தமிழோவியம்
தராசு : வெற்றிக் களிப்பில் தி.மு.க
- மீனா

"கலைஞர் ஆட்சி மலரப் போகும் காலம் வந்தாச்சு" - என்ற கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பாட்டின்படி கலைஞர் ஆட்சியமைக்கப் போகிறார்.  காங்கிரஸ், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்தவர், அதன் பலனைத் தற்போது அனுபவித்து வருகிறார். இந்தக் கூட்டணியை எல்லோரும் "மெகா" கூட்டணியென்றே வர்ணித்தனர்.  இதை எதிர்த்து வெற்றி காண்பது அறிது என்றே பலரும் கருத்துத் தெரிவித்தனர். அதுவும் நாடாளுமன்ற வெற்றியைப் பார்த்த பின்பு அ.இ.அ.தி.மு.க. வின் வெற்றியைப் பற்றி பலரும் ஐயப்பட்டனர். முதலில் தனியாகவே தேaர்தலைச் சந்திக்கப்போகிறேன் என்ற ஜெயலலிதா பிறகு ம.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்தார். ஆனாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

தி.மு.கவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கலைஞரின் தேர்தல் வாக்குறுதிகள். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனே கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்திலும் விவசாயிகளின் கூட்டுறவுக்கடனை ரத்து செய்யும் திட்டத்திலும் கையெழுத்திட்டுள்ளார். இதைத்தவிர ஏழைப்பெண்கள் திருமணத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் உதவி, இலவச கேஸ் அடுப்பு, இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவது என்று பல இலவசத்திட்டங்களை தி.மு.க தலைவர் அறிவித்திருந்தார். வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள இந்நிலையில் தி.மு.க தான் அறிவித்த எத்தனை இலவச அறிவிப்புகளை செயல்படுத்தப்போகிறது -  இலவச அரிசித்திட்டம் எத்தனை நாட்களுக்கு செயல்படப்போகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவாது நிறைவேற்றுவதிலும் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதிலும்தான் தி.மு.கவின் ஆட்சி தொடர்வது இருக்கிறது. ஏனெனில் கலைஞர் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்தாலும் பல இடங்களிலும் மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் அக்கட்சி ஜெயித்துள்ளது. தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகனே வெறும் 400 சொச்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்துள்ளார். தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையிலேயே 7 இடங்களை வென்றுள்ளது அ.தி.மு.க கூட்டணி. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பு தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டதையே இவைகள் உணர்த்துகின்றன. இந்தக் காரணங்களால் தான் தனித்து ஆட்சி அமைக்க இயலாமல் கூட்டணிகளின் உதவியால் தி.மு.க ஆட்சிப்பீடத்தில் ஏறியுள்ளது.

மக்களிடம் கொடுத்துள்ள வாக்குறுதிகள், ஆட்சியில் பங்குபெறாமல் எந்நேரமும் இந்தக் கூட்டணியிலிருந்து கழன்றுவிட வசதியாக வெளியிலிருந்து ஆதரவு தந்துகொண்டிருக்கும் கூட்டணித் தலைவர்கள், பலம் பொருந்திய எதிர்கட்சி - இவைகள் எல்லாவற்றையும் மனதில் வைத்து கலைஞர் நல்லாட்சி நடத்துவார் என்று நம்புவோம்..


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors