தமிழோவியம்
தராசு : இலங்கைத் தாக்குதல்
- மீனா

கொழும்பு நகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ துணை தளபதி உள்பட 4 பேர் பலியாகியுள்ளார்கள். மேலும் மனித வெடிகுண்டாக வந்தவர்களும் அடையாளம் காண இயலாதபடி உடல் சிதறி இறந்துள்ளனர்.  இறந்தவர்களைத் தவிர 8 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தாக்குதலால் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 2 மேஜர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ராணுவ உயர் அதிகாரியான பராமி குலத்துங்கா கொல்லப்பட்டது விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையே நடைபெற்று வரும் எல்லா சமாதான முயற்சிகளையும் மண்ணாக்கிவிட்டது என்று இலங்கை அதிபர் மகிந்தா கூறியுள்ளார்.

நார்வே தங்கள் நாட்டின் சமாதான விஷயங்களில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை.. எனவே நாங்களே பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொள்கிறோம் என்று எப்போது இலங்கை ஜனாதிபதி கூறினாரோ அன்றே தெரிந்துவிட்டது இலங்கையில் இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று. நடந்த சம்பவத்திற்கு இப்பொழுது வரை விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இது நிச்சயம் புலிகளின் வேலைதான் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துக்கொண்டிருக்கிறது. மொத்தத்தில் இலங்கையில் ராணுவத்தின் மீதும் சிங்கள மக்களின் மீதும் எந்த ஒரு தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தினாலும் பழி என்னவோ விடுதலைப்புலிகளின் மீதுதான் விழப்போகிறது.

சமாதான நடவடிக்கைகள் எல்லாம் தோல்வி அடைந்துவரும் இவ்வேளையில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒரே ஒரு விஷயத்தை மனதில் வைக்கவேண்டும். எந்த நாட்டில் எப்போது உள்நாட்டுப் போர் வெடிக்கும், எப்படி தங்கள் ராணுவத்தை அந்நாட்டிற்கு அனுப்பலாம், எப்படி அந்தப்பகுதி முழுவதையும் தங்கள் வசப்படுத்தலாம் என்று கண்கொத்திப் பாம்பாக ஒரு நாடு, உலக நாடுகள் அனைத்தையும் கண்காணித்து வருகிறது. இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டால் இழப்பு இலங்கைக்கு மட்டுமல்ல.. அதை சுற்றியுள்ள மற்ற நாடுகளுக்கும்தான். இதை மனதில் வைத்து சமாதான பேச்சுவார்த்தைகளை ஆக்கப்பூர்வமாக தொடங்க இருதரப்பும் முன்வரவேண்டும். அதுவே இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் இருவருக்கும் நல்லது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors