தமிழோவியம்
கவிதை : காதலே, என் கணவனே!
- சுரேஷ், சென்னை

Lady

காதலனே
காமம் மட்டும் நிறைந்த
உன் உப்புக்கடல் மனதில்
இனிப்பான
காதலிருக்க
வாய்ப்பேது!

*********************

நீயென்னை காதிலிக்கிறாயென்று
சொன்னதெல்லாம்
பொய்யென்று சொல்கிறது
துப்பட்டாவும் சேலையும்

துப்பட்டாவின் வீழ்ச்சியும்
சேலையின் விலகலும்
கண்டு மகிழ்ந்ததாமே
உந்தன் கண்காட்சி!

*******************

திருமணத்திற்கு நீ துடித்தது
நமது
புதுக்குடும்பத்தைக் காண அல்ல

முதலிரவிலேயே
இது தான் கற்பழிப்பென்ற
அனுபவமெனக்கு தரத்தான்!

*******************
இவர்களெல்லாம்
உன் காதலிகளென்று
மார் தட்டிக்கொண்டாய்

அவன் ஒருவன்
என்னை காதலித்தானென்றேன்

அன்று முதல் இன்று வரை
முற்களில்லாமல்
உந்தன் வாயிலிருந்து
ஒரு வார்த்தையும் வந்ததில்லையே!

*************

ம்ம்ம்ம்
கொஞ்சம் பொறு
அப்படியென்ன அவசரம்?
நான் விலைமகளல்ல
குலமகள்!

உன்னில் என்று தான் வருமோ
மனிதம்?

************

அந்த
மூன்று நாட்களாவது
ஓய்வுண்டா எனக்கு ?

இல்லை!

பாவமெந்தன் யோனி
அவ்வப்போது
இரத்தக் கண்ணீரில் !

**********

எத்தனை கஷடங்களிருந்தாலும்
நீ கட்டின தாலிக்கு
மஞ்சள் குங்குமம் வைத்து
அதை
கண்ணில் ஒத்திக்கொள்ளவில்லை
என்றால்
ஏனோ வலிக்கிறதே எந்தன் நெஞ்சம்!

பெரியார் ஐயா வாழ்ந்த
மண்ணில் பிறந்தும்
ஏனென்னில் இந்த
முட்டாள்தனம்?

உண்மையில் நான்
வெங்காயம் தான!

**********

Copyright © 2005 Tamiloviam.com - Authors