தமிழோவியம்
கட்டுரை : நவஅரசியல் உத்தி
- ச.ந. கண்ணன்

தமிழ் சினிமாவில் காண்பிக்கப்படும் கலவரக் காட்சிகளில் காவல்துறை என்கிற அதிகார அமைப்பின் சுவடே இருக்காது. நடுரோட்டில் நாலுபேர் வெட்டிச் சாய்க்கப்பட்டாலும்கூட அதை எட்டிப் பார்க்க ஒரு காவலரும் சம்பவ இடத்தில் ஆஜராக மாட்டார். இதைப் பார்த்து ரத்தக் கொதிப்படைந்து, அந்த ஊரில் போலீஸ் ஸ்டேஷனே இல்லையா என்று காட்சியின் நம்பகத்தன்மை குறித்து தமிழ்ப் பத்திரிகைகள் கேள்வி எழுப்பும். ஆனால் அதுபோன்ற தமிழ் சினிமா காட்சிகள் எதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாகவே நான் உணர்கிறேன். சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த சம்பவங்கள் தமிழ் சினிமாவில் காட்சியாக வைக்கப்பட்டால் அது எத்தனை பெரிய விமரிசனத்துக்கு உள்ளாகும்? ஆனால் நிஜத்தில் நடந்தது என்ன?

Thirumavalavan Fastingசமீபத்தில் திருமாவளவன் சில நாள்கள் உண்ணாவிரதம் இருந்த செய்தியை ஊடகம் வழியாக அறிந்திருப்பீர்கள். இலங்கைத் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் இறுதியில் உள்ளூர் தமிழர்களின் உயிரைத் துரத்தித் துரத்தி அடித்ததுதான் மிச்சம். நாலு நாள்கள் தமிழகச் சாலைகள் முழுக்கக் கலவரக்காடாக இருந்தபோதும் அதைப் பத்தோடு பதினொன்றாகவே தொலைக்காட்சிச் செய்திகள் அறிவித்தன. தேசிய சேனல்கள் சட்டை செய்யவேயில்லை. அதேசமயம், மங்களூர் பப்பில் இளம் பெண்கள் தாக்கப்பட்டதற்கு இந்த டிவி சேனல்கள் போட்ட கூப்பாடுதான் என்ன! அபிவன் பிந்திரா வரைக்கும் சென்று கருத்து கேட்டன. ஆனால் தமிழ்நாட்டில் நடந்த இந்த நாசவேலைகளை கேட்பார் யாரும் இல்லை. தட்டிக் கேட்பதற்குக்கூட பாதிக்கப்பட்டவர் செல்வந்தராக இருக்கவேண்டும் இந்த நாட்டில். 

திருமாவளவன் உண்ணாவிரதம் மேற்கொண்ட சமயத்தில் தமிழகம் முழுக்க போகி குப்பைப் பொருள்களை எரியூட்டுவதுபோல குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் எரியூட்டப்பட்டன. பல பகுதிகளில் பேருந்துகள் தாக்கப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக ஒரு பேருந்து எரிக்கப்பட்டால் அதன் தீவிரம் எவ்வளவு தூரம் செல்லும் என்பதைத் தமிழகம் அறியாதது அல்ல. சில வருடங்களுக்கு முன்பு அதிமுக விசுவாசிகள் செய்த வெறியாட்டத்தின் இன்னொரு பகுதியாகவே இந்தச் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.

Thirumava Fasting Violenceஉண்ணாவிரதம் என்பது அறப்போருக்குச் சமம். எதிராளியிடம் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில் தன்னைத்தானே வதைத்து நியாயம் தேடிப் போராடுவதுதான் உண்ணாவிரதத்தின் தத்துவம். ஆனால் திருமாவளவன் மேற்கொண்ட அறப்போரினால் பொதுச்சொத்துகள் சேதமாகி மக்களின் நிம்மதிக்குப் பங்கம் விளைவித்துவிட்டார்கள் அவருடைய தொண்டர்கள். ஒருநாள் இருநாள் இல்லை. தொடர்ந்து நான்கு நாள்கள். விழுப்புரம், திண்டிவனம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்தான் அதிக அளவில் களேபரக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.

ஜனநாயக நாட்டில் ஒரு சிறு அரசியல் கட்சித் தலைவரின் பெயரில் நடந்த வன்முறையாட்டத்தில் நேர்ந்த இழப்புகளைச் சற்றே கவனித்துப் பாருங்கள்.

 • திண்டிவனத்தையடுத்த வானூர் அருகே அரசுப் பேருந்து நல்லாவூர் என்ற இடத்தில் 20 பேரால் வழி மறிக்கப்பட்டது. பயணிகளை இறங்கச் சொன்ன அந்தக் கும்பல் பேருந்துமீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு ஓடிவிட்டது. இதி்ல் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.
 • கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்லும் (எம்.70) அரசு பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணியளவில் இந்தப் பேருந்தில் ஏறிய ஒரு கும்பல் இருக்கைகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டுத் தப்பியோடிவிட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே குதித்து உயிர் தப்பினர்.
 • தாம்பரத்திலிருந்து கோயம்பேடு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்துமீது விருகம்பாக்கம் அருகே கல் வீச்சு நடந்தது. இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
 • வானூர் அருகே குன்னம் கிராமத்திலிருந்து திண்டிவனத்துக்குச் சென்ற அரசு பேருந்து ஆதங்கப்பட்டு அருகே முகமூடி அணிந்த 20 பேரால் வழிமறிக்கப்பட்டது. அந்தக் கும்பல் பேருந்து மீது சரமாரியாக கல் வீசித் தாக்கியது. இதில் டிரைவர் ஏழுமலையின் மண்டை உடைந்தது. பின்னர் பேருந்தில் ஏறிய அந்தக் கும்பல் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடியது. பேருந்து முழுவதும் எரிந்து போனது.
 • நள்ளிரவில் திண்டிவனம் அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்து டிப்போவில் நிறுத்தி வைத்திருந்த டவுன் பஸ்சுக்கு ஒரு கும்பல் தீயிட்டுவிட்டு ஓடிவிட்டது.
 • கடலூர் சேப்னாநத்தம் அருகே அரசுப் பேருந்துமீது கல்வீச்சு நடந்தது. இதில் கண்ணாடி நொறுங்கியது. குள்ளஞ்சாவடி உள்பட 3 இடங்களிலும் பேருந்துகள்மீது கல்வீச்சு நடந்துள்ளது.
 • கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பேருந்துகள் தாக்கப்படுவதால் 3வது நாளாக கிராமங்களுக்குப் பேருந்துகள்  இயக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
 • விழுப்புரத்திலிருந்து புதுவை சென்ற தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் உழவர்கரை அருகே 10க்கும் மேற்பட்ட கும்பலால் வழிமறிக்கப்பட்டன. பின்னர் அந்தக் கும்பல் உருட்டுக் கட்டைகளால் கண்ணாடிகளை உடைத்தது. பேருந்துகளில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
 • புதுச்சேரியில் இருந்து மரக்காணம், சூனாம்பேடு, மதுராந்தகம் வழியாக சென்னைக்குச் சென்ற அரசுப் பேருந்து  கொள்ளுமேடு என்ற இடத்துக்கு வந்தபோது ஒரு கும்பல் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.
 • வில்லியனூர் ரயில்வே கேட் அருகே 15க்கும் மேற்பட்ட கும்பல் அந்த வழியாக வந்த பேருந்து, கார்களை அடித்து நொறுக்கியது. இதனால் புதுவை கிராமப் பகுதியில் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
 • சிதம்பரம் அருகே சாமியார்பேட்டையிலிருந்து சென்று கொண்டிருந்த டவுன் பஸ் மீது  ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி நொறுங்கியது. இதனால் சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன.
 • மதுரையில் 2 நாள்களில் மட்டும் 29 பேருந்துகள் உடைக்கப்பட்டன.  மதுரையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் இரவு நேர பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. புறநகர் பகுதிகளான அவனியாபுரம், பெருங்குடி, சத்திரப்பட்டி, அழகர்கோவில், கள்ளந்திரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இரவு 7 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டு காலை 7 மணிக்கு மேல்தான் இயக்கப்பட்டன. ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் நிலையங்களை இணைக்கும் நகர் பேருந்துகள் 11 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டன.
 • தர்மபுரி மாவட்டம் தண்டுகாரன்பட்டியில் அரசு டவுன் பஸ் (5-சி) பயணிகளை இறக்கிவிட நின்றபோது 6 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டைகளுடன் வந்து பேருந்துகளின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்துவிட்டு ஓடிவிட்டது.
 • கோவையில் 3 அரசு பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. கோவை உக்கடத்தில் இருந்து காளப்பட்டிக்கு சென்ற பேருந்து காந்திபுரம் 100 அடி ரோடு சிக்னல் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு தப்பினர். காந்திபுரத்தில் இருந்து கோவனூருக்கு சென்ற பேருந்துமீது சுங்கம் பகுதியில் வைத்தும், காந்திபுரத்தில் இருந்து பாலத்துரை சென்ற பேருந்துமீது அரசு மருத்துவமனை அருகில் வைத்தும் கல்வீசி தாக்கப்பட்டன.


படிக்கவே மூச்சு முட்டுகிறதே. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கும்? எத்தனை பெரிய அவதியை அவர்கள் அனுபவித்திருக்கக்கூடும்? உயிர் பலி எதுவும் இல்லை என்பதற்காக செய்த குற்றங்களைத் துடைத்துவிட முடியுமா?

இதுவரை பேருந்துகளை எரித்தவர்களின் அடையாளங்கள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. அவர்கள் எந்தக் கட்சியைத் சேர்ந்தவர்கள், யார் உத்தரவின் கீழ் இந்தக் காரியங்களைச் செய்தார்கள் என்கிற உண்மை விபரங்களும் மறைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருமாவளவன் சிறு வருத்தமும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா ஓர் உருப்படியான அறிக்கை வெளியிட்டார் என்றாலும் அவர் இறுதியில் கை காண்பித்தது திமுகவினரை. ஆட்சியைக் கவிழ்க சதி என்று இதற்குக் கருணாநிதி பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். இனிமேல் தமிழ்நாட்டில் ஏற்படுகிற அரசியல் போராட்டங்களுக்கு எல்லாம் பேருந்துகள்தான் இலக்காகுமோ என்கிற அச்சம் புதிதாக ஏற்பட்டுள்ளது.  

4 நாள்கள் நீடித்த இந்தக் களேபரக் காட்சிகள் தமிழ் தொலைக்காட்சிச் செய்திகளில் (கலைஞர் டிவியில் அல்ல) சென்னை சங்கம செய்திகளினூடே சொல்லப்பட்டன. இருந்தும் கலவரத்தை அடக்க அரசிடமிருந்து எந்தவொரு உத்தரவும் வரவில்லை. நினைத்துப் பாருங்கள். ஒருவேளை முதல்வரின் கார் இதுபோல சேதப்படுத்தப்பட்டிருந்தால் அரசு இயந்திரம் என்ன மாதிரி அலறியடித்துக்கொண்டு செயலில் இறங்கியிருக்கும்! திருமாவின் உயிரைப் பாதுகாக்க உண்ணாவிரதப் பந்தலுக்கு ராமதாஸே ஸ்டெதெஸ்கோப்போடு வந்திறங்கினார் என்றால் அவர் உயிருக்கு எவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம்.

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்டனப் போராட்டத்துக்காக அப்பாவி தமிழர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நேர்ந்தபோது அதைக் கண்டு திருமாவளவன் வேடிக்கைப் பார்த்ததுதான் எனக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. எத்தனை பேருந்துகள் எரிகிறதோ அத்தனையும் கட்சிக்கும் தமக்கும் புகழ் தேடித் தரும் என்று திருமாவளவன் மெளனியாக இருந்துவிட்டாரா? மரங்களை வெட்டி பா.ம.க கவனம் பெற்றதுபோன்று இதுவும் ஓர் அரசியல் உத்தியா?

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று வரிசையாக பொங்கல் விடுமுறையை ஆண்டு அனுபவித்துவிட்டு ஊருக்குத் திரும்ப நினைத்த இளைஞர்களுக்கு சாலைகளில் ஏற்பட்ட கலவரச் சம்பவங்களால் பெரிய சிக்கல் ஏற்பட்டது.  குறிப்பாக பேருந்து பயணம் மேற்கொள்பவர்களூக்கு. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பவேண்டுமென்றால் விழுப்புரம், திண்டிவனம் மார்க்கமாகத்தான் பயணம் செய்யவேண்டும்.  விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரப் போராட்டம் அரங்கேறியதால் எந்த பேருந்து எங்கே கொளுத்தப்படுமோ என்கிற அச்சநிலை தொடர்ந்து நீடித்துவந்தது. கோவை விவசாயக் கல்லூரி மாணவிகளுக்கு  நேர்ந்த துயரம் தமக்கும் நேராது என்பது என்ன நிச்சயம் என்றுதான் ஒவ்வொருவரும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஞாயிற்றுக் கிழமை அதாவது ஜனவரி 18ம் தேதி வரைக்கும் திருமாவளவன் தன் உண்ணாவிரதத்தையும் கலவரக்காரர்கள் பேருந்து எரிப்பையும் நிறுத்துவதாகத் தகவல் இல்லை. மதியம் ஆகி, மாலையும் கடந்தது. ஒரு நல்ல செய்தியும் காதில் விழவில்லை. ஞாயிறு இரவு ஊருக்குத் திரும்புவது குறித்த பெரும் குழப்பம் எல்லோரிடமும் ஏற்பட்டது.

முன்பெல்லாம் ஒரு போராட்டம், எதிர்ப்புணர்வு என்றால் கொடி பிடிப்பார்கள். கோஷம் போடுவார்கள். அதிகபட்சமாக ரயில் மறியல் செய்வார்கள். முக்கியச் சாலைகளில் இதுபோலொரு நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்துவார்கள். ஆனால் இன்று வன்முறைதான் எல்லாவற்றுக்குமானத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. கள்ளக்காதலா, யார் அதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்ளோ அவர்களைக் கொன்று குவித்து ஆற்றில் எரிவது, காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறாளா வீசு அவள்மீது ஆசிட்டை என்று சாதாரண மக்களே உயிர்கொலைக்கு அஞ்சாதபோது அரசியல் கட்சிகள் பேருந்து எரிப்பை நவீன போராட்ட உத்தியாகக் கொண்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்க்கமுடியாது. இதில் செலவும் அதிகம் இல்லை. ஒரு கேன் பெட்ரோல் இருந்தால் போதும். பேருந்துமீது ஊற்றிவிட்டு ஓட்டம் எடுத்துவிடலாம். குறைவான செலவில் பெரிய விளம்பரம்.

நல்லவேளையாக திருமாவளவனின் உடல்நிலை மிகமோசமான கட்டத்துக்குச் சென்றதால் அவர் ஒரு முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு இறுதியாகப் பழச்சாறு அருந்தினார். ஞாயிறு இரவு, 7.30 மணிச் செய்தியில் இச்செய்தி தெரிவிக்கப்பட்டபோது பல இல்லங்களில் நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டது. தமிழகம் அமைதிக்குத் திரும்பியது.

கூடவே வால்போல இன்னொரு செய்தியும் வாசிக்கப்பட்டது - பேருந்துக்கு தீ வைப்பவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு இருப்பதாக விழுப்புரம் சரக டி.ஐ.‌ஜி. மாசாணம்முத்து அறிக்கை.  

எனக்கு மீண்டும் தமிழ் சினிமா ஞாபகத்துக்கு வந்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors