தமிழோவியம்
தராசு : தூண்டப்படும் தீவிரவாதம்
- மீனா

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 6-ந் தேதி வீசப்பட்ட வெடிகுண்டில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் 8-வது படிக்கும் பஷரத் அகமது தெலி என்ற 14 வயது சிறுவனை இப்போது கைது செய்து உள்ளனர். அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகள் 2 பேர் தனக்கு பணம் கொடுத்து வெடிகுண்டு வீச சொன்னதாகவும் அதன்படி வீசியதாகவும் கூறியுள்ளான். வெடிகுண்டு வீசுவதற்கு தீவிரவாதிகள் முதலில் ரூ.1000 தருவதாக கூறியதாகவும் ஆனால் பின்னர் ரூ.500 தான் தந்தார்கள் என்றும் அவன் கூறியுள்ளான்.

ஒரு 14 வயது சிறுவனைத் தீவிரவாதியாக்கிய பெருமை யாரைச் சேரும்? தீவிரவாதிகளையா? இல்லை 1000 ரூபாய்க்கு வழியில்லாமல் - அதனைச் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நிலைக்கு அவனைத் தள்ளிய சமுதாயத்திற்குத்தான் இந்தப் பெருமை போய் சேரவேண்டும். உலக அளவில் தீவிரவாதம் தழைத்தோங்க ஒரு முக்கிய காரணமாக இருப்பது வறுமையும் சமுதாய அவலங்களும் தான்..

காஷ்மீர் பகுதிகளில் மக்களின் முக்கிய தொழிலே சுற்றுலா என்று இருந்த நிலை தீவிரவாதிகளின் இடைவிடாத தாக்குதலால் முற்றிலும் சிதைந்துவிட - தங்களுக்குத் தேவையான பணத்தை எப்பாடுபட்டாவது சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதே நிலைதான் உலகில் தீவிரவாதம் தழைத்தோங்கும் பல நாடுகளின் நிலை. மக்களின் தேவைகளைத் தீர்த்து வைப்பதன் மூலம் அவர்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்கும் தீவிரவாதத் தலைவர்கள் - பிறகு அந்த அப்பாவி மக்களின் மூலமாகவே பல பயங்கரங்களை அரங்கேற்றுகிறார்கள். அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்வதற்கென்றே அலையும் கூட்டம் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் விளைவே இன்று உலகெங்கும் தலைவிரித்தாடும் பயங்கரவாதம்.

உலக பயங்கரவாதத்தை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும் குறைந்த பட்சம் நம் நாட்டில் தலைவிரித்தாடும் பயங்கரவாதத்தையாவது நாம் தடுக்க முயலவேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளை ஓரளவிற்காவது பூர்த்தி செய்வதன் மூலமாகவே பாதிக்குப் பாதி பிரச்சனையை நம் அரசால் தீர்க்க முடியும். மேலும் மக்களிடம் தீவிரவாத விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும், பலதரப்பட்ட வேலைவாய்ப்பு முறைகளாலும் நிச்சயம் நம் அரசால் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும். தீவிரவாதக் குழுக்கள் சொல்வதைக் கேட்டு தீவிரவாதியாகும் ஒருவன் நிச்சயம் நல்ல புத்திமதிகளைக் கேட்டால் மனம் மாறுவான் - மேலும் அவனுக்கு உழைத்துப் பிழைக்க ஒரு வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் தானுண்டு - தன் வேலையுண்டு - குடும்பமுண்டு என்று மாறுவான். மாற்ற வேண்டியது அரசின் கடமை.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors