தமிழோவியம்
ஜோதிட விளக்கங்கள் : மேல் நாட்டவர் ஜோதிடம் பற்றி
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

ஜோதிடம் என்பது ஒரு சமுத்திரம் போன்றது. இதில் முழுவதும் கரை கண்டவர் எவரும் இலர். ஒவ்வொருவரும் தனக்கென்று தன் அனுபவத்தின் வாயிலாக ஒரு பாதையை வைத்துக் கொண்டுள்ளனர்.  என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு நமது பாரம்பரிய ஜோதிடத்தைக் காட்டிலும் மேலை நாட்டவர் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை அதிகம். அதில் நன்கு தேர்ச்சியும் பெற்றிருந்தார். நான் முதலில் மேலை நாட்டவர் ஜோதிட முறைகள் நமது பாரம்பரிய முறையைப் பின்பற்றியது என எண்ணி இருந்தேன்.  ஆனால் அவர்கள் முறை வேறு என்பதும், நமது ஜோதிட சாஸ்திரத்தைத் தழுவியது இல்லை என்றும் காலப் போக்கில் அறிந்து கொண்டேன்.  நாம் ஒரு வீடு என்பது ஒரு ராசி முழுவதையும்  அழைக்கிறோம்.  அதாவது ஒருவருக்கு மீனம் லக்கினமாக வந்தால் மீனத்திலுள்ள 30 பாகைகளும் ஜென்ம லக்கினமாக நாம் கருதுகிறோம். அடுத்து வரும் மேஷம் 2-ம் வீடாகக் கருதுகிறோம்.

ஆனால் மேல் நாட்டவர் ஜோதிடத்தில் அவ்வாறு இல்லை; மீனம் லக்கினம் என்றால் அதில் எத்தனையாவது பாகையில் லக்கினம் ஆரம்பிக்கிறது எனக் கண்டுபிடிக்கிறார்கள்.  உதாரணமாக 15 பாகையில் மீனத்தில் லக்கினம் ஆரம்பித்தால் லக்கினம் 15 பாகையிலிருந்துதான் ஆரம்பமாகிறது. மீனத்தில் 15 பாகைக்கு முற்பட்டது 12 வது வீடாகக் கருதுகிறார்கள். உதாரணமாக 14 வது பாகையில் செவ்வாய் இருக்கிறது எனக் கொள்ளுங்கள். அது லக்கினத்தில் இல்லை. 12வது வீட்டில் இருக்கிறது அவர்கள் கணக்குப்படி.

அவர்கள் லக்கினத்தைப் போல 12 வீடுகளையும் ஆரம்பமாகும் இடத்தை ஸ்புடம் போட்டுக் கணிக்கிறார்கள். இந்த ஆரம்பமாகும் இடத்திற்கு  Cusp  எனப் பெயர். 2-ம் வீடு மேஷத்தில் 14 பாகையில் ஆரம்பித்தால் முதல் வீடு என்பது மீனம் 15 பாகை முதல் மேஷம் 14 பாகை வரையிலும் ஆகும். மேஷத்தில் 10 வது பாகையில் ஒரு கிரகம் இருந்தால்  அது லக்கினத்தில் இருப்பதாகவே கருதப்படும். இதில் ஒரு வீடு என்பது கட்டாயமாக 30 பாகைகள் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஊருக்குத் தகுந்தாற்போல் வீடுகளின் அளவுகள் மாறும். சில ஊர்களுக்கு வீடுகளின் அளவு 30 பாகைகளுக்கும் மேலும் இருக்கும்.

அடுத்ததாக கிரக பார்வை மிக முக்கியமானது. எல்லா கிரகங்களுக்கும் 7-ம் பார்வை உண்டு. செவ்வாய், சனி, குருவுக்கு மட்டும் 7-ம் பார்வையைத் தவிர விசேஷப் பார்வைகள் உண்டு. பார்வை என்றால் நாம் துல்லியமாகக் கணிப்பது இல்லை. 7-ம் பார்வை என்றால் ஒருகிரகம் இருக்கும் வீட்டிலிருந்து 7 வது வீட்டை எடுத்துக் கொள்கிறோம். 7-ம் வீடு முழுவதையும் பார்ப்பதாகக் கருதுகிறோம். இந்தப் பார்வையில் நல்லது கெட்டது என்பதெல்லாம் அந்த கிரகத்தை வைத்துத்தான். அந்த கிரகம் நல்லதா அல்லது கெட்டதா என்று கிரகத்தின் தன்மையைவைத்தும் ஆதிபத்தியத்தை வைத்தும் கணக்கிடுகிறோம். அதை வைத்து அந்தப் பார்வை நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானிக்கின்றோம்.  குரு நல்லவர்;  ஆகவே அவர் பார்வையும் நல்லதுதான்; அவர் ஆதிபத்தியம்படி கெட்டிருந்தால் அவர் பார்வை கெட்டுப் போய் விடுகிறது என்றும் தீர்மானிக்கின்றோம்.

ஆனால் மேல் நாட்டவர் கணிப்பு அப்படி அல்ல; இரண்டு கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தைத் துல்லியமாக அளக்கிறார்கள்.  அதுதான் பார்வை என்பது. அவற்றிற்குப் பெயரும் உண்டு. அவைகளைக் கீழே பார்ப்போம்.

1. 180 Degrees aspect - this is called "Opposition" - This is adverse in nature.  (இது நமது 7-ம் பார்வைக்கு ஒப்பானது) - இது தீயது.

2. 90 Degrees aspect - this is called "Square" - This is an evil aspect.  (இது நமது 3-ம் பார்வைக்கு ஒப்பானது) - இதுவும் தீயது

3. 45 Degree aspect - this is called "semi- square" - This is also an evil aspect.

4. 22 1/2 Degrees aspect -  இதுவும் ஒரு தீய பார்வைதான்.

5. 120  Degrees aspect - this is called "Trine" -  இந்தப் பார்வை நன்மையைக் கொடுக்கும்.  இது நமது 4-ம் பார்வைக்கு ஈடானது.

6. 60 Degrees aspect - this is called "Sextile" - இதுவும் நன்மையைக் கொடுக்கும்.

7. 30  Degrees aspect - this is called "Semi-sextile" -  இதுவும் நன்மையைக் கொடுக்கும்.

இதைத் தவிர இன்னும் சில பார்வைகள் உண்டு.  அவற்றை எல்லாம் எழுதவில்லை. மேலை நாட்டவர்களின் கணிப்புக்களில் பார்வை என்றால் என்ன என்பதை விளக்கு வதற்காகவே மேலே சிலவற்றைக் குறிப்பிட்டோம்.

நாம் 7 கிரகங்களுக்கும் 12 வீடுகளைப் பிரித்து அளித்துள்ளோம். மேலை நாட்டவர்கள் கும்பத்தை யுரேனசிற்கும், மீனத்தை நெப்டியூனுக்கும் அளித்துள்ளனர்.  நமது ஜோதிடத்தில் "யுரேன்சிற்கும்" "நெப்டியூனுக்கும்" இடமில்லை.  அவைகள் பூமியிலிருந்து மிகுந்த தூரத்திலிருப்பதால் இடம் பெறவில்லை.

நாம் வான மண்டலத்தின் ஆரம்ப இடமான மேஷ ராசியின் ஆரம்ப இடம் ஸ்திரமாக அப்படியே இருப்பதாகக் கருதுகிறோம்.  ஆனால் அவர்கள் அது  பின்நோக்கி நகர்வதாகக் கூறுகிறார்கள்.  ஆண்டுக்கு சுமார் 50.2388475 செகண்டுகள் வீதம் பின்னோக்கி நகர்வதாக கணித்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஜோதிடம் "சயனா" என்றும் நமது ஜோதிடம் " நிராயனா" என்றும் அழைக்கப் படுகிறது".

மற்றவைகளை அடுத்த வாரத்தில் பார்ப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors