தமிழோவியம்
கவிதை : சுகாதார வலியுறுத்தல் (5)
- சிதம்பரம் அருணாசலம்

ஊர்களுக்கு வெளியே
உறங்கிக் கொண்டிருந்த நிலங்களெல்லாம்
வீட்டு மனைகளாகி இன்று
விலையில் உயர்ந்து நிற்க,
வளைத்துப் போட்டு வாங்குவதற்கு
வரிசையாய் நிற்கிறது கூட்டம் - இடையே
தரகுவேலை பார்த்துத் தட்டிச்செல்வார்
தந்திரமாய்ச் சிலர் நரிகளாட்டம்.

வாங்கிப் போடுவதற்கு
வங்கிக்  கடனிலும்,
பதிந்து கொள்வதற்குப்
பத்திர அலுவலகத்திலுமே
பதிந்து நிற்கும் மனம் - இதில்
கழிவுநீர் வெளியேற்றத்தையும்,
கனமழையின் தண்ணீரையும்
வாய்க்காலில் வகைப்படுத்த
வாங்குவோரும், விற்போரும்
பங்குக்குப் பணம்சேர்க்கும் அரசும்
வழியேதும் செய்வதில்லை.
 
சாலைகளெல்லாம் சாக்கடைகளாகி
கொசுக்களின் குடியிருப்பாக
அழையாத விருந்தாளியாய் வீட்டுக்குள்
நுழைந்துவிடும் நோய்களின் கூட்டமே!
வருமுன் காப்போம் என்பதெல்லாம்
ஆரம்ப்பள்ளியின் அரிச்சுவடிகளில் மட்டுமே!

Copyright © 2005 Tamiloviam.com - Authors