தமிழோவியம்
கட்டுரை : நோட்டுப்புத்தகங்களில் நடிகர் நடிகைகளின் படங்களை
- திருமலை கோளுந்து

தலை குனிந்து படிக்கும் படிப்பெல்லாம் நாளை தலை நிமிர்ந்து நடப்பதற்குத் தான் என்று படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் சமூகம் அறிவுரை சொன்னதுண்டு. ஆனால் தற்பொழுது பெரும்பாலும் மாணவர்களுக்கு இது போன்ற அறிவுரைகள் பெற்றோரைத் தவிர எவராலும் சொல்லப்படுவதில்லை. அதற்கு மாறாக மாணவ--மாணவிகள் சமூகத்தை எப்படி உருப்படாமல் ஆக்கலாம் என்ற அறிவுரைகளுக்குப் பஞ்சமில்லை. இதற்கு சிறந்த உதாரணம் பள்ளி மாணவ மாணவிகளின் நோட்டுப்புத்தகங்களில் நடிகர் நடிகைகளின் படங்களை அட்டைப்படத்தில் போட்டு இருப்பதைச் சொல்லலாம்.

இன்றைய சூழ்நிலையில் மாணவ சமுகத்திற்கு எதனை கற்றுக் கொடுக்க வேண்டுமோ அதனை நாம் கற்றுக் கொடுப்பதில்லை. முன்பு எல்லாம் பள்ளி நோட்டுப்புத்தகங்ளில் கடவுள்களின் படம் அல்லது இயற்கை காட்சி படங்களை மட்டுமே அட்டைப்படமாக போடப்பட்டு விற்பனைக்கு வரும். அதனால் அனைத்து மாணவர்களும் கவனத்துடன் பாடங்களை கற்றனர். ஆனால் தற்பொழுது மாணவர்களை ஆசிரியர்கள் லேசாக அடித்தாலே அதனை Photo of Ajithபெரிதாக்கி விடுகின்றனர். அதே போல் முன்பு போல் கண்டிப்புகளும் ஆசிரியர்களால் காட்டப்படுவதில்லை. அதன் விளைவு ஆசிரியர் அல்லாதவர்கள் மூலம் மாணவ சமூகத்திற்கு பிரச்சனைகள் உருவாகின்றன எனச் சொல்லும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பவுல்ராஜ் இன்று நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் மற்றும் இதர பொருட்களின் கண்டுபிடிப்பாளர்களை நம் மாணவ சமூகம் பெரும்பாலும் தெரிந்து வைத்து இருப்பதில்லை. ஆனால் ஒரு படத்தில் நடித்த நடிகர்களையும் நடிகைகளையும் பற்றி அக்கறையோடு தெரிந்து வைத்து இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட மாணவர்களை மேலும் கெடுக்க மாணவ, மாணவிகள் பயன் படுத்தும் நோட்டுப் புத்தகங்களில் நடிகர்களின் படத்தை போட்டுள்ளனர். நோட்டு தயாரிப்பாளர்கள் ஏன் கண்டுபிடிப்பாளர்களின் படத்தையோ அல்லது சிறந்த கவிஞர்களின் படத்தையோ போடுவதில்லை? எல்லாம் சுய நலம் தான் காரணமாக இருக்கிறது. தங்களின் தொழிலில் ஏற்பட்ட போட்டியில் தனது இடத்தை நிறுத்திக் கொள்ள இப்படி இழிவான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை மாற்ற நினைத்தாலும் மாற்ற முடியாது. இது எல்லாம் மீறி தான் இன்றைய மாணவ சமூகம் சாதிக்கின்றனர். எங்கள் காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்பது ஒரு கனவாகத் தான் இருந்தது. ஆனால் இன்று எனது பேரக்குழந்தைகள் சிறு வயதிலேயே கம்ப்யூட்டரில் கலக்குகின்றன. இதனை எல்லாம் பார்க்கும் பொழுது இந்த மாணவ சமூகம் இதனை விட மேலும் வளர வேண்டும். அந்த அக்கறைகள் மேலும் வளர நோட்டுப் புத்தகங்களில் நடிகை நடிகர்களின் படங்களை போடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.

நோட்டுப் புத்தகங்களில் நடிகர் நடிகைகளின் படங்களைப் போடுவதால் எந்த வித ஆபத்தும் இல்லை என்று Simranசொல்லும் கல்லூரி மாணவரான நிரேஷ், ஒருவர் கெட்டுப் போக வேண்டும் என்றால் எத்தனையோ வழிகள் இருக்கின்றது. பள்ளி கல்லூரி செல்லும் வழிகளில் ஒட்டப்பட்டுள்ள ஆபாச சினிமா போஸ்டர்கள், டி.வி க்குள் இருக்கும் ஆபாச சேனல்கள் என்று பலவற்றை நாம் ஏற்றுக் கொண்ட பொழுது நோட்டு புத்தகங்களில் நடிகர்கள் படத்தை போடுவதை ஏற்றக் கொள்ளத்தான் வேண்டும். தனக்குப் பிடித்த நடிகர் நடிகர்களின் படங்கள் உள்ள நோட்டுக்களை வாங்குவதினால் படிக்கும் ஆர்வமும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது இல்லையா என்று சொல்லி தனது கையில் இருக்கும் அரைகுறை ஆடையில் இருக்கும் சிம்ரன் படத்தைப் பார்க்கிறார்.

கல்லூரி பேராசிரியையான அன்னபூரணியின் கருத்து மாறுபட்டு இருக்கிறது. திருடர்கள் திருடுகிறார்கள், உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள், தூங்குபவர்கள் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற நியதிக்கு ஏற்ப தான் மாணவ சமூகமும் இருக்கிறது. நன்குப் படித்து நல்ல நிலைக்கு போகும் மாணவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். ஆனால் கல்லூரிகளிடையே நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் சினிமா மூலம் பாதை மாறுகின்ற மாணவ சமூகம் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்காக உயர்ந்து இருப்பதாக  சொல்கிறது. இன்று நடிகர்களின் படங்களை பார்த்து மாணவ சமூகம் கெட்டுப் போய் விடாது. ஆனால் கெட்டுப் போய் விடுகின்ற மாணவர்களை அடையாளம் காண முடியாது. மெழுகுவர்த்தி எரியும் பொழுது அதன் அடிப்பகுதியில் எப்படி இருள் இருக்குமோ அதனை உதாரணமாகச் சொல்லலாம் என்கிறார். இதனை தடுக்க அரசு ஒரு எழுத்து மூலமாக உத்தரவுகள் போட்டாலே போதுமானது. ஆனால் தமிழகத்தில் சினிமா மூலம் அறிமுகமாகி அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த நமது ஆட்சியாளர்களிடம் இதனை எதிர் பார்க்க முடியாது. முன்பு எல்லாம் நோட்டுப் புத்தகங்கள் பராமரிப்பதைக் கூட ஆசிரியர்கள் பார்வையிடுவார்கள். நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போட்டு விட்டுத்தான் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வர வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது கையில் நடிகர் நடிகை உள்ள ஒரு நோட்டை மட்டும் வைத்துக் கொண்டு கல்லூரி செல்வது நாகரிகமாகி விட்டது. அதனை தட்டிக் கேட்டால் அனைத்து விதத்திலும் மிரட்டல்கள் தான் வருகின்றன. என்ன செய்வது அவரவர் கஷ்டம் அவர்களுக்கு என்கிறார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors