தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்

[ எழுத்தாளர் தேவை ]

பதினேழு பதினெட்டு வயசில் கதை எழுத வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. நானும் எழுத வேண்டும். எல்லா பத்திரிகையிலும் என் பெயர் கொட்டை எழுத்தில் போட்டு கதை வர வேண்டும். இலக்கை நிர்ணயித்தாயிற்று. அதை அடைந்தே தீருவதென்று முடிவு பண்ணினேன்.

அப்போதுதான் தினத்தந்தியில் அந்த விளம்பரம் பார்த்தேன். புதிதாகத் துவங்கும் மாதப் பத்திரிகையில் எழுத எழுத்தாளர் தேவை. குன்னூர் முகவரி போட்டிருந்தது. வயசான காலத்தில் பையனின் ஆதரவில்லாமல் அவதிப்படும் ஒரு தாயைப் பற்றி சின்னதாய் ஒரு கதை எழுதி அனுப்பி வைத்தேன். கதை அமைப்பு, வர்ணணை எல்லாமே கொஞ்சம் மட்டமாய்த்தான் இருந்தது. (பின்னாளில் அதே கருவை எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுதி அந்தக் கதை குமுதம் ஸ்பெஷலில் வெளிவந்தது.)

இவர்களுக்கு வந்த மற்ற கதைகள் எல்லாம் அதை விட மட்டம் போலும். அடுத்த வாரமே எனக்கு லெட்டர் வந்தது. கதை மிகவும் அருமை. முதல் இதழில் உங்கள் கதையைத்தான் வெளியிடப் போகிறோம். புத்தக வெளியீட்டு விழா அடுத்த மாதம் பதினெட்டாம் தேதி. விழாவுக்கு அவசியம் வரவும். வெண்ணிலா என்ற பெண் கையெழுத்துப் போட்டிருந்தார். பதினேழரை வயசுப் பையனுக்கு வந்த வாழ்வைப் பாரேன் ! எழுத்தாளர் ஆவது இத்தனை சுலபமா?

அப்பாவிடம் பஸ்ஸுக்கு காசை வாங்கிக் கொண்டு குன்னூர் போனேன். ஒரு காது குத்து மண்டபத்தில் முப்பது பேருக்கு மத்தியில் எனக்கு மாலை போட்டு கை தட்டினார்கள். வெண்ணிலா மைக்கில் இவர் நெருப்பு, புயல் என்றெல்லாம் என்னைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். நான் அப்படியே சந்தோஷத்தில் மேகம் போல மிதக்க ஆரம்பித்தேன். சாணித் தாளில் வெளியிடப்பட்ட அந்த பல்சுவை (?!) மாத இதழ் 32 பக்கங்களில் அச்சிடப்பட்ட கோயில் நன்கொடைப் புத்தகம் மாதிரித்தான் இருந்தது. பெயரை அச்சில் பார்த்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் மனசின் ஒரு மூலையில் லேசான அரிப்பு. இதை எத்தனை பேர் வாங்கிப் படிக்கப் போகிறார்கள்?

இந்த மாதிரி லாஜிக்கல் கேள்வி கேட்டு எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க விடாத மனசாட்சியைத் தட்டுத் தட்டி உட்கார வைத்து விட்டு - வெண்ணிலா அண்ட் கோ-விடம் பிரியா விடை பெற்றேன். மத்தியான பஸ் பிடித்து - வீடு வந்து சேர்ந்ததும் - மாலை மரியாதை எல்லாவற்றையும் சொல்லி அம்மா, சித்தி, மாமா, தங்கை எல்லாரையும் வாய் பிளக்க வைத்தேன். அப்பா மட்டும் நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்தார்.

" உனக்கு ஒரு பார்சல் வந்திருக்கு. " என்றார்.

" என்ன பார்சல்? யார் அனுப்பிருக்கா? "

" வெண்ணிலா. குன்னூர். "

அவசர அவசரமாய் பார்சலைக் கிழித்தேன்.

இத்துடன் நூறு நோட்டீஸ்களும், ஐநூறு இதழ்களும் அனுப்பி வைத்திருக்கிறேன். இதழை உங்கள் பகுதியில் விற்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். இப்படிக்கு வெண்ணிலா.

oooOOooo
[ பின்னாள் பிரபலங்கள் ]

குன்னூரில் நடந்த பட்டாபிஷேகத்தின் விளைவாய் இவன் கதை எழுதற ஆள் என்று அக்கம் பக்கம் ஸ்தாபிதமானது.

அடுத்த தெருவிலிருந்து ஆர்ட்ஸ் காலேஜில் படிக்கும் சந்திரசேகரும், பாலிடெக்னிக்கில் படிக்கும் என் சீனியர் கணியனும் (வேண்டாமெனக் கேட்டுக் கொண்டதால் இவர் பெயரை மாற்றியுள்ளேன்.) வந்து ஹலோ சொல்லி கை குலுக்கினார்கள்.

" நாங்க கவிதை எழுதுவோம். " சந்திரசேகர் ஒரு குயர் நோட்டை நீட்டினார். அப்போது மு. மேத்தாவின் தாக்கம் எல்லா பையன்களிடமும் இருக்கும். எல்லோரும் பண்ணாத காதலில் தோற்றதைப் பற்றி வரிகளை மடக்கி மடக்கிப் போட்டு பக்கம் பக்கமாய் புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்தக் கும்பலிலிருந்து கணியன் மட்டும் சற்றே விலகி இருப்பார். அவர் விஞ்ஞானம், மெஞ்ஞானம் என்று பேசுவார். மனதை அடக்குவது, சாகாக் கலை ஆராய்ச்சி என்று புதிர் புதிராகப் பேசுவார்.

கதை எழுதினால் பணம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, மனிதர்களை சம்பாதிக்கலாம் என்று அன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன். அதே நாளின் சாயந்தரம் என்னுடன் படித்த பாஸ்கரும், அவர் அண்ணன் ராஜசேகரும் வந்து, " நாங்க ஒரு பத்திரிகை ஆரம்பிச்சா அதில் நீங்க எழுதுவிங்களா? " என்றார்கள். சந்தோஷமாய்த் தலையாட்டினேன். ட்விஸ்ட் அதற்கப்புறம்தான் வந்தது. " கையெழுத்துப் பத்திரிகை " என்றார்கள். அதற்கும் தலையாட்டினேன்.

சந்திரசேகர், கணியனிடம் ஆலோசித்ததில் - " 'புல்லாங்குழல்'-ன்னு பேர் வைங்க. " என்றார் கணியன். வைத்தாயிற்று. போட்டோ ஒட்டி, கட்டம் கட்டி லே அவுட் போட்டு முதல் இதழ் தயாராயிற்று. சோகம் என்னவென்றால் சந்திரசேகர் மற்றும் கணியனின் கவிதை தவிர மீதி பக்கம் பூராவும் பல்வேறு பெயர்களில் நானே எழுத வேண்டியதாய்ப் போனது. மூன்று நான்கு காலனிகளில் புத்தகம் சக்கை போடு போட்டது. அந்தப் புத்தகத்துக்கு ரோல் மாடல் குமுதமாயிற்றே. என்ன சில குடும்பப் பெண்கள் கொஞ்சம் செக்ஸ் தூக்கலாய் இருக்கிறது என்று திட்டிக் கொண்டே படித்தார்கள். என்ஜினீரிங் படிக்கிற பசங்க பண்ற வேலையா இது என்று குடும்பத் தலைவர்கள் நொந்து கொண்டார்கள்.

ஆனால் அங்கே போட்ட பிள்ளையார் சுழி அது தொடர்பான பல பேரை பல உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியது. கணியன் பதினைந்து வருஷங்களாய் நம்மவர் உட்பட பல பெரிய படங்களில் குறிப்பிடத்தக்க பணி ஆற்றியிருக்கிறார். புல்லாங்குழலில் முதல் கதை எழுதிய சந்திரசேகரின் தம்பி சரசுராம் தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க கதைகளை வழங்கி இருக்கிறார். இப்போது இரண்டு படங்களில் இணை இயக்குனர். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய சித்ரன் உங்களில் பலருக்கும் நன்கு தெரிந்தவர். கணியனின் நண்பர்கள் லவ் டுடே பாலசேகரனையும், தினந்தோறும் நாகராஜனையும், சொல்லாமலே சசியையும் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் தீபா என்ற பெயரில் நான் தொடர்கதை எழுத ஆரம்பித்ததும் - கணியனுக்குப் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது. யார் அந்த தீபா என்று துப்பறிய ஆரம்பித்தார். தீபா சோர்ந்து போகாதே, எழுது. உன் பேனாவில் மை தீர்ந்து போனால் என் ரத்தத்தை நிரப்பித் தருகிறேன். எழுது. என்று உணர்ச்சி வசப்பட்டு புல்லாங்குழலுக்கு லெட்டர் மேல் லெட்டர் எழுத ஆரம்பித்தார்.

கணியனுக்கு இன்றைக்கு வரைக்கும் அந்த தீபா நான்தான் என்ற ரகசியம் தெரியவே தெரியாது !

oooOOooo
[ அதிரடித் திருப்பம் ]

புல்லாங்குழலை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்த நான், மிகவும் பிரபலமான யாரையாவது அதில் எழுத வைக்க வேண்டும் என்று விரும்பினேன். சட்டென என் மனதில் தோன்றியவர் ராஜேஷ்குமார்.

குமுதத்தில் வாரா வாரம் விறு விறு சிறுகதைகள் எழுதுவார். அதிரடித் திருப்பங்களோடு நாவல்கள் எழுதுவார். 40 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் இருக்கிறார். அவருடைய பேட்டி எடுத்துப் போட வேண்டும் என்று தீர்மானித்தேன். இது கையெழுத்துப் பத்திரிகை என்பதால் அவருடைய கையெழுத்தையே இதில் இடம் பெற வைக்க வேண்டும் என்ற புதுமையான ஆசையும் எழுந்தது. லே அவுட் போட்டு, பதிலெழுத அவருக்கு இடம் விட்டு பதினைந்து கேள்விகள் எழுதி அனுப்பினேன்.

அவர் பணத்துக்காக எழுதும் எழுத்து வியாபாரி, ஒரே மாதிரி எழுதுவார், அவர் எழுதுவதெல்லாம் கதையா என்று அவரின் பல நல்ல படைப்புகளை படிக்காமலே மேம்போக்காய் விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய பெயரைப் போட்டால் பத்திரிகையின் சர்க்குலேஷன் கணிசமாய் உயரும் என்பது மறுக்க முடியாத உண்மை. லேனா தமிழ்வாணன் பல இடங்களில் இதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்.

அப்படிப்பட்டவர் எந்த வணிக நிர்ப்பந்தங்களும் இல்லாமல் ஒரு துக்குளியூண்டு கையெழுத்துப் பத்திரிகைக்கு சிரத்தையாய் உட்கார்ந்து பதில் எழுதி நாலே நாளில் அனுப்பி வைத்தார். எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் பணம் சம்பாதிக்க வேண்டுமேன்ற குறிக்கோளை விட - தீவிர உழைப்பும், அடங்காத ஆர்வமும், அதீத ஈடுபாடும்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

அவரே கைப்பட பதில் எழுதி வெளியான அந்த புல்லாங்குழல் கையெழுத்துப் பிரதி கை மாறி கை மாறிப் போய்க் கடைசியில் யாரோ ஒருவர் அபேஸ் பண்ணிக் கொண்டார். அந்த இதழ் திரும்பக் கிடைக்கவே இல்லை. ஆனால் அவரிடம் வாங்கிப் போட்ட அந்தப் பேட்டி எனக்குள் சில அதிரடித் திருப்பங்களை உண்டு பண்ணியது. அவரை மாதிரி பிரபல பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்ற வெறி எனக்குள் மையம் கொண்டது.

அத்தோடு புல்லாங்குழலுக்கு மூடு விழா நடத்தினேன்.

பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளை ஊன்றிப் படித்து நுணுக்கங்களை நானாக அநுமானித்து - சில கதைகள் எழுதி குமுதத்துக்கு அனுப்பினேன். பிரசுரிக்க இயலாமைக்கு வழ வழா தாளில் ஆ·ப்செட்டில் வருந்தி கதை திரும்பி வரும். திரும்பி வந்த கதையை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். இந்தக் கதைகளில் என்ன குறை கண்டது இந்தக் குமுதம்? எனக்குப் புரியவில்லை. எக்ஸ்பர்ட் அட்வைஸ் தேவை என முடிவு பண்ணி, மீண்டும் ராஜேஷ்குமார் சரணம்.

புதிதாய் எழுதின கதை ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். கூடவே ஒரு கடிதம். " என்னுடைய கதை பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததாகப் படவில்லை. இருந்தாலும் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? பத்திரிகை ஆபிசில் தெரிந்தவர்கள் சிபாரிசு பண்ண வேண்டுமா? என்னை மாதிரி ஆளுங்க கதையெல்லாம் போட மாட்டாங்களா? " இப்படி அவரிடம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு வைத்தேன்.

பேட்டிக்கு நாலு நாளில் பதிலெழுதி அனுப்பின மனிதர் இந்த லெட்டருக்கு ஒரு மாசத்துக்கு மேலாகியும் எந்தப் பதிலும் போடவில்லை. சரி அவ்வளவுதான். இந்தக் கதை கத்தரிக்காயை எல்லாம் மூட்டை கட்டிப் போட்டு விடலாம் என்று சலித்திருந்த போது அவரிடமிருந்து பதில்.

" ஆபிஸ் வேலையாக பம்பாய் சென்று விட்டதால் உடனே பதில் எழுத முடியவில்லை. உங்கள் கதை படித்தேன். நன்றாக உள்ளது. சாவி பத்திரிகைக்கு அனுப்பி வையுங்கள். நிச்சயம் பிரசுரம் ஆகும். நேரில் வாருங்களேன். நிறைய பேசலாம். "

oooOOooo
[ கதோபதேசம் ]

அன்றைக்கு என்னைக் கூப்பிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் ராஜேஷ்குமார் நடத்திய கதோபதேசம் என்னைப் போன்ற ஒரு வளரும் எழுத்தாளனுக்கு வரப்பிரசாதம்.

இமயத்தில் சந்தியாவை... என்று தலைப்பு வைத்து அவருக்கு நான் அனுப்பிய அந்தக் கதை எவரெஸ்ட் மலையேறும் குழுவில் உள்ள ஒரு பெண்ணைப் பற்றிய சாதாரணக் கதைதான். ஆனால் மலையேறுவது தொடர்பான சின்னச் சின்ன விஷயங்களை கதையில் இழையோட விட்டிருந்தது நான் நினைத்த மாதிரியே அவரை இம்ப்ரெஸ் பண்ணியிருந்தது. லெட்டரில் பக்கம் பக்கமாய் எழுத முடியாது, அதனால்தான் நேரில் வரச் சொன்னேன் என்றவர் அந்தக் கதை நன்றாகவே இருந்தாலும் அதில் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டினார்.

தலைப்பு ரொம்ப சாதாரணமாய் உள்ளது. பனி தூறிய பத்து நிமிஷம் என்று வைத்திருக்கலாம் என்றார். (இந்தத் தலைப்பைக் கொஞ்ச நாள் கழித்து வேறொரு கதைக்கு உபயோகித்துக் கொண்டேன்.) கதையை ஆரம்பித்த இடம் தப்பு. சிறுகதையைப் பொறுத்த வரை முடிவுக்கு ரொம்பப் பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

எல்லாப் பத்திரிகைகளும் இன்ன இன்ன மாதிரிக் கதைகளைப் போட வேண்டும் என்று கொள்கை வைத்திருக்கிறார்கள். சில கதைகள் எல்லாப் பத்திரிகைக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்தக் கதை சாவிக்கு தகுந்த மாதிரி உள்ளது அதனால்தான் அங்கே அனுப்பச் சொன்னேன் என்றார். பத்திரிகைகளுக்கு அவர்கள் விரும்பும் கதைதான் வேண்டும். யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை என்றார். ஆனால் பத்திரிகைகள் தங்களுக்கென்று கொள்கை வைத்திருக்கிற மாதிரி நீயும் உனக்கென்று இப்படிப்பட்ட கதைதான் எழுதுவது என்று கொள்கை வைத்துக் கொள்ளலாம். இரண்டும் ஒத்துப் போகிற மாதிரி எழுதினால் கதையும் வெளிவரும், உன் பேரும் கெடாது.

அவர் அளித்த உபதேசத்திலிருந்து மேலும் சில துளிகள்.

எழுத்து ஒரு தனி உலகம். தினமும் கொஞ்ச நேரம் அந்த உலகத்துக்குள் எட்டிப் பார்த்து விட்டு வருவதை பழக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். எதை எழுத வேண்டும் என்பதை விட, எதை எழுதக் கூடாது என்பதே எழுத்தாளன் ஆக விரும்புபவன் முக்கியமாய்த் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அநாவசியமாய்க் கதையில் ஒரு வரி கூட வைக்க வேண்டாம். அப்புறம் கதையை வெட்டி விட்டார்கள், சிதைத்து விட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் கதை கெட்டு விடும் என்கிற மாதிரி நறுக்கென்று எழுதிப் பழக வேண்டும்.  இங்கே புதிதாய் ஜனரஞ்சனி என்று ஒரு பத்திரிகை கோயமுத்தூரிலிருந்து வெளிவரப் போகிறது. அதன் ஆசிரியர் வளரும் இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கச் சொன்னார். வேறு ஏதாவது கதை இருந்தால் அவருக்கு அனுப்பி வைக்கலாம் என்றார். நான்தான் அப்போது கதை வெறி பிடித்து அலைந்து கொண்டிருந்தேனே ! டயரியில் மடித்து வைத்திருந்த மூன்று சிறுகதைகளை எடுத்து அவர் கையில் கொடுக்க கொஞ்சம் அசந்துதான் போனார்.

அதில் ஒரு கதையின் தலைப்பு - விடமாட்டேண்டா உங்களை.

சிரித்துக் கொண்டே - பத்திரிகைகாரர்களை மிரட்டுகிற இந்த மாதிரித் தலைப்பெல்லாம் வைக்க வேண்டாம் என்று செல்லமாய்க் கடிந்து கொண்டார்.

இரண்டு வாரங்களில் இமயத்தில் சந்தியாவை... சிறுகதை அரஸ் படம் வரைந்து சாவியில் வெளி வந்தது. அதே வாரத்தில் ஜனரஞ்சனியிலும் என் கதை வெளியானது. பத்திரிகை உலகத்தின் இரும்புக் கதவுகளை எப்படித் தட்டித் திறக்க வேண்டும் என்று ஒரு குட்டிப் பையனுக்குச் சொல்லிக் கொடுத்த ராஜேஷ்குமார் எழுத்தின் மூலமாக எனக்கு அறிமுகமான மனிதர்களில் ஒரு ஜெம் !

oooOOooo
[ அதைச் சொல்லுங்க முதல்ல ]

ராஜேஷ்குமார் சொன்னதைப் போல எனக்கான ஆரம்ப கால குறைந்தபட்ச கொள்கைத் திட்டங்களை வகுத்துக் கொண்டேன். அவை இவைதான்.

நான் இலக்கியம் என்ற பெயரில் ஜல்லியடிக்கப் போவதில்லை.
கதையில் சுவாரஸ்யத்துக்குத்தான் முதலிடம். மற்றபடி, மற்றவர்கள் முகம் சுளிக்காத, மனதைப் புண்படுத்தாத எதையும் எழுதலாம்.
ஒரு சமூகக் கதை, ஒரு க்ரைம் கதை, ஒரு சயன்ஸ் கதை என்று சுழற்சி முறையில் எழுதி எல்லாத் தரப்பு கதையும் எழுதப் பழகிக் கொள்ள வேண்டும்.
மூன்றாம் கொள்கை நன்றாய் வேலை செய்தது.

சயன்ஸ், க்ரைம், சமூகம் என்ற அதே வரிசைக் கிரமத்தில் சாவியில் என் சிறுகதைகள் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் தொடர்ந்து வெளி வந்தன. அவ்வப்போது விகடன், ஜனரஞ்சனி, தாய், இதயம் பேசுகிறது இதழ்களிலும் எழுதினேன். அப்போது நான் கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பத்திரிகை ஆபிசை நேரில் போய்ப் பார்க்க வேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது.

ஆமாம். அது விபரீத ஆசைதான். ஏனென்றால் அந்த உலகம் வேறு. நிறைய பரபரப்பானது. கதையைத் தவிர அவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. அரசியல், சினிமா, போட்டோ, துணுக்குகள், ஜோக்குகள், பேட்டி, போட்டி, யாராவது மான நஷ்ட வழக்குப் போட்டிருந்தால் அது.... ஒரு இதழ் முடிந்தால் அடுத்த இதழ். இப்படியே ஓடிக் கொண்டிருக்கும். எனக்கு வேலை முடிந்ததும் கதையை நேரில் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஜனரஞ்சனி ஆபிசுக்குப் போனேன்.

முன்னாலிருந்தவரிடம், " எடிட்டரைப் பார்க்கணும். " என்றேன்.

" அவர் மீட்டிங்கிலிருக்கார். உக்காருங்க. "

நான் காத்திருக்க ஆரம்பித்தேன். யார் யாரோ வெளியே வருகிறார்கள், உள்ளே போகிறார்கள். நிமிஷங்கள் கழிகிறதே ஒழிய என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை.

என்னை உட்கார வைத்து விட்டுப் போன நபர் மட்டும் அவ்வப்போது வெளியே வரும் போது என்னுடைய பரிதாப முகத்தைப் பார்த்துக் கேட்பார்.

" எங்கிருந்து வர்றிங்க? "

" பொள்ளாச்சி. "

" என்ன விஷயமா எடிட்டரை பார்க்கணும்? "

" ஒரு கதை குடுக்கணும். "

" என் கிட்டே கொடுங்க. நான் அவர் கிட்டே தந்துடறேன். "

" இல்லே, நான் அவரை நேரில் பார்த்துக் குடுக்கணும். "

அப்ப உட்கார்ந்து கிட என்கிற மாதிரி அவர் மறுபடி மறைந்து விட்டார். உள்ளே சிரிப்புச் சத்தம். போன் கால். விவாதம். நேரம் கரைகிறது. பேசாமல் கிளம்பிப் போய் விடலாமா? எப்பவும் போல தபாலில் அனுப்பி விடலாம். இப்படி நான் யோசித்துக் கொண்டிருந்த போது - அந்த நபர் வெளியே வந்தார். " உங்க பேர் என்ன? "

" சத்யராஜ்குமார். "

சட்டென மலர்ந்து போனார். " அட, முதல்ல இதைச் சொல்ல வேண்டாமா நீங்க. " வேகமாய் உள்ளே போன அடுத்த நிமிஷம் - அந்தப் பத்திரிகையை நடத்துபவரும் ஆசிரியருமான எஸ்.எஸ். மணியன் எழுந்து வெளியே வந்து என்னை வரவேற்றுப் போனார். என் கதைகள் குறித்துப் பாராட்டினார். இன்னும் நல்லா எழுதுங்க என்று ஊக்கம் கொடுத்தார். கொஞ்ச நேரம் அவரிடம் பேசி விட்டு, கதையைக் கொடுத்து விட்டு - பஸ் பிடித்தேன். ஆனால் அப்போது முடிவு செய்தேன். அநாவசியமாய் அல்ப காரணங்களுக்காக பத்திரிகை ஆபிஸ் பக்கம் போய் நம் நேரத்தையும், அவர்கள் நேரத்தையும் வீணாக்கக் கூடாது.

oooOOooo
[ நிஜமாய் ஒரு காதல் கதை ]

இந்தச் சமயத்தில் என்னுடைய முகவரி இதயம் சிறுகதைக் களஞ்சியத்தில் வெளியாகியிருந்ததால், நிறைய வாசகர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வர ஆரம்பித்தன. அதில் லஷ்மி நந்தா என்ற வாசகி மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர் ஒரு டாக்டர். ஒவ்வொரு கதையையும் அவர் போஸ்ட்மார்ட்டம் பண்ணி கடிதம் எழுதுவார். அவரிடமிருந்து பாராட்டு வாங்குவது கொஞ்சம் கஷ்டம்தான். கதையில் ஓட்டை இருந்தால் நெத்தியடியாய் சுட்டிக் காட்டுவார். பின்னர் ஒரு நாள் அவரை நேரில் சந்தித்த போது இளம் வயதிலேயே கணவரை இழந்தவர் என்பது அதிர்ச்சியாயிருந்தது.

அதற்கடுத்தபடியாகச் சொல்வதென்றால் பூவரசி, சாந்தி, விஜய். (3 பெயரையும் மாற்றி விட்டேன்)

இரண்டு பேர் சேர்ந்து இசையமைப்பதை, இயக்குவதை, கதை எழுதுவதை சர்வ சாதாரணமாய்ப் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எனக்குக் கடிதம் எழுதுவார்கள். கையெழுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கும்.

அவர்கள் முதல் கடிதத்துக்கு நான் பதில் போட - " வானத்திலிருந்து நிலவு இறங்கி வந்து, மெழுகுவர்த்தியை வாழ்த்தி விட்டுப் போனது போலிருக்கிறது " என்று கவிதையாய் எனக்கு நன்றி சொன்னார்கள். ஒரு குட்டி எழுத்தாளனுக்கு இவ்வளவு மதிப்பும், மரியாதையுமா? எப்படி நான் தொடர்ந்து எழுதாமல் போனேன் என்று இப்போது வருத்தப்படுகிறேன்.

அப்புறம், யோவ் ஜிகினா ரைட்டர், சமூகத்துக்குப் பிரயோஜனமா ஏதாவது எழுது என்று திட்டியவர். கடலூர் எங்கே இருக்கிறது, பொள்ளாச்சி எங்கே இருக்கிறது... அங்கிருந்து ஏதோ வேலையாய் இந்தப் பக்கம் வந்து தேடிப்பிடித்து என்னைப் பார்த்து விட்டுப் போன ஏந்தல் இளங்கோ. எழுதியிருக்கா விட்டால் இவர்களை எல்லாம் நான் சந்தித்திருக்கவே மாட்டேன்.

இருங்கள், காதல் கதையை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டேன். அந்த பூவரசியும், விஜய்யும் ஒருவரை ஒருவர் ஆழமாகக் காதலிப்பதாக அடுத்து வந்த கடிதங்கள் சொல்லின. இருவர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு, நான்தான் அவர்களுக்கு உதவி வருகிறேன் என்று அவர்களில் மூத்தவர் சாந்தி எழுதியிருந்தார். பூவரசியும், விஜய்யும் நல்லபடியாய்க் கல்யாணம் செய்து கொள்ள உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தார். அடக் கடவுளே, அப்போது எனக்கு வயசு இருபதைக் கூடத் தாண்டவில்லை என்பது அவர்களுக்குத் தெரியுமா?

ரெண்டு வருஷம் முன்னால் விகடன் ஆபிசுக்கு ஒரு வேலையாய் போயிருந்தேன். ரிசப்ஷனில் காத்திருந்த போது அங்கே என்னைப் போலவே காத்திருந்த இன்னொருவர்- என் பெயரைக் கேட்டதும், " உங்களை எனக்குத் தெரியுமே! " என்றார். " நான் விஜய்யோட ·ப்ரெண்ட். அவர் உங்களுக்கு லெட்டரெல்லாம் போடுவாரே. விஜய் விகடன்லதான் வேலை பார்க்கிறார். அவருக்காகத்தான் காத்திட்டிருக்கேன். " என்றார்.

எனக்கு ஆச்சரியமாயிருந்தது.

அப்புறம் அங்கே வந்த விஜய்யை நேரில் சந்தித்தேன். மூன்று பேரும் விகடன் கேன்ட்டீனில் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டோம்.

கை கழுவப் போகும் போது, தனியாய் வந்த விஜய்யின் நண்பரிடம், " விஜய்க்கு கல்யாணம் ஆயிடுச்சா? " என்று கேட்டேன்.

" கல்யாணமாகி மூணு வயசில் ஒரு குழந்தை இருக்கு. "

" ஒய்·ப் பூவரசிதானே? "

" இல்லை. சியாமளா. "

oooOOooo
[ ஷாக் நகர் ]

காலை ஆறு மணிக்கு ஆபிஸ் கிளம்பிப் போக வேண்டும். சாயந்தரம் ஏழரை மணிக்கு வீடு திரும்புவேன். வந்ததும் சாப்பிட்டு விட்டு - மேஜைக்கு வந்தால் நிறைய தபால்கள் வந்திருக்கும். படித்து, பதிலெழுதி, ஸ்டாம்ப் ஒட்டி, அடுத்த கதை எழுதி... என்னுடைய நேரமெல்லாம் இப்படியே கழிந்தன. அந்த வயதுக்கான ஊர் சுற்றல்களோ, கலாய்த்தல்களோ எதுவுமே இல்லாமல் போய் விட்டது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் இரண்டு பேர் வந்தார்கள்.

ஒருவர் புல்லாங்குழலில் தனது முதல் கதை எழுதிய சந்திரசேகரின் தம்பி சரசுராம். இன்னொருவர் அவருடைய நண்பர் மீனாட்சி சுந்தரம். முதல் கதை எழுதும் போது ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சரசுராம் இப்போது காலேஜ் முடித்து விட்டதாகச் சொன்னார். விகடன் சிறுகதை ஸ்பெஷலில் அணுக்கதிர் கசிவை மையமாய் வைத்து நான் எழுதியிருந்த சிறுகதையை பாராட்டுவதற்காக வந்திருந்தார்கள். சாவிக்காக நான் எழுதிக் கொண்டிருந்த கதையை சுடச் சுடப் படித்து விட்டு - " கலக்கறிங்க. நம்ம ஊரிலிருந்து இப்படி ஒருத்தர் கிளம்பி இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. விட்ராதிங்க. எழுதிட்டே இருங்க. " என்றார்கள்.

வாழ்க்கை எங்கே விடுகிறது. எழுதிக் கொண்டே இருக்க முடியவில்லை.

அவர்கள் சற்றுத் தள்ளி மின் நகரில் இருக்கிறார்கள். " எப்பப் பார்த்தாலும் உக்காந்து எழுதிட்டே இருக்கிங்களே. அப்பப்ப அங்கே வாங்க. நிறைய ·ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. " என்று கூப்பிட்டார்கள்.

அங்கே போனால் - சரசுராம், மீனாட்சி உட்பட சித்ரன், ஷாராஜ், சோபா சத்தீஸ் என்று எழுதுவதிலும் படிப்பதிலும் ஆர்வமிக்க ஒரு பெரிய படையே இருந்தது. கலகலப்பை அவர்களிடம்தான் நான் கற்றுக் கொண்டேன். அவர்களில் சிலருக்கு எழுத வேண்டும் என்று ஆர்வம் பிறக்க நான்தான் இன்ஸ்பிரேஷன் என்பது இன்றைக்கும் நான் மகிழும் விஷயம்.

சரசுராம் நான் சினிமாவுக்கு ட்ரை பண்ணலாம்ன்னு இருக்கேன் என்றார். கொஞ்சம் ஷாக்காகத்தான் இருந்தது. கணியன் ஏற்கெனவே சினிமால போய் செட்டில் ஆகிட்டார். இது அடுத்த ஷாக். ஜெயிச்சிருவோம் என்றார். கணியனின் ·ப்ரெண்ட் பாலசேகரன் கூட அங்கிருந்தார். நான் கதை எழுதுவேன் என்பதால் என்னிடம் அவரின் லவ் டுடே படத்தின் கதையை முழுவதுமாய் ஒரு முறை சொன்னார். " எழுதிராதிங்க. இது என்னோட லை·ப் டைம் ஸ்டோரி. "

லவ் டுடே வெற்றிக்குப் பின்னால் அவரை ஒரு தரம் சினிமா விவாத அறை ஒன்றில் சந்திக்க நேர்ந்தது. மறந்திருப்பார் என்று நினைத்தேன்.

" நீங்க சத்யராஜ்குமார்தானே? ஏன் இப்போ அதிகமா எழுதறதில்லை? " என்று கேட்டு திகைக்க வைத்தார்.

oooOOooo
[ 90-களில் இவர்தான் ! ]

நான் கதை எழுதி மிகப் பெரிய ஆள் ஆகப் போகிறேன் என்று நம்பியவர்களில் ராஜேஷ்குமாருக்கு அடுத்தபடியாக சாவி பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷைச் சொல்லலாம். இப்போது விகடனில் இருக்கிறார்.

குமுதத்திற்கு மாலைமதி போல சாவி பத்திரிகைக்கு மோனா.

அதில் கார் ரேஸை வைத்து நான் எழுதிய 60 கிலோ மீட்டர் அதிர்ச்சி என்ற குட்டி நாவலை நான் ஆரம்பத்தில் ஆசைப்பட்ட மாதிரியே அட்டையில் கொட்டை கொட்டையாய் என் பெயரைப் போட்டு வெளியிட்டிருந்தார்.

Indy 500 எனப்படும் சர்வதேச கார் பந்தயத்துக்குப் புகழ் பெற்ற இண்டியானாபொலிசில் இப்போது குடியிருக்கிறேன். அந்தக் கதையை இன்னும் விஷயச் செறிவோடு இப்போது எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அடிப்படையில் நான் ஆட்டோமொபைல் என்ஜினீயர் என்பதால் ஒரு க்ரைம் கதையின் நடுவே கார் சங்கதிகள் இழையோட விட்டு, முடிந்த மட்டும் நன்றாகவே எழுதியிருந்தேன்.

அதற்கப்புறம் நகராதே நட்சத்திரா என்ற சயன்ஸ் ·பிக்க்ஷன். இரண்டு பாகங்கள் கொண்ட கதை. அறிவிப்பு வெளியிட்டு விட்டேன் சீக்கிரம் இரண்டாவது பாகம் அனுப்புங்கள் என்று அவர் வெள்ளிக் கிழமை கேட்டு, சனிக் கிழமை எழுதி முடித்து, திங்கட்கிழமை அனுப்பி, செவ்வாய்க் கிழமை அவர் கைக்குக் கிடைத்து விட்டது. அந்தக் கதைகளை நான் எழுதி அனுப்பிய வேகத்தைப் பார்த்து, பத்திரிகையுலகில் ஒரு பெரிய ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கப் போகிறீர்கள் என்று வியப்புடன் வாழ்த்தினார் ரவிபிரகாஷ்.

இந்தச் சமயத்தில் டிப்ளமோவை வைத்து பிழைப்பது கஷ்டம் என்று முடிவுக்கு வந்திருந்ததால், போக்குவரத்துக் கழக வேலையை உதறி விட்டு - கோவை அரசு என்ஜினீரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். ராஜேஷ்குமார் அவருடைய இல்லத் திறப்பு விழாவில் வைத்து, சில மாதப் பத்திரிகை ஆசிரியர்களிடம் என்னைக் காட்டி, " 90-களில் இவர்தான் ! " என்று பெரிய அறிமுகம் கொடுத்தார். அதில் ஒருவர், " நாவல் குடுங்க. நான் போடறேன். " என்றார்.

நாவலை நான் அனுப்பி வைக்க - நாலைந்து வாரங்கள் கழித்து கோயமுத்தூர் பூராவும் என்னுடைய பெயரைத் தாங்கி போஸ்டர்கள். பெட்டிக் கடைகளில் பெயர் தொங்குகிறது. கூடப் படிக்கும் நண்பர்கள், " என்னங்க நீங்க கதை எழுதுவிங்களா? சொல்லவே இல்லை? பெரிய ஆளா நீங்க? " என்று சூழ்ந்து கொண்டார்கள். உடன் படிப்பவர்களும், ப்ரொ·பஸர்களும் எனக்குப் பாராட்டு விழா நடத்தியே தீருவது என்று முடிவெடுத்தார்கள். குன்னூருக்கு அப்புறம் மாலை போட்டு மறுபடி ஒரு பாராட்டு விழா.

விழா முடிந்த பின் கணக்கு லெக்சரர் மட்டும் என்னைத் தனியே கூப்பிட்டார்.

" கதையெல்லாம் எப்போ வேணா எழுதலாம். படிப்பை கோட்டை விட்டுராதிங்க. செமஸ்டர் ரிசல்ட் வந்திருக்கு. லாஸ்ட் டைம் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணினிங்க. இந்த தடவை அரியர் விழுந்திருக்கு. "

அது வரைக்கும் நான் ·பெயில் ஆனதே இல்லை. அவர் கொடுத்த எச்சரிக்கை மணி நான் தீவிரமாய் எழுதுவதைக் குறைத்துக் கொண்டதற்கான முதல் காரணம்.

oooOOooo
[ சரியா, தவறா ? ]

தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தபோது என் நாவல் போட்ட பதிப்பக அன்பர் அடுத்து நான் எழுதப் போகும் நாவல்கள் குறித்துப் பேச சென்னைக்கு வரச் சொன்னார்.

போனேன்.

அந்தக் காலகட்டத்தில் மாத நாவல் உலகம் டாப் கியரில் போய்க் கொண்டிருந்தது. இப்போது blogs போல ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவருக்கே அவருக்கான மாதப் புத்தகம் ஒன்று வெளிவரும். பதிப்பிப்பவர் தலையங்கம் மாதிரி ஓரிரு பக்கங்கள் எடுத்துக் கொண்டது போக, மற்றபடி அட்டை டு அட்டை அவர் மட்டுமே ராஜபாட்டை நடத்துவார். முன் அட்டையிலும், பின் அட்டையிலும் வாசகர்களோடு நெருக்கமாய் அளவளாவுவார். கேள்வி பதில் சொல்வார். பொது அறிவை வளர்க்க முயல்வார். போனால் போகிறதென்று ஏ காதலியே என்று துவங்கும் கவிதைகள் எழுத வாசகர்களுக்கும் கொஞ்சம் இடம் விட்டு வைப்பார். இத்தனைக்கும் நடுவில் ஒரு மர்ம நாவல்.

எனக்காக அப்படி ஒரு நாவல் கொண்டு வருவதுதான் அவர் திட்டம். என் முதல் கதை போட்டதும், சாவி போன்ற பெரிய பத்திரிகையிலிருந்து அவருக்கு போன் வந்து, " என் நாவல் எப்படிப் போயிட்டிருக்கு ? " என்று அவர் விசாரிக்கப்பட்டதில் சந்தோஷமாயிருந்தார்.

அடுத்தபடியாக, அப்போதெல்லாம் ஒரே வாரத்தில் கூட என்னுடைய கதை இரண்டு மூன்று பிரபல பத்திரிகைகளில் வெளி வந்திருக்கும்.

அதை விட, முதல் கதை கேட்ட போது என்னிடம் அவர் - " தம்பி, நாவல் ரொம்ப திகிலா இருக்கணும். ரொம்ப கொடூரமா அதில் ஒரு கொலை இருக்கணும். ஏன்னா படிக்கிறவங்க தங்களோட நிஜ வாழ்க்கையில் பண்ண முடியாததை பத்திரிகைல படிக்கிறதுக்கு விரும்புவாங்க. " என்றதும், அவர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற மாதிரி அந்தக் கதையில் ஒரு வாலிபனின் மண்டை மேல் பாறாங்கல்லைப் போட்டு நச் நச்சென்று அடித்து மூஞ்சியை உருத் தெரியாமல் சிதைத்து - அதே கல்லைக் கட்டி அவனின் பிரேதத்தை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டிருந்தேன். அவனுடைய செத்த உடம்பை போலிசார் வெளியே எடுத்தபோது - மீன்கள் அரித்துத் தின்றது போக மிச்சம் மட்டும் கொச கொசப்பாய் வெளியே வந்தது என்று நான் வர்ணித்தது அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல அடுத்து தரப் போகிற கதை குறித்துக் கேட்டதும் - " பிணம் பத்தும் செய்யும் " என்பது நாவலோட தலைப்பு. செத்துப் போன மனைவியை எரிக்காம புதைக்காம வீட்டுக்குள்ளேயே வெச்சிருந்து அவளுக்குத் திரும்ப உயிர் கொடுக்க முயற்சி பண்ற ஒரு டாக்டரோட கதை. நிறைய மெடிக்கல் சமாசாரம் நாவல்ல வரும் என்றெல்லாம் அவரை உசுப்பி விட்டதில் அவர், " நீங்க மாசா மாசம் எழுதறிங்க. " என்றார்.

ஏற்கெனவே மாத்தமேட்டிக்ஸ் அரியர் என் மண்டையைக் குடைந்து கொண்டிருந்ததால், " ஒரு நாள் டயம் குடுங்க. யோசிச்சு சொல்றேன். " என்றேன். அந்த ஒரு நாளில் மாதப் பத்திரிகைகள் இயங்கும் விதத்தைக் கூர்ந்து கவனித்தேன்.

  • நிறைய அரசியல், போட்டி, பொறாமை அங்கே இருந்தன.
  • ஒருவரை ஒருவர் புறங்கூறிக் கொள்ளும் செயல்களும் நடந்தன.
  • அதையெல்லாம் விட என்னை இவனோட ஆள், அவனோட ஆள் என்று தாங்களாகவே கற்பனை பண்ணிக் கொண்டு நேரில் பார்க்கிற போது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் செயல்களும் நடந்தன.

இருபத்தியொரு வயதில் இப்படிப்பட்ட உலகத்தைப் பார்க்க எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒழுங்காய்ப் படித்து எஞ்சினீரிங்கை முடித்து வைப்போம். எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டால், பிரபல வார இதழ்களில் சிறுகதை எழுதி ஆசையைத் தீர்த்துக் கொள்வோம். இந்த மாத நாவல் பிசினசெல்லாம் நமக்கு வேண்டாம்.

அன்றைக்கு நான் எடுத்த இந்த முடிவு சரியா, தவறா என்று இப்பவும் எனக்குப் புரியவில்லை.

oooOOooo
[ அப்பாவைப் பார்த்திங்களா? ]

இவ்வளவு தூரம் வந்து விட்டோம். சாவி அலுவலகத்தை எட்டிப் பார்த்து விட்டு, இந்த சென்னை விஜயத்தை முடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து அண்ணாநகருக்கு பஸ் ஏறினேன்.

எண்பதுகளின் இறுதிகளில் அண்ணாநகர் இப்போது போல் அவ்வளவு பரபரப்பாய் இல்லை. ஆங்காங்கே பிளாக் பிளாக்காய் கட்டிடங்கள். மற்றபடி வெறிச்சென்றிருந்தது. AI பிளாக்கிலிருந்த சாவி அலுவலகத்தை என்னால் சுலபமாய்க் கண்டு பிடிக்க முடிந்தது.

உள்ளே நுழைந்ததுமே - நெற்றியில் நீளமாய்க் குங்குமம் தீற்றி உட்கார்ந்திருந்த அந்தப் பெரிய மனிதர், " என்ன வேண்டும் ? " என்பது போல் என்னைக் கூர்மையாய்ப் பார்த்தார்.

ஜனரஞ்சனியில் செய்தது போல் பெயரைக் கூட சொல்லாமல் வெட்டியாய் காத்துக் கிடக்கும் தவறைச் செய்ய வேண்டாம் என்று நினைத்து, " நான் சத்யராஜ்குமார். " என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லி விட்டேன்.

அவர் வெற்றிலைச் சிவப்புக்கு நடுவே லேசாய்ப் புன்னகைத்து, " உட்காருங்க. " என்றார். " என்னைத் தெரியுமா உங்களுக்கு? "

நான் ஒரு அநுமானத்தில் சொன்னேன். " நீங்க அபர்ணா நாயுடு. "

சரியாகச் சொல்லி விட்டேன் என்பதற்கு அடையாளமாய் புன்னகையை இன்னும் கொஞ்சம் அகலமாக்கினார். " நீங்க நல்லா எழுதறிங்க. நிறைய எழுதறிங்க. இன்னும் நிறைய எழுதுங்க. ராஜேஷ்குமார் மாதிரியே வருவிங்க. " என்னை வாழ்த்திக் கொண்டே, அப்போதுதான் அச்சடித்து முடிக்கப்பட்டிருந்த வரும் வாரத்துக்கான சாவி இதழை எடுத்து - பக்கங்களைப் புரட்டி அதில் வெளியாகியிருந்த ' கூத்து ' என்ற என்னுடைய கதையைக் காட்டினார். தனது சிறு குழந்தையை வைத்து தெருவில் வித்தை காட்டி காசு சம்பாதிக்கும் ஒரு ஜிப்ஸி குடும்பப் பெண் பற்றிய கதை. ஜெயராஜ் தனக்கேயுரிய லாவகத்தோடு அந்த ஜிப்சி பெண்ணைக் கவர்ச்சியாய் வரைந்திருந்தார்.

தொடர்ந்து தன் கதைகள் அச்சிடப்பட்டுக் கொண்டே இருப்பதை விட வேறென்ன சந்தோஷம் ஓர் எழுத்தாளனுக்கு வேண்டும். மகிழ்ச்சியோடு அவருக்கு நன்றி சொன்னேன். என் மகிழ்ச்சி அத்தோடு நிற்கவில்லை. காட்டன் ஷர்ட்டும், ஜீன்ஸுமாய் அந்தப் பக்கம் போன வெள்ளை வெளேர் இளைஞரைக் கூப்பிட்டு, அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்தான் பாச்சா என்கிற பாலசுப்ரமணியன். சாவி அவர்களின் மகன்.

" கார் ரேஸ் வெச்சு நீங்க எழுதின நாவல் நல்லா இருக்கு. " என்று பாராட்டின பாச்சா அத்தோடு நிற்காமல், " அப்பாவைப் பார்த்திங்களா? " என்றார்.

" இல்லே. "

" வாங்க, பார்க்கலாம். " என்னைக் கூட்டிப் போய் சாவி அவர்களின் முன்னால் நிறுத்தினார். " அப்பா, மோனாவில் கார் ரேஸ் கதை எழுதினவர் இவர்தான். "

பூச்சி மாதிரி நின்றிருந்த என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார் சாவி. இந்தப் பொடியனா சயன்ஸ், க்ரைம் என்று ஏறக்குறைய வாராவாரம் சாவியில் எழுதி வருகிறான் என்று கேட்பதைப் போலிருந்தது அவர் பார்வை. அதை விடவும் அந்தப் பத்திரிகையுலக மாமனிதரை நேரில் பார்த்த சந்தோஷத்தில், நான் பேச வார்த்தைகளே இல்லாமல் திக்கித்துப் போய் நின்றிருந்தேன். " நிறைய எழுதுங்க. " என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார் சாவி.

போதும். அது வரை நான் எழுதினதற்கான அத்தனை பலனையும் அந்தச் சின்ன முதுகுத் தட்டலில் அடைந்து விட்டேன் !

oooOOooo
[ இரண்டாவது இன்னிங்ஸ் ]

அந்த சென்னை விஜயத்தோடு எழுத்துலகில் என் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தது.

போர்க்களத்தில் வாள் வீசி ஓய்ந்தது போலிருந்தது. அப்புறம் எஞ்சினீரிங்கில் முதல் வகுப்பில் தேறி முடிக்கும் வரை கதைகளைப் பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை. டச் விட்டுப் போகாமலிருக்க வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கதை குமுதத்திலோ, விகடனிலோ எழுதிப் பார்த்துக் கொண்டேன்.

இந்த நான்கு வருட இடைவெளியில் டாட் காம் எழுச்சி & வீழ்ச்சி போலவே - மாத நாவல் உலகமும் வீக்கம் குறைந்து - திறமையாய் எழுதுபவர்கள் மட்டுமே மீந்திருந்தார்கள். சாவி, தாய் போன்ற குறிப்பிடத்தக்க வாரப் பத்திரிகைகள் கூட நின்று போயின. இதயம் பேசுகிறது அதன் தோற்றம் பொலிவெல்லாம் மாறி, கடைசியில் சரவணா ஸ்டோர்ஸ் என்று கொட்டை எழுத்தில் போட்டு இப்போது கடைகளில் தொங்குகிறது.

மறுபடியும் நிறைய எழுதலாம் என்று முடிவெடுத்தேன். செக்கண்ட் ரவுண்ட் எப்படி ஆரம்பிக்கலாம் ? இந்தத் தடவை கொள்கைகளை ரிவைஸ் பண்ணிக் கொண்டேன்.

* நான் ராஜேஷ்குமார் மாதிரியே எழுதுவதாக ஒரு புகார் இருந்தது. அதை மாற்ற வேண்டும்.

* சிந்தெடிக் கதைகள் மட்டுமல்ல; மனதைத் தொடும் கதைகளும் என்னால் எழுத முடியும் என்று நிரூபிக்க வேண்டும்.

இரண்டாவது இன்னிங்சில் முதல் பந்தை கல்கியை நோக்கிப் போட்டேன். அந்நிய துக்கம் என்ற சிறுகதை. என் எழுத்து நடையை முற்றிலுமாய் மாற்றிக் கொண்டு அக்கதையை எழுதியிருந்தேன். அதே நடையைத்தான் இப்போது வரைக்கும் பெரும்பாலும் பின்பற்றி வருகிறேன். ஆனால் சுஜாதா சாயல் தூக்கலாக இருப்பதாக ப்ரின்ஸஸ் பவித்ரா என் ப்ளாக்கில் எழுதியிருக்கிறார். சுஜாதா எல்லா வெறைட்டியும் எழுதிக் காட்டி விட்டார். எங்கே தொட்டாலும் ஷாக் அடிக்கும் எழுத்து நடை அவருடையது. அதிலிருந்து தப்பித்து யாரும் இனி தமிழில் கதை எழுதி விட முடியாதென்றுதான் நினைக்கிறேன்.

அந்நிய துக்கம் கல்கியில் முதல் பரிசு வாங்கியது. அந்நிய துக்கம் சத்யராஜ்குமார் என்று என்னை அழைக்கும் நண்பர்கள் இப்போது நிறைய இருக்கிறார்கள். அந்தச் சின்னக் கதையில் ஏழ்மை, அரசியல் மற்றும் குடிப்பழக்கத்தால் குடும்பம் சிதைவது, குடும்பத்துக்காக படிப்பை இழந்து பாடுபடும் குழந்தைகள், நட்பு, பகை, பாசம், போட்டி, பொறாமை, சுயநலம் இத்தனைக்கும் நடுவில் உழலும் வாழ்க்கையும் அதன் அகால முடிவுகளும் தெளிவாய் பதிவாகி இருக்கிறது.

அந்தப் பரிசு வாங்கிய ஒரு சில மாதங்களில் ஆபிஸ் வேலையாய் சென்னை செல்ல வேண்டி வர - இந்த முறை இன்னும் இரண்டு பத்திரிகை உலக ஜாம்பவான்களைப் பார்த்தேன்.

அதில் ஒருவர் கிரா. இன்னொருவர் உங்களுக்கெல்லாம் நன்றாய்த் தெரிந்த பாரா.

oooOOooo
[ இரண்டு கப் தேநீர் ]

இலக்கியமும், அது தொடர்பான ரசனையும் எங்கே வாழ்கிறதென்பது அனுமானத்திற்கப்பாற்பட்ட விஷயம். என் நண்பர் நகரின் மத்தியில் மிகப் பெரிய டெய்லரிங் ஷாப் வைத்திருந்தார். அவரை நான் அங்கே அடிக்கடி சந்திப்பது வழக்கம்.

அவருடைய கடை ஏசி குளிர்ச்சியுடன் மணிரத்னம் அல்லது கதிர் படத்தில் வரும் சினிமா செட் போலத்தான் இருக்கும். " நமக்கு கதை கட்டுரை படிக்கிறதிலெல்லாம் அவ்வளவா ஆர்வம் இல்லைங்க. " என்று சொல்லும் அவர் என் கதை வந்த இதழ்களை எல்லாம் வாங்கிப் போட்டு, படிப்பதில் ஆர்வமுள்ளவர்களிடம் அதைக் காட்டுவார்.

முதல் பாராவில் நான் சொல்ல வந்தது இவரைப் பற்றி அல்ல. அவர் கடையில் ஓரமாய் உட்கார்ந்து காஜா எடுத்துக் கொண்டோ, துணியில் கோடு போட்டுக் கொண்டோ இருக்கும் உலகநாதன் என்பவர்.

ஒரு நாள் கடை நண்பர் இல்லாத போது என்னிடம் பேச ஆரம்பித்தார். சிற்றிதழ், வெகுஜன இதழ்களின் போக்குகள். எழுத்தாளர்கள் பற்றிய அலசல். கரடு முரடான வார்த்தைகளைப் போட்டு எதையாவது எழுதி விட்டு இலக்கியம் என்று பினாத்துபவர்களை விட, விஷயத்தை கனமாக்கிக் கொண்டு விவரிப்பை எளிமையாக்குபவர்களையே எனக்குப் பிடிக்கும் என்று படு தெளிவாய் அவர் பேசியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். சுஜாதா ஆசிரியராய் இருந்தபோது, குமுதம் - ஏர் இண்டியா இலக்கியக் கவிதைப் போட்டியில் பரிசு வாங்கியிருக்கிறார்.

சொல்லப் போனால் அது வரைக்கும் எனக்குச் சிற்றிதழ்கள் பற்றிய அறிவு குறைவாகத்தான் இருந்தது. சில இதழ்களை அறிமுகப்படுத்தி அவற்றில் அவர் காட்டிய படைப்புகள் மஞ்சள் பத்திரிகைகளுக்கு இணையாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது போக தனி நபர் தாக்குதல்கள் வேறு.

படைப்பு ரீதியான விமர்சனம் இங்கே இல்லை என்பதும், இவரா இப்படித்தான் எழுதுவார் என்கிறாற்போல் படைப்பாளர் பற்றிய முன் கூட்டிய அநுமானத்தோடும், எந்தப் பத்திரிகையில் வெளியானது என்ற அடிப்படையிலுமே பெரும்பாலும் படைப்புகள் அணுகப்படுகின்றன என்பதும் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் அறிந்து கொண்ட விஷயங்கள்.

அந்நிய துக்கம் கதைக்காக பரிசு வாங்கின சமயம் சென்னை செல்ல வேண்டியிருந்தது. நேரமிருந்தால் கல்கி ஆசிரியர் கிரா அவர்களைப் பார்த்து நன்றி சொல்லி விட்டு வரலாமென்று இருக்கிறேன் என்றேன். உடனே உலகநாதன், " அப்படியே ஆசிரியர் குழுவில் பா.ராகவன்னு ஒருத்தர் இருப்பார். அவரையும் பார்த்துட்டு வாங்க. பாரா என்னோட நண்பர்தான். " என்றார்.

அதற்கப்புறம் அந்தக் கடைக்குப் போகிறபோது - என் நண்பர், " உலகநாதன், ரெண்டு டீ சொல்லிட்டு வரியா? " என்றால் எனக்குப் பதறலாய் இருக்கும். " வாங்க நாம கடையிலயே போய் குடிச்சிட்டு வரலாம். " என்பேன்.

oooOOooo
[ கல்கி ]

கல்கி பத்திரிகை அலுவலகம் சென்றிருந்தபோது எனக்குக் கிடைத்தது முற்றிலும் வித்தியாசமான அநுபவம்.

அந்த மாதிரியான ஒரு கவனிப்பையும், வெளிப்படுத்திய சிநேக உணர்வையும் மற்ற இடங்களில் நான் உணர்ந்ததில்லை. இதற்கு அர்த்தம் மற்றவர்களைக் குறை சொல்வதல்ல. எல்லோருமே சிநேகமாகத்தான் பழகுகிறார்கள் என்றாலும், பொதுவாக மற்ற இடங்களில் ஒரு பரபரப்புடனே பேசுவார்கள்.

அங்கே மூன்று பேரைச் சந்திக்க நேர்ந்தது. மூவருமே கல்கியில் வரும் கதைகளைப் போலவே - ரொம்ப நிதானமாய், பரபரப்பில்லாமல், அலங்காரமில்லாமல், நீட்டல்கள் குறைத்தல்கள் இல்லாமல் நெருக்கமாய்ப் பேசினார்கள்.

முகவறையில் நிர்வாக ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களைச் சந்திக்க வந்திருப்பதாகச் சொன்ன இரண்டாவது நிமிஷம், ஆசிரியர் குழுவைச் சேர்ந்த இளங்கோ என்னிடம் வந்தார்.

கிரா மீட்டிங்கில் இருப்பதால் பதினைநது நிமிஷங்கள் கழித்தே அவரைப் பார்க்க முடியும், அதற்குள் நாம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டே ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு வருவோம் என்றார் இளங்கோ.

அருகிலிருந்த கடையில் காப்பியை உறிஞ்சிக் கொண்டே - என் இலக்கிய ஆர்வம் குறித்தும், கதை எழுத வந்த பின்னணி குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஆக பதினைந்து நிமிஷங்கள் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதபடி இலகுவாய்க் கழிந்தது.

திரும்ப அலுவலகத்திற்குள் வந்ததும் - கிரா அவர்களின் அறையைக் காட்டினார். " போய்ப் பாருங்க. "

பரந்த மேஜைக்குப் பின்னே, எளிமையான உடையில் கிரா. முகம் நிறையப் புன்னகைத்து என்னை வரவேற்று உட்கார வைத்தார். உண்மையில் அந்தக் கணம் நான் ஒரு மேகம் போல மிதந்து கொண்டிருந்தேன். பாரம்பரியம் மிக்க பத்திரிகை. அமரத்துவமான எழுத்தாளர் கல்கி. கல்கியின் உன்னத படைப்பான அவர் புதல்வர். நேருக்கு நேர் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி தருணங்கள் எல்லாம் எழுத்து என்னும் தவம் தந்த வரம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல.

அந்நிய துக்கம் கதையைப் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்ததற்கும், பிரசுரித்ததற்கும் நன்றி சொன்ன நான், என்னை மாதிரி வளரும் எழுத்தாளருக்கு உங்கள் அறிவுரை என்ன சொல்லுங்கள் என்று கேட்டேன்.

மனிதர் சிரித்துக் கொண்டே தலையாட்டி மறுத்தார். " நீங்க அருமையா இந்தக் கதையை எழுதியிருக்கிங்க. நிறைய எழுதுங்கன்றதைத் தவிர உங்களுக்கு என்ன அறிவுரை சொல்றது. இந்தக் கதை உங்களுக்குள்ளே எப்படி உருவாச்சு ? "

அந்தக் கதை எப்படி எனக்குள் ஃப்ளாஷ் ஆனது, எப்படி அதை வடிமைத்தேன் என்பதை அவருக்கு விளக்கினேன். அனுபவஸ்தர்கள் தெரியப்படுத்துவதை விட தெரிந்து கொள்வதையே விரும்புகிறார்கள்.

கதைகள் தவிர சுவாரஸ்யமான கட்டுரைகள் எழுதி அனுப்புங்களேன் என்றார். எங்கும் விகடன் என்பதே பேச்சுன்னு ஒரு கேப்ஷன் வெச்சிருக்காங்களே, அது மாதிரி நம்ம கல்கிக்கும் ஏதாவது நல்ல கேப்ஷன் தோணிச்சுன்னா எனக்கு எழுதி அனுப்புங்க என்றார். அப்போதுதான் சந்திக்கிறேன். என்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று அதற்குள் கணக்கிட்டு அவையெல்லாவற்றையுமே செய்யத் தூண்டி விடுகிற அவரின் பாணி எனக்கு வியப்பூட்டியது.

கிராவுடனான இனிமையான இருபது நிமிஷங்களுக்குப் பிறகு பாராவை அவர் மேஜையில் பிடித்தேன். ஐந்து நிமிஷங்களுக்கும் குறைவான சந்திப்புதான். அந்நிய துக்கம் கதையை அவர் பங்குக்குப் பாராட்டினார். " நல்ல நடை. பரிசு வாங்கற கதையெல்லாம் நல்ல சிறுகதையா இருக்கும்ன்னு சொல்ல முடியாது. இது நல்ல சிறுகதையாகவும் இருக்கு. "

இப்படி மறுபடி இணையத்தில் அவரைப் பார்ப்பேன் என்று அப்போது நானும் நினைக்கவில்லை. அவரும் நினைத்திருக்க மாட்டார்.

 

oooOOooo
[ குமுதம் ]

பத்திரிகையாளர்கள் பலர் எழுத்தாளர்களாக இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களாக ஆகி விட முடியாது. கதை எழுதுவதை விட பத்து மடங்கு கடுமையான காரியம் அது.

தெரிந்த விஷயம்தான் என்றாலும், அனுபவ ரீதியாக அதை உணர எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த நாளின் சாயந்தரம் சிப்சை கொறித்துக் கொண்டு, டிவி முன்னால் உட்கார்ந்த போது டெலிபோன்.

" சத்யராஜ்குமார் இருக்காரா ? "

நான்தான் பேசுகிறேன் என்றதும் -

" வணக்கம். நான் குமுதம் பொறுப்பாசிரியர் ப்ரியா கல்யாணராமன். " என்று சொன்னது மறுமுனை.

நான் திகைப்போடு, " எங்கிருந்து பேசறிங்க? " என்று கேட்டேன்.

" பொள்ளாச்சி வந்திருக்கேன். நீங்க இப்ப ஃப்ரீயா இருந்திங்கன்னா சந்திக்கலாமா? ஒரு சின்ன உதவி தேவைப்படுது. " என்றார்.

" வாங்களேன். " என்றேன்.

" பிரச்சனை என்னன்னா நான் எட்டரை மணிக்கு கோயமுத்தூர்ல நீலகிரி எக்ஸ்ப்ரஸ் பிடிச்சாகணும். இப்ப பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருக்கேன். விசாரிச்சதில் உங்க வீட்டுக்கு வர எப்படியும் பதினைஞ்சு நிமிஷம் ஆகும்ன்னு சொன்னாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவாயிடும். நீங்க இங்கே வந்திங்கன்னா எனக்குக் கொஞ்சம் நேரம் மிச்சமாகுமே. "

" அதுவும் சரிதான். அங்கேயே இருங்க. கிளம்பி வரேன். "

அவரும், புகைப்படக் கலைஞர் சித்ரம் மத்தியாஸும் "கோயில் சொல்லும் கதைகள்" தொடருக்காக ஆனைமலை மாசாணியம்மன் கோயிலைப் பற்றி கவரேஜ் பண்ணி விட்டு, பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்கள்.

ஒரு கோக் வாங்கி கையில் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

" என்ன நீங்க அதிகமா எழுதவே மாட்டிங்கறிங்க. " என்று உரிமையாய் குறைபட்டுக் கொண்டார் ப்ரியா கல்யாணராமன்.

சித்ரம் மத்தியாஸ் புன்னகையோடு, " அவர் பிழைக்கிற வழியைப் பார்க்க வேண்டாமா? ஸார் நீங்க கம்ப்யூட்டரையே பாருங்க. இவர் சொல்றாருன்னு கதை கிதைன்னு நேரத்தை வீணாக்காதிங்க. " என்றார் விளையாட்டாய்.

" அது வேற, இது வேற. மத்தியாஸ், எழுதறவங்க எல்லாம் காசுக்காக மட்டும்தான் எழுதறாங்கன்னு நினைக்காதிங்க. அது ஒரு வகை ஆர்வம். மனசுக்குள்ளே இருக்கும் நெருப்பு. " என்றார் ப்ரியா கல்யாணராமன்.

அவர் சொன்னது அக்மார்க் நிஜம். இன்று இன்ட்டர்நெட்டில் எத்தனை பேர் எழுதுகிறோம். எழுத வேண்டும் என்று மனசுக்குள்ளே தகதகக்கும் நெருப்பு மட்டுமே எழுத வைக்கிறது.

" ஆமா, என் கிட்டே ஏதோ உதவி தேவைப்படறதா சொன்னிங்களே. அதைப் பத்தி சொல்லாம வேற ஏதேதோ பேசிட்டிருக்கிங்க. " என்றேன்.

" ஒண்ணுமில்லே சத்யராஜ்குமார், இந்த விசிட்ல கோயில் கவரேஜோட சேர்த்து சில பேட்டிகளையும் எடுத்துட்டுப் போகணும்ன்னு நினைச்சிருந்தேன். எல்லா வேலையும் திட்டமிட்டபடி முடிச்சிட்டேன். ஒரே ஒருத்தரை மட்டும் சந்திக்க முடியாம போச்சு. அவரை நீங்க சந்திச்சு ஒரு மினி பேட்டி எடுத்து அனுப்ப முடியுமா? உங்களை அக்நாலேட்ஜ் பண்ணிடறேன். "

நான் கொஞ்சம் அரண்டு போனேன். " ஸார், என்ன விளையாடறிங்களா? நான் எவ்வளவு வேணா எழுதுவேன். ஆனா புதுசா யாரையாவது நேரில் பார்த்தா பேச்சு மூச்சில்லாமப் போயிடுவேன். "

" உங்களுக்கு ஒண்ணும் கஷ்டமே இல்லை. கேள்விகள் எல்லாமே தயாரா இருக்கு. அவர் கிட்டே அந்தக் கேள்விகளுக்கு பதில் மட்டும் வாங்கி அனுப்பினா போதும். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா பண்ணிக் கொடுங்க. "

தலையாட்டினேன். " கேள்விகளை நீங்க தரதுன்னா ஓக்கே. நான் பதிலை வாங்கி அனுப்பி வெக்கறேன். "

நான் வெளிநாட்டுக்கு முயற்சி செய்து கொண்டிருந்ததால், " ரொம்ப தாங்க்ஸ். அமெரிக்கா போறதுக்குள்ளே இந்த பேட்டியை எடுத்துக் கொடுத்துட்டுப் போயிடுங்க ஸார். " என்று ஜோக் அடித்து விட்டு விடை பெற்றார்.

பேட்டி எடுக்க வேண்டிய அவர் ஒரு இலக்கிய அன்பர். அந்த அன்பரின் நண்பர் எனக்கும் நண்பர்.

நண்பரைக் கூட்டிக் கொண்டு அவரைச் சந்திக்கப் போன போது - வீடு பூட்டிக் கிடந்தது. அவர் வெளியூர் சென்றுள்ளார். வர மூன்று நாட்களாகும் என்று தெரிந்தது.

நண்பர் என்னிடம், " குமுதத்தில் இருந்து வருவாங்கன்னு அவர் சொல்லிட்டிருந்தார். நீங்க அலைய வேண்டாம். இந்த பேப்பரை என் கிட்டே குடுங்க. விபரம் சொல்லி நான் அவர் கிட்டே சேர்த்துடறேன். " என்றார்.

ப்ரியா கல்யாணராமன் தந்த கேள்விகளை நண்பரிடம் தந்து விபரங்களைச் சொல்லி விட்டு வந்தேன். இதில் ஒரு சின்ன சுவாரஸ்யம் என்னவென்றால், நான் குமுதத்தில் எழுதுவதால் என்னுடைய எழுத்தின் தரம் குறித்து அன்பருக்கு ரொம்ப சந்தேகம் இருக்கிறது என்பதை நண்பர் ஏற்கெனவே சொல்லியுள்ளார்.

இப்போது என் மூலமாகக் கேள்விகள் போக, அன்பர் அவைகளை நான்தான் எழுதியிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார் போலும்.

" கேள்விகள் இலக்கியத்தரமா இல்லை. " என்று ஒற்றை வரியில் சொல்லி திருப்பித் தந்து விட்டாராம். என்னுடைய நண்பர் என்னிடம் சோகமாய்ச் சொல்ல, நான் அதே சோகத்தோடு, ப்ரியா கல்யாணராமனிடம், " ஸாரி ஸார். கேள்விகள் இலக்கியத்தரமா இல்லையாம். என்னால உங்களுக்கு உதவ முடியலை. பத்திரிகை வேலை இவ்வளவு கஷ்டமா! ரொம்ப ரொம்ப ஸாரி. " என்றேன்.

" நீங்க ஏன் ஸார் வருத்தப்படறிங்க. நானே அவரை பேட்டி எடுத்திருந்தாலும் போடுவோமான்னு உறுதியாத் தெரியாது. நாங்க பத்து பேட்டி பண்ணினா கடைசியில் ரெண்டுதான் போடுவோம். " என்றார் படு கேஷுவலாக.
 

oooOOooo
[ இடைவேளை ]

அன்பான நண்பர்களே,

பதினைந்து வாரங்களாக, கடந்த பதினைந்து வருடங்களின் சில மணித் துளிகளை திரும்ப வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைத்த மாதிரி இருந்தது.

இன்னும் நிறைய சம்பவங்களும், மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

லேனா தமிழ்வாணன், சுபா, தேவிபாலா, அரஸ் போன்ற நீங்கள் அறிந்தவர்களும், நீங்கள் அறியாத, அதே சமயம் எனக்குள் எழுதுமளவு சுவாரஸ்யம் ஏற்படுத்தி விட்டுப் போனவர்களும் பசேலென்று மனசில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தவிர்க்க இயலாமல் எனக்குக் கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது.

தொடரை இதுவரை மவுனமாய் மனசுக்குள் ரசித்தவர்கள் மற்றும் பின்னூட்டமிட்டும், தங்கள் வலைப்பதிவில் குறிப்பிட்டும் பாராட்டிய சந்திரவதனா, ராஜ்குமார், பாலா, சுரேஷ் குமார் ஆகியோருக்கும் என் நன்றிகள்.

மீண்டும் நிறைய மனிதர்களை அழைத்துக் கொண்டு வரும் வரை உங்களிடமிருந்து தற்காலிகமாக இத் தொடரிலிருந்து விடை பெறுகிறேன்.

மிக்க அன்புடன்,
- சத்யராஜ்குமார்

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors