தமிழோவியம்
தராசு : தி.மு.கவின் கண்துடைப்பு நாடகம்
- மீனா

தமிழ்ப் புத்தாண்டு முதல், ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா ஆகிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் சில நாட்களுக்கு முன்பாக தெரிவித்தார். அது போலவே புத்தாண்டு முதல் இப்பொருட்களை ரேஷனில் விநியோகம் செய்வதும் தொடங்கியது. ஆரம்பிக்கப்பட்டு 10 நாட்கள் ஆவதற்குள்ளாகவே ரேஷன் பருப்பு எடை குறைவாக உள்ளது - தரமாக இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே விலைவாசி உயர்ந்துவிடும் என்பது மக்களிடையே உள்ள ஒரு பொதுவான குற்றச்சாட்டு. அதை நிரூபிக்கும் விதமாகத்தான் நாட்டில் பொருட்களின் விலை உயர்வு உள்ளது. "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்போம்; விலைவாசியைக் குறைப்போம்; வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குவோம்' என்ற மூன்றும் தான், தி.மு.க கூட்டணி பிரசாரத்தில் பிரதானமாக இடம் பெற்று இருந்தன.  இலவச நிலம், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, இலவச மின்சாரம் போன்றவை எல்லாம் அடுத்துதான் வந்தன.

ஆனால் உண்மையில் விலைவாசியைக் குறைக்க இவர்கள்  ஆட்சியாளர்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றனர் - எடுத்துக்கொண்டிருக்கின்றனர் - எடுக்கப்போகின்றனர் என்பது இப்போது மட்டுமல்ல எப்போதுமே "விடை தெரியாத" கேள்வி. இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்குகிறோம் - அது ஒரு சாதனை என்று இதுநாள் வரை சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஆளும் கட்சியினர். ஆனால் அந்த 2 ரூபாய் அரிசியின் தரம் மிகவும் தாழ்ந்துள்ளதையும் அது பொதுமக்களுக்குப் போய் சேருவதை விட மிக மிக அதிகமாக கள்ள மார்க்கெட்டுக்குப் போவதையும் ஆட்சியாளர்கள் நன்கு அறிவார்கள். ரேஷன் கடைகளுக்குச் செல்லும் பொருட்களில் முக்கால்வாசி  கள்ள மார்க்கெட்டுக்குப் போக அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியர்களும்தான் காரணம்.

ஏழை மக்களுக்கு 2 ரூபாய்கு அரிசி விநியோகம் செய்வது பேச்சளவில் நல்ல திட்டமாக இருந்தாலும் பயனளவில் பெரிய ஏமாற்றத்தைதான் கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட இதே நிலைதான் மற்ற பொருட்களுக்கும் ஏற்படப் போகிறது என்பதை மக்கள் ஏற்கனவே உணர்ந்துவிட்டார்கள்.

இப்போது நாட்டில் எல்லாக் கடைகளிலும், எல்லா பொருட்களும் தரமாக தங்கு தடையின்றி கிடைக்கின்றன. ஆனால் விலை தான் கூடுதல். ஓரளவு தரத்துடன் நியாயமான விலையில் தங்கு தடையின்றி ரேஷனில் பொருட்கள் கிடைக்குமா என்பதே ஏழை மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு. மக்களுக்கு நிஜமாகவே ஏதாவது நல்லது செய்ய முதல்வர் நினைத்தால் அவர் செய்யவேண்டியது ஒன்றுதான் - பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். இல்லாவிட்டால் அவர் நடத்தும் கண்துடைப்பு நாடகங்களில் இதுவும் ஒன்று என்று எதிர்கட்சிகள் சொல்லவேண்டாம் - மக்களே சொல்வார்கள்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors