தமிழோவியம்
திரைவிமர்சனம் : சர்வம்
- காயத்ரி

ஐங்கரன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் சர்வம். 'நான் கடவுள்' திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா நடித்துள்ள படம். ஒரு திரைப்படத்தில் இரண்டு கதைகளை இணைத்து விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். ஆர்யாவிற்குக் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் திரிஷாவைக் கண்டதும் காதல். திரிஷா வரும் போதெல்லாம் ஆர்யாவிற்குள்ளே இளையராஜா இசையில் உருவான திரைப்படப்பாடலின் வயலின் இசை ஒலிக்கிறது. துரத்தி துரத்திக் காதலிக்கும் ஆர்யா ஒரு கட்டத்தில் திரிஷாவின் மனதில் காதலனாகக் குடியேறுகிறார். இது தனியே அரங்கேற, இன்னொரு கதையாக சக்ரவர்த்தி தன் மனைவியையும் மகனையும் ஒரு சாலை விபத்தில் பறிகொடுக்கிறார். விபத்திற்குக் காரணமான இந்திரஜித் தன் எட்டு வயது மகனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் காண்கிறார் சக்ரவர்த்தி. தன் மகனை இழந்தது போன்ற வலியும் வேதனையும் இந்திரஜித்திற்கும் ஏற்பட வேண்டும் என்று அவரின் ஒரே செல்ல மகனைக் கொல்ல முயற்சிக்கிறார். சைக்கோ வில்லனிடமிருந்து ஓடி ஒளியும் இந்திரஜித் தன் மகனைக் காப்பாற்றப் போராடுகிறார். இவ்விரு கதைகளையும் ஒன்று சேர்க்கும் விதமாக ஒரு நிகழ்வு நடக்க ஆர்யா இந்திரஜித்தின் மகனைக் காப்பாற்ற முயல்வதே கதை.

Arya, Trishaசுறுசுறுவென்று இருக்கும் துறுதுறு ஆர்யா சூப்பர்யா என்று அசர வைக்கிறார். ஆர்யாவின் நடிப்பில் பட்டை தீட்டப்பட்டிருக்கிறது. ஆர்யா திரிஷா மேல் காதல் வயப்படுவதும் தன்னிலை மறப்பதும் அழகோ அழகு. பாடல், ஆடல், குறும்பு, நகைச்சுவை, ஆக்ஷன், காதல் என்று அனைத்துப் பகுதிகளிலும் கலக்கியிருக்கிறார். இனி ஆர்யாவிற்குக் குழந்தைகள் இதயத்திலும் பெண்கள் உள்ளத்திலும் தனி சிம்மாசனம் உண்டு. 'கில்லி', 'அபியும் நானும்' திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவிற்கு நடிக்க நல்ல வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. திரிஷாவின் நடிப்பில் மெருகேறியிருக்கிறது. அளவான கவர்ச்சி, தேவையான நடிப்பை அள்ளி வழங்கியிருக்கிறார். ஆர்யா-திரிஷாவின் ஜோடிப் பொருத்தமும் அசத்தல். தமிழ்த் திரைப்படத்திற்கு இனிய புதுவரவு இந்திரஜித், யார் இவர் ?  நடிப்பு வாசனை தூக்கலாகத் இருக்கிறதே என்று ஆராய்ந்தால் இவர் 'மொழி' கதாநாயகன் பிருதிவிராஜின் அண்ணனாமே.

தன் மகன் மேல் அன்பைப் பொழிவதாகட்டும் மகனை எதிரியிடமிருந்து காப்பாற்றப் போராடுவதாகட்டும் நடிப்பில் அசத்துகிறார். குட்டிப்பையன் ரோஹனும் நன்றாக நடித்துள்ளார். கிருஷ்ணா சிறிது நேரமே வந்தாலும் சிரிக்க வைத்துள்ளார். சக்ரவர்த்தியின் சைக்கோத்தனம் அருமை, தன் நடிப்பால் பார்வையாளர்களைப் பயமுறுத்துகிறார். கெளரவ வேடம் அனு ஹாசனுக்கும் பிரதாப் போத்தனுக்கும் மட்டுமல்ல, ரவிபிரகாஷ்ஷிற்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் தான். இருந்தாலும் கிடைத்த நேரத்தில் அனைவரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 'புருஸ்'என்ற நாய்க்கும் திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் தரப்பட்டிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் தான். ஒரே மாதிரி இசையமைப்பதையும் பாடுவதையும் யுவன் மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும். 'சிறகுகள்' பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது. வாழ்க்கை திரைப்படத்தில் வரும் 'மெல்ல மெல்ல' பாடலின் வயலின் இசையைப் படத்தில் பயன்படுத்தியிருப்பது அருமை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு அற்புதம். நீரவ்ஷா தனக்கும் தன் கேமிராவிற்கு திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொள்ளலாம், படத்தில் எல்லாருமே, எல்லாமுமே அழகு அழகு அழகு. இயக்குனரின் ஸ்டைலிஷ்ஷான திரைப்பட உருவாக்கத்திற்கு நீரவ்ஷா கைகொடுத்துள்ளார். சாபு சிரிலுடன் பல படங்களில் பணியாற்றிய மலையாளக் கலைஞரும் கலை இயக்குனருமான மனு ஜகத்தின் பங்களிப்பும் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பாராட்டிற்குரியன.

இடைவேளைக்குப் பிறகு பத்து நிமிடங்களே கதையை நகர்த்தப் போதுமான நிலையில் இயக்குனர் ஒரு மணி நேரம் படத்தை இழுத்துள்ளார். காதல் & திரில்லர் கதையில் விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன், முடிவு யூகிக்க முடிவதால் முதல் பாதியில் இருந்த எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் ஏற்படாதது ஏமாற்றமே. அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருக்காமல் ஹாலிவுட் தரத்திற்கு இணையாகத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார், கதை சொல்லும் உத்தியிலும் வென்றிருக்கிறார். ஒரு திரைப்படத்தில் இரண்டு கதைகளைக் கயிறுகளாக இழுத்து திரைக்கதையில் முடிச்சு இட்டு 'சர்வம்' என்ற தேரை வெற்றிகரமாக இழுத்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors