தமிழோவியம்
தராசு : தொடரும் நதிநீர் பிரச்சனைகள்
- மீனா

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகமும், கர்நாடகமும் குடுமிபிடி சண்டை நடத்துக்கொண்டிருக்கும் வேளையில், அதிரடியாக அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலபிரதேசத்துடன் தங்கள் தண்ணீர் வளத்தைப் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவை எடுத்து 1981ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தத்தை தூக்கியெறிந்துள்ளது பஞ்சாப் அரசு. குழந்தைகளுக்கிடையே பிரச்சனை வந்தால் பெரியவர்களிடம் போய் புகார் செய்வதைப் போல பாதிக்கப்பட்ட மாநிலங்கள், பிரதமரிடம் புகார் செய்துள்ளனர். உண்மையான பலன் என்று கிடைக்குமோ தெரியாது.

தென்னகத்தில் தான் மாநிலங்களுக்கிடையே நதிநீரைப் பங்கிடுவதில் பிரச்சனைகள் உள்ளன என்றால் வட மாநிலங்களில் ஓடும் பெரும்பான்மையான ஆறுகள் வற்றாத ஜீவநதிகள் - ஆயினும் அவர்களுக்குள் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில்தான் எவ்வளவு கருத்துவேற்றுமைகள்? மற்ற மாநிலங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தங்கள் நலனை மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற சுயநல உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்படுவதன் விளைவே இவ்வாறு பிரச்சனைகள் தோன்ற பிரதான காரணம். ஒரு நாட்டிலுள்ள மாநிலங்களுக்குள்ளேயே நதிநீரைப் பங்கீடு செய்வதில் இவ்வளவு பிரச்சனைகள் என்றால், சில நாடுகளில் நதிநீரை நாடுகளுக்கிடையே பகிர்ந்துகொள்ளுகிறார்கள். அது எப்படி சாத்தியமாகிறது?

நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைகளுக்கும், அதனால் ஏற்படும் கலவரங்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உறுதியுடன் முன்வரவேண்டும். பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, பாரபட்சம் பார்க்காமல் மக்கள் நலனைக் காக்க உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். மத்திய அரசு இந்த வேலையை முறையாக செய்யத் தவறும் நிலையில், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் துணையுடன் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும். அரசு அல்லது கோர்ட் உத்திரவை மதிக்கத் தவறும் மாநிலங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசோ, கோர்ட்டோ தவறக்கூடாது. அப்படிச் செய்தால்தான் அரசு - கோர்ட் உத்திரவுகளுக்கு மரியாதை கிடைக்கும். இல்லையென்றால் எத்தனை ஆண்டுகளானாலும் இப்பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors