தமிழோவியம்
தராசு : தண்டிக்கத்தடை
- மீனா

அண்மைக் காலத்தில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாக பெற்றோர், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்த புகார் தொடர்பாக பள்ளிகளில் மாணவ, மாணவியரை உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் மதிப்பெண் குறைந்தாலோ அல்லது வேறு பல காரணங்களுக்காகவோ ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குகிறார்கள். இத்தகைய தண்டனைகள் காரணமாக உணர்ச்சி வயப்படும் மாணவ, மாணவிகளில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வந்துவிடுகின்றனர். எனவே பள்ளிகளில் முறைகேடாக நடக்கும் மாணவ, மாணவிகளுக்கு தண்டனை வழங்க வகை செய்யும் தமிழ்நாடு கல்வி விதிகளில் உள்ள 51-வது விதி நீக்கப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.

வரவேற்க வேண்டிய ஒன்று இந்த உத்திரவு. என்றாலும் தண்டணை கூடாது என்ற கட்டளை மூலமாக மட்டுமே இன்றுள்ள மாணவர்களது மனநிலையை முழுவதுமாக மாற்றிவிட இயலாது. வாழ்வில் ஏற்படும் எல்லாவிதமான இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வாழும் மனப்பக்குவத்தை இளம் வயதிலேயே மாணவர்கள் மனதில் வளர்க்க உரிய ஏற்பாடுகளை ஆசிரியர்களும் பெற்றோரும் அரசும் செய்யவேண்டும். மாணவர்களின் போக்கை மாற்ற கவுன்சலிங் முறையை அரசு செயல்படுத்தவேண்டும். இன்றுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் இத்தகைய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். மாணவர்களை நெறிப்படுத்த மாற்று வழிகள் குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து புதிய முடிவுகளை எடுக்க அரசும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களும் முன்வரவேண்டும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றிருந்த காலம் மாறி இன்று சிறுவர்களாக இருப்பவர்களே பணத்தாசை மற்றும் காழ்ப்புணர்சி காரணமாக சக தோழர்களை கொலை செய்யும் அளவிற்கு மாறியுள்ளார்கள். சில நாட்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட சிறுவன் அரவிந்தன் இதற்கான ஒரு உதாரணம்தான். மேலும் எங்கே வீட்டில் மதிப்பெண் குறைந்ததற்காக கண்டிப்பார்களோ என்று எண்ணி தன்னைத் தானே கடத்திக்கொண்ட செய்திகளையும் நாம் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே மாணவர்கள் மனதிலிருந்து இத்தகைய எண்ணங்களை நீக்க பள்ளிகளில் முன்பு இருந்ததைப் போன்ற நீதி போதனை வகுப்புகளையும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் தர பள்ளிகள் முன்வரவேண்டும். தண்டனை நீக்கச்சட்டம் போன்றே இதையும் சட்டமாக அரசு அமுல்படுத்தினால் மாணவர்களது நலனில் அக்கறை உள்ள அரசு இது என்ற பாராட்டு நிச்சயம் முதல்வருக்கு கிடைக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors