தமிழோவியம்
தராசு : இலங்கை பிரச்சனையும் அரசியல் கூத்துகளும்
- மீனா

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் முக்கிய இடம் பிடித்துவரும் "இலங்கை தமிழர்களைக் காக்க மத்திய அரசு போராடவேண்டும்" என்ற கோரிக்கையும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்களும் மறியல்களும் உயிர்தியாகங்களும் தினமும் செய்தித்தாள்களை ஆக்கிரமித்துவருகின்றன. இலங்கைப் பிரச்சனையில் இது வரை ஒவ்வொரு தலைவரும் நடத்திவரும் நாடங்களைப் பார்த்தால் தலை சுற்றும்..

தி.மு.க தலைவர் கருணாநிதி இலங்கைத் தமிழர் வாழ்வு மலர என் ஆட்சியை வேண்டுமானாலும் நான் தியாகம் செய்வேன் என்று சொல்வார். மனித சங்கிலி போராட்டம் என்ற பேரில் அப்பாவி மாணவர்களை மணிக்கணக்கில் மழையில் நனைய விடுவார்.. எங்கே ராமதாஸ், வைகோ போன்ற தலைவர்கள் இலங்கைப் பிரச்சனையில் முக்கியத்துவம் பெற்றுவிடுவார்களோ என்ற பயத்தில் நாளொறு கவிதையும் பொழுதொறு அறிக்கையுமாய் காலத்தை ஓட்டுவார்... மத்திய அரசே தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று மற்ற பிரச்சனைக்கெல்லாம் உதார் விடுபவர் இலங்கைத்தமிழர் நலனைக் காக்க ஒரே முறை டெல்லி செல்வார் - அதிலும் சோனியா உள்ளிட்ட டெல்லித் தலைவர்களிடம் பேசித் தீர்க்க தன்னுடைய சொந்தப்பிரச்சனைகள் பல இருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எந்தப் போராட்டம் நடந்தாலும் அது தன் தூண்டுதலால் - தன் ஆசியுடன் தான் நடைபெற்றது என்று அறிக்கை விடுவார். இதுதான் கருணாநிதியின் இனமான உணர்வு. சமீப காலமாக கட்சி நலனைவிட தனது குடும்பநலனையே பிரதானமாக கருத்தில் கொண்டு ஆட்சி செய்யும் இவர் தனக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்கள் நலனையே காற்றில் பறக்கவிடும் நிலையில் இலங்கைத் தமிழர்களையா காப்பாற்ற போராடப்போகிறார் - பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் ?

அடுத்ததாக வைகோ. இலங்கைப் பிரச்சனையை வைத்து அரசியல் செய்யும் அதிமுக்கியமான தலைவர். இலங்கைத் தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் இவர் உருப்படியாக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்று ஆராய்ந்தால் பலன் பூஜ்ஜியம் தான். தி.மு.க தலைவர் கருணாநிதியைப் போலவே சிறந்த பேச்சாற்றல் பெற்ற வைகோ உணர்சிமயமாக சொற்பொழிவாற்றுவதையும் போராட்டம் நடத்துவதையும் மத்திய அரசுக்கு மனு கொடுப்பதையும் தவிர்த்து வேறு ஒன்றுமே உருப்படியாக செய்யவில்லை என்பது உலகறிந்த உண்மை. தன்னை தி.மு.க விலிருந்து விலக்கினார்கள் என்பதற்காக தீக்குளித்த தனது கட்சித் தொண்டனைப் பற்றி ஒரு காலத்தில் வாய் ஓயாமல் பேசிவிட்டு அடுத்த தேர்தலிலேயே தி.மு.க தலைமையிடம் தஞ்சமானதும் - தன்னைப் பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதாவை ஏறுமாறாக ஏகடியம் பேசி ஏசிய கொஞ்ச நாளிலேயே தான் ஏசிய அதே ஜெயலிலிதாவிடம் கூட்டணி அமைத்ததும் தமிழக மக்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. உணர்சிமயமாகப் பேசுவதைத் தவிர வைகோ வேறு ஒன்றையுமே உருப்படியாக செய்யமாட்டார் என்று தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இவரா இலங்கைப் பிரச்சனையில் ஒரு தீர்வை ஏற்படுத்த வழிவகை செய்யப்போகிறார் ?

பா.ம.க தலைவரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தன் கட்சி நலன் - அதை விட முக்கியமாக தன் சொந்த நலனை பிரதானமாகக் கருதுபவர். இதற்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் தனக்கு ஆதாயம் கிடைக்கும் கட்சியாகப் பார்த்து கூட்டணி வைப்பவர் - தானோ தனது குடும்ப உறுப்பினர்களோ எக்காலத்திலும் பதவிக்கு வரமாட்டோம் என்று ஒரு காலத்தில் சொன்ன வாக்குறுதியை மறந்து தனது மகனை குறுக்கு வழியில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் - மகன் எக்குத்தப்பாக பிரச்சனையில் மாட்டியபோது உதவிக்கு வரவில்லை என்ற காரணத்தால் தி.மு.க தலைவரிடம் மனஸ்தாபம் கொண்டு கூட்டணியிலிருந்து விலகிவிட்டு பிறகு அதே மகனின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் இணைந்தவர்.. சொந்த நலன் - கட்சி நலன் ஒன்றைத் தவிர வேறு எதையுமே மனதில் கொள்ளாத ராமதாஸா இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடப் போகிறார் ?

இலங்கைத் தமிழர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு நான்கு நாட்களில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட உன்னத மனிதர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். தனது கட்சிக்காரர்கள் தங்களால் முடிந்தமட்டும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்த பிறகு நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை - அநியாயமாக எங்கள் மீது பழியைப் போடுகிறார்கள் என்று புலம்பி மக்களிடம் அனுதாபம் பெற இவர் செய்த முயற்சிகளை குழந்தை கூட நம்பவில்லை. தலித்துகள் நலனைக் காக்க இவர் போராடுகிறாரோ இல்லையோ - தமிழ்  திரையுலகில் ஒரு இடத்தைப் பிடிக்க மிகக் கடுமையாக போராடுகிறார். தமிழகத்தில் எங்கே பகுஜன் சமாஜ் கட்சி தங்களுக்கு போட்டியாக வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தன்னை எதிர்ப்பவர்களைப் பற்றி இவர் புலம்பும் புலம்பல்கள் நல்ல காமெடி தான். தி.மு.க - அ.தி.மு.க என்ற இரண்டு கழகங்களில் காலில் விழாமல் சுயமாக நின்று சொந்தக் கட்சியையே காப்பாற்ற திராணியில்லாத இவரா இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றப்போகிறார் ?

இவர்களின் நிலையே இப்படி என்றால் கம்யூனிஸ்ட்கள் மற்றும் தி.க தலைவர் வீரமணியைப் பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். விடுதலைப் புலிகளை உள்மனதில் ஆதரித்தாலும் மத்திய ஆட்சியில் பங்கு பெற்றுள்ளதால் புலிகளுக்கான ஆதரவை வெளிப்படையாக கொடுக்க முடியாமல் திண்டாடும் நிலையில் கருணாநிதியும், விடுதலைப் புலிகளை மாவீரர்களாகச் சித்தரித்து வார்த்தை ஜாலம் நடத்திவரும் வை.கோ, திருமாவளவன் போன்றவர்களும், புலிகளைப் பற்றி வெளிப்படையாக ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் உள்ள பா.ம.க, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் நடத்தும் போராட்டம் போன்ற இந்தக் கூத்துகளை எல்லாம் பார்க்கும் போது காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா எவ்வளவோ தேவலை. அவர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உருப்படியாக ஒன்றையும் செய்யவில்லை என்றாலும் மற்ற தலைவர்கள் அடித்த ஸ்டண்டுகளை இவர்கள் செய்யாதது எவ்வளவோ தேவலை.

ஆக மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரும் இலங்கைத் தமிழர் நலனுக்காக உண்மையாகப் பாடுபடவில்லை - பாடுபடப் போவதில்லை. இவர்கள் செய்வதெல்லாமே அரசியல் ஸ்டண்டுகள் தான். மத்திய அரசை ஸ்டண்ட் அடிக்கும் எந்த ஒரு அரசியல்வாதியும் இலங்கை அரசுக்கு எதிராக திருப்பபோவதில்லை. முக்கியமாக இவர்களது கூத்துக்களால் இலங்கையில் நல்லாட்சி நிச்சயம் மலரப்போவதில்லை.. இதை அப்பாவி பொதுமக்கள் உணரவேண்டும் - அவர்களால் முடிந்த அளவிற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும். நம்பிக்கையான தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக உதவி செய்யுங்கள் என்று கேட்டுவரும் போது தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும். ஓரளவிற்காகவது அங்குள்ள மக்களின் துயரப் போக்க முற்படவேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் தங்களது சொந்த முயற்சியால் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக உலக நாடுகள் இணைய முயற்சி செய்ய வேண்டும். தமிழக மக்கள் தங்களது சகோதர தமிழர்களுக்காக இதைச் செய்வார்களா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors