தமிழோவியம்
தராசு : கடுகும் பூசணியும்
- மீனா

கடுகு போவதைக் கண்டுபிடிப்பவர்கள் பூசணிக்காய் போவதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது சிறியதாக செய்யும் ஒரு தவறைக் கண்டுபிடிப்பவர்கள் பெரிய தவறை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதற்கு ஒரு அர்த்தம். இதை உறுதிப்படுத்தும் விதமாக ராஞ்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன்னால் 200 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக ராஞ்சியில் உள்ள ஒரு போஸ்ட் மாஸ்டருக்கு 2 1/2 ஆண்டு சிறையும், கிரிமினல் சட்டப்படி தவறான நடவடிக்கைக்காக 3 ஆண்டு சிறையும் இரண்டு குற்றங்களுக்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்காக இப்போது இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்குவது தவறு. சட்டப்படி குற்றம். லஞ்சம் வாங்கியதற்காக இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்ட தண்டனை மிகவும் சரியான ஒன்று. ஆனால் வெறும் 200 ரூபாய் லஞ்சம் வாங்கியவரைப் பிடித்து ஜரூராக தண்டனை வழங்கும் நம் நாட்டு நீதிமன்றங்களும் காவல் துறையும் கோடிகோடியாக கொள்ளை அடிக்கும் உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் விஷயத்தில் என்ன செய்கிறார்கள்?

லஞ்சம் ஊழல் வழக்குகளில் சிக்கிய எத்தனையோ அரசியல்வாதிகள் ஒன்றுமே நடக்காதது போல சுதந்திரமாக வெளியே உலவிக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் மூலமாக தண்டனை பெற்றால்கூட எப்படியாவது அதே நீதிமன்றத்தின் மூலமாக வெளிவந்து தாங்கள் தவறே செய்யாதவர்கள் - குற்றமற்றவர்கள் - இது எல்லாம் எதிர்கட்சிகளின் சதி என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள்.

நாட்டில் லஞ்சம் என்பது அடிமட்டத்திலிருந்து மட்டுமல்ல அனைத்து மட்டங்களிலுமே ஒழிக்கப்படவேண்டிய ஒரு விஷயம். அதனால் நீதிமன்றங்கள் வெறும் 100,200 ரூபாய் லஞ்சம் வாங்குபவர்களை தண்டிப்பதைப் போன்றே கோடிகளில் லஞ்சம் வாங்கும் மேல்மட்ட கேடிகளையும் கடுமையாக தண்டிக்கவேண்டும். பணம் படைத்தவர்களால் நீதியை விலைக்கு வாங்க முடியும் என்ற பேச்சு அப்போதுதான் முடிவுக்கு வரும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors