தமிழோவியம்
தராசு : மன்மோகன் சிங்கும் பிரதமர் பதவியும்
- மீனா

ஒரு சிறிய பகுதிக்கான வட்டச் செயலாளர் பதவிக்கே அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் அடிதடி செய்துவரும் இக்காலத்தில், கிடைத்த பாரதப் பிரதமர் வேலையை வெளிப்படையாக வெறுக்கும் முதல் ஆளாக இருப்பார் மன்மோகன் சிங். காங்கிரஸ் அரசு இவரது தலைமையில் பதவியேற்ற காலம் முதலே மன்மோகன் சிங்கிற்கு ஆரம்பித்தது தலைவலி. ஏகப்பட்ட உட்கட்சி பூசல்கள், எப்போதும் தலைக்கு மேல் கத்தியாக உட்கார்ந்து தன்னைக் கண்காணிக்கும் கட்சித் தலைவி, கூட இருந்தே குழிபறிக்கக் காத்திருக்கும் கூட்டணிக் கட்சிகள், எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம் செய்யும் எதிர்கட்சிகள் என்று ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறார் நம் பிரதமர். இருக்கிற பிரச்சனைகள் போதாதென்று தற்போது கிளம்பியிருக்கும் புதுப் பிரச்சனையான "மரியாதை தெரியாத மனிதர் " ஐ எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ தெரியவில்லை.

தற்போதைய அரசாங்கத்தைப் பற்றியும், தன்னுடையக் கட்சி பற்றியுமே 100 நாள் ஆட்சி நிறைவு விழாவில் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார் பிரதமர். நாடாளுமன்றம் எப்படி நடக்கவேண்டும் என்பதைப் பற்றி ஒரு வகுப்பே நடத்த பிரதமரும் சபாநாயகரும் தயாராக இருந்தாலும் அங்கே உட்கார்ந்து அதைக் கேட்க யாரும் தயாரில்லை (ஆளும் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்துதான்). நாடாளுமன்றம் நடக்கும் முறைகளைப் பற்றி பல முறை கூட்டத் தொடரிலும், பத்திரிக்கைகள் வாயிலாகவும் அவர் சொல்லியும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

இந்நிலையில் பிரதமர் எதிர்கட்சிகளிடம் மனு வாங்க மறுத்ததைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் வாஜ்பாய் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை விஷயம் - மன்மோகன் சிங் ஒரு அரசியல்வாதி அல்ல!! அதனால் தான் அவருக்கு அரசியல்வாதிகளைப் போல முகத்திற்கு எதிரே சிரிக்கச் சிரிக்கப் பேசி பின்னால் கழுத்தறுக்கும் வித்தை தெரியவில்லை. அவர் இன்று வரை மக்களை தேர்தலில் நேரடியாகச் சந்திக்கவில்லை. மன்மோகன் சிங் ஒரு நல்ல அதிகாரி - மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். அவ்வளவே! சில மாதங்களுக்கு முன்பு நமது ஜனாதிபதியும் இதே மாதிரியான "வந்தவர்களை மதிக்கத் தெரியாதவர்" பிரச்சனையில் சிக்கினார். ஏனெனில் அடிப்படையில் அவரும் ஒரு நல்ல அதிகாரி - விஞ்ஞானி. அரசியல்வாதி இல்லை!!

காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு ஒரு ஆலோசனை. வழக்கமாக அரசியல்வாதிகள் அனைவரும் ஆடும் சதுரங்க ஆட்டத்தை வெற்றிகரமாக 100 நாட்களுக்கு ஆடிவிட்டார் மன்மோகன்சிங். ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிப்பார் என்பது அவருக்கே தெரியாது. உங்களால் செய்ய முடிந்தவை - அவருக்கு உங்களாலோ உங்கள் கட்சியினராலோ ஏற்படும் இடைஞ்சல்களை நீக்க முயலுங்கள். பிரதமர் என்ற முறையில் அவரை சற்று சுதந்திரமாக செயல்படவிடுங்கள். காங்கிரஸ் கட்சித் தலைவி என்ற முறையில் எதிர்கட்சிகளையும் கூட்டணிக் கட்சிகளையும் அழைத்துப் பேசுங்கள். முக்கியமான ஒன்று - ஒரு நாட்டின் பிரதமராக உள்ள அவருக்குத் தரவேண்டிய மரியாதையை நீங்கள் முதலில் அவருக்குக் கொடுங்கள். உங்களைப் பின்பற்றி உங்கள் கட்சியினரையும் நடக்கச் செய்யுங்கள். இதையெல்லாம் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக பிரதமர் பதவிக்கு அடுத்த ஆளைத் தேர்ந்தெடுக்கும் வேலையைத் துவங்குங்கள். வெகுவிரைவிலேயே அதற்காக தேவை ஏற்பட்டுவிடும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors