தமிழோவியம்
கட்டுரை : பா.ம.கவும் பல்டிகளும்
- மீனா

 

கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே பா.ம.க வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க முகாமிற்கு தாவியுள்ளது. கடந்த பல மாதங்களாகவே தி.மு.கவிற்கும் பா.ம.கவிற்கும் இடையே நடந்த மோதலகளைப் பார்த்தவர்கள் அனைவரும் வரப்போகும் தேர்தலில் அக்கட்சி நிச்சயம் தி.மு.க முகாமில் இருக்காது என்றே கூறிவந்தனர். ஆனால் காடுவெட்டி குருவின் திடீர் விடுதலை, அன்புமணியின் அரசியல் எதிர்காலம் ஆகியவை முகாம் மாறுவது பற்றி பா.ம.க மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் மகனின் பதவிக்கால பத்திரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவர் முகாமை மாற்றியுள்ளார்.

சந்தர்பவாத அரசியலுக்கு அடிபணியாத அரசியல்வாதிகளே கிடையாது. ஆனாலும் மருத்துவர் அடித்த அளவிற்கு அரசியல் பல்டி அடித்தவர்கள் யாராவது உண்டா என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது ரொம்பவே சிரமம். சட்டமன்றத் தேர்தல் - நாடாளுமன்றத் தேர்தல் என தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி, பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்துள்ளது.

1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க. 2004 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் மட்டுமே தொடர்ந்து இரு முறை தி.மு.க கூட்டணியில் இருந்ததே தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க இந்தக் கட்சியிலிருந்து அந்தக்கட்சி - அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சி என்று அணித் தாவல் நடத்தியே பிழைப்பை ஓட்டியுள்ளது.

தற்போது அ.தி.மு.க வுடன் கூட்டு என்று அறிவித்த பிறகும் கூட ராமதாஸ் பழைய காங்கிரஸ் பாசத்தை மறந்தபாடில்லை. கருணாநிதியை விமர்சிக்கும் அளவிற்கு மத்திய அரசை ராமதாஸ் விமர்சிக்கவும் இல்லை. சோனியாவை தனது பழைய பாணியில் திட்டவும் இல்லை..

அன்பு சகோதரிக்கு மாண்புமிகு மருத்துவரின் மனநிலை சரியாக விளங்கவில்லையோ என்னவோ..ஆரம்பத்திலிருந்தே தன்னுடன் இருக்கும் வை.கோ - நடுவில் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளை கலந்தாலோசிக்காமலேயே பா.ம.கவிற்கு 7 சீட்டை ஒதுக்கியுள்ளார். இது நிச்சயம் ¨வை.கோ மற்றும் கம்யூனிஸ்டுகள் மத்தியில் பலத்த அதிர்சியை கிளப்பியுள்ளது. ஆனால் ஒன்று நிச்சயம்.. மத்தியில் அடித்து பிடித்து ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ராமதாஸ் நிச்சயம் தனது மனதை மாற்றிக்கொண்டு அந்த முகாமிற்கு நிச்சயம் தாவுவார். மகனுக்கு மத்தியில் உள்ளவர்களின் காலைப் பிடித்தாவது மத்திய மந்திரி பதவி வாங்குவார்.. இலவு காத்த கிளியாக தோழமையாக உள்ள கட்சிகளின் பகைமையை சம்பாதித்துக் கொண்டதுதான் அப்போது ஜெயலலிதாவிற்கு மிச்சமாகும்.

மொத்தத்தில் மிகப்பெரிய ராஜதந்திரியான கருணாநிதியையும் கூட்டணி கட்சிகளுடனான அடாவடித்தனத்தில் மாயாவதியையும் மிஞ்சும் ஜெயலலிதாவையும் இன்னொருமுறை  முட்டாளாக்கியுள்ளார் ராமதாஸ். மக்கள் அவரை முட்டாளாக்குவார்களா இல்லையா என்பது போகப்போகத்தான் தெரியும்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors