தமிழோவியம்
தராசு : இன்னொரு புதிய கட்சி
- மீனா

உலகில் அதிக கட்சிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று என்ற பெயர் ஏற்கனவே இந்தியாவிற்கு உண்டு - உலகத்திலேயே அதிக கட்சிகளைக் கொண்ட ஒரே நாடு இந்தியா என்ற பெருமையை நம் தாய்திரு நாட்டிற்கு வாங்கித் தந்துவிட்டுதான் மறு காரியம் பார்ப்போம் என்ற ரீதியில் நடிகர்களும் செல்லாக்காசாகிப் போன முன்னாள் அரசியல்வாதிகளும் நாளுக்கு நாள் புதுப்புது கட்சிகளை ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். அத்தகைய ஒரு புதுவரவாக பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகர் கார்த்திக் "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி" என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்து கார்த்திக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகரும் "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி" தலைவருமான சரத்குமார் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் கார்த்திக் மற்றும் விஜயகாந்துடன் தான் கூட்டணி அமைக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பிப்பது தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.. ஆனால் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் எல்லோரும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ரைப்போல இருந்துவிட முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். திரைப்படங்களில் நடித்து வந்த காலத்திலேயே மக்களில் ஒருவனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தபோது தான் சொல்லிய கருத்துகளை முதல்வரான பிறகும் பின்பற்றியவர் அவர். சினிமாவின் கவர்சியை மக்களின் நம்பிக்கை ஓட்டாக மாற்றத்தெரிந்த ஒரே நடிகர் அவர் மட்டுமே.

ஆவேசமான பேச்சுகளால் கூட்டத்தை கூட்ட முடியுமே தவிர கோட்டையைப் பிடிக்க முடியாது என்பதை புதிதாக கட்சி தொடங்கியுள்ள பலரும் உணரவில்லை.. தொடங்கிய சில காலத்திற்குள்ளேயே ஒரு வலுவான கட்சியாக உறுப்பெற முடிந்த விஜயகாந்தின் தே.மு.தி.க வினர் கூட தேர்தல்களில் ஆளும் கட்சியின் ஓட்டை கணிசமான அளவில் பிரித்தார்களே தவிர சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை அவர்களால் பெற முடியவில்லை.. சரத்குமார் கட்சி இன்னும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத காரணத்தால் அவர்களது பலத்தைப் பற்றி அவர்களாலேயே சரிவர கணிக்க இயலாத நிலை.. கார்த்திக்கைப் பற்றி சொல்லவே தேவையில்லை.. நடிகராக இருந்த போதும் சரி, பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி.. அவரது நேரம் தவறுதல் - மற்றும் ஆளுமைப் பண்புகளைப் பற்றி விமர்சனம் செய்யாதவர்களே கிடையாது.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களாலும் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு சோகத்தை மட்டுமே அனுபவித்து வரும் மக்கள் - இவர்களுக்கு மாற்றாக யாரும் வரமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்த் - சரத்குமார் போன்றவர்கள் சினிமாவில் பக்கம் பக்கமாக பேசும் வசனத்தை மக்கள் மத்தியிலும் பேசாமல் உண்மையிலேயே அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முற்பட்டால் நிச்சயம் மக்களும் இவர்களை ஒருநாள் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்ப்பார்கள்.. அதை விட்டு வெறும் கட்சி ஆரம்பித்து ஒரு மாநாடு நடத்திவிட்டால் போதும் - நாம் தான் அடுத்த முதல்வர் என்ற கனவில் திளைத்தால் - விளைவு அதோ கதிதான்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors