமாதிரி, ரெண்டு, இன்னும் குறைஞ்சு ஒண்ணுக்கும்கீழே போக எவ்ளோ நாள் ஆகும் ?' அவளை மடக்கிவிட்ட திருப்தியுடன் சொன்னான்.

'என்ன சொல்றீங்க ?'

'நீங்க சொன்ன அதே காலஓட்டத்தில இப்போ மீதமிருக்கிற சடங்கெல்லாமும் தேவையில்லை-ன்னு ஆயிடும், நம்ம பேரன், பேத்தியெல்லாம் கல்யாணத்துக்கு பத்து நிமிஷத்துக்குமேலே செலவு பண்ணமாட்டாங்கன்னு சொல்றேன்'

ப்ரியாவுக்கு மீண்டும் கோபம் வந்துவிட்டது, 'நீங்க வாதத்துக்காக பேசறீங்க !' என்றாள் சட்டென்று, புதிதாய் தாவணி கட்டிய பெண் ஒன்று அவளுக்குப் பின்னால் வந்து ஒளிந்துகொள்ளப்பார்த்தது, 'அங்கே ஒளிஞ்சுக்கோ' என்று ஆளுயர வாட்டர்கூலரைக் காட்டி குழந்தைக்குரலில் சொன்னாள் ப்ரியா.

'அப்படி இல்லை ப்ரியா, நிஜமாவே இந்த கல்யாண சடங்கு, செலவெல்லாம் அநாவசியம்ங்கறது என் கட்சி, யாருக்கு இதால பிரயோஜனம், சொல்லுங்க' என்றான்.

'சினிமா மாதிரிதான் பாலா, அது ஒரு பொழுதுபோக்கு, அவ்ளோதான், மேலோட்டமா பார்த்தா அதனால யாருக்கும் பெரிசா உபயோகமே இல்லாததுபோல தோணும், பட், சினிமாவால பிழைக்கிற குடும்பங்கள் லட்சக்கணக்கில இருக்கு, அதேபோலதான் கல்யாணமும் - இந்த டேபிள் துடைக்கிற பையன்ல ஆரம்பிச்சு, கல்யாண கான்ட்ராக்டர் வரைக்கும் எத்தனையோபேர் இந்தமாதிரி கல்யாணங்களாலயே வாழறாங்க, பணம் இருக்கிறவங்ககிட்டே சும்மாபோய் ஏழைங்களுக்கு தானம் பண்ணுன்னா துரத்தியடிச்சிடுவாங்க, அதேசமயத்தில இப்படி ஒரு கல்யாணம் பண்ணும்போது அவங்களுக்கே தெரியாம அந்தப் பணம் தேவை இருக்கிறவங்களைப் போய்ச்சேருது, அவங்களுக்கு கல்யாண சந்தோஷம், இவங்களுக்கு வாழ்க்கையே கல்யாணத்திலேதான்'

பாலா மெல்லமாய் கைதட்டினான், 'பிரமாதமா பேசறீங்க, என்னையே மடக்கிட்டீங்களே, இனிமே உங்களை வக்கீலம்மா-ன்னுதான் கூப்பிடப்போறேன்' என்று சொன்னதும் அவளுக்கு ஏனோ கன்னம் சிவந்துபோனது. அவன் தொடர்ந்து, 'கல்யாணம்பத்தி இவ்ளோ எக்ஸைட்டடா பேசறீங்களே, உங்க கல்யாணம் எப்போ ?' என்றான் குறும்பாய்.

அவள் சொல்லப்போகும் பதிலில் அவன் என்ன செய்தி எதிர்பார்க்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. கொஞ்சமே யோசித்து, எங்கோ பார்த்துக்கொண்டு, 'வீட்டில பார்த்துட்டிருக்காங்க, இன்னும் சரியா வரன் அமையலை' என்றாள் சாதாரணமாய்.

திணறிநிற்பது இப்போது அவன்முறை. ப்ரியாவின் அப்பா இன்னும் அந்த அடாசு ·போட்டோவை மாற்றவில்லைபோல, என்று சந்தோஷமாய் நினைத்துக்கொண்டான். ஒளிந்துவிளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளின் கள்ளமில்லாத சந்தோஷத்தை புன்னகையோடு ரசித்துக்கொண்டிருந்த ப்ரியாவின் கூந்தலோர ரோஜாவை ஒருமுறை பார்த்துவிட்டு தன்னிரக்கத்தோடு யோசித்தான் - எனக்கு இன்னொரு வாய்ப்பு உண்டா பெண்ணே ?

அதேநேரத்தில் ப்ரியா ஓரக்கண்ணால் அவனைப்பார்த்தாள், 'சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடேன்' என்றது அவள் பார்வை.

'அம்பி, இந்த முந்திரிப்பருப்பு டின்னை எங்கே வெச்சே ?' என்ற சமையல்காரரின் அதட்டலில் இருவரும் கலைந்தார்கள், பேசிக்கொள்ளாமலேயே ஆளுக்கு ஒரு திசையில் போனார்கள், 'அடுத்தமுறை நிச்சயமாய்' என்றது இரண்டு மனதும்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 8 ]

மதிய சாப்பாட்டுக்கும் நல்ல கூட்டம்தான். பாலாவும், ப்ரியாவும் எவர்சில்வர் வாளிகளுடன் பெரும்பாலும் எதிரெதிர் வரிசைகளில் பரிமாறிக்கொண்டிருந்தார்கள், உள்ளங்கையில் வாளியின் பிடி அழுத்தியதால் ரேகைகளுக்குப் போட்டியாய் முளைத்திருந்த சிவப்புக்கோடுகளும், அப்பளம் நொறுக்குகிற அதிகப்படி சப்தமும், எதிர் இலைக்கு எலுமிச்சை ரசம் கேட்கிற அதட்டல் குரல்களும் அவர்களின் மெளனபாஷையைத் தடைசெய்யவில்லை. ஜாங்கிரியின்மேல் தயிர்ப்பச்சடியை ஊற்றியதற்காக ஒரு மாமியிடம் ஏகத்துக்குப் பாட்டு வாங்கினான் பாலா, ப்ரியா அதைப்பார்த்ததும் நமுட்டுச்சிரித்துக்கொண்டே பேசாமல் கடந்துபோய்விட்டாள். அடுத்தமுறை இருவரும் ஒரே நேரத்தில் சமையலுள்ளே போனபோது அவன் காதோரமாய் வந்து தாழ்ந்த குரலில், 'சில விஷயங்களெல்லாம் பொம்பளைங்கதான் செய்யணும்ன்னு இருக்கு' என்றாள் கிண்டலாக. பாலா அசராமல் திருப்பியடித்தான், 'நீங்களா அப்படி நினைச்சுகிட்டா ஆச்சா ? கொஞ்சம் ஹால்ல எட்டிப் பாருங்க, பரிமாறிக்கிட்டிருக்கறவங்க எல்லாரும் ஆம்பளைங்க' அவள் திரும்பிப்பார்க்காமலே சொன்னாள், 'ஆனா அவங்க யாரும் ஜாங்கிரியில தயிர்ப்பச்சடி ஊத்தலையே !', சிரிப்பு இன்னும் பொங்கிக்கொண்டிருந்தது என்றாலும், யாராவது இந்த ரகசியப் பேச்சைக் கேட்டுவிடப்போகிறார்கள் என்பதைப்போல அவளுடைய கண்கள் அங்கும் இங்கும் மருண்டு திரிந்ததைப்பார்க்க வேடிக்கையாய் இருந்தது.

அவனுக்கு சட்டென்று கோபம்வந்து, 'நானும் ..' என்று ஏதோ சொல்லவந்து, வாய்மூடிக்கொண்டான். அவளும் அதற்குப்பிறகு பேசவில்லை. அவள் கிளம்பி வெளியேறினபிறகு, கோட்டை அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாயாசத்தைப் பார்த்தபடி ஒருநிமிடம்போல் நின்றிருந்தான், பிறகு ஹாலின் மூலையில் தெரிகிற அவளின் மலர்ந்த முகத்தைக்கண்டு மெல்லமாய் தனக்குள், 'செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு கிண்டல் என்ன வேண்டிக்கிடக்கு ? போடி !' என்று சொல்லிச் சிரித்துக்கொண்டான். ஆண்கள் வெட்கப்படுவதில்லை என்று யார் சொன்னது ?

அதுவரை பரிமாறிய எல்லோரும் கடைசி பந்தியில் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பாலாவும், ப்ரியாவும் அருகருகே அமர்ந்திருந்தபோதும் ரொம்ப நேரத்துக்கு ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை என்று நினைத்துக்கொண்டு ப்ரியா, ஜாங்கிரியின்மேல் கொஞ்சம் தயிர்ப்பச்சடி ஊற்றி அதைத் தொட்டு சாப்பிட்டுவிட்டு, 'பரவாயில்லை, இந்த டேஸ்ட்டும் நல்லாதான் இருக்கு' என்றாள். அவன் புரியாமல் அவள் இலையைப் பார்த்துவிட்டு வாய்விட்டு சிரித்தான். எல்லாரும் திரும்பிப்பார்த்ததும் சட்டென்று தலையைக்குனிந்துகொண்டான், 'என்னை மாட்டிவிடறதே உங்களுக்கு வேலையாப் போச்சு !' என்றான் ரகசியக் குரலில் கோபமில்லாமல்.

'நீங்க மட்டும் என்னவாம் ?'

'இதென்ன வம்பாப்போச்சு, நான் என்ன பண்ணினேன் ?' புரியாமல் கேட்டேன்.

'நீங்க ஒண்ணும் பண்ணலை, வேற யாரோதான் எனக்கு ·ப்ளூட் வாசிச்சுக் காட்டறேன்னு சொன்னாங்க, அவங்களைத்தான் காணவே காணோம்' என்று வானத்தில் தேடுவதுபோல் பாவனை செய்தவளைத் தலையில் குட்டவேண்டும்என ஆசையாய் இருந்ததை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, 'உங்களை ஏமாத்தமுடியுமா ? ·ப்ளூட் கொண்டுவந்திருக்கேன்' என்றான்.

'வாவ், எங்கே எங்கே ?' அவள் குரல் தானாய் உயர்ந்தது. மீண்டும் ஓரிருவர் திரும்பிப்பார்த்தார்கள். அவன் குரல்தாழ்த்தி, 'வண்டியில இருக்கு, அப்புறம் எடுத்துட்டு வரேன் !' என்றான்.

'இப்பவே போலாம்ங்க, ப்ளீஸ்' கெஞ்சலும், கொஞ்சலும், பிடிவாதமும் சரிவிகிதமாய்க் கலந்திருந்தது அவள் குரலில்.

'சாப்பிட்டு முடிச்சதும் போலாமே'

வாயிலிருந்த தயிர் சாதத்தை உடனே விழுங்கிவிட்டு ஒரு டம்ளர் நிறைய தண்நீர் குடித்தாள், எழுந்துகொண்டு, 'நான் சாப்பிட்டாச்சு, நீங்களும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு வாங்க, போலாம் !' என்று கைகழுவப் போனவளை அவன் மெளனமாய் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டேஇருந்துவிட்டு எழுந்தான்.

நேற்று தன்னந்தனியாய் நின்றிருந்த அவனுடைய வாகனத்தை இன்று கூட்டத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பெட்டியில் பூட்டிவைத்திருந்த புல்லாங்குழலை எடுத்து சட்டைக்குள் ஒளித்துவைக்கப்போனதை ப்ரியா வாங்கிக்கொண்டாள், 'நானே எடுத்துட்டு வரேனே !' என்று அனுமதி எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள், 'எனக்கு ரொம்பநாளா கத்துக்கணும்ன்னு ஆசை' என்று வாஞ்சையாய் அதை ஒருமுறை தடவிக்கொடுத்தாள்.

'கத்துக்கலாம், ரொம்ப ரொம்ப சுலபம்' என்றான் அவளுடைய கைவிரல்களைப்பார்த்தபடி.

'நல்லா கத்துக்கிட்டவங்க, நீங்க அப்படிதான் சொல்வீங்க' என்று ஏதோ குறைபட்டவள்போல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டாள். 'ஐயோ, அப்படியெல்லாம் என்னைத்தூக்கி உயரத்தில வைக்காதீங்க, ஏதோ சுமாரா வாசிப்பேன், அவ்ளோதான்' என்று அவன் சரணடைந்த பாவனையில் கைகள் இரண்டையும் உயர்த்திக்கொண்டான், அதற்கும் 'ரொம்பதான் தன்னடக்கம்' என்று பழித்துக்காட்டினாள் அவள்.

படிகளில் ஏறியபோது கண்களில் ஆர்வம் ததும்பி வழிய குழலின் துளைகளில் அவள் கைவிரல்களை மாற்றிமாற்றி வைத்து சந்தோஷித்தாள், 'வாசிச்சுதான் பாருங்களேன்'

'ஐயோ, வாசிக்கறதெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்க, எனக்கு ஊதத்தான் வரும்' என்று அடுப்பில் காற்று ஊதுகிறவள்போல கைவிரல்களால் அழகாக அபிநயித்தாள், 'நாட்டிய தாரகை-ன்னு அடிக்கடி ஞாபகப்படுத்திட்டே இருக்கீங்க !' என்று அவன் சொன்னதும், 'போங்க' என்று வெட்கமாய் அவனை அடிப்பதுபோல் செய்தாள், அப்போதும் புல்லாங்குழல் அவளின் இன்னொரு கையில் பத்திரமான மரியாதையோடு இருந்தது.

நேற்று இரவு இருந்த அதே மொட்டைமாடி, டிசம்பர் வெய்யில் அதை செல்லமாய் வருடிக்கொண்டிருந்தது, நிழல் தேவைப்படவில்லை. கைப்பிடிச்சுவரிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் சென்று நின்றுகொண்டார்கள்.

சினிமா பாட்டு வாசித்தால் போதும் என்று சொல்லிவிட்டாள் ப்ரியா, 'எனக்கு அதுதான் ஈஸியா புரியுது' என்றுசொல்லிவிட்டு, சற்றுப்பொறுத்து அவன் முகபாவத்திலிருந்து எதுவும் படிக்கமுடியாமல், 'தப்பா ?' என்றாள்.

'நிச்சயமா இல்லை, அதுவும் ஒரு இசை வடிவம்தானே ? நீங்க தப்புன்னா, தமிழ்நாட்ல கோடிபேர் தப்பு'

'இருந்தாலும் கர்நாடக சங்கீதக்காரங்களுக்கு சினிமா ம்யூசிக் பிடிக்கறதில்லை பாலா, கேவலமா நினைக்கறாங்க' என்றாள் அவள். முகம் சுருங்கிப்போயிருந்தது. 'போன தடவை கோயம்பத்தூர்ல ஒரு நாட்டிய நாடகத்துக்காக பின்னணி இசையா ஒரு சினிமா பாட்டை யூஸ் பண்ணி செஞ்சோம், ஒன்றரை மணி நேர நாட்டியத்தில அஞ்சு நிமிஷம்தான் சினிமா பாட்டு, அதுவும் பொருத்தமான பாட்டுதான், ஆனா அடுத்தநாள் எல்லா பேப்பர்லயும் கிழிகிழின்னு கிழிச்சுட்டாங்க, பரதநாட்டியத்தோட புனிதத்தைக் கெடுத்து தெருக்கூத்து லெவலுக்கு கொண்டுவந்துட்டோமாம் நாங்க', அவள் குரலில் இருந்தது வெறுப்பா, தன்னிரக்கமா சொல்ல முடியவில்லை.

'தெருக்கூத்தும் ஒரு பாரம்பரியமான நல்ல கலைதானே ப்ரியா ? நான் பண்ற கலை உசத்தி, நீ பண்றது மட்டம்ன்னு யார் சொல்லமுடியும் ? அவங்கவங்களுக்குத் தெரிஞ்சதைப் பண்றோம், பிடிச்சிருந்தா ரசிக்கலாம், பிடிக்கலையா, வேற யாராவது ரசிப்பாங்க-ன்னு புரிஞ்சுக்கற பக்குவம் வேணும்' என்றான் அவன். அவள் சமாதானமானதாய் தெரியவில்லை. 'அது எதுக்கு இப்போ, நீங்க சினிமா பாட்டு வாசிப்பீங்கதானே ?' என்றாள் சட்டென்று. பதிலுக்காக ஆர்வமாய் அவன் முகத்தையே பார்த்தாள், அவன் ஏதும் பேசாமல் புல்லாங்குழல் எடுத்து, 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' என வாசிக்கலானான்.

மொட்டைமாடியில் சாலையின் வாகன இரைச்சல்களுக்கிடையில், ஒரே ஒரு பார்வையாளருக்காக அரைமணிநேரத்திற்கும்மேல் அவனுடைய கச்சேரி நடந்தது.

ஏழெட்டு பாட்டுகள் வாசித்திருப்பான், அடுத்த பாடலுக்காக விட்ட இடைவெளியில் ப்ரியா நெகிழ்ச்சியாய் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு 'எக்ஸலன்ட் பாலா' என்று கைகுலுக்கினாள். அந்த இயல்பான ஸ்பரிசத்தையே பெரிய பாராட்டாக எடுத்துக்கொண்டு அவன் 'தேங்க்ஸ்' என்றான் எல்லாவற்றுக்குமாய்.

பேசிக்கொண்டிருக்கும்போதே ராகினி அவனைத்தேடிக்கொண்டு மாடிக்கு வந்துவிட்டாள், 'டேய் அண்ணா, உன்னை எங்கேயெல்லாம் தேடறது ? தலைக்குமேலே வேலை இருக்குன்னு பெரியப்பா கத்திகிட்டிருக்கார், நீ என்னடான்னா இங்க ஜாலியா ·ப்ளூட் வாசிச்சிட்டிருக்கே, கொஞ்சமாவது ..', ப்ரியாவைப்பார்த்ததும் அவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டாள். 'ஹாய்'

அவன் அகப்பட்ட திருடனைப்போல விழித்தான், 'உனக்கு இவங்களை முன்னாலேயே தெரியுமா ?' என்றான் திகைத்து.

'நல்லாத் தெரியுமே !' என்று அவள் ப்ரியாவைப்பார்த்து புன்னகைத்தாள், 'டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ' என்றாள்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லை !' என்று தலையசைத்துவிட்டு, பாலாவிடம், 'நேத்து உங்க சிஸ்டரைப்பார்த்ததுமே நானா போய் அறிமுகப்படுத்திகிட்டேன்' என்றாள். 'உங்க அண்ணன் பிரமாதமா வாசிக்கறார்' என்றாள் ராகினியிடம்.

'அது சரி, உங்களையும் ஏமாத்திட்டானா ? எல்லாம் திருட்டுவேலைங்க, நாலே நாலு பாட்டைக் கத்துக்கிட்டு பெரிய வித்வான்மாதிரி ஊரையே ஏமாத்திட்டிருக்கான்' என்றுசொல்லிவிட்டு ஓடப்பார்த்தாள். அவள் இப்படிப் பேசுகிறபோதெல்லாம் பொய்க்கோபத்தோடு அவளை அடிக்க ஓடுகிற பாலா ஏனோ இந்தமுறை அவள் சொன்னதை மறுக்கக்கூட இல்லை. அவன் பிரம்மை பிடித்தவன்போல நிற்பதைப்பார்த்துவிட்டு ப்ரியாவும் அவளோடு சேர்ந்துசிரித்தாள், பிறகு அவனிடம், 'என்ன பாலா, கோவிச்சுகிட்டீங்களா ?' என்றாள்.

'நீங்க வேற, இவ சொல்றதையெல்லாம் யார் மதிக்கறது ? பொறாமை பிடிச்ச ஜென்மம்' என்று அவள் தலையில் குட்டினான். அவள் வலிக்காமல் அலறிவிட்டு, 'நம்ம சண்டை இருக்கட்டும், சீக்கிரம் கீழே வந்துசேரு' என்றாள்.

ப்ரியாவிடமும் சொல்லிவிட்டு படிகள்வரை நடந்தவள், திடீரென்று நினைத்துக்கொண்டவள்போல திரும்பி, '·ப்ரென்ட்ஸ்ன்னு சொல்றீங்க, ஆனா ரெண்டுபேரும் வாங்க, போங்க-ன்னு பேசிக்கறீங்களே !' என்று கேட்டுவிட்டு பதில் எதிர்பார்க்காமல் படிகளில் மறைந்தாள்.

அவள் போய் ரொம்பநேரமாகியும் அவள்கேட்ட கேள்வி இருவர் மனதிலும் பதிலைத்தேடி அலைந்துகொண்டிருந்தது. சில நிமிடங்கள்பொறுத்து இருவருக்கும் இடையே தரையில் பரவியிருந்த இரும்புக் குழாயை வெறித்துப்பார்த்தபடி அவன் சொன்னான், 'உங்ககிட்டே நான் ஒரு விஷயம் பேசணுமே'.

'நானும்தான்' என்றாள் அவள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 9 ]

மண்டபத்தை மாலை ஏழு மணிக்குள் காலி செய்ய வேண்டும், ஏகப்பட்ட வேலைகள் காத்திருந்தது. கால்மனதோடுதான் இருவரும் இறங்கிவந்தார்கள். கீழே வந்தபிறகு ஒருவார்த்தையும் பேசிக்கொள்ள முடியவில்லை, கல்யாண களேபரங்களெல்லாம் முடிந்த போதையிலிருந்து மெல்ல எல்லோரும் இறங்கிவந்திருக்க, இந்த மூட்டைகட்டுகிற வேலையெல்லாம் எப்போதுதான் முடியுமோ என்பதுபோன்ற சலிப்புடன்தான் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. பாத்திரங்களும், இன்னும் விலையுயர்ந்த சாமான்களும் ஒரு வண்டியில்போக, இரண்டாவது வண்டியில் மற்ற அமுக்கிய மூட்டைகள் பயணமாகின, மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஏற்கெனவே அலங்கார காரில் பெண்வீட்டுக்கு அனுப்பியாகிவிட்டது. கான்ட்ராக்ட் முறை என்பதால் எல்லாருக்கும் தனித்தனியாய் பணம் செட்டில் பண்ணுகிற தொல்லை ஒன்று இல்லை, ஆனால் சமையலறையில் இலை எடுத்துவீசின ஆயா வரையில் எல்லாரும் தலையைச் சொறிந்துகொண்டு மேல்வரும்படி எதிர்பார்த்தார்கள். எல்லாரையும் ஒருவழியாய் சமாளித்து ஏழே கால் மணிக்கு மண்டபத்தின் சாவி மேனேஜரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எல்லோரும் ஆளுக்கு ஒரு பையோ, பாத்திரமோ தூக்கிக்கொண்டு படிகளில் இறங்கும்போது பாலாவின் பெரியப்பா ப்ரியாவிடம், 'வீட்டுக்குத்தானே ப்ரியா ?' என்றார் கார்சாவியைச் சுழற்றியபடி.

'இல்லை அங்கிள், நான் இப்படியே திருப்பூர் கிளம்பறேன்'

'என்னம்மா அவசரம், நைட் தங்கிட்டு காலைல போலாமே' என்றார் அவர் அக்கறையாய்.

'இல்லை அங்கிள், நாளைக்குக் காலையில ஒரு முக்கியமான கம்பெனி மீட்டிங் இருக்கு, நானும், அண்ணனும் அவசியம் அட்டெண்ட் பண்ணணும்ன்னு அப்பா சொல்லியிருக்கார்' என்றாள்.

'சரிம்மா, உன் விருப்பம்போல செய்' என்று சொல்லிவிட்டு இரண்டுபடி இறங்கியவர் திடீரென்று நினைத்துக்கொண்டவர்போல, 'இருட்டிடுச்சேம்மா, இங்கேயிருந்து பஸ் ஸ்டேன்ட் எப்படிப் போவே ?' என்றார்.

'நான் ஆட்டோ பிடிச்சு போய்டுவேன் அங்கிள்'

'நோ நோ, என்கூட கார்ல வந்துடு, நான் ட்ராப் பண்றேன்' என்றார் கண்டிப்பாய்.

'இல்லை அங்கிள், உங்களுக்கு எதுக்கு சிரமம் ?'

அவர் ஏதோ பேசவந்து சட்டென்று நிறுத்திக்கொண்டு, 'அப்போ ஒண்ணு பண்ணு, பாலா அந்த பக்கமாதான் வீட்டுக்குப் போவான், அவனோட போயிடேன்' என்றார், ப்ரியா பதில் சொல்வதற்குள் அவரே, 'டேய் வக்கீல், வண்டி இருக்குதானே ?' என்றார்.

'இருக்கு பெரியப்பா !' என்றான் அவன் அவசரமாய். ப்ரியா தனியாய்ப் போவதானால் ஆட்டோவை விரட்டிக்கொண்டே போய் அவளை பஸ் ஸ்டேன்டில் பிடித்துவிடுவதாய் உத்தேசித்திருந்தான் அவன், இப்போது அலைச்சல் மிச்சம். பெரியப்பாக்கள் வாழ்க !

ப்ரியாவின் கையில் இருந்த பாத்திரத்தை யாரோ வாங்கிக்கொண்டார்கள், பாலா இரண்டு பெரிய ஜமுக்காளங்கள் வைத்திருந்தான், அதை ஒரு மூட்டைதாரியின் தலையில் கூடுதலாய் சுமத்திவிட்டு அந்த சிறு கூட்டத்திலிருந்து இருவரும் விலகி தூரே நின்றிருந்த வண்டியை நோக்கி நடந்தார்கள், முதுகுக்குப்பின்னால் எல்லோரும் அவர்களையே பார்ப்பதுபோல் ஒரு குறுகுறுப்பு உணர்ச்சி, இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப்பார்த்தபோது அப்படி யாரும் இல்லை. அரண்டவன் மனதுதான் !

வண்டியைக்கிளப்பியபிறகு ப்ரியா ஒருபக்கமாய் ஏறி அமர்ந்து, தோளில் இருந்த பையை முன்னால் கொண்டுவந்து இருவருக்கும் இடையில் வைத்துக்கொண்டாள், 'கொஞ்சம் மெதுவா போங்க, எனக்கு பயம்' என்றாள்.

'கவலைப்படாதீங்க, நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன்' என்று ஒருமுறை ஆக்ஸிலேட்டரை முறுக்கி சப்தம் செய்தான் வேண்டுமென்றே. 'சொன்னா கேளுங்க பாலா, ப்ளீஸ்',

'டோன்ட் ஒர்ரி', பைக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தூரே ஆயாசமாய் நடந்துகொண்டிருந்தவர்கள் கறுப்புத் தீவுகளாய் தென்பட்டார்கள். ஒரு முழு வட்டமடித்து எதிர்திசையிலிருந்த கேட்டை நோக்கிவிரைந்தான்.

வெளியே வந்து சாலையைத்தொட்டதும் வண்டியை சாலையோரமாய் நிறுத்தி, 'எங்கே ?' என்றான்.

அவள் புரியாமல் பார்த்து, 'பஸ் ஸ்டேண்டுக்கு' என்றாள்.

ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'இன்னும் டைம் இருக்கு, டின்னர் சாப்டுட்டுக் கிளம்பலாமே' என்றான், சற்றுப்பொறுத்து கெஞ்சலாய் ஒரு 'ப்ளீஸ்' சேர்த்தான்.

'இல்லை பாலா, இன்னும் பஸ் டிக்கெட்டே வாங்கலை, நேரா ஏதாவது ஒரு டிராவல்ஸ் ஆ·பீசுக்குப்போய் டிக்கெட் வாங்கிக்கலாம், அதுக்கப்புறம் எந்த கவலையும் இல்லை, பஸ்ஸெல்லாம் பத்து மணிக்கு மேலேதான் கிளம்பும், டென்ஷன் இல்லாமல் நிம்மதியா டின்னர் சாப்டுகிட்டே பேசலாம் !' என்றாள் அவள் அவனைப்புரிந்துகொண்ட தோரணையில்.

அவன் முகத்தில் சின்னதாய் ஒரு திருப்திப்புன்னகை மலர்ந்தது, 'அப்போ கிளம்பலாம்'

'யெஸ், ஆனா நீங்க மெதுவா போகணும்' கண்டிப்பாய் சொன்னாள்.

'ஆமாம், இனிமே நிதானமாவே போறதுன்னு இப்போ முடிவு பண்ணியிருக்கேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

இருபது நிமிடத்துக்குள் அந்த டிராவல்ஸ் கட்டிடம் வந்துவிட்டது, நட்சத்திர ஹோட்டல்மாதிரி வாசல்முழுக்க பளபளவென்று அலங்கரித்திருக்க, கதவில் ஒட்டிய புகைப்படத்தில் மூன்று சொகுசு பஸ்கள் எதிரும்புதிருமாய் நின்று முறைத்தன. படிகளில் ஏறும்போதே அவள் கால்களில் உற்சாகம் தெரிந்தது, 'காலேஜ்ல படிக்கும்போதே எப்பவும் இவங்க பஸ்லதான் போவேன், பிரமாதமா மெயின்டெய்ன் பண்ணுவாங்க, பயணக்களைப்பே தெரியாது' என்று சொல்லிவிட்டு சற்றே குரலை இறக்கி, 'இதே ஏரியாவில இன்னும் ஏழெட்டு டிராவல்ஸ் இருக்கு, ஒண்ணும் உருப்படியில்லை, எட்டு மணி நேரத்துக்குள்ள எலும்பையெல்லாம் தனித்தனியா கழட்டி பையில போட்டுக் கொடுத்துடும்' என்றாள் தொடர்ந்து.

உள்ளே நுழைந்ததும் ஏஸி குளிர் அவர்களைச் சூழ்ந்து கொண்டது, முன் அறையில் ஒரு அரும்புமீசையன் கம்ப்யூட்டரில் செங்கல்கட்டி விளையாடிக்கொண்டிருந்தவன் இவர்களைப்பார்த்ததும், 'வாங்க சார், வாங்க மேடம்' என்று நாற்காலியில் ஸ்டைலாக சுழன்று திரும்பினான். 'திருப்பூருக்கு ஒரு டிக்கெட் வேணுமே, இருக்கா ?' அவள் கேட்டுமுடிப்பதற்குள், 'ஸாரி மேடம், முகூர்த்த டைம், திருப்பூர்ன்னு இல்லை, எல்லா பஸ்ஸ¤மே ·புல்' என்றான்.

'ஓகே' என்று ஏமாற்ற முகத்தோடு திரும்பிவிட்டாள் ப்ரியா.

அதுவரை சுவரில் ஒட்டியிருந்த வண்ண போஸ்டர்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்த பாலா, 'ஒரு நிமிஷம் இங்கே உட்காருங்க ப்ரியா' என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் சென்று உட்கார்ந்தான், 'உங்களை நம்பிவந்திருக்கோம், டிக்கெட் இல்லைன்னு சொன்னா எப்படி சார் ?' என்றான், அவன் பதில் சொல்வதற்கே வாய்ப்புத் தராமல், 'லேடீஸ், நைட்ல தனியா டிராவல் பண்றாங்க, நீங்க இல்லைன்னு சொல்லிட்டா ரொம்ப சிரமம், கொஞ்சம் நல்லா பாருங்க, ஒரு டிக்கெட் எங்கயாவது இருக்கும் !' என்றான் சிரித்து.

அவன் ப்ரியாவை ஒருமுறை ஏறிட்டுப்பார்த்துவிட்டு தாழ்ந்தகுரலில் ஏதோ சொன்னான், பாலா சம்மதமாய் தலையாட்டுவது தெரிந்தது. ப்ரியா எங்கோயோ பார்ப்பதுபோல முகம் திருப்பிக்கொண்டாள். அந்தப்பையனும், பாலாவும் ஒரு சிறிய கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார்கள், இரண்டு நிமிடத்தில் டிக்கெட்டுடன் வந்துவிட்டான் பாலா.

'ரொம்ப தேங்க்ஸ் சார்' என்றதும் அவன் பல்லிளித்து, 'பரவாயில்லை மேடம்' என்றான்.

படிகளில் இறங்கும்போது அவளிடம் டிக்கெட்டைக்கொடுத்து, 'பத்தரை மணிக்குதான் பஸ்' என்றான். அவள் பொறுமையாய் அதை வாங்கி கைப்பையில் வைத்துக்கொண்டு, 'எவ்ளோ கொடுத்தீங்க ?' என்றாள்.

'அதில போட்டிருக்கே, இருநூத்தம்பது' என்றான்.

'அது சரி, மேலே எவ்ளோ கொடுத்தீங்க' என்று கேட்டுவிட்டு, அவனை நேராய் நிமிர்ந்துபார்த்து, 'கொடுத்தீங்கதானே ? பொய் சொல்லக்கூடாது' என்றாள் கோபமாய்.

'அச்சச்சோ, இதென்ன கலாட்டா ? உங்களுக்கு லஞ்சம் கொடுத்தா பிடிக்காதோ ? இந்தியன் தாத்தா மாதிரி இப்போ என்னை கொன்னுடப் போறீங்களா ?' என்று கேட்டு ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் பின்னியதுபோல்செய்து, தன் கழுத்திலேயே அவன் குத்திக்கொண்டதும் அவள் சிரித்துவிட்டாள், 'அப்படிக் கேட்கலை நான், எவ்ளோ கொடுத்தீங்க-ன்னு தெரிஞ்சா அதை திருப்பிக் கொடுத்துடலாமே, அதுக்காகதான் கேட்டேன்' என்று பையிலிருந்து சின்னதாய் ஒரு வெல்வெட் மெழுகின பர்ஸ் எடுத்தாள்.

'அப்புறம் வாங்கிக்கறேனே ப்ரியா' என்றான் அவன் அவசரமாய்.

'அந்த கதையே வேண்டாம், எவ்ளோ சொல்லுங்க' என்று அவள் பணத்தை எண்ண ஆரம்பித்தாள்.

எவ்வளவோ மறுத்துப்பார்த்தும் விடாமல் அவன் பாக்கெட்டில் முந்நூறு ரூபாயை வைத்துவிட்டு, 'அடுத்தது, டின்னர்' என்றாள் சிரித்து.

'எங்கே ?'

'என்னைக்கேட்டா ? நீங்கதானே இந்த ஊர்க்காரர் ? உங்களுக்குதான் நல்ல ஹோட்டல் தெரியும்' என்றாள்.

சாலையைக்கடந்து எதிர்வரிசையில் இருந்த ஒரு சிறிய ஹோட்டலுக்குள் வந்தார்கள், உள்ளே அவ்வளவாய் வெளிச்சமில்லை ஒவ்வொரு மேசையிலும் இரண்டு மெழுகுவர்த்திகளும் ஒற்றை ரோஜாவும் வைத்திருந்தது. இருவரும் மூலையிலிருந்த தனிமை இருக்கைகளில் அமர்ந்தார்கள், ஒரு பக்கத்தில் சேருக்கு பதிலாக சின்னதாய் ஒரு ஊஞ்சல் கட்டிவிட்டிருந்தார்கள், ப்ரியாவுக்கு அது ரொம்பவும் பிடித்திருந்தது. மையத்தில் சின்னதாய் மேடை அமைத்து ஒரு கதர்சட்டை வயலின்காரர் ஒற்றை தபலா பக்கவாத்தியத்துடன் 'வசீகரா'வை தேனில் குழைத்துக்கொண்டிருந்தார்.

டை கட்டிய ஆஜானுபாகன் ஆர்டர் பெற்றுக்கொண்டு விலகியதும், பாலா சற்றும் தாமதியாமல், 'என்கிட்ட ஏதோ சொல்லணும்ன்னு சொன்னீங்களே, என்ன ?' என்றான்.

இருவருக்கும் இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பதுபோல் ஒரு உணர்வு. 'நீங்கதான் முதல்ல சொன்னீங்க' என்றாள் அவள். 'அதனால என்ன ? இப்போ நீங்க முதல்ல சொல்லுங்க, லேடீஸ் ·பர்ஸ்ட்' என்று முகத்தளவில் சிரித்தான்.

சொல்லிவிடலாமா ? அவள் இன்னமும் யோசித்துக்கொண்டே ஒரு வெள்ளரித்துண்டை எடுத்து மெல்லமாய் கடித்தாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 10 ]

பெரிய ஹோட்டல்களுக்கே உரிய இலக்கணத்தின்படி, எது ஆர்டர் செய்தாலும் இருபது நிமிடம் கழித்தே கொண்டுவந்தார்கள் - வெந்நீர் கேட்டால்கூட. சாப்பிட்டுமுடித்து ஐஸ்க்ரீம் சொல்லும்வரை இருவரும் அவ்வளவாய் பேசவே இல்லை. ஒரு வேகத்தில் பேச்சை ஆரம்பித்துவிட்டான் என்றாலும், பாலாவுக்கு அதன்பிறகு பேச்சைத் தொடர்கிற தைரியம் குறைந்துகொண்டே வந்தது. மணி பத்தை நெருங்கியிருந்தது.

'வெனிலா எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று சொல்லிவிட்டு ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீமை எடுத்து உதட்டில் பட்டும்படாமலும் வைத்து, கண்ணை மூடிக்கொண்டு அது கரைவதை அனுபவித்தாள் ப்ரியா. பாலா தட்டைப்பார்க்காமல் அவளின் சிறுபிள்ளை சந்தோஷத்தை சிலவிநாடி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான், 'ஒருமுறை யாரோ செய்த தப்பால் இவளைத் தவறவிட்டுவிட்டாயிற்று, இந்தமுறையும் என் தயக்கத்தாலேயே இவளை இழந்துவிடுவேனோ !' என்று யோசித்தபோது அவள் பாதி ஐஸ்க்ரீமை வேகமாய் காலி செய்துவிட்டு உதட்டோரம் வழிகிற வெள்ளைக்கோட்டை டிஷ்யூ காகிதம் கொண்டு ஒற்றியபடி, 'உங்க ஐஸ்க்ரீம் உருகிட்டு இருக்கு பாலா' என்றாள்.

'நானும்தான்' என்று சொல்லாமல் சட்டென்று, 'நீங்க இன்னும் சொல்லவந்ததை சொல்லலை' என்றான்.

'நீங்களும்தான் சொல்லலை' என்று இன்னொரு ஸ்பூன் வாயில் போட்டுக்கொண்டாள், போதாத மஞ்சள் வெளிச்சத்தில் பார்த்தபோது அவளுடைய கைகளும் நடுங்கிக்கொண்டிருப்பதுபோல ஒரு பிரம்மை. பாலா இன்னும் கொஞ்சம் தைரியம் சேர்த்து, 'நான்தான் சொல்லணுமா ?' அவள் பதில் சொல்லவில்லை, ஆனால் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், அந்த அரையிருட்டில் வார்த்தைகளுக்குத் திணறுபவள்போல தெரிந்தாள் அவள்.

இருவருக்கும் நடுவே மெழுகுவர்த்தியின் ஒளிச்சுடர் மெளனமாய் காற்று போகிற திசையிலெல்லாம் திரும்பி நடனமாடிக்கொண்டிருந்தது. மஞ்சளில் கருப்பா, அல்லது கருப்பில் மஞ்சளா என்று தெரியாத சிறு வண்ணக்குழப்பமாய் ஒளிர்ந்த சுடரின் நிழல் மேஜையில் அதற்குப்போட்டியாய் இன்னொரு நாட்டியம் காண்பித்தது.

இரண்டு பக்கமும் மாறிமாறி மெழுகுவர்த்தியின் சுடர் அலைக்கழிவதைப் பார்க்கும்போது, 'ரெண்டு பேரில் யாராவது ஒருவர் பேசுங்களேன்' என்று அது பொறுமையில்லாமல் கெஞ்சுவதுபோல்தோன்றியது. நிமிர்ந்துபார்த்தபோது அவளும் அதேபோன்றதொரு உணர்ச்சியில் நெற்றியில் வியர்வைபடர உதடுகளை அடிக்கடி திறந்து, உடனே மூடிவிடுபவளாய் இருந்தாள்.

இன்னும் ஐந்து நிமிடத்தில் பில் வந்துவிடும், பத்தரைக்கு பஸ் வந்துவிடும், அவள் போயேபோய்விடுவாள், அதன்பிறகு தனியாய் உட்கார்ந்து எத்தனை பேசினாலும் உபயோகமில்லை. பேசவும் முடியாமல், பேசாமல் இருப்பதும் முடியாமல் என்ன சங்கடம் இது ? பாலா அந்த அவஸ்தையைப் பொறுக்க முடியாதவனாய் பேசத்தயாரானான். எதையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டுவிடலாம், '·போட்டோ சரியாய் இல்லாததால்தான் அவசரப்பட்டு உன்னை வேண்டாம் என்று சொன்னேன், நேரில் பார்த்திருந்தால் மறுத்திருக்கவே மாட்டேன்' என்று உள்ளே ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டான், அவள் அழகைப் புகழ்வதுபோல ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லவேண்டும், அதற்கு மயங்காத பெண் யாரும் இல்லை. மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் தப்பில்லை, யார் காரணமானாலும் நான் செய்தது தப்புதானே ?

பாலா அனிச்சையாய் நாற்காலியின் நுனிக்கு நகர்ந்து சற்றே முன்னால் வந்தபோது அவனுடைய பெருமூச்சுக்காற்று பட்டு, சுடர் அனிச்ச மலர்போல வெட்கம்கொண்டு ப்ரியாவை நோக்கி திரும்பியது. அவளும் அந்த சுடரையே பார்த்துக்கொண்டிருந்தாள், 'அவன்தான் தயங்குகிறான், நீயாவது சொன்னால் என்னவாம் ?' என்றது அது.

பாலாவுக்கு முன்னால் அவள் பேச ஆரம்பித்தாள், 'எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு பாலா, பட், இப்போ சொல்லலைன்னா இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும்ன்னு தோணலை'

அவனுக்கு சேர்ந்திருந்த துணிச்சலெல்லாம் அவள் பேச ஆரம்பித்ததும் வடிந்துபோனது, 'எ- என்ன சொல்றீங்க ப்ரியா ?' என்றான்.

அவள் இவனை ஒருமுறை நேராய் பார்த்துவிட்டு தலைகுனிந்து மெழுகுவர்த்தியைப்பார்த்துக்கொண்டே தொடர்ந்து பேசினாள், 'நடந்ததுக்காக உங்களுக்கு என்மேலே ரொம்ப கோவம் இருக்கும், தப்பு என்மேலேதான், ஆனா, அந்த தப்பை நினைச்சு இப்போ ஒவ்வொரு நிமிஷமும் நான் ரொம்ப வருத்தப்படறேன், ஏன் அப்படி முட்டாள்தனம் செஞ்சே-ன்னு என்னையே சபிச்சுக்கறேன், நடந்தது எல்லாத்தையும் நான் முழுசா சொல்லிடறேன், அப்புறம் என்னை மன்னிக்கறதும், மன்னிக்காததும் உங்க இஷ்டம்'

பாலா திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தான், அவன் பேசவேண்டியதையெல்லாம் ப்ரியா பேசிக்கொண்டிருக்கிறாளே என்கிற ஆச்சரியத்தில், 'மன்னிப்பா ? எதுக்கு ?' என்றான்.

'நீங்க பெருந்தன்மையா அதையெல்லாம் மறந்திருக்கலாம் பாலா, பட், நான் செஞ்ச தப்பை நினைக்கும்போதெல்லாம் எனக்கு மனசாட்சி குறுகுறுங்குது' அவன் அவஸ்தையாய் புன்னகைத்தான், 'அப்படி என்ன தப்பு செஞ்சுட்டீங்க நீங்க ?'

'ஐயோ, இப்படி தெரியாதமாதிரி பேசி என்னை இன்னும் கொல்லாதீங்க பாலா, உங்க ஜாதகம் எங்க அப்பாகிட்டே வந்ததும் அவர் நேரா என்கிட்டே வந்து உங்க ·போட்டோவைக்கொடுத்து பிடிச்சிருக்கா-ன்னு கேட்டார், எனக்குப் பிடிச்சிருந்தது, பட், சம்மதம் சொல்றதுக்கு முன்னால ஆள் பர்சனலா எப்படி-ன்னு தெரிஞ்சுக்கணுமே-ன்னு கவலையா இருந்தது. விமலா உங்க ரிலேட்டிவ்-ன்னு எனக்கு அப்போ தெரியாது, உங்களோட லா காலேஜ்ல படிச்ச சுந்தரி, என் ·ப்ரெண்டோட அக்கா, அவங்ககிட்டே உங்களைப்பத்தி விசாரிச்சேன், 'பாலாவா, அவன் பெரிய ரெளடியாச்சே'ன்னு எடுத்தஎடுப்பிலயே சொல்லிட்டாங்க, எனக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு, அதுக்குமேலே எதுவும் விசாரிக்காம, உடனே அப்பாகிட்டேபோய் எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்ன்னு கட்டாயமா சொல்லிட்டேன்' என்றாள்.

பாலாவுக்கு ஒரு இருட்டு உலகத்துக்குள் நழுவிக்கொண்டிருப்பதுபோல் ஒரு பிரம்மை, சிரமப்பட்டு அவள் சொல்வதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான், 'அன்னிக்கு நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா பாலா, வெட்கத்தை விட்டு சொன்னா, உங்க ·போட்டோவைப்பார்த்ததும் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப்போச்சு, ஸோ, அந்த சம்பந்தம் இல்லைன்னதும் என்னால ஏமாற்றத்தைக் கட்டுப்படுத்திக்கவே முடியலை, நாள்முழுக்க அழுதிட்டு இருந்தேன், அந்த கஷ்டத்தை தாங்கிக்கமுடியாம அப்பாகிட்டே, இனிமே கொஞ்ச நாளைக்கு எனக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டாம்-ன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்', அவளுடைய கடைக்கண்ணில் நீர் இமைமீறப்பார்த்தது.

'ப்ளீஸ் ப்ரியா, கன்ட்ரோல் யுவர்செல்·ப்' என்று கைக்குட்டை எடுத்துக்கொடுத்தான். அவள் அதை வாங்கிக்கொள்ளாமல் குழந்தைபோல கையாலே கண்களைத் துடைத்துக்கொண்டாள், 'அப்புறம் இன்னொருநாள் அந்த அக்காகிட்டே பேசும்போதுதான் தெரிஞ்சது, உங்க செட்ல ரெண்டு பாலா இருந்தாங்களாமே, உங்க பேர் பாலா, அந்த இன்னொருத்தர் பேர் பாலச்சந்தர், அவரையும் ·ப்ரெண்ட்ஸ் பாலா-ன்னுதான் கூப்பிடுவாங்களாம், அந்த அக்காவுக்கு உங்களை அவ்வளவா பழக்கம் இல்லையாம், அந்த இன்னொரு பாலாதான் ரெளடித்தனமெல்லாம் செஞ்சு காலேஜ் முழுக்க பாப்புலரா இருந்தாராம், ஸோ, நான் கேட்டதும் அவங்க அந்த இன்னொரு பாலாவை நினைச்சுகிட்டு அப்படி சொல்லிட்டாங்க, அதுக்காக ரொம்ப ஸாரி கேட்டாங்க, எனக்கு சரியான கோவம், 'அடிப்பாவி, சரியா விசாரிக்காம இப்படி என் வாழ்க்கையையே கெடுத்திட்டயே'ன்னு மனசுக்குள்ள நிறைய திட்டினேன்' என்று அவள் சொன்னபோது பாலாவுக்கு அந்த திட்டுவார்த்தைகள் தனக்கும் பொருந்தும் என்று தோன்றியது.

'அவங்களைத் திட்டி என்னங்க பிரயோஜனம், அவங்க சொன்னதைக் கேட்டுகிட்டு நாலு இடத்தில சரியா விசாரிக்காம சட்டுன்னு முடிவு பண்ணினது என் முட்டாள்தனம்தானே ?'

மீண்டும் அவன் பேச முயன்றான், அதற்குள் அவள், 'நான் செஞ்சது தப்புதான் பாலா, அதை இப்போ மனசார ஒத்துக்கறேன், எனக்கு மன்னிப்பு உண்டா ?' என்றாள்.

அவன் இப்போது மெளனமாகிவிட்டான், மன்னிக்கிற தகுதி அவனுக்கு உண்டா ?

அவள் தொடர்ந்து, 'சொல்லுங்க பாலா, ப்ளீஸ், என்னை மன்னிப்பீங்களா ?' என்றாள், மை கலைந்த கண்கள் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்பு கலந்த ஏக்கத்தோடும் அவனையே பார்த்தபடி இருந்தன.

அவன் சற்று தயங்கி, 'நான் எங்கே மன்னிக்கிறது ? பிராயச்சித்தம் செஞ்சாதான் உண்டு !' என்றான்.

அவள், 'புரியலை' என்றாள், குழப்பம் வரியோடிய அவள் நெற்றியை மெழுகுவர்த்திச் சுடர் இன்னும் அழகாகக் காட்டியது.

அவன் சிரித்து, 'ஒண்ணுமில்லை, அதை விடுங்க, நானும் இதையேதான் பேச நினைச்சேன்' என்றான்.

'அப்படீன்னா ?' அவள் உதடுகளில் மெல்லமாய் ஒரு வெட்கச்சிரிப்பு உயிர்பெற்றது, அவனும் கலந்துகொண்டான், 'மன்னிப்பு, அது, இதுன்னு பேசவேண்டாம்-ன்னு அர்த்தம்' என்றான். அவள் முன்பு பாக்கெட்டில் வைத்த பணத்தை எடுத்து பில்லின்மேல் வைத்துவிட்டு எழுந்துகொண்டான், 'இப்படி நாம மனம்விட்டுப் பேசினது எனக்கு ரொம்ப சந்தோஷமா, நிம்மதியா இருக்கு ப்ரியா' என்றான்.

'எனக்கும்தான் !'

அந்த சந்தோஷ சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாய் வயலின் வாசிக்கக் கொடுத்துவைக்காமல் கதர்சட்டைக் கலைஞர் ஏற்கெனவே பெட்டியைக் கட்டிக்கொண்டு போயிருந்தார்.

சிலுசிலுவென்று உடல்முழுதும் நனைக்கிற குளிர்காற்றில் போக்குவரத்தில்லாத சாலையைக்கடந்து பஸ் நிற்கிற இடத்தருகே சென்றதும் அவன் அவளிடம், 'மறுபடி நாம எப்போ சந்திக்கறது ?' என்றான். அவளுடைய கன்னங்களில் இன்னும் நாணச்சிவப்பு நீங்கியிருக்கவில்லை, 'நாளைக்கே நான் அப்பாகிட்டே பேசறேன்' என்றாள் பொதுவாய்.

'அப்போ, எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ?' என்றான் குறும்பாய். கண்ணடிக்கிற ஆர்வத்தை சிரமப்பட்டு கட்டுப்படுத்தினான். அவள் சும்மா வாட்சைப்பார்த்துவிட்டு, 'பத்து ஐம்பதுக்கு ?' என்றதும் இருவரும் சேர்ந்து சிரித்தார்கள், 'நல்லா பேசறீங்க !' என்று அவன் பாராட்டினான்.

'வக்கீலம்மா-ன்னா சும்மாவா ?'

கடந்த இரண்டு நாட்களாய் அர்த்தமில்லாமல் தோன்றிய எல்லாவற்றுக்கும் அந்த விநாடியில் அர்த்தம் அமைந்துபோனது.

** சுபம் **

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors