தமிழோவியம்
கட்டுரை : பாதுகாக்க வேண்டிய தோற்பாவை கலை
- திருமலை கோளுந்து

தோற்பாவை நிழற்கூத்து தமிழக கலாச்சாரத்தில் கலந்த உன்னதக் கலை. தமிழ் மண்ணின் மீது ஆழமான பற்றுதல் கொண்ட பல கலைகளுக்கு இன்று உயிரே இல்லை. அவற்றில் தோற்பாவை நிழற்கூத்து கலையும் ஒன்று. தோற்பாவை நிழற் கூத்து பற்றியும், அதன் வரலாறு பற்றியும் அறிய முற்பட்டோம். திருநெல்வேலி மாவட்டம் பண்மொழி என்ற கிராமத்தில் நடைபெற்ற தோற்பாவை நிழற் கூத்து விழாவில் பங்கு பெற்ற கலைஞர்களிடம் இது பற்றி கேட்ட பொழுது.

தோற்பாவை நிழற் கூத்து என்பது பண்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு பொழுது போக்குக் கலை. மெல்லிய தோலினால் செய்யப்பட்ட மனித உருவ வரைபடங்களை வைத்து நடத்தப்படும் கூத்து. இதன் வரலாறு எது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பழங்காலத்தில் இருந்து தமிழ் சமூகத்திற்கு இக்கலை தனது சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தோற்பாவை நிழற்கூத்தின் பங்கு மிகப்பெரியது.

இன்றைய தியேட்டர்களின் தொலைகாட்சிகளின் முன்னோடிகளாக இந்த தோற்பாவை நிழற்கூத்து கலையை சொல்லலாம். அதாவது திரையில் எப்படி ஒளியை பாய்ச்சி படம் காட்டப்படுகிறதே, அதே போல் மின்சார வசதியில்லா காலத்தில்  ஒரு மெல்லிய திரைக்கு பின் இருந்து சில கலைஞர்களின் அருப்பெரும் பணியால் நாட்டு மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு சாதனமாக இந்த தோற்பாவை நிழற்கூத்து இருந்து வந்தது.குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இக்கலையின் மூலம் நடத்தப்பட்ட கூத்துக்கள் மயிற் கூச்செரிந்தாற் போல் இருக்கும். சிறந்த செயல்வடிவத்தால் மனிதர்களின் உணர்ச்சிகளை ஒற்றுமைப்படுத்தி சுதந்திர போராட்ட குணத்தை தூண்டிய கலைகளில் இக்கலை முக்கியமானது. அந்தக் காலத்தில் எல்லாம் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் மின்சார வசதிகளே கிடையாது. பெரும்பாலான மக்களின் தொழிலாக விவசாயம் தான் இருந்து வந்தது. அம்மக்களிடம் தேசம், ஒற்றுமை போன்ற கருத்துக்களை வலியுறுத்த பத்திரிக்கைகள் மற்றும் பிற சாதனங்கள் எல்லாம் அப்பொழுது அனைத்து மக்களையும் சென்றடையாத காலம். அப்பொழுது மக்களுக்கு சிறந்த பொழுது போக்காக இருந்தவைகள் கலைகள் தான். அந்தக்கலைகளில் தோற்பாவை நிழற்கூத்து கலையும் ஒன்று.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பங்கு ஆற்றி விடுதலை பெற்றவுடன் இக்கலைகளின் பார்வை நமது புராணக் கதைகள் பக்கம் அதிக கவனம் செலுத்தியது. கலைஞர்களின் பங்களிப்பை கொண்டு ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்குச் சென்று இரவு 8 மணியளவில் ஆரம்பித்து பின் அதிகாலை 6 மணி வரை புராணக்கதைகளை மையமாக வைத்து தோற்பாவை கூத்து நடைபெறும். ஒரு இடத்தில் குறைந்தது 15 நாட்கள் நடைபெறும். மகாபாரதக்கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையை தனியாக எடு;த்துக் கொண்டு அப்பாத்திரத்தின் பெருமைகள் மற்றும் சிறுமைகளை சொல்வது தான் இக்கூத்தின் சிறப்பு. உதாரணம் சொல்லவேண்டும் என்றால் மகாபாரதக் கதையில் பல பாத்திரங்கள் உண்டு. அவற்றை ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்பாமல் கர்ணண் என்றால் கர்ணணை பற்றி மட்டும் நிழற்கூத்து நடத்தப்படும். அதே போல் ராமாயணத்தில் உள்ள பல காண்டங்களை தனியாக பிரித்து கதை சொல்வது தான் இதன் தனிச்சிறப்பு. அது போல் தோற்பாவை நிழற்கூத்து மூலம் சொல்லப்படாத புராணக் கதைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இக்கலை அக்காலத்தில் மக்களுக்கு சிறந்த பொழுது போக்காக இருந்தது. இக்காலத்தில் இக்கலைகள் எப்படி சிறப்பாக இருந்ததோ அது போல் இக்கலைசார்ந்த கலைஞர்களுக்கும் இச்சமூகத்தில் மதிப்பு இருந்தது. இம்மதிப்பு மரியாதைகள் மூலம் இக்கலைகள் நம் மக்களிடம் இருந்த பிரிந்து விடாது என்று தான் அக்காலத்தில் நினைத்துக் கொண்டு இருந்தோம்.

Thoirpavai Artதமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை தனது கலையின் மூலம் பாதுகாத்து வந்த தோற்பாவை நிழற்கூத்து கலைக்கு ஏற்பட்ட மரண வீழ்ச்சியை எண்ணிப் பார்க்கவே துயரமாக இருக்கிறது. காதாபாத்திரங்களின் உருவ பொம்மைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு கை விரல்களில் மாட்டிக் இருக்கும் நூலினைக் லாவகமாக அசைத்தும் அதற்குத் தகுந்தாற் போல் பாடல் மற்றும் வாசனம் சொல்லியும் அதற்கு ஏற்ப இசைக் கருவியும் கொண்ட நடக்கும் இக்கலையில் கலைஞர்கள் அதிக சிரமம் பாராமல் உழைக்கின்றனர். பணம் சம்பாதிக்க வேண்டும் மாடி வீடு கட்டவேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் இக்கலைஞர்களிடம் கிடையாது. அப்படி இருந்தும் இக்கலை இன்று மறைந்து விட்டது. கூத்திற்கு கதை, பாடல் மற்றும் வசனம் தயார் செய்வதும், அதற்கான உருவங்களை செய்வதும் எவ்வளவு சிரமமானது என்பது இங்கு யாருக்குமே புரிந்து கொள்ளும் உணர்வு இல்லை. முன்பு எல்லாம் ஒங்வொரு கிராமத்துக்குச் சென்றாலே அழைத்து உபசரித்து தங்க இடம் கொடுத்து தோற்பாவை கூத்து நடத்த உதவி செய்வார்கள். இப்பொழுது  கிராமப் பகுதியில் கூட தங்களுக்கு மதிப்பில்லை என்கிறார் இக்கலையின் மூத்த கலைஞரான துரைராஜ்.

தோற்பாவை நிழல் கூத்து ஏன் அழிந்தது என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது என்கிறார் இக்கலையை பற்றி நன்கறிந்த ராம. கிருஷ்ணண். இக்கலையின் அழிவை  பண்பாடு கொண்ட ஒரு மனித சமூகம் தனது கையை இழந்ததற்கு இணையாகச் சொல்லலாம். ஒரு காலத்தில் நாடகங்கள் நமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய பொழுது அதற்கு கட்டணம் செலுத்தி பார்க்க முடியாத அடிதட்டு மற்றும் நடுத்தர மக்கள்  தோற்பாவை கூத்தைத் தான் அதிகமாக ரசித்தனர். அதன் பின் கால மாற்றத்தில் நவீனத்துவத்தின் கோட்பாடுகள் அனைத்து மக்களிடமும் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிய முறையில் சென்றடைந்ததால் இக்கலை இன்று அழிந்து போய் விட்டது. இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் சர்பத் என்ற பானம் புகழ் பெற்று இருந்தது. இப்பொழுது அது போன்ற பானத்தை நாம் மறந்து விட்டோம். அதற்குப் பதிலாக பெப்சி, கோலா என்று மாறிவிட்டதை சொல்லலாம். 

இக்கலை சுதந்திர போராட்ட காலத்தில் முக்கிய பங்கு வகித்தது என்பதை யாருமே இங்கு மறுக்க முடியாது. சுதந்திரப் போராட்டத்திற்கு பின்பு தனது தளத்தை மாற்றி நடத்தப்பட்ட தோற்பாவை கூத்து ஒரு கட்டத்தில் ஆபாச வசனங்களை அதிகளவு கொண்டு இருந்தது. அதே போல் இக்கலையை ரசிப்பதற்கு அதிக பொறுமை வேண்டும் சில கலைஞர்களின் பங்களிப்பில் கை விரல்களின் உதவியோடு காட்சிகள் மாற்றியமைக்கப்படும் பொழுது அதனை ரசித்துப் பார்த்தால் தான் இக்கலையின் பெருமை நமக்குத் தெரியும். இக்கலையில் பெண் கலைஞர்கள் அதிகளவில் ஈடுபடாததும் அதன் அழிவிற்கு ஒரு காரணம். இக்கலை இன்றும் சில இடங்களில் உயிரோடு இருக்கின்றது என்றால் அதற்கு சில சமூக ஆர்வலர்கள் தான் காரணம் ரமணி என்ற குறும்பட இயக்குனர் தோற்பாவை கூத்து பற்றி  குறும்படமே எடுத்து இருக்கிறார்.

ராமசாமி என்ற சமூக கட்டுரையாளர் தோற்பாவை குறித்து அதிகளவு கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழகத்தில் மட்டும் இக்கலை அழிந்து விட்டதாக சொல்ல முடியாது. பிற மாநிலங்களிலும் இக்கலை வேறு பல பெயர்களில் நடத்தப்பட்டு அழிந்து விட்டது. இக்கலையை பாதுகாக்க வேண்டும் என்றால் இக்கலை சார்ந்த கலைஞர்களை வாழ வைத்தாலே போதும் ஆனால் இங்கே என்ன நடக்கிறது. எதனை பாதுகாக்க வேண்டுமோ, அதனை அழித்தும், எதனை அழிக்க வேண்டுமோ, அதனை பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் இல்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு ஒரு  கலை பற்றிய அறிதலை நாம் அழித்து விட்ட பாவிகளாகி விடுவோம் என்கிறார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors