தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : களம்
- நாகூர் ரூமி

[ பாகம் : 1 ]

"சார், உங்களுக்கு எலக்ஷன் டூட்டி ஆர்டர் வந்திருக்கு"

இல்யாஸ் இப்படிச் சொன்னபோது முதலில் ஷாஹுலுக்கு அது பெரிதாகப்படவில்லை.

"வந்து வாங்கிக்கிங்க சார், இல்லென்னா ப்ரச்னெயாயிடும்" என்று மறுபடியும் ப்ரச்சனையில் ஒரு அழுத்தம் கொடுத்து தன் வாக்கியத்தை முடித்தான் அவன்.

இல்யாஸ் எப்போதுமே அப்படித்தான். யாருக்காவது பிரச்சனை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்படுத்த வேண்டும். அதைத்தீர்க்கின்ற சாக்கில் காசு பார்க்கவேண்டும்.

இதற்கெல்லாம் இந்த முறை ஏமாறப்போவதில்லை. பத்தொன்பது வருஷ ஊழியத்தில் பார்க்காத பிரச்சனையா என்ன? ஷாஹுல் முடிவு செய்துகொண்டான். வீட்டுக்கு வந்து வழக்கம்போல ஆறுக்கு அஞ்சு கட்டிலில் போடப்பட்ட அகலமான கர்லான் புது மெத்தையில் படுத்துக்கொண்டான். எல்.ஜி. ஏ.ஸி.யை 'ஆன்' பண்ணினான். குளிர்ச்சியான காற்று இதமாக வர ஆரம்பித்தது. அந்தக் காற்றில் ஒரு பணக்காரத்தனமான சுகம் இருக்கத்தான் செய்தது.

கல்லூரியும் இல்லை. வகேஷன்தான். எட்டரை மணி கல்லூரிக்கு அரக்கப்பரக்க ஒன்பது மணிக்கு எழுந்து ஓடவேண்டியதில்லை. லீவில் ஊர் சுற்றும் பழக்கமும் இல்லை. இப்படி மெத்தையில் சுகமாக படுத்துத் தூங்குவதை அல்லது புரண்டு கொண்டிருப்பதை விட்டுவிட்டு எவனாவது எலக்ஷன் ட்யூட்டி பார்க்கப் போவானா?

"ஏங்க எப்ப சாப்பாடு வைக்க?"

மனைவி கேட்டாள். அவளுக்கு எப்போதும் அவள் கவலை.

"பசிக்கிம்போது சொல்றேன்"

திரும்பி படுத்துக்கொண்டான். அப்போதுதான் தொலைபேசி சிணுங்கியது. அவன் மனைவிதான் எடுத்தாள்.

"ம், இருக்காங்க அண்ணே. கூப்புடுறேன்"

யாரு இந்த நேரத்துலெ டிஸ்டர்ப் பண்றது? இந்த அண்ணன்களுக்கு வேறு வேலையே கிடையாது. யாரது என்று படுத்துக்கொண்டே கேட்டான்.

பேரைச்சொன்னாள். உடனே துள்ளிக்குதித்து எழுந்தான். ஒரு மரியாதைதான். அண்ணன் எஸ்.கே. எப்போதாவதுதான் தொலைபேசுவார். அதுவும் முக்கியமாக இருந்தால்தான். என்ன விஷயம் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு வந்தது.

"ஸ்லாமலைக்கும் அண்ணே"

"அலைக்கும் ஸலாம் தம்பி, என்ன நீங்க எலக்ஷன் ட்யூட்டி ஸ்லிப் வாங்கிக்கலியா?"

"இல்லெ அண்ணே. இல்யாஸ் சொன்னான். எனக்கு அதுலெயெல்லாம் ஆர்வமில்லெ. வேற யாராவது போவாங்கல்ல?"

"அய்யய்யோ, அதுதாங்கெடயாது. வேறயாரும் போக முடியாது. எக்ஸாம் டூட்டி பாத்த மூனு பேரைத்தவிர நம்ம எல்லாருக்குமே வந்திருக்கு தம்பி. எல்லாருமே அன்வில்லிங்னு போட்டவங்கதான். இங்கெ ஆஃபீஸ்லெ எதோ கோளாறு பண்ணிட்டானுவ. வலக்கம்போல. இப்ப ஒன்னுஞ் செய்ய முடியாது. போகலைன்னா, சிவியரா ஆக்ஷன் எடுத்துடுவாங்க. இந்த தடவெ ரொம்ப ஸ்ட்ரிக்ட் தம்பி. போய் மொதல்ல வாங்கிக்கிடுங்க. பொறவு பாப்போம்."

"என்ன ஆக்ஷன் எடுப்பானுங்க?"

"எதுக்கு வம்பு? சஸ்பென்ஷன் அது இதுன்னு இருக்கும். நீங்க மொதல்லெ போயி வாங்கிக்கிங்க"

"சரி, அண்ணே"

என்ன எழவு இது? எலக்ஷன் ட்யூட்டி! யாருக்கு வேணும் இந்த எழவெல்லாம்? இந்த முறை ஓட்டு மட்டும் போட்டுவிடலாம்னுதான் இருந்தேன். இப்ப எலக்ஷன் ட்யூட்டி வேறயா?

சலித்துக்கொண்டே ரிசீவரை வைத்துவிட்டு வந்து மறுபடியும் படுத்துக்கொண்டான். இந்த முறை படுத்தபோது ஒரு வெறுப்பு கலந்த அசதி வந்திருந்தது. எப்படியும் போகப்போவதில்லை. என்னதான் போட்டிருக்கிறது என்று வாங்கிப் பார்க்கலாம் என்ற முடிவெடுத்தபோது அவ்வளவு நேரமாக வராத தூக்கம் வந்தது. மெத்தையில் சாய்ந்தவன் அவனையறியாமல் தூங்கிப்போனான்.

விழித்து, முகம் கழுவி, ஒரு டீ குடித்த பிறகு உடம்பும் மனதும் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகித்தான் போனது. 'முலிச்சு, மூஞ்சி கலுவி, ஒரு தேத்தண்ணி குடிச்சாத்தான் ராஹத்து' என்று அவன் பாட்டியார் சொல்வது டீ குடித்தபோது ஞாபகம் வந்தது. ஹாலில் மாட்டியிருந்த பாட்டியாரின் பெரிது படுத்தப்பட்ட படத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டான்.

தனக்கு மிகவும் பிடித்த கறுப்பு ஹோண்டா ஸ்ப்லெண்டரை எடுத்துக்கொண்டு கல்லூரிக்குப் போனபோது, நுழைந்தவுடன் இருந்த முதல்வர் அறைக்கு எதிரில் இல்யாஸ் நின்று கொண்டிருந்தது தெரிந்தது. ஷாஹுலைப் பார்த்ததும் அவனுக்காகவே அல்லது அதற்காகவே காத்திருந்ததைப்போல கையில் வைத்திருந்த ஒரு சொரிபிடித்த 'பேக்'கைத் திறந்து ஒரு ஸ்லிப்பை எடுத்தான்.

"இந்தாங்க சார், ஆர்டர். ஒரு கையெழுத்து போட்டுருங்க" என்றான். ஆர்டரைக் கொடுக்கும்போது அவன் கறுப்பு முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அது ஏன் என்று புரியவில்லை.

ஆர்டரை வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இன்ன தொகுதியில் இன்ன தேர்தலுக்கு வாக்குச்சாவடி அதிகாரியாக அவனை நியமித்திருந்ததாக அந்த செவ்வக வடிவ சின்ன ஸ்லிப் சொன்னது. வெள்ளைத்தாளில் கம்ப்யூட்டர் ப்ரிண்ட். அது சம்மந்தமாக முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கும் இடத்தையும் தேதியையும் அதில் குறிப்பிட்டிருந்தது.

வாங்கி தோள் பையின் சைடு பாக்கட்டில் போட்டுக்கொண்டான். பயிற்சி மையம் மெயின் ரோட்டிலேயே இருந்த ஹைஸ்கூல்தான். என்ன கூத்தென்று போய்த்தான் பார்க்கலாமே என்று தோன்றியது.

oooOOooo
[ பாகம் : 2 ]

ஹைஸ்கூலுக்குப் போனபோதுதான் விஷயத்தின் தீவிரத்தை ஓரளவு உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஸ்கூலில் இருந்த மெயின் ஹால் நிறைந்து வழிந்தது. கலர் கலரான குடங்களில் லாரித்தண்ணீர் பிடிக்க தெருக்களில் நிற்கும் கூட்டம் போல இருந்தது. ஆண்களும் பெண்களுமாக பெருங்கூட்டம். கல்லூரியிலிருந்து எல்லா ஸ்டாஃப்களும் வந்திருந்தார்கள். ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்து மரணத்தின் விளிம்புவரை சென்று பின்பு மனமில்லாமல் -- இறைவனுக்குத்தான் -- திருப்பி வீட்டுக்கு அனுப்பப்பட்ட பேராசிரியர் மஸ்தானும் நின்று கொண்டிருந்தார். ஷுகர் பாய் சல்மானும் இருந்தார். (சீனியர் பேராசிரியரும் வணிகத்துறைத் தலைவருமான சல்மானின் பட்டப்பெயர்தான் ஷுகர் பாய். சர்க்கரை வியாதியின் சிகரத்தில் அவர் அவ்வப்போது தனது நாக்கால் தன்னை ஏற்றிக்கொள்வார். இப்போதெல்லாம் வீங்கிய காலுடன் வாஜ்பாய் மாதிரிதான் அவர் கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தார்.)

"அண்ணே, ஷுகர் பாய்கூடவா?"

எஸ்.கே. சிரித்துவிட்டுச் சொன்னார். "தம்பி, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம காலேஜிலேயே எலக்ஷன் டூட்டிக்கி வில்லிங்னு போட்ட ஒரே ஆள் அவர்தான்"

நம்புவது கஷ்டமாயிருந்தது. "அவ்வளவு கடமை உணர்ச்சியா?"

"கடமை உணர்ச்சியா? மண்ணாங்கட்டி. காசு உணர்ச்சிதான்" என்றார் எஸ்.கே.

"எவ்வளவு காசு கொடுப்பாங்க?"

"என்ன, ப்ரிசைடிங் ஆஃபீசர்னா ஒரு ஆயிரமாவது வரும் "

"அது ஒரு காசா அண்ணே?"

"அவ்வளவு தூரம் ஏம்போறீங்க? நூறு ரூவாதான் தாரதா இருந்தாலும் அவர் போயிருவாரு. ஆனா இப்ப எல்லாரும் வேலைக்கி பிரச்சனை வந்திடுமோன்னுதான் ஆஜராயிருக்காங்க"

அவர் சொன்னது சரி என்றுதான் பட்டது. ஜே.பி., இஸ்மா, ஜோ, மார்க்கண்டேயன், ப்ரகாஷ், பாக்கர், சரவணன் என்று கல்லூரிப் பட்டாளம் முழுவதும் காலை பத்து மணி என்று குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு சரியாக ஆஜராகியிருந்தது.

"சார், அங்கெ பாருங்க, எப்பவுமே கொறஞ்சது அரமண் நேரம் லேட்டா வர்ற பாக்கர் இங்கெ பத்துக்கே ஆஜராயிட்டாம் பாருங்க" என்றான் ஜோ.

உண்மைதான். "அப்படி என்ன இந்த முதல்வரிடம் இல்லாத ஒரு இனம் புரியாத பயம் அந்த முதல்வரிடம்?" என்று கேட்டான் ஷாஹுல்.

"அப்படியில்ல சார். இது எலக்ஷன் கமிஷனோட ஆர்டர். போகலைன்னா சீட்டெ கிழிச்சிடுவான். கலெக்டர், எஸ்.பி.ன்னு எல்லாரையும் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி பந்தாடிட்டு இருக்கான் சார்" என்று ஜோ சொல்லிச் சிரித்தான். ஆனால் அந்த சிரிப்பில் ஒரு கலவரம் தெரிந்தது. இல்யாஸின் பிரகாசமான முகம் ஒரு கணம் வந்து போனது.

அது ஒரு பள்ளிக்கூடம் என்பதற்கு பொருத்தமாக வந்திருந்தவர்கள் ஏகமாக சப்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். கும்பல் கும்பலாக. மாணவர்களுக்கு பதிலாக ஆசிரியர்களும் மற்ற அரசு ஊழியர்களும். இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டு என்று கோரஸாக கத்தாத ஒன்றுதான் குறை. கூட்டத்தைப் பார்க்கும்போது எப்படியும் ஒரு இரண்டாயிரம் பேராவது இருப்பார்கள் என்று தோன்றியது.

அந்த பெரிய ஹாலின் நடுவில் பல பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. எதிரில் இருந்த மேடையில் நாற்காலி போட்டு மேஜையில் சில அல்லது பல பச்சை கலர் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தனர். ஒரு ஒலிபெருக்கியும் நின்றுகொண்டிருந்தது.

ஹாலின் உள்ளே நுழையும் பகுதியில் இடது பக்கமும் வலது பக்கமுமாக போடப்பட்டிருந்த பென்ச்சுகளில் அமர்ந்திருந்தவர்களைச் சுற்றி கும்பல் ஒன்று முண்டியடித்துக் கொண்டிருந்தது.

"அவங்க என்ன பன்றாங்க?"

"அங்கெதான் தம்பி போய் கையெலுத்து போடணும்."

"என்னா கையெலுத்து?"

"உங்களுக்கு ஆர்டர் வந்திச்சுல்ல? இந்த மொத வகுப்புக்கு நீங்க வந்தீங்க அப்டீங்குறதுக்கு சாட்சி. அட்டெண்டன்ஸ் தம்பி. கையெலுத்து போட்டாத்தான் அவங்க ஒரு ஸ்லிப் தருவாங்க. அதெ இங்கெ மேடையிலெ காட்டி இந்த புக்ல ஒன்னு வாங்கிக்கணும்."

ஷாஹுலுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தில் கும்பலாக முண்டியடித்துக்கொண்டு போவதென்பதெல்லாம் அவனுக்கு ஒவ்வாத ஒன்று. ஆனால் ஆணுக்குப் பெண் நிகர்தான் என்பதை நிரூபிப்பதற்காகவோ என்னவோ பெண்கள்தான் அதிகமாக முண்டியடித்துக்கொண்டிருந்தனர். எட்டி எட்டிப் பார்த்தனர். தள்ளிக்கொண்டு நுழைய பிரயத்தனப்பட்டனர். அந்த விஷயத்தில் ஆண்கள் கொஞ்சம் பின்தங்கியே இருந்தனர்.

ஷாஹுல் ஒரு பென்ச்சில் போய் உட்கார்ந்து கொண்டான். எல்லாம் முடியட்டும். கடைசியாகப் போய் வாங்கிக்கொள்ளலாம். இவ்வளவு பேருக்கு ஆர்வமிருக்கும்போது விருப்பமில்லாதவர்களையெல்லால் ஏன் இதில் இழுக்கிறார்கள்? அப்படிச் செய்தால் தேர்தல் வேலைகள் நல்லபடியாக நடப்பதற்கு பதிலாக மோசமாகவல்லவா நடக்கும்? எதற்கு இந்த தேர்தலுக்கு முந்திய வன்முறை? அவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை. Accept the inevitable என்ற ஆன்மீகப் பாடம் ஞாபகம் வந்தது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான்.

மேடையில் ஒருவர் ஏதோ ஒரு பேப்பரைக் கையில் வைத்துக்கொண்டு படித்துக் காட்டினார். ஏதோ 'டூஸ் அன் டோ ன்ட்ஸ்' என்று மட்டும் புரிந்தது. தமிழ் சரியாக பேச, படிக்க வரவில்லை அவருக்கு. பார்வைக்கோளாறோ என்னவோ.

"யார் இவரு? என்ன சொல்லிட்டிருக்காரு?"

"யாருக்குப் புரியுது?"

அவர் தன் கடமையை முடித்துவிட்டு போய் உட்கார்ந்து கொண்டார்.

கூட்டம் குறைவது மாதிரி தெரியவில்லை. பெண்கள், மேலும் பெண்கள் என்று வந்து கொண்டிருந்தார்கள்.

சிரித்துக்கொண்டு எதிரில்  வந்தார் மஸ்தான். ஆறடி உயரம். ஆஜானுபாகுவான உடம்பு. பெரும்பாலும் கதர் அரைக்கை சட்டைதான் போட்டிருப்பார். சட்டையை எப்போதும் பேண்ட்டுக்கு வெளியில்தான் சுதந்திரமாக விட்டிருப்பார். மரணத்தை வென்றுவிட்டதைப் போன்ற ஒரு புன்னகை. பார்ப்பதற்கு காமராஜ் மாதிரி இருப்பார். பார்ப்பதற்கு மட்டும்தான்.

"தம்பி, நான் மெடிகல் சர்ட்டிஃபிகேட்டெ தாசில்தாருக்கே அனுப்பினேன் தம்பி. அவங்க கலெக்டரைப் பாக்கச் சொல்லிட்டாங்க" என்றார்.

ஷாஹுலுக்கு கொஞ்சம் பயம் பற்றிக்கொண்டது. இவனைத் தேடிவந்து இந்த தகவலை அவர் ஏன் சொல்லவேண்டும்? எல்லாம் விதி. அல்லது இறைவனின் உதவி என்றுகூட வைத்துக்கொள்ளலாம். அப்படித்தான் அவனுக்குத் தோன்றியது. இறையுதவி ஷைத்தான் ரூபத்தில் வரக்கூடாதா என்ன?
 
மஸ்தான் அரசியல் செல்வாக்கு உள்ளவர். அவர் மனைவிதான் போனமுறை  முனிசிபல் சேர்மனாக இருந்தார். அந்த மஸ்தானுக்கே தேர்தல் வேலையை தட்டிக்கழிக்க முடியவில்லை என்றால் தன்னால் முடியுமா?

சரி, கும்பலில் என்ன எழவுதான் கொடுக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம் என்று எழுந்தான்.

கும்பலின் பின் பக்கமாக சிலர் நின்றுகொண்டிருந்தனர். அதில் ஜோவும் இருந்தான். உட்கார்ந்து எல்லாரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்த அந்த நபரிடம் திடீரென்று அவன் குனிந்து ஏதோ சொன்னான். உடனே அவர் ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து ஜோவிடம் கொடுத்தார். அவன் வாங்கி அவசர அவசரமாக திறந்து எதையோ தேடி ஒரு பக்கத்தை கண்டுபிடித்து அதில் கையெழுத்துப் போட்டான். நிமிர்ந்த அவன் ஷாஹுலைப் பார்த்து, வாங்க என்று கையசைத்தான்.

"என்ன ஜோ, பின்பக்கமா போனா வெற்றி சீக்கிரமா கெடைக்கும் போலருக்கே?" என்றான் ஷாஹுல்.

"ஆமா சார், அதனாலதான் இந்த ஊர்காரன்கள்ளாம் பொண்டாட்டியெகூட பின்பக்கமா யூஸ் பண்றானுக" என்று வழக்கம்போல ஜோக் அடித்தான்.

அதைப் பின்னால் ரசித்துகொள்ளலாம் என்று ஒத்திவைத்துவிட்டு கொடுக்கப்பட்ட நோட்டு புத்தகத்தில் அவனும் தேடினான்.

"இதுல என்னப்பா பாத்தே?"

"சார், உங்க ஆர்டர் நம்பர் என்ன சார்?"

யாருக்குத் தெரியும்? மறுபடியும் ஆர்டரை எடுத்து பிரித்துப் பார்த்தான். இருபது என்ற எண் இருந்தது.

"இருவதுன்னு போட்டிருக்குப்பா"

"அப்ப இருபதாம் நம்பர்ல பாருங்க. உங்க பேர் இருக்கும். அதுலை சைன் பண்ணுங்க சார்."

அவன் சொன்னபடியே இருந்தது. நம்மைவிட பொடியன்களெல்லாம் உலக விஷயங்களில் ரொம்ப சூட்டிகையாகத்தான் இருக்கிறார்கள். இந்த திறமை வேண்டாம், முட்டாளாகவே இருந்துவிடலாம் என்று முடிவு செய்து வாழ்வது சமயங்களில் முட்டாள்தனமாகத்தான் போய்விடுகிறது.

யோசித்துக்கொண்டே இருபதைக் கண்டு பிடித்தான். அவன் பெயர் அதில் இருந்தது. வாக்குச்சாவடி தலைமை அதிகாரி என்று எழுதியிருந்ததற்குக் கீழே கையெழுத்திட்டான். பின் அதையும் அவன் ஆர்டரையும் ஜோ சொன்னதுபோல அந்த பென்ச் ஆசாமியிடம் கொடுத்தான். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அதில் ஏதோ எழுதிக் கொடுத்தார். திரும்ப வாங்கிக்கொண்டான்.

"இப்ப என்னப்பா செய்யணும்?"

"இதெக்கொண்டு போய் அந்த ஸ்டேஜ்லெ இருக்கான்லெ ஒரு பொட்டக்..., அவங்கிட்ட குடுத்தா ஒரு புக் குடுப்பான். அதெ வாங்கிக்குங்க" என்றான் ஜோ. அவன் மொழி அடிக்கடி இப்படித்தான் கங்கையை விட்டு கூவத்துக்குப் பாயும். அது அவன் பாணி. மேடையின்மீது இருந்தவரைப் பார்த்தால் பார்வையற்றவர்போலத் தெரியவில்லை. ஜோ ஏன் அப்படி கடுப்பானான்?

ஷாஹுல் கொண்டு போய் கொடுத்தவுடன் அவர் ஒரு பச்சை புத்தகத்தை எடுத்து ஷாஹுலிடம் கொடுத்தார். காலச்சுவடு பத்திரிகை சைஸில் இருந்தது அது. Handbook for Presiding and Polling Officers, Election Commission of India என்று போட்டிருந்தது.

வாங்கிக்கொண்டு வந்து மறுபடியும் ஒரு பென்ச்சில் எஸ்.கே. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.

"என்ன போலாமா அண்ணே?"

"போலாமா?! எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் எப்படி ஆபரேட் செய்யறதுன்னு கத்துக்க வேணாமா? இருங்க. அதுக்குத்தான் எல்லாரும் உக்காந்திருக்கோம்."

அப்போதுதான் கவனித்தான். மேடையில் ஒரு டி.வி. பெட்டியும் வேறு சில பெட்டிகளும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரண்டும் இருந்தன.

அதை ஒருவர் எடுத்து பெட்டியைத் திறந்து கனெக்ட் செய்து என்னென்னவோ சொன்னார். திடீரென்று மெஷின் வேலை செய்யவில்லை. எர்ரர் அடித்தது. வேறு மெஷினைக் கொண்டுவரச் சொன்னார். அதில் வேறு ஒரு எர்ரர் அடித்தது. இன்னொரு மெஷின் இல்லாததால் திரும்பத் திரும்ப அதை சரிசெய்ய முயன்றார். கடைசியில் வேறுவழியின்றி அப்படியெல்லாம் எர்ரர்கள் ஏற்பட்டால் என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றி விளக்க ஆரம்பித்தார்.

"மிஷின் சரியாத்தான் வேலெ செய்யுது சார்"

"எப்புடி சொல்றே?"

"பின்னெ? என்னென்ன எர்ரர் வரும்னு கரெக்டா காட்டுதுல்ல?" என்றான் ஜோ.

இந்தமுறை ஷாஹுலால் மனம் விட்டு டென்ஷனை மறந்து சிரிக்க முடிந்தது.

ஒருவழியாக அசடு வழிய மெஷினை ஊத்தி மூடிவிட்டு, டி.வி. பெட்டியில் ஏதோ சி.டி.யை போட்டுக் காண்பித்தார்கள். மின்னணு வாக்குப் பதிவு எந்திரமே பேசுவதுபோல அமைக்கப்பட்டிருந்த அந்த சி.டி.யின் ப்ரொக்ராம் வால்யூமை ஒரு ராட்சச ஸ்பீக்கரில் அலறவைத்து பேசுவது புரியாமல் செய்தார்கள். எல்லாருக்கும் கேட்கவேண்டுமாம். சப்தம் தமிழில் வந்ததா அல்லது  ஆங்கிலமா என்று சரியாகப் புரியவில்லை.

அது முடிந்த பிறகு ஆங்காங்கு ஸ்பேராக வைக்கப் பட்டிருந்த சில மெஷின்களை சில மேதாவிகள் நோண்டிக்கொண்டிருந்தார்கள். அதில் வாக்குகளை பதிவு செய்வது எப்படி, அதில் க்ளோஸ் பித்தானை எதற்கு அழுத்த வேண்டும், எப்போது அழுத்த வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தனர். ஆனால் எந்த மிஷினுமே வேலை செய்யவில்லை. கும்பலைப் பார்த்தால் அதற்கும் பயம்போல.

ஷாஹுல் என்ற ஷாஹுல்ஹமீதுக்கு சில விஷயங்கள் தெளிவாகப் புரிய ஆரம்பித்தன. இந்த பணியிலிருந்து தப்பிக்க முடியாது. ப்ரிசைடிங் ஆஃபீஸர் என்ற முறையில் அவன்தான் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை இயக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் முக்கியமான விஷயம் ஒரு பெட்டியைத் திறந்து அதற்குள் ஒரு, இல்லை, இரண்டு பச்சைக் காகிதங்களைச்  சொருகி சீல் வைப்பது. பின் அதை மூடி அதற்கு மேல் இன்னொரு சீல் வைப்பது. பின் போலிங் ஏஜெண்டுகளுக்கு 'மாக்போல்' எனப்படும் மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டுவது. பின் உண்மையான வாக்குப்பதிவை நடத்துவது. அடிதடி, கலாட்டா, குத்து வெட்டு என்று நடக்கும் எல்லா எழவுக்கும் பொறுப்பேற்றுக்கொள்வது.

ஆனால் அந்த மிஷின் எப்படிப் பட்டது, எப்படி இயக்குவது, என்ன அல்லது என்னென்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு மட்டுமல்ல யாருக்குமே புரியவில்லை. எல்லாரும் க்ளோஸ் பட்டனை அழுத்துவது பற்றியே மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தனர். ஏதோ ஒன்று க்ளோஸ் ஆகப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.

"தம்பி, ரெண்டாவது க்ளாஸ் ப்ரிசைடிங் ஆஃபீசர்ஸுக்கு மட்டும்தான். இந்த பி-1, பி-2, பி-3ன்னு இவ்வளவு கூட்டமிருக்காது. அப்ப நிதானமா கத்துக்கலாம்" என்றார் எஸ்.கே.

அது அவருக்கே அவர் சொல்லிக்கொண்ட ஆறுதல் மாதிரி இருந்தது.

"பி-ஒன், பி-ட்டூன்னா?"

அவர் சிரித்தார். இந்த அளவுக்கு ஒரு கல்லூரி பேராசிரியன் மடையனாக இருக்க முடியுமா என்று அவர் வியந்திருக்கலாம்.

"அதெ, அப்பறம் பாக்கலாம் தம்பி" என்றார். ரொம்ப நாகரீகமானவர்.

சரி இத்துடன் வீட்டுக்குப் போகலாம். அந்த பள்ளியிலேயே நடக்க இருக்கும் அடுத்த பயிற்சி வகுப்பில் மீதி குழப்பத்தைச் சந்தித்துக் கொள்ளலாம் என்று கிளம்பியபோது மழை பிடித்துக்கொண்டது.

தூரலாக இருந்தால் நனைந்துகொண்டே போகலாம். அதில் ஒரு சுகமிருக்கும். இப்போது கடுமையாக பசித்தது ஷாஹுலுக்கு. பத்து மணிக்கே வரவேண்டும் என்று இருந்ததால் சரியாக காலை டிஃபன் பண்ணாமல் வந்தது தப்பாகிவிட்டது.

விடுவேனா என்று மழையும் கடுமையாக வலுக்க ஆரம்பித்தது.

oooOOooo
[ பாகம் : 3 ]

ப்ரிட்ஜைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.

அதை பிரிட்ஜ் என்றோ மேம்பாலம் என்றோ சொல்லமுடியாது. வேண்டுமானால் கீழ்பாலம் என்று சொல்லலாம். பாலம் என்ற சொல்கூட பொருத்தமில்லை. கீழ்பாதை என்றுதான் சொல்லவேண்டும். ரயில்வே ட்ராக்கிற்குக் கீழே, அவனைவிடக் குள்ளமாக இருந்த ஒரு இடைவெளி. அதுதான் அவன் ஏரியாவுக்கான ஹௌரா பாலம். அதைத்தாண்டித்தான் அவன் ஏரியாவுக்குப் போகவேண்டும். மழை நாட்களில் மழை நீரோடு நட்புறவு கொண்டு சாக்கடை உபநதிகளும் அதை நிறைத்து, பீஹாரில் வெள்ளம் என்று ஆகாசவாணியில் செய்தி சொல்லும் குரலை நினைவு படுத்தும்.

அதில் எந்த டூவீலரும் போகமுடியாது. ஒருமுறை ஃபர்ஸ்ட் கியரிலேயே போய்விடலாம் என்று ஷாஹுல் முயன்றான். உறுமிக் கிளம்பியது வண்டி. ஆனால் பாதிதூரம் போனதும் ஷாஹுலின் இரண்டு சக்கர லாரி அமைதியாகிவிட்டது. (அப்போ அவன் வீரபத்ரன்தான் வைத்திருந்தான்). சைலன்ஸரை அடைத்துக்கொண்டுவிட்டது சாக்கடை. முழங்கால்வரை சாக்கடாபிஷேகத்துடன் வீடுவரை தள்ளிக்கொண்டு செல்லவேண்டி வந்தது.   

'பயிற்சி' முடிந்து திரும்பியபோதும் அதே நிலைமைதான். இந்தமுறை சைலன்ஸருக்குக் குளிர்ச்சியூட்டுவதற்கு அவனுக்கு விருப்பமில்லை. தெரிந்த கடையில் வண்டியை விட்டுவிட்டு நடந்தே சென்றான்.

போகும் வழியெல்லாம் எலக்ஷன் ட்யூட்டி கூடவே வந்தது.

சாக்கடை நாற்றமெடுக்கும் இதைத்தவிர்க்கவே முடியாதா? யோசித்து நிமிர்ந்த இடத்திலெல்லாம் காவிரித்தாயின் போஸ்டர்கள் தென்பட்டன. கொன்றுவிடுவேன் என்பதுபோல வலது கையை உயர்த்தி ஆட்காட்டி விரலை நீட்டிக்கொண்டிருந்த  போஸ்டர்களும் பயமுறுத்தின.

ஒருவழியாக நடந்து வீடு வந்து சேர்ந்தபோது ரொம்ப எரிச்சலாக இருந்தது.

அன்று இரவு முழுவதும் ஒரு பேனாவைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டான். தேர்வுக்குப் படிப்பதுபோல அந்த கையேட்டை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான். அவ்வப்போது அடிக்கோடுகளைப் போட்டுக்கொண்டான். மெஷின் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. படித்து முடித்தபோது வெறுப்பாக இருந்தது. இந்த குட்டி இயந்திரத்தை இயக்குவது எப்படி என்று ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்கிறார்கள்?

யந்திர பயம் அவனைவிட்டு ஒழிந்து போனது. ஆனால் மனிதர்களை நினைத்தால்தான் பயமாக இருந்தது. குறிப்பாக டெண்டர்டு வாக்குகள், சேலஞ்ச் வாக்குகள் போன்றவை அவனை கொஞ்சம் கலங்க வைத்தன. என்ன செய்யலாம்? சரி, ஆண்டவன் விட்ட வழி. Don't cross the bridge before it comes. OK.

0 0 0

மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் பக்கத்துவீட்டு சாஹிப் அண்ணன் அழைப்புப் பித்தானை அமுக்கினார். ஷாஹுல் நான்கு மணிக்கே தயாராகிவிட்டான். தூங்கினால்தானே எழவேண்டும்?

அவர் அழைப்பு இசையைக் கொடுத்தபோது பெல்ட் மாட்டிக்கொண்டிருந்தான்.

"இந்த வந்துட்டாங்க அண்ணே" என்று அவன் மனைவி பதில் சொன்னாள்.

"டீ குடிச்சிட்டு போறீங்களா?"

"வாணா. நாங்க எல்லாருமா கடைலெ குடிச்சிக்குவோம்"

சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.

வாசலில் அவனுக்காக சாஹிப் அண்ணனும் அவனோடு பணிபுரியும் இன்னொரு பேராசிரியரும் காத்திருந்தார்கள். மூவரும் பொடி நடையாக போய் மணி கடையில் டீ சொல்லிக் குடித்தார்கள். மூன்றாவது பயிற்சி வகுப்பு. ஏதோ கரணபுரம் என்ற ஊரில் போட்டிருந்தார்கள்.

"ஏன், அண்ணே, இந்த க்ளாஸுக்கு போய்த்தான் ஆகணுமா?"

"ஆமா தம்பி, இங்கதானே உங்களுக்கு எந்த ஊர்ல டூட்டின்னு ஆர்டர் குடுப்பாங்க?"

வேறுவழியில்லை. போய்த்தான் ஆகவேண்டும். பிரச்சனையான ஏரியாவாக கொடுத்துவிடுவார்களோ?

வேலூர் போய் இறங்கியபோது அவனுக்கு கடுமையாக பசித்தது. அதிகாலையிலேயே விழித்துவிட்டது காரணமாக இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. இப்படி அதிகாலையில் விழிக்கும்போதெல்லாம் பசித்த அனுபவத்தின் சான்றிதழ் உள்ளதே!

"அண்ணே, சாப்ட்டுல்லாம் அண்ணே"

"இல்லெ, தம்பி, பிஸ்கட் கிஸ்கட் எதாவது சாப்டுக்கலாம். எட்டுமணி பஸ்ஸெ வுட்டா அடுத்தது  எட்டு நாப்பத்தஞ்சுக்குத்தானாம்" என்றார் பஸ்டாண்டில் இணைந்துகொண்ட பாதுசா.

"இல்லெ அண்ணே, நீங்கல்லாம் போங்க. எனக்கு பிஸ்கட்டெல்லாம் சரிப்படாது. நா சாப்ட்டு அடுத்த பஸ்லெ வர்றேன்" என்றான் ஷாஹுல் அழுத்தமாக.

"இல்லெ தம்பி, ஒன்னு செய்வோம். அந்த ப்ஸ்டாண்ட் போய்த்தான் ஏறணும். அங்க போய் அங்கெயே எதாவது ஒரு ஹோட்டல்ல சாப்ட்டு, அங்கெயே ஏறிக்கிவோம்" என்றார் சாஹிப் அண்ணன்.

அது பரவாயில்லை என்று பட்டது ஷாஹுலுக்கு. நடந்தே போனார்கள்.

அந்த பஸ்டாண்டில் பஸ் தயாராக நின்றுகொண்டிருந்தது. ஆனால் பக்கத்தில் ஹோட்டல் எதுவும் இல்லை. பஸ்ஸுக்குப் பக்கத்திலேயே ஒரு வண்டியில் இட்லி விற்றுகொண்டிருந்தார்கள். ஷாஹுல் உடனே அங்கே போய் வழக்கம்போல மூன்று இட்லிகளுக்கு ஆர்டர் கொடுத்தான். வண்டிக்காரரும் வழக்கம்போல நான்கு இட்லிகளை வைத்து சட்னி சாம்பார் ஊத்திக் கொடுத்தார். இவன் சாப்பிடுவதைப் பார்த்த மூத்த பேராசிரியர் அண்ணாதுரை வந்து அவருக்கும் நாலு இட்லி சொன்னார். ஆஹா துணை கிடைத்துவிட்டது. பஸ் போனால் போகட்டும். பயிற்சி வகுப்பு எக்கேடு கெட்டுப்போகட்டும்.

ஆனால் பஸ் போகவில்லை. டிக்கெட்டை விட்டுவிட்டுப் போக பஸ்ஸுக்கு மனமில்லை. காத்திருந்தது ப்ரைவேட் வண்டி. அவசரமாக முழுங்கி முடித்தபின் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தார்கள். கரணபுரத்தை நோக்கி விரைந்தது பஸ்.

கரணபுரத்திலும் ஏதோ ஒரு உயர் நிலைப்பள்ளியில்தான் மூன்றாவது பயிற்சி வகுப்பையும் வைத்திருந்தார்கள். இறங்கியதும் ஒரு கடை தெரிந்தது. டிபன் சாப்பாடு ரெடி என்று ஒரு போர்டு ரெடியாக வரவேற்றது. அதைப்பார்த்ததும் அவரவர்க்கும் தத்தமது பசிகள் ஞாபகம் வர அனைவரும் கடைக்குள் நுழைந்தனர். ஷாஹுலும் துணைக்குச் சென்றான்.

சாப்பிடாத அனைவரும் சாப்பிட்டார்கள். ஷாஹுலையும் கேட்டார்கள். இல்லை, சாப்பிட்டதே போதும் என்று மறுத்துவிட்டான். ஆனால் அண்ணாதுரை மட்டும் ஏற்கனவே சாப்பிடாததுபோல இரண்டாவது ரவுண்டு கட்டினார். ஷாஹுலுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னைப்போல எல்லாருமா வயிறு ஒட்டியவர்களாக இருப்பார்கள்?

ஒரு திடலில் ஷாமியானா போட்டு அதனுள் நூறு நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். (ஒரு உத்தேசமான மதிப்புதான்). எதிரே இருந்த மேடையில் ஒருவர் மைக்கைப் பிடித்து தேர்தல் அதிகாரிகளாக போக இருப்பவர்களின் பொறுப்புகளையும் செய்ய வேண்டிய வேலைகளையும் பற்றி எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பின் ஜெராக்ஸ் காப்பி மாதிரி இருந்தது. முந்தைய வகுப்புகளைப் போலவே இங்கேயும் மெஷின் வேலை செய்யவில்லை. ஆனால் பல அறைகளில் நிறைய மெஷின்களை பார்வைக்கும் நோண்டிப்பார்ப்பதற்குமாக வைத்திருந்தார்கள்.

உட்கார இடமில்லாததால் பேராசிரியர்கள் அனைவரும் நின்றுகொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து ஒருத்தன் ஒரு பெஞ்ச்சை கொண்டுவந்து போட்டான். அதில் உட்கார்ந்தார்கள். சொற்பொழிவுகள் முடிந்தவுடன் அகரவரிசைப்படி சில அறைகளைக் குறிப்பிட்டு அங்கு சென்று அவரவர்க்கான இறுதி ஆணையை வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போடுமாறு கேட்டுகொண்டார் கறுப்பாக நெட்டையாக மைக் வைத்துப் பேசியவர்.

மறுபடியும் முண்டியடித்தல் தொடங்கியது. ஷாஹுலுடைய ஆர்டரை அவன் கையில் வாங்கும்போது பகல் பனிரண்டு மணியாகிவிட்டிருந்தது. கொந்தவாசி பாராளுமன்றத் தொகுதியில் சின்னதுரை என்ற கிராமத்தில் ட்யூட்டி போட்டிருந்தார்கள்.

கரணபுரத்தில் கொடுத்த ஆணையில் இருந்த ஊர் பிரச்சனையானதா? தெரியவில்லை. கரணபுரம். கரணம் தப்பினால் மரணம் என்று தேவையில்லாமல் பழமொழியெல்லாம் ஞாபகம் வந்தது.

வெளியில் வந்தபோது, "தம்பி இவர்தான் உங்க பி-ஒன்" என்று ஒருவரை சாஹிப் அண்ணன் அறிமுகப்படுத்தினார்.

ஆள் குள்ளமாக தடியாக இருந்தான். பருத்த மூக்கு.

"சார், குட்மானிங் சார், நீங்க ஒன்னும் கவலெப் படாதிங்க சார், எல்லாம் நா பாத்துக்குறேன்" என்றான். நாம கவலைப்படுவது அவனுக்கு எப்படித் தெரிந்தது? ஏற்கனவே பலமுறை தேர்தல்பணி செய்தவனாம். ரவி என்று பேர் சொன்னான். வாணியம்பாடிப் பக்கத்தில்தான் தனது ஊர் என்றும் ஒரு பள்ளிக்கூடத்தில் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்ப்பதாகவும் சொன்னான்.

"தம்பி, நீங்க போகவேண்டிய ஊர் எங்கெருக்குன்னு கேட்டுக்குங்க" என்றார் சாஹிப் அண்ணன்.

போய் ஒரு ஆபீஃசர் மாதிரி இருந்தவரிடம் காட்டினான் ஷாஹுல். அவர் வாங்கிப் பார்த்துவிட்டு எதிரே ஒரு ஆளைக்காட்டி அவரிடம் கேளுங்கள் என்றார்.

அவர் காட்டிய ஆள் பச்சைகலர் டீ ஷர்ட் போட்டிருந்தான். அவனும் ஒரு ஆஃபீஸர் மாதிரிதான் இருந்தான். அவனிடம்  காட்டியதற்கு அவனும் ஆர்டரை வாங்கிப் படித்துவிட்டு எதிரே நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவரைக் கேட்கச் சொன்னான்.

"பெரியவரே, இந்த ஊர் எங்கெருக்குன்னு சொல்றீங்களா?" என்றான் ஷாஹுல்.

ஆங்கிலத்தில் ஆணை இருந்ததால் அவர் முழித்தார். "சின்னதுரை பெரியவரே" என்றான் ஷாஹுல். தெரியவில்லை என்று கையை விரித்தார் அவர்.

அவன் கேட்ட ஒரு ஏழெட்டு பேரும் தெரியவில்லை என்றுதான் சொன்னார்கள். கடைசியில் மேடையில் முழங்கியவரை அணுகினான். அவரிடம் காட்டியபோது அவர் ஆணையை வாங்கி இன்னொருவரிடம் கொடுத்தார். அவர் வாங்கிப் பார்த்துவிட்டு, "ஜோதிகாபுரத்துலேர்ந்து போகணும்" என்றார்.

"ஜோதிகாபுரம் எங்கே இருக்குது?"

அவர் ஷாஹுலை ஒரு மாதிரியாகப் பார்த்தார். ஏதோ ஜோதிகா என்றாலே யார் என்று தெரியாது என்று சொல்லிவிட்ட மாதிரி.

"நீங்க எங்கெருந்து வர்றீங்க சார்?" என்று கேட்டார். அவர் போட்ட 'சா'ரில் ஒரு இளக்காரம் தொனித்தது. மரியாதைக்காக பயன்படுத்தும் சொற்களைக்கூட மரியாதையைக் குறைப்பதற்காக பயன்படுத்தலாம் என்பது புரிந்தது. சொற்களைப் பயன்படுத்த கற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன் என்று தயங்கித் தயங்கிச் சொல்வான் டி.எஸ்.எலியட்.

சொன்னான்.

வேலூர், ஆரணி, ஜோதிகாபுரம், அங்கிருந்து சின்னதுரைக்கு பஸ் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு கையில் ஆணையைத் திருப்பிக் கொடுத்தார். ஒரு வழியாக ஏரியாவை கண்டுபிடித்தாகிவிட்டது. தொப்பை வயிறும் சப்பை மூக்கும் கொண்ட ஜோதிகாவை ஞாபகம் வைத்துக்கொண்டால் போச்சு.

சரி போகலாம் என்று முடிவு செய்தபோது அண்ணாதுரை சார் இன்னும் தனக்கான ஆணையை வாங்கவில்லை என்று தெரிந்தது. காத்திருந்தனர்.

திடீரென்று எதிரில் இருந்த அறையில் இருந்து வந்த ரவி, ஷாஹுலின் கையைப் பிடித்து, "சார், மார்க் போல் பண்றேன் சார், வந்து பாருங்க" என்றான்.

சாஹிப் அண்ணன் சிரித்தார். "தம்பி, ரொம்ப அல்டாப் ஆளா இருக்கான், கொஞ்சம் பாத்துகுங்க" என்று சொல்லி அனுப்பினார்.

மார்க் போல்! மாக்போல் என்றுகூட சொல்லத் தெரியவில்லை. இவனெல்லாம் எனக்கு பி-ஒன்னாக வந்து என்ன செய்யப்போகிறான்? What a mockery of the poll?! கவலை அதிகரித்தது ஷாஹுலுக்கு.

ஷாஹுல் உள்ளே போனபோது வாக்குப்பதிவு யந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டின் ரிசல்ட் செக்ஷனுக்குள் பச்சை பேப்பர் சீலை உள்ளே விட முயன்றுகொண்டிருந்தான் ரவி.

"அது, அப்படியல்ல, இப்படி" என்று சொருகிக் காட்டிவிட்டு, "இதெல்லாம் எனக்குத் தெரியும், நீங்க உங்க வேலையெ மட்டும் பாருங்க" என்று கடுப்புடன் கூறிவிட்டு வெளியில் வந்தான் ஷாஹுல்.

மறுபடியும் ஊருக்கு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டிருந்தது.

oooOOooo
[ பாகம் : 4 ]

காலை நான்கு மணிக்கே குளித்து தயாராகிவிட்டிருந்தான்.

போகும்போது போட்டுக்கொள்ள ஒரு ட்ரெஸ்ஸும் தேர்தல் நாளன்று போட்டுக்கொள்ள என்று ஒரு செட்டும் எடுத்து வைத்தாள் தர்மபத்தினி. அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவள் ஏதேதோ கற்பனையில் செய்கிறாள். செய்யட்டும் என்று விட்டுவிட்டான்.

ஒரு டார்ச், புது செல்கள் இரண்டு, இரண்டு போர்வைகள். தரையில் போட ஒன்று, போர்த்திக்கொள்ள ஒன்று. ஒரு சின்ன டவல். ஒரு கண்ணாடி. ப்ரில் கிரீம். உறுதியான பற்களுக்கு விக்கோ வஜ்ரதந்தி டூத் பேஸ்ட். ஜோர்டான் வெள்ளை ப்ரஷ். ஃபாரின் லக்ஸ் சோப்பு. ஒரு சின்ன தலையணை. டார்டாய்ஸ் சுருள் ஒன்று. ஒரு பூட்டு. எல்லாவற்றையும் ஒரே 'பேக்'கில் அழகாக அடுக்கி வைத்தாள். அழகாக அடுக்குவதில் அவள் மன்னி.

அவனுக்கு சிரிப்பாகக்கூட வந்தது. அப்போதுதான் குடும்ப டாக்டர் மதி வந்தது. அதனிடம் சொன்னபோது, தேர்தலுக்கு மறுநாள் பேப்பரில், "மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட பேராசிரியர் என்று செய்தி வருமா?" என்று கேட்டது குஷியாக சிரித்துகொண்டே. அப்படித்தான் நடக்கப்போவதாக ஷாஹுலுக்குத் தோன்றியது. அவனால் சிரிக்க முடியவில்லை.

மறக்காமல் 'ரிலை' பண்ண முடியாத ரிலையன்ஸ் செல்ஃபோனையும், வண்ணத்துப் பூச்சியைக் கொன்றவர்கள் என்ற பாரதிபாலனின் சிறுகதைத் தொகுதியையும் எடுத்துகொண்டான். தானும் ஒரு வண்ணத்துப் பூச்சிதானோ?

0 0 0

பஸ்ஸில் நின்றுகொண்டுதான் போக முடிந்தது. சாலை ரொம்ப அற்புதமாக இருந்தது. அவ்வப்போது ஒரு சில அடிகளுக்கு சீரான சாலையும் வந்தது. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் விஷயத்தில் இந்தியச் சாலைகளையும் அப்படிப்பட்ட சாலைகளில் பஸ் ஓட்டும் ஓட்டுனர்களின் திறமையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சத்தமாக கேஸட்டை வேறு போட்டிருந்தார்கள். குரல்வளையில் யாரோ கைவைத்து கொலைசெய்ய முயல்வதை அலட்சியம் செய்துவிட்டு எஸ்.பி.பி.யும் பி.சுசீலாவும், 'அங்கே வருவது யாரோ, அது வசந்தத்தின் தேரோ' என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.  

வழி நெடுக வயல்களும் மரங்களுமாய் இருந்தன. கறுப்பு நிறத்தில் சில வெள்ளாடுகள் நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்தன. ஆங்காங்கு சில மாடுகளும். அவைகளை ஓட்டிக்கொண்டு சில பெண்கள் வந்த வண்ணமிருந்தனர். குளித்துவிட்டு விரிந்த கூந்தலுடன் சில கிராமத்து அழகிகள் சென்றுகொண்டிருந்தனர். கிராமத்தின் அழகே தனிதான்.

வழியில் ஒரு மிகப்பெரிய தேவாலயமும், அதைவிட பெரிய பள்ளிக்கூடமும் வந்தது. தமிழ் நாட்டிலேயே அவ்வளவு பெரிய பள்ளியை அவன் பார்த்ததில்லை. அவ்வளவு சின்ன ஊரில் அவ்வளவு பெரிய கல்விச்சாலையா? பிதா சுதன் பரிசுத்த ஆவிக்கே புகழனைத்தும் போய்ச்சேரட்டும்.

ஜோதிகாபுரம் போய்ச்சேர்ந்தபோது காலை பத்து. அந்த சின்ன ஊரில் அல்லது கிராமத்தில் ஒரு மிகப்பெரிய கோயில் இருந்தது. அதை உள்ளே சென்று பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாகக்கூட இருந்தது. திருவானைக்காவல் கோயிலை நினைவு படுத்தியது அது.

பஸ்டாண்டில் இறங்கிபிறகு ஒரு நோட்டம் விட்டான். ஒரு சின்ன தெரு. அதுதான் பஸ்டாண்டும். ஒருவரிடம் போய், "சின்னதுரைக்கு பஸ் வருமா?" என்று கேட்டான்.

"சின்னதொரையா பெரியதொரையா?" என்றார் அந்தப் பெரியவர்.

"சின்னதொரெ" என்றான்.

"அங்கன போய் நில்லு. ஆனா அடிக்கடி வராது" என்று முக்கியமான உபதகவலையும் சேர்த்துச் சொன்னார் அவர்.       

பதினோரு மணிக்குள் போய்விடுவதுதான் நல்லது என்று ஏற்கனவே அவன் மூளையில் பதிவாகி இருந்தது. அவன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எதிரில் இரண்டு மூன்று ஆட்டோ க்கள் நின்றுகொண்டிருந்தன. போய்க்கேட்டான்.

"போலாம் சார், நாப்பது ரூவா ஆகும்"

"நா வெளியூரு, ஏமாத்தாம சரியாச் சொல்லுங்க" ரொம்ப திறமையாகப் பேசுவதாக நினைத்துகொண்டு சொன்னான்.

"சார், வெளியூரா இருந்தாலும் உள்ளூரா இருந்தாலும் ஒரே ரேட்டுதான் சார்" என்று கட் அன் 'ரேட்'டாகச் சொன்னான் ஆட்டோ க்காரன்.

"சரி வாங்க. அங்கே சின்னதுரையிலெ பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியிலெ கொண்டுபோய் விட்டுடனும்"

"சரி சார் உக்காருங்க"

உட்கார்ந்தான். ஆட்டோ  கிளம்பி ஒரு கடையில் நின்றது.

"ஒரு அரெ லிட்டர் பெட்ரோல் போடுண்ணெ" என்றான் ட்ரைவர்.

இந்த கடைதான் பெட்ரோல் பங்க்கா? வினோதமாக இருந்தது. கடைக்காரர் ஒரு மரப்பெட்டியைத் திறந்தார். அதிலிருந்து ஒரு கேனை எடுத்தார். அதிலிருந்து புனலை வைத்து ஆட்டோ வுக்கு பெட்ரோலை மாற்றினார். ஆட்டோ  கிளம்பியது.

மேடு பள்ளங்களையெல்லாம் பார்க்காமல் ஆட்டோ வை மிக வேகமாக ஓட்டினான். உடலின் உள் உறுப்புகள் யாவும் அதிர்ந்தன.

"ஏன் இப்டி வேகமா ஓட்டுறிங்க? கொஞ்சம் மெதுவாவே போலாமே?"

"இல்லெ சார், மெதுவா போனா பெட்ரோல் சாப்ட்டுடும் சார். அதான்"

ஒரு இடத்தில் ஆட்டோ  நின்றது. இறங்கிப்போன ட்ரைவரை கொஞ்ச நேரம் காணவில்லை. இறங்கிப் பார்த்தான் ஷாஹுல். ட்ரைவர் எதிர்ப்புறமாய் ஒன்னுக்கிருந்துகொண்டிருந்தான். மறுபடியும் ஏறி ஆட்டோ வில் உட்கார்ந்து கொண்டான்.

ஒரு ஐந்து நிமிடத்தில் ஆட்டோ  இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

ஆட்டோ  நின்ற இடத்தின் எதிரில் ஊராட்சி ஒன்றியக் கட்டிடம் என்ற போர்டுடன் ஒரு சின்ன அறை இருந்தது. அதன் எதிரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி என்று ஒரு போர்டுடன் ஒரு திண்ணை இருந்தது. ஆட்டோ வுக்கு பணம் கொடுத்தனுப்பிவிட்டு நிமிர்ந்தான்.

ஒரு நீண்ட அறை மட்டுமே பள்ளியாக இருந்தது. பள்ளியறை என்பது அதுதானோ?! அந்த இடம்தான் தான் தேர்தல் பணி செய்யவேண்டிய இடமா என்று சந்தேகமாக இருந்தது. மேலே 29 என்ற எண்ணிருந்தது. ஆங், அதுதான். கொடுக்கப்பட்டிருந்த ஆணையில் அந்த எண்தான் போட்டிருந்தது. இடம் சரிதான். ஆனால் அங்கு யாரையும் காணவில்லை.

"தம்பி, போன ஒடனே உங்களுக்கு ப்ரொட்டக்ஷனுக்கு ஒரு போலீஸ் இருப்பான். தாசில்தார், விஏஓ யாராவது இருப்பாங்க. நூறுமீட்டருக்குள்ள எந்த கட்சிப் போஸ்டரோ, கொடியோ வேற விளம்பரமோ இருக்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுங்க" என்று சாஹிப் அண்ணன் முதல் நாள் சொன்னது ஞாபகம் வந்தது.

போஸ்டர்கள், கட்சிக்கொடிகள் மட்டுமல்ல மனிதர்கள் யாரையுமே அங்கு காணவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பேக்'கை பள்ளியின் முன் இருந்த திண்ணையில் வைத்துவிட்டு உட்கார்ந்தான்.

பள்ளிக்குப் பக்கத்திலேயே ஒரு தொட்டி இருந்தது. 'குடிதண்ணிர்த் தொட்டி. கொள்ளளவு 1000 லிட்டர்' என்று எழுதியிருந்தது. அதைப்பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. அதில் இருந்த இரண்டு குழாய்களில் ஒன்றைத் திருகினான். தண்ணீர் வந்தது! குடித்துப் பார்த்தான். நல்ல தண்ணீர்தான்! அப்பாடா, தண்ணீர் இருக்கிறது!

எல்லாம் சரி, ஆனால் பெரிய பூட்டாகப் போட்டு தொடக்கப்பள்ளி பூட்டப்பட்டிருந்தது.

 

oooOOooo
[ பாகம் : 5 ]

கொஞ்ச நேரத்தில் ஒருவன் வந்தான். விசாரித்தான். நீ யார் என்று கேட்டதும் தன் பெயர் பாபு என்று சொன்னான். தான் யார் என்று ஷாஹுல் சொன்னதும் அவன் போய் வேறு ஒரு ஆளைக் கூட்டிவந்தான். வந்தவன் வணக்கம் செய்தான். பள்ளிக்கூடக் கதவைத் திறந்தான்.

உள்ளே இன்னொரு கதவு இருந்தது. அதன் வழியாக சாலை தெரிந்தது. ஒரு சின்ன பிள்ளையார் கோயில் இருந்தது. அதன் முன் எழுப்பப்பட்டிருந்த ஒரு பீடத்தில் எலியார் தலையை உயர்த்தி பிள்ளையாரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"நீ யாரு?"

"நா இங்கெ வில்லேஜ் போலீஸ் சார்"

ஒரு போலீஸ்காரனுக்கு இருக்க வேண்டிய எந்த அடையாளமும் அவனிடம் இல்லை. முறுக்கு மீசை, க்ளோஸ் க்ராப், தொப்பை என்று எதுவுமே. பரிதாபம் ஏற்படுத்துவதாக இருந்தது அவன் தோற்றம். சரி, வில்லேஜ் போலீஸ் என்றால் அப்படித்தான் இருக்கவேண்டும் போலுள்ளது.

"இங்கே டீக்கடை இருக்கா?"

"ம், தோருக்கு சார், வாங்கிட்டு வரவா சார்?"

"வேணா, நானே போய்க்கிறேன்"

"ஒம்பேரு என்ன?"

"போஸ் சார்"
 
கொஞ்ச தூரத்தில் ஒரு டீக்கடை இருந்தது. கூட பாபு வந்தான். டீக்கடையில் மூன்றுபேர் உட்கார்ந்திருந்தனர். தேர்தல் ஆஃபீஸர் என்று பாபு அறிமுகப்படுத்தினான். வணக்கம் வைத்தனர். டீ கொடுத்தார்கள். ரொம்ப லைட்டாகவும் தண்ணியாகவும் இருந்தது டீ. அப்போது ஆளும் கட்சி சின்னம் போட்ட புல்லட்டில் ஒருவர் வந்தார். அவரைப் பெறாத ஒரு அம்மாவின் பெயரையும் அவர் பெயரோடு சேர்த்து வண்டியில் எழுதியிருந்தார்.

"தலைவரே வாங்க, எலக்ஷன் ஆபீசராம்" என்று அறிமுகப்படுத்தினர்.

வணக்கம் வைத்தார் தலைவர். ரொம்பத் தயக்கத்துடனே பதில் வணக்கம் செய்தான் ஷாஹுல். கட்சிக்காரனுக்கு வணக்கம் செய்வது சரியா என்று புரியாமல். அப்புறம்தான் தெரிந்தது அந்த ஆள்தான் ஊராட்சி ஒன்றியத் தலைவர் என்று.

டீ குடித்து அதற்கான ஒன்னார் ரூவாயையும் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக திண்ணைப்பள்ளிக்கு விரைந்தான். தேர்தல் அதிகாரிகள் மெஷின் சகிதமாய் வந்துவிட்டால்?

ஆனால் பகல் 12 மணிக்கு மேல்தான் ஒரு லாரி வந்தது. அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி வந்தனர். கூடவே ஒரு போலீஸ்காரரும் வந்தார். ஒரு சாக்குமூட்டையைத் தூக்கிக்கொண்டு இரண்டுபேர் வந்தனர்.

"யார் சார் ப்ரிசைடிங் ஆஃபீசர்?" என்று கேட்டார் வந்தவர்களில் வழுக்கை மண்டையாக இருந்த ஒருவர்.

சொன்னான். வணக்கம் வைத்துவிட்டு மூட்டையை இறக்க உத்தரவிட்டது வழுக்கை.

"பி-ஒன், பி-ட்டூவெல்லாம் இன்னும் வரலியா?"

"இல்லெ"

மூட்டையோடு வாக்குப் பதிவு இயந்திரத்தின் இரண்டு பகுதிகளும் தனித்தனியாக அவற்றிற்குரிய பெட்டிகளில் வந்திறங்கின. வாக்குப் பதிவு யந்திரத்தின் வெளியில் 'அட்ரஸ் டாக்' வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதை செக் பண்ணிக்கொள்ளும்படி வழுக்கை கேட்டுக்கொண்டது.

எல்லாம் கொடுத்துவிட்டு கையெழுத்து வாங்கிகொண்டு சென்றனர்.

அவ்வளவுதான். இனி வெளியே போகமுடியாது. எல்லா எழவுக்கும் இனி நாம்தான் பாதுகாப்பு. நமக்குப் பாதுகாப்பு? போலீஸ், தாசில்தார், விஏஓ எல்லாம் எங்கே? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

மத்தியானம் சாப்பாடு வாங்கி வரச்சொல்லி வில்லேஜ் போலீஸிடம் பணம் கொடுத்தனுப்பினான். அதற்குமுன் இரண்டு மூன்று டேபிள்களையும் இரண்டு பென்ச்சுகளையும் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றான் போஸ். ஒரு சத்துணவு ஆயா வந்தது. ஒரு குடத்தில் குடிதண்ணீரையும் ஒரு எவர்சில்வர் டம்ளரையும் வைத்துவிட்டுச் சென்றது.

குளத்தில் இறங்கியாகிவிட்டது. இனி தன் அறிவுக்கு எட்டியவரையில் புத்தகத்தில் போட்டிருந்தமாதிரி நீந்திப்பார்க்க வேண்டியதுதான்.

'பூத்'தாக மாற்றப்பட்டுக்கொண்டிருந்த அந்த தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வழிகள் இருந்தது நல்லதுதான். ஒரு வழியாக மக்களை வரச்சொல்லி இன்னொன்றின் வழியாக வெளியே போகச்சொல்லலாம். மின்சார வசதி இல்லாமலிருந்ததுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது. இரவில் எப்படி இந்த பொருள்களையெல்லாம் களவு போகாமல் வைத்திருப்பது?

யோசித்துக்கொண்டிருந்தபோது ஒருவன் வந்தான்.

"யார்ப்பா நீ?"

"எலக்ட்ரிஷியன் சார். எங்கெங்கெ லைட் போடணும்னு தலைவர் கேட்டுவரச் சொன்னாரு"

அட, பரவாயில்லையே. "இங்கெ ஒரு ட்யூப் போடு. அங்கெ ஒரு லைட் போடு, அப்பறம் இங்கெ ஒரு..."

சொல்லி முடிப்பதற்குள், "சார் ரெண்டு போதும் சார், ஒரு ட்யூபும் ஒரு 200 வாட்டும் போட்டுறேன் சார்" என்றான்

"சரி"

கொஞ்ச நேரத்தில் போட்டுவிட்டான். ஆனால் ஸ்விட்ச் எதுவும் இல்லாமல் டைரக்ட் கனெக்ஷன். அப்ப டேபிள் ஃபேன் கிடையாது. அந்தப் பகல் நேரத்து வெயிலுக்கு அந்த 200 வாட் வேறு சூட்டைப் பரப்பியது. அது தேர்தல் முடியும்வரை எரிந்துகொண்டுதான் இருக்கும்!

மூன்று மணி அளவில் ரவி வந்து சேர்ந்தான். வியர்வையில் நனைந்திருந்தான்.

"என்ன ரவி, ஏன் லேட்?"

"இல்லெ சார், ஜோதிகாபுரத்துலேர்ந்து நடந்து வந்தேன் சார்"

"நடந்தா ஏன்? பஸ்லெ வரவேண்டியதுதானே?"

"இல்லெ சார், பஸ் லேட்டாகும்னாங்க, அதோட நா ஒரு சுகர் பேஷண்ட். டெய்லி நடக்கணும் சார், அதான்" என்றான். இன்னொரு ஷுகர் பாயா?

பகல் கடன்களையெல்லாம் முடித்தபிறகு ஊரைச் சுற்றிப் பார்க்கிறேன் என்று கிளம்பிவிட்டான் ஷுகர்.

வந்திருக்கும் பொருட்களை செக் பண்ணிவிடலாம் என்று மூட்டைகளை அவிழ்த்தான் ஷாஹுல். போஸ்டர்கள், குண்டூசிகள், பேனாக்கள், பென்சில், தமிழக அரசு என்று போட்ட ஒரு உலோக சீல், ஒரு அம்புக்குறி போட்ட ரப்பர் ஸ்டாம்ப், ஒரு ஒன்றரைக்கட்டி அரக்கு, ஏகப்பட்ட படிவங்கள், ராட்சசக் கவர்கள், சின்ன கவர்கள் என்று நிறைய இருந்தன. ஒரு படிவத்தில் என்னென்னெ கொடுக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பும் எத்தனை அய்ட்டங்கள் என்ற லிஸ்ட்டும் இருந்தது. அவை சரிதானா என்று அமைதியாக அமர்ந்து சோதித்தான். நிறைய அய்ட்டங்கள் இல்லை. கொடுக்கப்பட்டதிலும் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரிடம் சொல்வது? அவர்கள் திரும்ப எப்போது வருவார்கள்?

எதற்குமே பதிலில்லாவிட்டாலும் எல்லாவற்றையும் குறித்து வைத்தான். போஸ்டர்களையெல்லாம் 'பூத்'துக்கு வெளியில் ஒட்ட வேண்டும் என்று சாஹிப் அண்ணன் ஏற்கனவே சொல்லியிருந்தார். ரவி வந்தவுடன் சொன்னான்.

"செஞ்சிறுவோம் சார். நீங்க கவலப் படாதீங்க" என்று சொல்லிவிட்டு உடனெ வெளியே சென்றான்.

"எங்கெ போறீங்க ரவி?"

"வாக்கிங் சார்"

"இதெ ஒட்டிட்டுப் போயில்லாமெ?"

"இல்லெ சார், இப்ப ஒட்டக்கூடாது, காலைலதான் ஒட்டணும்"

ஷாஹுல் ஒன்றும் சொல்லவில்லை. சர்க்கரை வியாதிக்கார உதவி தலைமை ஆசிரியர். எதாவது சொல்லப்போய் சர்க்கரை கூடிவிடலாம். ஷுகர் பாய்கள் ஒழிக.

அப்போதுதான் ஒரு 'பைக்' வந்து இறங்கியது. அதிலிருந்து ஒருவர் இறங்கினார். ஷாஹுலைப் பார்த்து வணக்கம் போட்டார். பதிலுக்கு வணக்கம் செய்துவிட்டு யார் என்றான்.

"பி-ட்டூ சார்" என்றார்.

"வாங்க"

கொஞ்ச நேரத்தில் அரும்பு மீசை கொண்ட அந்த வில்லேஜ் போலீஸ் ஒரு பெரிய பார்சலைக் கொண்டுவந்தான். அதில் நிறைய சோறும் கொஞ்சம் கூட்டும் இருந்தது. பசியாக வேறு இருந்தது. சரி, சாப்பிட்டுவிடலாம் என்று பொட்டலத்தைப் பிரித்தான் ஷாஹுல். பி-ட்டுவையும் சாப்பிடச் சொன்னான்.

"இல்லே சார், நா சாப்ட்டுத்தான் வந்தேன்"

சோறு நிறைய இருந்ததால் அப்போதுதான் வந்திறங்கிய வயசான செக்யூரிட்டிக்கும் சோற்றைப் பகிர்ந்தளித்தான். அப்படியும் சோறு மிஞ்சியிருந்தது. அதை போஸிடம் கொடுத்தான்.

வயிற்றைக் கலக்கியது. நல்ல வேளையாக குடிதண்ணீர் தொட்டிக்குப் பக்கத்தில் தனியாக ஒரு கழிவறையும் அதற்கு எதிரில் கூட்டாக ஐந்தாறு கழிவறைகளையும் ஊராட்சி கட்டிவைத்திருந்தது. வயிற்றைக் கழுவுவதற்கு வழி இல்லாவிட்டாலும் வயிற்றைக் காலி செய்வதற்கு மட்டும் வழி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. கொண்டு போன பூட்டை எடுத்து அந்த ஒற்றை கழிவறையைப் பூட்டிவைத்து உபயோகிக்கலாம் என்று போனான்.

உபயோகித்துவிட்டு பூட்டினான். பூட்டிவிட்டு இழுத்துப் பார்த்தான். சுவற்றில் பதிந்திருந்த கொண்டி கையோடு வந்தது. ஒரு புன்னகையை வீசிவிட்டு வந்தான். எப்படியோ அடிப்படை பிரச்சனைகள் இரண்டு நல்ல விதமாக தீர்வதற்கான வழி உள்ளது என்ற விஷயம் ரொம்ப ஆறுதல் தருவதாக இருந்தது.

சாயங்காலமாகியும் ரவி திரும்பி வரவில்லை.

பி-ட்டுவான சந்திரனுடன் மெஷினை செக் பண்ணலாம் என்று பெட்டியைத் திறந்து அவற்றை வெளியில் எடுத்தான்.

இரண்டு யூனிட்டுகளையும் கனெக்ட் செய்தான். ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தான். முதலில் சரியாக எத்தனை வேட்பாளர்கள் என்று காட்டியது. பதினைந்து காட்டிய பிறகு ஒவ்வொருவருக்கும் எந்த வாக்கும் பதிவாகவில்லை என்பதையும் காட்டியது. திருப்தியாக இருந்தது.

"சரி, வோட்டுப் போட்டு பார்த்துவிடலாம்" என்று 'பாலட் பட்ட'னை அழுத்தினான்.

LE என்று காட்டியது.

திக் என்றது.

மறுபடி முயன்றான். மறுபடி LE. மறுபடி முயன்றான். எத்தனை முறை முயன்றாலும் Link Error என்றே செய்தி வந்தது. வயர்கள் சரியாக சொருகப்பட்டிருக்கின்றனவா என்று மறுபடி மறுபடி செக் பண்ணினான். எல்லாம் சரியாகத்தான் இருந்தது.

கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை. அடப்பாவிகளா! என்னாகப் போகிறதோ! எங்கே போய்த் தொலைந்தார்களோ? ஒரு ஃபோன் நம்பர் கூடத் தரவில்லையே! எந்த எண்ணில் அவர்களைப்பிடிப்பது? எல்லாம் தன் தலைமீது இருக்கிறதே! அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ரிலாக்ஸ். ரிலாக்ஸ். கண்ணை மூடி அமைதியாக நான்கைந்து மூச்சு விடு. Face the music. Ok. என்ன பிரச்சனையாக இருக்கும் என்று அமைதியாக யோசித்தான். எர்ரர் மெஸேஜஸ் பற்றி படித்ததையெல்லாம் நினைவு கூர்ந்தான். திடீரென்று ஒரு ஃப்ளாஷ். உடனே வாக்குப் பதிவு ஆகும் பகுதியில் செக் பண்ணினான்.

அவன் நினைத்தது, இல்லை அவனுக்கு ஃப்ளாஷ் ஆனது, சரிதான். பாலட் யூனிட்டில் இருந்த ஸ்லைட் ஸ்விட்ச்சில் 1 என்று செட் பண்ணுவதற்கு பதிலாக 2 என்று செட் பண்ணியிருந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ். டென்ஷனாகும் சமயங்களில் வேண்டுமென்றே விடும் நெடிய மூச்சுகள் நீடூழி வாழ்க! வேட்பாளர்கள் 16 பேர்வரை ஒரு மெஷின் தான். அதில் 1 என்றுதான் செட் பண்ணவேண்டும். ஆனால் 16க்கு மேலிருந்தால் 32 வரை 2 என்று செட் பண்ண வேண்டும். தவறாக செட் பண்ணியிருப்பதால் எர்ரர் அடிக்கிறது.
ஆஹா, நோய் நாடி நோய் முதலும் நாடியாகிவிட்டது! அது தணிக்கும் வாயை மட்டும் அந்த முட்டாப் பயல்கள் வந்துதான் வாய்ப்பச் செயவேண்டும். அதையும் தானே செய்யலாம். ஆனால் அந்த யூனிட்டுக்கு சீல் வைத்து அதற்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள்.

தன் ரிலையன்ஸை எடுத்தான். கொடுக்கப்பட்ட தாள்களில் முக்கிய தொலைபேசி எண்கள் என்று ஒரு ஐம்பது எண்கள் அச்சிட்ட ஒரு தாளும் இருந்தது. அதில் பக்கத்து ஊருக்கு ஒரு எண்ணை தேர்வு செய்து முயன்றான். சாரி, சர்வீஸ் இல்லை என்று சொன்னது ரிலையன்ஸ்.

"போஸ் இங்கெ வா. ஒரு ஃபோன் பண்ணனும். எங்க போவனும்?"

"இங்கே பூத் எதுவும் இல்லெ சார், வீட்லேருந்துதான் பண்ணனும் வாங்கசார்" என்றான்.

"சந்த்ரன், இதெ பத்திரமா பாத்துக்குங்க. நா போயி ஒரு ஃபோன் போட்டு சொல்லிட்டு வந்துர்றேன்"

"நம்பர் தெரியுமா சார்?" என்றார் அவர்.

"உங்களுக்குத் தெரியுமா?"
 
"தெரியும் சார்" என்று ஒரு நம்பரைக் கொடுத்தார். முக்கியமான தொலைபேசி எண்கள் என்று ஒரு லிஸ்ட் இருந்ததை பிறகுதான் ஷாஹுல் கண்டுபிடித்தான். ஆனால் சந்திரன் கொடுத்த எண் அந்த லிஸ்ட்டில் இல்லாதது. அதையும் வாங்கிக்கொண்டு சென்றான்.

போஸ் தன் சைக்கிளில் வைத்து ஷாஹுலை ஒரு வீட்டுக்கு கூட்டிச் சென்றான். தெருக்களெல்லாம் நல்ல அகலமாக இருந்தன. சிமெண்ட் வீதிகள். ஓட்டு வீடுகள். நிறைய புதர்களும் மரங்களும் மாடுகளும் ஆங்காங்கு. நகரங்களில் இல்லாத ஒரு அமைதி குடிகொண்டிருந்தது. இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்று தாத்தா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

ஒரு வீட்டின் முன் சைக்கிள் நின்றது.

செருப்பை தெருவிலேயே விட்டுவிட்டு போஸ் உள்ளே போய் ஷாஹுலை அறிமுகப்படுத்தினான்.

வாங்க சார் என்று உபசரித்தார்கள். ஷாஹுலும் ஷூவை தெருவிலேயே கழற்றிவிட்டு உள்ளே போனான். தொலைபேசி இருந்த அறைக்கு செந்தில் என்ற ஒரு இளைஞர் அழைத்துச் சென்றார்.

"ஹலோ, கொந்தவாசி தாலுகா ஆஃபீஸ்" என்று மறுமுனையில் குரல் வந்தது.

"ஹலோ, நான் சின்னதுரைலேர்ந்து ப்ரிசைடிங் ஆஃபீசர் பேசறேன். இங்கே கொண்டுவந்து கொடுத்த பாலட் யூனிட்ல ஸ்லைட் ஸ்விச்சை 2ன்னு ராங்கா செட் பண்ணியிருக்காங்க அதனால கன்ட்ரோல் யூனிட்ல லிங்க எர்ரர் வருது அதெ சரி பண்ணனும்" என்று ஒரு எக்ஸ்பர்ட் போலப்பேசினான் ஷாஹுல். அவனுக்கேகூட அந்த தன்னம்பிக்கையான பேச்சு கொஞ்சம் ஆச்சரியம் ஏற்படுத்துவதாக இருந்தது.

"வணக்கம் சார், சரிசார், ஒடனே ஆளனுப்பறோம். பூத் நம்பரென்ன சார்?"

"29"

"ஓகே சார்"

தொலைபேசிவிட்டு நன்றி சொல்வதற்காக நிமிர்ந்தான். கையில் காபி டம்ளரோடு ஒரு அம்மா நின்று கொண்டிருந்தார்.

"இப்பதாம்மா டீ சாப்ட்டேன்" என்றான்.

"இருக்கட்டும் சார், எங்க ஊருக்கு வந்திருக்கிங்க, கொஞ்சம் சாப்டுங்க" என்றது.

சாப்பிட்டுவிட்டு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

மனம் கொஞ்சம் லேசாகியிருந்தது

oooOOooo
[ பாகம் : 6 ]

இரவு எட்டுமணி வரை யாரும் வரவில்லை. அவனுக்கு மறுபடி பயம் கவ்விக்கொண்டது. நாளைக்கு தேர்தல் நடத்த வேண்டுமே! மறுபடி தொலைபேசலாம் என்று சந்திரனைக் கூப்பிட்டான். சந்திரனும் அவனும் சந்திரனின் 'பைக்'கில் பக்கத்து ஊருக்குச் சென்றார்கள். அங்கிருந்த ஒரு எஸ்.டி.டி. 'பூத்'திலிருந்து மறுபடி பேசினான்.

"தெரியும் சார், கொந்தவாசிலேர்ந்து அவங்க வரணும் சார், அம்பது கிலோமீட்டர். நிச்சயமா வருவாங்க" என்று பதில் வந்தது.

பேசிவிட்டு பைக்கில் கிளம்பும்போது சந்திரன் கேட்டார்.

"சார், ரிசீப்ட் ஏதும் வாங்குனீங்களா?"

"இல்லையே ஏன்?"

"அப்பதானே சார் க்ளைம் பண்ணலாம்?"

"அட வுடுங்க"

"அதில்ல சார், கடைசிலெ நீங்க இன்ஃபார்ம் பண்ணவே இல்லேன்னுட்டா? ப்ரூஃப் வேணும்ல?"

அவர் சொன்னது சரியாகத்தான் பட்டது. மறுபடியும் வண்டியைத் திருப்பி 'பூத்'துக்குப் போனோம். ரிசீப்ட் எல்லாம் வராது என்றார் பூத்தில் இருந்தவர். அப்ப, அந்த நம்பரை ஒரு தாளில் எழுதி அதில் அவர் கையெழுத்து வாங்கிக்குங்க என்றார் சந்திரன். அப்படியே செய்தோம். அவரும் அனுபவஸ்தர் போலுள்ளது.

கடைசியில் ஒன்பது மணிக்கு ஒரு ஜீப் வந்தது. அதிலிருந்து இறங்கியவர்களில் அந்த கரணபுரத்தில் மைக் வைத்து விளக்கியவரும் இருந்தார்.

வந்து செக் பண்ணி சரி பண்ணிக் கொடுத்தார்கள். ஆனால் அதற்கு அவர்கள் சொன்ன காரணம் வினோதமாக இருந்தது.

"நாங்க, ஒன்னுன்னு செட் பண்ணி சீல் வச்சது எப்படி சார், ரெண்டுன்னு மாறும்? நீங்க எதாவது செஞ்சிங்களா?

"இல்லெ சார்"

"பின்னே எப்டி சார் மாறும்?"

"ட்ரான்சிட்ல எதாச்சும் லூசாகி இருக்கலாம்"

"அதெப்டி சார் லூசாகும்? நாங்க சரியா செட்பண்ணி, அரக்கு வச்சு சீல் பண்றோம் அதெப்டி சார் லூசாகும்? வேலூர்ல ட்ரய்னிங் எடுத்த எல்லாரும் இப்டிதான் சார் பண்றாங்க. உங்க ட்ரெய்னிங் எங்கே சார் எடுத்திங்க?"

அவன் கேட்ட கேள்வியில் ஒரு இளக்காரம் இருந்தது. பழியை தூக்கி நம்மீதே போட்டான்.

"நீங்கதான் சார் கரணபுரத்தில ட்ரெய்னிங் குடுத்திங்க" என்றான் ஷாஹுல்.

அந்த நெட்டைக் கருப்பன் கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

"சரி, இப்ப சரியா ஒர்க் பண்ணுதில்லையா சார்? என்று பேச்சை மாற்றினான்.

"ஓகே சார்" என்றதும் கிளம்பிச் சென்றான்கள்.

உண்மையில் அவன் ட்ரெய்னிங்கைவிட உள்ளூரில் கொடுத்த இரண்டாவது பயிற்சி நன்றாகத்தான் இருந்தது. ஒரு தாசில்தார் பொறுமையாக அழகாக விளக்கத்தான் செய்தார். அது பயன்கொடுக்கவே செய்தது.

அவர்கள் சென்றதும் தலைவர் வந்தார்.

"சார், போலிங் ஏஜெண்டுகள் யாரும் இதுவரை வரலெ. காலைலெ ஏழு மணிக்கி போலிங் ஆரம்பிக்கணும். ஒரு ஆறரை மணிக்காவது வந்தாதான், நா அவங்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்திக் காட்ட முடியும்" என்றான் ஷாஹுல்

"சரி சார்" என்று சொன்னவர், பின் மறுபடி திரும்பி வந்து, "நாளைக் காலைலேர்ந்து சாப்பாடெல்லாம் நா ஏற்பாடு பண்ணிடறேன் சார்" என்று சொல்லிச் சென்றார்.

அவர் போனபிறகு அன்றைய இரவுச் சாப்பாட்டிற்காக ஏற்கனவே காசு கொடுத்திருந்ததால், சொன்னபடி சப்பாத்தியும் தோசையும் வாங்கி வந்தான் போஸ்.

எல்லாரும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

திடீரென்று, "ஏற்பாடு பண்ணிட்டேன் சார்" என்றான் ரவி.

என்ன ஏற்பாடு? ஒருவேளை அந்த போஸ்டர்களையெல்லாம் ஒட்டுவதற்கு ஏதும் சொல்லி வைத்திருக்கிறானா?

"என்ன ஏற்பாடு?"

"சார், எனக்கு இங்க தர்ற சாப்பாடு ஒத்துக்காதுல்ல? அதனாலெ சுகர் பேஷண்ட்டுக்கு ஏத்தமாதிரி எதுத்த வூட்டுலெ கேப்ப கலிக்கி ஏற்பாடு பண்ணிட்டன்ல" என்றான் பெருமையுடன்.

பற்றிக்கொண்டு வந்தது.

பத்தரை மணிக்கு மேல் பைக் சப்தம் கேட்டது.

திண்ணையில்தான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பைக்கில் வந்தவர்கள் இறங்கி வணக்கம் போட்டார்கள். பிறகு விசாரித்தார்கள். சாப்பாடு பற்றிக் கேட்டார்கள். சொன்னோம். அன்றே சாப்பாட்டுக்கு ஏன் தலைவர் ஏற்பாடு செய்யவில்லை என்று போஸைக் கடிந்து கொண்டார்கள். அவர்களோடு கூட வந்தவர்களில் ஒரு முதியவர் இருந்தார். அவர்தான் முன்னாள் தலைவராம். ஷாஹுலோடு கைகுலுக்கினார்.

"இங்கெல்லாம் ஒன்னும் பிரச்னெ வராது சார், ரூல்ஸ்படி நீங்க போங்க. அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்கன்னு எதுவும் செய்ய வேணா" என்று சொன்னார்.
குரலில் கொஞ்சம் அதிகார தோரணை இருந்தது.

சரி என்பதுபோல ஷாஹுல் தலையாட்டினான்.

ஏதோ வில்லங்கம் ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறி தென்படுவதாகத் தோன்றியது.

வந்தவர்களில் இரண்டுபேர் இளைஞர்கள். விசாரித்துவிட்டுப்போய், பாய் தலையணையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தார்கள். வீட்டிலிருந்து காஃபி போட்டு அனுப்பினார்கள்.

எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றியக் கட்டிட அறையில் ஃபேன் இருப்பதாகவும் அதில் விரும்பினால் படுத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். மின்விசிறியின் அடியில் படுக்க ரவியும் சந்திரனும் துடித்தனர். உடனே தலைவரிடம் சொல்லி அறை திறக்கப்பட்டது. மெஷின் இருக்கும் பள்ளிக்கட்டிடத்தைவிட்டு நகர ஷாஹுலுக்கு விருப்பமில்லை.

"நீங்க வேணா போய்ப் படுத்துக்குங்க, நா இங்கெயே இருக்குறேன்" என்றான்.

ஷாஹுலோடு படுக்க விருப்பமென லேட்டாக வந்த பி-த்ரீயும் சொன்னார்.

பள்ளிக்கட்டிடத்தை பக்கத்து குடிசையில் இருந்த ஒரு பெண்ணை அழைத்து பெருக்கச் சொன்னார் தலைவர். அவள் வந்து பெருக்கினாள். அவ்வளவு சுத்தமாகவும் பொறுமையாகவும் ஒரு பெண் பெருக்கியதை ஷாஹுல் அப்போதுதான் பார்த்தான். நகரங்களில் வேலை செய்யும் பெண்களிடம் இல்லாத பொறுப்பும் சுத்தமும் கிராமத்தில் இருப்பது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

ஃபேன் இருந்த அறை கடந்த காலத்தில் அரவை மில்லாக இருந்ததாம். தற்போது ஏதேதோ போட்டு 'டம்ப்' பண்ணி வைத்திருந்தார்கள். நெடி தாங்க முடியவில்லை என்று ரவியும் சந்திரனும் மறுபடி பழைய இடத்துக்கே ஓடி வந்துவிட்டார்கள்.

எல்லா சப்தங்களும் அடங்கிய பிறகு தனது பையிலிருந்து பாரதிபாலனின் வண்ணத்துப்பூச்சியைக் கொன்றவர்களை எடுத்தான் ஷாஹுல். நிம்மதியாக ஒரு எழுபது பக்கம் படிக்க முடிந்தது.

ஒரேயொரு தொல்லைதான். பூச்சிகள். ஒரு நிமிடத்துக்குள் ஏழெட்டு பூச்சிகள் சிறு சிறு வண்டுகள் என அனேக உயிரினங்கள் ஷாஹுலின் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டை, பனியன், லுங்கி என்று எல்லா இடங்களிலும் எப்படியோ ஊடுறுவி கூடாரம் அமைத்துக்கொண்டன. அவைகளை அவ்வப்போது வெளியேற்றிக்கொண்டே படிப்பதுதான் கஷ்டமாக இருந்தது.

இரவு ஒரு மணிக்கு வழக்கம்போல கழிவறைக்குச் சென்று நிம்மதியாக அமர்ந்தான்.

அப்போதுதான் அந்த சப்தம் காதில் விழுந்தது. தவளைகளின் மூச்சுவிடாத சப்தம். கொடகொடவென. எப்படித்தான் தொடர்ந்து அப்படிக் கத்துகின்றனவோ. ஆச்சரியமாக இருந்தது. அரைமணியானாலும் நிற்காத சப்தம். எதாவது தவளைக்குக் கல்யாணமாக இருக்குமோ? இருக்கலாம். அல்லது தவளைகள் நாட்டிலும் தேர்தலாக இருக்கலாம். தேர்தல் கலாட்டாவோ என்னவோ!

இந்த நினைப்பு வந்ததும் நாளைக்கு எப்படி விடியுமோ என்றிருந்தது.

அடிவயிற்றின் கனம் இறக்கி வைக்கப்பட்ட பிறகும் அடிவயிற்றில் ஏதோ ஒன்று உருண்டையாய் கனத்தது.

oooOOooo
[ பாகம் : 7 ]

தூக்கம் வரவில்லை. எப்படி வரும்? ஆனால் ட்யூப் லைட் வெளிச்சமும் 200 வாட் பல்பின் வெளிச்சமும் தூக்கம் வராததற்குக் காரணமல்ல என்று நிச்சயமாக அவனுக்குத் தெரியும். முற்றிலும் புதிய ஒரு அனுபவத்திற்கு தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தான். முதன் முறையாக பிரசவிக்கப்போவதைப் போல. நார்மல் டெலிவரியாக இருக்கத்தான் ஆசை. ஆனால் சிசேரியனாக இருக்கலாம். குழந்தை செத்துப் பிறக்கலாம். அல்லது...அதற்கு மேல் கற்பனை ஓடவில்லை.

அடிக்கொருதரம் எழுந்து பார்த்துக்கொண்டான். அவனும் நிலவும்தான் விழித்துக்கொண்டிருந்தார்கள். பி - ஒன், பி - ட்டு, பி - த்ரி எல்லாம் ஸ்லீப் - ஒன், ஸ்லீப் - ட்டூ, ஸ்லீப் - த்ரீ ஆகிவிட்டிருந்தது. அதிலும் லேட்டாக வந்தவர் லேசாக குறட்டைவிட ஆரம்பித்தார். அதை குறட்டை என்றுகூட சொல்ல முடியாது. லேசான முரட்டு தொனியில் ஆரம்பித்து புஸ் என்று வாய்வழி புஸ்வானமாக முடிந்துகொண்டிருந்தது அது. தனது முயற்சியில் சற்றும் தளராதவராக அவர் திரும்பத் திரும்ப அந்த ஒலியை ஒரு பரிபூரண குறட்டையாக்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்.

ரவி முழித்துக்கொண்டான்.

"ச்சே, தூக்கமே வரலெ சார். இவர் எப்டிசார் இவ்வளவு கொறட்டை விட்டு தூங்குறாரு? எங்க வீட்லெலாம் நா தூங்கப்போகும்போது ஒரு லேசான சத்தம்கூட இருக்கக்கூடாது". அவன் தன் நடுராத்திரி பீற்றலை ஆரம்பித்தான்.

ஷாஹுல் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

"கொசு கடி வேறெ. சார், டார்டாய்ஸ் வச்சிருந்திங்கல்ல, எங்கெ சார்? அதெக்கொளுத்தலாம்"

"உள்ளெருக்கு"

எழுந்து சென்று தேடி எடுத்து கொளுத்திக் கொண்டுவந்து ஷாஹுலுக்குப் பக்கத்தில் வைத்தான். அதன் நெடி மூக்கை அடைத்தது.

"ரவி, அந்தப்பக்கமா வைங்க"

"சரி சார்." அவன் தலைமாட்டுப் பக்கமாக வைத்துகொண்டான். கொஞ்ச நேரத்தில் எழுந்துகொண்டான்.

"சார், என்ன சார், மூச்சே விட முடியலெ?" என்றான்.

இப்படித்தானேடா எனக்கும் இருந்திருக்கும் என்று நினைத்துகொண்டே, "கால்பக்கம் வைங்க" என்றான் ஷாஹுல்.

கால்மாட்டுப் பக்கம் வைத்தான் ரவி. பின் படுத்தவன் கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனான்.

எல்லாருக்கும் சாத்தியமாகும் உறக்கம் ஏன் தனக்கு மட்டும் இல்லாமல் போகிறது? ஏன் எல்லார் மாதிரியும் தான் இல்லை? ஒருவேளை அதிகமாக பயப்படுவதுதான் காரணமாக இருக்குமோ? படிச்ச முட்டாள்கள் இப்படித்தான் இருப்பார்களோ? இது தூக்கமின்மை பற்றிய கவலையா அல்லது பயம் பற்றிய அலசலா என்று அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சரி ஏன் தேவையில்லாமல் இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து கொள்ள வேண்டும்? பேசாமல் படுப்போம் என்று படுத்தான். ஆனாலும் அவன் மனம் பேசிக்கொண்டேதான் இருந்தது. இரவின் அமைதியையும் கிராமத்து அழகையும் ரசிக்கவும் முடியவில்லை. தூங்கவும் முடியவில்லை. விழித்திருக்கவும் முடியவில்லை.

எழுந்து உட்கார்ந்து கொண்டான். மணி பார்த்தான். இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. லேட்டாகப் படுத்து வீட்டில் செய்வதுபோல் விடிகாலையில் தூங்கிவிட்டால்? அந்த நினைப்பு வந்ததும் மறுபடி படுத்துக்கொண்டான். தூங்க வேண்டுமென்றால் உடம்பை படுக்கை வாட்டில் போட்டுத்தான் ஆகவேண்டுமா என்று தனக்குள் கேட்டுக்கொண்டவனாய் கிடந்தான். என்னென்னவோ நினைவுகள். மனைவி, குழந்தைகள், மற்றும் காதல் காலத்து நினைவுகள் என மாறிமாறி வந்துகொண்டிருந்தன.

அப்படியே தூங்கிப் போனானா என்று தெரியவில்லை. மறுமுறை எழுந்து அவன் மணி பார்த்தபோது விடிகாலை நான்கு. அதற்குமேல் படுத்திருக்க வேண்டாம் என்று எழுந்து கொண்டான். ஒரு முடிவுக்கு வந்தவனாய், தேவைப்பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டு குடிநீர்த்தொட்டிக்குப் போய் குழாயைத் திறந்து பல் துலக்கினான். பின் பேஸ்ட் ப்ரஷ்ஷை மறுபடி பையில் வைத்துவிட்டு, வாளி, 'மக்' சகிதம் டாய்லட்டுக்குள் சென்றான்.

அந்த இருட்டு அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னை யாரும் பார்க்கவில்லை என்பது அவனுக்கு உகந்ததாய் இருந்தது. உள்ளே போனவன் டார்ச்சை ஏற்றி தலைகீழாக நிற்க வைத்தான். தண்ணீரை எடுத்து லேசாக கை, நெஞ்சு என்று தடவிக்கொண்டான். குளிர் பழகியதும் எடுத்து மேலுக்கும் தலைக்கும் ஊற்றிக்கொண்டான். காக்காய்க் குளியல்தான் என்றாலும் அது ஒரு ஃப்ரெஷ்னஸைக் கொடுத்தது.

வந்து பவுடர் அடித்து, எண்ணெய் பூசி, தலைவாரி, பனியன் போட்டு, ஷர்ட்டை இன்பண்ணி, பேண்ட் ஷுவெல்லாம் போட்டவுடன் உண்மையிலேயே ஒரு அதிகாரி போலவே இருந்தான். மணி பார்த்தபோது நாலறைதான் ஆகியிருந்தது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக அதிகாலை நாலு  மணிக்கு எழுந்து, குளித்து நாலறை மணிக்கே தயாரானது அன்றுதான். ஆனால் அது நன்றாக இருந்தது. தினமும் அப்படிச் செய்யவேண்டும் என்று தோன்றியது.

ஐந்து மணி வாக்கில் ரவி விழித்துக்கொண்டான். முதலில் ஷாஹுலைத்தான் பார்த்தான்.

"என்ன சார், ரெடியாயிட்டிங்களா?" என்றான் ஆச்சரியத்தோடு.

"அஞ்சு மணியாகுது ரவி. இன்னமும் லேட் பண்ணக்கூடாது. போஸ்டரெல்லாம் ஒட்டணும். எழுந்திருங்க" என்றான்.

"தோ சார்", என்று எழுந்தவன் காலைக்கடன்களை முடிக்கச் சென்றான். பேஸ்ட் சகிதமாக திரும்பி வந்தவன், "சார் இது ஸ்பெஷல் பேஸ்ட் சார், ஷுகர் இருக்குதுல்ல? அதுக்காக இது ஸ்பெஷல் பேஸ்ட் சார்" என்று அநதைக் காட்டினான். நோய் வருவதில்கூட ஒரு மனிதனுக்குப் பெருமை இருக்க முடியுமா?!

குளித்துவிட்டு ரெடியாக வந்தவன் வாக்குப்பதிவுக்கான வேலைகளைப் பார்ப்பான் என்று நினைத்த ஷாஹுலுக்கு அவன் வெளியே கிளம்பியது ஆச்சரியமாகவும் ஏரிச்சலாகவும் இருந்தது.

"எங்கே போறீங்க ரவி?"

"வாக்கிங், சார். ஒரு மைலாவது டெய்லி நடக்கணும் சார் நான்" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் சென்றுகொண்டே இருந்தான்.

அவனை நம்பி பிரயோஜனமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, போஸ் வந்தான். அதற்குள் சந்திரனும் மூன்றாவது ஆளும் விழித்திருந்தனர். அவர்களிடம் போஸ்டர்கள் ஒட்டுவது பற்றி சொன்னான். உடனே அவர்கள் உதவ முன் வந்தனர். காலைக்கடன்களை முடித்ததும் போஸும் சந்திரனும் போஸ்டர்களையெல்லாம் ஒட்டினர்.

ஒட்டி முடிக்கவும் ரவி வரவும் சரியாக இருந்தது.

பின் எல்லாருமாய்ச் சேர்ந்து பூத் ரெடி பண்ணினர். அதில் சந்திரனுக்கு நல்ல அனுபவம் இருந்ததை அவர் வேலை காட்டியது. அட, இவ்வளவு சிம்பிளா இந்த வேலை என்று ஷாஹுல் வியந்தான்.

ஆறரை மணி வாக்கில் ஒரு பத்து போலிங் ஏஜெண்ட்டுகள் வந்தனர். தலைவரும் வந்திருந்தார். ஆளும் கட்சி வேட்பாளரின் ஏஜண்ட் அவர்தான். எல்லாரிடமும் மாதிரி வாக்குப் பதிவை நடத்திக் காட்டி சீல் வைத்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டான் ஷாஹுல். ஏற்கனவே பல தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு யந்திரத்தை பயன்படுத்திய மாதிரி அவன் ரொம்ப லாவகமாக அதைக் கையாண்டது அவர்களுக்கு மட்டுமல்ல, அவனுக்கேகூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. புத்தகத்தில் படித்துவிட்டும் குளத்தில் நீந்த முடியும் போலுள்ளதே!

சரியாக ஏழு மணிக்கு முதல் வாக்குப் பதிவு நடந்தது. வந்தவர் எந்த பிரச்சனையும் தராமல் ஓட்டுப்போட்டுவிட்டு சென்றார். மெல்ல அமைதியாக நடந்தது வாக்குப்பதிவு. முதல் இரண்டு மணி நேரத்தில் நூறுபேர் ஓட்டுப் போட்டிருந்தார்கள். ஒன்றும் பிரச்சனையில்லை போலுள்ளதே என்று ஷாஹுலுக்கு சந்தோஷமாக இருந்தது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்தில் பதிவான மொத்த வாக்குகளையும் குறித்துகொண்டே வந்தான். முதலில் ரவி சோம்பேறித்தனமும் ஷுகர்த்தனமும் காட்டினாலும் வாக்காளர்களின் அடையாளங்களைச் சரிபார்ப்பது போன்ற வேலைகளை சரியாகவே செய்தான். அவன்தான் சொதப்பிவிடுவான் என்று ஷாஹுல் முதலில் நினைத்தான்.

பகல் நேரத்தில் ஒரு அம்மா வந்தாள். கையில் அடையாளமெல்லாம் வைத்துவிட்டு ஓட்டுப் போடச் சொன்னதும், "சீட்டு எங்கெ?" என்று கேட்டாள்.

"சீட்டெல்லாம் கெடயாதும்மா, உள்ளே போ. அந்த மெஷின்ல நீ எந்த கச்சிக்கி ஓட்டுப் போடணுமோ அதுக்கு நேரா இருக்குற பட்டனெ அமுக்கு" என்று மோகன் -- பி-த்ரியின் பெயர் -- விளக்கினார்.

சரி சரி என தலையாட்டி உள்ளே சென்ற அந்த அம்மா ரொம்ப நேரமாக எதையோ அழுத்திக்கொண்டிருந்தாள். கடைசியில் ஷாஹுல் உள்ளே போக வேண்டியதாயிற்று.

சின்னத்தை ஒட்டியிருந்த சிவப்பு விளக்கை அவள் அழுத்திக்கொண்டிருந்தாள்.

"இதல்லம்மா, இங்கெ இருக்கு பாருங்க, இதெ அழுத்தணும்" என்று ஷாஹுல் விளக்கினான். பிறகு அழுத்தினாள்.

அடுத்தடுத்து வந்த எல்லாப் பெண்களுமே இண்டிகேட்டரை அழுத்திக்கொண்டிருந்ததால் ஒவ்வொருவருக்குமே ஷாஹுல் போக வேண்டியதாயிற்று.

ஒரு அம்மா உள்ளே போய் சும்மாவே இருந்தாள்.

"என்னம்மா, ஓட்டு போடுங்க."

யோசித்தாள்.

"எந்த கச்சிக்கி போடணும்?" உள்ளே அவளுக்கு உதவச் சென்ற ஷாஹுல் கேட்டான்.

இரண்டு விரலைக் காட்டினாள்.

இரட்டை இலை சின்னம் இருந்த இடத்தை ஷாஹுல் காட்டினாள். சரி என்று கேட்டுக்கொண்ட அவள் யானை சின்ன பட்டனை அழுத்தினாள்.

இன்னொரு கிழவி வந்தாள். அவளுக்கும் அதே பிரச்சனைதான்.

"எதுக்கும்மா ஓட்டு போடனும்?"

"எதுக்காச்சும் போடு"

"நாம் போடறதில்லம்மா. நீங்கதாம் போடணும். எதுக்கு போடப்போறீங்க?"

"தெரியலையே" கையை விரித்தாள்.

"தெரியலேன்னா எப்படிம்மா, எதுக்காச்சும் போடு"

"இது என்ன?" மேலே காட்டினாள்

"அது பம்பரம்."

"அதுக்கே போடு" என்றாள்.

வேறுவழியின்றி அவளுக்காக பம்பரத்தில் அழுத்திவிட்டு வந்தான் ஷாஹுல்.

கிட்டத்தட்ட இரு நூறு பேருக்கு மேல் ஓட்டுப்போடும் இடத்துக்கு உள்ளே போய் ஷாஹுல் விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது.

"பேரென்னம்மா?"

"சின்னக் கொலந்தெ"

"எலக்ஷன் அட்டெ இருக்கா?"

"அப்டீன்னா?"

"ஃபோட்டோ  பிடிச்சாங்கல்ல? அந்த ஃபோட்டோ "

"புடிக்கலியே"

"அப்ப ரேஷன் கார்டு இருக்கா?"

"அப்டீன்னா"

"சக்கரெ அட்டெமா"

"இருக்கு"

"அதெக்காட்டு"

"வூட்ல ருக்கு"

"என்ன சார் ஒன்னுமே இல்லாம எப்டி சார் அனுமதிக்கிறது?"

ரவி ஷாஹுலைப் பார்த்தான்

அதற்குள் போலிங் ஏஜெண்டுகள், அவளைத் தெரியும் என்றும் அனுமதிக்கலாம் என்றும் சொன்னார்கள்.

"சரி போம்மா"

ரேஷன் கார்டு காட்டி ஓட்டுப்போட்டு விட்டு வந்த ஒரு பொம்பளை கேட்டாள்.

"என் சக்கரை எங்கெ?"

"சக்கரையா?இங்கே என்ன சக்கரெ அரிசியெல்லாமா போடுறாங்க?"

"என் சக்கரெ அட்டெ எங்கெ?"

"ஓ கார்டா? இந்தா"

ஒரு அம்மா ஓட்டுப் போட்டுவிட்டு போனபோது ஒரு ஏஜண்ட் கேட்டார்.

"ரெட்டெ எலைக்கிப் போட்டியா?"

"ஆமா" என்று அவள் தலையாட்டினாள்.

"பத்து ரூவா குடுத்தாங்களா?" என்றார்.

"ஆமா" என்று சிரித்துக்கொண்டே அவள் சென்றாள்.

ஒரு கிழவர் வந்தார். அசிங்கமசிங்கமாக யாரையோ திட்டிக்கொண்டே. அவரால் நிற்க முடியவில்லை. ஷாஹுல் எழுந்து சென்று அவரைப் பிடித்து உதவினான். அவர் மீது சொல்லமுடியாத அளவு நாற்றமடித்தது. உடம்பு சேறாட்டம் இருந்தது. ஒரு வினாடி தொட்டதுதான். கைபூரா ஈரமாகிவிட்டது. ஒரு விதமான பிசுபிசுப்புடன். அவரை அவன்தான் உள்ளே அழைத்துச் சென்று அவர் சொன்னபடி பம்பரம் சின்னத்தில் ஓட்டும் போட்டு வெளியே அழைத்து வந்து விட்டான். அவர் போனபிறகு கையைக் கழுவிக் கொண்டான்.

ஒரு மணியளவில் சாப்பாடு வந்தது. கொஞ்ச நேரம் வாக்குப் பதிவை நிறுத்தி விடலாம். நீங்க எல்லாரும் ஒன்னா சாப்பிடுங்க. பொறவு வச்சுக்கலாம் என்று தலைவர் சொன்னதும்தான் தாமதம் ரவி உடனே எழுந்துவிட்டான்.

கதவுகளை மூடிவிட்டு எல்லாரும் அமர்ந்து சாப்பிட்டோ ம்.

ஒன்றரை மணி வாக்கில் மறுபடி வாக்குப்பதிவு ஆரம்பித்தது.

முக்கால் வாசிப்பேர் தேர்தல் கமிஷன் குறிப்பிட்டிருந்த 14 வகையான டாகுமெண்ட்டுகளில் எதையுமே எடுத்து வராதவர்களாகவே இருந்தார்கள். ஏஜெண்ட்டுகள் சொன்னதன் பேரில்தான் அவர்களெல்லாம் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்கள். அது சரியா தவறா என்று ஷாஹுலுக்கு விளங்கவில்லை. அவன் வெறும் சாட்சியாக இருந்து நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒருவன் பெயர் வாக்காளர் பதிவுப் பட்டியலில் இருந்து அடிக்கப்பட்டிருந்தது. அவனை ஓட்டுப்போட அனுமதிக்கலாம் என்று தலைவரும் இன்னும் பலரும் வந்து ஷாஹுலைக் கேட்டுக்கொண்டனர். திரும்பி உயிருடன் வீட்டுக்குப் போவோமா என்ற பயமிருந்தாலும், காமராஜர் பாணியில் பார்க்கலாம் என்றான் ஷாஹுல்.  கடைசியில் அவனை ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை. ஆனால் பிரச்சனை ஏதும் வரவில்லை.

சரியாக ஐந்து மணிக்கெல்லாம் ஓட்டுப்பதிவு ஏஜண்ட்டுகள் முன்னிலையில் க்ளோஸ் பண்ணப் பட்டது. மொத்தம் 517 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் பெண்கள்தான் அதிகம் போட்டிருந்தனர்.

ஐந்தரை மணிக்கெல்லாம் எல்லாம் முடிந்துவிட்டது. நிரப்ப வேண்டிய படிவங்களையெல்லாம் நிரப்பினான். சீல் வைக்க வேண்டியவற்றையெல்லாம் வைத்தான். எல்லாம் ரெடி. காத்திருந்தார்கள். காத்திருந்தார்கள். யாரும் வரவில்லை. எப்போது வருவார்கள் என்ற தகவலும் இல்லை. பயங்கரமாக சலிப்பேற்பட்டது.

எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் ஊருக்குக் கிளம்ப முடியாது.

மறுபடி பாரதிபாலனை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தான். படிப்பதில் மனம் ஓடவில்லை. புத்தகத்தை மூடினான். ஓட்டுப்போட வந்த பெண்களைப் பற்றியே நினைப்பு வந்துகொண்டிருந்தது. 

இரண்டு பென்ச்சுகளை சேர்த்துப் போட்டு அதில் படுத்துக்கொண்டான். சுகமான காற்று வீசியது. ஆனால் எதையுமே ரசிக்கும் மனநிலை இல்லை. பிரச்சனை ஏதும் ஏற்படாவிட்டாலும் மக்கள் ஓட்டுப்போட்ட விதம் அவனை என்னவோ செய்தது.

கடைசியில் இரவு 12க்கு மேல் வந்தார்கள். அந்த வழுக்கை மண்டையும் இன்னொருவரும், ஒரு போலிஸும். எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு காசையும் வாங்கிப் பங்கிட்டுக் கொடுத்தான். அதற்குமேல் ஊருக்கு பஸ்ஸும் கிடையாது. காலையில்தான்.

மறுபடி எல்லாரும் படுத்தார்கள்.

விழித்தபோது அதிகாலை ஐந்து மணி.

ஜோதிகாபுரத்துக்கு முதல் பஸ் ஆறு மணிக்கு என்றார்கள். ஷாஹுலும் ரவியும் ரெடியானார்கள். பள்ளிக்குப் பக்கத்தில்தான் இருந்தது பஸ்-ஸ்டாப் என்றாலும் லேசாக தூறிக்கொண்டிருந்தது.

ரவிக்கு சளி பிடிக்க ஆரம்பித்திருந்தது.

"சார், இந்த பானெ தண்ணி ஒத்துக்கலெ சார்" என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

"என்ன ரவி, வாக்கிங் போகலையா?" என்றான் ஷாஹுல்.

சந்திரனும் மோகனும் சிரித்தார்கள். ரவி ஒன்றும் சொல்லவில்லை.

பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருந்தபோது அந்த அம்மா வந்தாள். ஒரு குடத்தைத் தூக்கிக் கொண்டு. தண்ணீர் பிடிக்க எங்கோ.

"சார், இந்தம்மாதானெ சார் பத்து ரூபா வாங்கிகிட்டு ரெட்டெ எலக்கி ஓட்டுப்போட்டேன்னு சொன்னது?" என்றான் ரவி.

அப்படித்தான் தோன்றியது.

வந்தவள் ஷாஹுலைப் பார்த்ததும் நின்றாள்.

"என்னா சார், ஊருக்குக் கெளம்பிட்டியா?

"ஆமாம்மா"

"எங்கெ தண்ணி புடிக்கவாம்மா?"

ஆமா என்பது போல தலையாட்டினாள்.

"என்னம்மா, நேத்து பத்து ரூவா லாவமா ஒனக்கு ?" என்றான் ரவி வேண்டுமென்றே.

"இன்னமோ போ, ஒரு பொம்மக்கி போடறதுக்கு பத்துரூவா குடுத்தாங்க. எல்லாரும் ஆளுக்கு பத்து பத்து ரூவா குடுத்திருந்தா எனக்கும் காசு கெடச்சிருக்கும், நானும் எல்லா பொம்மைக்கிம் போட்டிருப்பன்ல?" என்றாள்.

ஷாஹுல் புன்னகைத்தான். அதற்குள் பஸ் வந்துவிட்டது.

ஏறி உட்கார்ந்தபோது தூரலோடு கலந்த அதிகாலைக் காற்று சில்லென்று அடித்தது. எல்லாம் முடிந்துவிட்டது. பயந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்தியாவின் ஆன்மாவுக்குள் ஷாஹுல் மேற்கொண்ட இரண்டு நாள் பயணம் அவனை என்னவோ செய்திருந்தது.

வண்ணத்துப் பூச்சிகள் சாகவில்லை. வண்ணத்துப் பூச்சிகளை யாரும் கொல்லவுமில்லை. ஆனாலும், இரும்பால் செய்த மாதிரி கனமாக ஆகிவிட்டிருந்தது வண்ணத்துப் பூச்சி.

 

** முற்றும் **

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors