தமிழோவியம்
தராசு : தேர்தல் முடிவுகள்
- மீனா

கிட்டத்தட்ட கடந்த 1 மாத காலமாக நடந்து வந்த தேர்தல் திருவிழா ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போவது உறுதி (கூட்டணி கட்சிகளின் ஆதரவு மட்டுமின்றி சில குட்டிக்குட்சிகளின் ஆதரவுடனும்). போன ஆட்சியில் காங்கிரஸை மிரட்டி அதிகாரம் செய்த லல்லு - கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவர்கள் மண்ணைக் கவ்வியதும், பாஜனதாவின் படுதோல்வியும் காங்கிரஸால் தான் நிலையான ஆட்சியைக் கொடுக்கமுடியும் என்று மக்கள் ஓரளவு நம்புவதை மீண்டும் உறுதி செய்துள்ளது. நேருவிற்குப் பிறகு ஒரு 5 ஆண்டு பிரதமராக இருந்தவரே மறுமுறையும் பிரதமராகும் வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கு கிட்டியுள்ளது சூப்பர் (இந்திரா, ராஜீவ் போன்ற நேரடி நேருவின் வாரிசுகளுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு இது).

மாநில அளவில்

நாற்பது தொகுதிகளில் திமுக கூட்டணி 28 இடங்களையும் அதிமுக கூட்டணி பன்னிரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் மெகா கூட்டணி அமைத்துவிட்டாலே வெற்றி நிச்சயம் என்ற எண்ணம் சுக்குநூறாக்கப்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கு மக்கள் மத்தியில் இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு எதிரான வாக்குகளாக மாறும் என்ற எதிரணியின் எதிர்பார்ப்பும் பாதிக்கும் பாதியாக பொய்த்துள்ளது. இலங்கைப் பிரச்சனையைத் தங்களது தேர்தல் பிரச்சனையாக தமிழக மக்கள் பார்க்கவே இல்லை என்பதன் முடிவுதான் வை.கோ போன்றவர்களது தோல்வியும் - காங்கிரஸின் வெற்றியும். ஈழத்தை வைத்து இங்கே இனி அரசியல் செய்வது செல்லாது என்று எல்லா கட்சிகளுக்குமே புரியும் தருணமாக இது அமைந்திருக்கிறது.

ஈழ மக்கள் மீது அன்பு கொண்டவர்கள்தான் தமிழக மக்கள் - அங்கே அவர்களுக்கு ஒரு நல்ல காலம் பிறக்காத என்று ஒவ்வொரு தமிழனும் ஏங்குகிறான் - தன்னால் முயன்ற உதவிகள் அனைத்தும் செய்யத் தயாராகவே உள்ளனர் தமிழக மக்கள். ஆனால் நாம் வெறுப்பது நமது அரசியல்வாதிகளின் வேஷங்களைத்தான்.. ஈழத்தமிழர்கள் மீது உண்மையில் ஒருவிதப் பரிவும் பாசமும் இல்லாத ஜெயலலிதா, ராமதாஸ் உள்ளிட்டோர் ஓட்டுக்காக ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசியதை - உள்ளூர் பிரச்சனைகளைத் திசைதிருப்ப முயன்றதை தமிழர்கள் வெறுத்தார்கள் என்பதன் அடையாளமே இந்தத் தோல்வி.

வாக்காளர்களுக்கு தி.மு.க வின் கவர்ச்சித் திட்டங்களான ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்றவை பிடித்திருக்கின்றன. இத்திட்டங்களில் பல குறைபாடுகள் இருந்தாலும் அதை மக்கள் மன்னிக்கும் மனநிலையில் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில் தவறான வேட்பாளர் தேர்வு, மின்வெட்டு, விலைவாசி போன்ற பிரச்சனைகளே தி.மு.கவிற்கு எதிரான ஓட்டுகளாக மாறி 12 இடங்களில் அ.தி.மு.க கூட்டணியை ஜெயிக்கவைத்துள்ளது. இந்தத் தேர்தலில் தென்மாவட்டத்தில் 9 இடங்களில் வெற்றிக்கனியை பறித்ததால் அழகிரிக்கும், கலைஞருக்கு மாற்றாக மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்து - சரியான வியூகங்களை வகுத்து 28 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற மூல காரணமாக இருந்ததால் ஸ்டாலினுக்கும் தேசிய - மாநில அரசியல் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

ஜெயலலிதாவின் திடீர்த் தமிழ் ஈழ ஆதரவு அவருக்கு எவ்வித பலனையும் தரவில்லை. அதைப்போலவே தமிழகத்தில் வட மாவட்டத்தில் 5 தொகுதிகளை தவிர பிற இடங்களில் துளியும் செல்வாக்கு இல்லாத கட்சியுடன் கூட்டணி வைத்தால் தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கும் என்ற பாடத்தை இந்த தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரண்டுமே உணர்ந்து கொண்டன. சந்தர்ப்பவாத அரசியலை மட்டுமே கொள்கையாகக் கொண்டு, பதவியை பெறுவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த கட்சி என்று கருதி இம்முறை வாக்காளர்கள் அக்கட்சியை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டனர். தமிழகத்தில் உள்ள சில வடமாவட்டங்களில் பா.ம.க., செல்வாக்குள்ள கட்சி என்பது பிரமை - உண்மை அல்ல என்பதை இத்தேர்தல் உணர்த்திவிட்டது.

காங்கிரஸ் கட்சி தனது உண்மையான செல்வாக்கை உணர வேண்டிய வேளை வந்துவிட்டது. காலிப்பெருங்காய டப்பாவைப் போல பழம் பெருமை பேசிக்கொண்டுத் திரியும் காங்கிரஸ் தலைவர்களின் உண்மையான செல்வாக்கு தற்போது தெரிந்து விட்டது.  தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் தொகுதிக்குள் எட்டிப்பார்க்கும் மணிசங்கர் அய்யர், பிரபு, தங்கபாலு, இளங்கோவன் போன்றவர்களின் படுதோல்வியைப் பார்த்தாவது அக்கட்சி தலைமை மாநில அமைப்பு நிர்வாகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டமன்றத் தேர்தலில் அதோகதிதான்.

தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக, எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும் கணிசமான அளவிற்கு ஓட்டைப் பிரித்து கிட்டத்தட்ட 25 இடங்களில் தி.மு.க - அ.தி.மு.கவின் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக வளர்ந்துள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டியிட்டு ஓட்டுகளை பிரித்ததால் அதிகபட்சமாக அ.தி.மு.க, 8 இடங்களையும் காங்கிரஸ் 7 இடங்களையும் இ.கம்யூ. 2 இடங்களையும் ம.தி.மு.க. 2 இடங்களையும் வி.சி. 1இடத்தையும் பா.ஜ. 1 இடத்தையும் இழந்துள்ளன.

கடந்த 2006 சட்டசபை தேர்தலில் இக்கட்சி 8.38 சதவீதத்தை பெற்றிருந்த இக்கட்சி தற்போது கிட்டத்தட்ட 10 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது.. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறார் என்று உறுதியாகத் தெரிந்தாலும் வரும் தேர்தலிலும் தற்போது செய்ததைப் போலவே தனி ஆவர்தனம் செய்வதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பதை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தான் தீர்மானிக்கவேண்டும்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்து தலையெடுப்பது என்பது சாத்தியமில்லை என்பதை இத்தேர்தல் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. சரியான கூட்டணி அமைந்தால் மட்டுமே பா.ஜனதா தமிழகத்தில் காலூன்ற முடியும்.

தேசிய அளவில்

தேசிய அளவில் காங்கிரஸ் 2004 ஆம் ஆண்டு தேர்தலை விட 50க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தனது செல்வாக்கை உயர்த்திக்கொண்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரஸ் இந்த முறை ஆட்சி அமைக்க லாலு, பாஸ்வான், சிபுசோரன், கம்யூனிஸ்டுகள் போன்றவர்களிடம் கையேந்தத் தேவை இல்லாத சூழ்நிலை உருவானது சந்தோஷமே..ஆதரவு அளிக்கிறோம் என்ற போர்வையில் இவர்கள் அனைவரும் சென்ற ஆட்சியில் செய்த அட்டூழியங்கள் நிச்சயம் மக்கள் மத்தியில் நீங்கா நினைவுகளாக உள்ளன. அதன் விளைவே இவர்களது தோல்வியும் காங்கிரஸின் தனிப்பட்ட வெற்றியும்.

தாங்கள் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்ததே தங்களது தோல்விக்கான காரணம் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கும் முலாயம், லாலு போன்றவர்களை காங்கிரஸ் மீண்டும் கூட்டணியில் இணைத்துக் கொள்ளும் தவறைச் செய்யக்கூடாது.. தவிர்க்க இயலாத காரணங்களால் அவர்களை கூட்டணியில் இணைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு முக்கிய பதவிகளைத் தராமல் - அவர்களின் வெத்து மிரட்டல்களுக்கு அடிபணியாமல் அரசு நடக்கவேண்டும்.

இந்த முறையாவது அமையப்போகும் அரசு கூட்டணி கட்சியினரின் தவறுகளை மூடி மறைக்காத - அவர்களது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அவர்களின் அடிவருடியாக இல்லாமல் மக்களின் நலனின் கவனம் செலுத்தும் அரசாக அமையவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.. அதற்காகவே அவர்கள் இப்படி ஒரு தேர்தல் முடிவை வழங்கியுள்ளார்கள்.. இதை மன்மோகன் மற்றும் ஏனைய காங்கிரஸ் தலைவர்கள் உணரவேண்டும்.

பா.ஜனதா தனது ஸ்திரமற்ற கொள்கைகளால் தான் தோற்றதே தவிர மோடியால் அல்ல - அதை அக்கட்சித் தலைவர்கள் உணரவேண்டும். விலைவாசி உயர்வு, நாட்டுப்பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்ற பல பிரச்சனைகளைத் தாண்டியும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது அவர்களால் தான் நாட்டில் நிலையான அரசை வழங்கமுடியும் என்று மக்கள் திடமாக நம்பியதால்தான். இந்த நம்பிக்கையை எதிர்வரும் காலங்களில் பெற பா.ஜனதா கடுமையாக உழைக்கவேண்டும்.. உழைத்தால் தான் வெற்றி கிட்டுமே தவிர ஒருவரை ஒருவர் குறை சொல்வதால் அல்ல.

கம்யூனிஸ்டுகளும் தங்களது தவறை உணரவேண்டிய நேரம் இது.. கம்யூனிஸ்ட் கோட்டை என்று கருதப்படும் மே.வங்கத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் மரண அடி இதைத் தெளிவாக உணர்த்தியுள்ளது. மேலும் கேரளாவிலும் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு செல்லாக்காசாகியுள்ளாது. தேசிய அளவில் ஒரு நிலை - தாங்கள் ஆளும் மாநிலங்களில் ஒரு நிலை என்ற இவர்களது இரட்டை வேஷத்திற்கு மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளார்கள். ஒரு கண்ணில் வெண்ணைய் அடுத்த கண்ணில் சுண்ணாம்பு என்பதைப் போல அமெரிக்காவையும் சீனாவையும் இவர்கள்பார்க்கும் பார்வை மக்கள் மனதில் வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளது. இனியாவது இவர்கள் வேஷதாரிகளாக இல்லாமல் உண்மையான தோழர்களாக மாறவேண்டும்.. மாறினால் அதற்கான பலனையும் மாறாவிட்டால் அதற்கான பலனையும் இவர்கள் அடுத்த தேர்தலில் நிச்சயம் பார்ப்பார்கள்.

ஆக மொத்ததில் தொங்கு பாராளுமன்றம் தான் அமையப்போகிறது என்ற கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கிவிட்டு - ஸ்திரமான பாராளுமன்றம் அமைய உதவிய மக்களுக்கு பாராட்டுகள்.. புதிதாக அமையப்போகும் அரசு அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இல்லாமல் மக்கள் நலனில் உண்மையான ஆர்வம் கொண்டு நாட்டு நலப்பணிகளில் ஈடுபடும் - தொய்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்தும் - நாட்டு பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தும் என்று நம்புகிறோம். நம்பிக்கையை பொய்யாக்காதீர்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors