தமிழோவியம்
பங்குச்சந்தை ஒரு பார்வை : இந்த வாரச் சரிவும், எதிர்கால நம்பிக்கைகளும்
- சசி

பங்குச் சந்தையின் நிச்சயமற்றத் தன்மையை விளக்கும் விதமாக குறியீடு இந்த வாரம் காட்சியளித்தது. திங்களன்று 76 புள்ளிகள் உயர்வு, செவ்வாய் 28 புள்ளிகள் சரிவு, புதன் 192 புள்ளிகள் சரிவு, வியாழன் 91 புள்ளிகள் சரிவு, வெள்ளி 53 புள்ளிகள் உயர்வு எனப் பங்கு வர்த்தகம் ஒரு நிலையற்ற தன்மையில் இருந்தது. இந்தச் சரிவு (correction) அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான்.

புது வருடம் குதுகுலத்துடன் தான் துவங்கியது. திங்களன்று BSE குறியீடு 76 புள்ளிகள் உயர்ந்தவுடன் காளைச் சந்தை இன்னும் உயரக் கூடும் என்றே அனைவரும் கருதினர். ஆனால் புதன், வியாழன் என இரு தினங்களில் நிகழ்ந்த கடும் சரிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சரிவு ஏன் ஏற்பட்டது என்பதை ஆராயும் முன்பு பங்குக் குறியீடுகள் கடந்த இரு மாதங்களாக எப்படி இத்தகைய உயர்வைப் பெற்றது என்பதைக் கவனிப்போம்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் தங்கள் முதலீடுகளைக் குவிக்கத் தொடங்கின. இந்தியா மட்டுமில்லாமல் வளரும் பொருளாதாரங்களாக இருக்கக் கூடிய ஆசிய நாடுகளிலும் அதிக அளவில் முதலீடு குவிந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மந்தமாகிவிட்ட பொருளாதாரச் சூழலில் வளரும் நாடுகளில் முதலீடு செய்வது அவர்களின் பணத்தைப் பெருக்கும் வழியாகக் கருதப்பட்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 8 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு குவிந்தது. குறியீடுகளும் உயர்ந்தன. அப்பொழுதே அனைவரது மனதிலும் எழுந்தக் கேள்வி ? இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த முதலீடு தொடரும் ?

அந்தக் கேள்விக்கு இந்த வாரம் ஓரளவு விடைக் கிடைத்து விட்டது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் சந்தை சரியக்கூடும் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. ஆனால் இவ்வளவு விரைவாக இது நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரே நாளில் சுமார் 300 புள்ளிகள் சரியும் அளவுக்கு பங்குகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்க வேண்டிய அவசியம் என்ன ?

அமெரிக்க பொருளாதாரச் சூழல், டாலர் மதிப்பு என்று பலக் காரணங்களை அடுக்கினாலும், முக்கிய காரணம் லாப விற்பனை (Profit Booking) தான். பங்கு விலைகள் உச்சத்தில் இருந்ததால் சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதில் குறிப்பிடத்தக்கவை ஹேட்ச் பண்ட நிறுவனங்கள் (Hedge Fund) தான். பரஸ்பர நிதிப் (Mutual Funds) போல இவை தோன்றினாலும், இத்தகைய ஹேட்ச் பண்ட் நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்க பல வழிகளைக் கையாளுவார்கள். தற்பொழுது இந்த நிறுவனங்களுக்கு நிறைய லாபம் கிடைத்து விட்டது. எனவே பங்குகளை விற்கத் தொடங்கி சந்தையைச் சரிய வைத்து விட்டார்கள். இவர்களைத் தொடர்ந்து மேலும் சில வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளை விற்றுள்ளனர்.

வழக்கம் போல் பங்குக் குறியீடுகள் சரியத் தொடங்கியதும் சாதாரண முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது. பல முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கிவிட்டனராம். அவர்களுடைய தரகர்களும் பங்குகளை விற்குமாறு சிபாரிசு செய்ய பலர் பங்குகளை விற்று விட்டனர். சாதாரண முதலீட்டாளர்களிடம் உள்ள பிரச்சனையே இத்தகைய அணுகுமுறை தான். சந்தை உயரும் நேரத்தில் பங்குகளை அதிக விலைக் கொடுத்து வாங்குவார்கள். சந்தை சரியும் பொழுது பங்குகளை விற்று விட்டு சந்தையை விட்டு ஓடி விடுவார்கள். இத்தகைய அணுகுமுறை தவறு.

குறியீட்டின் பெரும் சரிவு அவர்களை அச்சப்படுத்தி விட்டது. முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக SEBIயும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தையில் நடைப்பெற்ற வர்த்தகத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருக்கிறதா எனத் தீவிரமாக ஆராய்கின்றனர். நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட இது சந்தையின் தன்மைக்கேற்ப நிகழ்ந்த சரிவு தானே தவிர செயற்கையாக உண்டாக்கப்படவில்லை என்று கூறினார்.

இத்தகையச் சூழலில் நம்முடைய முதலீட்டு திட்டம் எப்படியிருக்கவேண்டும் ?

இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறது. இந்த வருடம் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யப்போகும் நிதி நிலை அறிக்கை மிகச் சிறப்பாக இருக்கும் என்றே அனைவரும் கருதுகின்றனர். அது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6%-6.5% மாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கத் தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர குறைவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஜவுளி, பார்மா போன்ற துறைகளில் புதிதாக ஏற்றுமதி வாய்ப்புகள், உள்கட்டமைப்புக்கு ஏற்றம் தரும் திட்டங்கள் எனப் பங்குச் சந்தையை ஊக்கப்படுத்தக் கூடிய செய்திகள் உள்ளன.இந்த ஆரோக்கியமான சூழலில், தற்போதையச் சரிவை குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாகவே கருதவேண்டும்.

வரும் வாரங்களில் பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளைத் தாக்கல் செய்யும். இந்த அறிக்கைகளையும், நிதி நிலை அறிக்கையும் தான் பங்குச் சந்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இவை பங்குச் சந்தைக்கு ஏற்றம் தருவதாகவே இருக்கும்.

வரும் வாரத்தில் இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை  தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு உயருவதால் மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறையக்கூடும் என்ற அச்சத்தில் கடந்த ஒரு மாதமாகவே மென்பொருள் பங்குகளுக்கு பெரிய ஏற்றம் ஏதுமில்லை. இன்போசிஸ் பங்குகள் கூட ரூ2000 - 2100 க்கும் இடைய அல்லாடிக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் மென்பொருள் துறை ஏற்றம் தரும் துறையாக இருக்காது என்றே கருதப்படுகிறது. இந்தச் செய்திகளின் உண்மை நிலவரங்களை அறிக்கைகள் தான் தெளிவுப்படுத்தும்.

இந்த வாரம், சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், நீண்ட கால வாய்ப்புகள் நம்பிக்கை தருவதாகவே உள்ளது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors