தமிழோவியம்
கட்டுரை : பூமி அதிர்ச்சியை கண்டுபிடிக்கக் கூடிய கருவி
- திருமலை கோளுந்து

R. Vanalingam with his inventionவிட முயற்சியும், தன்னம்பிக்கையுமே எதையும் சாதிப்பதற்கு முக்கிய காரணிகள் என்று சொல்லும் ஆர்.வனலிங்கம் பூமி அதிர்ச்சியை கண்டுபிடிக்கக் கூடிய கருவியை கண்டு பிடித்திருக்கிறார். 37 வயதான இவர் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் வசித்து வருகிறார். தபால் வழிக்கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்று இருக்கிறார்.

குஜராத் உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கம், சுனாமி தாக்குதல் போன்ற செய்திகளை தொலைக்காட்சியிலும், செய்தித் தாள்களில் பார்த்த பொழுதும், படித்த பொழுதும் நில நடுக்கம் வருவதை கண்டு பிடித்து எச்சரிக்கை செய்யும் கருவியை கண்ட பிடித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக கருவியைக் கண்டு பிடித்தேன். இந்த பூமி அதிர்ச்சியை கண்டு பிடிக்கும் கருவிக்கான சர்க்குட்டை வரையறை செய்ய ஒரு வருடம் ஆனது. இந்தக் கருவியை செய்ய ஒரு மாதம் ஆனது. பொதுவாக பூமி அதிர்ச்சி என்பது 5 ரிக்டர் அளவுக்கு மேல் வந்தால் தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். நான் கண்டுபிடித்து இருக்கும் இக்கருவி 5 ரிக்டர் அளவு கோல் வரை பூமி அதிர்ச்சி வந்தால் எந்தவிதமான எச்சரிக்கையும் செய்யாது. ஆனால் 5 ரிக்டர் அளவு கோலுக்கு மேல் பூமி அதிர்ச்சி வந்தால் கண்டிப்பாக எச்சரிக்கும். இந்தக் கருவியால் முழுமையாக உயிர் சேதத்தை தடுக்க முடியாது. ஆனால் இக்கருவியால் அதிகமான உயிர் இழப்பை, காயம் அடைந்தவர்களை காப்பாற்ற இக்கருவி பெரிதும் உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் இக்கருவி பொருத்தப்பட்டு பூமி அதிர்ச்சி வந்தால் இக்கருவி தரும் எச்சரிக்கை காரணமாக பல உயிர்களை தப்பிக்க வைக்க முடியும். அதே சமயத்தில் பூமி அதிர்ச்சி வந்து கட்டிடங்கள் பாதிப்படைந்து தொலை தொடர்பு துண்டிக்கப்படும் பொழுது,  இக்கருவியில் இருந்து 5 முக்கிய தொலைபேசி எண்களுக்கு தானாகவே தொலைபேசி அழைப்பு சென்று தகவல் தந்து எச்சரிக்கும். அதாவது மருத்துவமனை, ரத்தவங்கி, தன்னார்வ தொண்டு நிறுவனம், மாவட்ட ஆட்சியர், ஆம்புலன்ஸ் உட்பட்டோருக்கு தகவல் அனுப்பும் வசதியும் இந்தக் கருவியில் உண்டு. 

EarthquakeAlarmகண்ணாடி, உருண்ட பந்து, மரம், இரும்பு, எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ரானிக் பொருட்களை கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருவியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே செயல் விளக்கம் செய்து காட்டி இருக்கிறேன். ஒரு பொருளை கருவியின் மேல் வைத்து ஒரு கயிற்றாலோ, கையினாலோ அந்தக் கருவியை ஆட்டும் பொழுது அக்கருவியில் இருந்து தானாக எச்சரிக்கை ஒலி, தொலைபேசி தொடர்புகள் செல்வதைப் பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்ர்கள். இதனைக் கண்டு கல்லூரி இயற்பியல் விரிவுரையாளர்கள் பாராட்டி இது அற்புதமான கண்டுபிடிப்பு என சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். வரும் ஜனவரி 26ம் தேதி மதுரை பாலிடெக்னிக் கல்லூரியில் நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் முன்னிலையில் இக்கருவியின் செயல்பாட்டை செய்து காட்ட முயற்சி வருகிறேன். இதற்கு முன்பு இந்தக் கண்டுபிடிப்பை பற்றி ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு கடிதங்கள் மூலம் தகவல் அனுப்பிய பொழுது, தேசிய அறிவியல் கழகத்தை நாடும் படி சொல்லி கடிதங்கள் அனுப்பி இருந்தார்கள். அதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நமது நாட்டின் மக்கள் தொகை 110 கோடி. ஆனால் நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டினர் கண்டு பிடித்த பொருட்கள். இது வெட்கப்பட வேண்டிய விஷயம்.  வெளிநாட்டினருக்கு இருக்கின்ற மூளை தான் நமக்கும் இருக்கு. அவர்கள் இரண்டு கால் தான் கை தான். நம் நாட்டினரால் ஏன் சாதிக்க, புதிதாக கண்டு பிடிக்க முடியவில்லை என்ற ஆதங்கள் எனக்கு உண்டு.  இந்தக் கருவியைக் கண்டுபிடித்த என்னைப் பார்த்து நீ படித்தது ஒன்று, நீ செய்திருப்பது ஒன்று என்று பலர் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இது என்னை பெரிதும் கவலையடையச் செய்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் 1050 பொருட்களை கண்டு பிடித்து பதிவு செய்திருக்கிறார். அவர் அதற்கான கல்லூரிகளில் சென்று படித்ததில்லை. அதே போல் மார்க்கோணி எந்தக் கல்லூரியிலும் படிக்காதவர். அவர் எப்படி எப்.எம். ரேடியோவை கண்டு பிடித்தார். இதனை எல்லாம் இங்குள்ள சிலர் யோசிக்க மறுக்கிறார்கள்.எனது இந்தக் கண்டுபிடிப்புக்காக எனது வேலை, நேரம் என்று கூட பார்க்காமல் 35,000 வரை செலவு செய்து இக்கருவியை உருவாக்கி இருக்கிறேன். எனது இந்தக் கருவிக்கு அங்கீகாரம் மட்டும் கிடைத்து விட்டால் அரசிடமே இதனை ஒப்பபடைத்து விட முடிவுடன் இருக்கிறேன்.

பொதுவாக ரிக்டர் அளவு கோல் நிலநடுக்கம் எந்த அளவில் ஏற்பட்டு இருக்கிறது என்பதைத் தான் சொல்கிறது. தமிழ்நாட்டில் அந்தக் கருவி சென்னை வானிலை மையத்ததைத் தவிர வேறு எங்குமே கிடையாது. எனது கண்டுபிடிப்பு நில நடுக்கம் வந்தவுடன் மக்களை எச்சரிக்கும் கருவியாக இருக்கிறது. இதனை பொது மக்களுக்கு 15,000 விலையில் அரசாங்கத்தின் மூலமே விற்பனை செய்யலாம். இக்கருவியில் இருந்து வயர் மூலம் பக்கத்து வீட்டுக்கோ, குடியிருப்புகளுக்கோ சைரன் இணைப்பம் கொடுத்துக் கொள்ளலாம் என்கிறார் வனலிங்கம்.

Vanalingam-EarthquateAlarmஇவர் வேறு இரண்டு கண்டுபிடிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதாவது சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிக அளவு ஒளிகளை கொண்ட பல்ப்புகளை பயன்படுத்தி எதிரே வருகின்ற வாகனங்களை நிலை தடுமாறச் செய்து கொண்டிருக்கின்றன. அதனை தடுக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்புக்கு முயற்சி எடுத்து வருகிறார். இவர் கண்டுபிடிக்கும் கருவியை வாகனங்களில் பொருத்தினால் 200 மீட்டருக்குள் வாகனங்கள் வரம் பொழுது இரண்டு வண்டிகளிலும் தானாக ஒளி அளவு குறையும் வகையில் அக்கருவி செயல்படுமாம். அதே போல் தற்பொழுது ஏ.சி. கார்களில் செல்பவர்கள் வெளியில் இருந்து பிற வாகனங்களில் இருந்து வரும் சத்தங்கள் கேட்பதில்லை. இதனால் மலைப்பாதைகளில் பல விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கு மாற்று கருவியைக் கண்டு பிடிப்பதிலம் தீவரமாக இருப்பதாக சொல்கிறார்.

ஏதோ வாழ்கிறோம், ஏதோ சாகிறோம் என்று இல்லாமல் மக்கள், நாம் இறந்த பொழுதும் நம்மைப் பற்றி பேசுகின்ற மாதிரி பல நல்ல கணடு பிடிப்புகளை விட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார். அதற்கான வாசகங்களையும் தனது வீட்டு சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors