தமிழோவியம்
தராசு : போலிகளை இனம் காணுங்கள்
- மீனா

போலி விசாக்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முயன்ற 47 இளைஞர்களை தில்லி விமான நிலையத்தில் போலீசார் ஞாயிறு இரவு கைது செய்துள்ளார்கள். தில்லியிலிருந்து கத்தார் ஏர்வேஸ் மூலம் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல அவர்கள் முயன்ற போது அவர்களது பயண ஆவணங்களை அதிகாரிகள் பரிசீகித்தபோது அவர்களது விசா உள்ளிட்ட ஆவணங்கள் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் வேலைக்காக தங்கள் ஏஜெண்டுகளிடம் 3 லட்சம் வரை கொடுத்து அந்த விசாக்களைப் பெற்றதாக போலீசிடம் தெரிவித்துள்ளார்கள்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதில் தவறு ஒன்றுமே இல்லை. ஆனால் அதற்காக நம்மில் சிலர் தேர்ந்தெடுக்கும் வழிகள் தான் மிகவும் தவறான ஒன்றாகும். வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தாங்கள் அணுகும் ஏஜெண்டுகள் முறையான லைசென்ஸ் பெற்றவர்களா என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். நாக்கில் தேன் தடவிக்கொண்டு பேசும் போலி ஏஜெண்டுகளும் இத்தகைய அப்பாவி மக்களை அவர்களது வெளிநாட்டு மோகத்தைப் பயன்படுத்துக்கொண்டு நன்றாக ஏமாற்றி லட்சக்கணக்கில் கறந்துவிடுகிறார்கள்.

ஏஜெண்டிடம் பணத்தைக் கட்டிவிட்டோம் - வெளிநாடு போகப்போகிறோம் என்ற ஆனந்தத்தில் மிதக்கும் இந்த அப்பாவிகள் விமான நிலையத்தில்தான் தங்களது ஆவணங்கள் போலி என்பதை உணர்கிறார்கள். பணம் போனது மட்டுமன்றி உற்றார் உறவினர்களின் கேலிப்பேச்சுக்கும் ஆளாகி நிற்கும் போது இவர்களில் பலர் தற்கொலை போன்ற தவறான முடிவிற்குத் தள்ளப்படுகிறார்கள். போலி பைனாஸ்காரர்களிடம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மக்கள் பணம் போடுவதும் பிறகு ஏமாந்து குய்யோ முறையோ என்று கூச்சலிடுவதும் நாட்டில் சகஜமான ஒன்றாக நிகழ்ந்து வரும் இந்நாளில் எவ்வளவுதான் பத்திரிக்கைகளில் போலி ஏஜெண்டுகளைப் பற்றிய செய்திகளைப் படித்தாலும் மக்கள் வெளிநாட்டு மோகத்தில் உந்தப்பட்டு அவர்களிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கும் தவறை மேலும் மேலும் செய்து வருகிறார்கள்.

வெளிநாடுகளுக்குச் செல்வதில் தவறு ஒன்றுமே இல்லை. ஆனால் அதற்காக நீங்கள் அணுகும் ஏஜெண்டுகள் முறையானவர்களா என்பதை ஒன்றுக்கு பலமுறை நன்றாக உறுதி செய்துகொண்ட பிறகே அவர்களிடம் பணத்தைக் கட்டுங்கள். இல்லாவிட்டால் வெளிநாட்டிற்கு அனுப்ப நானாச்சு என்று சொல்லி உங்களை முட்டாள்களாக்க அலைந்து கொண்டிருக்கும் கும்பலிடம் மாட்டி அவஸ்தை படவேண்டியதுதான்.

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors