தமிழோவியம்
திரைவிமர்சனம் : குசேலன்
- மீனா

வெறும் கமர்ஷியல் படங்கள் மட்டுமல்லாது உணர்சிகரமான படங்களிலும் தனக்கு நடிக்க வரும் என்பதை ரஜினி நிரூபித்திருக்கும் படம் தான் குசேலன். அந்தஸ்தில் மலையும் மடுவுமாக இருந்தாலும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப்பிணைந்த இரண்டு நண்பர்களுக்கிடையிலான நட்புதான் இந்தக் கதையின் அடிநாதம்.

Kuselan Rajini Pasupathiகிராமத்தில் ஒரு ஓட்டை சலூன் வைத்திருக்கும் நேர்மையான - ஏழை பார்பர் பசுபதி. அன்றாட பிழைப்புக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டாலும், காதல் மனைவி மீனா மற்றும் மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துபவர். மகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாத நிலையிலும் நேர்மையான வழிதவறி போகாதவர். தனது பழைய சலூனைப் புதுப்பிக்க பசுபதி எல்லோரிடமும் கடன் கேட்டும் ஒருவரிடமிருந்தும் அவருக்கு உதவி கிடைக்காமல் போகிறது. அரசாங்க வங்கியிலும் கூட அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தைக் கொடுக்க மறுப்பதால் வங்கிக் கடன் கூட கிடைக்காத நிலை.

இந்நிலையில் பசுபதியின் பள்ளிக்கூட நண்பர் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி படப்பிடிப்புக்காக பசுபதியின் ஊருக்கு வருகிறார். ரஜினி தன் பால்ய நண்பன் என்று பசுபதி சொன்னாலும் அதை ஒருவரும் நம்பாத நிலையில் ரஜினியை நேரில் சந்திக்க பசுபதி செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன. இனி ரஜினியை பார்ப்பது இயலாத காரியம் என்ற எண்ணத்தில் பசுபதியும் அவரது குடும்பமும் இருக்க - பள்ளி விழா ஒன்றில் பசுபதியைப் பற்றி ரஜினி பேசுகிறார். பிறகு ரஜினியே பசுபதியின் வீட்டிற்கு வருகிறார். உணர்சி பிரவாகமாக பசுபதியும் ரஜினியும் நிற்கும் கிளைமாக்ஸ் காட்சியில் கண்கள் கலங்கிப் போகின்றன.

நடிகன் என்ற சொந்த பாத்திரத்தை அன்புள்ள ரஜினிகாந்திற்குப் பிறகு இதில் செய்துள்ளார் ரஜினி. இயல்பு வாழ்க்கையின் கோபம், பாசம், நகைச்சுவை என தன் சுயத்திற்கு முகமூடி போடாமல் வெளிப்படுத்தியிருப்பது அருமை. பன்ச் டயலாக் கிடையாது.. பறந்து பறந்து அடிக்கும் வேலை கிடையாது.. ரஜினியை பார்க்கவரும் இடத்தில் சுந்தர்ராஜன் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினி சொல்லும் பதில் தன்னைப் பற்றி விரிவாக மக்களுக்கும் மீடியாக்களுக்கும் வெகுநாட்களாக சொல்ல நினைத்த விஷயங்கள் போலும். மொத்தத்தில் ரஜினி கொஞ்ச நேரம் வந்தாலும் படம் முழுக்க ரஜினி வியாத்திருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

பிரகாஷ்ராஜிற்கு அடுத்தபடியாக வில்லன், காமெடியன், கதாநாயகன் என்று அனைத்து கேரக்டர்களிலும் அசத்தி வரும் பசுபதி இந்தப் படத்தில் ஏழ்மையும், தாழ்வுமனப்பான்மையும் கொண்ட ஒரு பார்பராக வாழ்ந்திருக்கிறார். ஊரே திரண்டு வந்து சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று கொண்டாடும் போதும், தன் தாழ்வு மனப்பான்மையால் ரஜினியை நெருங்க முடியாமல் தவிக்கும் போதும் பசுபதியின் நடிப்பு பதறவைக்கிறது. தான் ரஜினியைப் பற்றி சொல்வதை தனது பிள்ளைகள் கூட நம்ப மறுக்கும் சூழ்நிலையில் 'பாவம்.. குழந்தைகள்தானே விடு...' என வேதனையை மறைத்து மனைவியிடம் பேசும் போது உருக வைக்கிறார். மேலும் தன் நட்பை மறக்காமல் ரஜினி மைக்கில் பேசுவதைக் கேட்டு, மரத்தூணில் ஒட்டியபடி அவர் அழும் போது நம்மையும் அழ வைக்கிறது அவரது அற்புத நடிப்பு.

படத்தில் பின்னி எடுக்கும் இன்னொரு கேரக்டர் வடிவேலு. பசுபதிக்கு போட்டியாக சலூன் கடை வைத்திருக்கும் வடிவேலு செட்டப் போலீஸ் உதவிடன் பலரையும் கடத்தி வந்து மொட்டையடிப்பதைப் போலவே அந்த ஊருக்கு வரும் டி.எஸ்.பி க்கும் மொட்டையடிப்பது சூப்பர். ரஜினியை சந்திக்க அவர் செய்யும் பகீரத பிரயத்தனங்கள் குபீர் சிரிப்பை வரவழைத்தாலும் சொந்த பெண்டாட்டியை திருட்டுத்தனமாக சைட் அடிக்கும் காட்சி கொஞ்சம் ஓவர். அடுத்தபடியாக சந்தானம், லிவிங்ஸ்டன் கோஷ்டி அடிக்கும் லூட்டி சூப்பர்.

பசுபதியின் மனைவியாக - 3 குழந்தைகளுக்கு அம்மாவாக மீனா. பாந்தமான - மிகையில்லாத நடிப்பால் அசத்துகிறார்.

நடிகையாகவே வரும் நயன்தாராவுக்கு இந்தப்படத்தில் பெரிதாக ஒரு வேலையும் இல்லை. பொம்மை மாதிரி கவர்சியாக இரு பாடல் காட்சிகளில் வந்து போகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

ஜி.வி.பிரகாஷ் இசையும் , அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்கின்றன. கதபறயும் போள் படத்தின் ரீமேக் தான் குசேலன் என்றாலும் ஈ அடிச்சான் காப்பி கணக்காக இல்லாமல் அதை ரஜினி ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் படமாக்கியுள்ள இயக்குனர் பி,வாசுவிற்கு பாராட்டுகள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors