தமிழோவியம்
கட்டுரை : நாட்டு நடப்பு : ஸ்வீடன்
- எழில்

"ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு" என்று பாடலைக் கேட்டிருப்பீர்கள் . ஆனால், இங்கு ஸ்வீடனில், ஜூலை மாதம் வந்தால் புதிய சில சட்டதிட்டங்களை அரசு அறிமுகப்படுத்துகிறது. அவ்வகையில் இவ்வருடமும் சில சட்டங்கள் இயற்றப் பட்டு ஊடகங்களாலும் , பொது மக்களாலும் விமர்சிக்கப் பட்டு வருகின்றன. பொதுவாக ஏதாவது புதிய சட்டம் இயற்றப் பட்டால் ஸ்வீடிய மக்கள் அவ்வளவாய் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை, லேசாய் முணுமுணுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள் .

சென்ற வாரம் அறிமுகமான புதிய சட்டங்களுள் முக்கியமானது, இணையத்திலிருந்து திருட்டுத்தனமாய்த் திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் கணினி விளையாட்டுக்களைத் தரவிறக்கம் (downloading) செய்து கொள்வதைத் தடை செய்யும் சட்டம். இதற்கு முன் வரை , இணையத்தில் திரைப்படங்களையோ பாடல்களையோ திருட்டுத்தனமாய் உலவ விடுவது/இணையப் பக்கத்தில் பதிவுசெய்வது (Uploading) மட்டும் குற்றாமாயிருந்தது. தற்போது , அம்மாதிரி இணையப் பக்கங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் குற்றம் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது . இச்சட்டம் இயற்றப்பட்டதின் பின்னணி சுவாரஸ்யமானது.

ஸ்வீடனின் மொத்த மக்கள் தொகை தொண்ணூறு இலட்சம் (ஒன்பது மில்லியன்). அதிவேக இணைய இணைப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் பதினெட்டு இலட்சம் . ஒரு மெகாபைட் முதல் இருபத்திநான்கு மெகாபைட்டுகள் வரை இங்கு அகலப்பட்டை இணைப்புகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன. இவ்வளவு அதிவேக இணைப்பு வெகுவாய்ப் புழங்குவதால் , திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் கணினி விளையாட்டுக்களை எளிதில் எதாவது ஒரு திருட்டு இணைய தளத்திலிருந்து தரவிறக்குவது சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது, அவ்வாறு திரைப்படங்களை உருவுவதுடன் , "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று தங்கள் நண்பர்களுக்கும் அனுப்புவது இவர்களது இன்னுமொரு பொழுதுபோக்கு . ஸ்வீடனில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு, இங்குள்ள ஒன்பது இலட்சம் பேர் இவ்வாறு இணையம் மூலம் காப்பி உரிமை இல்லாத திரைப்படங்கள் , பாடல்களை இறக்கம் செய்து பயன்படுத்துவதாகத் தெரிவித்தது. ஆக, நாட்டின் மக்கள் தொகையில் பத்து சதவீதம் பேர் பைரஸியில் பங்கு கொள்கின்றனர். காப்பி உரிமை மீறலின் சொர்க்கம் ( Paradise of Piracy) ஸ்வீடன் என்று பொதுவாய் அழைக்கப்படலாயிற்று. இதைக்கண்ட அரசாங்கமும் இதைத்தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது . காப்பி உரிமைமீறல் தடுப்பு வாரியம் ஒன்று தொடங்கப் பட்டு , அதன் மூலம் சில நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன . அடிக்கடி திரைப்படங்கள் மற்றும் பாடல்களைத் தரவிறக்கம் செய்யும் இணைய இணைப்புகளைக் கண்காணிக்க ஆரம்பித்தது. பின்னர் இவர்களுக்குக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பித்தது . இவை எச்சரிக்கைக் கடிதங்கள். திருட்டுத்தனமாய்த் தரவிறக்கம் செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் அறிவுரைக்கடிதங்கள். ஆனால் இது பலன் தரவில்லை. சிலர், இம்மாதிரிக் கடிதம் அனுப்பும் திட்டத்தையே குறை கூறி , இவ்வாறு செய்யக்கூடாதென விவாதத்திலும் இறங்கினர்.

இது கண்ட அரசும், பைரஸியை முற்றிலும் ஒழிக்க எண்ணி இச்சட்டத்தினை இம்மாதத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறது. எம்மாதிரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப் போகிறதென்பதும், எவ்வகையான தண்டனைகள் அளிக்கப் படலாம் என்பதும் இனிமேல் தான் தெரிய வரும்.
 

இம்மாதம் அறிமுகமான மற்றொரு முக்கியமான சட்டம், ஆணும் பெண்ணும் சரிசமமாய் நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் சட்டம். உலகிலேயே பெண்களுக்கு அதிக மதிப்பும் முக்கியத்துவமும் கொடுக்கும் நாடு ஸ்வீடன் என்றால் அது மிகையல்ல. அதிக முக்கியத்துவம் என்று சொல்வதை விட "சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சமம்" என்பதை நடைமுறைப்படுத்தியிருக்கும் நாடு என்பதே மிகச் சரியாயிருக்கும் . வேலை வாய்ப்பு, கல்வி, அரசியல், பதவிகள் போன்ற எல்லாத் துறைகளிலும் இருபாலரும் சமம் என்பதை உணர்த்தும் சட்டங்கள் நடைமுறையில் இருப்பதோடு அவை பின்பற்றப்பட்டும் வருகின்றன, ஸ்வீடியப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுள் 45 சதவீதம் பெண்கள். அமைச்சரவையில் 53 சதவீதம் பெண்களே ! பேறுகால விடுப்பு தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் இங்கு உண்டு. சுமார் 450 நாட்கள் வரை பேறுகால விடுப்பு (தந்தைக்கும் தாய்க்கும் சேர்த்து) எடுத்துக்கொள்ளலாம் . விடுப்பின் போது எண்பது சதவீத சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர தாய்க்கும் சேய்க்கும் தனியாக ஒரு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது . "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற கவிஞனின் வரிகள் ஸ்வீடனுக்கு மிகப் பொருந்தும் .

சரி, இப்போது என்ன சட்டம் இயற்றப்பட்டது என்று கேட்கிறீர்களா? " ஒரே வகையான சேவைக்கு , இருவேறு கட்டணங்கள் (ஆணுக்கும் பெண்ணுக்கும்) வசூலிக்கும் முறையைத் தடை செய்யும் " சட்டமே அது. உதாரணமாய், முடி திருத்தும் நிலையங்களில் ஆண்களுக்குக் குறைந்த கட்டணமும் பெண்களுக்கு அதிகக் கட்டணமும் வசூலிக்கப் படுவதை இந்தச் சட்டம் தடை விதிக்கிறது . சில நகரங்களில் இரவு நேரங்களில் வாடகை டாக்ஸிகளில் பயணம் செய்ய பெண்களுக்குக்கென தனிச் சலுகைக் கட்டணம் விதிக்கப் பட்டு வந்தது. இம்மாதிரியான சலுகைக் கட்டணங்களுக்கும் தற்போது தடை விதிக்கப் படுகிறது. அனைவருக்கும் ஒரே விதமான கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும் ; உயர்வு தாழ்வு பேதங்கள் விலக்கப்பட வேண்டுமென்பதே இச்சட்டத்தின் முக்கியக் குறிக்கோள்.

இப்படி இருந்தாலும், முன்னாள் அமைச்சர் ஒரு பெண்மணி , "நாற்பது சதவீதப் பெண்கள் தங்கள் கணவன்மார்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் . ஆண் - பெண் சம உரிமை இருப்பதால், ஆண்களிடையே ஏற்படும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடே இது " என்ற ஒரு கருத்தைச் சென்ற வாரம் தெரிவித்திருந்தார். இது முற்றிலும் தவறான ஒரு தகவல் . ஸ்டாக்ஹோமின் அருகே உள்ள உப்ஸலா பலகலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒரு பெண்மணியின் மிகைப்படுத்தப் பட்ட ஆய்வறிக்கையிலிருந்து முன்னாள் அமைச்சர் மேற்கோள் காட்டியிருப்பதாய்ப் பத்திரிக்கைச் செய்திகள் தெரிவித்தன . இம்மாதிரிக் கணவனால் கொடுமைப்படுத்தப் படும் பெண்கள் மூன்று சதவீதத்திற்கும் குறைவு என அதிகார்வப் பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இம்மூன்று சதவீததையும் குறைத்து பூஜ்யம் சதவீதமாய் மாற்றும் வண்ணம் , "எல்லோரும் சமம்" என உணர்ந்து அனைவரின் மனதிலும் தெளிவு பிறக்கட்டும். ஸ்வீடனில் மட்டுமல்ல! எல்லாவிடங்களிலும்தான் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors