தமிழோவியம்
தராசு : என்ன சொல்லப்போகிறார் தேவகவுடா?
- மீனா

கர்நாடக முதல்வரும் தனது மகனுமான குமாரசாமியை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளார் அவரது தந்தை மற்றும் மதசார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவருமான தேவகவுடா. சில மாதங்களுக்கு முன்பாக ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்து கர்நாடக மாநில முதல்வரானார் குமாரசாமி. அப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று மகனுக்கு கட்டளையிட்ட தேவகவுடா, ஒரு கட்டத்தில் மகன் தனது பேச்சை கேட்கவில்லை என்று குமாரசாமி மற்றும் அவருக்கு ஆதரவளித்த 39 எம்.எல்.ஏக்களையும் கட்சியிலிருந்து விலக்கி வைத்தார்.

இது ஒரு அரசியல் நாடகம் என்று பல அரசியல் வல்லுனர்களும் கருத்து கூறி வந்த நிலையில் ஒரு வழியாக தேவகவுடா தனது மகனையும்  அவரது ஆதரவாளர்களையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் மகனுக்கு மதசார்பற்ற ஜனதா தளத்தின் சட்டசபை கட்சித் தலைவராக பதவி வழங்கியுள்ளார். "இரண்டு மாதங்களாக நடந்த அரசியல் குழப்பங்களினால் குமாரசாமிக்கு கடுமையான தண்டனை கொடுத்துவிட்டேன். அதன் மூலம் அவனுக்கு அரசியல் தெளிவு பிறந்துவிட்டது.." என்றெல்லாம் கூறிய தேவகவுடா இது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் கூற மறுத்துள்ளார்.

அரசியல்வாதிகள் யாரும் உத்தமர்கள் இல்லை.. அனைவரும் சுயநலவாதிகளே.. மக்களைப் பற்றிய கவலை இவர்கள் யாருக்கும் கிடையாது என்பதை பட்டவர்தனமாக நிரூபித்துள்ளார்கள் தேவகவுடாவும் அவரது மகனும். பா.ஜனதாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக குமாரசாமி கர்நாடக மாநில ஆட்சியை பா.ஜனதாவிடம் கொடுக்கப்போவதில்லை. ஏதாவது காரணம் சொல்லி அப்பாவும் மகனும் ஆட்சியைக் கலைக்கப்போவது நிச்சயம். ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே மக்களின் மீது தேர்தலைத் திணிக்கப்போகிறார்கள். தேவகவுடா மற்றும் குமாராசாமி மட்டுமல்லாமல் பல அரசியல்வாதிகள் செய்யும் வேலைதான் இது.

கட்சித் தாவும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறிப்பதைப் போலவே தேவைக்கு ஏற்றவாறு கட்சிகளுக்கு வழங்கிவரும் ஆதரவை மாற்றிக் கொள்ளும் கட்சிகளின் மீதும் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க ஏதாவது சட்டம் வருமா? சட்டம் வருகிறதோ இல்லையோ, மக்களை ஏமாற்றி இது போல பதவி சுகம் அனுபவிக்கும் இத்தகைய அரசியல்வாதிகளை மீண்டும் தேர்ந்தெடுக்காமல் அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுக்க மக்களால் முடியும். செய்வார்களா மக்கள்?

Copyright © 2005 Tamiloviam.com - Authors